தஞ்சை மாவட்ட ஒரத்தநாடு பகுதியில் பாலியல் வன்முறையால் பாதித்த பெண்ணின் குடும்பத்தினரை மே 17 இயக்க தோழர்களும் மற்றும் தோழமை கட்சி தோழர்களும் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டனர். அதனை குறித்து தனது முகநூல் கணக்கில் ஆகத்து 19, 2024 அன்று மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்களின் பதிவு.
நான் இதுவரை கேள்விப்பட்டதில் மிகமோசமான பாலியல் வன்முறையை சந்தித்த பெண்ணின் குடும்பத்தினரை தஞ்சை மாவட்ட ஒரத்தநாட்டு பகுதியில் சந்தித்தோம்.
வீட்டின் வாசலிலிருந்து பெண்ணை வலிந்து இழுத்து அப்பெண்ணின் வீட்டிற்கு எதிரே இருந்த கூரைக்குள் வைத்து சித்தரவதை செய்துள்ளார்கள். ‘கவிதாசன்’ என்பவனும் அவனுடன் 5 பேரும் சேர்ந்து இப்பெண்ணிடம் பணத்தை பறிக்க முயற்சித்துள்ளனர். G-pay மூலம் பணமாற்றம் செய்யச்சொல்லி வற்புறுத்திய போது அப்பெண் மறுத்துள்ளார். பீர்பாட்டிலை கொண்டு அப்பெண்ணின் தலையில் அடித்து காயப்படுத்தி ATM பாஸ்வேர்ட் கொடுக்கச் சொல்லி மிரட்டியுள்ளார்கள். மீண்டும் மறுக்கவே உடைந்த கண்ணாடி பாட்டிலால் குத்தி சித்தரவதை செய்துள்ளார்கள். அது தவறு என தெரிந்ததும் தோளில் கண்ணாடி பாட்டிலால் குத்தியிருக்கிறார்கள். பின்னர் அப்பெண்ணின் தோடு, வளையல் ஆகியவற்றை பிடுங்க முயன்றிருக்கிறார்கள். அப்பெண் மறுக்கவே அடித்து துன்புறுத்தி உள்ளார்கள். மொபைல்போன், நகை அனைத்தையும் பிடுங்கிய பின்னரும் விடாமல் அப்பெண்ணை அடித்து பின்னர் பாலியலாக வன்புணர்வு கூட்டாக செய்துள்ளார்கள்.
இவையனைத்தும் அப்பெண்ணின் வீட்டிற்கு எதிரே உள்ள கீற்று கொட்டைகைக்குள் பகல்பொழுதில் நடந்திருக்கிறது. சுற்றிலும் வீடுகள், சாலை என இருந்தும் இப்பெண்ணின் குரல் வெளியே கேட்காத வண்ணம் வாயை அடைத்தும், கழுத்தில் கண்ணாடி பாட்டிலை வைத்தும் மிரட்டியுள்ளனர். இதை மீறி சத்தம் போட்டால் அப்பெண்ணின் தந்தையை கொலை செய்துவிடுவோமென மிரட்டியுள்ளனர். அருகே மரம் அறுக்கும் இயந்திர சாலை இருந்ததால், அதன் சத்தத்தில் இப்பெண் குரலும் கேட்காமல் போய் உள்ளது. இக்குற்றத்தை செய்தவர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். மேலும் வன்புணர்வு செய்ததை தமது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார்கள். வெளியில் தெரிவித்தால் வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளார்கள்.
இக்கொடூர குற்றத்தை செய்துவிட்டு நிதானமாக அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளார்கள். அப்பெண் தனது உறவினரிடம் தெரிவித்து ‘பாப்பாநாடு’ காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் துணை ஆய்வாளர் புகார் பதிவு செய்ய மறுத்துள்ளார். பட்டுக்கோட்டை மறுத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது சிகிச்சை செய்ய மறுத்துள்ளனர். இதன்பின்னர் சகமக்களின் வழியாக நீதிமன்ற உத்தரவும், உயர் அதிகாரிகள் வாயிலாக வழக்கு பதிவாகியுள்ளது. தற்போது துணை ஆய்வாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார், அரசு மருத்துவருக்கு கேள்வியை நீதிமன்றம் எழுப்பியுள்ளது
அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனை தங்குதடையின்றி நடப்பதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஊடகத்தில் செய்தி வந்த போதும் கூட நடவடிக்கைகளை பாப்பாநாடு காவல்துறையினர் மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டினர். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் 6 பேரில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என ஊர்மக்கள் தெரிவித்தனர். இருவர் கைது செய்யப்படாமல் சாட்சியமாக இருக்கிறார்கள் என காவல்துறை எங்களிடம் தெரிவித்தது. ஆனால் FIRல் ஆறுபேர் மீதும் அப்பெண் மாஜிஸ்ட்ரேட் முன் குற்றம்சாட்டி இருப்பது பதிவாகியுள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சென்று நானும், மே17 இயக்கத் தோழர்களும், விடுதலைத்தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் மற்றும் அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள், தமிழர்தேசம் அமைப்பின் தஞ்சை சாமி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
கிராமத்தில் கடையடைப்பு நடத்தி உண்ணாநிலை போராட்டத்தை ஊர் மக்கள் நடத்தியதில் பங்கெடுத்தோம். ஊர் மக்களையும் அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தோழர் காமராஜ் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இந்நிகழ்வில் தோழர் சுகுமாறன், தோழர் கோச்சடை, பேரா. அரசமுருகபாண்டியன் உள்ளிட்ட தோழர்களும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும்,சி.பி.ஐ எம்-எல் கட்சியின் தோழர் ஆசைத்தம்பி மற்றும் பொறுப்பாளர்களும் பங்கெடுத்தனர்.
இப்போராட்டத்தில் பங்கெடுத்த பின்னர் அப்பெண்ணின் வீட்டிற்கும், குற்றம் நடந்த பகுதிக்கும் சென்றோம். அப்பெண்ணின் உறவினர்களை சந்தித்தோம்.
ஊர்மக்களின் கோரிக்கையை பெற்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும், மாவட்ட ஆட்சியாளரையும் சந்தித்தோம்.
“பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய பாதுகாப்பையும், துணிச்சலாக எதிர்த்து நின்ற அப்பெண்ணிற்கு அரசு வேலை வாய்ப்பும், குற்றத்தில் ஈடுபட்ட மேலதிக நபர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தோம்“.
மிகமோசமான சித்திரவதைக்கு உள்ளாகி, கூட்டு வன்புணர்வை எதிர்கொண்டு துணிச்சலாக காவல்நிலையத்திற்கு சென்று போராடி வழக்கை பதிவு செய்துள்ளார் அப்பெண். தமிழ்நாட்டில் வலிமையான குரல்கள் இதுவரை எழவில்லை என்பது ஏமாற்றமே. அழுத்தமான கண்டனமும், அதிர்ச்சியும் பொதுசமூகத்திலிருந்து போதுமான அளவில் வெளிப்படவில்லை. இந்நிலையில் நேற்று இப்பகுதிக்கு அருகே பட்டுக்கோட்டையில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாகி இருக்கிறார். பெண்கள் மீதான வன்முறைக்கு பொதுச்சமூகம் போதுமான எதிர்ப்பை பதிவு செய்யாமல் கடந்து செல்வது அதிர்ச்சியாக உள்ளது.