ஆகம விதி: அக்கிரமமா? ஆவணமா?

“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்பது சமத்துவ சமூகத்தை  விரும்புபவர்களின் நீண்ட காலக்கனவு. அதற்கு ஊக்கமளிக்கும் வகையில் சேலம் சுகவனேசுவர் கோயில் அர்ச்சகர் நியமனம் குறித்து 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் அர்ச்சகர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூசை முறைகளில்  தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக கோவில் தக்கார்கள் நியமிக்கலாம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோவில்களின் ஆகமத்தைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை, அந்தந்த கோவில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவர்களை  நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த முடிவை கோவில் தக்கார்களே எடுக்க முடியும் என்பதும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. ‘தக்கார்’ எனப்படுபவர் கோயிலின் வருமானம் மற்றும் இதர பொறுப்பை நிர்வகிக்கும் அதிகாரி ஆவார்.

கடந்த மார்ச் மாதம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இருவரை அர்ச்சகர் பொறுப்பில் இருந்து நீக்கியது. ஆகம விதிகளின் படி, இவர்களின் நியமனம் செல்லாது என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.

தமிழ்நாடு அரசு, திருச்சி சிறீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் அர்ச்சகர் பயிற்சி முடித்த செயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகராக நியமித்தது. 2021 முதல் அர்ச்சகர் பணியைத் தொடங்கியவர்கள் மீது 2022-ல் பார்ப்பன சிவாச்சாரியார்கள் வழக்கு தொடர்ந்தனர். மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாத ஐயரும் நியமனம் ஆகம விதிகளுக்குள் வராது என தீர்ப்பு எழுதி தமிழர்கள் இருவரையும் கோவிலைவிட்டு வெளியேற உத்தரவிட்டு விட்டார்.

‘ஆகமம்’ என்ற ஒரு சொல்லை ஆயுதமாகப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற ‘பார்ப்பனர் அல்லாத’ தமிழர்கள் அர்ச்சகர் ஆவதற்கு எதிராக தடையாணையைப் பார்ப்பனர்கள் பெற்று வருகிறார்கள். ஆகமம் என்பது கோவில் அமைக்கும் இடம், முறை, மூல விக்கிரகம், முக்கிய தெய்வம், பரிகார தெய்வம் நிறுவப்படும் முறைகள், விசேச கால பூசைகள், திருவிழாக்கள் நடத்தப்படும் விதம், கடவுள் சிலைகள் நிறுவும் விதம் போன்றவற்றை பற்றி விவரிப்பது ஆகும். இந்த ஆகமம் என்பது பார்ப்பன சிவாச்சாரியார்களுக்கு உரியவை அல்ல என்பதும், தமிழர்களின் வழிபாட்டு முறையைக் களவாடி சமஸ்கிருதத்தில் உருவாக்கிக் கொண்டார்கள் என்பதும் தமிழ் ஆகம அறிஞர்கள் நெடுங்காலமாக கூறிவரும் கருத்தாகும். 

‘சமஸ்கிருதம்’ என்பதற்கு உருவாக்கப்பட்ட மொழி என்று பொருள்படும். பாலி, பிராகிருதம் போன்ற மொழிகளின் கலவையான சமஸ்கிருதத்தில் பல்லாயிரம் பன்னெடுங்காலமாக தொன்மையான நாகரீகம்கொண்டவர்களின் மொழியான தமிழுக்கு முன்பே எப்படி தமிழரின் கோவில்களுக்கான வழிபாட்டு விதிகள் தோன்றியிருக்க முடியும் என்பது தமிழ் ஆகம அறிஞர்களின் கேள்வியாக உள்ளது. சமஸ்கிருதத்தின் வேத ஆகமம் என்பது தமிழ் ஆகம விதிகளை திருடிக் கொண்டது என்னும் விவாதங்களே இன்னும் முடிவு பெறாத நிலையில் உள்ளது. அப்படியான வேத ஆகமங்களையும் முறையாகக் கற்று, தேர்ச்சி பெற்று அர்ச்சகர் பணியில் சேர்ந்தாலும், பார்ப்பனர் ஆல்லாதவர்கள் பிறப்பின் அடிப்படையில் கடவுளுக்கு அர்ச்சனை செய்யத் தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அரசியல் சாசனச்சட்டத்தின் அடிப்படையில் அனைவரும் சமம் என்று உறுதியெடுத்துக் கொண்டு பதவியேற்ற ஒரு நீதிபதி இவ்வாறு தீர்ப்பளிக்கிறார் என்றால் சட்டம் அனைவருக்கும் சமமானதா என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது.

26, ஜூன் – 2023 அன்று தமிழர்களுக்கு சாதகமாக வெளிவந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் எதிர்த்து பார்ப்பனர்கள் மேல்முறையீடு செய்வார்கள்.  தமிழர்கள் அர்ச்சராகக் கூடாது என்கிற பார்ப்பனரின் வன்மம் இன்று நேற்றைக்கல்ல, காலம் காலமாகத் தொடர்ந்து வருவது. தமிழர்களின் உரிமைக்கான சட்டப் போராட்டமோ 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 

1927ல் பெரியார் சேலம் அரசியல் மாநாட்டில் இதற்கென தீர்மானமே வகுத்தார்.

 “ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா சனங்களுக்கும் அவ்விசயத்திலுள்ள பிறப்புரிமையைப் பிடுங்கிக் கொண்டதினால், இந்த அக்கிரமத்தை நிறுத்தவும், ஆலயத்தில் பூசை செய்யவும், அதற்காகக் கோயிலுக்குள் போகவும், ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச் செய்யவும், இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.” என்று உரிமைக் குரலை எழுப்பினார்.

இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல இழிவு எதிர்ப்பு கிளர்ச்சித் துவங்க வேண்டும் என்று, 1969-ல் பெரியார் “கர்ப்பகிரக நுழைவுக் கிளர்ச்சிப் போராட்டம்” என அறிவித்தார். தமிழகத்தின் முக்கியமான கோயில்களில் இந்தப் போராட்டம் நடக்குமென்றும், திருநீறு பூசித்தான் கோயில்களில் நுழையலாம் என்றால் தொண்டர்கள் பூசிக்கொள்ளலாம் என்றும் பெரியார் கூறினார். இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் பெரியார் தன் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

1970-ம் ஆண்டு ‘வாரிசு உரிமையின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படக் கூடாது’ என்று அன்றைய திமுக அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து ஷேஷம்மாள் என்பவர் உச்சநீதிமன்றம் சென்றார். 1972-ல் ‘தமிழக அரசின் முடிவு செல்லும். ஆனால் ஆகம விதிகளுக்கு உட்பட்டே அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு குறித்து பெரியார், “அறுவைச் சிகிச்சை வெற்றியடைந்தாலும் நோயாளி இறந்து விட்டதைப் போலத் தான் இந்த தீர்ப்பு” என்று கருத்து தெரிவித்தார். மேலும், இது “நமது இழிவைபெரிதுபடுத்திக் காட்டியிருக்கிறது” என்று கூறினார். அவர் கூறிய படி தான் 2015 வரை தமிழக அரசின் மனுக்களுக்கு கிடைத்த தீர்ப்புகளும் அமைந்துள்ளன.

1972-ம் ஆண்டு தீர்ப்பினைத்  தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு ஆகம விதியின் கீழ் செயல்படும் கோவில்களைக் கண்டறிய  நீதிபதி திரு எஸ்.மகராசன் தலைமையில் குழுவை அமைத்தது. அந்த வல்லுநர் குழு 1984ம் ஆண்டு அதன் பரிந்துரைகளை அளித்தது. அரசு இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட ஆலயங்களில் சாதி, இன, உட்பிரிவு வேறுபாடின்றி அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்கு முன்னேற்பாடாக அர்ச்சகராக பயிற்சி பெற விரும்புகிறவர்களுக்கு ஆகம பயிற்சி தொடங்கவும், அப்பயிற்சியை தொடங்கத் தேவையான கல்விப் பயிற்சி, செயல்முறைப் பயிற்சி அளிப்பது, பயிற்சிக்கான சேர்க்கை விதிகள், பயிற்சிக்கான பாடத்திட்டம், தேர்வுத் திட்டம், பாடப் புத்தகங்கள், பயிற்சி கால ஊதியம், இட வசதி போன்றவற்றை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்தது. அதன்படி, பழனிக்கோயிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்பட்டு விருப்பமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலங்கள் கடந்தும் இது நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாட்டுக் கோவில்களில் 2006 வரை பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராக நியமிக்கப்படவேயில்லை.

கேரளாவில் 2002-ல் ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து நம்பூதிரி பார்ப்பனரான ஆதித்யன் என்பவர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், கேரள உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து கேரள அரசு நியமனம் செல்லும் என கூறியது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று ஆணித்தரமாக தெரிவித்தது. 

திமுக அரசு 2006-ல், இந்து மதத்தைச் சேர்ந்த எவரும் தேவையான பயிற்சியும், தகுதியும் பெற்றால் எந்த இந்துக் கோவில்களிலும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக் காலம், கோயில்களில் நடைபெறும் பூசை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை பார்த்தசாரதி கோயில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டன.

இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அரசு விளம்பரம் வெளியிட்டு, நேர்காணல் செய்யப்பட்டது. அதன்படி,  ஒவ்வொரு மையத்திற்கும் 40 பேர் வீதம் ஆறு மையங்களுக்குமாக சேர்த்து 240 பேர் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. இவர்களில் 207 பேர் முழுமையாக பயிற்சியை முடித்தார்கள். 2008-ம் ஆண்டு பட்டயமும், சான்றிதழ்களும் பெற்றனர்.

ஆனால், தமிழக அரசின் 2006-ம் ஆண்டு அரசாணையையும் எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோவில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை  விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. தமிழ்நாடு அரசு நீதிமன்ற வழக்கை தொடர்ந்தது.

2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு விதித்த அரசாணை செல்லும் என அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் உரிமைக்கு பச்சைக் கொடி காட்டியது. இருப்பினும் ஆகம விதிகளின் படியும் அர்ச்சகர் நியமனத்தை தடுக்க முடியாது எனவும் கூறியது. இதனால் எவரேனும் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்படும் நபர்கள் தனியாக நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தீர்ப்பளித்தது. இங்கேயும் ஆகம விதி வந்து புகுந்து கொண்டது.

இவ்வாறு 1972 முதல் 2015 வரை அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க தமிழ்நாடு அரசு முயல்வதும், குழுக்களை அமைத்து பரிந்துரைகளைப் பெறுவதுமாக இருப்பதும், பார்ப்பனர்கள் உடனே நீதிமன்றத்திற்கு சென்று தடையாணைகளை பெற்றுக் கொள்வதும் தொடர்ந்து கொண்டேயிருக்க, நீதிமன்றங்களோ  ஆகம விதிகளை விடாமல் திணித்தபடியே  தீர்ப்புகளை அளித்தது. 

2011 – 2021 வரையிலான அதிமுக ஆட்சியில், ஆகம விதிகளற்ற இரண்டு சிறு கோயில்களில் இருவர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த ஆட்சிக்காலத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அர்ச்சகராக நியமிக்கும் தகுதியாக 18 முதல் 35 வயது வரை என்ற வரம்பு நுழைக்கப்பட்டது. இந்தத் திருத்தம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற தமிழர்களுக்கு எதிராகவேத் திரும்பியது. ஏனென்றால், 2008-ல் பயிற்சி முடித்தவர்கள் தற்பொழுது வரை போராடிக் கொண்டுள்ள நிலையில் இந்த நியமன வயது வரம்பு பலருக்கு கடந்திருக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. 

இதன் பின்னர், 2021-ம் ஆண்டு பதவியேற்ற திமுக அரசு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற 28 பேருக்கு பணி நியமனம் வழங்கியது. பட்டியலினத்தவர் 4 பேர் உட்பட அனைத்துச் சாதியினரும் பெரிய கோவில்களில் அர்ச்சகர் ஆக்கப்பட்டனர். தமிழர்களின் இந்தப் பணி நியமனத்தைப் பொறுக்க முடியாத  பார்ப்பனியக் கும்பல் மீண்டும் நீதிமன்றத்திற்குப் படையெடுத்தது. அதிமுக அரசால் இந்துசமய அறநிலையத் துறையில் திருத்தப்பட்ட வயதின் விதியையும், திமுக அரசு நியமித்த அர்ச்சகர் பணி நியமனத்தையும் எதிர்த்து அக்கும்பல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மீண்டும் நீதிமன்றம் ஆகம விதியை விடாமல் பிடித்துக் கொண்டது. தமிழக அரசின் விதிகள் செல்லும், ஆனாலும் ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் ஆகம விதிகளின் படியே நியமனம் இருக்க வேண்டும். அதேபோல கோயில்களில் அர்ச்சகர்களையும், பூசாரிகளையும் நியமிக்கும் அதிகாரம் கோயில் அறங்காவலர்களுக்கும், தக்காருக்கும் மட்டுமே உள்ளது, அறநிலையத் துறைக்கு கிடையாது என்று தீர்ப்பு கூறியது. மேலும், ஆகம விதிகளின் படி இயங்கும் கோவில்களைக் கண்டறிய 5 பேர் கொண்ட குழுவை நியமிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. 

கடந்த 50 ஆண்டுகளாக ஆகம விதிகளை விடாது பற்றிக்கொண்டிருக்கும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரண்டு அர்ச்சகர் நியமனம் ஆகம விதிப்படி அல்ல என்று மதுரை கிளையின் மார்ச் மாத தீர்ப்பும் வந்துள்ளது. கூடுதலாக, மனுத்தாக்கல் செய்த, நேர்முகத் தேர்வில் தேர்ச்சியே பெறாத இரண்டு பார்ப்பனர்களை அர்ச்சகர்களாக பணியில் நியமிக்க வேண்டும் எனவும் விசித்திர தீர்ப்பையும் எழுதினார். தமிழர்களின் ஆகம விதிகளை பார்ப்பனர்கள் களவாடி வைத்துக் கொண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையில் பார்ப்பனியக் கும்பல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. 

2007ல் அர்ச்சகர் பயிற்சிக் கல்லூரியில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற ரங்கநாதன் பின்வருமாறு கூறுகிறார்.

“எங்களுக்கு நேர்காணல்களைச் செய்யும் குழுவில் அதிகாரிகளுடன் பல அர்ச்சகர்களும் இருந்தனர். ஆனால், பயிற்சி என்று வரும்போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். தங்களது சங்கத்தினர், மற்ற சாதியினருக்கு பயிற்சியளிக்கக்கூடாது எனக் கூறிவிட்டதால் தங்களால் பயிற்சியளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். பிறகு, பெங்களூரில் இருந்து ராமகிருஷ்ண ஜீவா என்ற பிராமணர் சமஸ்கிருதத்தில் பயிற்சியளிக்க வந்தார். அவர் பயிற்சியளிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே, அவர் மீது தாக்குதல் நடந்தது. பிறகு அவர் வெளியில் செல்லும் போதெல்லாம் மாணவர்களின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. 
அதேபோல முறைப்படி பூசை செய்து பயிற்சி செய்வதற்காக அறநிலையத் துறையிடம் கடவுளின் திருவுருவங்களைச் செய்து தரச் சொன்னோம். அவர்கள் செய்து கொண்டுவரும் வழியில் அதை தடுத்தனர். பிறகு நாங்களே திருவுருவங்களை செய்து பூசை பயிற்சியைச் செய்தோம். இவ்வளவு தடைகளுக்கு மத்தியில் தான் பயிற்சியை முடித்தோம்” என்கிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கநாதன்.

இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பொழுது, இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து பயிற்சிபெற்ற மாணவர்களை தாக்கியதாக ரங்கநாதன் கூறினார். 

பார்ப்பனர்கள் நீதிமன்றங்களுக்கு எடுத்துக் கொண்டு ஓடும் ஆகம விதிகளை எடுத்துக் கொண்டு பேசினாலும் கூட,  ஆகம விதிகளை எள்ளளவும் அவர்கள் பின்பற்றுவதில்லை என்பதும் கண்கூடு தெரியும். சுமார்த்தப் பார்ப்பனர்கள் கோவில்களில் அர்ச்சகராகக் கூடாது என்பது ஆகம விதி. ஆனால், 250 க்கும் மேற்பட்ட சுமார்த்தப் பார்ப்பனர்களே 150 க்கும் மேற்பட்ட கோவில்களில் பணியாற்றுகின்றனர் என ஏ.கே. ராஜன் குழு கூறியுள்ளது. அதே போல பல கோவில்களின் அமைப்பு ஆகமப்படியாகவும் இல்லை. உதாரணமாக, சிதம்பரம் நடராசர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருச்செந்தூர் கோயில் என பட்டியல் நீள்கிறது. ஆகம விதிப்படி இப்போதுள்ள நிலையில் எந்தக் கோயில்களும் இல்லை என்றே ஏ.கே. ராஜன் குழு கூறுகிறது. 

பூசை முறைகளிலும் ஆகம விதிகள் இல்லை. குறிப்பிட்ட பூசைகளை சிவாச்சாரியார்களே செய்ய வேண்டும் என்பதை மீறி மற்ற அர்ச்சகர்களும் செய்கிறார்கள்; பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு பூசை செய்வதாக மூலவரைத் தொட்டுத் தான் செய்கிறார்கள் என்றும் பல பூசை நிகழ்வுகள் ஆகம விதிகளுக்கு புறம்பானவையே என்கிறார். மேலும், பக்தர்களின் ராசி, நட்சத்திரம், பெயர் சொல்லி வழிபாடு செய்வதும், அதற்கு சிறப்பு கட்டணம்  நிர்ணயிப்பதும் எந்த ஆகமத்திலும் சொல்லப்படவில்லை. ஆனால் அவையெல்லாம் தினமும் கண்கூடாகவே நடைபெறுகிறது. ஒரு தெய்வத்திற்குரிய மந்திரத்தை வேறு தெய்வத்துக்கு சொல்லக் கூடாது, சிவன்-விஷ்ணு சிலைகள் ஒரே கோவிலுக்குள் இருக்கக் கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன என ஏ.கே. ராஜன் குழு அறிக்கை அளித்திருக்கிறது. இவ்வளவு விதிமீறல்கள் உள்ள ஆகம விதிகளை சுமந்து கொண்டு தான் பார்ப்பனர்கள் ஆகமவிதிப்படி தமிழர்கள் அர்ச்சகராகிவிடக் கூடாது என  நீதிமன்றத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.

தங்களைத் தவிர வேறு எவரும் அர்ச்சகராகி விடக் கூடாது என்கிற எண்ணம் பார்ப்பனர்களிடம் உருவாவதற்கு, பெருங்கோவில்களே, அதிகாரத்தைத் தக்க வைக்கும் நிறுவனம் என்பதைத் தவிர வேறென்ன காரணமாயிருக்க முடியும்? தங்களைத் தவிர மற்றவர்கள் தொட்டால் தீட்டுப்பட்டு விடும் என்று காலம் காலமாக மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் கும்பல் பார்ப்பனியக் கும்பல். கோவில்களைச் சுற்றி கட்டமைத்தவைகளாக சடங்கு, சம்பிரதாயம், புரோகிதம், சாஸ்திரம், சோதிடம் என நமது சமூகத்தில் புழங்கும் மூடத்தனங்களால் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் கொள்ளைகள் நின்று போக பார்ப்பனியம் எப்படி இடம் கொடுக்கும்? 

பேரரசுகளின் முடியாட்சி முதல் நிலக்கிழார் சமூகம் வரை உழைக்கும் மக்கள் பண்படுத்திய விளைநிலங்களை எதேச்சதிகாரமாக பிடுங்கி கோயில்களுக்கு தானமாக வழங்கியதையும், அம்மக்களை அரையடிமைகளாக மாற்றப்பட்டதையே சைவ வைணவ கோயில் பீடங்களின் வரலாறுகள் கூறுகின்றன. இப்படியாக தாரைவார்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சொத்துக்களை, தமிழ்நாடு அரசு அறநிலையத் துறை தொடங்கும் முன்பு வரை, உண்டு கொழுத்த பார்ப்பன பெருச்சாளிகளின் கூச்சலே “அறநிலையத் துறையை ஒழிக்க வேண்டும்” என்பது. 

மதத்தின் வாயிலாக நாட்டு மக்களை கட்டுப்படுத்தும் சமூகத்திடம் குவியும்  அதிகாரமே, அம்மக்களின் ஆட்சி அரசியலை தீர்மானிக்க வல்லது! என்று வரலாறுகள் கற்றுக் கொடுத்த பாடமாக இருக்கும் போது, இந்த அதிகாரத்தை விட்டுக்கொடுக்க பார்ப்பனர்களுக்கு எப்படி மனம் வரும்? இவற்றையெல்லாம் தீர்க்கமாக அரசியல் பார்வையுடன் பெரியார் அறிந்திருந்தார். இதனால் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கிளர்ச்சியைக் கையிலெடுத்தார். “நாம் போராடி சட்டங்கள் கொண்டு வரும் நாளில் பார்ப்பான் நீதிமன்றத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்” – என்ற அவரின் கூற்றிற்கேற்பத் தான் நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில சமயங்களில் தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் எழுதப்பட்டாலும் பார்ப்பனர்கள் உடனே எதிர்த்து மேல் முறையீடு சென்று விடுகிறார்கள்.

 “இந்துக்களே ஒன்று கூடுங்கள்” என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ், பாஜக கூட்டமும் அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்கு எதிராகவே உள்ளது. அனைத்து சாதியினரும் அனைத்துக் கோயில்களிலும் அர்ச்சகராகலாம் என்கிற உரிமை உருவாகும் நாளே பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படும் நாளாகும். அந்த நாளினை நோக்கி பயணிக்க மக்களை அணிதிரட்ட வேண்டும். அதிகார மையமான கோவில்களின் கருவறைக்குள் தமிழர்களும் எந்தத் தடையுமின்றி நுழைய வேண்டும் என்பதே அனைத்து மக்களின் உரிமைக்குப் பாடுபடும் ஜனநாயக சக்திகளின் குறிக்கோளாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »