ஆரியப் பார்ப்பனர்கள் கோலோச்சும் கோயில்கள் திராவிட இனத்தை “உள்ளே வராதே” என்று சொல்வது ஒருபுறம் என்றால், யானைகளை சங்கிலியால் கட்டி வதைப்பது மறுபுறம். உலகின் மிகக் கொடுமையான மிருகவதை கோயில் யானைகளுக்கே நடக்கிறது. இயல்பான காட்டில் வாழும் தன்மை கொண்ட யானைகளை “பக்தி” என்ற பெயரால் கோயில்கள் அடிமைப்படுத்தி வைத்துள்ளன.
விருதுநகர் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஷேக் முகமது என்பவர் பொறுப்பில் வளர்ந்து வந்த லலிதா என்ற யானை தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தமிழ்நாடு அரசால் மேல் முறையீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு இடைக்கால தடை பெறப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தனது தீர்ப்பில் “தனி நபர்களோ, வழிபாட்டு ஆலயங்களோ இனி யானைகளை தங்கள் பயன்பாட்டிற்காக வாங்க கூடாது” என்று தீர்ப்பளித்தது. இதை வரவேற்று நடைமுறைப் படுத்த வேண்டிய ‘திராவிட மாடல்’ பேசும் தமிழ்நாடு அரசு, மேல் முறையிடு செய்து தடை வாங்கியுள்ளது.
காடுகளின் மீட்டுருவாக்கத்தில் யானைகளின் பங்கு மிக அதிகம். மருத நிலத்தின் வேளாண்மைக்கு தேனீகளின் பங்களிப்பு எவ்வளவோ முக்கியமோ அதுபோல குறிஞ்சி மற்றும் முல்லை நிலத்தின் காடுகள் அழிவடையாமல் இருக்க யானைகள் முக்கியமானவை.
யானை ஒன்று ஒரு நாளைக்கு ஏறத்தாழ 150 கிலோ உணவை உட்கொள்ள முடியும். காடுகளில் யானைகள் உட்கொள்ளும் உணவில் மீதம் இருக்கும் மரவிதைகள் அதன் சாணத்தால் காடு முழுவதும் பரவும். ஏனென்றால், யானைக்கூட்டம் ஒரு நாளைக்கு 25 கி.மீ பயணம் செய்யக்கூடியது. ஓரிடத்தில் இருக்கும் மரவகைகள் மற்ற இடங்களுக்கு பரவ இது உதவுகிறது. இதனால் காடுகளின் பன்முகத்தன்மை (Diversity of Forest) பாதுகாக்கப்படுகிறது. இதனாலேயே, பழங்குடிகள் யானைகளை “காடுகளின் கடவுள்“ என்று அழைக்கின்றனர்.
பண்டைய காலம் தொட்டு, குறிப்பாக நாகரிகம் அடைந்து ஓர் இடத்தில் மனிதன் நிலையாக வாழத் தொடங்கிய காலம் முதல், வனவிலங்குகளை பழக்கப்படுத்தி, அவற்றின் மூலம் தங்கள் வேலைகளை எளிதாக்கிக் கொள்ள முயற்சி செய்து கொண்டே இருந்திருக்கிறான். ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு குதிரைகள் மற்றும் மாடுகள் போன்றவற்றையும், பாதுகாப்பிற்கு நாய்கள் போன்றவற்றையும், உணவிற்கு மாடுகள் மற்றும் ஆடுகள் போன்றவற்றையும் பழக்கப்படுத்தி வந்த மனிதனின் மிகப்பெரிய முயற்சி தான் யானை போன்ற அதீத பலம் கொண்ட மிருகங்களையும் தன் வேலைகளுக்காக பழக்கியது.
பெரும் கட்டிடங்களை கட்டுவதற்கான மலைப்பாறைகளை வெகு தொலைவில் இருந்து இழுத்து வருவதற்கு உலகம் முழுவதும் யானைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, கோட்டைகள் கட்டுவதற்கும், பெரும் மதில் சுவர்கள் கட்டுவதற்கும் ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டுவதற்கும், அணைகள் கட்டுவதற்கும் யானைகள் பெருமளவில் உதவி புரிந்திருக்கின்றன.
அடுத்த கட்டமாக இதே யானைகள் போரில் பயன்படுத்தப்பட்ட வரலாறும் இங்கு உண்டு. தற்போதைய இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் உருவாகி இருந்த அரசுகளான சுல்தானிய, முகமதிய, பெர்சிய அரசுகள் உள்ளிட்ட வடபுல அரசுகளும், சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் உள்ளிட்ட தென்புல அரசுகளும் பெரும் யானைப் படைகளை வைத்து போரிட்ட வரலாற்றுச் சான்றுகளும், தொல்லியல் சான்றுகளும் கிடைத்துள்ளன. யானை மேல் இருந்து போரிட்டபோது மாண்டு போன சோழ அரசன் ராஜாதித்தனுக்கு “யானை மேல் துஞ்சிய தேவன்” என்ற அடைமொழி வழங்கப்பட்டது.
“அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டாற் – பனிக்கடலுட்
பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே யெங்கோமான்
காய்சினவேற் கோதை களிறு.”
என்று முத்தொள்ளாயிரம் பாடல் பண்டைய தமிழ் சோழ அரசர்களின் யானைப்படை பற்றி பறை சாற்றுகிறது. கூரிய வேல்கள் நெருக்கமாக பதிக்கப்பட்ட ‘அயில் கதவு’ என்ற அதீத பாதுகாப்பு தரும் கோட்டைக்கதவை பிளந்து செல்லும் ஆற்றல் கொண்டதாக சோழனின் யானைப்படை சித்தரிக்கபட்டுள்ளது.
அதுபோல,
“நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன்
குடைதோன்ற ஞாலத் தரசர் – திறைகொள்
இறையோ எனவந் திடம்பெறுதல் இன்றி
முறையோ எனநின்றார் மொய்த்து.”
என்ற முத்தொள்ளாயிரம் பாடல் பாண்டிய அரசன் யானைமேல் ஏறி போர் என்று அறிவித்துவிட்டால் திரை (வரி) செலுத்தாத குறுநிலத்து மன்னர்கள் எல்லாம் பதறிக் கொண்டு ஓடி வருவார்கள் என்பதாகவும்,
“கரிபரந்து எங்கும் கடுமுள்ளி பம்பி
நரிபரந்து நாற்றிசையும் கூடி – எரிபரந்த
பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச்
செங்கண் சிவப்பித்தார் நாடு.”
என்ற முத்தொள்ளாயிரம் பாடல் சேர அரசனை எதிர்ப்பவர் நாட்டினை தனது யானைப்படை கொண்டு தாக்குவதன் மூலம் அந்நாட்டையே அழித்துவிடுவான் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் அரண்மனைகளுக்கு நிகராக கட்டப்பட்டிருந்த மத வழிபாட்டுத் தலங்களான வேதக்கடவுளுக்குரிய கோவில்களும் யானைகள் உதவியுடன் கட்டப்பட்டது மட்டுமின்றி, கோயில்களில் வைக்கப்பட்டிருந்த உருவ சிலைகளை ஊர்வலமாக எடுத்து வர யானைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக யானைகளை கோயில்களுக்கு ‘நேர்ந்து’ விடக்கூடிய பழக்கம் இருந்துள்ளது. யானையை கோயிலுக்கு அன்பளிப்பாக தருவது பெரும் கொடையாக கருதப்பட்டு வந்த காலமானதால்; அது பெரும் புண்ணியத்துக்குரிய காரியமாகவும், பேரரசர்கள் மற்றும் செல்வந்தர்கள் எண்ணத்தில் புகுத்தப்பட்டிருந்ததனால் கோயில்களுக்கு அவற்றின் அளவை பொருத்து பெரும் எண்ணிக்கையிலான யானைகள் தானமாக வழங்கப்பட்டன. அன்றைய நிலவுடைமை சமூகத்தின் வாழ்வியல் முழுவதும் வேளாண்மை மற்றும் கோயிலை சுற்றி அமைந்திருந்த காரணத்தினால் கோயில் என்ற அதிகார மையத்திற்கு முன்பு காடுகளில் சுற்றித் திரிந்த யானைகளின் வாழ்க்கை குறித்த அக்கறை எடுபடவில்லை.
இந்நிலவுடைமைச் சமூகத்தின் எச்சமாக விளங்கி வரும் பல பிற்போக்குத்தனமான வழக்கங்களில் ஒன்றுதான் கோயில்களில் யானைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கோயில்களுக்கு வருவோரை “ஆசிர்வாதம் செய்கிறது” என்ற மூடநம்பிக்கை இன்றளவும் நிலவிவருகிறது.
இந்து மத கோயில்கள் பலவற்றில் இன்றும் யானைகள் கட்டி வைக்கப்பட்டு இருக்கின்றன. காட்டில் சுதந்திரமாக திரிய வேண்டிய யானைகளை சங்கிலியால் பிணைத்து வைத்துவிட்டு, பின்பு யானைகளுக்கு ஓய்வு தருவதாக முகாம்கள் நடத்தக்கூடிய கோமாளித்தனமும் இங்கு தான் நடந்து கொண்டிருக்கிறது. யானைகளின் அடிப்படை குணம் இத்தகைய ஓய்வு முகாம்களால் மாற்றப்படுவதில்லை. அது பல நேரங்களில் மதம் பிடித்து தன்னை வெளிப்படுத்திவிடுகிறது. அத்தகைய மதம் பிடித்த சூழல்களில் மதயானைகளுக்கு பலியாவது அதுநாள் வரை அவற்றை பராமரித்து வந்த ஏழை தொழிலாளிகளான யானைப்பாகனும், பொதுமக்களும் தானே ஒழிய ‘இந்து மத காவலர்கள்’ என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களோ, மத தலைவர்களோ அல்ல.
கோயில் யானை வழக்குகள்
கோயில்களில் பிணைக்கப்பட்டிருக்கும் யானைகளைப் பற்றி கூறும் பொழுது கொஞ்சம் கூட அறிவுக்கு பொருந்தாத ஒரு சில வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்தி பார்ப்பது சரியாக இருக்கும். பல நூற்றாண்டுகளாக கோயில்களில் யானைகள் வசித்து வந்தாலும் யானைகள் பற்றிய பதிவுகள் பக்தி சார்ந்ததாக மட்டுமே பதிவிடப்பட்டிருந்தன. அவற்றுக்கு நடக்கும் மிருகவதை கொடுமைகளை யாரும் பதிவிடாத நிலையில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடந்த வழக்குகள் யானைகள் மீதான மிருகவதையை அம்பலப்படுத்தின.
1776 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின்போது சென்னை மாகாணத்தில் நடந்த “வடகலை தென்கலை நாம வழக்கு” என்ற முதல் வழக்கு பிரசித்தி பெற்ற வழக்காகும். காஞ்சிபுரம் கோயிலுக்கு கொடுக்கப்பட்டிருந்த யானைக்கு வைணவ சமயத்தின் இரு பிரிவுகளான வடகலை நாமத்தை வரைவதா அல்லது தென்கலை நாமத்தை வரைவதா என்ற ‘அதி முக்கியமான’ பிரச்சனையை அன்றைய மெட்ராஸ் மாகாணத்து ஆளுநராகிய ராபர்ட் ஹோல்பர்ட் ( Robert Hobart, 4th Earl of Buckingham shire) என்பவரிடம் கொண்டு செல்லப்பட்டு, அது மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்திய ஒன்றியம் விடுதலை பெற்ற பிறகு 1976ஆம் ஆண்டு காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி கோயிலுக்கு வாங்கப்பட்ட யானைக்கு வடகலை நாமம் போட முயற்சிப்பதாக கூறி வழக்கு நடத்தப்பட்டது. இந்த வழக்குகளின் பொழுது யானைகளுக்கு எவ்விதமான வாழ்க்கை கோயிலில் நடைபெறுகிறது என்பது அப்பட்டமாக வெளியே வந்தது.
