சிங்களப் பேரினவாதக் கடற்படை கடந்த 35 வருடங்களாக 800 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைப் படுகொலை செய்திருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்களை ஊனமாக்கியுள்ளது. பல நூற்றுக்கணக்கான படகுகளை சேதப்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. கோடிக்கணக்கான அளவில் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வளவு கொடூரங்களை தமிழக மீனவர்கள் மீது நிகழ்த்தியும் இந்திய அரசு இலங்கை மீது மென்மையான போக்கையே கடைபிடிக்கிறது. தமிழ்நாடு அரசு இந்திய அரசிற்கு கடிதங்களை எழுதி கண்டனங்களைப் பதிவு செய்வதுடன் நின்று விடுகிறது. படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை இழப்பீடாக கொடுத்து, மீனவர் பிரச்சனைகள் ஆறப்போடுகிறது. மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் காலங்களும் கடந்து விட்டன.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களும், படுகொலைகளும் நிகழும் பொழுதெல்லாம் மே 17 இயக்கம் தொடர்ச்சியான கண்டனங்களைப் பதிவு செய்வதோடு, முற்றுகை, ஆர்ப்பாட்டம், மறியல் என பல போராட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. படுகொலைக்குள்ளாகும் தமிழக மீனவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் சொல்லி, நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என வாக்குறுதி அளிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராஜ்கிரண் என்ற மீனவரை சித்திரவதைப்படுத்தி படுகொலை செய்தும், மேலும் இருவரை கைது செய்தும் இலங்கை கடற்படை கொண்டு சென்றபோது, படுகொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்தினரை அக்டோபர் 21, 2021 அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி. அக்டோபர் 23, 2021 அன்று நுங்கம்பாகத்தில் இலங்கை துணை தூதரகத்தை தோழர். பிரவீன்குமார் தலைமையில் முற்றுகையிட்டது மே 17 இயக்கம்.
மேலும் மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக அமைப்புகளுடன் சேர்ந்து, ராஜ்கிரண் உடலை பிணக்கூறாய்வு செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து ராஜ்கிரண் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பிணக்கூறாய்வு செய்யப்பட்டது. 800 மீனவர்களுக்கு மேல் படுகொலை செய்யப்பட்ட போதும், யாரின் சடலமும் அதுவரை பிணக்கூறாய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை ராஜ்கிரண் சடலமே முதல் முறை பிணக்கூறாய்வு செய்யப்பட்டது. இதில் மே 17 இயக்கத்தின் பங்கு முக்கியமானது.
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்ந்தால், தமிழ்நாட்டில் உள்ள சிங்கள நிறுவனங்களை முற்றுகை இடுவோம், தமிழக மீனவர்கள் மீது கை வைத்தால் சிங்களவரின் வணிகத்தில் கைவைப்போம், தமிழர்கள் சிங்கள நிறுவனத்தை புறக்கணிப்போம் என கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 2003-ல் காரைக்கால் தரங்கம்பாடி மீனவர்கள் தாக்குதல் நடந்த போதே மே 17 இயக்கம் அறிவித்தது. இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு, இனியும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் சிங்கள நிறுவனமான தாம்ரோ நிறுவனத்தை முற்றுகை இடுவோம் என எச்சரிக்கை செய்தது மே 17 இயக்கம். அது குறித்தான மே 17 இயக்கத்தின் இணையதள கட்டுரை :
இலங்கை இனவெறிக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தவில்லை.
ஆகஸ்ட் 1, 2024 அன்று கச்சத்தீவுக்கு அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொது, அவர்களைப் படுகொலை செய்யும் நோக்கில், சிங்கள கடற்படை தாக்குதல் நடத்தியிருக்கிறது. சிங்கள ரோந்து கப்பலில் விளக்குகளை அணையச் செய்து, வேண்டுமென்றே மீனவர்களின் கப்பல் மீது வேகமாக மோதி இருக்கின்றனர். இதில் மலைச்சாமி என்கின்ற 59 வயதான மீனவர் உயிரிழந்திருக்கிறார். ராமச்சந்திரன் எனும் மீனவரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த செய்தி அறிந்ததும் மே பதினேழு இயக்கத்தின் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை தோழமை அமைப்புகளுடன் சென்று சந்தித்தார். மீனவ குடும்பங்களுடன் நடந்த சந்திப்பு குறித்த மே 17 இயக்கக்குரலில் வெளிவந்த கட்டுரை :
மீனவர் குடும்பங்களின் சந்திப்பின் தோழர். திருமுருகன் காந்தி, தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கைக் கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். அது குறித்த மே 17 இயக்கக்குரலில் வெளிவந்த கட்டுரை :
இராமேசுவரம் மீனவர் குடும்பங்களின் சந்திப்பிற்குப் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும் தோழர். திருமுருகன் காந்தி பேசியவை குறித்த கட்டுரை இணைப்பு :
பெரும்பான்மை தொண்டர்களை வைத்திருக்கும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சி என எந்தப் பெரிய கட்சிகளும் மலைச்சாமி மீனவரின் படுகொலையைப் பற்றிப் பேசவில்லை. தமிழக அரசு வழக்குப் பதிவும் செய்யவில்லை. எனவே முன்னரே எச்சரிக்கை விடுத்தபடி மே17 இயக்கம், தமிழ்நாட்டின் வணிகத்திலிருந்து சிங்கள நிறுவனங்களை அகற்றுவோம் என்னும் முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள தாம்ரோ கடைகளை முற்றுகையிடும் போராட்டத்தை துவங்கியது. அதன் முதற்கட்டமாக ஆகஸ்ட் 10, 2024 அன்று சென்னையிலும், கோவையிலும் முற்றுகையிட்டது. அதைக் குறித்த கட்டுரை இணைப்பு :
தமிழகம் தழுவிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடக்கும் என முன்னரே அறிவித்தபடி, ஆகஸ்ட் 12, 2024 அன்று மதுரையில் உள்ள தாம்ரோ கடை முற்றுகையிடப்பட்டது. ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் தோழர் கு. ஜக்கையன் தலைமையில் தோழர். குடந்தை அரசன், தோழர். வையவன், தோழர்.இளமாறன், தோழர். பேரறிவாளன், தோழர். இஸ்மாயில் வழக்கறிஞர் ரஜனி, தோழர் மெய்யப்பன் உள்ளிட்ட தோழமைகள் பங்கேற்க எழுச்சியுடன் நடந்தது.
இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு, படகு சேதப்படுத்தியதற்கான வழக்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கக்கோரிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடந்தது. முற்றுகைப் போராட்டம் முடிந்ததும் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 13, 2024 அன்று, தூத்துக்குடியில் தாம்ரோ கடை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி காவல் துறை தேவையற்ற கெடுபிடிகளை தம்ரோ முற்றுகை போராட்டத்தில் வெளிப்படுத்தியது. போராட்ட இடத்திற்கு வந்து கொண்டிருந்தவர்களை கலைப்பதும், ஒன்று சேர்பவர்களை கைது செய்வதுமாக இயங்கியது. போராட்ட களத்திற்கு வந்த மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் புருசோத்தமன் மற்றும் இதர தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தது. போராட்டம் தொடங்கும் முன்பாகவே நெருக்கடியை கொடுக்க அவசியமற்ற நிலையில் தூத்துக்குடி காவல்துறையின் போக்கு கண்டிக்கத்தக்கதாக இருந்தது.
போராட்டம் இந்த அடக்குமுறையை மீறி தொடர்ந்தது. போராட்டத்தில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் தோழர் எஸ்.ஆர்.பாண்டியன், ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. பாத்திமாபாபு, மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் முரசு தமிழப்பன், ஆட்டோ கணேசன், நாட்டுப்படகு சங்கத்தின் தோழர். ரீகன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தோழர். தாழை உமர்பாரூக், ஆதித்தமிழர் கட்சியின் தோழர். நம்பிராஜ் பண்டியன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர். ஆட்டோ சரவணன் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொறுப்பாளர்கள் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட மே17 இயக்கத் தோழர்களை விடுவிக்கக் கோரி காவல்துறையிடம் போராடிய பின்னரே விடுவிக்கப்பட்டனர். போராட்டம் விரிவடையும் என்பதையும், அடக்குமுறை அதிகரித்தால் பெருந்திரளாக போராட்டத்தை முன்னகர்த்துவது என்றும் காவல்துறையிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முற்றுகைப் போராட்டத்திற்காக தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 14, 2024 அன்று, காலை திருச்சியில் ‘தம்ரோ பர்னிச்சர் கடைகள்’ முற்றுகை. எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் தோழர் நெல்லை முபாரக் அவர்கள் தலைமையில் நடந்தது. தூத்துக்குடியைத் தொடர்ந்து திருச்சியிலும் கெடுபிடிகளை அதிகமாக்கியது திருச்சி காவல்துறை. கடுமையான நெருக்கடி கொடுத்த போதும், தோழர். நெல்லை முபாரக் தலைமையில் தம்ரோ முற்றுகைப் போராட்டம் நடந்தது. அதன் பின்னர், கைது செய்து மண்டபத்தில் வைத்த பின்னர், கையடக்க ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாதென புதியவகை நெருக்கடியை கொடுத்தது காவல்துறை. இதற்கும் போராடி பின்னர் தோழர்கள் உரையாற்றினர். தோழர். நெல்லை முபாரக் அவர்களோடு தோழர். கே.எம். சரீப், தோழர். குடந்தை அரசன், தோழர். திருமுருகன் காந்தி, த.பெ.தி.க-வின் தோழர். வின்சண்ட் மற்றும் அமைப்புத் தோழர்கள் போராடி கைதானார்கள்.
ஆகஸ்ட் 16, 2024 அன்று தஞ்சையில் எழுச்சியாக தம்ரோ பர்னிச்சர் முற்றுகை போராட்டத்தை விடுதலை தமிழ்ப்புலிகள் செய்தனர். தோழர்களை கைது செய்த காவல்துறை நெடுநேரம் காத்திருக்க வைத்தது. நெருக்கடிகளை தொடர்ந்து கொடுத்தது. தோழர் குடந்தை அரசன், தோழர் கே.எம். சரீப் உள்ளிட்ட தோழமைகள் கைதாகினர். எஸ்.டி.பி.ஐ கட்சி, மே17 இயக்கம் உள்ளிட்ட தோழமை அமைப்புகள் பங்கெடுத்தன.
மேலும் ஆக்ஸ்ட் 20, வேலூர் என தாம்ரோ முற்றுகைப் போராட்டம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இனியும் போராட்டம் ஓயப் போவதில்லை. தமிழகம் முழுதும் உள்ள சிங்கள முதலாளிகளின் நிறுவனங்களை, தமிழர்கள் புறக்கணிக்கச் செய்யும் அடுத்தடுத்த போராட்டங்கள் விரிவாக நடத்தப்படும். மீனவர் நலன் உறுதிப்படும் வரை, மீனவர் உரிமை நிலைநாட்டப்படும் வரை மே 17 இயக்கத்தின் மீனவருக்கான போராட்டம் ஓயாது.