பள்ளிக்கூட மாணவர்களுக்கு ‘வேண்டாத சுமை’ என்று தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றமானது (NCERT) தன்னிச்சையாக முடிவெடுத்து பாடநூல்களிலிருந்து சில பாடங்களை நீக்கியது. இது, ஒன்றிய அரசின் சனாதன, இந்துத்துவ கொள்கைக்கு எதிராகக் கருதக்கூடிய பாடங்களைப் பாடநூல்களிலிருந்து நீக்கியுள்ள செயல் கல்வியாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
இந்திய ஒன்றியத்தில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்குரிய பாடத்திட்டங்களை மாநில கல்வி வாரியம் கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. மாநிலங்களில் மத்திய பாடத்திட்டங்களை (CBSE) கொண்ட பள்ளிகளும் செயல்படுகின்றன. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (NCERT) என்பது மத்திய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும் நிறுவனமாகும்.
இந்நிறுவனம் சமீபத்தில் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்கிறோம் என்கிற பெயரில், அறிவியல் மற்றும் அரசியல் கோட்பாடுகள், முக்கிய வரலாறுகள், மக்களின் போராட்டங்கள், இந்திய அரசியலில் முக்கிய அம்சங்கள் எனப் பல பாடங்களை நீக்கியுள்ளது. மாணவர்களின் அடிப்படை அறிவுக்கும், சிந்தனை வளர்ச்சிக்கும் தேவையான பாடங்களை நீக்கிய இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த 4,000-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைத் தேசிய கல்வி வாரியத்திற்கு (NCERT) தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், தேசிய கல்வி வாரியத்திற்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்த தில்லி ஜவர்கர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் கந்தி பிரசாத்பாஜ், நீரஜ் கோபால் ஜாயல், அசோகா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பிரதாப் பானு மேத்தா, சிஎஸ்டிஎஸ் முன்னாள் இயக்குநர் ராஜிவ் பார்கவா, ஐதராபாத் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கே.சி. சூரி உள்ளிட்ட, இந்த புத்தகங்களைத் தீர்மானிக்கும் குழுவில் இடம்பெற்ற 33 கல்வியாளர்கள் தேசிய கல்வி வாரியத்தின் (NCERT) இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லெனிக்கு கடிதம் எழுதினர்.
அந்தக் கடிதத்தில், “ஏற்கனவே இருந்த புத்தகத்திலிருந்து பல்வேறு பாடங்களை நீக்கி பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டிருப்பதால், இந்தத் திருத்தங்களின் காரணமாக தற்போது அப்புத்தங்களை வேறொன்றாகக் காட்டுகின்றன. எனவே, இந்த திருத்தப்பட்ட புத்தகங்களில் இருக்கும் எங்களது பெயர்களை நீக்குங்கள்” எனக் கூறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், இப்படியான மாற்றங்களைக் குறித்து தங்களுடன் கலந்து ஆலோசிக்கவும் இல்லை, தெரிவிக்கவும் இல்லை எனவும் கடித்ததில் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, ஆலோசகர்களாக இருந்த இருவரும் தேசிய பாடநூல் மேம்பாட்டுக் குழுவிலிருந்தே விலகினர்.
இதற்கு முன்னர், கொரோனா பரவலால் ஏற்பட்ட மாணவர்களின் படிப்புச்சுமையைக் காரணம் காட்டி, கடந்த சில ஆண்டுகளாகவே தேசிய கல்வி வாரிய புத்தகங்களில் இடம்பெற்று வந்த பல்வேறு பாடங்களை நீக்கினார்கள். இச்செயல் தற்போது வரை தொடர்கிறது.
- 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் ஆதாரங்கள் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது.
- உயிரியல் பாடப்பிரிவில் டார்வின் கோட்பாடு மற்றும் வேதியியல் பாடப்பிரிவில் அடிப்படை பாடத்திட்டங்களில் ஒன்றான 108 படிமங்கள் அடங்கிய படிம அட்டவணையும் நீக்கப்பட்டுள்ளது.
- சமூக அறிவியல் பாடத்தில் 10ம் வகுப்பின் சனநாயகத்தின் சவால்கள், பிரபல அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சனநாயக அரசியல் போன்ற அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
- சன்னார் கலகம், தோள் சீலைப் போராட்டம்’ பாடங்களை நீக்கியது. (இதற்குக் கேரள அரசு கடும் கண்டனமும் தெரிவித்தது.
