மாநிலக்கட்சி முதல்வர்களை குறிவைக்கும் மோடி

மதுபானக் கொள்கை வழக்கில் குற்றச்சாட்டப் பட்டிருக்கும் தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மார்ச் 21, 2024 அன்று கைதுசெய்யப்பட்டார். கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கவே கூடாது என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதங்களை அடுக்கிவந்த நிலையில், `சரியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டது ஏன்? அவர் வாடிக்கையாகக் குற்றம் செய்பவர் அல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். அவருக்கு ஏன் நாங்கள் ஜாமீன் வழங்கக்கூடாது?’ என கேள்வி எழுப்பி இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

பாஜக தனது ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி கறுப்பு பணத்தை மீட்கவில்லை. மாறாக ரஃபேல் ஊழல், பிஎம் கேர் ஊழல், நிலக்கரி ஊழல், சிஏஜி ஊழல், 5ஜி ஊழல், கார்ப்பரேட் ஊழல், பங்கு சந்தை ஊழல், ஆரூத்ரா ஊழல் என பல ஊழல்களை செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய விவகாரத்தில் பாஜக வெளிப்படையாக சிக்கிக் கொண்டது. அந்த ஊழலிருந்து மக்களை மடைமாற்றவும், மக்களவைத் தேர்தல் பயத்தினால் தன்னாட்சி அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ-வை தனது முகவர்கள் அல்லது தரகர்களாக பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கவிதா ஆகியோரை மோடி அரசு கைது செய்தது. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டி, ஊழல் என்ற பிம்பத்தை காண்பித்து மாநில கட்சிகளையும் உரிமைகளையும் நசுக்கும் வேலையை  பாஜக மோடி அரசாங்கம் செய்து வருகிறது.

2021-22-ஆம் ஆண்டிற்கான டெல்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறியதை தொடர்ந்து அரபிந்தோ பார்மா (Aurobindo pharma) இயக்குனர் சரத்ரெட்டி கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை 21.03.2024 அன்று இரவு கெஜ்ரிவாலைக் கைது செய்தது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சரத்சந்திர ரெட்டியை நவம்பர் 10, 2022-ல் கைது செய்து விசாரணை நடத்தும் போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பண மோசடி தொடர்பில் சம்பந்தமில்லை என வாக்குமூலம் அளித்தார். ஆனால் பல மாதங்கள் சிறையில் கழித்த பின், ”பல அழுத்தங்களின் காரணமாக பிறழ் சாட்சியமாக மாறி” கெஜ்ரிவாலுக்கு சம்பந்தம் இருப்பதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். இவர் வாக்குமூலம் அளித்த சில நாட்களில் நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது. இவரின் ’அரபிந்தோ பார்மா’ மற்றும் இதர நிறுவனம் பாஜக கட்சிக்கு கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்துள்ளது. இதன் மூலம் அமலாக்கத்துறை சரத் ரெட்டிக்கு  அர்விந்த் கெஜ்ரிவால் பெயரை சேர்க்குமாறு மிரட்டல் செய்தது அம்பலமாகிறது. 

ராகவ் மகுண்டா என்பவர் மீது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கடந்த 2023 ஆண்டு பிப்ரவரி 10 முதல் ஜூலை 16 வரை ஏழு அறிக்கைகளைப் பகிர்ந்துள்ளார், மேலும் இந்த ஆறு அறிக்கைகளில் கெஜ்ரிவாலைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை இருப்பினும், அவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக தனது ஏழாவது அறிக்கையை “ஐந்து மாத சித்திரவதைக்குப் பிறகு” கொடுத்தார். (அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறினார்). மேலும் ராகவ் மகுண்டாவின் தந்தையான சீனிவாசலு ரெட்டி YSR காங்கிரசு கட்சியில் முன்பு இருந்தார். இவர்களின் குடும்பம் சில நிறுவனங்களை நடத்தி வருகிறது. மகனை கைது செய்ததால் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவின் கூட்டணியான தெலுங்குதேசக் கட்சியில் பின்பு சேர்ந்தார். தற்போது மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ’ஓங்கோல்’ தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் பாஜகவின் ரகசிய கூட்டாளி என்பது ஊடகங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இவ்வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உட்பட 16 பேர்களை  கைது செய்துள்ளனர். சஞ்சய் சிங் 6 மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்தார். ஆக இதன் மூலம் அமலாக்கத்துறை எவ்விதமான ஆதாரத்தையும் வழங்காமல் குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுமே சிறையில் அடைப்பதும், மிரட்டி பணிய வைக்கப்படுபவர்கள் பாஜகவின் பக்கம் சாய்வதும், பணிய வைக்க முடியாதவர்கள் தானே வழக்காடி நிரூபித்து வெளிவர வேண்டியதுமே நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகப் புலனாகிறது.

தேர்தல் நேரத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டன குரலை எழுப்பினர். நீதிமன்றம் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்று ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஐ.நா அவை தலைவரும் தேர்தல் நேரத்தில் சனநாயக தன்மையை காக்குமாறும் மக்களின் உரிமைகளை காக்குமாறும் தனது கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.

பாஜக பதவியேற்ற காலத்தில் இருந்தே மாநிலக் கட்சி தலைவர்கள் வளரக்கூடாது என்ற குறிக்கோளுடன் வேலை செய்து வருகிறது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கவிதா, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் போலவே தற்போது கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனும் அமலாக்கத்துறையால் குறி வைக்கப்பட்டுள்ளார்.

இதைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் மார்ச் 28, 2024ல் நடைபெற்றது. (மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின்  உரை காணொளி:

https://youtu.be/v4fQMdrODEM?si=QUpgXoL6xTcoL1_v

பாஜக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களை விலைக்கு வாங்கவும், புதிதாக ஒவ்வொரு மாநிலத்திலும் பல கோடிகள் செலவில் பாஜக அலுவலகங்கள் கட்டவும் முடிந்தது என்றால் அது ஊழல் பணத்தில்தான் என்பது தற்போது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியிருக்கிறது. பெரும் முதலாளிகள் வழங்கிய தேர்தல் நிதி பத்திரங்கள், மக்கள் வழங்கிய பி.எம்.கேர் பணம் மற்றும் ஒவ்வொரு ஊழலிலிருந்து வந்த பணம், பாஜகவின் வளர்ச்சிக்குத்தான் பயன்பட்டிருக்கிறது.

தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை தைரியமாக எதிர்கொள்ள முடியாத பாஜக அரசு, தன்னாட்சி நிறுவனத்தை தனது ஏவல் துறைகளாக பயன்படுத்தி அச்சுறுத்தியது. எதிர்க்கட்சியான காங்கிரசின் வங்கிக் கணக்கை முடக்கியது. தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டால் பாஜக அம்பலப்படும் என நினைத்து பயப்படுகிறது பாஜக. மோடி என்ற பிம்பத்தை மாநில கட்சிகள் உடைத்து வருவதால் அவர்களை வளர விடக் கூடாது என்ற எண்ணத்தினால் இரண்டு முதல்வர்கள் மற்றும் பதினொன்று அமைச்சர்கள் பதவியில் இருக்கும்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலக் கட்சிகளை உடைப்பது, ஆளுநர் மூலம் மாநில திட்டங்களையும் உரிமைகளையும் தடுப்பது, மாநிலங்களின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகக் கருதப்படும் கூட்டுறவுத் துறையில் புதிய சங்கத்தை உருவாக்கி கைப்பற்ற நினைப்பது என பாஜகவின் அராஜக செயல்கள் தொடர்ந்தன.

பாஜக அரசுக்கு எதிராக யார் பேசினாலும், கருத்து தெரிவித்தாலும் அதனை நசுக்கும் வேலையை மோடி அரசாங்கம் ஆரம்பம் முதலே செய்து வருகிறது. தனக்கு எதிராக பேசும் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், போராளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என தொடங்கி தற்போது முதல்வர்கள் வரை எந்தவித ஆதாரமும் இன்றி வெறும் அமலாக்கத்துறை சுமத்தும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மட்டும் சிறையில் அடைக்கலாம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.

“மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்களின் நிலைமை இப்படி இருக்கும் போது இனி சாமானியனின் நிலை என்ன?” என்ற அச்சம் அனைவரிடமும்  எழுகிறது. இப்போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் மக்களவை தேர்தல் பரப்புரையை தொடங்கியிருக்கிறார. அவர் பரப்புரையின் போது,” நாட்டின் பெரிய ஊழல் வாதிகளை பாஜகவில் இணைந்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார். மோடி திரும்ப வென்றால் மம்தா பேனர்ஜி, பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி யாதவ் மற்றும் மு.க.ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறையில் அடைப்பார், இனி சனநாயகமே இருக்காது. எனவே சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முடிவுக் கட்டுவோம்” என பரப்புரையில் பேசினார்.

தன்னாட்சித் துறைகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, NIA, CBI முதலிய துறைகளை கைக்குள் போட்டுக் கொண்டு தனக்கு எதிரானவர்களை அடக்கியும், அடங்க மறுப்பவர்களை பொய்க் குற்றச்சாட்டுகளால் சிறையில் அடைத்து மிரட்டியும் என ஜனநாயகப் படுகொலையை இந்த பத்தாண்டுகளில் மோடி அரசு நிகழ்த்தி வருகிறது. சிறைக்கு சென்றவர்கள் தேர்தல் நிதி வழங்கியும், பாஜகவில் சேர்ந்தும் விடுதலை ஆகின்றனர். ஆனால் பாஜகவை எதிர்த்து நிற்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி விசாரணைக் கைதியாகவே வைத்திருக்கும் சூழ்ச்சியை அரங்கேற்றுகிறது.

இந்தியப் பார்ப்பனிய அதிகார மட்டத்தின் கைப்பிடிக்குள் இருக்கும் இந்த தன்னாட்சித் துறைகள் பாஜக, ஆர்.எஸ்.எஸ்-சின் கூலிகளாக செயல்படுவது பார்ப்பனியத்தின் மேலாதிக்க அரசியலை ஊன்றச் செய்வதன் நோக்கமின்றி வேறல்ல. பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் மாநில உரிமையைப் பேசும் முதல்வர்கள், நிதி உரிமையைக் கேட்கும் முதல்வர்கள், பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் முதல்வர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளும், வழக்கும், சிறையும் உறுதி என்பதைத்தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »