தலைமுறைகளை மாற்றிடும் சினிமா
அமெரிக்க ஆளும் வர்கத்தின் “சிவப்பு அச்சம்” காரணமாக மாறிமாறி கடைபிடித்த “கம்யூனிச நீக்கம்” கொள்கை இன்று வரை அச்சமூகத்தில் நீடித்து வருகிறது. குடியரசு கட்சி, சனநாயக கட்சி என இரு ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்சிகளே அமெரிக்காவின் அரசியலை நிர்ணயித்து வருகின்றன. உழைக்கும் எளிய மக்களுக்கான “இடதுசாரி” அரசியலை பேசுவதற்கான வெளி அமெரிக்க வெகுமக்களிடையே உயிர்ப்பிக்கவில்லை. “இடதுசாரி” அரசியல் கருத்து வளர்ந்திட சமூக காரணிகள் அமெரிக்காவில் இருந்தபோதும் ஆளும் வர்கம் “கம்யூனிச ஒவ்வாமை”யை வெற்றிகரமாக எவ்வாறு வளர்த்து வருகிறது என்பதை நாம் ஏற்கனவே, “சாப்ளினை வெளியேற்றிய அமெரிக்கா” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் கண்டோம்.
அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தினர் 1930களில் ஹாலிவுட் சினிமாக்கள் மூலம் விதைத்த “கம்யூனிச ஒவ்வாமை” பலதலைமுறைகளை கடந்து இன்றளவும் தொடர்கிறது. அதேபோல, உலகெங்கும் ஏற்றுமதியாகும் ஹாலிவுட் சினிமாக்கள் அந்த ஒவ்வாமையை சர்வதேச நாடுகளில் தொடர்ந்து விதைத்து வருகின்றன.
ஹாலிவுட்டை அடுத்து, உலகின் பெரிய சினிமாத்துறை இந்தியாவில் தான் உள்ளது. இந்திய மக்களின் முதன்மை பொழுதுபோக்கு சினிமா தான். அதை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டால் 140 கோடி மக்களின் கருத்துக்களை இந்துத்துவத்தை ஏற்கும்படி எளிதில் நகர்த்திவிடலாம் என்று ஆர்.எஸ்.எஸ். கனவு கண்டு வருகிறது.
சினிமாவின் சமூக தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கு இந்தியாவில் தமிழ்நாட்டின் அரசியல் களத்தைவிட மிக பொருத்தமான உதாரணம் இருந்திட முடியாது. ஆங்கிலேய காலத்தில் தென்னிந்தியாவில் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த சினிமாத்துறை அபார வளர்ச்சி அடைந்தது. சுதந்திரத்திற்கு பிறகான தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிப்பதில் சினிமாத்துறை முக்கிய பங்காற்றியுள்ளது. தமிழ்நாட்டில் தோன்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய திராவிட கட்சிகளின் கொள்கையான தந்தை பெரியாரின் திராவிட கருத்தியலை வெகுமக்களிடையே கொண்டு சென்றதில் தமிழ் சினிமாவின் பங்கு அளப்பரியது.
தமிழநாட்டில் திராவிட இயக்கத்தின் சுயமரியாதை, சமூக நீதி, மகளிருக்கு சமஉரிமை, பார்ப்பனிய எதிர்ப்பு போன்ற முற்போக்கு கருத்துக்களை வெகுமக்களிடையே விதைத்ததில் நாடகம் மற்றும் திரைப்படங்களுக்கு பெரும்பங்கு உள்ளது. கலை இலக்கியம், சினிமாத்துறையில் எழுத்தாளர்களாக, கதையாசிரியர்களாக, இயக்குநர்களாக பல வழியில் திராவிட இயக்க சிந்தனையாளர்கள் தமிழ் சமூகத்திற்கு பங்களித்துள்ளனர்.
குறிப்பாக, நடிகவேள் எம்.ஆர்.ராதா திராவிட கழகத்தின் அரசியல் சோர்ந்துபோகாமல் திரைப்படங்கள் வாயிலாக வெகுமக்களிடையே கொண்டு சேர்த்ததில் மிக முக்கியமானவர்.
“இரத்தக்கண்ணீர்” திரைப்படத்தின் மூலம் ஆதிக்க பண்ணையார் தன்மை, தனிநபர் ஒழுக்கம், பெண் உரிமை குறித்து அக்கால சமூக பிற்போக்கு சிந்தனைகளை தகர்த்திடும் வகையில் நடித்திருந்தார். அவர் நடித்த “தூக்கு மேடை”, “ராமாயணம்”, “தசவதாரம்” போன்ற நாடகங்கள் ஆளும் பார்ப்பனிய சனாதானிகள் நிலைகுலைய வைத்தது. “கள்ளு குடிக்கும் ராமனுக்கு மதுவிலக்கு உள்ள பிரேதேசத்திலே என்ன வேலை?” என்று தமிழ்நாட்டில் உள்ள ராமன் சிலைக்கு எதிராக வசனம் பேசினார். காவல்துறை கைது செய்தபோதும் ராமன் வேடத்தை கலைய மறுத்து கையில் கள்ளு குவளையும், வில்லும் ஏந்தியவாறு காவல் நிலையத்திற்கு நடந்தார். கைதுக்கு, சிறைக்கும் அஞ்சிடாத பெரியாரின் போர்வாள்!
ஒரு சமூகத்தில் பரவலான கருத்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய “வெகுசன ஊடகம்” சினிமா. நாஜி கட்சியின் “யூத வெறுப்பு, ஆரிய பேரினவாத” திரைப்படங்கள், ஹாலிவுட் நிறுவனங்களின் “கம்யூனிச ஒவ்வாமை” திரைப்படங்கள் மற்றும் தமிழ்நாட்டின் “சமத்துவம், சமூக நீதி” திரைப்படங்கள் போன்றவை இதற்கு வரலாற்று சான்றுகளாக விளங்குகின்றன.
இந்துத்துவவாதிகளின் நடவடிக்கைகளை இந்த பின்னணியில் இருந்து அணுகினால் அவர்களின் நோக்கத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
இந்துத்துவ கும்பலின் அராஜகம்
“தீபிகா படுகோன் மூக்கையும் காதையும் அறுத்து கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும்” என்று “பத்மாவதி” (2018) என்கிற இந்தி திரைப்படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனுக்கு எதிராக சத்ரிய மகாசபா பொங்கியது. இந்து பெண்களை இழிவு செய்திடும் வகையில் நடித்துள்ளதாக அவர் மீது இந்துத்துவ அமைப்புகள் வன்மத்தை உமிழ்ந்தன.
2018 இறுதியில் “கேதர்நாத்” என்னும் இந்தி திரைப்படத்தில் இசுலாமிய ஆணும் இந்து பெண்ணும் காதலிப்பதாக வரும் காட்சிகள் லவ் ஜிகாதை ஆதரிப்பதாக உள்ளது. ஆகையால், அந்த திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். போராட்டம் நடத்தியது.
இந்த திரைப்படங்கள் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் நபர்கள் தலைமை தாங்கி வரும் மத்திய திரைப்பட சான்றிதழ் வழங்கும் ஆணையத்தின் கடுமையான தணிக்கைக்கு உட்பட்டு வெளியானவை. இவ்வாறு சான்றிதழ் பெற்று வெளியான திரைப்படங்களை தான் தடை செய்திட வேண்டும் என்று வலதுசாரி இந்துத்துவ கும்பல்கள் குதித்தன. முற்போக்கு கருத்துக்கள், பெண் உரிமை, சனாதன இந்துத்துவத்தை கேள்வி எழுப்புவது, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக பேசுவது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தன. அதேவேளை, சனாதன பெருமை வரலாறு, ஆணாதிக்க இந்துத்துவ ஆதரவு, இசுலாமிய வெறுப்பு திரைப்படங்களை கொண்டாடின.
இதே எதிர்ப்பை நெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஓ.டி.டி. (OTT) இணையவழி தளங்களில் வெளியாகும் தொடர்களுக்கும் தெரிவித்தன. லெய்லா, செக்ரெட் கேம்ஸ், பாதாள் லோக், தாண்டவ் போன்ற பல இந்தி தொடர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாதாள் லோக் தயாரிப்பாளரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து மிரட்டி வந்தனர். தாண்டவ் தொடர் தயாரிப்பாளர்கள் மீது அரசு வழக்கையும் பதிவு செய்தது. 2000 ஆண்டுகள் முந்தைய சிந்தனைகளில் தேங்கிப்போன இந்துத்துவ கும்பல்கள் நடத்தும் போராட்டங்களை காரணம் காட்டி, கடந்த ஜூன் மாதம் “ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா 2021” (Cinematograph (Amendment) Bill 2021) என்ற மசோதாவை மோடி அரசு அறிவித்துள்ளது.
இந்துத்துவ அரசின் அராஜகத்தையும் வன்மத்தையும் முதுகெலும்பு கொண்டு கேள்வி கேட்கும் திரைத்துறையினர் இந்தியா முழுவதும் வெகு சிலரே உள்ளனர். அவர்களை எல்லாம் இந்துத்துவ கும்பலும் மோடி அரசும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கி வருகின்றனர்.
நடிகர் தாப்சி பன்னு மற்றும் இயக்குநர் அனுராக் காஷியப் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் முடக்கி மூன்று நாட்களுக்கு மோடி அரசு வருமான வரி சோதனை நடத்தி மிரட்டியது. அதையும் கடந்து அவர்கள் தைரியமாக மோடியின் பாசிசத்திற்கு எதிராக தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடிகர்கள் சூர்யா, சோதிகா, சத்யராஜ், சித்தார்த், விஜய் சேதுபதி போன்றவர்கள் இந்துத்துவ பாசிச அரசியலுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இந்துத்துவ கும்பல் இவர்கள் மீது கடுமையான அவதூறுகளையும், வன்மத்தையும் பரப்பி வருவதையும் கடந்து உறுதியாக நிற்கிறார்கள். இது போன்ற எதிர் குரல்களை இந்தியா முழுவதும் முற்றிலும் முடக்கிட வசதியாக தான் மோடி அரசு ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா மூலம் புதிய சட்டத்தை கொண்டு வருகிறது. எதிர் கருத்துக்கள் தெரிவிக்கும் கலைஞர்களின் படைப்புகளை தடை செய்திட இச்சட்டம் ஏதுவாக அமையும்.
இந்த ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா கொண்டு வருவதற்கு முன்பாகவே, தணிக்கை துறையிலும் ஒரு மாற்றத்தை மோடி அரசு உருவாக்கியது. இதுவரை, தணிக்கை துறை சான்றிதழ் ஒப்புதல் பெறுவதில் முரண்பாடு இருந்தால், ‘திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்’ சென்று மேல்முறையீடு செய்து ஒப்புதல் பெற முடிந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த தீர்ப்பாயத்தை மோடி அரசு கலைத்தது. தணிக்கையின் போது ஏற்படும் முரண்பாடுகளை இந்த தீர்ப்பாயம் விரைவாக களைந்து வந்தது. தற்போது இந்த தீர்ப்பாயம் கலைக்கப்பட்டதன் மூலம், திரைப்பட தயாரிப்பாளர்கள் தணிக்கை தொடர்பான பிரச்சனைகளை சாதாரண நீதிமன்றங்கள் அல்லது உயர்நீதிமன்றங்கள் மூலமாக களைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவாக களையப்பட்ட பிரச்சனைகள் இனி களையப்படுவதற்கு நீண்ட காலங்கள் எடுத்துக்கொள்ளப்படும். ஏற்கனவே நீதிமன்றங்களில் வழங்குகள் தேங்கியுள்ள நிலையில், திரைப்படங்கள் தணிக்கை தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களின் வேலைப்பளுவை அதிகரிக்கும். இதனால், நீண்ட காலமாக நீதியை எதிர்நோக்கி காத்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கான நீதி கிடைப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலையை மோடி அரசு உண்டாக்கியுள்ளது.
இப்படியான சூழலில், கடந்த ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட, “ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா 2021” (Cinematograph (Amendment) Bill 2021) என்ற மசோதாவின் படி, இனி திரைப்படங்கள் மீதான இறுதி முடிவை தனது அரசு மட்டுமே எடுத்திடும் என்று அறிவித்தது. அரசின் முடிவே இறுதியானது என்றும் அதில் நீதிமன்றங்களுக்கும் தலையிடும் உரிமையில்லை என்றும் அறிவித்தது. அதாவது, தணிக்கைத் துறையின் அனுமதி பெற்றிருந்தாலும், அல்லது நீதிமன்றத்தின் அனுமதி பெற்றிருந்தாலும், திரையரங்குகளில் திரைப்படம் வெளியான பின்பும், ஒன்றிய அரசு முடிவு செய்தால் அந்த திரைப்படத்தை தடை செய்ய முடியும். அவ்வாறான தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் முடியாது. இதனால், இந்துத்துவ கருத்தியலுக்கு எதிரான முற்போக்கு திரைப்படங்களை மோடி அரசு தடை செய்யும் பாசிச சூழல் ஏற்பட்டுள்ளது.
மோடி அரசின் இந்த சட்டம், கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என திரைப்படத் துறையினர் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது திரைப்படத் துறையினர் மீது விழுந்துள்ள மிகப்பெரிய அடி என்று இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறையை சேர்ந்த 1400-க்கும் மேற்பட்ட திரைப்படத் துறையினர் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சனநாயகத்தின் சுவாச காற்றாக இயங்கும் பத்திரிகை ஊடகங்களை சந்திக்க மறுப்பதில் தொடங்கி, தனது கருத்துக்களுக்கு எதிர் கருத்து வருவதை முடக்கி வைப்பதால் மடிந்து போகும் சனநாயகத்தின் அழுகளில் முளை விடுகிறது பாசிசம்.
எதிர் கருத்துக்களுக்கான வெளியை பாசிஸ்டுகள் இயல்பாகவே மறுப்பார்கள் என்று வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. வெகுசன ஊடகமான திரைப்படங்கள் வாயிலாக வெகுமக்களிடம் சென்றடையும் எதிர் கருத்துக்களின் தாக்கத்தை பாசிஸ்டுகள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். தனது நாஜி கட்சியின் அரசியலை ஜெர்மன் மக்களிடம் பிரச்சாரம் செய்திட ஹிட்லர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களை தயாரித்தான். அப்படி தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட நாஜி திரைப்படங்கள், கருத்தை உயிர்ப்பித்துவிடக்கூடாது என்பதற்காக, அனைத்தும் பின்னர் தடை செய்யப்பட்டுவிட்டன.
சித்தாந்த சண்டை
பொதுமக்களுக்கு நாட்டு நடப்புகளை, அரசியல் செய்திகளை அன்றாடம் தெரிவித்து வருபவை பத்திரிகை ஊடகங்கள். அவற்றின் உரிமம் ரத்து செய்வது, ஒளிபரப்பிடும் அலைவரிசையை மாற்றுவது போன்ற நெருக்கடிகள் மூலம் இறுக கட்டுப்படுத்தி, எதிரான கருத்துக்களை முடக்கி, மக்களிடம் தனக்கு சாதகமான சமூக கருத்தை அரசால் உருவிக்கிட முடியும்.
2014ல் ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளில் மோடி அரசு பத்திரிகை ஊடகத்துறையை கைப்பற்றியது. இடதுசாரி கருத்து பேசும் பத்திரிகை ஊடகங்களின் உரிமம் ரத்து செய்வது, பொய் வழக்குகள் தொடுத்து முடக்குவது, முற்போக்கு சிந்தனையாளர்களை பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதனையடுத்து, சமூக வலைத்தளத்தை கட்டுப்படுத்துவதில் வெற்றியை கண்டுவிட்டது.
ஏற்கனவே, முகநூல் வலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான காரணத்தால் ட்விட்டர், வாட்சப் கட்டுப்படுத்துவதில் மட்டும் மோடி சற்று தடுமாறினார். ஆனால், தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021 (Information Technology (Guidelines for Intermediaries and Digital Media Ethics Code) Rules 2021) கொண்டு வந்து அவற்றை ஒடுக்குவதில் வெற்றியும் கண்டுவிட்டார். இதே சட்டத்தின் கீழ் நெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற “ஓவர் தி டாப்” (OTT) எனப்படும் இணைய வழி சினிமா திரையிடும் தளங்களையும் கட்டுப்படுத்திவிட்டார். எஞ்சி இருப்பது கலை இலக்கியம், சினிமாத்துறை மட்டுமே.
பத்திரிகை ஊடகம், சமூக வலைத்தளம் கடந்து வெகுமக்களிடம் மிகவும் நெருக்கமாக சென்றடைவது சினிமா திரைப்படங்கள். மற்ற எதையும் விட ஒரு திரைப்படம் வாயிலாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடம், வெகுமக்களிடம் உணர்ச்சிகளுடன் கூடிய கருத்துக்களை மிக எளிமையாக கடத்திவிட முடியும். இதை நன்கு உணர்ந்ததால் தான் உலகமெங்கும் பாசிஸ்டுகள் எதிர் கருத்துடைய திரைப்பட கலைஞர்களை முடக்கி வருகிறார்கள்.
அமெரிக்காவின் பத்திரிகை ஊடகம், கலை இலக்கியம், சினிமா என்று அனைத்திலும் இருந்து 1950களில் முதலாளித்துவத்தின் மெக்கார்தியிசம் மூலம் நீக்கப்பட்ட இடதுசாரி சிந்தனைகள் இன்றுவரை மீண்டும் துளிர்விடவில்லை. அமெரிக்காவில் தொழிலாளர்கள், ஏழைகள் நிரம்பவே உள்ளனர். ஆனால், அவர்களுக்கான அரசியல் கருத்துகள் அச்சமூகத்தில் வளரவிடாமல் இரு அமெரிக்க கட்சிகளும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதே சூழலை தான் மோடி அரசு இந்தியாவில் நிறுவிட நினைக்கிறது. இந்திய சமூக சிந்தனையில் இருந்து “முற்போக்கு இடதுசாரி” கருத்துக்களை அறவே ஒழித்திட துடிக்கிறது.
கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக பார்ப்பனிய பேரினவாதம் முடக்கப்பட்ட அரசியல் களமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் திராவிட இயக்க அரசியல் இந்த சமூகநீதி அரசியல் களத்தை நிறுவியது. இன்று, இந்தியா முழுவதும் “இந்துத்துவ” பார்ப்பன சனாதனம் பாகாசுரனாக எழுந்து நிற்கும் போதும் திராவிட இயக்க அரசியல் அரணாக நின்று தமிழ்நாட்டை பாதுகாத்து வருகின்றது.
திராவிட இயக்க அரசியலின் காரணமாகவே தமிழ்நாட்டின் சமூக வளர்ச்சி மேற்குலக நாட்டிற்கு இணையாக உள்ளதாக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்தியா சென் பாராட்டியுள்ளார். இத்தகைய, வெகுமக்களின் அரசியலான “திராவிட சித்தாந்தம்” தான் “இந்துத்துவ” பார்ப்பனியத்தை வீழ்த்தக்கூடிய அரசியலாக இருக்கக்கூடும் என்று இந்தியாவின் பிற மாநிலங்களும் பேசத் தொடங்கியுள்ளன. இந்த பேச்சு இந்திய சனாதானிகள் வயிற்றில் புளியை கரைக்கிறது.
இதன் காரணமாக, ஆர்.எஸ்.எஸ் சனாதன கும்பல்கள் திராவிட சித்தாந்தத்தை துணைக்கண்ட நிலப்பரப்பில் இருந்து முற்றிலும் துடைத்தெறிய துடிக்கின்றனர். தங்கள் இந்துத்துவத்தை தோலுரித்து காட்டிடும் திராவிட சிந்தனைகளை அடுத்த தலைமுறையிடம் சென்றடைய அனுமதித்திடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்.
சித்தாந்த நீக்கம்
1980ல் சோவியத் சிதறுண்டு போனாலும் இன்றுவரை அமெரிக்காவில் இடதுசாரி கம்யூனிச கருத்து மைய அரசியல் விவாதங்களில் தோன்றிட முடியவில்லை. “இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் அமெரிக்காவின் சனநாயகத்தையும், சமூக பொருளாதார வளர்ச்சியையும் சீரழித்திடும் தேச துரோகிகள்” என்ற கருத்திலே அமெரிக்கர்களின் மைய நீரோட்ட சிந்தனை பல தலைமுறைகளாக தேங்கிப்போய்விட்டது. இதற்கு அடித்தளமிட்டது 1940கள் முதல் அமெரிக்காவில் தொடர்ந்து விதைக்கப்பட்டு வரும் இடதுசாரி சிந்தனைக்கு எதிரான அவதூறு பிரச்சாரம். அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளை மீட்கவல்ல “இடதுசாரி” அரசியலை தாங்களே வெறுத்து ஒதுக்குவது தான் மெக்கார்த்தியாசத்தின் பெரும் வெற்றி!
உலக ஏகாதிபதியத்தையும், முதலாளித்துவ சுரண்டலையும் அடிப்படை கொள்கைகளாக கொண்ட சனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியிடம் அமெரிக்காவின் உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக நீதிமன்றங்கள் வாயிலாக மன்றாடுவது தான் அச்சமூகத்தின் பெருந்துயரம். இந்த இரு கட்சிகளின் பிடியில் அமெரிக்காவின் தொழிலாளர் வர்கம் சிக்கியுள்ள வரை அமெரிக்காவின் உலக ஏகாதிபத்தியமும் ஓய்ந்திடப்போவதில்லை.
1940களில் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்ட சட்டங்களும் அதனை பின்தொடர்ந்த நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றத்தை, இந்துத்துவ மோடி அரசு அறிவித்துள்ள சட்டங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உருவாக்கிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
“தீவிர” மற்றும் “நடுநிலை” முதலாளித்துவ ஏகாதிபத்தியம் என்கிற இரண்டு அரசியல் கதையாடலை கடந்து இடதுசாரி அரசியல் கருத்து அமெரிக்க வெகுமக்களிடம் நுழைய முடியவில்லை. இதே, யுக்தியை பின்பற்றி “தீவிர” மற்றும் “நடுநிலை” முதலாளித்துவ இந்துத்துவம் என்கிற சமூக அரசியல் கதையாடலை இந்தியாவில் நிறுவிட மோடி அரசு முனைவதாகவே நாம் நோக்கிட வேண்டியுள்ளது.
இந்திய துணைக்கண்டத்தின் முதன்மை முரணான சனாதன பார்ப்பனிய பேரினவாதத்துடன் சமர் செய்து வாகை சூடிய வரலாறு திராவிட இயக்க அரசியலையே சேரும். அப்படியான “திராவிட இயக்க அரசியல் நீக்கம்” தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிகழ்ந்துவிட்டால் தமிழ் சமூகம் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச்செல்லப்படும் என்பதில் ஐயமில்லை. ஒட்டுமொத்த இந்தியாவும் இருளில் மூழ்கும்.
பல தலைமுறைகளாக தங்கள் விடுதலை அரசியலை அடையாளம் காணமுடியாத அமெரிக்க தொழிலாளர்களை போல தமிழர்களின் எதிர்கால தலைமுறைகளும் மாற்றப்படும். தமிழ் சமூகத்தின் அடுத்த நூறாண்டு எதிர்காலத்தை வரையறை செய்திடும் வரலாற்று திருப்புமுனையில் நாம் இன்று நிற்கின்றோம்!
இந்த கட்டுரையின் முதலாம் பாகம், “சாப்ளினை வெளியேற்றிய அமெரிக்கா” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.