- 11ஆம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இஸ்லாமியர்களின் எழுச்சி, கலாச்சார மோதல் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டன.
- அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் கடைசி அத்தியாயத்திலிருந்த 2002 குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகளும் நீக்கப்பட்டன.
- 12ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் மகாத்மா காந்தி மற்றும் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான அவரது நாட்டம் இந்து தீவிரவாதிகளை எப்படித் தோன்றியது என்ற பகுதிகளை நீக்கியது.
- காந்தியின் படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் மீதான அரசாங்கம் தடை விதித்திருந்த பகுதியும் நீக்கப்பட்டது.
- அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் இந்தியாவின் அரசியல் என்ற புத்தகத்திலிருந்த ‘தனிக்கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்’ பாடம் நீக்கப்பட்டுள்ளது.
- முகலாய சாம்ராச்சியம் தொடர்பான அத்தியாயம் (முகலாய தர்பார், 16, 17-ம் நூற்றாண்டுகள்) என்ற பாடம், வரலாற்றுப் (இந்திய வரலாறு – பகுதி II) புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது. அதேபோல, இந்தி புத்தகத்திலிருந்த உருது கவிதைகளும் நீக்கப்பட்டன.
- ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாட நூலில் வருணாசிரமத்தின் நான்கு பிரிவுகளை வகைப்படுத்திச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முடியாட்சியின் குறியீடான செங்கோலைச் சமீபத்தில் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவி குடியரசு சனநாயக முறையை மோடி குழி தோண்டி புதைத்தார். (இது குறித்த கட்டுரை வாசிக்க.)
தற்போது நீக்கப்பட்டு வரும் பாடங்களில் ‘சனநாயக அரசியல், சனநாயகத்தின் சவால்கள்’ போன்றவை இடம் பெற்றிருப்பதும் கவனிக்கலாம். ஆகவே, சனநாயகத்தைச் சவக்குழியில் புதைத்த ஆர்எஸ்எஸ் இந்துத்துவ அரசுக்கு எதிரான சனநாயகத்தைக் குறித்த பாடங்களை நீக்கி இருக்கிறார்களோ என்கிற கேள்வியும் எழுகிறது.
மோடி குசராத் முதல்வராக இருந்த போது சுமார் 2000 இசுலாமியர்கள் சங்பரிவாரக் கும்பல்களால் இனப்படுகொலை செய்தார். இதை மறைக்க பதினொன்றாம் வகுப்பு பாட நூலிலிருந்து குசராத் கலவரம் குறித்த பாடங்களை நீக்கியிருக்கிறார்கள். வருங்காலத் தலைமுறையினர் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால் இந்துத்துவத்தின் கோரமுகம் அம்பலமாகி, கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள் என்கிற அச்சத்தின் காரணமாகப் பாடங்களை நீக்குகிறார்கள் தவிர, மாணவர்களுக்கு கல்விச்சுமை காரணமாகக் குறைக்கிறோம் என்று சொல்வது பச்சைப்பொய்.
பன்னிரண்டாம் வகுப்பு பாட நூலிலிருந்து காந்தியைப் படுகொலை செய்த கோட்சே பற்றிய பாடத்தை நீக்கியுள்ளார்கள். இந்த கோட்சேவை தான் ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற இந்துத்துவ கும்பல்கள் வருடாவருடம் அஞ்சலி செய்து வணங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையான வரலாறு சொல்லும் பாடங்களை நீக்குவது மட்டுமல்லாது, புனைவுகளைக் கட்டமைத்து சனாதன வாதிகளின் குற்றத்தை மறைக்க முயல்வதும் தொடர்கிறது. குசராத்தில் 9ம் வகுப்பு மாணவர்களின் கேள்வித்தாளில், “காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி?” என்று கேட்டிருந்தார்கள். பொது இடத்தில் காந்தியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவன் கோட்சே. மக்கள் பலர் நேரில் கண்ட வரலாற்று நிகழ்வை இளம் தலைமுறையிடம் திரிக்கவும் பாடத்திட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் பாஜக அரசு, சட்ட மேதை அம்பேத்கர் அத்தியாயங்களை நீக்கி சாவர்க்கர் பற்றிய தகவல்களை நுழைத்தது. மேலும், “சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்து, புல்புல் பறவை மீது அமர்ந்து பறந்து தாய் மண்ணிற்கு வந்து போவார்” எனக் கன்னடப் பாடத்திட்டத்திலிருந்தது சர்ச்சையாகியது. தொடர்ந்து இது போன்ற பல சர்ச்சைகள் பாஜக ஆளும் மாநிலங்களின் பாடப் புத்தகங்களிலும் தொடர்ந்து வருகிறது.
ஆன்மீகம் என்பது நம்பிக்கை, அறிவியல் என்பது நிரூபணம். இராமாயணத்தில் அனுமான் தனது சுண்டு விரலால் மலையைத் தூக்குவார் என்பது ஆன்மீக நம்பிக்கை. ஆனால், அறிவியலில் எப்படி ஒரு குரங்கு தனது உடல் வலுவை விடப் பல லட்சம் மடங்கு கனமுள்ள மலையைத் தூக்க முடியும்? என்ற கேள்வி அறிவியல் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவைப் பற்றிச் சிந்திக்க விடாமல் படிப்படியாக அறிவியலை நீக்கி ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க முனைகிறது ஆர்எஸ்எஸ் புராண புரட்டு பாடத்திட்டம்.
பள்ளிகூடங்க்ளில் போதுமான ஆசிரியர்கள் மற்றும் மேசை, நாற்காலி, கரும்பலகை, மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் 60% பள்ளிகள் சீர்குலைந்து உள்ளன. இந்தியாவில் சுமார் 2,57,000 பள்ளிக்கூடங்களுக்குக் கழிப்பறைகள் இல்லை. இந்த பள்ளிக்கூடங்களில் பயின்று வரும் மாணவர்கள் இந்துக்கள் தானே? அவர்களின் கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளைக் குறித்த எந்த அக்கறையும் கொள்ளாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் “இந்துக்களின் பாதுகாவலர்கள்” என்று கூச்சலிடுவர்.
பட்டேல் சிலைக்கு 3000 கோடி, அயோத்தி இராமன் கோயிலுக்கு 1800 கோடி, புதிய நாடாளுமன்றத்திற்கு 836 கோடி என மக்கள் வரிப்பணத்தை இரைக்கும் மோடி அரசு; கடந்த ஏழு ஆண்டுகளில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 10.4% திலிருந்து 9.5% ஆகக் குறைத்துள்ளது. இதைப் பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பாஜக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் வாய் திறப்பார்களா? ஆக, ஆர்எஸ்எஸ் பாஜக மோடி அரசின் நோக்கம் இந்துக்கள் ஓட்டுகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்து உயர்சாதி சவர்ணா மற்றும் மார்வாரி பனியா சாதிகளின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகும். இவர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் பெரும்பான்மை சூத்திர இந்துக்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாடு குறித்து இவர்களுக்கு எந்த காலத்திலும் அக்கறை இருந்ததில்லை.
ஆர்.எஸ்.எஸ் கட்டி எழுப்ப நினைக்கும் ‘இந்து ராச்சியம்’ கட்டமைக்கத்தான் சமூக நீதிக்கு எதிரான கல்வித் திட்டங்களை மோடி அரசு தொடர்ந்து திணிக்க முயல்கிறது. அதற்காகவே புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ‘ஒரே கல்வி’ என்று நடைமுறைப்படுத்த முனைகிறது. வேத மனுதர்ம காலத்துச் சாதி-வருண-குல வழியிலான வேலைகளைப் பரம்பரை பரம்பரையாகச் செய்யக் கூறும் குலக்கல்வி திட்டத்தை இராஜாஜி வழியில் திணிக்க முயல்கிறது. மாநில மொழி முக்கியம் என்று சொல்லிக்கொண்டே இந்தியைத் திணிக்கிறது. மாநில மொழிகளை விடச் சமஸ்கிருதத்துக்கு 100 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கி சமஸ்கிருதப் பள்ளிகளை ஒன்றியம் எங்கும் திறக்கிறது.
பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி மற்றவர்களுக்கு குலக்கல்வி போன்ற அடிமைத்தனம் கொண்ட ஒற்றை நோக்கத்துடன் மெல்ல மெல்லத் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (NCERT) பாடத்திட்டங்களுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் காய் நகர்த்துகிறது. இதனை முறியடிக்கக் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் முற்போக்கு இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் குரல் கொடுத்து புதிய கல்விக் கொள்கையின் பின்னால் இருக்கும் சதிகளை அம்பலப்படுத்த வேண்டும். அனைத்து சமூக மாணவர்களின் கல்வி மேன்மைக்கு உதவியாக அனைவரும் பாடுபட வேண்டும்!