இந்தியாவில் இன்றும் பெண்கள் தங்களுக்கான கல்வி, திருமணம் குறித்து முடிவெடுக்க போராடும் நிலையிருக்கும்போது நூற்றாண்டுகளுக்குமுன் அவர்களுக்கு நிகழ்ந்த ஒடுக்குமுறைகளின் பட்டியல் நாம் நினைப்பதைவிட நீளமானது. ஆங்கிலேயரிடமிருந்து இந்திய ஒன்றியம் விடுதலை அடைந்த காலக்கட்டத்தில், பெண்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்படுவதற்கு காரணமாக ‘மநு ஸ்ம்ரிதி’ அடிப்படையிலான சட்டங்கள் இருந்தன. குறிப்பாக ‘கலாச்சாரம்’ என்று கூறி பெண் சமூகத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவர்களின் கல்வி முதல் சொத்துரிமை வரை முழுவதுமாக தடை செய்தது.
இத்தகைய சூழலில் நாட்டின் முதல் சட்ட அமைச்சராகப் பதவியேற்றவர் தான் அண்ணல் அம்பேத்கர். தான் இயற்றும் சட்டங்களின் மூலம் சமுதாயத்தில் சாதி, இனம், மதம் மற்றும் பாலின பாகுபாடுகளைக் களையவும் சமத்துவத்தை கொண்டு வரவும் முடிவு செய்தார் அண்ணல். இதற்காக அண்ணல் அன்று அறிமுகப்படுத்தியதுதான் இந்து சட்ட மசோதா (Hindu Code Bill). ஏப்ரல் 11, 1947-இல் அரசியல் நிர்ணய சபையில் இந்து சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார் அண்ணல் அம்பேத்கர். அன்று சமூகத்தில் ‘மநு’வினால் நிகழ்ந்த பெண்களின் ஒடுக்குமுறையைப் மாற்ற நினைத்த அண்ணல், தான் இயற்றிய மசோதாவில் சமூகநீதியையும் சம உரிமையையும் வெளிப்படுத்தினார். பெண்கள் மீதான ‘மநு’வின் ஆதிக்கத்தையும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த ஆணாதிக்கத்தையும் அண்ணலின் இந்து சட்ட மசோதா சுட்டிக்காட்டியது. இதனாலேயே அரசியல் சாசனத்திற்கு கவனம் செலுத்தியது போலவே இந்து சட்ட மசோதா மீதும் தனிக் கவனத்தை செலுத்தினார் அண்ணல்.
அதுவரை பார்ப்பனிய வேத முறைப்படி நடந்த திருமணங்கள் மட்டுமே சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டு வந்த நிலையில் “பதிவு திருமணங்கள்” (அரசு அதிகாரியால் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள்) அண்ணலின் இந்து சட்ட மசோதா மூலம் அங்கீகரிக்கப்பட்டன. சாதி மறுப்பு திருமணங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று வலியுறுத்தப்பட்டது. திருமணம் மற்றும் குழந்தை தத்தெடுப்பு போன்ற விடயங்களில் சாதியை அறிவிக்க வேண்டிய முறை மாற்றப்பட்டது. மேலும் பெண்களுக்கான வாரிசு உரிமையை வலியுறுத்தியது அண்ணலின் சட்ட மசோதா.
அண்ணல் அம்பேத்கர் பெண்களின் வலியையும் போராட்டத்தையும் கண்டு அவர்களின் நலனுக்காக சட்டங்களை இயற்றினார் என்பது இந்த சட்ட மசோதாவின் மூலம் தெளிவாகியது. இந்திய சமூக கட்டமைப்பில் சாதியும் மதமும் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே உருவாக்குவதை உணர்ந்து, அதிலிருந்து மீண்டுவர மசோதாவை இயற்றினார். ஒரு பெண் பிறந்தது முதல் சமூக பாதுகாப்பிற்காகவும் பொருளாதார பாதுகாப்பிற்காகவும் ஆண்களையே சார்ந்திருக்கும் போக்கினை சீர்திருத்துவதற்காக இந்த மசோதாவினை கொண்டு வந்தார் அண்ணல்.
ஆனால், வழமை போல் அண்ணலின் இந்த மசோதா அன்று இந்துத்துவவாதிகளை பெரிதும் அச்சுறுத்தியது. பார்ப்பனிய ஆதிக்கத்தால் கடைப்பிடிக்கப்பட்ட பெண்ணடிமை சட்டங்களை அண்ணலின் இந்து சட்ட மசோதா சீர்திருத்துவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக ஷ்யாமா பிரசாத் முகர்ஜி போன்ற இந்து மகாசபா தலைவர்கள் ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து இந்த மசோதாவை எதிர்த்தனர். பார்ப்பனிய அடக்குமுறையை ஆதரித்த பல இந்துத்துவ அமைப்புகள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டன. மசோதாவை முடக்கி வைப்பதாக அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் கூறினார்.
இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த மிக நீண்ட விவாதம் இந்து சட்ட மசோதா மீது நடத்தப்பட்ட விவாதம்தான். 1947-இல் தாக்கல் செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகும் அது சட்டமாகாமல் இருந்தது.
சாதிய மற்றும் மத ஆதிக்கவாதிகளால் மசோதாவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு வந்த நிலையில், சமூகநீதிக்காக தன்னுடைய பதவியை துச்சமென தூக்கி எறிந்தார் அண்ணல். 27 செப்டம்பர் 1951 அன்று அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். (அண்ணலின் ராஜினாமா கடிதம் கடந்த பிப்ரவரியில் காணாமல் போய் விட்டதாக ஒன்றிய பாஜக அரசு தெரிவித்திருப்பது தற்போது சர்சையைக் கிளப்பியுள்ளது.)
இந்து சட்ட மசோதா நிறைவேறாதது குறித்து அண்ணல் அம்பேத்கர், “சமூகத்தில் நிலவும் பாலின சமத்துவமின்மையைக் களையாமல், பொருளாதார பிரச்சனைகள் குறித்த சட்டங்களை இயற்றுவது நமது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக ஆக்கிவிடும். இது சாணக் குவியல் மீது அரண்மனை கட்டுவதற்கு ஒப்பாகும்.” என்றும் எழுதி உள்ளார்.
அண்ணல் ராஜினாமா செய்த பிறகு இந்து சட்ட மசோதா நான்கு மசோதாக்களாகப் பிரிக்கப்பட்டது. அவை:
இந்து திருமணச் சட்டம், 1955;
இந்து வாரிசு சட்டம், 1956;
இந்து சிறுபான்மை மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956;
மற்றும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956:
இவை 1952-இல் முதல் மக்களவை தேர்தலுக்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத்தின் சட்டப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டன.
பெண்களுக்கு சமஉரிமை அளிப்பதற்கான மிகப்பெரும் படிக்கல்லாக இந்த நான்கு மசோதாக்களை நேரு அன்று குறிப்பிட்டு பேசினார். சமூகநீதி, சமநீதி கோட்பாட்டிற்காக அண்ணல் வகுத்த இந்த சட்டங்களே இந்து தனிநபர் சட்டங்களாக (Hindu Personal Laws) இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இவற்றை எல்லாம் நீர்த்துப் போகச் செய்யும் திட்டத்துடன்தான் பொது சிவில் சட்டத்தை முன்மொழிகிறது ஒன்றிய பாஜக. (விரிவான கட்டுரை: https://may17kural.com/wp/bjp-to-adopt-common-civil-law-against-muslims/)
‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ எனும் பாசிச பாஜகவின் கொள்கையில் உதித்த பொது சிவில் சட்டத்தை தனிநபர் சட்டங்களுக்கு மாற்றாக முன்வைக்கிறது பாஜக. அண்ணல் அம்பேத்கர் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசினார் என்ற பரப்புரையும் செய்கிறார்கள் பாஜகவினர். ஆனால் பல்வேறு வேறுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில் தனிநபர் உரிமைகள் பெரிதும் மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தியலைக் கொண்டவர் அண்ணல்.
1948-இல் இந்திய அரசியலமைப்பு சபையில் பொது சிவில் சட்டம் பற்றிய விவாதத்தில், “ஒரு நாட்டின் குடிமக்கள் ஆகிவிட்டார்கள் என்பதால் மட்டுமே பொது சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்று சட்டப்பிரிவு 35 கூறவில்லை. வருங்காலத்தில், “பொது சட்டத்திற்கு கட்டுப்படுவதற்குத் தயாராக உள்ளோம்” என்று அறிவிப்பவர்களுக்கு மட்டுமே இந்த சட்டவிதியை உருவாக்குவது முற்றிலும் சாத்தியம்” என்று கூறினார் அவர். அதாவது, பொது சட்டம் என்பதை, தானே முன்வருபவர்களுக்கு (Voluntary) மட்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அண்ணல் அம்பேத்கர் கருதினார்.
சமத்துவத்திற்காகவும் பெண் உரிமைக்காகவும் போராடியது மட்டுமல்ல தன் பதவியைத் துறந்தவர் அண்ணல். சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதை சட்டங்களின் மூலம் முதன்மையாக உணர்த்தியவர். “சமத்துவமின்மை நிறைந்த இந்த சமூகக் கட்டமைப்பை சீர்திருத்த (ஆங்கிலேயரிடமிருந்து) சுதந்திரத்தை பெற்றோம். எனவே, தனிநபர் சட்டம் (Personal Law) நீக்கப்படுவதை எவராலும் கற்பனை செய்ய இயலாது” என்றும் கூறினார்.
ஆனால் அண்ணலின் வார்த்தைகளை திரித்து பேசும் பாஜக, அவரை பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவானவர் போல் சித்தரிக்கிறது. இந்த சூழ்ச்சியை மக்கள் அனைவரும் புரிந்து கொள்வோம். அண்ணலின் அயராத உழைப்பான தனிநபர் சட்டங்களாலேயே இனியும் நம் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றுணர்வோம்.
சட்டமேதை அண்ணலுக்கு நம் புகழ்வணக்கம்!!