மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் மாஞ்சோலை பயண கள ஆய்வு குறித்தும், அங்கு பாம்பே – பர்மா நிறுவனத்தால் வஞ்சிக்கப்படும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மே 17 இயக்கம் பாளையங்கோட்டையில் நடக்க இருக்கும் ‘மாஞ்சோலை தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு’ குறித்தும் தனது முகநூலில் சூலை 12, 2024 அன்று எழுதிய பதிவு.
மாஞ்சோலை செல்லும் சாலையில் வனம், நெருக்கிப் பின்னிய சடையாக அடர்ந்து வளர்ந்து நான்கு அடி தாண்டி எதுவும் தெரியாத அளவில் சாலை வரை வழிந்து நின்றது. 15 கிமீ தூரத்திற்கு அதிகபட்சம் அரை மணிநேரம் என நினைத்து நகர்ந்த வாகனம் இரண்டு மணி நேரமான பின்பே ஊர் சென்றடைந்தது. 90 ஆண்டுகளாக வேலி போட்டு பாதுகாக்கப்பட்ட தேயிலை தோட்டம் புதர் செடிகள் வளர்ந்து காடாக மாறிக்கொண்டிருப்பதை சொன்னது. மூன்று ஊர்கள் மலைச் சாலையின் எல்லை கிராமங்களாக நின்று கொண்டிருக்கிறது.
ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளோடு நின்றிருக்கும் கம்பெனி வீடுகள் காலனிய காலத்தை சொல்லிக்கொண்டிருந்தன.
வீடு, மண் சாலை, தூறல் காற்று, பச்சைவெளி என அனைத்தும் அழகாய் இருந்தாலும் தேயிலை தொழிலாளர்களிடத்தில் மகிழ்ச்சியேதும் மிச்சமிருப்பதாக தெரியவில்லை. பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் போக வேண்டுமென்றால் விடுதிக்கு அம்பாசமுத்திரம் அனுப்ப வேண்டும். நேரம் கிடைக்கும் போது பெற்றோர்களோ, அவர்களோ வந்து போகலாம். அதிகாலைக்கு ஒன்று, பிற்பகல் ஒன்று என அரசுப்பேருந்து தூதுபோய் வருகிறது. தபால்காரர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் என வெளியாட்கள் அன்றாடம் வந்து தேவையானவற்றை கொடுத்தும், எடுத்தும் செல்கிறார்கள்.
ஒரு திருப்பத்தில் எதிராக வந்த குட்டி லாரிக்கு இடம் விட வழியில்லாமல், பின்னகரவும் வழியில்லாமல் வாகனம் நின்றது. வாகனத்தை விட்டு இறங்கி வழி பார்த்தபோது மூட்டை முடிச்சுகளோடு எடை அதிகமாகி மூச்சுவிட சிரமப்பட்டு நின்றது அவர்களின் வண்டி. விசாரித்த போது வீடு காலி செய்து கீழே இறங்கிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். நாங்கள் மேலே செல்வதற்குள் இரண்டு மூன்று வண்டிகள் குடும்பங்களோடு கீழே நகர்ந்து கொண்டிருந்தன.
மாதங்களுக்கு ஒருமுறை வந்து செல்பவர் ப்ளாண்டேசன் ஆபீசர் எனப்படும் அரசு அதிகாரி ஒருவர். நாகர்கோவிலில் இருந்து வந்து செல்வதாக சொன்னார்கள். கவலையோடு கூடிய பெண்களிடம் ஆறுதலை சொல்லிவிட்டு, வேலையை இரண்டு வருடம் நீட்டித்து தருவதாக சொல்லிவிட்டு, அவர்களை சந்தித்ததற்கு ஆதாரமாக ஆவணத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு சென்றுவிட்டார். அவர் வந்து சென்ற பின்னர்தான் கம்பெனியாட்கள் அந்த விசயத்தை சொல்லியிருக்கிறார்கள். விருப்ப ஓய்வு கடிதத்தில் கையெழுத்திட்டு விட்டீர்கள் என அரசு அதிகாரி சொல்லியிருக்கிறார், ஆகவே காலி செய்து கிளம்ப தயாராகுங்கள் என்றிருக்கிறது நிறுவனம்.
அந்த ஆவணத்தை வாசிக்கத் தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டோம் என வருத்தப்பட்ட ஒரு பெண், தன்னுடைய தாயும், பாட்டியும் இங்கேதான் பிறந்தார் என்று சொன்னார். சந்ததிகளின் சதையும், சாம்பலும் இந்த மாஞ்சோலை மண்ணில் கரைந்து கிடக்கிறது என்றார். இந்த தேயிலையெல்லாம் வேர்வை சிந்தி உழைத்தவை அல்ல, ரத்தம் சிந்தி வளர்த்தெடுத்தவை என்றார் ஒரு முதியவர்.
புகைப்படம் எடுத்து இன்ஸ்டாக்ராமில் போடலாம் எனும் ஆசையில் தோட்டத்திற்குள் சென்று வந்த ஒரு நண்பரின் காலில் நான்கு அட்டைகள் இரத்தம் குடித்தபடி தொங்கிக் கொண்டிருந்தன. எப்படி ஏறியது என அவருக்கு தெரியவில்லை. ஒருநாள் அட்டைக்கடியே தாங்காத நண்பருக்கு குருதி கொடுத்து தேயிலை வளர்த்த வரலாறு ரெண்டு நிமிடத்திற்குள் புரிந்து போனது.
உலகம் முழுவதும் புகழ்பெற்ற இயற்கைத் தேயிலையாக கொண்டாடப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்ட கிராமங்கள் இன்னும் சில மாதங்களில் மண்ணோடு மண்ணாகலாம். கூட்டத்தோடு மக்கள் கரைந்து போகலாம். இவர்களின் நூறாண்டு உழைப்பில் பாம்பே-பர்மா நிறுவனம் உயரமாகி இருக்கிறது.
மாஞ்சோலை கிராமத்தை கூட எட்டிப் பார்த்திருக்காத நூஸ்லிவாடியா தன் கஜானாவை நிரப்பி முடித்து, மூடுவிழாவிற்கு தயாராகியிருக்கிறார். மக்களும் நூஸ்லிவாடியாவை பார்த்ததில்லை, ஆனால் மூன்று சந்ததிகளாக நூஸ்லிவாடியாவின் பாட்டனார் காலத்திலிருந்து உழைத்து தேய்ந்து போயிருக்கிறார்கள். முகம்மதலி ஜின்னா தன் பேரன் திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை எனும் மலைக்கிராமத்தில் தமிழர்களை அடிமைகளாக வைத்து தேயிலை தோட்டம் நடத்துவான் என தெரியாமலேயே பாகிஸ்தானில் செத்தும் போய்விட்டார். ஜின்னாவின் பேரனோ பார்சி குடும்பத்தோடு உறவாடி ஜொராஸ்ட்ரியனாகி, பின்னர் கிருத்துவனாகி, பின்னர் முப்பது ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்கு தண்ணீராய் பணத்தை வாரி இறைத்து, பாசிச செடியை இந்தியா முழுவதும் பயிராக்கியிருக்கிறார்.
தமிழினத்தின் தாய்மண்ணில் அகதியாய் மாஞ்சோலை தொழிலாளர்கள் எனும் கூட்டை விட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறான் தமிழன். காட்டாறாய் மலையிலிருந்து இறங்கி வரும் வெள்ளமென மாஞ்சோலை தொழிலாளர்களின் கண்ணீரும், குருதியும் நம்மிடம் நீதி கேட்க ஓடி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் கூலி உயர்வு கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு எடுத்து சென்றவர்கள் மரணத்தை பரிசாக எடுத்து வந்தார்கள். இன்று வாழ்வாதாரத்தைப் பிடுங்கி எறியும் பாம்பே-பர்மா நிறுவனத்தை எதிர்க்கும் வலுவில்லாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு காதுகள் முளைத்தால், முதுகெலும்புகள் நிமிர்ந்தால், கைகள் உயர்ந்தால் மாஞ்சோலை தொழிலாளர்களோடு நாம் கைகோர்ப்போம். அது சாத்தியமாகுமெனில் அவர்கள் வாழ்வு வளமாகும் வாய்ப்புண்டு.
கடந்த 8ம் தேதி குவிக்கப்பட்ட காவல்துறை அரணை கடந்து மாஞ்சோலை சென்றிருந்தோம். காவல்துறையின் சோதனை, அனுமதி, மறுப்பு என விசாரிப்புகளுக்கு பின்னர் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து எனும் மூன்று கிராம மக்களை சென்று சந்தித்தோம். தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் தோழர். எஸ்.ஆர்.பாண்டியன் அவர்களது ஒருங்கிணைப்பில் நானும், தோழர். புருசோத்தமன் மற்றும் இதர தோழர்களோடு சென்று மக்களை சந்தித்தோம். பெரும் பதைபதைப்பில் மக்கள் வாழ்கிறார்கள். கடந்த 2-3 வாரங்களாக வேலை எதுவும் கொடுக்கப்படவில்லை, அதனால் கையில் பணமில்லாமலும், உணவிற்கான போதுமான வழியில்லாமல் இருக்கிறார்கள்.
இம்மக்களது கோரிக்கையை வலியுறுத்த அனைத்து கட்சி தோழர்களை ஒருங்கிணைத்து திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ‘மாஞ்சோலை தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு‘ ஒன்றினை நடத்துகிறோம். கட்சி கடந்து, சாதி-மதம் கடந்து வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைய அழைக்கிறோம். விடுப்பெடுத்தோ, விருப்பமோடோ உங்கள் வருகை மக்கள் கோரிக்கையை வலுப்படுத்தும். ஜூலை 21ம் நாள் நெல்லையில் மாநாடு வைத்திருக்கிறோம். பங்கெடுப்பீர்கள் என நம்புகிறோம்.
சந்திப்போம்.