ஈழத்தில் தமிழர்கள் நிலங்களை சிதைக்கும் இந்திய அரசு
தொடரும் இந்தியாவின் தமிழினப்படுகொலை கூட்டு
இந்திய பனியா அதானி நிறுவனம் தமிழ் ஈழத்திலுள்ள மன்னார் பகுதியில் $1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.7572 கோடி) மதிப்பில் 1000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கவுள்ளதாக (06.12.21) செய்தி வெளியாகின. அதில், அதானி நிறுவனம் தனது காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு இனப்படுகொலை இலங்கை அரசிடம் அனுமதி கோரியதாகவும், இனப்படுகொலை இலங்கை அரசும் அனுமதி வழங்க இருப்பதாகவும் வெளியானது. கடந்த அக்டோபர் மாதம், அதானி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இதற்கான முன்னேற்பாடுகளை இறுதி செய்திருக்கிறார்.
ஏற்கனவே தமிழ் பகுதிகளான நயினாதீவு, நெடுந்தீவு (கச்சத்தீவுக்கு மிக அருகே உள்ள தீவு) மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 12 மில்லியன் டாலர் (ரூ.91 கோடி) மதிப்பில் சீனாவுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க இனப்படுகொலை இலங்கை அனுமதி அளித்திருந்தது. இத்திட்டங்களால் எங்கள் நிலங்கள் பெருமளவு எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு நாங்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக மாற்றப்படுவோம் என்று தமிழ் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, சீனா உள்ளுர் மக்களின் எதிர்ப்புக்கு இணங்கி இந்த திட்டத்தை கைவிடுகிறோம் என்று அறிவித்துவிட்டது. அந்த திட்டத்தை இன்று இந்தியா, நாங்கள் செய்கிறோம் என்று அதானி மூலம் செய்ய முன்வந்திருக்கிறது. சீன திட்டத்தை போன்று இந்திய நிறுவன திட்டத்திற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்று சிங்கள அரசு எண்ணியிருக்கும். ஆனால், தமிழினப்படுகொலையில் இலங்கையோடு கூட்டு சேர்ந்து தமிழர்களை கொலை செய்த இந்திய அரசை தமிழர்கள் மறந்திட முடியுமா? இனப்படுகொலையின் தொடர்ச்சியாக தற்போது தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்கள அரசின் சதி திட்டத்திற்கும் இந்தியா துணை போகிறது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை என்பது தமிழினப்படுகொலையின் தொடர்ச்சியே.
இனப்படுகொலை இலங்கை அரசு தற்போது மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. இலங்கையின் நாணய மதிப்பு சர்வதேச சந்தையில் மிகக்கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. உணவு தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு, தங்கம் இருப்பு பற்றாக்குறை, நாட்டின் உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் கடுமையான வீழ்ச்சி என்று இனப்படுகொலை இலங்கை அரசு பொருளாதாரத்தில் நலிந்து வீழும் நிலையில் இருக்கிறது. இவற்றை சீரமைக்கும் திட்டங்கள் என்ற போர்வையில் தமிழர்கள் விரோத அழிவு திட்டங்களை நிறைவேற்றிட சிங்கள அரசு இந்தியாவை நாடியிருக்கிறது. வரலாற்று ரீதியாகவே தமிழர்களை தங்கள் எதிரியாக பார்க்கும் “ஆரிய பார்ப்பன” இந்தியாவும் இதற்கு இணைங்கி போவதை தெளிவாக காண முடிகிறது.
2021 தொடக்கத்தில் திருகோணமலை பகுதியில் இருக்கும் 99 எண்ணெய் கிணறுகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ளும் அனுமதி ஒப்பந்தத்தை இலங்கை இரத்து செய்தது. மேலும், கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே ஒரு துறைமுகம் அமைக்க இந்தியா, சப்பான் நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை “தொழிற்சங்கங்கள் எதிர்ப்பதாக..” இரத்து செய்துவிட்டது. இதுபோன்று, எண்ணற்ற இந்திய திட்டங்களை இரத்து செய்து எவ்வளவு அவமானப்படுத்தினாலும் இந்தியா வலியபோய் இலங்கைக்கு உதவுகிறதென்றால், இதில் தமிழினவிரோதமின்றி வேறு என்ன பாசம் இருந்துவிட முடியும்?
இவ்வளவு அவமானங்களையும் பொறுத்து அதானிக்காக இலங்கையிடம் உறவை ஏற்படுத்திக்கொள்ளும் இந்திய அரசு, அதில் ஒரு துளியாவது தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனையில் காட்டி இருக்குமா? அப்படி செய்திருந்தால் 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொலைகளை தடுத்து இருக்கலாமே!
அதானியின் திட்டங்களை செயல்படுத்திட ஒடிப்போகும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நர்வானே, இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஸவர்தன் சிர்ங்கலா, இலங்கைக்கான இந்திய தூதர், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க பசில் இராசபக்சேவை டெல்லியில் வைத்து சந்திக்கும் நிர்மலா சீதாராமன் இவர்கள் யாரும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் இந்த முனைப்பை ஏன் காட்டுவதில்லை? பனியா தொழிலதிபர்கள் நலனுக்கு பணியாற்றும் அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள் அதில் ஒரு சிறு முயற்சியை எடுத்திருந்தாலே சமீபத்தில் கோட்டைப்பட்டினம் மீனவர் இராஜ்கிரண் உயிரையாவது காப்பாற்றி இருக்கலாமே!
தமிழீழ இனப்படுகொலையில் கூட்டு சேர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக இன்றுவரை செயல்படும் இந்தியா, தமிழ் நாட்டு தமிழர்களின் நலன்களையும் பாதுகாப்பதில்லை.
குஜராத்தி மார்வாடி பனியா முதலாளிகள் சொத்து சேர்ப்பதற்காக வேலை செய்யும் இந்திய அரசுத்துறை கட்டமைப்பு தமிழனின் உயிரை பாதுகாத்திட வேலை செய்யவில்லை என்றால் இதை தமிழின விரோதம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?