அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘சக்மாஸ்’ மற்றும் ‘ஹஜோங்ஸ்’ இன மக்கள், வங்க தேசத்திற்கு நாடுகடத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை 2022ல் இந்தியாவிடம் அறிக்கை கேட்டிருந்தது. இந்தியாவிற்கு ஏதிலிகள் வரத் தொடங்கியது ஏன்? எப்போது? போன்ற கேள்விகளுக்குப் பல காரணிகள் இருக்கின்றன.
உலகளவில் போர்ச்சூழல், இயற்கைப் பேரிடர் , பொருளாதரச் சூழல் போன்றவற்றால் தங்களது தாய் மண்ணை விட்டு ஏதிலிகளாக (அகதிகளாக) வரும் மக்களின் துயரங்கள் எண்ணிலடங்காதவை. தங்கள் உற்றார், உறவினர், உடைமைகள் என அனைத்தையும் இழந்து, பிற நாடுகளில் புகலிடம் தேடும் இவர்கள், இன்றும் பல நாடுகளில் “அழையா விருந்தினராகவே” கருதப்படுகின்றனர். பிப்ரவரி 2022 நிலவரப்படி, 46,000 ஏதிலிகள் இந்தியாவில் UNHCR மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளனர். “அனைத்து நாட்டின் குடிமக்களும் புகலிடம் (asylum) கோர உரிமை உண்டு” என்று ஐ.நா கூறினாலும், ஏதிலிகளின் துயரங்களைத் துடைப்பதற்கான வலுவான சட்டங்கள் இன்றுவரை இந்தியாவில் இயற்றப்படவில்லை. ஐ.நாவின் 1948 மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை.
ஏன் இந்தியாவில் புகலிடச் சட்டம் இல்லை?
இரண்டாம் உலகப் போருக்குப் பின், தங்கள் நாடுகளைவிட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தில் 28 சூலை 1951இல் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மாநாடு நடத்தப்பட்டது. இதில், ஏதிலிகளின் பாதுகாப்பு
குறித்தும் புகலிடம் வழங்கும் நாடுகளின் பொறுப்புகள் குறித்தும் பல வழிமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்டன. உலகளாவிய மனித உரிமைகளுக்கான பிரகடனத்தின் 14வது பிரிவின் அடிப்படையில், ஏதிலிகளின் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை ஐ.நா. அந்த மாநாட்டில் வரைவு செய்தது. அதே போன்று புகலிடம் வழங்கும் நாட்டின் கடமைகளையும் பட்டியலிட்டது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள மிக முக்கியமான 33(1)வது பிரிவு, “ஏதிலிகளின் வாழ்க்கை அவர்கள் பிறந்த நாட்டில் அச்சுறுத்தப்பட்டால், புகலிடம் வழங்கும் நாடுகள் அவர்களை மீண்டும் அவர்கள் நாட்டிற்கு அனுப்பவோ அல்லது வெளியேற்றவோக் கூடாது” என்கிறது. இந்தப் பிரிவின் முக்கியத்துவம் கருதி உலக நாடுகளில் இதை ஒரு சர்வதேச சட்டமாகவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் காரணமாகவே ஏதிலிகள் அனைவரும் தங்கள் புகலிட நாடுகளிலிருந்து வெளியேற்றப்படாமல் பாதுகாக்கப்படுகிறார்கள்.
148 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், இந்தியா இதில் கையெழுத்திடவில்லை. ஏனெனில் 1947ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான மக்கள், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இதன் காரணமாக, “நாட்டின் உள்விவகாரங்களில் இந்த ஏதிலிகள் ஒப்பந்தம் தேவையற்ற தலையீடாக இருக்கும்” என்று கருதியதாலும்; “தெற்காசியாவில் இந்தியாவின் புவியியல் நிலையைக் கருத்தில் கொண்டும்” ஐநா மாநாட்டு பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று இந்தியா முடிவு செய்தது.
1951க்குப் பிறகு, உலகெங்கிலும் பல புதிய இடப்பெயர்வுகள் நடந்ததால், 1967ஆம் ஆண்டு ஐநா ஒப்பந்தத்தில் புதிய நெறிமுறை சேர்க்கப்பட்டது (1967 Protocol). இதிலும் இந்தியா கையெழுத்திடவில்லை.
உலகில் ஏதிலிகள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ள போதிலும், அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை. 1952ல் முதன்முதலில் இந்திய பாராளுமன்றத்தில் “தேசிய புகலிடக்கொள்கையை” அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்றளவும் இந்தியாவில் ஏதிலிகள் வெளிநாட்டினர் சட்டத்திற்கு (Foreigners Act 1946) கீழாகவே வைக்கப்படுகிறார்கள். இச்சட்டத்தின் கீழ் இந்திய அரசு ஏதிலிகளை நாடு கடத்துவதற்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குகிறது.
இந்தியாவிற்குள் ஏதிலிகள் வருகை
1947இல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவிற்கும் இசுலாமியர் பாகிஸ்தானுக்கும் பெரிய அளவில் இடம்பெயர்ந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய அரசாங்கம், அப்போது வந்த ஏதிலிகளுக்கு மறுவாழ்வு அளிக்க பல திட்டங்களை யோசித்தது. அவர்களுக்குப் புகலிடம் அளிப்பதற்காக ஃபரிதாபாத் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பியது.
1947க்குப் பிறகு இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் திபெத்திய ஏதிலிகள். 1959இல், சீனாவில் மாவோ ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டத்தைத் தொடர்ந்து, தலாய்லாமாவுடன் சேர்ந்து 1,00,000க்கும் அதிகமான திபெத்தியர்கள் புகலிடம் கோரி இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார்கள். மாவோ அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று தெரிந்தும், இந்தியா அவர்களுக்கு புகலிடம் வழங்கியது. குறிப்பாக, இந்திய அரசு தலாய் லாமாவை அரசு விருந்தினராக ஏற்றுக்கொண்டது. அவர்களுக்கென “நாடுகடந்த திபெத்திய அரசு” (Tibetan Government in Exile) இமாச்சலப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, லடாக், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் திபெத்தியர்கள் குடியமர்த்தப்பட்டார்கள்.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தான்-வங்கதேசப் போரின் போது, கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். ஏதிலிகள் வருகை குறித்து சர்வதேச தலையீட்டிற்கு முறையிட்ட இந்தியா, பிறகு பாகிஸ்தானுடன் போர் புரியத் தொடங்கியது. 1971 டிசம்பரில் புதிதாக வங்கதேச நாடு உருவான பிறகு, அனைத்து ஏதிலிகளையும் திருப்பி அனுப்புவதில் இந்திய அரசு உறுதியாக இருந்தது. இதனால் பெரும்பாலானவர்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். எஞ்சியிருந்தவர்கள் “சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
வங்கதேசப் போருக்குப் பின், இந்தியாவிடம் புகலிடம் கோரியவர்கள் ஆப்கானியர்கள். 1979ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது, சோவியத் படையெடுத்தப் பிறகு ஆப்கானியர்கள் இந்தியாவில் புகலிடம் கோரினர். 1990களின் முற்பகுதியில் இந்தியாவிற்கு வந்த பல இந்து மற்றும் சீக்கிய ஆப்கானியர்கள் கடந்த பத்தாண்டுகளில் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதாக ஐ.நா வின் மனித உரிமை ஆணையம் தெரிவிக்கிறது.
2021ஆம் ஆண்டில், காபூல் தலிபான்களிடம் வீழ்ந்த பிறகு, சில சீக்கிய மற்றும் இந்து ஆப்கானியர்களுக்கு இந்தியா அவசரகால கடவுசீட்டு (Emergency Visa) வழங்கப் போவதாக அறிவித்தது. செப்டம்பர் 2021ல் 60,000 ஆப்கானியர்கள் இந்த கடவுசீட்டுக்கு விண்ணப்பித்தனர். ஆனால், அந்த ஆண்டு சில நூறு இணைய-கடவுசீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன.
தொடர்ந்து, 2012ல் ரோஹிங்கிய ஏதிலிகள் இந்தியாவிற்கு வந்தார்கள். பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் இஸ்லாமிய சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது. இந்த இனப்படுகொலையில் இருந்து தப்பித்த அம்மக்கள் ஏதிலிகளாக வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். 2019 தரவுகளின்படி 40,000 ரோஹிங்கிய ஏதிலிகள் இந்தியாவில் வசிப்பதாக கூறுகின்றனர். 2014ல் பாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ரோஹிங்கியாக்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று திட்டமிட்ட பரப்புரை மேற்கோள்ளப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள்.
ஈழத் தமிழர்கள் நிலை
1980களில் தொடங்கி, 2009 இனப்படுகொலை வரையிலும், அதன்பின் அண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும், இந்தியாவிற்கு வரும் ஈழத் தமிழர்கள், பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே, இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கடல் வழியாக ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் இவர்கள், முதலில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி தீவை வந்தடைகிறார்கள். அங்கு காவல்துறை, Q- பிரிவு சோதனை என பல்வேறு விசாரணைக்குப் பிறகு அவர்கள் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் 60,000 ஈழத்தமிழ் ஏதிலிகள் இருப்பதாகவும், இவர்கள் தமிழ் நாட்டில் உள்ள 109 முகாம்களில் வசித்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி முகாம்களில் தங்கும் பலரும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக அரசு உதவி கோரும் நிலையிலேயே உள்ளனர். இவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படுவதும், எந்நேரமும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.
ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நிவாரணங்களை அறிவித்தாலும், முறையான புகலிடச் சட்டங்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் பல துயரங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக ‘அகதிகள்’ என்ற பெயரால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
“கொடிய சிறைகளைப் போன்ற சிறப்பு முகாம்கள் மின்சார வேலிகளால் சூழப்பட்டு இருபத்தி நான்கு மணி நேரமும் 250க்கும் மேற்பட்ட காவலர்களால் கண்காணிக்கப்படுகின்றன. ஏதிலிகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தத்தில் கையொப்பமிடாததால், இந்திய அரசு தனது விருப்பப்படி ஏதிலிகளை ஒடுக்குக்கிறது. இதனால் ஈழ ஏதிலிகளின் உரிமைகளை சட்டபூர்வமாகக் கோருவது சாத்தியமில்லாமல் போகிறது. அதோடு இந்தியாவில் ஏதிலிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் ஐ.நா. தலையிடவும் இயலாது. தங்களை அழிக்கத் துடிக்கும் நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற அச்சத்திலேயே அவர்கள் அன்றாடம் வாழ்கிறார்கள்.”
– தோழர் திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம். (கேரவன் இதழுக்கு அளித்த நேர்காணல்)
இதே போன்று, திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாமல் சிறைவைக்கப்பட்டிருக்கும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை விடுதலை செய்யக் கோரியும் சிறப்பு முகாமை மூடவும் வலியுறுத்தி, மே17 உள்ளிட்ட திராவிட தமிழ் தேசிய அமைப்புகள் நடத்திய போராட்டதினால் தற்போது தமிழ்நாடு அரசு 16 பேரை முதல் கட்டமாக விடுவித்துள்ளது.
வஞ்சிக்கப்படும் தமிழர்களும் இசுலாமியரும்
தற்போது வரை அனைத்து ஏதிலிகளும் வெளிநாட்டினர் சட்டத்தின் (1946) கீழ் கொண்டு வரப்பட்டாலும், ஈழத் தமிழர், இசுலாமியரை கையாள்வதிலும், பிற இன ஏதிலிகளை கையாள்வதிலும் மிகப் பெரும் வேறுப்பாட்டினை இந்திய ஒன்றிய அரசு கடைப்பிடிக்கிறது. இதற்குச் சான்றாக, கடந்த 2014இல் திபெத்திய மறுவாழ்வுக் கொள்கை மூலம் திபெத்தியர்களுக்கு அதிக உரிமைகள், மானியங்கள், நலத்திட்ட உதவிகள், இந்தியர்களுக்கு இணையாக அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் எளிமையாக ஆவணங்களைப் பெறுவது போன்றவற்றை முன்மொழிந்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக இன்றுவரை போராடிக் கொண்டிருக்கின்றனர். இன்றளவும் கைக் குழந்தைகளுடன் கடல் கடந்து வரும் ஈழத் தமிழர்களை “சட்ட விரோதமாக வந்தவர்கள்” என்று ‘தி இந்து’ பத்திரிக்கை கொச்சைப்படுத்துகிறது. “திருட்டுத்தனமாக வந்தவர்கள்”, “கடத்தல்காரர்கள்” என்றும் உண்மைக்கு புறம்பாக சித்தரிக்கின்றது. இதுகுறித்து வாசிக்க விரிவான கட்டுரை.
வாழ வழியின்றி புகலிடம் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் ஈழத் தமிழர்களை இந்திய கடற்படை கைது செய்வதை மே 17 இயக்கமும் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. (இயக்கத்தின் அறிக்கை)
புகலிடச் சட்டம் மூலம் ஏதிலிகளை சுற்றி உள்ள முள்வேலியை நாம் அகற்றக் கோரும்போது, CAA மூலம் அந்த மதவாத முள்வேலியை மேலும் இறுக்குக்கிறது இந்துத்துவ பாஜக. புலம்பெயர்ந்தோர் பட்டியலில் இருந்து தமிழரையும் இசுலாமியாரையும் பாஜக விலக்கியிருக்கிறது. தன்னை இந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொள்ளும் பாஜக இந்துக்களான தமிழர்களை குடியுரிமைப் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறது. இதை தமிழின விரோதம் என்று மட்டுமல்ல ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயலாகவே கருத வேண்டும்.
உலகின் மிகப்பெரிய சனநாயகம் என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் இன்றுவரை ஏதிலிகள் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயம் செய்வதில் உள்ள பார்ப்பனர்களின் ஆதிக்கம் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த சனவரி 2022இல் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஏதிலிகளுக்கு இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சட்டம் இல்லை என்ற சிக்கலை விவாதித்துள்ளது. எனவே சர்வதேச ஏதிலி கொள்கைகளுக்கு இணக்கமான ஒரு உள்நாட்டுச் சட்டம் இந்தியாவில் இயற்றப்பட வேண்டும். அண்டை நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் காரணமாக இந்தியாவிற்கு ‘தேசிய புகலிடக் கொள்கை’ என்பது முக்கியமான தேவையாக உள்ளது.
ஏதிலிகளுக்கென்று முறையான சட்டங்கள் இல்லாவிட்டால், அவர்களுக்கு முழுமையான உரிமைகள் கிடைக்காது. அவர்களுக்கென்று புகலிடச் சட்டம் இருந்தால் மட்டுமே உயிர் பிழைக்க தஞ்சம் புகுந்திடும் மக்களுக்கு இந்தியாவில் நிலையான பாதுகாப்பை வழங்கிட முடியும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற விதிகள் இந்தப் புகலிடச் சட்டத்தின் முக்கிய பகுதியாக அமைய வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் மனித உரிமை பாதுகாப்பு அணுகுமுறையும் கேள்விக்குள்ளாக்கப்படும்.