“குலத்தொழிலை” தொடருங்கள்! – மோடி

இந்து சனாதன தர்மத்தின்படி சூத்திரர்கள் தங்கள் குலத்தொழிலை மட்டுமே தொடர வேண்டும் என்கிறது பாஜக மோடி அரசு.

தமிழ்நாட்டில் தகர்த்தெறிந்த குலக்கல்வி முறைக்கு புத்துயிர் ஊட்டியிருக்கிறது மோடி அரசாங்கம். ‘விசுவகர்மா யோஜனா’ என்னும் திட்டம் மூலமாக நிதி உதவி என்னும் ஆசை வார்த்தையைக் காட்டி மாணவர்களை உயர்கல்வி செல்லவிடாமல் தடுக்கும் பேராபத்தை உருவாக்கியிருக்கிறது. சமூகநீதியின் மேல் உள்ள தீராப்பகையை இந்தியப் பார்ப்பனியம் மோடி என்னும் கைப்பாவையை வைத்து இந்த திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது.

பார்ப்பன உயர்சாதியினரால் சூத்திர மற்றும் பஞ்சமர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை பெற்று தர அயராது பாடுபட்டவர் திராவிட இயக்கத்தின் தலைவர் தந்தை பெரியார் ஆவார். மேலும், குல தொழில் முறையை ஒழித்து தமிழர்களுக்கு விடிவு பெற்றுத்தந்தார். ஆகவே, பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17யை “சமூகநீதி நாள்” என்று தமிழக அரசு அறிவித்து விழா எடுத்து வருகின்றது. இதே சமயம், பார்ப்பன ஆட்சியின் சேவகன் பாஜக மோடி தனது பிறந்த நாளான அதே செப்டம்பர் 17 அன்று “இந்துக்கள் யாவரும் அவரவர் குல தொழிலை தொடர வேண்டும்” என்று கூறி கடந்த ஞாயிறன்று விஸ்கர்மா யோஜனாவை தொடங்கி வைத்து தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

விசுவகர்ம யோஜனா என்பது  பாரம்பரியமாக குலத்தொழில் செய்பவர்களுக்கான திட்டமென அறிவிக்கப்பட்டது. குரு-சிஷ்யன் என்று தலைமுறை வழியாக தொழில்திறன் கடத்தப்பட கொண்டு வரப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு நிதி உதவி பெறும் தகுதி 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். இதில் குயவர், செருப்பு தைப்பவர், முடி திருத்துபவர், தச்சர் போன்ற 18 தொழில்களை பட்டியலிட்டிருக்கிறார்கள். இதற்கு 5% வட்டியில் 18 மாத தவணையில் ஒரு இலட்சம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ஊக்கத் தொகையாக ஒரு நாளிற்கு ரூ 500 வழங்கப்படும். மோடி அரசினால் கைவினைத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் மாபெரும் சலுகையாக இவையெல்லாம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்களுக்கு கடனுதவி அளிக்கும் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில்  இருக்கும் பொழுது, “பரம்பரைத் தொழில்”களுக்கான திட்டமாக ஏன் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு நிதி உதவி வழங்கப்படுகிறது என்பதுதான் பலரும் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது. செருப்பு தைப்பவரின் மகன் செருப்பு தைப்பவராகவே இருக்க வேண்டும், மண்பானை செய்பவரின் மகன் மண்பானை செய்பவராகவே இருக்க வேண்டும் என்பது பார்ப்பனரின் வர்ணாசிரமம் கட்டமைத்த சனாதனக் கொள்கையாகும்.

இதனையே 1953 -ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி குலக்கல்வி முறையாக கொண்டு வந்தார். மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பட்டியல் இனத்தைச் சார்ந்த மாணவர்கள் தினமும் மூன்று மணி நேரம் பள்ளிக்கு வந்தாலே போதும், மற்ற நேரம் பெற்றோர் செய்யும் குலத்தொழிலை செய்யலாம் என்பதே ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டமாகும். இந்த பார்ப்பன வன்மத்தைக் கண்டு பெரியாரின் தொண்டர்கள் வெகுண்டு எழாமல் எப்படிக் கடப்பார்கள்? பெரியார் இதன் பின்னாலிருக்கும் சூழ்ச்சியை உணர்ந்த காரணத்தினால் கடுமையாக எதிர்த்தார். அவரின் பின்னால் திராவிடப் படை அணிவகுத்தது. பெருங்கிளர்ச்சி எழும்பியது. போராடிய பெரியாரிய தொண்டர்கள் மீது காங்கிரஸ்காரர்கள் தாக்குதல் நடத்தினர். ராஜாஜி இதனை “தேவர் – அசுரர்” போர் என்று கொக்கரித்தார். ஆனால், பெரியார் இது “ஆரியர் – திராவிடப்” போர் என எழுதினார். இதுவரை சட்டத்திற்கு உட்பட்டு போராடிய நான் இனி சட்டத்தை மீறியும் குலக் கல்வியை ஒழிப்பேன் என வீறு கொண்டெழுந்தார். பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள், நான் சொல்லும் போது அக்கிரகாரத்தைக் கொளுத்துங்கள் என தோழர்களிடம் கட்டளையிட்டார். 

“உள்ளபடி இந்த கல்வித்திட்ட எதிர்ப்பு என்பதை ஒரு அரசியல் போராட்டமாகக் கருதி இதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதை சமுதாயப் போராட்டமாக, இனவாழ்வு போராட்டமாகக் கருதியே எதிர்க்கிறோம். இந்த இனத்தையே தீர்த்து கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பு போராட்டத்தை நாங்கள் ஜீவாதாரமான உயிர்நிலைப் போராட்டமாக கருதுகிறோம்….. குலக்கல்வி திட்டத்தை ஒழித்துக் கட்டுவோம்! இன்றேல் செத்தொழிவோம்” என குடியரசு இதழில் பெரியார் உரிமை முழக்கம் எழுப்பினார்.

பெரியாரின் முழக்கத்தில் உள்ள நியாயத்தை காங்கிரஸ்காரர்களே உணர்ந்தனர். காங்கிரஸ்காரரான காமராசரும் எதிர்த்தார். கடுமையான பரப்புரையை பெரியாரின் தொண்டர்கள் மேற்கொண்டனர். மாநாடுகள் நடத்தப்பட்டன. நடை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் பார்ப்பனர் ராஜாஜி பதவி விலகினார். அடுத்ததாக காமராசர் ஆட்சிப் பொறுப்பேற்றார். அவரே குலக்கல்வித் திட்டத்தை நீக்குவதாக அறிவித்தார். இவ்வாறு நம் தலைமுறைகளை கல்வியிலிருந்து அப்புறப்படுத்த கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் முறியடிக்கப்பட்டது.

அன்றைய பார்ப்பனப் பத்திரிக்கைகளும்  கல்வியும், தொழிலும் என ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டத்தை திரித்து விட்டதாக எழுதின. குழந்தைகளின் காலை உணவுத் திட்டத்தை மலத்துடன் ஒப்பிட்டு எழுதிய பார்ப்பன தினமலர், இன்றும் தனது வன்மத்தை  தொடர்ந்து கொட்டுகிறது. குலத் தொழில் என்பது பிறவியிலேயே குழந்தைகளின் மரபணுவில் இருப்பது என்று அறிவியல் சான்றுகளற்ற ஒன்றைப் பொருத்துகிறது. ராஜாஜி கொண்டு வந்த நல்ல திட்டத்தை கெடுத்து விட்டார்கள் என சாதியக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வன்மத்தை பார்ப்பனிய கூடாரங்கள் இன்றளவும் நுட்பமாக திணிக்கின்றன.   

இந்தப் பார்ப்பனியக் கூட்டம்  நிதிச்சுமை, ஆசிரியர் பற்றாக்குறை எனப் பல்வேறு காரணங்களை அடுக்கி 6000 பள்ளிகளை மூடிய இராஜாஜியைப் பற்றி புகழ்ந்துரைக்கும் அதே வேளையில், அவருக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த காமராசர் அதே நிதி நெருக்கடியிலும் 6000 பள்ளிகளைத் திறந்தது எப்படி என்பதை மனந்திறந்தும் அலசியதில்லை, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து பிள்ளைகளை கல்விக்கூடம் நோக்கி எப்படி வரவழைத்தார் என்பது குறித்தும் பேசியதில்லை.

இராஜாஜியால் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி என்னும் இந்த நயவஞ்சகத் திட்டமே, இப்போது இந்திய ஒன்றிய அரசினால் விசுவகர்மா யோஜனா என்கிற பெயரால் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அன்று தமிழ்நாட்டில் மாணவர்களின் ஆரம்பக் கல்வியில் கைவைத்து அடி வாங்கிய பார்ப்பனியக் கூட்டம், இன்று இந்திய ஒன்றியம் முழுமைக்குமான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் உயர்கல்வியில் கை வைக்கிறது. மாணவர்களின் 18 வயது என்பது கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் பருவம். உயர்கல்வி அடைய வேண்டிய பருவத்தில் பணம் ஈட்ட வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் காட்டப்படுகிறது.  உயர் கல்வியில் போதுமான வளர்ச்சி அடையாத பெரும்பாலான வட மாநில மக்கள் கல்வியை விட குடும்ப ஏழ்மையை முன்னிறுத்தி சிந்திக்கும் மனப்போக்கு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது. பார்ப்பன உயர் சாதிக்கு மேல்படிப்பின் கல்வியறிவும், சூத்திர பஞ்சமர்கள் எழுதப்படித்தால் மட்டுமே போதும் என்கிற உள்ளார்ந்த பார்ப்பனிய சிந்தனை மோடியின் வடிவத்தில் நிறைவேறப் போகிறது. 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் உயர் கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். அதனாலேயே இந்திய ஒன்றியத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பது  பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. பாஜக அரசு 2035-ம் ஆண்டிற்குள் உயர்கல்வி செல்வோரின் விகிதத்தை 50% உயர்த்துவோம் என இலக்கு வைக்கும் போது, தமிழ்நாட்டில் இப்போதே அதன் விகிதம் 52%த்திற்கும் மேல் எட்டி விட்டது. மேலும், வட இந்திய மாநிலங்களில் குறிப்பிட்ட உயர்சாதியினர் மட்டுமே மேற்படிப்பு செல்லும் மனநிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் என அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய கல்வி வளர்ச்சி சாத்தியமாயிருக்கிறது. எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து விட வேண்டும் என்கிற தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையையும் இந்தத் திட்டம் மழுங்கடித்துவிடும் ஆபத்தும் நிகழ்ந்து விடுமோ என்கிற அச்சமும் ஏற்படுகிறது.  

பாஜக அரசு 2023 நிதிநிலை அறிக்கையில் சிறு, குறு நடுத்தர தொழில்களுக்காக ரூ.9000 கோடியை ஒதுக்கியிருக்கிறது. இந்தியாவில் 55 கோடிக்கு மேல் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சிறுகுறு நடுத்தர (MSME) தொழிலைகளை விட, சுமார் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த குரு-சிஷ்ய பரம்பரை குலக்கல்வி திட்டத்திற்காக சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கு ஒதுக்கியதை விட 4000 கோடி அதிகமாக (ரூ.13000 கோடி) ஒதுக்குகிறார்கள் என்றால், தொழில் வளர்ச்சியை விட பரம்பரையாக இந்து சனாதன சாதியை நிலை நிறுத்தும் தொழில்களுக்கே அவர்களின் அதீதமான அக்கறை இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள முடிகிறது. 

செப்டம்பர் 17- 2023 அன்று இத்திட்டத்தை மோடி அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. கல்வியே வளர்ச்சியின் கருவி என்பதை மாற்றி குலக்கல்வியே பிழைப்பிற்கு வழியென மாற்றுகிறார் மோடி. இதன் பின்னணியில் இருக்கும் பார்ப்பனிய வன்மத்தை சரியாக கணிப்பதனால் தமிழ்நாட்டின் பெரியாரிய அமைப்புகள் எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த சூழ்ச்சியை உணராது மற்ற மாநிலங்கள் அமைதியாக இருக்கின்றன. இந்திய ஒன்றிய பார்ப்பனிய நல அரசு முன்வைக்கும் எதனையும் பெரியாரின் கண்ணாடி கொண்டு பார்த்து, அதன் ஆபத்தை  மற்ற மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கையான அறிவிப்பை தமிழ்நாடே வழங்கியிருக்கிறது. இந்த நவீன குலக்கல்வி திட்டத்தையும், அதன் பின்னுள்ள சூழ்ச்சியையும் அம்பலப்படுத்தி இதனை விரட்டியடிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »