’ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடங்களை விட லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் தான் தீவிர அரசியல் தொடங்குகிறது’ என்றார் லெனின். அத்தகைய லட்சக்கணக்கான மக்களை சென்றடையும் சினிமா போன்ற வெகுஜன ஊடகம், இந்துத்துவ வலதுசாரி பரப்புரையை பெருமளவில் தாங்கிச் செல்வது பாஜக-ஆர்.எஸ்.எஸ்ஸின் நீண்டகால திட்டமிடல் என்றே கூற வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் ஊடகம் என்பது தகவல் தொடர்பு மட்டுமல்ல தகவல் பரப்பும் கருவியாகும். இது செய்தித்தாள்கள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற பல்வேறு வகையான தொடர்பு ஊடகங்களை உள்ளடக்கியது. இந்த ஊடகங்களை கையில் கொண்டால் லட்சக்கணக்கான மக்களை தொடர்பு கொள்ளலாம். இந்த கூற்றை நன்றாக புரிந்து கொண்ட கட்சி ஆர்.எஸ்.எஸ்-ன் ஆதரவோடு இயங்கும் பாஜக. பாஜகவின் பொய்யான பிரச்சாரங்களுக்கு அது கையில் எடுத்து இருக்கும் ஆயுதங்களில் ஒன்று தான் சினிமா. பாமர மக்களை எளிதில் ஆட்கொள்ளும் சினிமாவை தான் இன்று இவர்கள் தங்கள் பொய் பிரச்சாரங்களுக்கு ஆயுதமாக கொண்டுள்ளார்கள்.
இந்தியாவில் மூடத்தனங்கள் பரப்பும் பேய் படங்கள், முருகசாமி, ஐயப்ப சாமி, அம்மன் என்று வெவ்வேறு அவதாரங்களில் படங்கள் வந்தாலும் அவை மூட நம்பிக்கையோடு முடங்கிப் போனது. ஆனால் தேசப்பற்று என்று வந்த எல்லா படங்களும் தேசப்பற்றை விட இந்துத்துவ தீவிரவாதத்தையே வளர்த்தெடுப்பதையே நோக்கமாக கொண்டு எடுக்கப்பட்டன. வட நாடு, தென் நாடு என்று வித்தியாசம் இல்லாமல் எல்லா படங்களிலும் தீவிரவாதியாக காட்சிப்படுத்தப்பட்ட அனைவரும் இசுலாமியர்களாகவும் அவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக உள்ளதாகவே காண்பிக்கப்பட்டது. இசுலாமிய வெறுப்பு, திரைப்படங்கள் ஊடாக சிறிது சிறிது ஊட்டப்பட்டு, அது இந்துத்துவாவை வளர்த்தெடுக்கும் ஒரு கருவியாக மாறியது.
தற்போது அமரன் திரைப்படத்தில் காசுமீர் மக்களை தவறாக சித்தரித்ததின் மூலம் காசுமீர் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசு ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது பிரிவை ஆகஸ்ட் 5, 2019 அன்று நீக்கியது. இது அந்த மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் பிரிவு நீக்கப்பட்டதை நியாயப்படுத்தும் விதமாக வெளிவந்த படங்கள் பலவும் மோடியின் அரசியல் நகர்விற்கு ஏற்றவாறு பிரச்சாரப் படங்களாக வெளிவந்தன. அவற்றில் சில.
உரி : சர்ஜிக்கல் ஸ்டிரைக்(2019)
விஹான் ஷெர்கில் என்ற கதாபாத்திரம்தான் கதையின் நாயகன். இவரது தாய்க்கு அல்சைமர் (மறதி நோய்) உள்ளதால் ராணுவத்தை விட்டு தாயை பார்த்துக்கொள்ள டெல்லி வந்துவிடுகிறார். அவரது மைத்துனர் கரண் (மோஹித் ரெய்னா) 2016-இல் உரி தாக்குதலில் கொல்லப்படுகிறார். அவரது இறப்பிற்கு பழிவாங்க பிரதம மந்திரியின் அனுமதியுடன் பாகிஸ்தாதான் பகுதி காசுமீரில் 12 இராணுவ தடங்களை அங்கேயே சென்று அதை அழித்து தப்பித்து வருவதுதான் கதை. ஆதித்யா தர் எனும் அறிமுக இயக்குனரின் முதல் படம் இது. சிறந்த நடிகர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த இசை என்று நான்கு தேசிய விருதுகளை பெற்றது இப்படம்.
