முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வோமென சொல்லுகிற சங்கிகள்-பாஜகவை எதிர்த்து நிற்பவர்களையும், போராட்டம் செய்பவர்களையும் ‘காங்கிரஸ் ஆதரவாளர்கள்’ என முத்திரை குத்துவதன் பின்னணி குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஏப்ரல் 6, 2024 அன்று முகநூல் கணக்கில் பதிவு செய்தது.
2009 இனப்படுகொலை நடந்த போது நாமெல்லாம் நடத்திய ‘காங்கிரஸ் எதிர்ப்பை’… ‘ பாஜக ஆதரவென’ எவரும் சொல்லவில்லை. முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வோமென சொல்லுகிற சங்கிகள்-பாஜகவை எதிர்த்து நிற்பவர்களையும், போராட்டம் செய்பவர்களையும் ‘காங்கிரஸ் ஆதரவாளர்கள்’ என முத்திரை குத்துவதன் பின்னணி ‘இசுலாமியர் மீதான காழ்ப்புணர்வு’ என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ‘…இசுலாமியர்கள் இந்தியாவில் இனப்படுகொலையாக வாய்ப்பு அதிகம்..’ என சர்வதேச நிறுவனங்கள் பகிரங்கமாக சொன்னபின்னும், 2020ல் டில்லியில் 60 முஸ்லீம்களை சங்கிகள் படுகொலை செய்த பின்பும், கிருத்துவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை மணிப்பூரில் இனப்படுகொலை செய்தபின்பும் பாஜக எதிர்ப்பு அரசியலை காங்கிரஸ் ஆதரவென முத்திரை குத்துவதை என்னவெனச் சொல்வது? இந்திய அளவிலான பாஜக எதிர்ப்பு அரசியலில் காங்கிரஸும் ஒரு அங்கமாக மட்டுமே இருக்கிறது.
ஆனால் மோடி-இந்துத்துவ எதிர்ப்பு உமர்காலித், ஷர்ஜீல் இமாம், தீஸ்டாசட்டல்வட் போன்ற அரசியல் செயல்பாட்டாளர்கள், ஜூபைர், தக்கூர்த்தா, சதீஸ், சுசாந்த்சிங் போன்ற ஊடகவியலாளர்கள், பிரசாந்த்பூஷன் போன்ற வழக்கறிஞர்கள் அம்பேத்கரிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், மற்றும் மேதாபட்கர் போன்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள், சோமாசென், வரவரராவ், ரோனாவில்சன், ஃபெரைரா, கவுதம் நவ்லாகா,வெர்னான் கொன்சால்வாஸ், பேரா.சாய்பாபா போன்றவர்களே வடஇந்தியாவில் அரங்கை அமைத்தவர்கள்.
தென்னிந்தியாவில் பெரியாரிஸ்டுகளும், முற்போக்காளர்களும், கர்நாடகத்தில் சமூகநல செயல்பாட்டாளர்களும், கேரளத்தில் இசுலாமிய அமைப்புகளும், கம்யூனிஸ்டுகளும் உருவாக்கினார்கள். இதற்கான கூட்டமைப்புகள் 2018 தொடங்கி நடக்க ஆரம்பித்தது. 2018ல் NCHRO இக்கூட்டமைப்பின் ஒரு பக்கத்தை மும்பையில் தொடங்கினார்கள். இதில் மே17 இயக்கமும் பங்கெடுத்தது. NCHRO பின்னர் தடை செய்யப்பட்டது… 2019ல் மேதாபட்கர் ஒரிசாவில் மாநாடு நடத்தினார். இதிலும் மே17 பங்கெடுத்தது. இதனுடனாக UAPA வழக்கிற்கு எதிரான கூட்டியக்கமாக, CAAவிற்கு எதிரான இயக்கம், உழவர் சட்டங்களுக்கு எதிரான கூட்டியக்கங்கள், வன்கொடுமை சட்டத்திற்கு எதிரான அம்பேத்கரிய அமைப்புகளின் கூட்டியக்கங்கள் என ஒவ்வொரு தளங்களாக பாஜக மோடி எதிர்ப்பு அரசியல் இயங்க ஆரம்பித்தது. இதில் தமிழ்நாட்டின் பெரியாரிய-அம்பேத்கரிய-இசுலாமிய-மார்க்சிய அமைப்புகளின் செயல்பாடு முன்னனியில் இருந்தது.
இவ்வாறாக 2018ல் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி, 2020ல் நீலச்சட்டை பேரணி, 2021ல் சிவப்புச்சட்டைப் பேரணிகள் 150+இயக்கங்கள் இணைந்து நடத்தின. இதில் திமுகவோ, காங்கிரஸோ அழைக்கப்படவோ, பங்கேற்கவோ இல்லை. இக்கூட்டமைப்புகளின் செயல்பாட்டால் பாஜக-அதிமுக படுதோல்வி கண்டது. இயக்கங்களின் கூட்டியக்கங்கள் பாஜகவை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதனாலேயே மே17 போன்ற இயக்கங்கள் கடுமையான தடையை எதிர்கொண்டன. 2017 முதல் 2022 வரை கடுமையான நெருக்கடியை நாங்கள் எதிர்கொண்டோம். பாஜக மட்டுமல்லாமல், ஆர்.எஸ்.எஸ்-ஆல் ஆக்கிரமிக்கப்பட்ட அதிகாரிகளும் அடக்குமுறையை தொடர்ந்தார்கள். காங்கிரஸ் கட்சி எவ்வித கடுமையான நெருக்கடியை மாநிலக் கட்சிகள் போலவோ, செயல்பாட்டாளர்கள் போலவோ எதிர்கொள்ளவில்லை. கொள்கைரீதியான கூட்டமைவுகளே பாஜகவை வீழ்த்துமென்பதை இச்செயல்பாடுகள் நிரூபித்தன.
இந்த வழிமுறையை வட இந்தியா மிக தாமதமாகவே கைக்கொள்ள ஆரம்பித்தது. 2019 மற்றும் 2021ல் அதிமுக-பாஜக வீழ்ச்சி இதை தெளிவாக உணர்த்தியது. 2023 கர்நாடக தேர்தலில் சமூக அமைப்புகள் இணைந்து ‘எட்டேலு கர்நாடகா’ எனும் கூட்டமைப்பை உருவாகினார்கள். இது பாஜகவிற்கு எதிரான பரந்துபட்ட இயக்கங்களின் ஆதரவை திரட்டியது. SDPI கட்சியினரிடம் பேசி பாஜகவை எதிர்க்க சில தொகுதிகளில் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க வைத்தனர். இதனாலேயே கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இப்பகுதியே கர்நாடகாவில் தீவிர இந்துத்துவ பகுதியாகும். இந்த ‘எட்டேலு கர்நாடகா’ தோழர்கள் இந்திய அளவில் இயங்க கூட்டடியக்கத்திற்கு கடந்த 2023ல் அழைப்பு கொடுத்தார்கள். இதிலும் மே17 பங்கெடுத்தது. இதில் பல திட்ட வழிமுறைகளை இந்தியாவின் 20 மாநிலத்திலிருந்து வந்திருந்த தோழர்கள் பகிர்ந்தார்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியினரல்ல. இந்த குழுவின் நண்பர்களே தெலுங்கானாவின் 2023 டிசம்பர் தேர்தலில் பாஜகவை வீழ்த்தினார்கள்.
இதன் பின்னரே ‘இந்தியா கூட்டணி’ எனும் தளத்தை மேலும் தீவிரமாக உருவாக்க கட்சிகள் முயன்றன. இந்தக்கூட்டணி தளர்வாக இயங்கியது. எதிரெதிர் முகாம்கள் ஒன்றாக வேண்டிய கட்டாயத்தை நிதிஷ்குமார் வெளியேற்றம், சரத்பவார் கட்சி உடைப்பு, ஹேமந்த்சோரன் கைது, கெஜ்ரிவால் கைது ஆகியன நெருக்கடியை தீவிரமாக்கியதால் எதிர்க்கட்சிகள் ஒன்றாக நிற்கவேண்டிய நிர்பந்தம் உருவானது. இக்கூட்டமைப்பில் தேசிய அளவிலான கட்சியாக காங்கிரஸ் இயங்கியதே ஒழிய, இக்கூட்டணி உருவாக உழைத்தவர்கள் மாநில கட்சியினரும், சமூக செயல்பாட்டாளர்களுமே. தற்போதைய பாஜக எதிர்ப்பு என்பதன் பின்னனி இதுவே. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் இது போன்ற எந்த முயற்சியிலும் தமிழகத்திலோ அல்லது இந்திய அளவிலோ பங்கெடுப்பதை மறுத்தவர்கள் தற்போதய தமிழ்நாட்டின் பாஜக எதிர்ப்பு இயக்கத்தை ‘காங்கிரஸ் ஆதரவு’ என முத்திரை குத்துவதை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பாஜக எதிர்ப்பு இயக்கத்தவர்களோடு 10 ஆண்டுகளாக பகை பாராட்டியவர்கள் இன்று இசுலாமியரை கொன்றழிக்க வெறியோடு இயங்கும் பாஜகவிற்கு எதிராக இயங்குபவர்களை ‘காங்கிரஸ் ஆதரவாளர்கள்’ என முத்துரை குத்துவது வியப்பானதல்ல. பாஜக எதிர்ப்பு அணியோடு காங்கிரஸ் தன்னை இணைத்துக்கொண்டதே தவிர, பாஜக எதிர்ப்பை 10 ஆண்டுகளாக உருவாக்கி நடத்துகிறவர்கள் சமூக செயல்பாட்டாளர்களே. மோடி அரசை வீழ்த்துவது, ஆர்.எஸ்.எஸ் அழிப்பது என எந்த வேலைத்திட்டமும் வைக்காமல் வாய்ப்பேச்சு, வெட்டிவசனங்களை விற்பனை செய்யும் நாம் தமிழரால், பாஜக பாதுகாக்கப்படவே செய்யும். இசுலாமிய, கிருத்துவ குழந்தைகள், குடும்பங்கள் சீரழியாமல் பாதுகாக்க பாஜகவை ஒழிக்க வேண்டிய அவசரப்பணி நமக்குண்டு. பாலஸ்தீன இனப் படுகொலையை கண்டிக்கவோ, போராடவோ , மக்களை திரட்டவோ செய்யாத நாம் தமிழரும் அதன் தலைமையும் இந்தியாவில் நிகழும் முஸ்லீம் இன அழிப்பு திட்டத்தை தடுக்க முன்வருவார்களா என்ன?
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான நீதிக்கான போராட்டத்தை 15 ஆண்டுகளாக நடத்தாத, காங்கிரஸுக்கு எதிராக போராடாத நாம் தமிழர் கட்சியின் காங்கிரஸ் எதிர்ப்பென்பது பாஜகவிற்கு சாதகமான அரசியல் சூழலை தேர்தலில் உருவாக்குவது என்பதை தவிர வேறல்ல. தேர்தல் கட்சிகளின் வழுவல்கள், தோல்விகளை முன்வைத்து சமூக இயக்கங்களை கொச்சைப்படுத்துவது, முத்திரை குத்துவதென்பது வக்கிரத்தின் வெளிப்பாடு. எடப்பாடி ஆட்சியில் சட்டை கசங்காமல் பாதுகாக்கப்பட்டவர், திமுக ஆட்சியிலும் சட்டை கசங்காத வாய்சவடால் அரசியலை செய்பவர்கள், இக்கட்சிகளின் சறுக்கல்களை, மக்கள் இயக்கங்களுக்கு எதிராக திருப்புவதை இயக்கங்கள் இனிமேல் வேடிக்கை பார்க்க இயலாது.
https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthirumurgangandhimay17%2Fposts%2Fpfbid05fyAarx7AKcao5YxwEq7Y66TDRh1SemBsnHZGcd7schQZa8ArAGYJn2FAsHiedhcl&show_text=true&width=500&is_preview=true