தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளில் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளையொட்டி, செப்டம்பர் 17, 2025 அன்று மே பதினேழு இயக்கத்தின் சார்பாக சென்னை ஜாபர்கான்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை:

”வீழட்டும் சனாதனம்! எழட்டும் திராவிடம்! வெல்லட்டும் தமிழ் தேசியம்!” என்கின்ற முழக்கத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக தந்தை பெரியாரினுடைய பிறந்தநாள் முழக்கமாக முன்வைத்து மே 17 இயக்கம் தமிழ்நாட்டினுடைய பல்வேறு நகரங்களில் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய தந்தை பெரியாரினுடைய 147வது பிறந்தநாள் நிகழ்வில், பங்கெடுத்திருக்கக்கூடிய ம.தி.மு.கவின் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் மரியாதைக்குரிய மாமன்ற உறுப்பினர் தோழர். சுப்பிரமணியன் அவர்களுக்கும், இந்த மண்ணுடைய விடுதலைக்காக களமாடி சிறை சென்று இன்றைக்கு வெகுஜன அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கக்கூடிய விடுதலை தமிழ்ப்புலி கட்சியினுடைய பொதுச்செயலாளர் தோழர். ரேடியோ வெங்கடேசன் அவர்களுக்கும், எனக்கு முன்பு இங்கே எழுச்சியுரை நிகழ்த்தி இருக்கக்கூடிய மே 17 இயக்கத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் தோழர். பிரவீன்குமார் அவர்களுக்கும், நிகழ்வை ஒருங்கிணைக்கும் மே 17 இயக்கத்தின் தோழர். கொண்டல்சாமி அவர்களுக்கும், தொடக்க உரை ஆற்றிய தோழர். அசோக் குமார் அவர்களுக்கும், பெண்ணிடத்தினுடைய விடுதலைக்காக தந்தை பெரியாரின் சிந்தனைகளை பட்டியலிட்ட மே 17 இயக்கத்தின் மரியாதைக்குரிய தோழர். கீதா அவர்களுக்கும், இன்றைக்கு திராவிடம் எதிர்கொண்டிருக்கக்கூடிய நெருக்கடியையும் போலி தமிழ்தேசியவாதிகளினுடைய புரட்டுகளையும் அம்பலப்படுத்திய தோழர். திருமணி அவர்களுக்கும், இங்கே திரண்டிருக்கக்கூடிய பெருந்திரளான தோழமைகளுக்கும், மே 17 இயக்கத்தினுடைய எழுச்சிகரமான முழக்கங்களை பாடல்களாக எங்களது மேடைகளிலே பாடி கொண்டிருக்கக்கூடிய எங்கள் இளம் தோழர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தோழர்களே, மிக மகிழ்ச்சியான விடயம் – ஆறு/ ஏழு வருடத்துக்கு முன்பு பெரியாரினுடைய பிறந்த நாளை பெரும் நிகழ்வாக நடத்துவதற்கு பலர் தயங்கிக் கொண்டிருந்த காலத்தில், இன்றைக்கு சென்னையில் இந்த இடத்தில் பெரியார் பிறந்தநாள் நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி கிடைக்கிறது. அனைத்து இடத்திலும் தந்தை பெரியாரினுடைய பிறந்தநாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எங்கெல்லாம் அனுமதி தருகிறார்களோ, அந்த இடத்தில் எல்லாம் தந்தை பெரியாரினுடைய பிறந்தநாள் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த கூட்டங்களை நடத்துபவர்கள் எல்லாம் பெரிய அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அல்ல, அதிகாரத்தில் இருக்கக்கூடிய அமைப்புகளை சார்ந்தவர்கள் அல்ல, இவர்கள் மக்களிடத்தில் கருத்துக்களை சொல்லக்கூடியவர்கள். மக்களை அரசியல் படுத்தக்கூடியவர்கள். அவர்கள்தான் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான/ ஆயிரக்கணக்கான நிகழ்வுகளை தந்தை பெரியாரினுடைய பிறந்த நாளிலே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய எழுச்சி ஏற்பட்டதற்கு நாம் ஒரு வகையிலே பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், மறுபுறத்தில் நாம் தமிழர் கட்சியினுடைய சீமானுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த இரண்டு பொய்யர்களும் இல்லை என்றால் தந்தை பெரியாரை நாம் வீதிதோறும் பேச வேண்டிய தேவை வந்திருக்காது.

நமக்கும் இந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் வந்திருக்காது. இப்படிப்பட்ட ஒரு அற்புதமான இடத்தை நமக்கு தேடி கண்டுபிடித்து கொடுத்தவர் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர். இங்கே தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவினுடைய சிலைகள் இருக்கின்றன. இந்த தெருவில் நாம் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான சூழலை உருவாக்கியது ஒரு நாம் தமிழர் கட்சியினுடைய தம்பிதான். ஐந்து மாதங்களுக்கு முன்பாக, தந்தை பெரியாரின் சிலையை செருப்பால் அடித்து அவமானப்படுத்துவதாக நினைத்து, அங்கே இவர் செய்த அந்த செயலை கண்டு இப்பகுதி மக்கள் அவரை மடக்கிப் பிடித்து அவருக்கு உரிய வகையில் மரியாதை கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்களே, அந்த சம்பவத்தின் மூலமாகத்தான் இந்த இடத்தை நாங்கள் அறிந்து கொண்டோம். அந்த சம்பவத்திற்கு எதிர்வினையாக தோழர். சுப்பிரமணி அவர்கள் இங்கு ஒரு பெரும் எழுச்சிகரமான நிகழ்வையும் ஊர்வலத்தையும் பேரணியும் நடத்தி அச்சம்பவத்திற்கு பதிலடி கொடுத்தார். ஆனால் முக்கியமான விடயம் என்னவெனில், பெரியார் சிலையை அவமானப்படுத்த நினைத்த நபரை சாமானிய மக்கள் பிடித்துக் கொடுத்தார்கள். தமிழனுக்காக போராடி தன் உயிர் கொடுத்த தந்தை பெரியாரை இழிவுபடுத்துபவன் எவனாக இருந்தாலும், அவன் தமிழ்நாட்டிலே இந்த எதிர்ப்பை சாதாரண மக்களிடத்திலே எதிர்கொள்வான் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது. அதனால் இந்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் இங்கே நாங்கள் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இந்தப் பகுதி மக்கள் அந்த எழுச்சிகரமான எதிர்வினையாற்றிய அந்த நிகழ்வுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கூட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் நான் சீமானுக்கும் சொல்லிக் கொள்கின்றேன். உங்கள் தம்பிகளை தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பெரியார் சிலை இருக்கிறதோ, அங்கெல்லாம் அனுப்பி வையுங்கள். அங்கெல்லாம் எம் மக்கள் உரிய வகையிலே சீமானுக்கும் அவரின் தம்பிகளுக்கும் பாடம் புகட்டுவார்கள். அதன் மூலமாக இந்த மண் பெரியார் மண் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் என்பதை நான் சொல்லிக்கொள்கிறேன். சீமான் தொடர்ச்சியாக பொய் பேசிக் கொண்டிருந்த பொழுதெல்லாம் நாம் விளையாட்டாக கடந்து போனோம். ஆனால் என்றைக்கு தந்தை பெரியாரை பற்றி இழிவாக பேசுகின்ற ஒரு துணிச்சல் அவருக்கு வந்ததோ, மே 17 இயக்க தோழர்கள் கிளர்ந்து எழுந்தார்கள். அவர் வீட்டை முற்றியிடுகின்ற போராட்டத்தை நடத்தினோம். பொதுவாக ஒருத்தருடைய வீட்டை நாம் முற்றுகையிடுகின்ற பழக்கம் நமக்கு கிடையாது. அதற்கான தேவையும் கிடையாது. ஆனால் எங்கள் தந்தை பெரியார் சொல்லாத ஒன்றை சொல்லிவிட்டீர்கள், அதற்குரிய ஆவணத்தை/ ஆதாரத்தை வெளியிடுங்கள், நாங்கள் வெளிப்படையாக விவாதத்திற்கு வருகிறோம். நாம் விவாதித்து நீங்கள்(சீமான்) சொல்லுவது உண்மைதானா? இல்லையா? என்பதை மக்களிடத்தில் தெரிவிப்போம் என்று அறிவித்தோம். சீமான் 20 நாட்களாக எங்களது கேள்விக்கும் சவாலுக்கும் பதில் சொல்லாமல் பதுங்கி கிடந்தார். பதுங்கி கிடந்த பாம்பை எடுத்து வீதியிலே போட்டு அடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டிற்கு வந்தோம். அந்த வகையில்தான் சீமான் வீடு என்பது முற்றுகையிடப்பட்டது.

இன்றைக்கு தமிழ்நாட்டில் நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கிறோம். நம்முடைய அன்றாட சிக்கலை பற்றி நாம் பேசுவதில்லை. நம்முடைய சிக்கலுக்கு எல்லாம் என்ன காரணம்? எனில், தந்தை பெரியார் சொன்ன புத்தகத்தை எடுத்து படிக்கும் பொழுது அதற்கான விடை கிடைக்கிறது. நீங்கள் என்றைக்கு டெல்லிக்காரனிடம் மாட்டிக் கொண்டீர்களோ, அன்றையிலிருந்து உங்களுக்கு சனியன் தலையில் வந்து உட்கார்ந்து வருவதை போல, டெல்லியில் இருந்து நம்மையெல்லாம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றான். அந்த டெல்லி சனியனை விரட்டி அடித்தால் தமிழ்நாடு தழைத்தோங்கும் என்பதை இன்றைக்கு அல்ல 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சொல்லிவிட்டார்.

நாடெல்லாம் நாங்கள் விடுதலை அடைந்துவிட்டோம் என்று கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், தமிழனுக்கு இந்த விடுதலைப் பைத்தியம் பிடித்து விடக்கூடாது என்று வைத்தியம் பார்த்தவர் தந்தை பெரியார். ’சுதந்திரம் கிடைத்துவிட்டது என கொண்டாடி கொண்டு இருக்காதே, நீ இதன்பின்தான் மோசமான அடிமையாக மாறப்போகிறாய்’ என்று சுட்டிக்காட்டியவர் தந்தை பெரியார். அதற்கான போராட்டத்தை கட்டி எழுப்பியவர். இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? நேற்றை கூட ஒரு செய்தியை பார்க்கின்றோம். அதிமுகவினுடைய தலைவர் எடப்பாடி அவர்கள் டெல்லிக்கு சென்று யாரையோ பார்த்துவிட்டு (அந்த யாரையோ என்பது அமித்ஷாவை) பார்த்துவிட்டு வெளியில் வரும்பொழுது முகமூடி அணிந்து கொண்டு வெளியில் வருகிறார்.

பொதுவாக நாம் கொரோனா நோயாளியைப் பார்க்க போகும்போதுதான் முகமூடி அணிந்துவிட்டு போவோம். இவர் கொரோனாவை பார்க்க சென்றதை போலத்தான் போய் வந்திருக்கின்றார். ஒரு கட்சியின் தலைவர், தமிழ்நாட்டினுடைய முன்னாள் முதலமைச்சர், பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இவ்வளவு தூரம் இழிவாக கோழைத்தனமாக சென்றுவிட்டு சந்தித்து வர வேண்டிய தேவை என்ன? அதற்கான அவசியம் என்ன?

தமிழனுடைய தன்மானத்தையும், தமிழ் மக்களினுடைய நீண்ட கால வரலாறையும் அடகு வைக்கக்கூடிய அவமானப்படுத்தக்கூடிய ஒரு வேலையை எடப்பாடி அவர்கள் செய்து வந்திருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அதிமுக கட்சிக்காரர்கள் அந்த நபரை பதவியில் இருந்து இறக்கி இருக்க வேண்டும். இதற்கு மேலும் இதுபோன்ற நபர்களை நாம் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் யார் ஓட்டு போட்டு உங்களை எல்லாம் முதலமைச்சர் ஆக்குகிறார்கள்? அமைச்சராக மாற்றுகிறார்கள்? யார் எம்எல்ஏக்களாக சட்டமன்றத்திற்கு அனுப்புகிறார்கள்? எல்லாம் சாமானிய தமிழர்கள். ஆனால், சுயமரியாதை உணர்வு மிக்க தமிழர்கள்தான் உங்களுக்கு வாக்களிக்கிறார்கள். தப்பித்தவறி கூட பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ் மண் வாக்களிப்பதில்லை. தமிழர்களுக்கு தெரிகிறது யாருக்கு ஓட்டு போடனும், யாருக்கு ஓட்டு போடக்கூடாது என்று. எங்களுக்கு திமுகவுக்கு ஓட்டு போட பிடிக்கவில்லை என்றால் அதிமுகவுக்கு போடுகிறோம். அதிமுகவுக்கு பிடிக்கவில்லை என்றால் திமுகவிற்கு போடுகின்றோம். அல்லது மூன்றாவது மாநில கட்சிக்கு போடுகிறோம். ஆனால் ஒருபொழுதும் வடநாட்டான் கட்சிக்கும் இந்திக்காரன் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம். அவனை தேர்ந்தெடுக்க மாட்டோம். நீ எப்பேர்ப்பட்ட அதிகாரத்தில் இருந்தாலும், உனக்கு ஒரு வாக்கு கூட எங்கள் மண்ணிலிருந்து விழுந்து, நீ(பாஜக) வெற்றி பெற்று விட முடியாது என்று தெளிவாக தெரிவிக்கிறானே, அந்த தமிழனை எடப்பாடி அவர்கள் இழிவுபடுத்தி இருக்கிறார். அதை ஒரு காலத்திலும் மன்னிக்க முடியாது. அதனால்தான் ‘வீழட்டும் சனாதனம்’ என்று பேசி இருக்கின்றோம்.

எதற்காக சனாதனம் எதற்கு வீழ வேண்டும், நம்மிடம் என்ன பிரச்சனை என்றால், நம் கடவுள் நம்பிக்கையை எல்லாம் அவன் இந்து மதம் என்று சொல்லிவிடுகின்றான். நாமெல்லாம் இந்துக்கள் என்று நம்பிவிட்டால், நீங்கள் சனாதனவாதிகளே, நீங்கள் சனாதனத்திற்குள் வந்துவிட்டவர்கள் என்று சொல்லுகிறான். நமக்கே தெரியாமல் நம்மை அடிமையாக்குகின்ற வேலையை பாரதிய ஜனதா கட்சிக்காரன் செய்து கொண்டிருக்கிறான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதுதான் இங்கே பிரச்சனை. நம்மையெல்லாம் ஒரு மத நம்பிக்கைக்குரியவனாக, ஒரு சனாதன கோட்பாடு ஏற்றுக் கொண்டவனாக மாற்றுகின்ற வேலையை அவன் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறான். அதை என்றைக்கும் அனுமதிக்கக் கூடாது.

நாமெல்லாம் இந்துக்களா? நாமெல்லாம் இந்துத்துவவாதிகளா? நாமெல்லாம் சனாதனவாதிகளா? என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேள்வி கேட்க வேண்டும். அதைத்தான் தந்தை பெரியார் கேட்கிறார். கடவுள் நம்பிக்கை வேறு, மத நம்பிக்கை வேறு. நீங்கள் கடவுள் நம்பிக்கையோடு இருப்பதை பற்றி யாருக்கும் பிரச்சனை இல்லை. அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு. ஆனால், நீங்கள் மத நம்பிக்கை பெற்றவனாக மாறிவிடுகிறீர்கள் என்றால், மத வெறியனாக மாறிவிடுகிறீர்கள். அது பிற மதம் பிற கடவுளை வணங்குகிறவனுக்கு எதிரான ஒரு உணர்வு நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும். அதனால் எந்த இடத்திலும் நீங்கள் மனிதனாக இருக்க முடியாது. உங்களுக்கு நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் சாமி கும்பிடப் போகுறீர்கள். அது கடவுள் நம்பிக்கை. ஆனால், என் கடவுள் என் மதம் மட்டும் தான் என்று பேச ஆரம்பித்தால், நீங்கள் பிற மதத்தை, பிற கடவுளை வணங்கக் கூடியவனை எதிரியாகப் பார்த்து விடுகிறீர்கள். அந்த இடத்தில் நீங்கள் மனிதனாகவே இல்லை என்பதை மறந்து விடக்கூடாது.

நாங்கள் குறிப்பாக எல்லா மேடையிலும் சொல்லி வருகிறோம். “தமிழர்கள் இந்துக்கள் அல்ல”. தமிழர்களுடைய இலக்கியத்தில் எந்த இடத்திலும் பாரதம் என்றோ, இந்து மதம் என்றோ, ஒரு வார்த்தை கூட இல்லை.

இவன் (ஆரியர்கள்) வணங்கக்கூடிய எந்த சாமியின் பெயரும் நம்முடைய இலக்கியத்தில் 2000 வருட வரலாறில் இல்லை. நான் என்ன கேட்கிறேன் எனில், நாம் கும்பிடக்கூடிய ஐயனாரோ அம்மனோ வடநாட்டில் இருக்கிறதா? மோடி கும்பிடுகிறாரா? அல்லது சுப்பிரமணிய சாமி கும்பிடுகிறாரா? அல்லது அமித்ஷா கும்பிடுகிறாரா? அல்லது பாஜக கும்பல் ஏதேனும் கும்பிடுகிறதா? அங்கே கோயில் கட்டி இருக்கிறதா? கும்பாபிசேகம் செய்திருக்கிறதா? எந்த தகவலும் இல்லையே! அப்புறம் எப்படி நீயும் நானும் ஒன்று? இங்கே இருக்கக்கூடிய பள்ளிவாசலை பார்த்தால் உலகெங்கிலும் இருக்கக்கூடிய இஸ்லாமிய பள்ளிவாசல் ஒரே விதமாகத்தான் இருக்கிறது. அளவில் மாறுபடலாம். ஆனால், குணத்தால் மாறுபாடு இல்லை. அங்கே வேறு வேறு கடவுள்கள் இல்லை.

இங்கே நாங்கள் மாரியம்மனை கும்பிடுகின்றோம், ஆடு பலி கொடுக்கின்றோம், அதை இந்து என்கிறாய் எனில், நீ (பாஜக) அங்கே அதே சாமி கும்பிடுவது இல்லை. ஆடு பலி பலியிடுவதில்லை ஏன்? அப்புறம் எப்படி நீயும் நானும் ஒரே மதமாக இருக்க முடியும்?

இன்றைக்கு (பாஜக) எல்லாரையும் சைவமாக மாற்ற பார்த்துக்கொண்டு இருக்கிறான். நம்மவர்களை சைவ உணவாக எடுத்துக்கொள்ள மாற்றுகிறான். வாரத்தில் ஒரு நாள் அசைவ உணவு எடுக்க வேண்டாம் என ஒரு காலத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். இன்றைக்கு என்ன ஆனது எனில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் அசைவ உணவை சாப்பிடலாம், இதர நாள் சைவ உணவை சாப்பிடலாம் என எல்லாத்தையும் சைவ பிராணிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு? ஐயர்களுக்கு சைவ சாப்பாடு பிடிக்குமெனில் சாப்பிட்டு போகட்டும். ஆனால் அதுதான் புனிதமானது, அதுதான் கடவுளுக்கு நல்லது என கடவுள் சொன்னாரா? எந்த கடவுள் வந்து சொன்னார்?

நம்முடைய எல்லா கோவில்களிலும் ஆடு கோழி பலியிடுவது என்பது வழக்கம். ஆடு கோழி பலியிடாமல் நாம் சாமி கும்பிட்ட வழக்கமே கிடையாது. வேண்டுதல் செய்த வழக்கமே கிடையாது. இதற்கு என்ன ஆதாரம் என (பாஜக) கேட்பான். அதற்கு பதில் – நாம் கோயில் கோபுரத்தை தாண்டிப் போனால், முதலில் என்ன இருக்கும்? தேங்காய் உடைக்கிற இடம் இருக்கும். அதன்பின் ஒரு கொடிகம்பம் இருக்கும், அதன்பின் வாகனம் இருக்கும், அதன்பின் ஒரு உண்டியல் இருக்கும். அதன்பின் துவார பாலகர் இருக்கும். அதன்பின் கருவறை இருக்கும். (அதை நமக்கு காட்ட மாட்டான், துணி போட்டு மூடி வைத்திருப்பான்).  இந்த அளவில்தான்/ முறைகளில்தான் நம் கோயில் என்பது அடுக்கப்பட்டதாக இருக்கிறது.

நான் கேட்கிறேன், முதலில் தேங்காய் உடைக்கிறீர்களே, அதற்கு என்ன பெயர்? அதற்கு ‘பலிபீடம்’ என்று பெயர். அப்படிப்பட்ட இடத்தை தான் நமக்கு தேங்காய் உடைக்கின்ற இடமாக மாற்றி இருக்கிறான். தேங்காய் உடைக்கிற இடத்துக்கான வழிமுறை வேறு. அந்த பலிபீடத்தில் இருக்கக்கூடிய கல்லைப் பார்த்தால் ஆடு கோழி பலியிடக்கூடிய இடம். அந்த இடத்தை இன்றைக்கு தேங்காய் உடைக்கும் இடமாக மாற்றி இருக்கிறான். அதற்குப் பின் எலுமிச்சம் பழத்தில் குங்குமத்தை தடவி, அதை நாம் பலியாக கொடுக்கிறோம். இப்படி ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி நம் சாமிக்கு கடைசியில் என்ன பண்றான்? மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணியில் இருந்து சர்க்கரை பொங்கல், புளி சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதத்தில் வந்து நிற்கிறது. நாம் வழங்குகின்ற முறையை எல்லாம் மாற்றுகிறானே, இது குறித்து யார் கேள்வி கேட்பது? எல்லா வீடுகளிலும் நமக்கு மொட்டையடித்து காது குத்தும்போது கறி சமைத்துப் போடுவது வழக்கம். இன்றைக்கு என்ன நடந்துகொண்டு இருக்கிறது? நம்மையெல்லாம் சனாதனத்துக்குள் கொண்டு வருகின்ற வேலையை செய்கிறார்கள்.

சென்ற வருடம் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. திராவிட கழகத்தினுடைய பேச்சாளர் மதிவதனி அவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுது ’பார்ப்பனர்’ என்கின்ற வார்த்தையை அவர் பேசிவிடுகிறார். பார்ப்பனர் என்கின்ற வார்த்தை, உயர் ஜாதிக்காரர் பூணூல் போட்டு இருக்கக் கூடியவரை குறிக்கக்கூடிய தமிழ் சொல்லாக இருக்கிறது. அந்த சொல்லை சொன்னவுடன் இந்துத்துவ அமைப்பிலிருந்த அர்ஜுன் சம்பத் எழுந்து வந்து அடிக்க வர மாதிரி வருகிறார். இது பெரும் விவாதத்தை கிளப்பிய ஒன்று. இதற்கு சென்ற வருடமே லால்குடியில் பொதுக்கூட்டம் போட்டு அன்றைக்கே சொல்லிவிட்டோம் அர்ஜுன் சம்பத்துக்கு, “நாங்கள் எல்லா ஊர்களிலும் கூட்டம் போடுகிறோம், வந்துபார் உரிய வகையில் உனக்கு பதில் கொடுத்து அனுப்புவோம்” என, ஒரு வருடம் ஆகிவிட்டது இன்று வரைக்கும் அர்ஜுன் சம்பத்தைக் காணோம்.

 நாம் இன்னொன்று புரிந்துக்கொள்ள வேண்டும்- பார்ப்பனர்கள் என்று சொல்லக்கூடாது, பிராமின்ஸ் அல்லது பிராமணர்கள் என சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள். அந்த வார்த்தை சொல்வதற்கு ஏன் அவ்வளவு கவனமாக இருக்கின்றான்? ’பிராமணாள் கபே’ என்று காபி கடைக்கு எல்லாம் ஒரு காலத்தில் பெயர் இருந்தது. பிராமணாள் கபே என்றால் என்ன அர்த்தம் எனில், ஐயர் ஐயங்கார் எல்லாம் உள்ள போய் காபி குடிக்கலாம், சாப்பிடலாம். அந்த உணவகத்துக்கு பக்கத்தில் சிறியதாக ஒரு சன்னல் வைத்திருப்பார்கள். நாம் எல்லாம் அது வழியாக வாங்கி சாப்பிடனும். இப்படித்தான் மயிலாப்பூரில் ஒரு காலத்தில் இருந்தது. அந்த பிராமணன் என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் சொல்லுகின்றன? ஏன் பெரியார் அதை கடுமையாக எதிர்த்தார் என்று யோசிக்க வேண்டும்.

உலகத்தில் தமிழன் கண்டுபிடித்த பல வார்த்தைகளில் ’நீங்க என்ன ஆளுங்க’ என்பது ஒரு முக்கியமான வார்த்தை ஆகிப்போனது. இவனுக்கு அதை கேட்கவில்லையெனில் தூக்கமே வராது. பார்த்த அடுத்த நிமிடத்தில் என்ன படித்துள்ளாய்? என கேட்க மாட்டான். எங்க வேலை பார்க்கிறாய்? என கேட்கமாட்டான். என்ன ஆளுங்க? என கேட்பான். அப்படி ஒருவேளை கேட்கும்போது என்ன சொல்லுவீர்கள்? உங்க சாதி பேரை (வன்னியர், கோனார், பறையர், கவுண்டர், செட்டியார் இப்படி ஏதோ ஒரு சாதியை) சொல்வீர்கள். ஐயர் ஐயங்காராக இருக்கிறவர்கள் ஐயர் என சொன்னால் அது சாதி.  அதேபோல் ஐயங்கார் என சொன்னால் அது சாதி. ஆனால் அதை சொல்ல மாட்டார்கள். நாங்கள் பிராமின்ஸ் / பிராமணர்கள் என சொல்வார்கள். அது ஏன் சாதி பேரை சொல்லாமல் பிராமின்ஸ் / பிராமணன் என்று சொல்கிறாய்?

ஐயர் என்றால் அவர்களுடைய கடவுள் நம்பிக்கை சார்ந்த ஒன்று. அவர்கள் சைவ கடவுளை நம்ப கூடியவர்களாக சிவனை வணங்க கூடியவர்களாக இருப்பார்கள். ஐயங்கார் என்றால் வைணவத்தை நம்பக்கூடியவர்களாக வடகலையாகவோ, தென்கலையாகவோ இருப்பார்கள். அது சாதி ரீதியாக பிரிக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவர்களை வணங்குகின்ற முறையின் அடிப்படையாக அந்த சாதியைப் புரிந்து கொள்ளலாம். அதில் நமக்கு சிக்கல் இல்லை. ஆனால் பிராமின்ஸ் என்று சொல்லும்பொழுது, பார்ப்பனர் என்று சொல்லும்பொழுது என்னவாகி விடுகிறது என்றால், அவர்கள் சாதியை சொல்லவில்லை ’வர்ணத்தை’ சொல்லுகிறார்கள். வர்ணத்தை சொல்லுகிறான் எனில் என்ன அர்த்தம்? நாங்கள் பிரம்மாவின் தலையிலிருந்து வந்தவர்கள் என்று அர்த்தம்.

நீ (பிராமணர்கள்) பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தால், மற்றவர்கள் (பிராமணற்றவர்கள்) பிரம்மாவின் காலிலிருந்து பிறந்தவன் என அர்த்தம். (வன்னியர், கோனார், பறையர், கவுண்டர், செட்டியார் இப்படி ஏதோ ஒரு சாதி பெயரை சொல்லும் பொழுது, அவன் வர்ணத்தின் பெயரை சொல்லுகிறான் என்றால், உங்களை இழிவுபடுத்துகிறான் என்று அர்த்தம். ஐயர், ஐயங்கார், சர்மா, பாண்டே என சொன்னால் அவர் சாதியை சொல்லி விடுகிறான்.  ஆனால், பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்த அர்த்தத்தில் ’நான் பிராமணன்’ என்று சொல்லிவிட்டால், நாம் யார் என்றால் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்ததாய் அர்த்தம். ஆக இந்த வார்த்தையை நுணுக்கமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நீ ஐயராக இருக்கலாம், ஐயங்கராக இருக்கலாம், சைவமாக இருக்கலாம், வைணவமாக இருக்கலாம், வைணவத்தில் வடகலையாக இருக்கலாம், தென்கலையாக இருக்கலாம். அது அல்ல பிரச்சனை. நீங்கள் (பார்ப்பனர்) எல்லாம் பிரம்மாவின் தலையில் இருந்து பிறந்தவர்கள், நாங்கள் எல்லாம் பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்றதால்தான் ’பிராமணர்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் ’பார்ப்பனர்’ என்று அடையாளப்படுத்துகின்றார் தந்தை பெரியார் அவர்கள்.

ஒரு வார்த்தைக்குள் எவ்வளவு அரசியல் இருக்கிறது! நாம் அதையெல்லாம் அப்படி அப்படியே கடந்து போகிறோம். இதில் பார்ப்பனர் என்ற வார்த்தையை பயன்படுத்தினால் பார்ப்பனருக்கு கோபம் வரலாம், பார்ப்பனர் அடிமையாக இருக்கக்கூடிய அர்ஜுன் சம்பத்துக்கு ஏன் கோபம் வருகிறது? ஏனெனில் பிரம்மாவின் காலில் இருந்து பிறந்த ”தீண்டத்தகாதவன் இழி பிறப்பாளன்” என்று மனுதர்மம் சொல்லுவதை அர்ஜீன் சம்பத் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அது அவருடைய சுயமரியாதை சம்பந்தப்பட்ட விடயம்.

ஆனால் “நீங்கள் இப்படியான படிநிலை அடக்கு முறைக்கு ஒரு நாளும் ஒத்துக்கொள்ளாதீர்கள்” என்று தந்தை பெரியார் சொல்கிறார். தந்தை பெரியார் கடவுள் இல்லை என சொல்லிட்டார் என அதோடு முடித்துக்கொள்கிறான். பெரியார் அந்த இடத்துக்கு எப்போது வருகிறார்? உன் சுய மரியாதையை கெடுத்துக்கொண்டு நீ ஒரு மதத்திலோ ஒரு கடவுள் நம்பிக்கையிலோ இருக்காதே என்று சொல்லுகிறார்.

ஆனால் அவன் (பார்ப்பனர்) என்ன சொல்கிறான்? பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தவன் இழிபிறப்பாளன் என மதம் சொல்கிறது, அதை ஏற்றுக்கொள்ளனும் என சொல்லும்பொழுதுதான் தந்தை பெரியார் சொல்கிறார்- “நம்முடைய இழிவு நிலையை போக்க (இந்து) மதம் தடுக்கிறது என்றால், அப்படிப்பட்ட மதமே வேண்டாம், அதை தூக்கிப் போட்டு வா” என்றார். அது எப்படி என் மதத்தை தூக்கிப் போடுவது? எங்கள் வேதம்தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தது என்றார்கள். அப்படியெனில் அந்த வேதத்தை தூக்கிப் போடு என்றார். வேதத்தை எப்படி தூக்கிப் போட முடியும்? – வேதத்தை என் கடவுள்தான் உருவாக்கிக் கொடுத்தார் என்றார்கள். அதற்குப் பெரியார் சொன்னார்-”அப்படியெனில் அந்த கடவுளே வேண்டாம்” என்றார். அப்படித்தான் அவர் கடவுள் எதிர்ப்பு என்கின்ற இடத்திற்கு (நாத்திகராக மாறுகின்ற இடத்திற்கு) வருகின்றார்.

ஆகவே பெரியாரை வெறும் நாத்திகராக பார்ப்பது என்பது தவறு. அவர் “நம்முடைய சுயமரியாதை உணர்வை பாதுகாக்கக்கூடிய எந்த வழிமுறையாக இருந்தாலும், அந்த வழிமுறையை ஏற்றுக்கொள்” என்று சொல்கிறார். அந்த வழிமுறையை ஏற்றுக்கொண்டார். அதுதான் பெரியாரினுடைய சிறப்பு. பெரியார் “எந்த வழியில் உன் சுயமரியாதையை காப்பாற்ற வழி இருக்கிறதோ அதை செய். உன் கடவுள்தான் சுயமரியாதை அற்றவன் என்று சொல்லுகிறான் என்றால், அந்த கடவுளே வேண்டாம் என்று முடிவெடு” என்று சொல்கிறார். இதுபோன்ற துணிச்சலாக சிந்திக்கக்கூடிய ஒரு மரபை கற்றுக் கொடுத்ததனால்தான் அவர் தந்தை பெரியாராக இருக்கிறார்.

சீமான் சொல்லுவதைப் போல் அல்ல. நீ எல்லாம் கிரீஸ்டப்பாக்களை மிதிக்கக்கூடிய தொண்டர்ப்படை அல்ல, நாம் சிந்திக்கக்கூடிய மூளையை பயன்படுத்த தெரிந்தவர்கள். அதனால்தான் தந்தை பெரியாரின் தொண்டர்களாக இருக்கின்றோம். அவர்கள் எல்லாம் இன்னும் கிரீஸ்டப்பாக்களாக இருக்கிறார்கள்.

சனாதனத்தைப் பற்றி கேட்டால் சாதி எனப் பேசுவான். அதற்கு மேல் கேள்வி கேட்டால் வர்ணத்தைப் பற்றி பேசுவான். வர்ணத்தை கேள்வி கேட்டால் கர்மா என்பான். கர்மாவைப் பற்றி கேள்வி கேட்டோல் தர்மா என்பான். இதற்குமேல் கேள்வி கேட்டால் வேதம் என்பான். வேதத்தைக் கேள்வி கேட்டால் ஸ்மிருதி/ ஸ்ருதி இருக்கிறது என்பான். இப்படி கணக்கு மேல் கணக்காய் சொல்லி கடைசியில் ’நீ எனக்கு அடிமை, வாழ்நாள் முழுக்க எனக்கு நீ வேலை செய்யனும், உன்னுடைய விதி’ என்று சொல்வான். ஆக நாம் விதி என்று நம்பிக்கொண்டுதான் இன்றைக்கு வரைக்கும் அடிமையாக இருக்கிறோம்.

”விதியை நம்பாதே மதியை நம்பு” என்கின்ற அரசியலை கற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார்

மே 17 இயக்கத்தின் வேலை என்ன? மே 17 இயக்கம் ஒரு தேர்தல் கட்சி அல்ல. எங்களுக்கு எம்எல்ஏ, எம்பி, முதலமைச்சர் கனவெல்லாம் இல்லை. தந்தை பெரியார் கடைசி வரைக்கும் “தமிழா! நீ சிந்தி. 2000 வருடமாக உன்னைப் போட்டு மிதி மிதின்னு மிதிக்கிறான். இவனிடம் மாட்டாதே, இவனை விட்டு வெளியே வா, மேற்கு உலகில் எவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறானோ, கடவுளை தூக்கி எறிந்துவிட்டு மனிதத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களைப் போல நீ உயர்ந்த நிலைக்கு வா” என்று சொல்லுகிறார் தந்தை பெரியார். அதை மக்களிடத்தில் சொல்லுவதுதான் எங்கள் வேலை.

‘மே 17 இயக்கம்’ என்று நாங்கள் ஏன் பெயர் வைத்தோம்? அது என்ன தேதி என கேட்கிறார்கள். நாம் சுயமரியாதையை மறந்து போனதினால் ஈழத்திலே மேதகு பிரபாகரன் அவர்கள் நடத்திய விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்ட பொழுது நாம் கைகட்டி வேடிக்கை பார்த்தோம். நமக்கு சுயமரியாதை இல்லாமல் போனோம். தந்தை பெரியார் சொல்லுவதை போல வடநாட்டானுக்கு அடிமைப்பட்டு போனோம். வடநாட்டான் சொல்லக்கூடிய கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டு போனோம். அதனால் நமது இனம் ஈழத்திலே 2009 ஆண்டு மே 17ஆம் தேதி மற்றும் மே 18ஆம் தேதிகளில் 1லட்சத்து 60ஆயிரம் தமிழர்கள் கொன்று அழிக்கப்பட்ட பொழுது நாம் கைகட்டி வேடிக்கை பார்த்த அடிமை மனிதர்களாக மாறி போனோமே, அந்த தேதியை நாம் மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் எங்கள் இயக்கத்திற்கு இந்தப் பெயரை வைத்துள்ளோம். இது ஈழ விடுதலைக்கான இயக்கமா என்றால், ஈழ விடுதலையை ஈழ மக்கள் நடத்துவார்கள். ஆனால் ஈழத்தில் நடத்தப்பட்ட அநீதியை உலகத்திற்கு சொல்லுவதற்கு மே 17 இயக்கம் அந்த பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்குத்தான் மே17 இயக்கம் வந்திருக்கிறது.

மே 17 இயக்கத்தினுடைய இலக்கு என்ன? என்ன சாதிக்க போகிறது? என்றால், எங்களுக்கென்று தெளிவான இலக்கை தந்தை பெரியார் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் 7 கோடி பேர் இருக்கிறான். அவனுக்குன்னு சொந்தமா எந்த முடிவும் எடுக்க முடியாத நிலைமையில் இருக்கிறான். எப்படி இருக்கிறோம் எனில், நீட் எனும் ஒரு தேர்வு இருக்கிறது. நம் அரசாங்கம் நடத்தக்கூடிய தேர்வுகளை எழுதி, நாம் கொடுக்கக்கூடிய வரிப்பணத்தில் கட்டிய கல்லூரிகளில் போய் படித்து மருத்துவராக இருந்த நிலைமையை மாற்றி, இன்று நீட் தேர்வு வைத்து, அதில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே உன் பிள்ளை நாம் கட்டிய கல்லூரியில் போய் படிக்க முடியும் என ஒருவன் டெல்லியிலிருந்து நம் கழுத்தில் கால் வைத்து மிதிக்கிறான் பார், அந்த அதிகாரம் எங்கிருந்து வருகிறது? என்று நம் தமிழ் மக்கள் கேட்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நீங்கள் வரி கொடுக்கிறீர்கள், உங்கள் வரி பணத்தில் மருத்துவ கல்லூரி கட்டுகிறார்கள். அந்தப் பணத்தில் மருத்துவ கல்லூரியில் படிக்கக்கூடிய பிள்ளைகள் கற்பதற்காக அரசாங்க மருத்துவமனை இருக்கிறது. இத்தனை காலம் நம் பாடத்திட்டத்தில் அரசாங்கம் வைக்கக்கூடிய தேர்வு எழுதி மருத்துவராக மாறினார்கள். இதில் டெல்லிக்காரனுக்கு என்னடா பிரச்சனை? என கேட்க வேண்டும்.

வடநாட்டுக்காரனுக்கும் நமக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்து இருக்கிறார்களா? ஆனால் அவன் (டெல்லிகாரன்) வந்து என்ன சொல்றான்? அதைக் கேட்டு கை கட்டி வேடிக்கை பார்த்து உட்கார்ந்து இருக்கிறோம். இதைவிட அவமானம் வேறு என்ன? நம் பிள்ளைகள் டாக்டர் ஆக முடியவில்லையே, அதுவும் உத்தர பிரதேசத்திலோ, அரியானவிலோ, மத்திய பிரதேசத்துக்கோ போய் டாக்டர் ஆக சொல்லவில்லை. நம் ஊரில் நம் அரசு கட்டிய கல்லூரியில் எங்கள் பிள்ளைகள் படித்து மருத்துவராக முடியவில்லை எனில், நாம் எதற்கு இந்தியாவில் இருக்கிறோம் என்று கேட்கிற கேள்வியை தந்தை பெரியார் அன்றைக்கே எழுப்பி விட்டார். அதனால் கேட்கிறோம், ஏன் நாங்கள் வரி கட்ட வேண்டும்?

என் ஊர்க்காரன் நடத்தும் உணவகத்தில் நான் இட்லி சட்னி சாப்பிடுவதற்கு டெல்லிக்காரனுக்கு எதற்கு வரி கட்ட  வேண்டும்? ஆனால் சப்பாத்தி சாப்பிடுவதற்கு வரி கிடையாது. சப்பாத்தி போடும் கருவிக்கு வேறு வரி. அரிசி மாவு ஆட்டுகின்ற கிரைண்டருக்கு அதிகமான வரி. நாம் எல்லோரும் ஒரே நாட்டுக்குள் இருந்தாலும் நமக்கு ஏன் அதிகமான வரி என்று யோசிக்க வேண்டும்.

நம் ஊரில் நம் நிலத்தில் நம் வரியில் போட்ட சாலையில், நாம் ஓட்டுகின்ற வண்டிக்கு டெல்லிக்காரனுக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும்? சுங்கசாவடிக்கு  ஏன் வரி கொடுக்க வேண்டும்? யார் வீட்டு நிலம் அது? யார் அப்பன் வீட்டு நிலமா? இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான சுங்கசாவடி போட்டு வைத்து இருக்கிறான். அதில் அதிக அளவு பணம் வசூல் பண்றான். ஒரு நாளைக்கு எத்தனை 100 கோடிகள் அதில் சம்பாதிக்கிறான். இதன்பின் காருக்கு காப்பீட்டில் சம்பாதிப்பது, காருக்கு சாலை வரி போடுவது, இப்படி எல்லாவற்றுக்கும் வரியை போட்டு பிடுங்கக்கூடிய ஒரு வேலையை செய்கிறான். ஆனால் அந்த வரியில் தமிழ்நாட்டுக்கு பங்கு கொடு என்றால், பங்கு தராமல் நிறுத்தி வைக்கிறான்.

பிஜேபிகாரன் என்ன சொல்ல வருகிறான்? உன்னிடம் வரி வாங்குவேன், ஆனால் உனக்கான பங்கை தரமாட்டேன். நீ உன் கல்லூரியில் பிள்ளைகள் படிப்பதை நான் தடுத்து வைப்பேன், நீ சாப்பிடும் சாப்பாடுக்கு அதிகமான வரியை போடுவேன், உன் தமிழ் மொழிக்கு எந்த பணமும் நான் தரமாட்டேன் என்கிறான். இப்படி சொல்லக்கூடிய திமிரை பார்த்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஏன் சும்மா இருக்கிறோம்? சுயமரியாதை இல்லையா? நமக்கு வெட்கமாக  இல்லையா? இவன் யார்? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

இதைதான் பெரியார் இறப்பதற்கு முன்னால் (தியாகராய நகரில்) பேசுகிறார்.”எப்பா நீ இருக்கிறது 2000 கிலோமீட்டர் அப்பால இருக்கிற, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்ன பிரச்சனை? நீ யாரு முதல்ல? என் ஊர்ல இருந்து நாட்டாமை பண்றதுக்கு நீ யார்? ரகளை வேணாம் பேசாம போயிடு” இதான் பெரியார் பேசுகிறார்.

குஜராத்துக்காரன் என்றாவது தமிழ்நாட்டு மேல் படை எடுத்து வந்து எங்களை எல்லாம் ஆட்சி செய்தானா? இல்லை. உத்தர பிரதேசத்தில் வெள்ளம் வந்தபோதெல்லாம் காப்பாற்றினீயே, எங்கள் மீனவன் கடலில் (கஜா புயலில்) தத்தளிக்கும் போதும், தினம் தினம் இலங்கை கப்பற்படை படகுகளை அடித்து நொறுக்கும் போதும், அவர்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்த போதும், பக்கத்து நாட்டுக்காரன் இலங்கையை கேட்க துப்பில்லை. அதை நட்பு நாடு என பேசுகிறான். வெக்கமாக இல்லை நமக்கு? இவ்வளவையும் செய்துவிட்டு, அந்த கட்சிக்காரன் பிஜேபி கொடி ஏந்திக்கொண்டு ஊர் முழுக்க தாமரை மலரும் தாமரை மலரும் எனப் பேசுகின்றான்.

நாங்கள் அதிமுகவை ஆதரிக்கவில்லை. அந்த கட்சிதான் என் மேல் 45 வழக்குகள் போட்டார்கள். ஆனால் அது எங்கள் ஊர்காரன் கட்சி. அது டெல்லிக்காரன் கட்சி கிடையாது. இவர்கள் ஏன் டெல்லிக்கு போய் கை கட்டி மண்டி போட்டு நிற்க வேண்டும்? அவசியம் என்ன? அமித்ஷாவை பார்த்து அச்சப்படுவதற்கான காரணம் என்ன? பிஜேபி காரன் தமிழ்நாட்டில் ஒரு கவுன்சிலர் ஓட்டு கூட வாங்கவில்லை. அந்த வெல்லமுடியாத கட்சியிடம் கையை கட்டி வாயை பொத்தி நிற்க வேண்டிய தேவை ஏன்?

இப்போது என்ன நடக்கிறது? பிஜேபியும் மோடி சர்க்காரும் என்ன சொல்ல வருகிறது? தமிழ்நாட்டை நாங்க மதிக்க மாட்டோம். தமிழ்நாடு நாசமாக போவதற்கு எல்லா வேலையும் செய்வோம். ’இருந்தால் இரு போனால் போ’ என்கிறான். நம்மவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறான் என்றுதானே அர்த்தம். இதையெல்லாம் கேட்டால் நம்மை பிரிவினைவாதி என சொல்கிறான்.

இந்த நாட்டின் விடுதலைக்காக சுபாஷ் சந்திர போஸ் படையில் ஆயிரக்கணக்கார தமிழர்கள் போராடி இருக்கிறோம். விடுதலை வென்றெடுத்திருக்கின்றோம். ஆனால் நமக்கான மரியாதை என்ன கொடுக்கிறான்?

அதைத்தான் தந்தை பெரியார் 1947-ல் இறக்கக்கூடிய காலம் வரைக்கும் என்னவெல்லாம் சொன்னாரோ அதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பெரியாருக்கும் அன்றைக்கு பதில் சொல்லவில்லை. அவர் இறந்து 50 ஆண்டுகள் கழித்தும் நாங்கள் திரும்பவும் கேட்கிறோம், (பாஜக) பதில் சொல்லு.

நாங்கள் என்ன தவறு செய்தோம்? எதற்காக தமிழை வேண்டாம் என்கிறாய்? எதற்காக தமிழுக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என சொல்கிறாய்? எதற்காக சமஸ்கிருதத்துக்கு தமிழைவிட நூறு மடங்கு அதிகமாக பணம் ஒதுக்குகிறாய்? எதற்காக இந்திக்கு அதிகமான முக்கியத்துவம் தருகிறாய்? எதற்காக எங்கள் பிள்ளைகள் மருத்துவராகக் கூடாது என சொல்கிறாய்? எதற்காக எங்கள் ஊரில் சாலையில் சுங்கசாவடி போட்டு பணத்தை வசூல் செய்கிறாய்? எதற்காக எங்களுக்கான வரிப்பணத்தை கொடுக்க மறுக்கிறாய்? இதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

இதையெல்லாம் செய்ய முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் பிஜேபிக்காரன் ஓட்டு போட சொல்லி வந்து நிற்பாய். உனக்கு நாங்கள் ஓட்டு போட வேண்டுமா? எங்கள் ஊரில் எல்லா கலவரத்தையும் செய்கிறாய், தமிழ்நாட்டில் சாதி கலவரம் மத கலவரம் நடத்தி, ஊருக்குள் மார்வாடியை கொண்டு வந்து இறக்குவதை பிஜேபிக்காரன் செய்கிறான். கோயம்புத்தூரில் 1980-ல் இருந்து கலவரம் கொண்டு வருவதற்காக முயற்சி செய்து 20 வருடத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரிய கலவரம் செய்தான். இந்த கலவரத்துக்கு பின் முக்கியமான தெருவெல்லாம் மார்வாடிக்காரன் கொட்டாய் போட்டு கடையை திறந்துவிட்டான். தமிழன் கையில் தொழில் கிடையாது, இப்போது சேட்டு மார்வாடி கையில் இருக்கிறது. இன்றைக்கு அவனை தேர்தலில் நிற்க வைக்கிறான். அங்கு இருக்கும் தெருவுக்கு சேட்டு பேரை வைக்க வேண்டும் என்கிறான். இந்த லட்சணத்தில் தான் தமிழ்நாடு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கக்கூடிய கட்சிகள் நமக்கு எதிரி கிடையாது. அவர்கள் நல்லது செய்தால் மகிழ்ச்சி என சொல்லுவோம், தவறு செய்தால் அது எந்த கட்சியாக இருந்தாலும் விமர்சிக்கிறோம். திமுகவோ அதிமுகவோ எல்லா கட்சிகளையும் விமர்சிப்பதற்கான காரணம் என்னவெனில், அந்த கட்சியை விரட்ட வேண்டும் என்கின்ற நோக்கம் அல்ல, அந்த கட்சியின் மூலமாக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்கின்ற நோக்கம் தான்.

 தந்தை பெரியார் காங்கிரசை எதிர்த்தார். ஆனால், அதில் காமராசரை கொண்டு வந்தார். காமராசர் காலத்திலே போராடி சிறை சென்றார், கலகம் செய்தார். ஆனால், காமராஜர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று விரும்பினார். காரணம் ஒரு தமிழன் தமிழ்நாட்டிற்கு தேவையான சட்டங்களை எல்லாம் கொண்டு வர வேண்டும். அதற்கு நான் போராடுவேன் என்று உழைத்தார்.

ஆக நாம் இங்கே ஆட்சியில் இருக்கக்கூடியவர்களை கேள்வி கேட்கிறோம் என்றால், தமிழ் மண்ணிலே தமிழனுக்கான உரிமைகளை எல்லாம் நிலைநாட்டுகின்ற ஆட்சியை நீங்கள் நடத்துங்கள், நடத்தவில்லை என்றால் நாங்கள் சுட்டிக்காட்டுவோம். எதிர்த்துப் போராடுவோம். அதற்காக நாங்கள் சிறையும் செல்வோம். ஆனால் எந்த காலத்திலும் நாங்கள் டெல்லிக்காரனிடத்திலே காட்டி கொடுக்க மாட்டோம். அப்படி காட்டிக் கொடுப்பவனை ஒருபொழுதும் நாங்கள் விட மாட்டோம்.

எங்கள் மே 17 இயக்கத் தோழர்கள் முழுமையான ஒழுங்கோடு இருக்கக்கூடியவர்கள். எந்த கெட்ட பழக்கமும் இருக்கக்கூடாது. வீட்டில் உள்ள பெண்களுக்கு சம உரிமை & சம மரியாதை கொடுப்பவர்கள்தான் மே17 இயக்கத்தில் உறுப்பினராக இருக்க முடியும். எந்த தீய பழக்கமும் அவனுக்கு இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் இயக்கத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள். தன்னுடைய வாழ்க்கையோடு இணைந்திருக்கக்கூடிய, தனக்காக வாழ்க்கை ஒப்படைக்கக்கூடிய ஒரு இணையருக்கு மரியாதை செலுத்தத் தெரியாதவன், எப்படி இந்த சமூகத்தை நல்வழியில் கொண்டு செல்வான்? வீட்டுக்குள் சமத்துவம் இல்லை என்றால் வெளியில் அரசியல் கொள்கையை வெறும் மேடையில் பேசக்கூடியவன் மே 17 இயக்கத்தில் உறுப்பினராக இருக்க முடியாது. கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடியவன் தான் எங்கள் இயக்கத்தில் உறுப்பினராக இருக்க முடியும். அதனால்தான் எங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்களை எல்லாம் திரட்டி காண்பிக்கக் கூடிய இடத்துக்கு நாங்கள் போகவில்லை.

காதல் ஒரு அழகான விடயம். ஒரு ஆணோ பெண்ணோ தனக்கு பிடித்தவர்களை காதல் கல்யாணம் செய்வதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இந்த உலகத்தில் இருக்கிறது? தான் நேசிக்கக்கூடிய பெண்ணையோ/ஆணையோ வெட்டிக் கொல்வது எல்லாம் காட்டுமிராண்டித்தனமானது. இதைத்தான் அன்று தந்தை பெரியாரும் கூறினார்.

இன்றைக்கு தமிழ்நாட்டுக்குள் சாதியாக இருப்பதால்தான் நாம் இன்னும் முன்னேறவில்லை. ஒவ்வொரு ஊராக நாங்கள் போய் பார்த்திருக்கிறோம். ஒரு ஊருக்குள் சென்று பார்த்தோமேயானால், ஊர் ஒற்றுமை இருக்காது, ஊருக்குள் இந்த சாதிக்காரனுக்கு நன்றான சாலை, அருகிலே பள்ளி, ரேசன் கடை, முறையான மேல்நிலை தண்ணீர் தேக்கத்தொட்டி போன்ற வசதிகள் இருக்கும் . ஆனால் அந்த  சாதிக்காரனுக்கு பேருந்து நிலையம் தூரமாக இருக்கும், மோசமான சாலை, ரேசன் கடை இல்லாத, அருகில் பள்ளி வைக்காத, மேல்நிலை தண்ணீர் தேக்கத்தொட்டி ஒழுங்காக இருக்காது. இப்படி ஊரை இரண்டாகப் பிரித்து வைத்திருப்பதால்தான் தமிழ்நாடு உருப்படாமல் போயிருக்கிறது.

ஒரு ஊரில் எல்லாருக்கும் மரியாதை கிடைக்கிறது, எல்லாருக்கும் வசதி வாய்ப்பு கிடைக்கிறது எனில், அந்த ஊரினுடைய பொருளாதாரம் வளரும். டீ கொடுப்பதற்கு கூட சாதியை கேட்டு டீயை கொடுக்கிறான். ஆட்களைப் பார்த்து இந்த சாதிக்கு இந்த குவளையில் டீ, அந்த சாதிக்கு அந்த குவளையில் டீ. ‘பினிக்ஸ் மால்’ ஒரு பெரிய வணிக வளாகம் சென்னையில் கட்டி வைத்துள்ளான், அங்கே சென்றால் யார் வேண்டுமானாலும் டீ சாப்பிடலாம். யார் வேண்டுமானாலும் சாப்பாடு சாப்பிடலாம், யார் வேண்டுமானாலும் சினிமா பார்க்கலாம். அவன் யாரிடமும் சாதி கேட்கவில்லை, அவன் வளருவானா? சாதி கேட்கும் நீ வளர்வியா? ஒரே ஊரில் இருக்கக்கூடிய உன் மக்களை சாதி பார்த்து பிரித்தால் உனக்கு எப்படி வளர்ச்சி வரும்?

எங்கள் தோழருடைய ஊரில் இந்த சாதி ரீதியான பிரச்சனைகள் நடந்தது. பெரிய போராட்டத்தை முன்னெடுத்து, இத்தகைய சாதி பாகுபாடு செய்தவனை கைது செய்து சிறையில் அடைத்தோம். உடனே 2000/3000 பேர் திரண்டு வந்தனர். பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் எல்லாரும் வரட்டும், எல்லாருக்கும் ஒரே மாதிரி நல்ல டீ தருகிறேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறினால், ஒரு டீ குடிக்கிறவன் நான்கு டீ குடிப்பான், அடுத்தடுத்து ஆட்கள் சேர 40 டீ குடிப்பார்கள். உன் கடை தொழில் வளருமா வளராதா? இதையெல்லாம் விடுத்து ‘உனக்கெல்லாம் நான் டீ தரமாட்டேன்’ என்று சொல்பவன் கடை எப்படி உருப்படும்? அந்த அறிவு கூட இல்லாத சாதி வெறியனை முட்டாள்த்தனம் நிறைந்தவனாகத்தான் பார்க்கிறோம்.

இன்னும் பல ஊர்கள் சென்று பாருங்கள். முக்கிய தெரு சந்தையில் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு நாங்கள் கடை கொடுக்க மாட்டோம், ஏனெனில் அவர்கள் வளர்ந்துடக்கூடாது, அவன் அப்படியே இருக்க வேண்டும் என நினைப்பான். ஆனால் அவன் கடையில் பட்டியல் சமூகத்தினர் எல்லாம் வியாபாரம் பார்க்க வேண்டும், பொருள் வாங்க வேண்டும். ஊரில் இருக்கக்கூடிய 300/500 கும்பங்களும் நல்ல பொருளாதார வளர்ச்சி அடைந்தால் தானே உன் கடையில் வியாபாரம் நடக்கும். எல்லாருக்கும் சமமான வாய்ப்பு கிடைத்தால்தான் அந்த ஊர் செழிக்கும். இல்லையெனில் அந்த ஊர் வளர்ச்சி அடையாது. தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி தடைபட்டு போனதற்கு இந்த சாதிதான் காரணம்.

இந்த சாதியை வைத்து லாபம் அடையக்கூடிய டெல்லிக்காரர்கள் இதற்கான மூல காரணம். டெல்லிக்காரர்கள் இருக்கின்ற வரை இது மாதிரியான சாதிய சிக்கல்களை பார்த்துக்கொண்டும் அதனை காப்பாற்றிக்கொண்டும் இருப்பான். ஏனென்றால் சட்டத்தில்  சாதியை ஒழிக்கக்கூடிய சரத்துகள் இல்லை; சட்டம் காப்பாற்றுகிறது; அதனால் சட்ட நகல்களை எரிக்கிறார் பெரியார். சட்டத்தை எரிக்கக்கூடிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை நடத்தியவர் தந்தை பெரியார். இந்த சட்டத்தை வைத்து நம்மையெல்லாம் சாதி ரீதியாக ஒடுக்கிக் கொண்டிருக்கிறான் என்று இந்திய அரசை குற்றம் சாட்டி அம்பலப்படுத்தியவர் தந்தை பெரியார்.

ஆக தோழர்களே! இப்படிப்பட்ட நிலையில்தான் தந்தை பெரியாரின் போராட்டத்தை நாம் பார்க்க வேண்டும். சீமான் மற்றும் அவரது தம்பிகள் கேட்கும் கேள்விகள் எல்லாம்- பெரியார் வந்துதான் போராடினாரா? அதற்கு முன்வேறு யாரும் போராடவில்லையா? அவ்வையார் படிக்கவில்லையா? திருவள்ளுவர் படிக்கவில்லையா? என்று கேட்பார்கள். திருவள்ளுவர் படித்தார், அவ்வையார் படித்தார். சீமானின் அப்பத்தா/ பாட்டி படித்தாரா? என்றால் அதற்கு பதில் கிடையாது. அதன்பின் ஏன் படிக்காமல் போனார்கள்? ஏன் படிக்கக்கூடாத நிலைமையை உருவாக்கினான்? என்பதையெல்லாம் கேட்பதற்கு ஆள் இல்லை.

தமிழர்கள் காலம் முழுவதும் இந்த ஆரியத்தை (இந்து மதத்தை) எதிர்த்து பார்ப்பனியத்தை எதிர்த்து போராடி வந்திருக்கிறார்கள். மறந்து விடாதீர்கள். இன்றைக்கு நேற்றல்ல, 2000 வருடமாக போராடி இருக்கிறார்கள். திருவள்ளுவரிலிருந்து அவ்வையாரிலிருந்து கபிலரிலிருந்து ஏகப்பட்ட பேர் போராடியுள்ளனர். இந்தியா முழுவதும் பார்ப்பனியத்தை எதிர்த்து போராடிய மிகப்பெரும் தலைவர்கள் இருக்கிறார்கள். வள்ளலார், வைகுண்டர் ஆரியத்துக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தினார்கள். சித்தர்கள் இவர்களுக்கு (பார்ப்பனருக்கு) எதிராகத்தான் பேசினர். இந்த சடங்கு பிடிக்கவில்லை என்றால் அந்த சடங்குக்கு வா எனச் சொல்லி மாற்று வழிமுறையை சொல்லுவார்கள்.

ஆனால் தந்தை பெரியார் நேருக்கு நேராக எதிர்கொள்ளக்கூடிய பெரும் படையை திரட்டினார். அவர் மாநாடு நடத்தினால் லட்சம் பேர் திரள்வார்கள். இந்த காலகட்டம் போல பேருந்து வசதியோ, சமூகவலைதளமோ, பத்திரிக்கை விளம்பரமோ அன்று இல்லை. அன்றைக்கு பெரும்பாலான மக்கள் எழுத படிக்கத் தெரியாத மக்கள். போவதற்கு சாலை கிடையாது; சாலை இருந்தாலும் வண்டி கிடையாது. எல்லாரும் ஏழைகள். மாட்டு வண்டி வைத்திருப்பதற்குக்கூட வசதியற்றவர்கள். ஆனால் லட்சக்கணக்கான பேர் பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று தந்தை பெரியாரின் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடைய உணர்வு என்ன? ஏன் போகிறார்கள்? பெரியாரினுடைய அரசியலால் தனக்கு விடுதலை கிடைத்தது என்று நம்புகிறார்கள். அந்த விடுதலையை வைத்துக்கொண்டு முன்னேறுகிறார்கள். அதனால்தான் பெரியார் கொடுக்கக்கூடிய அறைகூவலுக்கு லட்சக்கணக்கான பேர் திரண்டார்கள்.

பெரியார் சாதியை ஒழிப்பதற்கான மாநாடு போடுகிறார். அப்போது சாதியை ஒழிப்பதற்காக இதே தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பேர் திரள்கிறார்கள். அந்த வரலாறை உருவாக்கியவர் தந்தை பெரியார்.

இன்றிலிருந்து 100 வருடத்திற்கு முன்பு என்ன நிலைமை இருந்தது? உங்கள் பூட்டன், பாட்டன், தாத்தா, அப்பா என யாரும் படிக்கவில்லை. எல்லாரும் கூலியாக இருந்திருப்பார்கள். அதேபோல சாமிக்கு திருவிழா நடக்கும். சாமியை பாராட்டி பாட்டு பாடுவார்கள், நாடகம் நடத்துவார்கள், அதை மட்டும்தான் கேட்டு பழக்கப்பட்ட நம் சமூகம். (2000 வருடமாக நமக்கு சாமிக்கு பாடக்கூடிய பஜனை பாட்டை கேட்பதும், அதற்கான நாடகத்தை பார்ப்பதும்தான் நிலைமை.) அந்த காலகட்டத்தில் ”சாதி வேண்டாம்,  நல்லா படிங்க, ஆணும் பொண்ணும் சமம்” என தந்தை பெரியார் பேசும்பொழுதுதான், அவன் முதன் முதலாக கேட்க ஆரம்பிக்கின்றான். நீ பண்ணுவதெல்லாம் தவறு என சொல்கிறார். மேடை போட்டு பேசுகிறார்.

100 வருடத்துக்கு முன்னாடி இருந்தவர்கள் எந்த படிப்பும் படித்தவர்கள் அல்ல, அப்போது அவர்கள் மொழியில் எப்படி பேச வேண்டுமோ அப்படித்தான் அவர்களிடம் தந்தை பெரியார் பேசினாரே ஒழிய, இங்கே சீமான் வகையாறா போன்ற ஆட்கள் கூறுவதைப் போல பெரியார் பேசவில்லை. மக்களிடம் ஒரு கருத்தை சொல்வதற்காக, மக்களுக்கு புரியக்கூடிய வழியில்தான் தந்தை பெரியார் பேசுகிறார். ”நீ நல்லா படிக்கணும், நல்லா சாப்பிடணும்,  நல்லா வேலைக்கு போகணும்” என சொன்னால் கேட்க மாட்டான். ”நீ இப்படியே இருந்து என்னத்த உருப்பிட போற, ஒழுங்கா போய் படிச்சு தொலை” என்று நம் அப்பாக்கள் இடித்து சொல்லுவார்கள். இதுவே பெரியார் பேசுகின்ற முறை; இப்படி உன் மண்டையில உரைக்கனும் என்பதற்காக சொல்கிறார் என்று அர்த்தம்.

அன்றைக்கு படிக்காத மக்களாக இருந்தவர்கள் பலர். நூற்றுக்கு 95% பேர் படித்ததில்லை. 1947க்கு முன்னாடி நம் அப்பாக்கள் ஓட்டு போட்டதில்லை, அதற்கு உரிமையே கிடையாது, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நமக்கெல்லாம் ஓட்டு போடுகின்ற உரிமையை வாங்கிக் கொடுத்தார். அப்படிப்பட்ட காலகட்டத்தில் இவர்களுக்கு அரசியல் சொல்லித் தருகின்ற வேலையை தந்தை பெரியார் செய்கிறார்.

பெண்கள் ஆண்களுக்கு முன்னால் நின்று பேசக்கூடாது, பின்னால் நின்று பேச வேண்டும், கதவுக்கு பின்னால் நின்று பேச வேண்டும். அப்படிப்பட்ட காலத்தில் ”ஆணும் பெண்ணும் சமம்” என்று பேசுகிறார். அன்றைய காலகட்டத்தில் ஐந்து/ஆறு/ஏழு வயதிற்குள்ளாக பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். 10 வயதுவரை பெண் குழந்தை வீட்டில் இருந்தால் இன்னுமா திருமணம் செய்யவில்லை என சொல்லி ஏளனமாகப் பேசுவான். அப்படி பேசக்கூடிய காலகட்டத்திலே ”பெண்ணை படிக்க அனுப்பு; அந்த பெண்ணை வேலைக்கு அனுப்புங்கள்; அந்த பெண் தன்னுடைய உழைப்பிலே ஊதியத்திலே ஒரு ஆணுக்கு நிகராக தலை நிமிர்ந்து வாழ வேண்டும்” என்று சொன்னவர் தந்தை பெரியார். அதைத்தான் நாம் நன்றி உணர்ச்சியோடு பார்க்கின்றோம்.

அப்படிப்பட்டவரை  தமிழ் மொழியை இழிவு செய்துவிட்டார், தமிழை விட ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என பேசுகிறார்கள். அன்றைக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொண்ட ஒரே காரணத்தினால்தான் உயர் பதவிகளுக்கு போகலாம்; வெள்ளைக்காரனிடம் பேச முடியும்; வெளிநாட்டுக்கு போக முடியும்; வெளிநாட்டு கல்லூரிக்கு சென்று படிக்க முடியும்; மருத்துவராக, பொறியாளராக வேலை பார்க்க முடியும்; அதனால் ஆங்கிலம் படித்து மேல வா, பார்ப்பனர்களுக்கு நிகராக நின்று சண்டை போடு என சொன்னார். அதுதான் பெரியாருடைய பார்வை.

இன்றைக்கு எளிமையாக ஆங்கிலம் வந்துவிட்டது. இன்றைய நிலைமையில் இருந்து பெரியாரை அன்றைக்கு அணுக முடியாது. அன்றைக்கு எழுத்தே பாதி சமஸ்கிருதமாக இருக்கும். 1940-ல் வந்த பத்திரிக்கை படித்துப் பாருங்கள். அன்றைக்கு தமிழ் பத்திரிகையில் பெரியாரினுடைய ’விடுதலை’ பத்திரிகை மற்றும் ’குடியரசு’ பத்திரிகையை தவிர, பெருமளவிலே பார்ப்பனர் நடத்துகின்ற பத்திரிகையில் சமஸ்கிருத வார்த்தைகள்தான் இருக்கும். இன்றைக்கும் ’துக்ளக்’ வாங்கிப் பாருங்கள். அதில் அதிகமான சமஸ்கிருத வார்த்தை வைத்திருப்பான். சமஸ்கிருதத்தை வலிந்து திணிப்பார்கள். எச் ராஜா பேசுகின்ற பேச்சை பாருங்கள். சமஸ்கிருத வார்த்தைகள் தூக்கலாக ஒலிக்கும், ஆங்கிலம் தூக்கலாக ஒலிக்கும், அவர் தமிழ் மொழியிலே மக்களிடத்திலே தமிழ் மொழியினுடைய ஆளுமையோடு பேச விரும்பவில்லை. தமிழ் மொழியை ஆங்கிலத்தோடும் சமஸ்கிருதத்தோடும் கலந்துதான் பேச வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் பயிற்சி.

இன்றைக்கு டெல்லிக்காரனுடைய ஆதிக்கம் தேர்தல் வரை எதிரொலிக்கிறது. பாஜகவுக்கு யார் தேவையோ அவன் பெயரை எல்லாம் உள்ளே சேர்த்துக்கொள்கிறான். நம்முடைய ஓட்டை எல்லாம் கழித்து விடுகிறான். கர்நாடகாவில் ஒரே வீட்டின் முகவரியில் 83 பேர் இருப்பதாக கணக்கு காண்பிக்கிறான். தொழில்நுட்பம் நிறைந்து இருக்கக்கூடிய பெங்களூரில் ஒரு லட்சம் போலி வாக்காளர்களை ஒரு சட்டமன்ற தொகுதியில் சேர்த்திருக்கிறார்கள். உங்கள் தொகுதியில் புதிதாக யாராவது குடி வந்திருக்கிறார்களா? வடநாட்டை சேர்ந்தவன் வந்திருக்கிறானா? என கவனமாகப் பாருங்கள். இதுவரை ஓட்டு பெட்டியை வைத்து ஏமாற்றுகிறான் என்று நினைத்தால், ஓட்டுகளின் அட்டவணையையே மாற்றிவிட்டான். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 5 கோடி ஓட்டுகளை போலியாக மோடி அரசு சேர்த்து அதன் மூலமாக ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். இவ்வாறெனில் 2026ல் தமிழ்நாட்டில் வரக்கூடிய தேர்தலில் என்ன நிலைமை என்று யோசித்துப் பாருங்கள்.

நாங்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறோம். இந்தியாவினுடைய தேர்தல் ஆணயத்தை விட மிக மோசமான அமைப்பு எதுவும் கிடையாது. இந்தியாவினுடைய சனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கக்கூடிய அமைப்பாக இந்த தேர்தல் ஆணையம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் இப்பொழுது அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பீகாரில் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. கர்நாடகத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்காக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதைப் போன்றே ஒடிசாவில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் போலிகளாக பாரதிய ஜனதா கட்சிக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி வெல்ல வேண்டும் என்பதற்காக, மகாராஷ்டிரத்தில் இதுபோன்ற போலியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். நாளைக்கு தமிழ்நாட்டில் நடக்காது என நினைக்கிறீங்களா? அது நடக்கும்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட எட்டு தொகுதியில் மே 17 இயக்கத் தோழர்கள் பிரச்சாரம் செய்தோம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரைக்கும் நாங்கள் கூட இருந்தோம். நான் கோயம்புத்தூர்காரன். அந்த சமயத்தில் கோயம்புத்தூரில் அன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட அண்ணாமலைக்கு பெரிய ஆதரவு கிடையாது, பெரிய கட்சி கட்டமைப்பே கிடையாது. திமுக அதிமுக தனித்து நிற்கிறது. பாரதி ஜனதா கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை. அப்படி இருக்கக்கூடிய பிஜேபியில் அண்ணாமலை எப்படி அதிகமான வாக்குகளை வாங்க முடியும்? வாங்குவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. ஏனெனில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அன்றைக்கு இருந்தவர்கள் – தேமுதிக, பாமக இருந்தது. தினகரன் அவர்களுடைய அமமுக கட்சிக்கும் அங்கு பெரிய ஒரு வலிமை கிடையாது. எந்தவிதமான கூட்டணி வலிமையும் இல்லாத கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருந்தது. ஆனால் எப்படி அண்ணாமலை இரண்டாவது இடத்திற்கு வந்தார் என்பதுதான் எங்களது கேள்வி.

இதுகுறித்து தமிழ்நாட்டினுடைய மாநில கட்சிகள் கேள்வி எழுப்ப வேண்டும். நாங்கள் (மே 17) கேள்வி எழுப்புகிறோம். அண்ணாமலை கடந்த பாராளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூரில் நேர்மையான முறையில் வாக்குகளை பெறவில்லை என்று நாங்கள் பகிரங்கமாக தேர்தல் ஆணயத்தை குற்றம் சாட்டுகிறோம். இந்த மாதிரியான ஒரு ஏமாற்றுகின்ற முறையை தேர்தல் ஆணையம் செய்கிறது. இது தமிழ்நாட்டில் வருகின்ற 2026-ல் திமுக கூட்டணிக்கு மட்டுமல்ல, திமுக கூட்டணி இல்லாத பாரதி ஜனதா கட்சி கூட்டணியில் சேர விரும்புகின்ற கட்சிகளுக்கும் ஆபத்தாக இருக்கும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நாளைக்கு அதிமுகவை மிரட்டி கூட்டணி வைத்து பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் எடப்பாடி முதல்வர் ஆவாரா? பீகாரில் என்ன நடந்தது? கர்நாடகத்தில் என்ன நடந்தது? மராட்டியத்தில் என்ன நடந்தது? பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்து பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய கட்சி உடைக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி நபர்கள் முதலமைச்சர்களாகவோ துணை முதலமைச்சர்களாகவோ மாற்றப்படுகிறார்கள். அதே நிலைமைதான்.

கடந்த தேர்தலில் பாஜகவுக்கு வெறும் நான்கு எம்.எல்.ஏ சீட்டு பெற்றதற்கான ஒற்றை காரணம் அதிமுக போட்ட பிச்சை. அதிமுக கூட்டணியிலிருந்த காரணத்தினால்தான் பாரதிய ஜனதா கட்சி நான்கு சீட்டுகளைப் பெற்றது. அதுவும் கமலஹாசன் ஓட்டுகளை பிரிக்கவில்லை என்றால் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. அப்படிப்பட்ட நிலைமையில் இருந்த ஒரு கட்சி கூட்டணியை முடிவு செய்கிறார்கள். இத்தனை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த  அதிமுகவை மிரட்டி கூட்டணியில் வைத்திருக்கிறார்கள். நாளைக்கு ஒருவேளை வெற்றி பெற்றால், என்ன பண்ணுவாங்க? எடப்பாடி முதலமைச்சராக முடியாது. அதிமுகவை இரண்டாகப் பிளப்பார்கள். அதற்கு எஸ்பி வேலுமணியே உதவி செய்யலாம். செங்கோட்டைன் தற்போது செய்வது போல, கட்சியை இரண்டாக உடைத்து பாண்டிசேரியில் நடந்தது போல சூழ்ச்சி செய்வார்கள்.

அதிமுக கட்சியை காப்பாற்ற வேண்டும் எனில், பாரதிய ஜனதா கட்சியை விரட்டி விடுங்கள். அப்படி விட்டுக்கொடுக்க மனமில்லை என எடப்பாடி சொன்னால், எடப்பாடி அவர்களை விரட்டி விடுங்கள். வருகின்ற தேர்தலில் பிஜேபி ஒரு சீட்டு கூட வெல்ல மாட்டான். ஆனால் ஒருவேளை அதிமுக கூட்டணி வைத்து பிஜேபி ஒரு சீட்டு வென்றால்கூட, அந்த ஒரு சீட்டு வைத்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவார்கள். கைப்பற்றிய பின் எல்லா இடத்திலும் அவர்களுக்கு தேவையான நபர்களை உருவாக்கி உட்கார வைப்பார்கள். அதற்குப் பிறகு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத பின்னடைவை சந்திக்கும் என்பதுதான் மிக முக்கியம்.

ஆக தோழர்களே, இனி வரும் காலத்தில் (அடுத்து ஆறு/ஏழு மாதம்) பாஜக மிக மோசமாக பல்வேறு நிகழ்வுகளை செய்யும், கவனமாக இருங்கள். நாங்கள் தேர்தலில் போட்டியிடாத அமைப்புதான். ஆனால் தேர்தலில் யார் தோற்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக முடிவு செய்யக்கூடிய அமைப்பு மே பதினேழு இயக்கம். கடந்த தேர்தலில் எட்டு தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து நாம் பரப்புரை செய்து, அவர்களது வாக்குகளை சிதறடித்த பெருமை மே 17 இயக்கத் தோழர்களுக்கு உண்டு. பிஜேபிக்காரன் எங்களைப் பார்த்தால் மட்டும் ஏன் கலவரம் பண்ண வருகிறான் எனில், பிஜேபியினுடைய உண்மையான ஒரே எதிரி மே 17 இயக்கம் தான். ஒரு இயக்கம் எவ்வளவு எண்ணிக்கை என்பது முக்கியமல்ல.

விடுதலைப் புலிகள் அமைப்பை விட இலங்கையினுடைய ராணுவம் மிகப்பெரிய படையை வைத்திருந்தது . ‘எண்ணிக்கை முக்கியமல்ல, லட்சியத்தை நோக்கிய அந்த வேட்கைதான் முக்கியம்’ என்று விடுதலைப் புலிகள் நிரூபித்துக் காட்டினார்கள். சொற்ப எண்ணிக்கை வைத்திருக்கக்கூடிய அந்த வீரர்களை வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான சிங்களப் படையை விரட்டி அடித்தார்கள். ஆயிரக்கணக்கான தொண்டர்களை வைத்திருக்கக்கூடிய தமிழ் கட்சிகள் செய்ய முடியாததை விடுதலைப் புலிகள் சில நூறு பேர்களை வைத்து செய்தார்கள்.

எனவே எண்ணிக்கை முக்கியமல்ல, நேர்மையான துணிச்சலான இளைஞர்கள் மே 17 இயக்கத்தில் இருக்கிறார்கள். எந்தவித பதவிக்கும் ஆசைப்படாத நேர்மையான இந்த இயக்கம் கடந்த 16 வருடமாக எந்த குற்றச்சாட்டிற்கும், எந்த இழி சொல்லுக்கும் உட்படாத ஆட்படாத இயக்கமாக மே 17 இயக்கம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இதைவிட வேறு  என்ன பெருமை எங்களுக்கு வேண்டும்? இத்தனை அடக்குமுறைகள் வந்த பொழுதும் கூட கொள்கைகளை கைவிட்டார்களா? கிடையாது. சிறைச்சாலை வந்த பொழுதும், வழக்குகள் வந்த பொழுதும், வழக்குகள் குவிந்த பொழுதும், அனுமதிகள் மறுக்கப்பட்ட பொழுதும், வீதிகளிலே எங்கள் தோழர்கள் திரள முடியாத நிலை இருந்த பொழுதும், எங்கள் தோழர்கள் ஒரு அடி காலை பின்னே வைக்காமல் முன்னேறி நகர்ந்து சென்ற எங்களது தோழர்கள் இந்த மண்ணினுடைய புலிகள். அதனால்தான் எங்கள் கொடியில் புலி இருக்கிறது. தமிழன் கொண்டாடிய அந்த புலி, இத்தனை ஆயிரம் வருடங்களாக இந்த மண்ணை காத்த புலி.

 எங்கள் மரபுகளிலே புலி மிக முக்கியமானது. காலம் காலமாக தமிழனுடைய இந்த அடையாளம் தான் எங்களுக்கும் அடையாளம். அதுதான் எங்கள் (மே 17) கொடியில் இருக்கிறது. அந்த கருப்பு நிற நட்சத்திரத்தில் இருக்கக்கூடிய அந்தப் புலி, இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்க கூடிய சங்க காலத்தினுடைய புலி. எங்கள் கொடியில் சிவப்பு வண்ணம் இருக்கிறது. பொதுவுடமைதான் எங்கள் இலக்கு. அதற்கு முன்பாக பார்ப்பனியத்தை நாங்கள் வீழ்த்த வேண்டும். அதற்கு கருப்பும் நீலமும் இருக்கிறது. தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் எங்களுக்கு படையணியாக வருகிறார்கள், கருவிகளாக வருகிறார்கள். அந்தக் கொடியில் தமிழ் மரபு இருக்கிறது. அது ஆரியத்தை எதிர்த்த மரபு, சமத்துவத்தை போதித்த மரபு. மஞ்சளாக வெளிப்படுவது ஒரு போர் மரபு. தமிழினம் உலகம் முழுவதும் எல்லை கடந்து இந்த பொது உடமையை கொண்டு சென்று உலகம் முழுவதும் மானுட நேயத்தை தழைத்தோங்க செய்யும். எங்களுக்கு எல்லைகள் கிடையாது என்பதை சொல்லுவதற்காகத்தான் கொடிகளைத் தாண்டியும் எங்கள் நட்சத்திரங்கள் விரிந்து கிடக்கிறது என்பதை எங்கள் கொடியில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

எங்கள் நட்சத்திரம் கொடியை கடந்தது, எல்லை கடந்தது, தேசம் கடந்தது. நாங்கள் மானுடத்தை நேசிக்கின்றோம், மக்களை நேசிக்கின்றோம். எந்த இன மக்களாக இருந்தாலும் சரி, எந்த தேசத்து மக்களாக இருந்தாலும் சரி, அந்த மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் தான் மே 17 இயக்கம். பாலஸ்தீன மக்களினுடைய கோரிக்கையை பேசுவதற்காக, அந்த இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று நாங்கள் போராட்டம் நடத்தியதற்காக என் மீது யுஏபிஏ வழக்கை போட்டார்கள்.

ஆக தமிழீழமோ பாலஸ்தீனமோ மே 17 இயக்கம் துணிந்து நிற்கும். எப்பேற்பட்ட அடக்கு முறை வந்தாலும் எதிர்த்து நிற்பவர்கள் தான் மே 17 இயக்கத் தோழர்கள்.

நீங்களும் உங்கள் நண்பர்களும் எங்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளுங்கள். தமிழினம் உங்களை மரியாதையுடன் பார்க்கும். இப்படியான ஒரு இயக்கத்தை நீங்கள் சமகாலத்தில் கண்டிருக்க முடியாது. எங்கள் தோழர்கள் போர்க்குணம் உள்ள சமரசம் இல்லாத நேர்மையான தோழர்கள். எங்கள் தோழர்கள் அன்பானவர்கள்; நேசம் மிக்கவர்கள்; இயற்கையை நேசிக்கின்றோம்; மக்களை நேசிக்கின்றோம்; எங்களது இயக்கம் ஒரு குடும்ப இயக்கம்தான். தமிழ்நாட்டினுடைய அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய எங்களது தோழமை நண்பர்களோடு நீங்களும் ஒரு குடும்பத்தினராக இணைந்து கொள்ளுங்கள்.

தமிழினத்தினுடைய பெருமையை மீட்பது மட்டுமல்ல, தமிழினம் இழந்து கொண்டிருக்கக்கூடிய சுயமரியாதையை மீட்டெடுப்பதும், தமிழினத்தினுடைய இறையாண்மையை மீட்டெடுக்கூடிய ஒரு மாபெரும் போராட்ட வரலாற்றில் (2000 வருட வரலாற்றில்) நாமும் இணைந்து கொள்வோம் என்றுதான் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். அப்படிப்பட்ட போர்க்குரலை அப்படியான முழக்கத்தை நம்மிடத்திலே உணர்த்தியது  மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் எடுத்துரைத்துப் போராடிய தந்தை பெரியாருக்கு மே பதினேழு இயக்கத்தின் புகழ் வணக்கத்தை தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »