இன்று 130 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில், உலகமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு, பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த, விவசாயம் முதல் தொழிற்சாலைகள் வரை பல்வேறு துறைகள் தங்கள் பங்களிப்பை செய்கின்றன. தங்களின் வருவாய்க்காக மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் சிறு குறு தொழில்களில் தொடங்கி பன்னாட்டு நிறுவங்களின் தொழிற்சாலைகள் வரை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். சீனாவுக்கு அடுத்த நிலையில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்ட இந்தியாவில், பல லட்சம் தொழிலாளர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்நிலையில் 1970-க்குப் பின்னர், இந்தியாவின் மனிதவளம் மற்றும் நிறுவனங்களின் லாப நோக்கை கருத்தில் கொண்டு, ஒப்பந்த தொழிலாளர் முறை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்த இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒன்றிய/மாநில அரசின் தொழில் நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பந்த தொழிலாளர் முறை கொண்டு வரப்பட்டது.
எவ்வாறெனில், தொழில்துறையின் தரவுகளின் (ASI) அடிப்படையில், 2018-இல் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 4,04,538 தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் வேலை செய்கின்றனர். மிகக் குறைந்த ஊதியத்திற்கு தற்காலிகமாக வேலைக்கு சேர்க்கப்படும் இந்த ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல அவர்களின் துயரங்களும் இன்று அதிகரித்துள்ளன.
இன்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிரந்தர வேலையும் பணிப் பாதுகாப்பும் இருக்க வேண்டியது சமூக மாற்றத்தின் அடித்தளமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைக்கும் எந்தவொரு பணி நன்மைகளும் (Work Benefits) ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே ஊதியம் வழங்கப்படுவதோடு ஒப்பந்த காலம் முடிந்த உடனே அவர்களின் வேலையும் பறிபோகிறது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள், போனஸ் போன்ற பிற உரிமைகளும் அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை.
எந்தவொரு நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிப் பாதுகாப்பற்ற சூழலிலேயே வேலை செய்ய நேரிடுகிறது. தங்களின் எதிர்காலம் குறித்த கவலையோடு உழைப்புச் சுரண்டலையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குறைந்தபட்ச ஊதிய சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்தல் சட்டம் போன்ற சட்டங்கள் இருந்தாலும் அவை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்தல் சட்டத்தின் சில முக்கிய குறிப்புகள்:
- வேலை நேரம்: ஒரு ஒப்பந்த ஊழியரின் பொதுவான வேலை நேரம் ஒரு நாளைக்கு 9 மணிநேரம் அல்லது வாரத்திற்கு 48 மணிநேரம் மட்டுமே. இதைவிட அதிக நேரம் வேலை செய்தால் அந்த ஊழியர் இருமடங்கு ஊதியத்தை பெற உரிமை உண்டு.
- 20 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டிருந்தால் அந்த நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தும்.
- ஒப்பந்தத் தொழிலாளர்களின் உடல்நலனுக்காக, முதலுதவி, பாதுகாப்பான குடிநீர், கேன்டீன் வசதிகள் ஆகியவற்றை நிறுவனம் வழங்க வேண்டும். மேலும் அந்நிறுவனம் ஊழியர் பதிவேட்டையும் வழங்க வேண்டும்.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான மற்றும் நன்கு காற்றோட்டமான பணிச்சூழலை வழங்குவது நிறுவனத்தின் பொறுப்பாகும்.
- நிறுவனம் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (ESI) பதிவு செய்து ஒப்பந்த ஊழியர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும்.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி ஊதியம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி மற்றும் Gratuity போன்றவையும் வழங்கப்பட வேண்டும்.
இப்படி சட்டத்தின் மூலம் பல உரிமைகள் அறிவிக்கப்பட்டாலும் அவை இன்னும் ஏட்டளவிலேயேதான் இருக்கின்றன. மேலே குறிப்பிட்டு உள்ள எந்த உரிமையும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை. குறிப்பாக 9 மணிநேர வேலை நேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் அவர்கள் வேலை செய்தாலும் அவர்களுக்கு கூடுதல் ஊதியம் கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல அரசின் துறைகளிலும் இவ்வாறு நடப்பதுதான் பெருந்துயரம்.
தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம், போக்குவரத்துத்துறை போன்ற பல துறைகளிலும் இன்று பல ஊழியர்கள் ஒப்பந்த முறையிலேயே பணி அமர்த்தப்படுகின்றனர். கடந்த 2020-2021 ஆண்டுகளில், மின்துறையில் பணியமர்த்தப்பட்ட 10,000 ஊழியர்களும் (Gangmen/ Linemen) இன்றும் பணி நிரந்தரத்திற்காகக் காத்திருக்கும் சூழலில்தான் 12மணி நேர வேலை செய்கின்றனர். இதுதவிர மின்துறையின் மற்ற வேலைகளுக்கும் ஒப்பந்த முறையில் 15,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். (நிரந்தர ஊழியர்களின் 2 மாத ஊதியம் இவர்களின் ஒரு ஆண்டு ஊதியத்திற்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.)
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை முறைப்படுத்தவும் TANGEDCOவை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் கடந்த பிப்ரவரி 16 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கின்றனர்.
தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என்று ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படும் பெண்களும் உழைப்புச் சுரண்டலுக்குத் தப்புவதில்லை. “மகப்பேறு என்பது மகத்தான சேவைப் பணி” என்ற கொள்கையோடு உழைக்கும் தாய்சேய் நலத் திட்டத்தின் தூய்மைப் பணியாளர்கள் 3140 பேரும் , கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக மாதத் தொகுப்பூதியம் ரூ 1500 மட்டுமே பெறுகிறார்கள். RCH எனப்படும் ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களில் உழைக்கும் இவர்களுக்கு ஒரு நாளைக்கு 50 ரூபாய் என்பது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலே. தற்போது ஊதிய உயர்வுக்காகவும் 8 மணி நேர வேலைக்காகவும் போராடும் இவர்களுக்கு மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
இரு ஆண்டுகளுக்கு முன், கொரோனா தொற்று மிக வீரியமாக பரவத் தொடங்கிய வேளையில், தமிழ்நாடு அரசு சுமார் 3000க்கும் மேற்பட்ட செவிலியர்களை ‘மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB)’ மூலம் நியமித்தது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இந்த செவிலியர்கள் இரு ஆண்டுகளுக்கும் மேலாக தன்னலம் பாராது கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் கடந்த டிசம்பர் 31,2022 அன்று பணி நிறைவு பெற்றதாகக் கூறி 2400 செவிலியர்களை பணிநீக்கம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது. செவிலியர்களின் உழைப்பை மட்டுமே உறிஞ்சி விட்டு, அவர்களை சக்கையாக கருதி பணிநீக்கம் செய்திருக்கிறது அரசு.
எனவேதான் நோய்ப் பெருந்தொற்று காலத்தில், தங்கள் உடல் நலனையும் பொருட்படுத்தாது, கிராமங்கள் தோறும் தடுப்பூசிகளை கொண்டு சென்ற செவிலியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரிப் போராடினார்கள்.
இன்று போராடும் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்களுக்கான பணி நிரந்தரம் என்பது அவர்களை சார்ந்திருக்கும் குடும்பத்தினரை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் உயர்வுக்கும் வழிவகுக்கும். இதன் காரணமாகவே நிரந்தர பணிக்காக போராடி வரும் ஒப்பந்த தொழிலாளர் போராட்டங்களில் மே17 இயக்கம் பங்கெடுத்து முழு ஆதரவை வெளிப்படுத்தியது.
ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டிய திமுக அரசு அதை செய்யாமல் பெருநிறுவன முதலாளிகளின் லாப நோக்கத்திற்காக தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவைக் கொண்டு வந்த போது அதை மே17 இயக்கம் கடுமையாக எதிர்த்தது. (விரிவானஅறிக்கை: https://may17kural.com/wp/dravidian-model-or-dmk-model-2/). தற்போது பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் சனநாயக அமைப்புகளின் எதிர்ப்புக் குரலால் அம்மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதாக அரசு அறிவித்திருக்கிறது.
இதைப் போன்றே ஒப்பந்த தொழிலாளர்களின் விடயத்திலும் அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். பல்வேறு துறைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வது மட்டுமின்றி, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் அரசு ஒரு ‘Model Employer’ ஆக செயல்பட வேண்டுமே தவிர ‘Bureaucrat employer’ ஆக செயல்படக் கூடாது. அப்படி ’Model Employer’ ஆக செயல்படவில்லையென்றால் தனியார் நிறுவனங்களின் தொழிலாளர் விரோதப் போக்கை அரசும் பின்பற்றுவது போலாகி விடும்.
தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களின் பலனான உரிமைகள் மறுக்கப்படும்போதெல்லாம், மே17 இயக்கம் தொடர்ந்து இந்தக் கேள்வியை எழுப்பும் — “இது திராவிட மாடலா? அல்லது திமுக மாடலா?”