பாஜக வெற்றியின் பின்னணியில் வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு

இந்தியாவில் அரசியலமைப்பு பிரிவு 324(1)இன் படி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதும், தேர்தலை நடத்துவதும், அதைக் கட்டுப்படுத்துவதுமான பெரும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ‘எந்தவித பாரபட்சமும் இல்லாமல் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்’ என்பது தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை. ஆனால் இந்தக் கடமைக்கு நேரெதிரான நோக்கில் ‘வாக்காளர் பட்டியல் திருத்தம்’ எனும் Special Intensive Revision (SIR) செய்ததன் மூலம் தேர்தல் ஆணையம் இப்போது நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குள்ளாகி இருக்கின்றது. தற்போது பீகாரின் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது மட்டுமல்ல, இதற்கு முன்னரும் பாஜகவிற்கு ஆதரவான தேர்தல் முடிவுகள் வெளி வந்ததற்கான காரணிகள் அம்பலமாகி இருப்பதுதான் இந்த சர்ச்சைக்குக் காரணம். 

உலகளவில் தேர்தல்கள் எவ்வளவு சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுகின்றன என்பதை V-Dem எனும் ஸ்வீடன் நிறுவனம் ஆண்டுதோறும் குறியீட்டுப் புள்ளிகளாக வெளியிடும். அண்மையில் இந்தப் புள்ளிப்பட்டியலில் இந்தியா பல இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது. 2014இல் 0.62 இலிருந்த இந்தியா 2024இல் 0.4ஆகக் குறைந்துள்ளது. இந்த V-Dem நிறுவனம் மட்டுமின்றி ஜனநாயகத்திற்கான வாக்கு (Vote for Democracy-VFD) எனும் அமைப்பும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) போன்ற அமைப்புகளும் பல ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து சந்தேகங்கள் எழுப்பியிருந்தன.

இந்தியா முழுவதுமே வாக்காளர் பட்டியல்களின் நம்பகத்தன்மை குறித்து சர்ச்சைகள் அடிக்கடி எழுந்துள்ளன. குறிப்பாக மோடி மூன்றாவது முறை பதவியேற்றதன் பின்னணியில் நாடாளுமன்றத் தொகுதிகள் பலவற்றின் தேர்தல் முடிவுகள் இந்த VFD, ADR அமைப்புகளால் ஆராயப்பட்டன. இந்த ஆய்வுகள் பல நகர்ப்புற வாக்காளர் பட்டியல்களில் 20 சதவிகிதம் பிழைகளும் பல கிராமப்புறங்களில் 10 சதவிகிதம் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டின. (வாக்காளர் பட்டியலில் பிழைகள் அதிகம் இருக்கும் தொகுதிகளை பாஜக தனக்கு சாதகமாக்கி கொண்டது குறித்து பின்னாளில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.)

இந்த அமைப்புகளைப் போன்றே பிரபல அரசியல் பொருளாதார நிபுணரும் எழுத்தாளருமான பரகலா பிரபாகர் 79மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் செய்தே பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததாகக் கூறினார். மேலும் “இந்தியாவின் வரலாற்றில் 1952 முதல் பதிவான வாக்குகளின் தற்காலிக மற்றும் இறுதி புள்ளிவிவரங்களுக்கு இடையிலான வித்தியாசம் ஒருபோதும் 1 சதவீதத்தைத் தாண்டவில்லை. ஆனால் 2024இல் இந்த வித்தியாசம் 12.5 சதவீதமாக இருந்தது” என்று அவர் கூறினார்.

இந்த விமர்சனங்களுக்கு தகுந்தவாறே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் இருந்தது. 2019க்கு முன்பு வரை, ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகளின் முழுமையான எண்ணிக்கையை சதவீத வாக்குப்பதிவுடன் சேர்த்து, வலைத்தளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனால் பதிவான வாக்குகளை எண்ணப்பட்ட வாக்குகளுடன் நேரடியாக ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. ஆனால் 2019க்குப் பிறகு, அந்த நடைமுறை மாறியது.

2019க்குப் பிறகு முழுமையான வாக்குப்பதிவை வெளியிடாமல் வாக்குப்பதிவு சதவீதங்களை மட்டுமே வழங்கியது தேர்தல் ஆணையம். முழுமையான வாக்கு எண்ணிக்கை பல வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகே வெளியிடப்பட்டது. அதுவும் ஊடகங்களோ நீதிமன்றமோ அழுத்தம் கொடுத்த பிறகே முழு எண்ணிக்கையும் வெளியிடப்பட்டது.

2024 முதல் கட்ட தேர்தலின் இறுதி புள்ளிவிவரங்கள் 15 நாட்களுக்குப் பிறகே வெளியிடப்பட்டன. இந்த காலதாமதம் கிட்டத்தட்ட 79 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ஒடிசா மற்றும் ஆந்திராவில் 12.5 சதவீதம் கூடுதல் வாக்குகள் வந்ததால் சுமார் ஐந்து கோடி கூடுதல் வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன.

2024 தேர்தலில் தேர்தல் ஆணையம் கூறிய முன்பின் முரணான வாக்குப்பதிவு எண்ணிக்கை வித்தியாசங்கள் மட்டுமல்ல, வாக்குப்பதிவு எந்திரத்தில் போடப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையும், வாக்குகள் எண்ணும் போது கிடைத்த எண்ணிக்கையும் கூட வெவ்வேறாக இருந்திருக்கின்றன. இதனால் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பல இடங்களில் பாஜக கூட்டணி வென்றுள்ளது. (இது குறித்து கடந்த ஆண்டே மே பதினேழு இயக்கக்குரலில் கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தற்போது ஆர்டிகள்-14 இணையதளம் தேர்தல் ஆணையத்தை நோக்கி மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 140 மக்களவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருந்ததாக ஆர்டிகள்-14 கூறுகின்றது.

2024இல் தேர்தல் ஆணையத்தின் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை மூலம் ஆணையத்தின் ‘பாஜக ஆதரவு’ மேலும் வெளிப்பட்டிருக்கிறது. பீகாரில் இந்த பட்டியல் திருத்தம் முழுவதுமே எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் விதத்தில் அமைந்தது. தேர்தல் ஆணையத்தை கருதுகோளாகப் பயன்படுத்தி, மக்கள் கடுமையாக எதிர்த்த NRC-ஐ (National Register of Citizens) பின்வழியாக கொண்டுவர முயற்சித்தது பாஜக. இதனால் பீகாரில் 2003 வாக்காளர் பட்டியலில் இருந்த 65லட்சம் பேருக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தனர். இந்த 65லட்சம் மக்களில் 22லட்சம் மக்கள் இறந்தவர்களாகவும் 36லட்சம் மக்கள் காணாமல்  போனதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

2024 ஜூன் மாதத்தில் பீகார் வாக்காளர் பட்டியலில் 7.89 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், சிறப்பு தீவிர மறுஆய்வில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு 7.24 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு (ஒரு ஆண்டிற்குள்ளாகவே) 22 லட்சம் மக்கள் இறந்துவிட்டதாக நம்பமுடியாத ஒரு தகவலை தேர்தல் ஆணையம் கூறியது. ஆணையத்தின் இந்த முரணான தகவலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்கள் எவ்வாறு தவறாக நீக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்ட சமூக ஆர்வலரும் ‘பாரத் ஜோடோ அபியான்’ அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான யோகேந்திர யாதவ் நீதிமன்றத்தில் இரண்டு பேரை ஆஜர்படுத்தினார். இவர்கள் இருவரையும் ‘இறந்துவிட்டதாகக்’ கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிப்பு விகிதத்தை கணக்கில் கொண்டால், வாக்காளர் பட்டியல் மறு ஆய்வின்போது கணிசமாக வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ஆனால் சர்ச்சைக்குரிய வகையில் பீகாரில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2025 ஜூலையில் பீகாரின் வயதுவந்தோர் (Adult) மக்கள்தொகை 8.18கோடி என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் 7.24கோடி பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதிலிருந்து, உண்மையாக நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 லட்சம் அல்ல, 94 லட்சம் என்றும் யோகேந்திர யாதவ் அம்பலப்படுத்தியுள்ளார்.

மேலும் வெவ்வேறு குடும்பங்கள், சாதிகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த பல வாக்காளர்கள் ஒரே வீட்டில் வசிப்பதாக தேர்தல் ஆணையம் பதிவு செய்த அவலமும் நடந்தது. ஐநூறுக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஒரே வீட்டின் முகவரியைக் கொடுத்து அவர்களை வாக்காளர்களாக பதிவு செய்திருந்தது.

வாக்காளர் அதிகமாக நீக்கப்பட்ட 10 மாவட்டங்களில், ஐந்து மாவட்டங்கள் இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்கள் என்று ‘இந்தியா டுடே’ பத்திரிக்கை தன்னுடைய ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறது. இசுலாமியரைப் போலவே யாதவ் சமூக வாக்குகள் நீக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மாநில கட்சிகள் (அவை பாஜக கூட்டணியில் இருந்தாலுமே) தங்கள் வாக்கு வங்கியை இழக்கின்றன.

இவ்வாறு முறையான ஆவணங்கள் வைத்திருந்த பலர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, பல குளறுபடிகளுடன் பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றிருக்கிறது. பல அதிகாரமிக்க அரசு இயந்திரங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஜக, தேர்தல் உத்திகள் மூலம் தன் ‘ஒரே நாடு – ஒரே கட்சி’ இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறது.

வடஇந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக வலுப்பெறவும் கூட்டணி ஆட்சியமைக்கவும் இந்த தேர்தல் உத்தியே வெளிப்படையான காரணமாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக மத்தியப்பிரதேசத்தில் பாஜக செல்வாக்கு பெற்ற கட்சியாக இருப்பது தேர்தல் ஆணையத்துடன் தொடர்புப் படுத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டு முதல் 2024பொதுத் தேர்தல் வரை மத்தியப்பிரதேசத்தின் தொகுதிகள் பலவற்றில் எண்ணப்பட்ட வாக்குகள் பதிவான வாக்குகளை விட அதிகமாக இருந்திருக்கின்றன.

மத்தியப்பிரதேசத்தைப் போலவே மகாராஷ்டிராவிலும் நடந்தது. கடந்த ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியான ‘மகாயுதி’ தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அப்போதும் தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து பல அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.

இப்போது பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அவசர அவசரமாக வாக்காளர் பட்டியலைத் திருத்தி இருக்கிறது தேர்தல் ஆணையம். அதே வேளையில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் செய்து 65 லட்சம் வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்கு செலுத்தும் உரிமையை வழங்கப் போவதாக வெளிவந்த செய்திகள் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன.

அண்மையில் ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ நடத்திய ஆய்வில் உத்தரபிரதேசத்தில் வசிக்கும் 5,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பீகாரின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதே வழியைப் பின்பற்றி தமிழ்நாட்டைக் கைப்பற்றும் திட்டத்தை பாஜக மேற்கொள்ளலாம் என்று சர்ச்சைகள் எழுந்தன.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 67.74 லட்சம் வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக கட்டுமானம், உற்பத்தி, ஜவுளி போன்ற துறைகளில் பணிபுரிவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் (பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலிருந்து) புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். குறிப்பாக சென்னை மற்றும் கோவையில் இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் இவர்களுக்கு சாதகமாகவே ஒரே நாடு-ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசு. இப்போது வடமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையும் கொடுத்து சென்னை மற்றும் கோவை பகுதிகளை பாஜகவின் கோட்டையாக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

இந்த ஆபத்தை உணர்ந்த மாநில கட்சிகள் இதை எதிர்த்தன. பாஜக கூட்டணிக் கட்சியான அதிமுகவோ ‘குளறுபடியற்ற வாக்காளர் பட்டியல் வேண்டும்’ என்று பெயரளவில் கூறிவிட்டு மீண்டும் பாஜக ஆதரவு பார்ப்புரையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விட்டது.

தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது பாஜக. இதற்கு வாய்ப்பாக 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு உட்பட தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களை தீவிரமாக திருத்த உள்ளது தேர்தல் ஆணையம். “இந்தியாவில் எந்தவொரு குடிமகனுக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது, இந்த அரசியலமைப்பின் கீழ் வாக்காளர் பட்டியலில் சேர அவருக்கு உரிமை உண்டு” என்ற அண்ணல் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை சிறுகச் சிறுக தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

https://may17kural.com/wp/did-modi-win-because-the-mistakes-made-by-election-commission/)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »