தமிழீழ இனப்படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசிடம் மென்மையான போக்கை தொடரும் ஐநா மனித உரிமைகள் ஆணையம்! இலங்கையின் பொருளாதார சிக்கல்களை பொதுமைப்படுத்தி தமிழர்களுக்கான நீதியை மேலும் தாமதப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது ஐநா மனித உரிமை ஆணையரின் ஆண்டறிக்கை! – மே பதினேழு இயக்கம்
தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் 54-வது அமர்வில் இலங்கை மீதான தீர்மானத்தின் ஆண்டறிக்கையை ஐநா மனித உரிமை ஆணையர் சமர்ப்பித்துள்ளார். தமிழீழ இனப்படுகொலைக்கான நீதியை தமிழர்கள் ஒவ்வொரு அறிக்கையின் மூலம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், ஐநா அறிக்கை மீண்டும் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே இலங்கை அரசின் செயலற்றத்தன்மை மீது மென்மையான போக்கையே ஐநா மனித உரிமை ஆணையம் இந்தாண்டும் கடைப்பிடித்திருக்கிறது. மேற்குலக நாடுகளின் தலைமையிலான சர்வதேசச் சமூகம் தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் தோல்வியுறும் என்ற மே பதினேழு இயக்கத்தின் கூற்று மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் 51-வது அமர்வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்தின் மீதான ஆண்டறிக்கையை மனித உரிமைகள் மன்றத்தின் ஆணையர் வோல்கர் டர்க் (Volker Türk) தற்போது நடைபெற்று வரும் அமர்வில் செப்டம்பர் 6, 2023 அன்று வெளியிட்டுள்ளார். இதில், போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், வெளிப்படைத்தன்மை இல்லாமை, ஊழல் உள்ளிட்டவற்றில் இலங்கையின் பொறுப்புகூறல் போதாமையை சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழர்களுக்கான நீதியாக மேற்குலகம் முன்மொழிந்த நிலைமாற்ற காலத்திற்கான நீதியை (Transitional Justice) அடைய சாதகமான சூழலை உருவாக்க மேலும் முயற்சிக்க வேண்டுமென வழக்கம் போல் மென்மையாக வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுத்தருவதாக இனப்படுகொலையில் பங்காற்றிய அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு மேற்குலக நாடுகள் 2012 முதல் இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் ஆண்டுதோறும் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. அமெரிக்க தீர்மானங்கள் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தரும் நோக்கத்தில் அமையாமல், புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உள்ள இனப்படுகொலை இலங்கை அரசை காப்பாற்றும் விதமாகவும், மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் விதமாகவும் இருந்துள்ளதையும் மே பதினேழு இயக்கம் ஒவ்வொரு முறையும் அம்பலப்படுத்தி, இந்த தீர்மானங்களை தமிழர்கள் நிராகரிக்க வைத்துள்ளது. மே பதினேழு இயக்கம் எச்சரித்தபடியே, தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் மேற்குலக நாடுகள் தோல்வியடைந்துள்ளது என்பதை ஐநா மனித உரிமைகள் ஆணையரின் இந்தாண்டு அறிக்கை மீண்டுமொரு முறை உறுதிபடுத்தியுள்ளது.
மேலும், கடந்தாண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, இதனால் ஏற்பட்ட மக்களின் எழுச்சி, அதனைத்தொடர்ந்த ஏற்பட்ட ஆட்சிமாற்றம், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட தமிழீழ இனப்படுகொலைக்கு தொடர்பற்ற கூறுகளையும் ஆணையரின் அறிக்கை கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால், இதற்கு அடிப்படையாக இருக்கும், இலங்கையின் பட்ஜெட்டில் பெரும்பங்கு வகிக்கும், தமிழர் பகுதியில் இன்றும் குவிக்கப்பட்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தின் செலவினம் குறித்தோ, தமிழர் பகுதிகள் மறுகட்டமைப்பு என்ற பெயரில் பிற நாடுகளிடம் கடன்கள் வாங்கி ஆட்சியாளர்கள் கைக்குள் போட்டது குறித்தோ அறிக்கை கவலைப்படவில்லை. அதோடு, ஈஸ்டர் வெடிகுண்டு குறித்து கூறும் அறிக்கை, ஆட்சியை தக்கவைக்க ராஜபக்சே குடும்பம் அதில் ஈடுபட்டுள்ளதையும், இதே போன்று தமிழினப்படுகொலையின் பின்னணியையும் குறிப்பிட தவறியுள்ளது. இராஜபக்சே குடும்பத்தினரின் இது போன்ற பயங்கரவாத செயல்களை சர்வதேச சமூகம் கண்டிக்கத் தவரும்பட்சத்தில், இவர்கள் மக்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து செய்வார்கள்.
புலிகளின் எழுச்சிக்கு முன்னரான 1983 ஜூலை கலவரத்தில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையையும், புலிகள் அழிக்கப்பட்ட போர் முடிந்த 14 ஆண்டுகளுக்கு பிறகும் பொறுப்புக்கூறல் போதாமை பற்றியும் குறிப்பிடும் அறிக்கையின் மூலம், சிங்களப் பேரினவாதம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் அடக்குமுறைக்கு புலிகள் காரணமில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆனால், மேற்குலக நாடுகளும், ஐநா மனித உரிமை ஆணையமும் இன்றளவும் புலிகளை குற்றச்சாட்டி வருகின்றன என்பதில், இனப்படுகொலை இலங்கை அரசை காப்பாற்றும் நோக்கம் ஒளிந்துள்ளது. இதனை மேற்குலக நாடுகளை நம்பும் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இனப்படுகொலை சிங்கள அரசு தமிழர்களை கொன்றொழித்தது தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மனித மரணக்குழிகள் மூலம் அம்பலமாகியுள்ள நிலையில், அதனைப் பற்றியும் அறிக்கை குறிப்பிடவில்லை. சர்வதேச விதிகள் எதனையும் பின்பற்றாமல் இலங்கை அரசே இந்த அகழாய்வை மேற்கொள்ளுவது இனப்படுகொலை தடயங்களை அழித்து புலிகள் மீது குற்றம் சுமத்தும் சூழலை உருவாக்கிவிடும் என்ற கவலை ஐநா மனித உரிமை மன்றத்திற்கு இல்லை என்பதையே இந்த அறிக்கை காட்டுகிறது.
14 ஆண்டுகளாக தமிழர்கள் அனுபவித்து வரும் வேதனையை குறிப்பிடும் அறிக்கை, அங்கு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நடைபெறும் மக்களின் தொடர் போராட்டம் குறித்தும், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் தமிழர்களிடம் அளிக்காமல், அவ்விடங்களில் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கப்படுவது குறித்தும், தமிழர் பகுதிகளில் பௌத்த கொடிகள் நிறுவதும் பௌத்த விகார்கள் நிறுவப்படுவது குறித்தும் பேசவில்லை. அதேபோல், சிங்கள அரசு கொண்டுவரும் கொடுஞ்சட்டங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் அறிக்கை, ஏற்கனவே சிறையில் கொடுந்துயரில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பேசவில்லை. சிங்கள மக்களின் ஏழ்மை அதிகரித்துள்ளது குறித்து கவலை தெரிவிக்கும் அறிக்கை, பல பத்தாண்டுகளாக தமிழர்களை சிங்களப் பேரினவாதம் அவ்வாறு வைத்திருந்ததை கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை.
ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, கடந்த ஓராண்டு சூழலை மட்டுமல்ல, தமிழர்களுக்கு நீதி வழங்கும் மேற்குலக முறையையும் அம்பலப்படுத்தியுள்ளது. இவர்கள் மூலம் தமிழர்களுக்கு ஒரு போதும் நீதி கிடைக்கப்போவதில்லை எனபதும் உறுதியாகியுள்ளது. தமிழர்கள் நமக்கான நீதியை நாமே வென்றெடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம். இதற்கான நீண்ட நெடிய ஜனநாயக போராட்டத்திற்கு அணியமாக வேண்டுமென உலகத் தமிழர்களை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வண்ணம் போராட்ட வடிவத்தை கட்டமைக்க வேண்டும். தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்புமே தமிழர்களுக்கான நீதி என்பதை உலகிற்கு எடுத்துரைப்போம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
12/09/2023