ஆகஸ்ட் 1, 2024 வியாழன் அன்று கச்சத்தீவுக்கு அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொது, அவர்களைப் படுகொலை செய்யும் நோக்கில், சிங்கள கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். சிங்கள ரோந்து கப்பலைக் கொண்டு, கப்பலில் விளக்குகளை அணைத்து வைத்து, வேண்டுமென்றே மீனவர்களின் கப்பல் மீது வேகமாக மோதி இருக்கின்றனர்.
இந்தத் தாக்குதல் காரணமாக படகில் இருந்த மூக்கையா, மலைச்சாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு மீனவர்களும் நிலை தடுமாறி கடலில் குதித்தனர். இவர்களில் 59 வயதான ‘மலைச்சாமி’ எனும் மீனவர் உயிரிழந்திருக்கிறார். ‘ராமச்சந்திரன்’ எனும் மீனவரின் நிலை என்னவென்று தெரியவில்லை. படுகாயமடைந்த ‘மூக்கையா மற்றும் முத்து முனியாண்டி’ ஆகிய இரு மீனவர்கள் உயிருடன் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட மீனவரான மலைச்சாமி மற்றும் காணாமல் போன மீனவரான ராமச்சந்திரன் வீடுகளுக்கு, அவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்கு, தோழர். திருமுருகன் காந்தி, தோழர். கே.எம். செரீப், தோழர். குடந்தை அரசன், தோழர், எஸ்.ஆர். பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சிகளின் தோழர்கள் உள்ளிட்ட தோழமை கட்சி, அமைப்புத் தோழர்கள் பலரும் இராமேஸ்வரம் சென்றனர். மீனவர்களின் குடும்பங்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறினர். மீனவர்கள் படுகொலைக்கான நீதிக்காக, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்வோம் என உறுதியளித்தனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோழர். திருமுருகன் காந்தி பேசியவை :
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை வேண்டுமென்றே மோதி முழ்கடித்து இருக்கிறது. இலங்கை காவல் படை தங்களின் ரோந்து கப்பல்களில் விளக்குகளை அணைத்து வைத்துவிட்டு, இருளிலே, அவர்கள் வருவதை அறியாத வகையிலே வேண்டுமென்றே தமிழக மீனவர்களின் படகுகளை மோதியிருக்கின்றனர். அந்தப் படகில் இருந்த மீனவர்களில் ஒருவரான ‘மலைச்சாமி’ உயிரிழந்திருக்கிறார். மற்றொருவரான ராமச்சந்திரனின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இதனை உடன் வந்த இரண்டு பேர் சாட்சியமாக சொல்லி இருக்கிறார்கள். ராமச்சந்திரனை இந்திய, இலங்கை காவல் படைகள் நான்கு நாட்களாக தேடுவதாகவும், ஆனால் அதைக் குறித்து தகவல் இல்லை எனவும் சொல்கின்றன. இந்த நிலையில் மலைச்சாமியின் உடல், இலங்கையில் பிணக்கூறாய்வு செய்யப்பட்டு ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே 2021, அக்டோபர் 18-ல், கோட்டைப்பட்டினத்தைச் சார்ந்த ராஜ்கிரண் என்ற மீனவர், இதே போன்ற முறையில் இலங்கையின் கடற்படையின் கப்பலால் மோதப்பட்டு, அதன் பின்பு பிடிக்கப்பட்டு கடும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ராஜ்கிரண் உடலும் இலங்கையில் பிணக்கூறாய்வு செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து அவசரம் அவசரமாக புதைக்கப்பட்டது. அப்பொழுது இதற்காக வழக்குப் பதிவு செய்தோம். கொலை வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மதுரை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், மீண்டும் ‘ராஜ்கிரண்’ உடலை தோண்டி எடுத்து பிணக்கூறாய்வை நடத்தினார்கள். ஆனால் அவரின் படுகொலை சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளது என்றோ அல்லது கொலை வழக்காகவோ பதிவு செய்யாமல் தமிழ்நாடு காவல்துறை தவிர்த்தது. இன்றைக்கும் இதே முறையில் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் மலைச்சாமியை புதைத்து இருக்கிறார்கள். அந்த மீனவர் எப்படி இறந்தார் என்று விசாரிப்பது காவல்துறையின் கடமை.
குசராத்திலே ஒரு மீனவர் பாகிஸ்தான் கடற்படையால் கொலை செய்யப்பட்ட போது, அதற்கான வழக்கை குசராத் அரசு பதிவு செய்திருக்கிறது. இதற்கு ஏன் தமிழ்நாட்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுக்கிறது என்கின்ற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம். இலங்கை மீது, இலங்கை கடற்படையின் மீது என்ன பயம்? அல்லது அவர்களுடன் என்ன உறவிருக்கிறது? அப்போது 2021-ல் ஆண்ட அதிமுக அரசும் அந்த வழக்கை பதிவு செய்யவில்லை. இப்போது ஆள்கின்ற, சமூகநீதி அரசு என சொல்கின்ற திமுக அரசும் இந்த வழக்கை பதிவு செய்யவில்லை.
இது குறித்து காவல்துறை ஆணையாளரிடம் கேட்டதற்கு, இலங்கை கடற்பகுதியில் நடந்திருப்பதாக கூறினார்கள். ஆனால் உண்மையிலேயே இலங்கை கடற்பகுதியில்தான் நடந்திருக்கிறதா? அல்லது இந்திய பகுதிகளில் நடந்திருக்கிறதா? என்பதை நீதிமன்றம் விசாரித்தால்தான் முடிவு செய்ய முடியும். அதற்கு வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். இலங்கை அரசு கொலை வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் அதையாவது கேட்டிருக்க வேண்டும். ஆக அந்த மீனவர் கொல்லப்பட்டதன் காரணம் இலங்கை அரசுக்கு தெரியாது, தமிழ்நாடு அரசுக்கு தெரியாது, இந்திய அரசுக்கு தெரியாது. இதனால்தான் தொடர்ச்சியாக மீனவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மீனவர் இறந்தால், உடனே நிவாரண நிதி அறிவித்து விடுகிறார்கள். ஐந்தாயிரமோ, பத்தாயிரமோ கொண்டு போய் கையில் கொடுத்து விடுகிறார்கள். அதோடு முடிந்து விட்டது என்று நினைத்து விடுகிறார்கள். தமிழர் உயிர்களுக்கு மரியாதை என்ன என்ற கேள்வி தான் இதன் மூலம் எழும்புகிறது.
இதுவரை இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் என்பவர்கள் மீனவத் தொழிலாளர்கள். இவர்கள் மீனவ தொழிலாளர்கள் என்பதால் அரசுகள் கண்டு கொள்ளவில்லையா என்கிற கேள்வியை எழுப்புகிறோம்.
மலைச்சாமி அவர்களின் குடும்பத்தினர், இந்த வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் பரிசீலிப்போம் என்றுதான் சொல்லியிருக்கிறார். நான்கு நாட்கள் ஆகியும், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த மாவட்ட ஆட்சியரை, மாவட்டத்தின் காவல் துறையை, திமுக அரசை நோக்கி, படகு எவ்வாறு மூழ்கியது என்பது குறித்தான வழக்கை ஏன் பதிவு செய்யவில்லை என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.
தொடர்ச்சியான மீனவர் படுகொலைகளில் பாஜகவின் அரசான மோடி அரசு கள்ள மவுனம் காக்கிறது. இலங்கை அரசிற்கும், கடலோர காவல் படைக்கும் ராணுவ பயிற்சி மோடி அரசினால் கொடுக்கப்படுகிறது. இந்தப் படுகொலை நடந்த நாளில் கூட இருநாட்டு கடற்படையின் ராணுவ பயிற்சி நடந்தது என்கின்ற செய்தி வெளியாகியது. இவ்வாறான தமிழர் விரோத, தேச விரோத நடவடிக்கையில் மோடி அரசு இருக்கிறது. தமிழ்நாட்டில் அண்ணாமலை இது குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. பாஜக கட்சி தேசப்பற்றை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள். இலங்கை அரசியலில் இருந்து தமிழ்நாட்டு பாஜகவிற்கு, அண்ணாமலைக்கு ஏதேனும் லாபம் இருக்கிறதா, இவர்களுக்கும் அவர்களுக்கும் ஏதேனும் உறவு இருக்கிறதா? என்னும் கேள்வியை எழுப்ப விரும்புகின்றோம்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியும் ஏதும் பேசவில்லை. இந்தியாவில் இருக்கின்ற பல அநியாயங்களைப் பற்றி பேசுகின்ற ராகுல் காந்தியும் இந்த மரணம் குறித்து வாய் திறக்கவில்லை. தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக இன்னும் இந்த மக்களை வந்து சந்திக்கவில்லை. தமிழர்களுக்கு நாங்கள்தான் ஒரே கட்சி என்று வாய்சவடால் பேசுகின்ற நாம் தமிழர் கட்சி, இது குறித்து மக்களை சந்திக்கவா அல்லது போராட்டத்தை அறிவிக்கவோ முன்வரவில்லை. நெய்தல் படையை கட்டுவோம் என்று இளைஞர்களை திசைதிருப்பும் சினிமாத்தனமான வசனங்களை பேசி, தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துகின்ற சீமான் இந்த இடத்திற்கு வரவில்லை. சமூகநீதி பேசுகின்ற திமுக இதற்கான வழக்கை பதிவு செய்யவில்லை. ஆக அனைவருமே ராமேஸ்வரத்தில் இருந்து கொல்லப்படுகின்ற தமிழக மீனவர்களுக்காக பேச மறுக்கின்ற ஒரு சந்தர்ப்பவாதத்தை பார்க்கிறோம். எவரும் பேச மறுக்கின்ற சூழலில், இந்த மீனவர்களுக்காக நாங்கள் பேச வந்திருக்கின்றோம்.
தமிழ்நாட்டு சிங்களவர்களால் நடத்தப்படுகின்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் மீதான முற்றுகைப் போராட்டத்தை நாங்கள் அறிவிக்கின்றோம். சிங்களவனாக நடத்தப்படுகின்ற ‘DAMRO Furniture‘ கடை தமிழ்நாடு முழுவதும் கிளை பரப்பி கடைகளை நடத்துகிறது. இந்த வணிகக்கடையை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருக்கிறோம். கடந்த முறை நாகப்பட்டினத்தில் இருந்து சென்ற மீனவர்களை துன்புறுத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து இலங்கை தூதரகத்திற்கு முன் போராட்டம் நடத்திய போது, இதனை அறிவித்திருந்தோம். எங்கள் மீனவர்கள் மீது இனிமேல் கை வைத்தால் சிங்களவரின் வணிக வளாகங்களை முற்றுகை விடுவோம் என அறிவித்திருந்தோம். அது போல இந்த DAMRO கடையையும், முற்றுகையிட்டு, அந்த கடையை இழுத்து மூடுகின்ற போராட்டத்தை இப்போது நாங்கள் செய்கிறோம்.
தமிழ்நாடு அரசு இந்த கடையை அப்போதே இழுத்து மூடி இருக்க வேண்டும். ஏனென்றால் “2011-லேயே தமிழ்நாடு சட்டசபையில் இலங்கை மீதான பொருளாதாரத் தடை வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த தீர்மானத்தை ஜெயலலிதா ஆட்சியோ, அதற்கு பின்னால் வந்த எடப்பாடி ஆட்சியோ, இன்றைய திமுக ஆட்சியோ என எந்த ஆட்சியும் கடைபிடிக்கவில்லை.
இலங்கை அரசுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்க விரும்புகின்றோம். எங்கள் மீனவர்களை கொலை செய்யலாம், அதனை இந்திய அரசு தடுக்காது, தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்று நினைத்தால், உங்களுடைய வணிகத்தில் கை வைப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. சிங்களவர்களின் வணிக நிறுவனங்கள் தமிழ் மண்ணில் நிறைய இருக்கிறது. அதனால் எங்கு கைவைத்தால் உங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படுமோ அந்த கைவைக்க தயாராகவே இருக்கிறோம். வழக்குப்பதிவுக்கோ, இந்திய அரசுக்கோ அச்சப்படுகின்ற ஆட்கள் நாங்கள் கிடையாது. எங்கள் தமிழர்களுக்கு ஏதேனும் நடந்தால் அதற்காக போராடுவோம், சிறை செல்வோம். நாங்கள் நெய்தல் படை வரும் என காத்திருப்பவர்கள் இல்லை. ஓட்டு வாங்குவதற்காக வந்து நிற்கும் ஆட்களும் கிடையாது.
கொல்லப்பட்டது தமிழக அல்லது இந்திய மீனவன், கொன்றது இலங்கை அரசு. இதைக் குறித்து மோடி அரசு எதுவும் பேசவில்லை. எதிர்க்கட்சியான காங்கிரஸ், தமிழக எதிர் கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி என எந்த கட்சியும் இவர்களுக்காக வாய் திறக்கவில்லை. மலைச்சாமிக்கோ, ராஜ்கிரணுக்கோ வந்து நிற்காத கட்சிகளை நம்பி எல்லாம் மக்கள் இருந்தால், எதிர்காலத்தில் மலைச்சாமி போல தமிழர்கள் பாதிக்கப்பட்டால் கண்டுகொள்ளாத நிலைதான் ஏற்படும். ஆகவே இதற்குரிய போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
‘கடல் தாமரை’ என்று மாநாடு எல்லாம் நடத்தியது பாஜக ஆனால் இன்று பாஜகவின் வெளியுறவுத்துறை அமைச்சரோ, மீன்வளத்துறை அமைச்சரோ இது குறித்து பேசவே இல்லை. தமிழ்நாடு காவல்துறை குறைந்தபட்சம் வழக்குப் பதிவையாவது செய்ய வேண்டும். ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். இலங்கை அரசிற்கு ஆதரவான சூழல் இங்கே எல்லா மட்டத்திலும் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
நாங்கள் இதனை விடப்போவதில்லை. இதற்கு கொலை வழக்கை பதிவு செய்ய வேண்டும். சிங்களவனுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் “ஆகஸ்ட் 10ஆம் தேதி DAMRO கடைக்கு எதிரான முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறோம்” அதில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுகிறோம்.
இவ்வாறு தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை வகுப்பதில் தமிழரின் பங்கு இருக்க வேண்டும் என்பதை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது மே 17 இயக்கம். தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்வது, கைது செய்து வன்கொடுமை செய்வது, அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை அழிப்பது என்று இலங்கை கடற்படை அத்துமீறுவதைக் கண்டித்து மே17 இயக்கம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதோடு, ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை என தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது, இலங்கையின் வணிக நிறுவனங்களின் வணிகத்தில் கைவைத்தால்தான், இலங்கை அரசிற்கு நெருக்கடியை உருவாக்க முடியும் என, DAMRO Furniture கடையை தோழமை கட்சி, அமைப்புகளுடன் இணைந்து ஆகஸ்ட் 10-ந் தேதி சனிக்கிழமை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருக்கிறது.
மே 17 இயக்கத்தின் அழைப்பை ஏற்று, தமிழக மீனவர் படுகொலைக்கான நியாயத்திற்காக ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்.
ஏற்கனவே நடந்த தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து, இலங்கை தூதரகத்தை இழுத்து மூடக்கோரி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை 28-02-2023 அன்று மே பதினேழு இயக்கம் முற்றுகையிட்டது. அதன் இணைப்பு படிக்க கிழே பதிவிடப்பட்டுள்ளது.