பெண்கள் என்றாலே பலருக்கும் மனதில் தோன்றுவது அழகான ஒரு பிம்பம் மட்டுமே. பெண் என்றாலே கண்ணைக் கவரும் உடை அணிபவர், அலங்காரம் செய்பவர் என்று நினைக்கும் ஒரு சாரார். குடும்பம், குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவர், தாய்மை எண்ணத்தில் உயர்ந்தோங்குபவர் என்று நினைக்கும் மற்றொரு சாரார். ஆனால் பெண்ணை ஓடை என்றும் நதியென்றும் அமைதியான பிறவிகளாய் சித்தரித்த காலத்தில், இதையெல்லாம் கடந்து பாயும் புலியாய், கொந்தளிக்கும் கடலாய், அடங்கா புயலாய் சீறி எழுந்து தன் நிலம், இனம் காத்த பெண்களும் உண்டு.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள, 50 வயதைக் கடந்த தாய்மார்கள் பொதுவாக என்ன செய்வார்கள்? வீட்டு வேலைகள் செய்வது, பேரக்குழந்தைகளை வளர்ப்பது, குடும்ப நலனுக்காக புனித பயணம் மேற்கொள்வது என தன்னுடைய குடும்பத்தில் மட்டுமே கவனம் செலுத்துபவர்களைத்தான் நாம் அதிகம் கண்டிருக்கிறோம். ஆனால் தன் பிள்ளைகள் மட்டுமல்லாது தமிழ்ப் பிள்ளைகள் அனைவருக்காகவும் ஈழத்திற்காகவும் பட்டினி மரணத்தை விரும்பி ஏற்ற தாய் பூபதி.
தன் குழந்தைகளுக்கு ஆபத்து வரும்போது, தன்னால் முடியாவிடினும் தன் எதிர்ப்பைக் காட்டி, தன் குழந்தைகளை காக்க முன்வரும் தாய்பறவை போல், ஒரு போராளியாக தன்னை அர்ப்பணித்தவர் அன்னை பூபதி.
தமிழீழப் போராட்டத்தில் எதிரியை அழிக்க ஆயுதம் ஏந்தி இரத்தம் சிந்தி உயிர்துறந்த போராளிகள் நடுவே கத்தியின்றி இரத்தம் இன்றி யுத்தம் நடத்திய போராளிகள் ஒருவர் திலீபன், அடுத்தவர் அன்னைபூபதி.
மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர்தான் அன்னை பூபதி. 3.11.1932 அன்று மட்டக்களப்பில் பிறந்த இவர் தனது 56ஆவது வயதில் உண்ணாநிலை தியாகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
1987ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை தமிழ் மக்களை ஒரு மிருகம் போல் வேட்டையாடிக்கொண்டிருந்தது. தமிழர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று குவித்துக்கொண்டிருந்தது. தமிழர்களைக் காக்க ஆயுதமேந்தி போராடிக்கொண்டிருந்தனர் புலிகள்.
இவ்வாறு விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான், இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப்போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் அணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து சிங்கள பேரினவாத அரசுக்கெதிராகவும் இந்திய அமைதிப் படைக்கு எதிராகவும் உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கினர். அந்த கோரிக்கைகள்:
1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து 19.3.1988ம் ஆண்டு மட்டக்களப்பில் உள்ள பிள்ளையார் கோவிலில் சாகும்வரையிலான உண்ணாநிலை போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். ஆனால் அகிம்சை போராட்டத்தால் விடுதலை பெற்றதாக சொல்லும் இந்திய ஒன்றியம், அன்னை பூபதியின் அகிம்சைவழி போராட்டத்தை அலட்சியமே செய்தது.
போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்தியப் படை அதிகாரிகளுடன் அன்னையர் முன்னணி பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை தெரிவித்தனர். ஆனால் அவற்றை இந்தியப்படையினர் நிராகரித்தனர். இதனால் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பெண்கள் முடிவு செய்தனர். தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக நின்று, ஒரு அடையாள உண்ணாநிலை போராட்டத்திற்கு அணி திரண்டனர்.
1988ஆம் ஆண்டு சனவரி 4 ஆம் நாள் அன்று அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதிலும் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர் பெண்கள்.
அன்னை பூபதி போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே, இந்திய அமைதிப்படையைக் கண்டித்து பலர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் போராளியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. முதலில் அன்னம்மா டேவிட் உண்ணாநிலை போராட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டார்.
அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. ஆனால் திடீரென அங்கு வந்த ராணுவத்தினர் உண்ணாவிரத மேடையில் இருந்த அன்னம்மாவைக் கடத்திச் சென்றதால் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை 19 மார்ச் 1988 அன்று தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாநிலையிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவரோ, அல்லது பிள்ளைகளோ என்னை மருத்துவமனையில் சேர்க்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார் அன்னை பூபதி.
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”
எனும் குறளுக்கேற்ப நன்றாகச் சிந்தித்து பிறகே செயலில் இறங்கியிருக்கிறார் அன்னை பூபதி. இதன் மூலம் போராளிகளுக்குண்டான அவரது மன உறுதியையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இவ்வாறு தான் கொண்ட கொள்கைக்காக தண்ணீர் மட்டுமே அருந்தி சாகும் வரை உண்ணாநிலை இருந்தார் அன்னை பூபதி.
அவரது போராட்டத்தின் இடையில் பல தடங்கல்கள் வந்தன. போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆனாலும் அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
அவர் உண்ணாநிலையைத் தொடங்கி முப்பது நாட்கள் ஆன பின்னும், இனப்படுகொலை குற்றவாளிகளால் அவரது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவே இல்லை. சரியாக ஒரு மாதத்தில் அதாவது 19.04.1988 அன்று காலை 8.45 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. மட்டக்களப்பு மண்ணே கண்ணீரில் மூழ்கியது.
இவரது அறவழிப் போராட்டம் தமிழர்களின் மனதில் போராட்ட உணர்வை கொழுந்து விட்டு எரிய வைத்தது என்றே சொல்லவேண்டும். இந்திய அமைதிப்படையினரின் அச்சுறுத்தலை தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னைக்கு இறுதி வணக்கத்தை செலுத்தினர். பதாகைகளும், அஞ்சலி துண்டுப்பிரசுரங்களும், ஈழத்தமிழ் ஊடகங்களில் முதன்மை செய்தியாகவும் அன்னை பூபதியின் தியாக மரணம் வெளிக்கொணரப்பட்டது.
உலகில் உண்ணாநிலை போராட்டத்தில் உயிர் துறந்த முதல் பெண் அன்னை பூபதி அவர்களே. தியாக தீபம் திலீபன் ஒரு சொத்து நீர் கூட அருந்தாமல் உண்ணாநிலை இருந்து உயிர்த்தியாகம் செய்தது போன்றே, அன்னை பூபதி அவர்களும் தமிழீழ மக்களுக்காக உயிர் நீத்தார். அவரது தியாகம் திலீபனின் தியாகத்தைப் போன்று போற்றத்தக்கது.
“அன்னை பூபதி தமிழர் போராட்டத்தின் பொன்னான வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர். இன்று, ஒரு மாபெரும் தியாகியின் நினைவைப் போற்றுகிறோம். ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, குடும்பத்தின் தாய்வழித் தலைவியாக, பூபதி அம்மா தனது சாதாரண வாழ்க்கையையும் அதன் பற்றுதலின் பிணைப்புகளையும் தாண்டி, தனது தேசத்தின் விடுதலைக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தார். அவரது தியாகம் தமிழீழத் தாய்மையின் எழுச்சியை அடையாளப்படுத்தியது…” என்று கூறினார் தேசியத்தலைவர் பிரபாகரன்.
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இறக்க நேர்வது இயற்கையே. ஆனால் தன் இறப்பை பொருளுள்ளதாக மாற்றுவது தனிப்பட்ட ஒவ்வொருவரின் கொள்கைப்பிடிப்பு மட்டுமே. தம் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை காண சகியாத 56 வயது தாய் உண்ணாநிலை இருந்ததும், தாம் இறக்க நேர்ந்தாலும் தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்காத அவரின் மன உறுதியும் வியக்கவைக்கிறது. அவரது நினைவு நாளில் அவரை மட்டுமல்லாது அவரது இனஉணர்வினையும் நினைவு கூறுவோம்.