குறிப்பாக, இந்த வடகலை தென்கலை நாம வழக்குகளில் வந்த தீர்ப்பின்படி ஒரு வாரம் வடகலை நாமமும் மறுவாரம் தென்கலை நாமமும் போடும்படி அறிவுறுத்தப்பட்ட பொழுது ஒரு தரப்பின் நாமத்தை இன்னொருவர் அழித்து விடாமல் இருப்பதற்காக அழிக்க முடியாத வண்ணங்களை கொண்டு (Color Paint) நாமங்கள் வரையவே, எதிர்தரப்பு அதனை கத்தி போன்ற கூறிய ஆயுதங்கள் கொண்டு சுரண்டி எடுப்பது போன்ற முயற்சிகள் நடந்துள்ளன. இதனால் யானைகளின் நெற்றியில் வெள்ளை நிறப் புள்ளிகள் உருவாகத் தொடங்கி அவை உடல் முழுவதும் பரவியதாக சொல்லப்படுகிறது. இதனால் கோயில் யானைகளுக்கு பிறக்கின்ற குட்டி யானைகள் இயல்பிலேயே வெள்ளை புள்ளிகள் உடம்பில் தோன்ற பிறப்பதாக கூறுகிறார்கள். இத்தகைய வெள்ளைப் புள்ளிகள் அதே இந்திய காட்டு யானை இனத்திடம் பார்க்க முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற கொடுமைகளில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் பார்ப்பனர்களே என்றும் குறிப்பிடப்படுகிறது. இவர்கள் தான் தமிழர்களின் ஜல்லிக்கட்டு விளையாட்டில் “மிருக வதை” செய்வதாக சொல்லி தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதாடுகிறார்கள்.
கோயில்களில் வைக்கப்படுகிற யானைகள் மட்டுமல்லாமல் காடுகளில் இருக்கும் யானைகளின் வாழ்விடங்களும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக கோயமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஈஷா மையம் யானை வழித்தடங்களை மறித்து கட்டப்பட்டு இருப்பதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற வேலிகளை தாண்டி வர முயற்சிக்கும் யானைகள் கடுமையான காயத்திற்கு உள்ளாவதாகவும் வனவிலங்கு ஆர்வலர்களும், சுற்று சூழல் அறிஞர்களும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். ஈஷா மையத்தின் உரிமையாளர் ஜக்கி வாசுதேவ் தரப்போ தங்கள் ஆக்கிரமிப்புகளை இன்றளவும் நிறுத்தவில்லை. மாறாக, ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சியில் இந்திய ஒன்றியத்தின் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்பதும், பிரதமர் மோடியே நேரில் வருகை தருவதும் ஈஷா மையத்தின் சட்டவிரோத செயல்களுக்கு வலு சேர்த்து வருகிறது.
திமுக அரசு பதவியேற்ற தருணத்தில் வேகவேகமாக ஈஷா மையத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி பேசத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் ஈஷா மையம் மற்றும் ஜக்கி வாசுதேவின் சட்டவிரோத செயல்களை கடுமையாக சாடினார். ஆனால், இன்றளவும் ஈஷா மையத்தின் மீது அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனிதர்களின் அரசியலை புரிந்துக்கொள்ள முடியாத காட்டு யானைகள் தான் இன்னமும் ஈஷா மையத்தின் ஆக்கிரமிப்பு சுவர் ஓரமாக தங்கள் பழைய வழித்தடங்களை தேடி வருகின்றன.
சுற்றுச்சூழலின் அடிப்படையிலும், பகுத்தறிவின் அடிப்படையிலும் யானை என்கிற வன விலங்கு வனத்தில் வசிப்பதே சரியாக இருக்கும். மதம் என்ற பெயரால் எதை செய்தாலும் அதை சட்டம் கட்டுப்படுத்தாது என்கிற கருத்தை மீண்டும் நீதிமன்றங்களில் கோரிக்கையாக வைத்து தமிழர்களிடையே மூட நம்பிக்கைகளை வளர்க்கிற இத்தகைய நிலைப்பாடுகளை கைவிட வேண்டும். பெரியார் பேசிய பகுத்தறிவு என்பது சமூகத்தை அறிவியல் துணையுடன் முற்போக்கு பாதையில் முன்னேற்றி செல்வதே ஆகும்.
கோயில்கள் மட்டுமல்லாமல் எந்த ஒரு நிறுவனமும் யானைகள் மற்றும் இதர வன விலங்குகளை பயன்படுத்தக்கூடாது என்பதை சூழலியல் சார்ந்து மட்டுமல்லாமல் பிற உயிர்களும் சுதந்திரமாக வாழும் சம உரிமை வழங்கிடும் வகையில் தமிழக அரசு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும். யானை வழித்தடங்கள் அனைத்தையும் மீட்டெடுப்பதோடு, அவ்வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல சமூக நீதி.