பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு! கொலை முயற்சியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்
உத்தரப் பிரதேசத்தில் பீம்ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யும் முயற்சி நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. இதில் சந்திரசேகர் ஆசாத்தின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான இந்த தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரில் ஒரு நிகழ்வில் பங்கேற்று சந்திரசேகர் ஆசாத் அவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஹரியானா பதிவு எண் கொண்ட காரில் பின்னால் வந்த நபர்கள் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் ஒரு குண்டு கார்கண்ணாடியைத் துளைத்துக்கொண்டு சந்திரசேகர் ஆசாத் அவர்களைத் தாக்கியுள்ளது. அவர் சுதாரித்துக்கொண்டதால் காயத்துடன் தப்ப முடிந்துள்ளது.
சந்திரசேகர் ஆசாத் அவர்கள் உத்தரப் பிரதேச அரசியலில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். ஒடுக்கப்பட்ட தலித் சமூக மக்களின் உரிமைக்காகத் தீரத்துடன் போராடி வருகிறார். அவரது செயல்பாடுகள் ஆதிக்க சாதியினருக்கும் சனாதன விரும்பிகளுக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அவரது இந்த செயல்பாடுகள் மூலம் அவருக்கு பல்வேறு மாநிலங்களில் ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்தியநாத் தலைமையில் நடைபெறும் காட்டுமிராண்டி ஆட்சியில், சந்திரசேகர் ஆசாத் அவர்களின் முற்போக்கான அரசியல் செயல்பாடு, அவர் மீதான இந்த தாக்குதலுக்குக் காரணமாக அமைந்திருக்கக் கூடும். இதற்கு முன்னரும் அவர் மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. தற்போது உயிருக்குப் பாதிப்பில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது.
சந்திரசேகர் ஆசாத் அவர்கள் மீதான இந்த கொலை முயற்சி தாக்குதல், பாசிச வாதிகளை அவர் செயல்பாடுகள் மிகவும் பாதித்துள்ளதையே காட்டுகிறது. இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்கள் சந்திரசேகர் ஆசாத் போன்ற செயல்பாட்டாளர்களை எந்தவிதத்திலும் அச்சுறுத்திவிடாது. பாசிசத்தின் இந்த கொடூரச்செயல் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. முற்போக்கு ஜனநாயகவாதிகள் அனைவரும் இச்சம்பவத்தைக் கண்டிக்க வருவதோடு, பாசிசத்திற்கு எதிராக அணிதிரள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.