கனடா நாட்டில் வாழ்ந்த காலிஸ்தான் டைகர் போர்ஸ் இயக்கத்தின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அதிகாரிகள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டிய பின் இரு நாடுகளிடையே தூதரக உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் செப்டம்பர் 19, 2023 அன்று தனது முகநூல் கணக்கில் வெளியிட்ட பதிவு.
காலிஸ்தான் பயங்கரவாதி என ஹர்தீப்சிங் நிஜ்ஜார் என்பவரை இந்திய மோடி அரசு முத்திரை குத்தியது. சீக்கிய மக்கள் மீதான படுகொலைக்கு நியாயம் கேட்கும் குழுவை உருவாக்கியது, காலிஸ்தான் விடுதலை குழுவை உருவாக்கியது என பல அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஹர்தீப் மீது பாஜக அரசிற்கான கடும்கோபம் என்பது, ஹர்தீப் இந்திய அரசிற்கு எதிராக நடத்திய போராட்டங்கள் மட்டுமல்ல, ஏனெனில் இப்போராட்டங்கள் காலம் காலமாக நடந்து வருகின்றன. ஆனால் 2009-இல் ஆர்.எஸ்.எஸ்.-ன் சீக்கிய பிரிவின் தலைவர் ருல்டாசிங்கை பஞ்சாப்பில் காலிஸ்தான் போராளிகள் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு உண்டு. இக்கொலையில் இவருக்கு தொடர்பிருப்பதாக மோடி அரசு சந்தேகிக்கிறது. இது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பஞ்சாபில் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள்.
காலிஸ்தான் போராளிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ்.-க்குமான சண்டை நீண்ட வரலாறு கொண்டது. சீக்கியரை இந்து மதத்தவராக முத்திரை குத்தும் இந்துத்துவ குழு, 1984-ல் நடந்த சீக்கிய இனப்படுகொலையில் மிக முக்கிய பங்கு வகித்ததை பல சீக்கிய தலைவர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இந்துத்துவ பயங்கரவாத குழு பல்லாயிரக்கணக்கான சீக்கிய படுகொலைக்கு காரணமானவர்கள் எனும் குற்றச்சாட்டில் ஆர்.எஸ்.எஸ் நபர்கள் படுகொலையாகின்றனர். ஆர்.எஸ்.எஸ் சீக்கியரில் தமக்கான ஆட்களை (அண்ணாமலை போல) உருவாக்கி அம்மக்களை பிரிக்கின்றனர். இந்த விபீசணர்களை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை ஆர்.எஸ்.எஸ்.-லிருந்து மோடி அரசுக்கு எழுந்திருக்கும் நிலையிலேயே ஹர்தீப்சிங் படுகொலை கனடாவில் நடந்திருக்குமென நம்பப்படுகிறது.
வெளிநாட்டில் வைத்து இந்தியாவின் அரசால் குற்றம் சாட்டப்பட்ட நபரை படுகொலை செய்வதை சர்வதேசம் ஏற்காது. கனடா அரசிற்கு சீக்கியர் ஆதரவு மிக முக்கியமானது. மேலும் தனது நாட்டில் கனடா குடிமகனை வெளிநாடு கொலை செய்யும் குற்றச்சாட்டு கனடாவை பலவீனப்படுத்திவிடும் எனும் நிலையிலேயே கனடா இந்தியாவிற்கு எதிராக வெளிப்படையாக இயங்கியுள்ளது. ஜி20 கூட்டமைவு தமக்கு வெற்றியளித்ததாக பாஜக கொக்கரித்த இரண்டு நாட்களில் இந்த கூத்து நடந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் புதிய பாராளுமன்ற திறப்பு தினங்களில் இதுபோன்ற வெளியுறவுக் கொள்கை குளறுபடிகள் மோடி அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். எனும் பயங்கரவாதிகளுக்காக பரிந்து போன காரணத்தால் இந்திய அரசு தலைகுனிந்துள்ளது.
டில்லி அரசின் ஆதிக்க இராணுவ தலையீட்டையும், அரச ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து திலீபன் உண்ணாநிலை துவங்கி இந்திய அரசின் கோர முகத்தை அம்பலப்படுத்தி தன்னுயிர் ஈந்தார். இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் கடந்த சில நாட்களாக திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு ஊர்வலம் நடத்தப்பட்டதில் சிங்களர் வன்முறை ஏவியுள்ளனர். இந்திய ராணுவத்திற்கு உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவம் இலங்கை அமைதிகாப்புப்படையின் படுதோல்வியாகும். இதன் குறியீடே திலீபன். இந்த திலீபன் ஊர்தி மீதான தாக்குதல் என்பது இந்திய-இலங்கை அரசின் ஒத்துழைப்புடனும் நடந்திருக்கலாமென குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இந்த இரு நிகழ்வுகளுக்கும் பின்புலத்தில் இந்திய பார்ப்பனிய ஆதிக்க அரசியல் இருப்பதை நாம் கவனிக்க மறுத்தல் கூடாது. நியாயம் கேட்டு போராடும் இனப்படுகொலையான சமூகங்களின் உரிமைக்காக நாம் குரல் கொடுப்பது அவசியம். இல்லையெனில் மனித உரிமை கொல்லப்பட்ட தேசத்தில் நாம் வாழவேண்டி வரும். கனடா-இந்தியா முரண்பாடு இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும், காலிஸ்தான் கருத்தியலாளர்களுக்குமான சர்வதேச முரண்பாடாக வெடித்துள்ளது. மோடி அரசு எனும் ஆர்.எஸ்.எஸ் அரசு, தனது சுயநலனுக்காக இந்தியாவின் மரியாதையை அடகுவைத்துள்ளதை கவனத்தில் கொள்வோம். இலங்கை அரசிடத்தில் மார்வாடிகளின் நலனுக்காக தமிழக மீனவர் நலனை அடகுவைத்தது இந்திய பார்ப்பனிய அரசு. இந்துத்துவ பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டால், இந்து-பெளத்த மதவெறி மாய்க்கப்பட்டால் மட்டுமே அமைதி திரும்பும்.