இயன்முறை மருத்துவர்களின் பணி நிரந்தர கோரிக்கைக்கான உண்ணாநிலைப் போராட்டம் – திருமுருகன் காந்தி உரை

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட இயன்முறை மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிப்ரவரி 9, 2026 அன்று திருச்சியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய நிறைவுரை:

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் இயன்முறை மருத்துவ சங்கத்தின் இந்த அறவழி உண்ணாநிலை போராட்டத்தை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கக்கூடிய இந்த அமைப்பினுடைய தலைவர் மருத்துவர் மரியாதைக்குரிய தோழர் உதயசங்கர் அவர்களுக்கும், இந்த நிகழ்வை தொடங்கி வைத்திருக்கக்கூடிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் மருத்துவர் தோழர் ரவீந்திரநாத் அவர்களுக்கும், நாங்கள் பெரிதும் மதிக்கக்கூடிய தமிழ்நாட்டில் அரசியல் கடந்து மக்கள் போராட்டத்திலே முன்னணியில் நிற்கக்கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொது செயலாளர் மரியாதைக்குரிய தோழர் மருத்துவர் ரோகையா அவர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய ஐயா வெள்ளமண்டி சோமு அவர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணி துணை செயலாளர் மரியாதைக்குரிய தோழர் சந்திரா ஜெகநாதன் அவர்களுக்கும், இந்த நிகழ்வின் நோக்கத்தை எடுத்துரைத்திருக்கக் கூடிய இந்த சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மரியாதைக்குரிய தோழர் மதனகோபால் அவர்களுக்கும், இந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய தோழர் மருத்துவர் பாரதிதாசன் அவர்களுக்கும், இந்த நிகழ்வில் இந்த போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றி விடை பெற்றிருக்கக் கூடிய தோழமைகளுக்கும், இங்கு திரண்டிருக்கக் கூடிய அனைத்து நண்பர்களுக்கும் தோழர்களுக்கும், நான் சார்ந்திருக்கக் கூடிய மே 17 இயக்கத்தின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்பானவர்களே! இந்த அரசாங்கத்தினுடைய கொள்கை திட்டத்தினை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த கோரிக்கைகளை பார்க்க வேண்டி இருக்கிறது. மருத்துவர் ரோகையா அவர்கள் இந்த துறையின் பணியின் முக்கியத்துவத்தையும் நீங்கள் கடந்த காலத்தில் செய்த பங்களிப்பு குறித்தும் மிக எளிமையாகவும், மிக நுணுக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் விளக்கி கூறினார்.

தமிழ்நாட்டின் சிறப்பம்சம் என்று திராவிட மாடல் அரசாக முன்னிறுத்தப்படுவது என்பதிலே மிக முக்கியமான கட்டமைப்பு என்பது மருத்துவ கட்டமைப்பு. அதேபோல் திராவிட மாடலின் மிக முக்கியமான முதுகெலும்பு கட்டமைப்பு என்பது கல்வி கட்டமைப்பு. நீங்கள் இரண்டு கட்டமைப்பிலும் முக்கிய பங்கை வகித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆக திராவிட மாடல் இயங்குகிறது என்றால், உங்களுடைய பங்களிப்பு இல்லாமல் திராவிட மாடல் இயங்கிவிட முடியாது. கல்வித்துறை, மருத்துவத்ததுறை பொது சுகாதாரத்தில் இருக்கக்கூடிய இந்த துறையை சார்ந்த பல்வேறு பணியாளர்கள் பணி நிரந்தரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஆண்டுதோறும் இதுபோன்ற பணி நிரந்தர கோரிக்கைகளுக்கான பல்வேறு போராட்டங்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்து வருகின்றேன். இப்போது நாங்கள் பங்கெடுக்கக்கூடிய போராட்டங்கள் எந்த ஊடகங்களிலும் வருவதில்லை. ஆனால் தினந்தோறும் என்ன செய்தி வருகிறது என்றால், கடந்த ஆட்சியில் போராடிய திருமுருகன் காந்தி இந்த ஆட்சியில் எங்கே போனார்? என்று கேட்கிறார்கள். ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 200 கூட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் எது செய்தியாகிறது எது செய்தியாவதில்லை என்பதை பொறுத்து தான் அது செய்தியாக வெளி வரும்.

“மின்சார துறையில் இருக்கக்கூடிய ஒப்பந்த ஊழியர்கள், பொதுப்பணித்துறையில் இருக்கக்கூடிய ஒப்பந்த ஊழியர்கள், ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு பயிற்சி ஆசிரியர்கள், செவிலியர்கள், தாய் சேய் மருத்துவமனையில் இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்கள், தூய்மை பணியாளர்களை ஒப்பந்த ஊழியர்களாக, மாநகராட்சி பெருநகராட்சிகளில்” என ஒவ்வொரு அடுக்குகளிலும் ஒப்பந்த ஊழியர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறு நாம் அனைவரையும் எடுத்துக் கொண்டோம் என்றால், தமிழ்நாட்டிலே மிகப்பெருமளவில் அரசாங்கத்தை நடத்தக்கூடியவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக இருக்கிறார்கள். இந்த ஒப்பந்த ஊழியர்களினுடைய எண்ணிக்கை மட்டுமே கிட்டத்தட்ட இரண்டு மூன்று லட்சம் பேருக்கும் அதிகமான பேராக இருக்கிறார்கள். இந்த லட்சக்கணக்கான தோழர்கள் பணியாளர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி அனைவரினுடைய கோரிக்கையும் வென்றெடுத்து விட முடியும். பலமுறை இந்த கோரிக்கையை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

நான் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் இதே கோரிக்கைக்காக, நீங்கள் சொல்லக்கூடிய அனைத்து கோரிக்கைகளையும், உங்கள் அமைப்பின் தலைப்பை மட்டும் மாற்றி விட்டோம் என்றால், இதே தலைப்பில் 10 அமைப்புகளுடைய பெயரில் போட முடியும். அனைத்து அமைப்புகளிடமும், சங்கத்திடமும் சொல்லக்கூடிய கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். அத்தனை அமைப்புகளும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினால் தான் இந்த கோரிக்கை வென்றெடுப்பது என்பது சாத்தியமாகும்.

நான் எதார்த்தத்தை பேச விரும்புகின்றேன். ஏனென்றால் ஒன்றிய அரசு தான் முதன்மை குற்றவாளியாக பார்க்க வேண்டும். ஒன்றிய அரசுதான் இந்த ஒப்பந்த ஊழியர் முறையை மாநில அரசுகளின் மீது திணித்து ஒரு கொள்கைத் திட்டத்தை கொண்டு வந்தார்கள். இந்த ஒப்பந்த ஊழியர் முறைக்கு எதிராக என்னுடைய அப்பா (ச.காந்தி) அவர்கள் மின்சார வாரியத்தில் தொழிற்சங்க தலைவராக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கியவர். அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்த ஒப்பந்த ஊழியர் முறை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வருபவர். எனக்கு இதை பற்றி நன்றாகவே தெரியும்.

இந்த ஒப்பந்த ஊழியர் முறையை கொண்டு வருவதற்கான காரணம் என்பது: அரசாங்கத்தினுடைய செலவுகளை நாங்கள் குறைக்கிறோம் என்று கூறினார்கள். ஆனால் உண்மையில் அது அல்ல, இந்த அமைப்புகளை எல்லாம் பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ஒப்பந்த ஊழியர் முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இந்த மொத்த மருத்துவ கட்டமைப்பையும், கல்வி கட்டமைப்பையும் பலவீனமாக மாற்றுவதற்கு தான் இந்த ஒப்பந்த ஊழியர் முறையை நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த துறைகளிலே அவர்களுக்கு விருப்பப்படுகின்ற தனியார் பெரு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு வேலைத்ததிட்டம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த அரசு பணியில் இருக்கக்கூடிய பணியாளர்களுக்கான நலத்திட்டங்களை வைத்து தனியார் நிறுவனங்கள். அதே போன்ற ஒன்றை  அவர்கள் தனியாருக்கு தர வேண்டும் என்கின்ற நெருக்கடி கொடுத்து விடக்கூடாது என்பதிலே மிக தெளிவாக ஒன்றிய அரசு இருக்கிறது. அந்த கொள்கை திட்டங்கள் மாநில அரசுக்கு கொண்டுவரப்பட்டு மாநில அரசும், அதிகாரிகளும் இதற்கு எதிரான ஒரு மனநிலையில் கடந்த 20 ஆண்டுகளாக இருக்கிறார்கள்.

சில துறைகளிலே பார்த்தோம் என்றால் கடந்த திமுக ஆட்சியில் கூட தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த திமுக ஆட்சி, தற்போது அல்ல 2009/2010 ஆண்டுகளில் போடப்பட்ட ஆணை அதற்கு பின்வந்த காலங்களில் ரத்து செய்யப் பட்டிருக்கிறது. பல துறையில் இருக்கக்கூடிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கின்ற அந்த ஆணைகள் கூட திரும்ப பெறப்பட்டிருக்கின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு தரவேண்டிய பணி நிரந்தரம் கூட இப்போது தரப்படவில்லை. அரசாங்க ஆணைகள் ரத்து செய்யப்பட்டு புது ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.

நான் உங்களிடத்தில் அவநம்பிக்கை விதைப்பதற்காக வரவில்லை. இந்த போராட்டங்களில் இது போன்ற பல கோரிக்கைகளில் தொடர்ச்சியாக பங்கெடுத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒருவன் என்கின்ற முறையிலே, அந்த அனுபவத்தை உங்களிடத்தில் நான் சொல்ல வேண்டியது இருக்கிறது. நீங்கள் உங்கள் போராட்டத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். நான் கிட்டத்தட்ட 20 போராட்டத்தை பார்த்திருக்கின்றேன். இதே கோரிக்கைக்காக 20 அமைப்புகளின் போராட்டக் கூட்டங்களில் நான் பங்கெடுத்திருக்கின்றேன். ஆக இதே கோரிக்கைகள் தான் அனைத்து இடங்களிலும் வருகின்றன.

அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளருக்கும் எது வசதியாக இருக்கிறது? என்றால், ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தனித்தனியாக போராடிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயமோ, தேவையோ, அவசியமோ இருப்பதில்லை. ஆகவே நாங்கள் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒரு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த கோரிக்கை வைத்திருக்கக் கூடிய அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவதற்கான முயற்சியை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த கட்டமைப்பு என்பது இது உங்களுடைய தனிப்பட்ட நலனுக்கான கோரிக்கையாக நாங்கள் பார்க்கவில்லை. இது சமூகத்திற்கான கோரிக்கை, மக்களுக்கான கோரிக்கை. பணி நிரந்தரம் என்பது சமூகத்தில் ஒரு நிலைத்த ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை கொண்டு வருவதற்குரிய வாய்ப்பு.

ஒரு அரசாங்கத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று எடுத்தால், கிட்டத்தட்ட 3 லட்சம் பேரை பணி நிரந்தரம் செய்தார்கள் என்று எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளரும், தமிழ்நாட்டினுடைய அரசு கட்டமைப்பு வலுபெறும். தமிழ்நாடு இன்னும் அதிகமான உயரத்தை எட்டும். ஒரு பணி நிரந்தரம் என்பது ஒரு குடும்பத்திற்க்குள் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் கொண்டு வருகிறதென்று பார்த்திருக்கிறோம்.

ஒரு பணி நிரந்தரம் பெற்றதனால் அரசு பணியில் இருக்கக்கூடியவர் துணிந்து ஒரு வீடு கட்டுவார், வீட்டுக்கு கடன் வாங்குவார், வாகனம் வாங்குவார். இன்னும் பல்வேறு முதலீடுகளை செய்ய ஆரம்பிப்பார்கள். தங்கள் குழந்தைகள் இன்னும் மேலதிகமாக படிக்க வைப்பதற்கான முயற்சிகளை துணிந்து முன்னெடுப்பார்கள். ஆக ஒரு பணி நிரந்தரம் என்பது சமூக வளர்ச்சிக்கு துணையாக இருக்கக்கூடிய ஒரு அரசினுடைய கொள்கை திட்டம்.

பணி நிரந்தரம் என்பது அரசாங்கத்தை செலவிடமிருந்து காப்பாற்றக்கூடிய விஷயம் அல்ல, அரசாங்கத்தை வலுபடுத்தக்கூடிய திட்டம். சமூகத்தை வலுபடுத்தக்கூடிய விசயம்.

ஒரு பணி நிரந்தரம் செய்து, தற்போது 25000,15000 கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், அதை நாங்கள் ஏன் 50,000 கொடுக்க வேண்டும் என எந்த அதிகாரியாவது கேட்டார்கள் என்றால், தோழர்களே திரும்ப கூறுங்கள் நீங்க கொடுக்கூடிய பணம் திரும்ப இதே சமூகத்துக்கு தான் வரப்போகிறது. இதே மக்களிடத்தில் தான் நாங்கள் செலவு செய்ய போகிறோம். இதே சமூகத்தை நாங்கள் கட்டமைக்க போகின்றோம்.

ஆக செலவினமாக அவர்கள் பார்க்கக்கூடிய அந்த கொள்கை திட்டத்தை எதிர்த்து நின்று ஒரு வலிமையான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதை செய்தால் மட்டும்தான் இந்த மக்களுடைய, அதிகாரிகளுடைய, ஆட்சியாளர்களுடைய மனநிலையை மாற்ற முடியும். இல்லையென்றால் முடியாது. உங்களுடைய பணி மிக முக்கியமான பணி. செவிலியர்கள் இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல், இது போன்ற பிசியோதெரபிஸ்ட் இல்லாமல் எந்த மருத்துவ கல்வி கட்டமைப்பும் இயங்கிவிட முடியும்? எந்த அரசு கட்டமைப்பும் இயங்க முடியாது. ஆனால் இதை ஏன் திரும்ப திரும்ப கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள்? அடுத்தக் கட்டமாக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பணிகளில் இருக்கக்கூடிய பணியாளர்கள் எந்த சமூக பின்புலத்திலிருந்து வருகிறார்கள்? பிற்படுத்தப்பட்ட மிக பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்திலிருந்து, பழங்குடி சமூகத்திலிருந்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நகரம் அல்லாத கிராமப்புறங்களிலிருந்து வரக்கூடிய இந்த இளைஞர்களுக்கான பணி நிரந்தரத்தை கொடுத்தால் தான் திராவிட மாடல் என்பது சமூகநீதி மாடலாக இருக்க முடியும்.

ஒரு அரசாங்கத்தை விமர்சிப்பது என்பது வீழ்த்துவதற்காக அல்ல, அந்த அரசாங்கத்தை வலுபடுத்துவதற்காக என்பதை அந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களை பொதுவாக சொல்லுவார்கள், எங்கள் இயக்கம் திமுகவை விமர்சித்து கொண்டே இருக்கிறீர்கள் என்று. ஒரு விமர்சனம் என்பது எதற்காக இருக்க வேண்டும் என்றால், ஒரு ஆட்சி முறை என்பது அறவழியிலே தொடர்ச்சியாக நீடிக்க வேண்டும் என்கிற விருப்பத்தின் அடிப்படையில் தான் கூறுகின்றோம். ஆக நாங்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு என்ன கூற விரும்புறோம் என்றால், உங்கள் அதிகாரிகள் ஆயிரம் காரணம் கூறுவார்கள். அதிகாரிகள் ஓட்டு போட வரமாட்டார்கள், சாமானிய மக்கள் தான் வாக்களிக்க வருவார்கள். ஆகவே சாமானிய மக்கள் பணியாளர்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்துதான் இந்த கொள்கை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அன்பானவர்களே! உங்கள் போராட்டம் என்பது மிக மிக முக்கியமானது. போராட்டம் என்பது இல்லாமல் எந்த கோரிக்கையும் வெற்றி பெறாது. பொதுவாக நமக்கு என்ன எண்ணம் இருக்கும் என்றால், போராடாமல் இயல்பாகவே எல்லாம் கிடைத்திடும் என நினைக்கிறோம். அரசாங்கத்தினுடைய அரசாணை (ஜிஓ) வந்து விட்டால் நமக்கு எல்லாமே நல்லது நடந்து விடும் என நினைக்கக்கூடிய பலரை நான் பார்த்திருக்கின்றேன். அந்த அரசாணை சிறிது நேரம் கழித்து தள்ளுபடியாவதையும் பார்த்திருக்கிறேன். அல்லது அந்த ஜிஓ ஓவர் சூப்பர்சீட் செய்து வரக்கூடிய உத்தரவை நான் பார்த்திருக்கிறேன். போராடாமல் உங்களுடைய உரிமை உறுதி பெறாது.

அதே போல் ஓரிரு போராட்டங்களால் மட்டுமே வெற்றி பெறாது என்பது என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும், நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இந்த போராட்டம் என்பது ஒற்றுமையை வலியுறுத்தி இருக்கிறது. ஒற்றுமையை பறைச்சாற்றி இருக்கிறது. இன்றை காலை நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக 250 பேர் வந்திருக்கிறார் என்று தோழர்கள் சொன்னார்கள். இதைவிட பெரிய வெற்றி எதுவும் இருக்காது.

ஒரு போராட்டத்தில் வெற்றி என்பது ஒற்றுமைதான். ஒற்றுமைதான் முதல் கட்ட வெற்றி. அதற்கு அடுத்து நாம் கோரிக்கையில் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று உறுதியாக நிற்பது என்பது அடுத்த கட்ட வெற்றி. இந்த இரண்டும் இருந்தால் அந்த போராட்டத்தை அதனுடைய இலக்கை நோக்கி நகர்த்தி விட முடியும்.

பொதுவாக நம் ஆட்கள் என்ன கேட்பார்கள் என்றால், நாங்கள் அன்றைக்கு உண்ணாவிரதத்துக்கு வந்தோம், நீங்கள் சொன்ன ஆர்பாட்டத்துக்கு வந்தோம். சென்னை வரைக்கும் வந்தோம், திருச்சி வரைக்கும் வந்தோம், ஒன்றும் நடக்கவில்லை என கூறுவார்கள். ஒரு கோரிக்கை என்பது ஒரு நிகழ்ச்சியினாலோ, ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டத்தினாலோ வெற்றி பெறாது. ஆனால் இந்த போராட்டம் உங்களுடைய ஒற்றுமையை பறைசாற்றிருக்கிறது. தோழர் ரோகையா பேசும் பொழுது கூறினார், கிட்டத்தட்ட 350 பேர் இந்த பணியில் இருப்பதாக சொன்னார்கள். 250 பேர் போராட்டத்துக்கு வந்திருக்கிறார்கள் என்பது என்று அர்த்தம்? இந்த ஒட்டுமொத்த சமூகமும் இந்த கோரிக்கைக்காக ஒன்றுபட்டு நிற்கிறது என்று அர்த்தம். இந்த போராட்டம் இந்த அளவில் வெற்றி பெற்றுள்ளது என்று அர்த்தம். நம்முடைய பெரிய சிக்கலே என்னவென்றால், பெரிய எண்ணிக்கையில் இருக்கும் போது போராட்டத்திற்கு வருவது குறைவாகத் தான் இருப்பார்கள்.

இந்திய விடுதலை போராட்டத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் போராடி இருந்தது என்றால் அது 200 ஆண்டுகள் முன்னர் விடுதலை அடைந்திருக்கும். இதே திருச்சியில் தான் வந்து மருதுபாண்டியர்கள் இந்தியாவினுடைய முதல் விடுதலை பிரகடனத்தை முதன்முதலில் ஒட்டுகிறார்கள். மருதுபாண்டியர் காலத்தில் எல்லாரும் வந்து இருந்தால் வெள்ளைக்காரன் அன்றைக்கே ஓடியிருப்பான். ஆனால் என்றைக்கும் போராட விரும்புகின்ற சமூகம் மிக குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கும். அதிகபட்சம் 5% வந்திருப்பான் காந்தி காலத்திலேயே. அதுவே அதிகம் நான் கூறுவது. இந்திய விடுதலை போராட்டம் என்றால் வீதியிலே ஒட்டுமொத்த இந்திய மக்கள் இறங்கி போராட்டம் செய்தார்கள் என்று நினைக்க வேண்டாம். அன்றைக்கும் போராட்டத்தில் பங்கெடுக்காமல் மற்றவன் போராட்டத்தை வேடிக்கை பார்த்த கூட்டம் என்றைக்குமே இருக்கும். ஆனால் பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்து விட்டார்கள் என்றால் அந்த கோரிக்கை வெற்றி பெற்றுவிடும். அந்த வகையில் இந்த கோரிக்கைக்கு இத்தனை பேர் ஆதரவு கொடுத்து துறை சார்ந்த அத்தனை பேரும் வந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட 250 பேர் வருவது என்பது பொதுவாக நடக்காது. சாமானியமாக நடக்காது. அந்த வகையில் மிக சிறப்பாக உங்கள் உங்கள் ஒற்றுமையை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் மிகவும் திறம்பட இந்த போராட்டம் என்பது ஒழுங்கமைக்கப் பட்டிருக்கிறது.

ஆக தோழர்களே! இந்த பணி நிரந்தர கோரிக்கை, பிஎப்ஐ உடனடியாக அவர்கள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்கின்ற கோரிக்கை எல்லாம் மிக மிக முக்கியமான கோரிக்கை. இந்த போராட்டத்தை நீங்க மேலும் விரிவுப்படுத்துங்கள். எந்தெந்த மருத்துவமனைகளிலோ, எந்தெந்த ஊர்களில் வேலை செய்கிறீர்களோ, அந்த ஊர்களிலே இந்த கோரிக்கைகள் குறித்த விழிப்புணர்வை தயவு செய்து ஏற்படுத்துங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த போராட்டத்தை மேலும் தீவிரமாக்குங்கள். ஏனெனில் தேர்தலுக்கு முன்புதான் அதிகாரிகளுக்கு காது முளைக்கும். ஏன் அதிகாரிகள் காது முளைக்கும் என்றால், அப்பொழுதுதான் ஆட்சியாளர்களுக்கு குரல் ஒலிக்கும். அப்போது தான் அவர்கள் கண்கள் திறந்து பார்த்து நடக்கும். கடந்த ஆட்சியில் கொடுத்த வாக்குறுதி என்பது தேர்தலுக்கு முன்பாக பல வாக்குறுதி நிறைவேறுவதை பார்த்து கொண்டிருக்கிறோம். ஆகவே உங்களுடைய கோரிக்கை வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ள கோரிக்கை. நீங்கள் இந்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துங்கள். இதே போன்று ஒப்பந்த ஊழியராக இருக்கக்கூடிய பிற பணியாளர் அமைப்புகளோடு சேர்ந்து ஒரு பெருந்திரளான போராட்டத்தை நடத்துங்கள். 1500 பேர் 2000 பேர் இருக்கக்கூடிய பல போராட்டங்களை நான் பார்த்து விட்டேன். எல்லாரும் ஒன்றாக சேர்ந்தால் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் ஒன்று சேர்வார்கள்.

தற்போது ஜாக்டோ ஜியோக்கு வாங்கி இருக்கிறார்கள் இல்லையா! புதிய ஓய்வூதிய திட்டத்தை எப்படி வாங்கினார்கள்? அது பல பல சங்கங்களின் கூட்டமைப்பாக இயங்குகிறது. அது மிகச் சரியான காலத்திலே அந்த நெருக்கடியை அரசுக்கு கொடுத்து தங்களுக்கான கோரிக்கை வென்றெடுத்திருக்கிறார்கள். கடந்த தேர்தலின் பொழுதே கொடுக்கப்பட்ட வாக்குறுதி ஐந்து ஆண்டு காலம் கழித்து இந்த தேர்தல் காலத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஆக நாங்கள் அதை தான்  விரும்புகிறோம். உங்கள் சங்கத்தையும் நாங்கள் அழைக்கின்றோம். அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைக்கக்கூடிய முயற்சி நாங்களும் முன்னெடுக்கின்றோம். நீங்கள்தான் ஒத்துழைப்பு தரவேண்டும். செவிலியர்கள் போராட்டம் சென்னையில் ஏராளமான போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். எண்ணற்ற அடக்கு முறைகளை எதிர் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் நஞ்சம் அடக்கு முறை இல்லை. எந்த ஆட்சியாக இருந்தாலும் அடக்க முறை எதிர் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் என்ன அடக்கு முறை எல்லாம் பார்த்தோமோ இந்த ஆட்சியில் நாங்கள் பார்த்திருக்கின்றோம். அதேபோல் மாற்று திறனாளிகள் போராட்டம் இதே போலத்தான் இப்பொழுதும் நடந்தது.

இப்படி எல்லா ஆட்சியிலும் இந்த போராட்டம் என்பது ஒரே விதமான முறையில் தான் அடக்கி ஒடுக்கப்படுகிறது. ஆனால் அதை கடந்து வீரியமாக செயல்பட வேண்டும் என்றால் நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். அப்பொழுதுதான் நம்பிக்கை வரும் அப்போது தான் அனைவருக்கும் நம்பிக்கை வரும். எத்தனை காலம்? கிட்டத்தட்ட 20  ஆண்டு காலம் பணி நிரந்தரம் இல்லாமல், வேறு வேலைக்கும் செல்வோம்? இல்லையா? இல்லை இந்த பணி நிரந்தரம் ஆகிடுமா? இத்தனை ஆண்டுகள் வேலை பார்த்து விட்டோமே இன்னும் கொஞ்ச நாள் பணி நிரந்தரம் ஆகிவிட்டால் என்ன செய்வது? அந்த குழப்பத்தில் வாழ்க்கை ஓடி விடும். அதுதான் பெரும் துயரம். இருப்பதில் பெரும் துயரம் அதுதான். இதிலிருந்து ஒரு படி முன்னாடியும் போக முடியாது. வேற எப்பவும் திரும்பி போகவும் முடியாது. பணி நிரந்தரத்தை உறுதி செய்யக்கூடிய போராட்டத்தை தீவிரமாக எடுங்கள். அதுதான் முதல் கட்ட போராட்டம். அது தான் முதல் கட்ட போராட்டம். “பிசியோதெரபி” யில் ஒரு விஷயம் திரும்ப திரும்ப செய்ய வேண்டும் என கூறுவீர்கள் இல்லையா? பயிற்சி (பிராக்டீஸ்) செய்யுங்கள். போராட்டம் அதே பிராக்டிஸ் தான் திரும்ப திரும்ப செய்து கொண்டே இருப்பது தான் ஒரே வழி. அரசாங்கம் வந்து அப்படியே அசையாமல்(பீரீஸ்) நின்று விட்டது. அதன் கை தூக்கவில்லை. கால் தூக்க முடியவில்லை. அப்படி எனில் அதற்கு நாம் பயிற்சி (எக்சைஸ்) கொடுத்துதான் அதை வேலை பார்க்க வைக்க வேண்டியிருக்கிறது. அந்த மாதிரி இந்த அரசாங்கத்துக்கு பிசியோதரபி வேலை கொடுக்காமல் அரசாங்கம் இயங்காமல், செயல்படாமல் கிடக்கிறது. சில சமயம் அதிகாரிகளுக்கு பக்கவாதம் இருக்கிறது. அது சமூகநீதி பக்கவாதமாக இருக்கிறது. அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கக்கூடிய பணியை நமது போராட்டம் தான் செய்யும். அப்போது தான் விழித்து பார்க்கிறார்கள். இல்லை என்றால் பார்ப்பதில்லை.

போராடாமல் எதுவுமே கிடைக்காது. நீங்கள் செய்வது உங்கள் நல்லதுக்காக மட்டும் என்று கூறவில்லை. சமூகத்துக்கு நல்லது. இன்றைக்கு என்ன தைரியத்தில் ஒருத்தர் பிள்ளைகளை செவிலியர் (நர்சிங்) படிப்பதற்கோ பிசியோதெரபி படிப்பதற்கோ போக முடியும்? ஒரு மரியாதைக்குரிய வேலை கிடைக்கும். அரசாங்கத்தில் தங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்வார்கள். அதற்கான வாய்ப்பு அரசாங்கமே திறந்து வைக்கவில்லை என்றால் பின்பு என்ன அரசாங்கம் அது?

நான் திமுக ஆட்சிக்கு சொல்லிக் கொள்ளவது, இங்கு உளவுத்துறை சார்ந்தவர்கள் இருப்பீர்கள். தயவு செய்து ஆட்சியாளர்களுக்கு தகவலை கொண்டு போய் சேர்த்து விடுங்கள். நீங்கள் மருத்துவ துறையிலும், கல்வித்துறையிலும் நிரந்தர பணியாளர்களை வைக்காமல் திராவிட மாடல் ஆட்சியான இந்த மருத்துவ கல்வி கட்டமைப்பை இந்தியாவிலே சிறந்த கட்டமைப்பு என்று நீண்ட காலம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

பணி நிரந்தரம் செய்தால் மட்டும்தான் இந்த கட்டமைப்பு என்பது அடுத்த கட்டத்திற்கு நகரும். இல்லையென்றால் இது பக்கவாதத்தில் வீழ்ந்து போகும் என்பதை இந்த சமயத்தில் அரசாங்கத்துக்கு சொல்லிவிடுங்கள்.

ஆக தோழர்களே இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்துங்கள். எங்களால் முடிந்த அளவுக்கு இந்த செய்தியை மேலே கொண்டு செல்கின்றோம். மரியாதைக்குரிய தோழர் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள் இந்த கோரிக்கை குறித்து பேசி இருக்கின்றார். அவரிடம் எங்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய நம்பிக்கை என்னவென்றால், எந்த ஒரு சிறு விடயத்தை அவரிடம் கூறினாலும் மறக்காமல் எந்த இடத்தில் அதை கொண்டு போய் சேர்க்க முடியுமோ அதை சேர்க்கக்கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் நான் தமிழ்நாட்டிலே அவரை பார்க்கின்றேன். எதுவுமே சின்ன கோரிக்கை பெரிய கோரிக்கை முக்கியமான கோரிக்கை வாக்குகளுக்காக வரக்கூடிய கோரிக்கை என்று பிரித்து பார்க்காமல் அந்த கோரிக்கை இந்த பொறுப்பிலிருந்து அதை சாத்தியப்படுத்துவதற்கு என்ன முயற்சிகளை எடுக்க முடியுமோ, அதை நேர்மையாக எடுக்கக்கூடிய ஒரு பொறுப்புமிக்க பாராளுமன்ற உறுப்பினராக நான் அவரை பார்த்திருக்கின்றேன். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் உங்களுடைய பொறுப்பாளர்கள் அவரை சென்று சந்தித்தால் இதற்குரிய வாய்ப்புகளை குறித்து அவரே உங்களுக்கு சொல்வார். தேவைப்பட்டால் அதற்குரிய அமைச்சர்களை சென்று சந்திப்பதற்குரிய அந்த வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்பார் என உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால் அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவருக்கு  இதை பற்றியான பார்வை இருக்கிறது.

ஆக தோழர்களே, இது குறித்தான ஒரு வலிமையான ஒரு முன்னகர்த்தல் என்பது அனைத்து வகையிலும் நீங்கள் முன்னெடுக்க வேண்டும். இதை விட்டு விடாதீர்கள். எப்போது தேர்தல் அறிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு மாதத்திற்குள் அறிவிக்க போகிறார்கள். அதற்குள்ளாகவே இதை தீவிரப்படுத்துகின்ற பணியை செய்யுங்கள். இல்லையென்றால் மறுபடியும் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டியது தான். ஆக இந்த உண்ணாநிலை போராட்டம் என்பது உங்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கை கொடுத்திருக்கும். அவநம்பிக்கை தயவு செய்து எந்த போராட்டத்தில கொண்டு வந்து விடாதீர்கள். எந்த போராட்டமும் ஒரு நீண்ட கால போராட்டம்தான். இந்த கோரிக்கையும் ஒரு நீண்ட கால கோரிக்கைதான். அந்த வகையில் இந்த கோரிக்கையினுடைய அனைத்து அம்சங்களும் மிக மிக மிக முக்கியமானவை.

உங்களுக்கு பணி நிரந்தரம் செய்தால் 350 பேருக்கு பணி நிரந்தரம். அது மட்டுமில்லாமல் 10 சிறப்பு ஆசிரியர்கள் அவர்களும் சேர்ந்து 360 பேருக்கான பணி நிரந்தரம் நடந்தது என்றால், இதை வைத்துக்கொண்டு பிற பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம் நடப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. அனைத்து பணியாளர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. தயவு செய்து அழுத்தத்தை கொடுத்து ஒரு ஜி.ஓ போட வையுங்கள். பணி நிரந்தரத்தை கொண்டு வர வையுங்கள். அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அதை நாங்கள் நிச்சயமாக செய்கின்றோம். சென்னையில் உங்கள் போராட்டத்திற்கான அனைத்து உதவிகளும் எங்களால் இயன்ற அளவு என்னென்ன உதவிகளோ அதை நாங்கள் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். இன்னும் மேலதிகமான இயக்கங்களினுடைய ஆதரவை திரட்ட வேண்டும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த போராட்டம் வலுபெறுவதற்குடைய அனைத்து வேலைகளும் செய்வதற்கு  தயாராக உள்ளோம்.

தோழர் மருத்துவர் ரோகையா அவர்கள் கூறியது போல் ஒரு மருத்துவ சிகிச்சை வெற்றி பெற வேண்டும் என்றால் சில முக்கியமான துறைகளில் முக்கியமான துறைகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் பிசியோதெரபிஸ்ட் இல்லாமல் நடக்காது. திருச்சியில் வேண்டுமானால் சாலைகள் நன்றாக இருக்கிறது. எல்லா ஊர் சாலைகளும் நன்றாக இல்லை. ஒன்று சாலைகள் நன்றாக போடுங்கள். பிசியோதெரபிஸ்ட் வேலை குறையும் அல்லது பிசியோதெரபிக்கு நல்ல சம்பளத்தை கொடுங்கள் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சாலைகள் போட்டு செல்லுங்கள். இது இரண்டு தான் சொல்ல முடியும். எல்லா ஊரிலும் நன்றாக இருக்கா?  இல்லை. அதனால் தான் இந்த டிசபிலிட்டிஃபேக்டர்ல்லாம் ஏன் வருகிறது எனில், இந்த காரணிகளால் தான் எல்லாம் நடக்குது. அதனால் இந்த விஷயங்களை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.

மிக முக்கியமான விஷயம் எல்லா கூட்டத்தில கூறுகிற ஒரு விஷயத்தை நான் சொல்லிவிடுகிறேன். உடல் நலம் ஆரோக்கியம் என்பது ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தோடு தொடர்புடையது. அதனால் தான் இந்த மருத்துவத்ததுறை என்பது அரசு துறையாக இருக்கும். எந்த நாட்டில் எல்லாம் மருத்துவத்துறை அரசுத் துறையாக இயங்குகிறதோ, அந்த நாட்டில் எல்லாம் பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமாக இருக்கும். ஏனென்றால் தன்னுடைய குடிமக்களினுடைய உடல் நலம் நல்லபடியாக இருந்தால் தான் அவர் உழைக்க முடியும். அவர் உழைத்தால் தான் நாட்டில் உற்பத்தி பெருகும். உற்பத்தி பெருகினால் தான் நாட்டினுடைய பொருளாதாரம் வளரும். அப்படி நாட்டின் பொருளாதாரம் வளர்வதற்கு சுகாதாரம் மிக மிக முக்கியமான கட்டமைப்பு. அதனால்தான் எபிடமிக்கோ (Epidemic) பண்டமிக்கோ (pandemic)எதுவாக இருந்தாலும் சுகாதாரத்துறை களத்தில் இறக்கப்படுகிறது. இந்த சமூகத்தினுடைய ஒட்டுமொத்த சுமையும் இந்த மருத்துவ கட்டமைப்பின் மீது வைக்கப்படுகிறது. மருத்துவ கட்டமைப்பு சரியாக இல்லை என்றால் பொருளாதார வளர்ச்சி இருக்காது. அப்போது தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி, திராவிட மாடலுடைய வளர்ச்சி, நாங்க எட்டு  ஜிடிபி வளர்ச்சி காண்பிக்கின்றோம். அப்படி எனில், அது பொருளாதாரத்துறை கட்டமைப்பின் மேல் இயங்குகிறது.

நான் திமுக மேல் விமர்சனமாக சொல்கிறேன். நீங்கள் திரும்ப திரும்ப என்ன கூறுகிறீர்கள் என்றால் எங்கள் கல்வி கட்டமைப்பு நன்றாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள் அதுவே விமர்சனத்துக்குரியதுதான். ஆனால் மருத்துவ கட்டமைப்பு பற்றி பேசுங்கள்.

தமிழ்நாட்டினுடைய மிகச் சிறப்பான மருத்துவ கட்டமைப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் தமிழ்நாட்டிலே பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகிறது. கல்வி கட்டமைப்பு என்பது குழந்தைகளுக்கானது மாணவர்களுக்கானது. ஆனால் மருத்துவக் கட்டமைப்பிலே பெரும்பகுதி யாருக்கு இருக்கிறது என்றால், உழைக்கின்ற மக்களுக்காக இருக்கிறது. உழைக்கின்ற மக்களுக்கான மருத்துவ கட்டமைப்பு சரியாக இருந்தால்தான் உழைப்பு நடக்கும். உழைப்பு நடந்தால்தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். ஆக உங்களது பங்களிப்பு என்பது பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமும் பங்களிக்கக்கூடிய ஒரு துறை. அதில் 360/370 பேர் பணி நிரந்தரம் செய்வது ஒன்றும் கடினமான விஷயம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உங்க துறையில் இன்னும் அதிகமான காலியிடங்கள் இருக்கும் என நினைக்கிறேன். குறைவாக தான் வைத்து இருப்பார்கள் என நினைக்கிறேன். நான்கு ஆட்கள் வேலையை உங்கள் தலையில் சுமத்தி இருப்பார்கள் என நினைக்கிறேன். உண்மையா இல்லையா?

70% காலி பணியிடங்கள் இருக்கிறது என்கிறீர்கள், அப்போது என்ன இருக்கிறதென்றால் பணிச்சுமையும் அதிகமாக இருக்கிறது. பணி நிரந்தரமும் இல்லாமல் இருக்கிறது பணிச்சுமையை பற்றி போட வேண்டும் என நினைக்கிறேன். பணியாளர் எண்ணிக்கை மேலும் அதிகப்படுத்துங்கள் என போடுங்கள் தயவு செய்து. நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும். ஆக இந்த கட்டமைப்பெல்லாம் பாதுகாக்கவில்லை. இது குறித்த கொள்கை (பாலிசி) அரசு எடுக்கவில்லை என்றால் அதிக சிரமத்துக்கு உள்ளாகும். ஆகவே இந்த போராட்டம் நீங்கள் என்றைக்கு நடத்தினாலும் கூப்பிடுங்கள். நாங்கள் நிச்சயமாக போராட்டத்திற்கு வருகின்றோம். போராட்டத்தில் உங்களோடு துணையோடு நிற்கிறோம். எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் சரி. அமைதி வழி அறவழி போராட்டமாக இருந்தாலும் சரி, சிறை செல்லும் போராட்டமாக இருந்தாலும் சரி எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கோரிக்கை வெல்லுகின்ற வரை நாங்கள் உங்களோடு இருப்போம். அந்த வாக்குறுதியை என்னால் தர முடியும். இந்த கோரிக்கையை முன்னகர்த்தி கொண்டு செல்வதற்கு எங்களால் இயன்ற வழிமுறைகளை நாங்கள் நிச்சயமாக செய்கிறோம். நம்பிக்கையுடன் போராடுங்கள்.

இந்த போராட்டம் வென்றால் தமிழ் சமூகம் மகிழ்ச்சி அடையும். உங்கள் குடும்பம் மட்டுமல்ல தமிழ் சமூகத்தினுடைய கோரிக்கை. அந்த வகையில் பொதுக் கோரிக்கையை முன்வைத்த அனைத்து தோழர்களுக்கும் மே17 இயக்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »