கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அண்மையில் கனடா நாட்டின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளதால் இந்தியா-கனடா இடையே மிகப்பெரும் விரிசல் எழுந்துள்ளது.
கடந்த ஜூன் 2023இல், காலிஸ்தான் விடுதலை குழுவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் இரு முகமூடி நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு இக்கொலை வழக்கில் தொடர்பிருக்கக் கூடும் என்று கனடா கூறியிருப்பது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ?
1990களில் கனடாவிற்கு புலம் பெயர்ந்த சீக்கியரான நிஜ்ஜார், காலிஸ்தான் புலிப் படை (Khalistan Tiger Force) என்ற அமைப்பின் தலைவராவார். கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர். சீக்கியர்களின் தனி தாயகம் கோரிக்கைக்கு முக்கிய ஆதரவாளராக இருந்தவர் நிஜ்ஜார். இதனால் மேற்கு கனடாவில் ஒரு முக்கிய சீக்கியத் தலைவராக உருப்பெற்றார். மேலும் 1980களில் இந்தியாவில் சீக்கியர்களுக்கு நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி வேண்டி போராட்டங்களையும் நடத்தியவர்.
வரலாற்றில் போரினாலோ வகுப்புவாத கலவரங்களாலோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளித்து வரும் நாடுகளில் முக்கியமானது கனடா. 1947-ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, 1984இல் பொற்கோயில் தாக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்த இனக் கலவரங்கள், பஞ்சாபில் துணை ராணுவம் மற்றும் காவல்துறையால் ஏற்படும் வன்கொடுமைகள் போன்ற நிகழ்வுகளின் தாக்கத்தால் பல சீக்கியர்கள் கனடா போன்ற வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். தற்போது கனடாவில் கிட்டத்தட்ட 9,50,000 சீக்கியர்கள் உள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த நன்மதிப்பை பெற்றவராக விளங்கியவர்தான் நிஜ்ஜார்.
நிஜ்ஜார் போன்ற புலம்பெயர்ந்த சீக்கியர்களுக்கு மட்டுமல்ல, பஞ்சாபில் உள்ள சீக்கியர்களுக்கும் தனி தாய்நாடு என்ற ஒரு பெருங்கனவு இருக்கிறது. இதற்கான காரணங்கள் பல உள்ளன. இந்திய மாநிலங்களில் ரத்தக்கறை படிந்த வரலாற்றைக் கொண்ட மாநிலமாக பஞ்சாப் திகழ்கிறது. இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இனமாக சீக்கியர்கள் இருக்கின்றனர். அதேவேளையில் தொடர்ந்து அரச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களையும் சந்தித்திருக்கின்றனர். மொழி வாரியாக ‘பஞ்சாப்’ எனும் மாநிலம் உருவாவதற்காகவே பல ஆண்டுகள் சீக்கியர் போராடியிருக்கின்றனர். அம்மக்களை ஒடுக்குவதற்காகவே தடா, AFSPA, NSA போன்ற கருப்பு சட்டங்கள் அம்மாநிலத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
அரியானா மாநிலத்துடன் தலைநகரை பங்கிடுவதில் தொடங்கி நதிநீர் பங்கீடு வரை அரசியல் ரீதியாக பல ஆண்டுகளாகப் போராடியவர்கள். (பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடுமையாகப் போராடியவர்கள் சீக்கியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
1985ல் பஞ்சாபில் இருந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது கிளையான ராஷ்ட்ரிய சீக்கிய சங்கத் என்ற அமைப்பைத் தொடங்கியது. தனித்த தேசிய இனங்களை ‘இந்துத்துவம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடைக்கும் முயற்சியில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்., சீக்கியர்களை இந்துக்களாக அடையாளப்படுத்தியது. மற்ற மாநிலங்களைப் போலவே பஞ்சாபில் ஆர்.எஸ்.எஸ் சாகாக்கள் துளிர்விட்டன. இதைத் தொடர்ந்து அங்கு ஆர்.எஸ்.ஸிற்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. (இது குறித்த விரிவான கட்டுரை: https://may17kural.com/wp/contradiction-between-india-and-canada-based-on-national-interest-or-rss-interest-thirumurugangandhi/)
தற்போது ஆளும் பாஜக அரசும் சீக்கியர்களின் தனி தாய்நாடு முழக்கத்திற்கு எதிரான போக்கையே கடைபிடித்து வந்தது. 2020இல் நிஜ்ஜார் மீது பிரிவினைவாதக் குற்றச்சாட்டுகளை சுமத்தி UAPA பட்டியலுக்குள் கொண்டு வந்தது ஒன்றிய பாஜக அரசு. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் “கனடா தீவிரவாதிகளுக்கு இடம் கொடுத்து வருகிறது” என்று பேசினார் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
இந்த நிலையில்தான் கடந்த 18ஜூன், 2023 அன்று கனடாவில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார் நிஜ்ஜார். இவரது படுகொலை கனடா மட்டுமல்ல இந்தியாவிலுள்ள சீக்கியர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நிஜ்ஜாரின் படுகொலை வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், மே 3, 2024 அன்று, கமல்பிரீத் சிங், கரன்பிரீத் சிங் மற்றும் கரண் பிரார் ஆகிய 3 கூலிப்படை நபர்களை கனடா நாட்டின் காவல்துறை கைது செய்தது. மேலும் தொடர்ந்த விசாரணையில் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தொடர்பிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாகத்தான் “கனடாவின் மண்ணில், அந்நாட்டு குடிமகன் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் தலையீடு என்பது நமது இறையாண்மையை மீறுவதாகும்” என்று கூறி இந்தியாவை விமர்சித்தார் ட்ரூடோ.
செப்டம்பர் 2023இல் டெல்லியில் நடைபெற்ற G20 மாநாட்டில் இந்திய-கனடா நாடுகளுக்கிடையேயான விரிசல் வெளிப்படையாக தென்பட்டது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மோதல், இந்தியா-கனடா வர்த்தக உறவிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. ஆனால் இவையெல்லாம் மறைக்கப்பட்டு ‘G20 வெற்றி’ என அப்போது போலிக் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தது பாஜக. G20 உச்சி மாநாட்டை தில்லியில் நடத்தியதன் மூலம், மோடிக்கு ‘விஸ்வகுரு’ என்ற பிம்பத்தைக் கட்ட முயற்சித்தது பாஜக. மேலும் மேற்குலக நாடுகள் மத்தியில் தன் வெளியுறவுக் கொள்கையை சுமூகமாக இருப்பது போலும் காட்டிக் கொண்டது ஒன்றிய பாஜக அரசு. ஆனால் இவையெல்லாம் மோடியின் பிம்பத்தை உயர்த்த அரங்கேற்றப்பட்ட நாடகங்களே என்பதை இந்தியா-கனடா நாடுகளின் இடையே ஏற்பட்ட விரிசல் அம்பலப்படுத்தியது.
தற்போது நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா அறிவித்ததன் மூலம் மோடியின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரிவோரின் பின்புலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கனடாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நிஜ்ஜார் போன்றே பல காலிஸ்தான் ஆதரவாளர்களைக் கொலை செய்ய இதற்கு முன்னரும் கூலிப்படையினர் ஏவப்பட்டிருக்கின்றனர். இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரி கேமரூன் மெக்கே கடந்த ஆகஸ்ட் மாதம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், காலிஸ்தான் ஆதரவு தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்திய அதிகாரி ’விகாஸ் யாதவ்’ என்பவர் மீது குற்றம் சாட்டினார். இந்தியாவின் உளவு அமைப்பாக சொல்லப்படும் ‘ரா’ அமைப்பில் பணி புரிந்த விகாஸ் யாதவ், வெளிநாட்டில் தனது கூட்டாளிகள் மூலம் இத்தகைய படுகொலைகளை நிகழ்த்துவதாக அமெரிக்காவும் குற்றம் சாட்டி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பல நாச வேலைகளுடன் தொடர்புடைய ’லாரன்ஸ் பிஷ்னோய்’ என்கிற கும்பல்களுடன் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக நம்புவதாக கனடா காவல் துறை அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் கடத்தல், தேசியவாத காங்கிரசின் முன்னாள் அமைச்சர் ’பாபா சித்திக்’ கொலை, குஜராத்தில் நடத்தப்பட்ட பல கொலைகள் போன்ற குற்ற செயல்களில் இக்கும்பல் திட்டமிட்டு நடத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்தியா – கனடா இடையே எழுந்துள்ள பிரச்சினையால் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன் கனடாவில் பயின்று வரும் சுமார் 6,00,000 இந்திய மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. இனி படிப்பிற்காகவோ, வேலைவாய்ப்பிற்காகவோ கனடா செல்ல விண்ணப்பிக்கும் இந்திய இளைஞர்களுக்கு விசா வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
கனடா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்களை வேறு நாட்டின் அரசாங்கமே கூலிப்படையினரைக் கொண்டு கொலை செய்தற்கு அந்த நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் இந்திய ஊடகங்களோ ‘காலிஸ்தான்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போதெல்லாம் அதனுடன் ‘தீவிரவாதி’ என்று சேர்த்து செய்தி வெளியிடுகின்றன. தனி நாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலே பிரிவினைவாதி என்று முத்திரை குத்தும் பார்ப்பனிய செயல்திட்டத்திலேயே இந்த ஊடகங்கள் செயல்படுகின்றன. இந்த ஊடகங்களைப் போன்றே இந்துத்துவ வலதுசாரியினரும் தனிநாடு கோரிக்கையையும் ட்ருடோவையும் கொச்சைப்படுத்தத் துவங்கிவிட்டனர்.
நிஜ்ஜார் கொலை வழக்கிற்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை கூறி வருகிறது. ஆனால் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் “தமிழ்நாட்டில் மாணவர்களையும், பத்திரிகையாளர்களையும், அரசியல்வாதிகளையும் கொல்வதற்கு வெளிநாட்டில் இருந்து வரும் மர்ம நபர்களுக்கு ‘ஸ்கெட்ச்‘ போட்டுத் தரப்படும்” என்று வெளிப்படையாக X-தளத்தில் கூறி இருக்கின்றார். இத்தகைய பதிவுகளைப் பார்க்கும்போது, கூலிப்படை கொண்டு அரசியல் படுகொலைகளை நிகழ்த்துவதை இந்துத்துவ அமைப்பினர் வெளிப்படையாக ஒத்துக் கொள்கின்றனரா என்ற கேள்வி எழுகிறது.
மேலும் கனடாவில் நடத்தப்படும் சீக்கிய மக்களின் போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறுகிறார்கள் வலதுசாரிகள். ஆனால் வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டபோது இந்தியா தலையிட்டதற்கும் ஈழத்தில் நடக்கக்கூடிய சிக்கல்களுக்கு இந்தியா தலையிட்டதற்கும் வலதுசாரி இந்துத்துவவாதிகளால் விளக்கம் கொடுக்க இயலுமா? 2016 சுதந்திர தின உரையில் பலோச் இன மக்கள் வசிக்கும் பலோசிஸ்தான் குறித்து மோடி பேசியதற்கும் அவர்கள் பதிலளிக்க முடியாது. பலோச் போன்ற தேசிய இனங்களை ஆதரிப்பதும் சீக்கியர், தமிழர் போன்றவர்களுக்கு வேறு வகையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதுமாக வலதுசாரி இந்துத்துவம் இரட்டை வேடமிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழீழக் கோரிக்கையைப் போன்றே சீக்கிய மக்களின் வேட்கையையும் திட்டமிட்டு நசுக்கிக் கொண்டிருக்கிறது பார்ப்பனிய அரசாங்கம்.