Welcome to மே 17 இயக்கக் குரல்   Click to listen highlighted text! Welcome to மே 17 இயக்கக் குரல்

145வது பெரியார் பிறந்தநாளில், எழட்டும் திராவிடம்!

periyar01

திராவிட மக்களிடையே பிரிவினைகளைப் புகுத்திய ஆரியத்தின் உயிர்நாடியான சனாதனத்தை எதிர்த்து வாழ்நாளெல்லாம் போராடியவர் பெரியார். இந்திய மக்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து இழிவுபடுத்திய சனாதனத்தின் கோட்பாடுகளை உள்வாங்காமல்  உயர்த்திப் பிடிக்கும் கூட்டத்தை நோக்கி சொற்கணைகளை அன்றே வீசியவர் நம் பெரியார்.

“உலகில் எந்த நாட்டிலாவது சொந்த நாட்டு மக்களை, உழைக்கும் மக்களை வேறு இனத்தவர் தங்களது வைப்பாட்டி மக்கள் என்று அழைக்கக்கூடிய அநீதியும், அந்த அநீதியின் அடிப்படையிலேயே அமைந்த சட்ட நீதியமைப்புகளும், அதைப் பாதுகாக்கும் அரசாங்கமும், இவ்வளவு இழிவிருந்தும் அதைப் பற்றி சிறிது கூட லட்சியம் செய்யாத மானமற்ற சுயநல மக்கள் இருக்கும் கூட்டமும் எங்காவது உண்டா?” – என்று தங்களை சூத்திரன் என ஏற்றுக் கொண்டு சுயமரியாதையற்று வாழும் மக்கள் திரளையும், அதனை மூதலீடாகக் கொண்டு வளர்ந்த பார்ப்பனியக் கட்டமைப்புகளையும் நறுக்கென்று கேட்கிறார்.  

மனுசாஸ்திரத்தின் மூடத்தன இறக்குமதிகள் யாவும் திராவிட மக்களிடமிருந்து அழிக்கப்பட வேண்டும் என்பதில் பெரியார் சமரசம் துளியுமற்று உறுதியுடன் செயலாற்றினார்.

“நாகரிக மக்களாகிய திராவிடர்கள் இன்று சூத்திரர்களாய், பஞ்சமர்களாய், அடிமைகளாய் வாழும் நிலைக்கு வழிவகுத்துள்ள இதிகாசங்களும், கதைகளும், புராணங்களும் அறவே ஒழிக்கப்பட வேண்டும். மேல் ஜாதி, கீழ் ஜாதி, ஏழை, பணக்காரன், மோட்சம், தலைவிதி என்பன போன்ற மூடக் கற்பனைகள் மனித சமுதாயத்தில் இருந்து மறைய வேண்டும். பொதுவாக பார்ப்பனியத்திற்கு அடிமைப்பட்டு வாழும் இழிநிலை வெகு விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்” – ஒழிப்பு வேலைகளை ஒவ்வொன்றாய் கூர் தீட்டினார்.

ஒரு குலத்துக்கு ஒரு நீதி, அதுவும் பார்ப்பனர்களுக்கு உயர் நீதி என வேறுபாடுகளை நிலைநிறுத்திய சனாதனத்தை வேரோடு பிடுங்கி எறிய  தீவிரமாய் களம் கண்டார். அதில் ஒன்றுதான் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம். அப்போது பெரியார் காங்கிரசின் தலைவராக இருந்தார். பார்ப்பனர் நடத்திய இந்த குருகுலத்தின் உள் அறையினில் வைத்து உயர்ரகமான சாப்பாடு பார்ப்பனப் பிள்ளைகளுக்கும், வெளியே வைத்து பழைய சோற்றை பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளுக்கும் வழங்கப்படுவது குறித்து கேள்விப்பட்டதும், அதிர்ச்சி அடைந்து வழங்கப்பட்டு வந்த நிதியை அளிக்க மறுக்கிறார். இதனால் பெரும் எதிர்ப்புகளை பார்ப்பனர்களிடையே சந்தித்தாலும் நிதியை வழங்க மறுப்பதில் உறுதியாய் இருக்கிறார். இதனால் காங்கிரசில் “பார்ப்பனர் – தமிழர்” என்ற பிரிவினையே உருவாகிவிட்டது என்று எழுதுகிறார். சனாதன பார்ப்பனியத்தின் உண்மை முகங்களை இந்தப் போராட்டத்தின் மூலமே பெரியார் அறிந்து கொள்கிறார். 

“சாதியின் வேரில் நெருப்புப் பொறி பறக்கும்படி செய்து வெந்நீர் ஊற்ற வேண்டும். சும்மா பூச்சுப் பிடியில் சாதி ஒழிந்துவிடுமா என்ன?” – இப்படியான சாதியின் கொடுமை கேரளாவின் வைக்கத்தில் நிகழ்ந்தது. அதற்கு வெந்நீரை ஊற்ற பெரியாரையே அங்குள்ளவர்கள் அழைத்தனர். அங்கிருந்த மகாதேவர் கோயில் வளாகம் சுற்றிய தெருக்களில் ஈழவர்கள், ஆசாரி, வாணியர், நெசவாளி போன்ற 18 சாதிகளைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு இருந்தது. அதனால் ஈழவ சமுதாய தலைவர்கள் அங்கு அறக்கிளர்ச்சி (சத்தியாகிரகம்) நடத்த முடிவு செய்கின்றனர். கோயிலை ஒட்டியே திருவிதாங்கூர் ராஜாவின் அரண்மனையும் இருந்தது.

ஈழவ தலைவா்கள் அனைவரும் வெள்ளையர் அதிகாரிகளால் கைது செய்யப்பட, போராட்டம் தளர்ந்து போகக் கூடிய நிலையில் பெரியாருக்கு அழைப்பு விடுக்கின்றனர். வெள்ளையரின் தடை உத்தரவுகளை மீறியும் பேசிய பெரியாரின் ஆழமான பேச்சினில் ஈர்க்கப்பட்ட மக்கள் திரண்டனர். சாக்கடைப் பன்றிகளும், மலம் தின்னும் நாய்களும் செல்லும் தெருவில் மனிதர்கள் செல்லக் கூடாதா? எனக் கனல் பறக்கும் உரையால் உணர்ச்சியூட்டினார். தளர்ந்து போக இருந்த போராட்டம் பெரும் எழுச்சி பெறுகிறது. அறக்கிளர்ச்சி வெற்றியடைகிறது. பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டத்தை திரு.வி.க சூட்டினார். 

பட்டியலின சாதியினர் தெருவில் நடக்கக் கூட உரிமை பெற்று விடக் கூடாது என ராஜாஜி முதற்கொண்ட பல பார்ப்பனர்கள், இந்தப் போராட்டத்திலிருந்து பெரியாரை வெளியேற்ற செய்த சூழ்ச்சிகள் எல்லாம் ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனாலும் சனாதனத்தின் சேவகர்களான ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ கும்பல்கள் இந்தப் போராட்டம் வெற்றி பெற பெரிதும் உழைத்த பெரியாரை மலினப்படுத்துகின்றனர். 

திருவள்ளுவரையும், அம்பேத்கரையும் கூட மலினப்படுத்தி பேசுபவனை ஆன்மீக சொற்பொழிவாளராக வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் பெரியாரை மலினப்படுத்துவதில் வியப்பில்லை. ஆனால் மனுதர்மத்தை எதிர்த்து சமத்துவத்தை நிறுவ பாடுபட்டவர்களை மலினப்படுத்தி, மக்கள் இதுவரை அறிந்திடாத சனாதன தர்மத்தைப் போற்றி வாழ்ந்த பார்ப்பன நபர்களின் பெயர்களை எல்லாம் உயர்வாக தியாக சீலர்களாக அறிமுகப்படுத்துவதை ஆர்.எஸ்.எஸ் ஒரு வேலைத்திட்டமாகவே செய்கிறது என்பதை மக்கள் அறிய வேண்டும்.

பெரியார் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் சனாதனத்தைப் பின்பற்றும் டில்லி ஆதிக்கவாதிகளும், பார்ப்பனியமும் திணித்தவைகளை எதிர்த்தே நடந்திருக்கிறது. குலக்கல்வி எதிர்ப்பு போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், இட ஒதுக்கீட்டுக்காக நடத்திய போராட்டங்கள், சாதியைப் பாதுகாக்கும் சட்டப்பிரிவை எரிக்கும் போராட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க போராட்டம், வடவர் ஆதிக்க எதிர்ப்பு போராட்டம், பொது கிணறு, பொது சுடுகாடு, பொதுப்பள்ளி, பொதுக்கோயில் அமைய போராட்டங்கள், இரட்டைக் குவளை எதிர்ப்பு என வாழ்நாள் முழுவதும் சனாதனம் உற்பத்தி செய்த சாதியால் நிகழ்ந்த அநீதிகளை எதிர்க்கவே பெரியார் இறுதி மூச்சு வரை அயராது பாடுபட்டார்.

“மத சாஸ்திரக்காரர்கள் வண்டி வண்டியாக அளப்பார்கள். ஆனால் சரித்திரத்தைப் பற்றி பேசினால் எவனோ வெள்ளைக்காரன் சொன்னதை நம்புகிறாயா? என்பார்கள். வெள்ளைக்காரன் சொன்ன சரித்திரத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். வடநாட்டில் ‘பாரத இதிகாச சமிதி’ என்ற ஒரு ஸ்தாபனம் உள்ளது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அதை முக்கியஸ்தர்களாக உள்ளார்கள். அந்த ஸ்தாபனத்தில் ‘வேத காலம்’ என்ற ஒரு புத்தகம் எழுதுகிறார்கள். அதில் ஆராய்ச்சி செய்து கவர்னர் முன்சி எழுதி இருக்கிறார். அதில் ‘அந்த காலம் காட்டுமிராண்டித்தனமான காலம்! புராண இதிகாசங்கள் என்பதை சரித்திரங்கள் அல்ல; நடந்த விஷயங்களைப் பற்றியும் அல்ல. அவை ஒரு கற்பனைக் கதை. வியாசன் என்றாலே வியாசம், கதை கற்பனை எழுதுகிறவன் என்று அர்த்தம். இவை ஒரு கருத்தைப் பிரச்சாரம் செய்யவே ஏற்பட்டவை என்று எழுதுகிறார்”- அவர்களின் புத்தகத்தைக் கொண்டே புராணக் கற்பனைகளை நிரூபிக்கிறார் பெரியார். 

இன்றும் மனுதர்மம் பற்றிய விளக்கத்திற்கு வெள்ளைக்காரன் தவறாக எழுதி விட்டான் என்கிற இதே புராணத்தையே பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ கூட்டங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. பார்ப்பனிய கற்பனைகளை எல்லாம் உண்மையாக்க வெள்ளையர்கள் மேல் பழியைப் போட்டு தப்பிக்கும் வழக்கத்தை இந்த கும்பல் பெரியார் காலத்திலிருந்தே விடவில்லை.

“நம் இயக்கம் தோன்றி இந்தப் பிரச்சாரங்களை செய்திருக்காவிட்டால் நம் நிலை என்னவாக இருக்கும்? பார்ப்பானுக்கு நம்ம பெண்களை விட்டுக் கொடுத்தால் புண்ணியம் என்று தானே நினைத்திருந்தான். தமிழ்நாட்டில் எல்லையை தாண்டி கேரளாவுக்கு போனால் முன்பெல்லாம் இது வெளிப்படையாய் எவருக்கும் தெரியுமே? ராணியாய் இருக்கிறவர்களுக்கு பாப்பான் புருஷனாக இருப்பதற்கு அங்கு சம்பளம் அல்லவா கொடுக்கப்பட்டு வந்தது” –  இந்தக் கொடுமைகளை எல்லாம் ஆரியம் சாஸ்திரத் தர்மங்களாகத் திணித்து, பண்பாட்டு அடிமையாக சமூகங்களை மாற்றி, அதனை இயல்பாகவும் ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது.  

“நம் சமுதாயத்தில் உயர்ந்த செல்வாக்கும், அதிகமான செல்வமும் படைத்த கவுண்டர், முதலியார், செட்டி, நாயக்கர், நாடார் போன்றவர்கள் கோயிலுக்கு சென்றால் கருவறைக்கு வெளியில் தான் இருக்க வேண்டும். பார்ப்பான் மட்டும் மடமட என்று சாமி இருக்கும் கருவறைக்குள் போவான். இது எதற்காக ஏற்பட்டது? கோயில் குளம் தீர்த்தம் எல்லாம் எதற்கு வந்தது? என்றால் அன்றும் நாம் சூத்திரன், இன்றும் நாம் சூத்திரன் என்பதை உறுதிப்படுத்துவதற்காகதான்” – இந்த இழிநிலைப் போக்கவே அனைத்து சாதியினரும் அர்ச்சராகியேத் தீர வேண்டும் என தீவிரமாகப் போராடினர். 

சனாதனத்தை நிலையானது, மாறாதது என்று கதை அளக்கிறது பார்ப்பனியம். ஆனால் காலத்திற்கேற்ப அனைத்தும் மாறக் கூடியது என்பதை பெரியார் எப்போதும் வலியுறுத்திப் பேசினார். அதற்கு அவர் புத்த நெறியையும், திருக்குறளையும் கையாளும் விதமே சான்றாக இருக்கிறது. புத்தரையும், வள்ளுவரையும் வானளாவப்  புகழ்ந்தவர் பெரியார். ஆனாலும் இவர்கள் இருவரையும் பற்றி சொல்லும் போது “அந்த காலத்தில் எந்த அளவு அறிவு வளர்ச்சி பெற்று இருந்ததோ அந்த அளவு தான் இருக்கும். ஏதோ அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதனாலேயே அவர்கள் சொன்ன எல்லா விஷயங்களும் எல்லா காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும் என்று கொள்ள முடியாது. வள்ளுவரும், புத்தரும் மக்கள் இன்றைய நிலையை விட மிகுந்த காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்திலேயே அறிவுக்கு ஏற்ற மாதிரி சொல்லி உள்ளார்கள் என்பதனால் தான் பெருமையுடன் அவர்களை பாராட்டுகிறோம்” – என்கிறார். ஏசுவையும், நபிகள் நாயகத்தையும் பெரிதாகப் பேச இதுவே காரணமென்கிறார். 

காலந்தோறும் மக்களிடம் திணிக்கப்படும் மூடத்தனத்திற்கேற்ப கருத்துகள் மாறுபடுமே தவிர, நிலையான கருத்தாக ஒன்றுமே இருக்க முடியாது. இதனாலேயே ‘நானே சொன்னாலும் உன் அறிவால் சிந்தித்து உண்மையென நம்பினால் ஏற்றுக் கொள்’ என எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருந்தவர் பெரியார்.  

“நம் நாட்டிற்கு பிழைக்க வந்த ஒரு சிறு மிகச்சிறு அதாவது நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர் அதாவது அசல் ஆரியர் கூட அல்லாத கலப்பு ஆரியர்கள் தங்கள் பாதுகாப்புக்கும் உயர்வுக்கும் ஏற்றபடி வேத, சாஸ்திர, மத ஆதாரங்களை செய்து வைத்துக் கொண்டு பிராமணனுக்கு இடம் வேறு, பிராமணனுக்கு சட்டம் வேறு, மற்ற தமிழனுக்கு இடம் வேறு, சட்டம் வேறு, நடப்பு வேறு என்பதாக செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்றால், 100 க்கு 97 பேர்களான திராவிடர்கள் வாழ்வு என்றைக்கு இழிவு ஒழித்த சமுதாய வாழ்வாவது?” – சனாதனப் பிரிவுகளால் திராவிடர் அடைந்த இழிநிலையை மாற்றுவது எப்போது என மக்களிடமே கேட்கிறார். 

“சூத்திரன் என்கின்றதான தன்மைக்கு ஏற்பவே நமது வீடுகளில் சடங்குகள், கல்யாணம், சாவு, திதி முதலிய காரியங்களை நடத்துவதில் காட்டிக் கொள்கிறோம். அந்தப் பட்டத்தை ஏற்றுக் கொண்டு பார்ப்பான் காலில் விழுந்து வணங்குகிறோம்” – ஆரியர்கள் சனாதனத்தை வாழவைக்கவே  நம்மிடம் புகுத்திய மூடத்தனங்களை எல்லாம் பட்டியலிடுகிறார்.  

“எலி, பூனை, பாம்பு, தேள், கரப்பான் பூச்சி முதலிய ஜந்துக்கள் போகிற நடமாடுகிற இடமாகிய கர்ப்பக்கிரகம் என்னும் இடத்திற்கு நாம் போகக்கூடாது என்றால் நாமும் அதை ஏற்றுக் கொண்டு வெளியில் நின்று கும்பிடுகிறோம் என்றால் நமக்கு அறிவு மானமோ இருக்கிறதா?” – என  சாடுகிறார்.

“நீ போப்பா வெளியே, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல் தூரத்தில இருக்கிற, உன் பேச்சு எனக்கு புரியாது. என் பேச்சு உனக்குப் புரியாது. உன் பழக்கம் வேற, உன் வழக்கம் வேற, உன் நடப்பு வேற, அது எனக்குப் புரியாது. மரியாதையாப் போ, ரகள வேண்டாம்” – 1973-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் தன் இறுதிப் பேருரையில் பெரியாரின் முழக்கம் இது. டில்லி ஆதிக்கவாதிகள் சனாதன ஆதிக்கவாதிகளின் கூட்டணியுடன் என்றுமே கைக்கோர்த்து நிற்பார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியே நம்மை விட்டுச் சென்றார் பெரியார். 

“இந்தியா ஒரு நாடு என்கிறாயே, நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்கிறாய். எங்களிடம் உண்மையில் நேசமாக நடந்து கொள்கிறாயா? …நீ பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்கிறாய். என்னை காலில் பிறந்தவன் என்கிறாய். இந்த லட்சணத்தில் நான் உன்னோடு இணைந்தே இருக்க வேண்டும் என்று பலவந்தப்படுத்துகிறாய்” – இறுதி நாட்களில் ஆற்றிய உரைகளிலும் சனாதன, வர்ணாசிரம கொடுமைகள் ஊன்றியிருக்கும் நாட்டினில் நாம் வாழ முடியாது என்பதை பெரியார் வலியுறுத்தியே சென்றார்.

சனாதனத்தை ஒழித்து சுயமரியாதையுடன் தமிழினம் வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கத்தையும் பெரியார் முன்வைத்து செயலாற்றினார். 

தன் வாழ்நாள் பணியாக பெரியார் ஆரியத்தை வீழ்த்தும் பெரு ஆயுதமாக முன்னெடுத்த திராவிடக் கோட்பாடுகளை நாமும் கையிலெடுப்போம். இதனூடாக, தமிழ்நாடு தமிழருக்கே என்கிற பெரியாரின் முழக்கத்துடன் தமிழ்த்தேசியத்தை வெல்வோம்.

வீழட்டும் ஆரியம்,
எழட்டும் திராவிடம்,
வெல்லட்டும் தமிழ்த்தேசியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »
Click to listen highlighted text!