உலகப் பேரறிவாளர்களுக்கு இணையான அறிவினால் இந்திய சமூகத்தை நுட்பமாக ஆய்ந்தறிந்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பை வடித்த சிற்பி, முதல் சட்ட அமைச்சர், புரட்சியாளர், சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார அறிஞர், வரலாற்றாய்வாளர், மானிடவியலாளர், தேசிய தலைவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட அண்ணலின் வாழ்க்கையில் ஊடகவியலாளர் என்பதும் ஒன்றாகும்.
அண்ணலின் காலத்தில் அனைத்து செய்திகளையும் அறிய ஒரே வாய்ப்பாக அச்சு ஊடகங்களே இருந்தன. 1900களில் உலக அளவில் செய்தித்தாள்கள் பரிணமித்து வளர்ந்தன. உயர்சாதியினரின் செய்திக் கட்டமைப்புகளை தகர்த்து தலித் சமூகத்திற்கான நிலையை உயர்த்த, அவர்களுக்கு உரிமைகள் குறித்த விழிப்பை உருவாக்க அண்ணல் தனது எழுத்துப்பணியைத் தொடங்கினார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் 1927 ஆம் ஆண்டு மஹத்தில் உள்ள சௌதார் குளத்திற்கு ஊர்வலமாகச் சென்று, தண்ணீரைக் குடித்து தங்கள் உரிமையை நிலைநாட்டினர். அதைச் செய்ததற்காக, உயர்சாதி அமைப்புகள் நிராயுதபாணியான மக்களைத் தாக்கின. அப்போது இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் முக்கிய தலைப்பு செய்தியாக மாறியது. மகாராஷ்டிராவில், சில பத்திரிக்கைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் துணிச்சலுக்கு வாழ்த்து தெரிவித்தன. ஆனால் சில செய்தித்தாள்களோ ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே குற்றம் சுமத்தின.
இத்தகைய ஊடகங்களின் செயல்பாட்டை உணர்ந்து கொண்ட அண்ணல் அறம் சார்ந்த ஊடகத்தின் தேவையை உணர்ந்தார். சமூக நீதி தழைக்க வேண்டும் என்பதற்காக பார்ப்பனியம் வகுத்த வருணாசிரமக் கொள்கையை அனைத்து தளங்களிலும் எதிர்க்கத் துணிந்தார் அண்ணல் அம்பேத்கர். தனது எழுத்தின் மூலம் சமூகப் புரட்சிக்கான தளத்தை வழங்க முடிவு செய்தார். 1920ல் பத்திரிகை உலகில் நுழைந்த அண்ணல் ஜனவரி 31, 1920 இல் தனது முதல் பத்திரிகையான மூக்நாயக்கைத் தொடங்கினார். (மூக்நாயக் என்றால் மராத்தி மொழியில் ‘குரலற்றவர்களின் நாயகன்‘ என்று பொருள்படும்.)
அண்ணல் தனது எழுத்துக்களின் மூலம் சமூகத்தில் நிலவி வந்த சாதிய பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக வேதங்கள்/ பார்ப்பனியம் வகுத்த நான்கு வருணபாகுபாட்டை இவர் விமர்சித்து எழுதியது மக்களிடையே ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் உயர்சாதி பிரிவுகளின் பல அரசியல் நகர்வுகளை உள்வாங்கி அதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரையாக்கினார். ‘மூக்நாயக்‘ பத்திரிக்கையின் முதல் தலையங்கத்தில் அண்ணல் எழுதியது:
“இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தை எளிதில் அணுகும் உயர்சாதி இந்துக்கள், ஒடுக்கப்பட்டவர்களின் வழக்கை அரசாங்கத்திடம் தவறாக சித்தரிக்கின்றனர் என்பதை ஒடுக்கப்பட்ட சமூகங்களும் உணர்ந்துள்ளனர். இந்த நாட்டில் மிக அதிகளவில் சாதிவெறி நிலவுவதால், உண்மையான சுயராஜ்யத்தை நிறைவேற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாக (தனியாக) தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் நாட்டின் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்று கோருகின்றனர். சமூக சமத்துவமின்மையை கொண்டு வரும் உயர்சாதி பிரிவினரின் கட்டமைப்பிற்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களின் இந்தப் போராட்டம் அவர்களிடையே வளர்ந்து வரும் விழிப்புணர்வின் அறிகுறியாகும்”- என்று எழுதினார் அண்ணல்.
அண்ணல் தொடங்கிய மூக்நாயக் பத்திரிக்கை மூன்று ஆண்டுகள் வெளிவந்தது. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளியான மூக்நாயக் பத்திரிகைக்காக சத்ரபதி ஷாஹுஜி தொடக்கப் பணமாக ரூ.2,500 வழங்கினார். நகல் ஒன்று 2.5 அணாவுக்கும் ஆண்டு சந்தா ரூ. 2.50 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட இந்தப் பத்திரிக்கை ஜூலை 1922 வாக்கில் 1,000 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மூன்று செய்தித்தாள்களை வெளியிட்டார் அண்ணல். (பஹிஷ்க்ருத் பாரத் (1927-1929), ஜனதா (1930-56), மற்றும் பிரபுத்த பாரத் (1956)). இதில் மூக்நாயக் மற்றும் பஹிஷ்க்ருத் பாரத் செய்தித்தாள்களில் தலையங்க நிர்வாகியாகவும் நேரடியாக எழுத்துப்பணியில் ஈடுபட்டார்.
அண்ணல் தனது செய்தித்தாள்களுக்குத் தேர்ந்தெடுத்த பெயர்கள் அவரது நோக்கத்தை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தின. ஜனதா என்றால் ‘மக்கள்’ என்றும் பஹிஷ்கிருத பாரத் என்றால் ‘விலக்கப்பட்ட இந்தியா’ என்றும் பொருள்பட அவர் தேர்ந்தெடுத்த தலைப்புக்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை நேரடியாக வெளிப்படுத்தின.
ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்களின் போராட்டங்கள் பற்றி வெகுஜன சார்பு ஊடகங்கள் பேச மறுத்ததால் அண்ணலின் கருத்துக்களை வெளியிட இந்த செய்தித்தாள்கள் ஊதுகுழலாக செயல்பட்டன. ஊடகங்களால் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அண்ணல் உறுதியாக நம்பினார். அவரின் மராத்தி செய்தித்தாள்கள் அன்றைய அரசியல் உலகில் ஒரு புதிய நெறிமுறையைக் கொண்டுவந்தன. மேலும் அண்ணல் அமெரிக்காவில் கற்ற கல்வியும் ஊடகத்துறையில் அவருக்கு பக்கபலமாக இருந்தது.
அன்றைய காலக்கட்டத்தில், இந்திய தேசம் பற்றிய சிந்தனையை ஊக்குவிப்பதாகக் கூறிய ‘பாம்பே குரோனிக்கல்‘ மற்றும் ‘கேசரி‘ உட்பட பல முக்கிய தேசியவாத செய்தித்தாள்கள் பார்ப்பன நிகழ்வுகள் மற்றும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டன. இத்தகைய பத்திரிக்கைகள் சூழ்ந்த, போட்டி நிறைந்த உலகில் அறிவார்ந்த அணுகுமுறையுடன் அண்ணலின் தெளிவான எழுத்து நடை அந்த நேரத்தில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தின.
“பம்பாய் பிரசிடென்சியில் வெளியாகும் செய்தித்தாள்களை மேலோட்டமாகப் பார்த்தால் கூட இவற்றில் பல உயர்சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டுவதைக் காணலாம். மற்ற சாதியினரின் நலனில் இவர்கள் அக்கறை காட்டாததோடு சில சமயங்களில் மற்ற சாதியினரின் நலனுக்கு எதிராகச் செயல்படுவார்கள். மேலும் பெரும்பாலான செய்தித்தாள்கள் உயர்சாதிய சார்புகளைக் கடைப்பிடித்து, பிற சாதி மக்களின் நலன்களைப் புறக்கணிக்கின்றன”-என்று கூறினார் அண்ணல்.
“தற்போது நம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு தீர்வாகவும், எதிர்காலத்தில் நாம் முன்னேறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்கவும் செய்தித்தாள்களை விட சிறந்த ஒன்று இல்லை” என்று அண்ணல் அம்பேத்கர் கூறுவார். அவரது மதிப்புமிக்க படைப்புகளில் பெரும்பாலானவை ஆய்வுக் கட்டுரைகளாகவும் புத்தகங்களாகவும் வெளிநாடுகளிலும் கிடைக்கின்றன. குறிப்பாக அவர் படித்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு அறிவுத்தீயை ஏற்றுவது அண்ணலின் எழுத்துக்களே.
அன்று செய்தி ஊடகமாக இருந்து படிப்படியான வளர்ச்சியில் காட்சி ஊடகமாகி இன்று சமூக வலைதளங்கள் வரை ஊடக வளர்ச்சியின் பிரம்மாண்டம் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் அண்ணல் அம்பேத்கர் எதற்காக பத்திரிக்கை ஆரம்பித்தாரோ அந்த நிலை இன்றும் மாறவில்லை. இன்றைய செய்தி, காட்சி, வலைதள ஊடகங்களில் சுமார் 90% உயர்சாதியினரின் பிடியில் தானிருக்கிறது என்பதை நியுஸ்லாண்டரி மற்றும் ஆக்ஸ்போம் ஆய்வு முடிவுகள் நிரூபித்துள்ளன.
வட நாட்டு ஊடகங்களில் 90% க்கும் மேல் பாஜக ஆதரவு ஊடகங்களாக, அவர்களின் கட்டமைப்புத் தளமாக, அவர்கள் வடிவமைக்கும் செய்திகளே இந்தியாவின் முக்கிய செய்திகளாக வட நாட்டவர் மூளைக்குள் ஏற்றப்படுகின்றன. இவற்றை மீறி ஓரளவு நடுநிலையான ஊடகமாக செயல்பட்டாலும் மிரட்டலும், பாஜக ஆதரவு நிறுவனங்களால் பறிக்கப்படுவதும் தொடர்கிறது. சமீபத்தில் News 18, NDTV போன்ற ஊடகங்கள் இப்படியாக அம்பானி, அதானியால் பறிக்கப்பட்டன. சனநாயகத்தின் நான்காம் தூண் என வர்ணிக்கப்பட்டவை இன்று பாஜகவை தாங்கும் தூணாக மாறி, பாஜகவின் ஊடக பிரச்சாரகர்களான செய்தியாளர்களால் இந்துத்துவ வெறியேற்றும் செய்திகள் கட்டமைக்கப்படுகின்றன.
மணிப்பூர் பற்றி எரியும் போது மோடி பிடில் வாசிப்பதை வானளாவ புகழ்ந்தவையே இந்த உயர்சாதி ஊடக ஊதுகுழல்கள். இசுலாமிய வெறுப்புணர்வை ஊட்டும் செய்திகள் பஞ்சமில்லாமல் இவற்றில் மண்டிக் கிடக்கின்றன. ஓரளவாவது சமூக வலைதளங்கள் மூலம் சனநாயகக் குரல்கள் எழும்பினாலும் அங்கும் இணைய கூலிப்படைகளாக சங்கிகளை நிரப்பி பக்திவாதம், சாதிவாதம், மதவாதம் தூண்டும் செய்திகள் குவியல் குவியலாக கட்டமைக்கப்படுகின்றன. இந்தக் கட்டமைப்பை தகர்க்க வேண்டுமென்றால் பெரும் பலம் தேவைப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரின் எழுத்துக்களில் அவை அளவின்றி கொட்டிக் கிடக்கிறது. ஊடகக் கட்டமைப்பில் நாம் வலிமை பெற வேண்டுமென்றால் அண்ணலின் எழுத்துக்களை வாசிப்போம். பார்ப்பன – பனியா – பாஜக-விற்காக செயல்படும் ஊடகக் கட்டமைப்பைத் தகர்க்க ஜனநாயக சக்திகள் நாட வேண்டிய அறிவுப் பேராளுமை அண்ணல் அம்பேத்கர்.