காஷ்மீரில் நடந்த கலவரத்தின் பின்னணியே இந்த படம். 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உரி தாக்குதல் என்பது காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவப் படைத் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும், மேலும் இந்திய இராணுவத்தின் பதிலடியாக பாகிஸ்தான் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இப்படி ஒரு தாக்குதல் நடக்கவே இல்லை என பாகிஸ்தான் கூறினாலும், இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மோடியின் அரசோ புதிய இந்தியாவின் வெற்றியாய் கொண்டாடியது. இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இந்தப் படம் வெளியான காலகட்டம். செப்டம்பர் 28, 2016-ல் இந்த தாக்குதல் நடைபெற்றாலும், இந்த படம் 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர் திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து ஒன்றிய பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் செப்டம்பர் 29-யை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நாளாக கொண்டாட உத்தரவிட்டது.
காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மோடியும், அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தன்னை அமைதிப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். சிஆர்பிஎஃப் கான்வாய் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட 300 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்களை ஏற்றி பாகிஸ்தானில் இருந்து வந்த கார் 10-15 நாட்களாக காஷ்மீரில் சுற்றித்திரிந்தபோதும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததை ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான சத்ய பால் மாலிக் சுட்டி காட்டுகிறார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் என மோடி அரசு கொண்டாடிய ஒரு மாதத்திற்குப் பிறகு, நவம்பர் 29 அன்று, இராணுவத்தின் பிரிவான 16 கார்ப்ஸின் தலைமையகம் இருக்கும் நக்ரோட்டா பகுதியில் இந்திய இராணுவ அமைப்பு தாக்கப்பட்டது. ஒரு அதிகாரி உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இது உரி தாக்குதலை விட மிகவும் தீவிரமானது. நக்ரோட்டா பகுதியை உரி பகுதியுடன் ஒப்பிடும்போது அது எல்லையை விட்டு இன்னும் தள்ளி உள்ளது, உரியோ எல்லைக்கு அருகில் உள்ளது. அதைவிட முக்கியமானது, ஜம்மு, பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதியின் பாதுகாப்பைக் கவனிக்கும் இராணுவப் பிரிவான 16 வது கார்ப்ஸின் தலைமையகம் நக்ரோட்டா இருந்த போதிலும், உரி சம்பவத்திற்கு திரைப்படம் மூலம் விளம்பரப்படுத்திய பாஜக, நக்ரோட்டா தாக்குதலுக்கு அமைதி காத்தது.
டிசம்பர் 2017 கடைசி நாளில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் தெற்கு காஷ்மீரில் உள்ள இந்திய முகாம் மீது நடத்திய தாக்குதலில் ஐந்து சிஆர்பிஎஃப் ஜவான்கள் கொல்லப்பட்டபோதும் இந்திய இராணுவமோ, அரசோ எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. ஆனால் இந்த புல்வாமா தாக்குதல் குறித்த ஆபரேஷன் வாலெண்டின் (Operation Valentine), ஃபைட்டர் (fighter ) போன்ற படங்கள் 2019- தேர்தல் அடிப்படையில் வந்த வண்ணமே இருந்தன.
காஷ்மீர் பைல்ஸ் (2022)
1990ல், காஷ்மீரில் வசித்து வந்த இந்து பண்டிட்டுகள் குறித்தான போலி சித்தரிப்புகளாக வெளிவந்த திரைப்படம்தான் இது. மார்ச் 2022 இல் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி வெளியான இத்திரைப்படம் பாஜகவின் அமோக ஆதரவோடு வெளியானது. உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, கோவா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு பாஜக ஆளும் மாநிலங்கள் படத்திற்கு வரியில்லா அந்தஸ்தை வழங்கின. மோடியே இறங்கி வந்து இத்திரைப்படத்தை விளம்பரப்படுத்தினார்.
அப்போதைய ஜம்மு – காஷ்மீரின் ஆளுநராக இருந்த ஜக்மோகன் காலத்தில்தான் பண்டிதர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறினார்கள். அந்த காலகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது, வைஷ்ணவ தேவி மற்றும் அமர்நாத் கோவிலுக்கு சாலை வசதி செய்த காரணங்களால் அப்போது காஷ்மீரில் உண்டான கிளர்ச்சிக்கு மத சாயம் பூசிய பெருமை ஜக்மோகனையே சேரும். தவறான சித்தரிப்புகளைக் கொண்ட இப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வன்முறையை தூண்டியது. திரையரங்கில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இந்துகளே ஒன்றிணைவோம் என இந்துத்துவ இயக்கங்கள் சாமானிய மக்களை தூண்டி விட்டதும் நடந்தது.
ஜெய்பீம் போன்ற சமூக நீதி படத்திற்கு விருது கொடுக்காமல், இந்த வெறுப்பை கக்கும் திரைப்படத்திற்கு தான் தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. கோவாவில் நடந்த 53-வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டித் தேர்வுக்கான குழுத் தலைவராக இருந்த இஸ்ரேலிய இயக்குநர் நாடவ் லேபிட் இது ஒரு மோசமான இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் பிரச்சார படம் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்டிகிள் 370 (2024)
ஆர்டிகிள் 370 எனும் இப்படம் பாஜகவின் காஷ்மீருக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் மற்றொரு பிரச்சார திரைப்படமாக இருந்தது. இப்படமும் 2024 தேர்தலை குறிவைத்து 23, பிப்ரவரி , 2024ல் வெளியிடப்பட்ட படம். இந்த படத்தின் தயாரிப்பாளர் உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தை இயக்கிய ஆதித்யா தர்.
மோடி ஆட்சி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற காரணமாய் இருந்த ஆர்டிகிள் 370-ஐ ரத்து செய்ய, கடந்த வந்த பாதையை பற்றிய படம் தான் இது.
21 வயதான புர்ஹான் வாணி எனும் காஷ்மீர் போராளியின் (இந்தியாவில் – தீவிரவாதி) கொலையில் தொடங்குகிறது இப்படம். 2016இல் காஷ்மீரில் ஏற்பட்ட அமைதியின்மைக்குப் பிறகு, ராஜேஸ்வரி சுவாமிநாதன், சூணி ஹக்ஸர்(zooni Haksar) எனும் காஷ்மீரி ஏஜென்ட் மூலம் இரத்தம் சிந்தாமல் 370வது பிரிவை ரத்து செய்து காஸ்மீரில் 2019-ல் பொருளாதார நெருக்கடி மற்றும் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்பதே கதை .
புர்ஹான் வாணி தீவிரவாதியா?
புர்ஹான் வாணி, சிறந்த படித்த குடும்பத்தில் பிறந்தவர், வளர்ந்த பின் இராணுவத்தில் சேருவேன் என்று சொன்ன ஒரு சிறுவனின் மனம் தனது 15-வது வயதில் தனது அண்ணனையும், தன்னையும் இந்திய இராணுவம் காரணமில்லாமல் தாக்கி அசிங்கப்படுத்தியதால் அந்த அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்க சேர்ந்த இடம்தான் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு. தனது 21-வது வயதில் அவர் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது இறப்பிற்கு பின்னும் அவரது கொலை குறித்த சர்ச்சைகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன. இந்திய இராணுவத்தால் தீவிரவாதி என சொல்லப்பட்டவர் இவர், தனது முகத்தை மறைக்காமல் சமூக தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியவர். அவரது காணொளி செய்திகள் இந்திய அநீதி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக இளைஞர்கள் தங்கள் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய அவசியம் குறித்த தலைப்புகளில் இருந்தன. அதுமட்டுமல்லாது காஷ்மீரை விட்டு சென்ற பண்டிதர்களையும் மறுபடியும் அழைத்துள்ளார் மற்றும் இந்துக்களின் அமர்நாத் யாத்திரைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தியா இவரை ஒரு பயங்கரவாதியாகக் கருதியது, ஆனால் உள்ளூர் மக்கள் அவர் ஒரு புதிய காஷ்மீரி தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்துபவராக கருதினர்.
இராணுவ அத்துமீறல்கள்
படத்தில் ஒரு காட்சியில் கல் எறியும் மக்களிடம் இருந்து தப்பிக்க தீவிரவாதி ஒருவரை வண்டியின் முன்பு கட்டி தப்பிப்பது போன்ற காட்சி அது. இதுவும் உண்மை சம்பவத்தை அடிப்படையை கொண்டு எடுக்கப்பட்டதே. மேஜர் லீதுல் கோகோய் ஏப்ரல் 9, 2017 அன்று தனது ஓட்டை செலுத்தி விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த பாரூக் தர் என்பவரை கற்களை வீச தூண்டியதாக குற்றம்சாட்டி தனது வண்டியின் முன்பு கட்டி 20 கிராமங்களுக்கு கொண்டு சென்றுள்ளார். இந்திய இராணுவத்திற்கு எதிராகவே ஜம்மு காஷ்மீர் காவல் துறை தனது வாக்குமூலத்தை அளித்ததால் ராஷ்ட்ரிய ரைபிள்ஸை சேர்ந்த மேஜர் கோகோய்யை இராணுவத்தின் விசாரணை நீதிமன்றம் (CoI) குற்றவாளி என்று அறிவித்தது.
யாசின் மாலிக்
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் போராளியான யாசின் மாலிக்கை தனது சுய அரசியல் நலனுக்காக மக்களை பயன்படுத்துவது போன்ற காட்சிகளை இயக்குனர் அமைத்திருப்பார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் காசுமிருக்கான விடுதலையை கோரிய இவர் ஆரம்பகட்டத்தில் ஆயுத போராட்டம் நடத்தினாலும் 1994-க்கு பிறகு அமைதி வழியில் போராடினார். ஆனாலும் இந்திய அரசு அவருக்கு 2022-ல் ஆயுள் தண்டனை வழங்கி சிறையில் தள்ளியது.
இது போன்ற பல காட்சிகளை இந்த படத்தில் வைத்து காஷ்மீர் மக்களுக்கு எதிரான பொய் பிரச்சாரத்தை திறன்பட செய்துள்ளார் இயக்குனர்.
அமரன்(2024)
ஹிந்தியில் வெளியான காஷ்மீர் மக்களுக்கு எதிரான படங்களின் வழியில் தமிழில் வெளியாகியுள்ள படம் தான் அமரன். இதன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் கமலஹாசன். இந்த திரைப்படமானது இந்திய இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்ட சிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.
காஷ்மீரில் விடுதலைக்காக போராடுவதாக கூறும் தீவிரவாதிகளை சிலர் ஆதரிப்பதைக் காட்சிப்படுத்தும் அதே வேளையில், பெரும்பாலான காஷ்மீரிகள் அமைதியை வலியுறுத்தி, ராணுவத்துக்குத் துணை நிற்பதாக காட்சிகள் அமைந்துள்ளன. மக்கள் இராணுவத்தை அவ்வளவு நம்பினால் ஐ.நாவின் UNHRC அளித்த OHCHR அறிக்கையில் காஷ்மீரில் மக்களுக்கு மனித உரிமை மீறல்களுக்கான தண்டனை மற்றும் நீதிக்கான அணுகுமுறை இல்லாதது குறித்து ஏன் ஆவணப்படுத்தவில்லை? தன்னார்வ சர்வதேச நிறுவனமான (Human rights watch) ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின், 2006 அறிக்கைபடி சுமார் 20000 மக்கள் இந்திய இராணுவத்தால் 1990-ல் இருந்து 2017-க்குள் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது. இதைத்தாண்டி சம்மரி எக்ஸிகியூஷன், வன்புணர்வு, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் சித்திரவதை என பல கொடுமைகள் சாமானிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.
மேற்கூறிய படங்கள் அனைத்துமே பெரும் வெற்றிகளை குவித்த படம். படத்தை குறை கூறுபவர்களை தேச விரோதிகள் என்று பரப்புமளவிற்கு இந்த படங்களுக்காக சில இசுலாமிய விரோத கட்சிகள் வியாபாரம் செய்தன. படத்தின் நேர்மையை கேள்வி கேட்டால் படத்தை படமாய் பாருங்கள் என்று போதனை செய்தார்கள். ஆனால் சிறுபான்மையினரான இசுலாமியர்களை குற்றவாளிகள் ஆக்கும் போர்வையிலேயே இந்த படங்கள் வெளி வருகின்றன.
கேரளா ஸ்டோரி என்ற படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்று கூறி லவ் ஜிகாத் எனும் போர்வையில் 32,000 இந்து பெண்களை ISIS அமைப்பில் சேர்த்து ஏமாற்றப்படுவது போல் வந்தது. இதை எதிர்த்து நீதி மன்றத்தில் முறையிட்டபோது இந்த திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே என்றும், கேரளாவில் 32,000 பெண்கள் இசுலாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர் என்ற கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரபூர்வமான தரவுகளும் இல்லை என்றும் மறுப்பு தெரிவிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் நீதிமன்றத்தின் மறுப்பு எத்தனை பேருக்கு சென்றதோ, இல்லையோ பல லட்சம் மக்களுக்கு இந்த தவறான கருத்து திரைப்படம் மூலமாக சேர்ந்து விட்டது.
திரையுலகம் என்பது கோடிக்கணக்கான மக்களை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி வைத்திருக்கும் மிகப்பெரிய கலை வடிவம். காதல், அன்பு, பாசம், இரக்கம் என அனைத்தும் கலைநயத்துடன் மக்களிடம் சேரும் போது அதனுடன் சேர்ந்து வன்மம், வக்கிரம், வன்முறை, பழி வாங்குதல் போன்றவையும் உள்புகுத்தப்பட்டு மக்களே அறியாமல், மக்களுக்குள் உள்வாங்கப்பட்டு சிந்தனைக் கட்டமைப்பை மாற்றும் ஆற்றல் கொண்டவை. ஆனால் இவையெல்லாம் அநீதிக்கு நீதி பெறுகின்ற வழிமுறைகள் என்பதாக காட்டப்படுவதே மக்கள் இதில் சுலபமாக வீழ்ந்து விடுகிறார்கள். நீதி என்பது விசாரணை முறைகளில் உறுதிப்பட வேண்டுமே தவிர, கதாநாயக பிம்பங்கள் கையிலெடுத்துக் கொள்ளும் அதிகாரம் வகையிலான காட்சியமைப்புகளால் அல்ல.
எல்லையோர காஷ்மீர் மக்களின் வலிகள், அம்மக்களின் நியாயமான கோரிக்கைகள் அதன் வரலாற்றுப் பின்னணியின் ஊடாக அணுகப்பட வேண்டுமே ஒழிய, தேர்தல் வெற்றிக்கான இரையாக உணர்ச்சியைத் தூண்டி விடும் திரைப்படம் மூலமாக அல்ல. இம்மாதிரியான திரைப்படங்கள், காஷ்மீர் மக்கள் அல்லாத ஏனைய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தவறான பொய்ப் பிரச்சாரத்தை வலிமையாக கொண்டு சேர்க்க உதவுகின்றன.
பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்பைச் சார்ந்த படத் தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் கொண்டு, தங்களது சனநாயகமற்ற கொள்கை முடிவுகளையும் நியாயமாக காண்பிக்க இதைப் போன்ற படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை பாஜக-வின் பிரச்சாரங்களை எளிமைப்படுத்தி மக்களிடம் வலிமையாக கடத்தி விட்டுகின்றன. இந்தப் பிரச்சார திரைப்படங்களுக்கு தேசிய விருதுகளும் கொடுக்கப்பட்டு ஊக்கப்படுத்தப் படுகின்றன. அமரன் திரைப்படத்திற்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். மற்ற பிரச்சார படங்களைப் போல இதற்கும் தேசிய விருது வழங்கும் வாய்ப்பும் பாஜகவினால் உருவாக்கப்படும்.
ஒரு பகுதியைப் பற்றி எடுக்கப்படும் படங்கள் அந்த மக்கள் கருத்தைப் பிரதிபலிக்கும் அறத்தினை கொண்டிருக்க வேண்டும். மற்ற பகுதி மக்களுக்கு அப்பிரச்சனையை பிறழாமல் கொண்டு சேர்க்கும் தன்மையை கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவ்வகையான பிரச்சாரத் திரைப்படங்கள் மூலமாக காஷ்மீர் மக்களின் கருத்துகள் சென்று சேர்க்கப்படாமல், பாஜக-வின் பிரச்சாரங்கள் மற்ற பகுதி மக்களுக்கு சென்று சேர்கின்றன. அதனுடன் இசுலாமிய போராளிகள் மீது தீவிரவாத முத்திரை குத்தும் பாஜகவின் பிரச்சாரம் வெகு மக்களிடத்தில் திரைப்படம் மூலமாக சேர்ந்து, அவை உண்மையென நம்ப வைக்கப்படுகிறது. இதனால் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-சும் வளர்கின்றன. இசுலாமியர்கள் மீது வெறுப்புணர்வும் மக்களிடத்தில் வளர்க்கப்படுகின்றன.
எந்த ஊடகம் வழியாக செய்திகள் வந்தாலும், அவற்றை பகுப்பாய்ந்து அணுகவில்லை எனில் பாஜகவின் பிரச்சார படங்களே வெகுமக்களிடம் சென்று சேர்க்கப்பட்டு மூளை சலவை நடத்தப்படும் என்பதை மக்கள் உணர வேண்டும்.