காந்தாரா – சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களோடு கரைக்கப்படுவதை நியாயப் படுத்துகிறதா?

(காந்தாரா- பாகம் 1 ஆர்.எஸ்.எஸின் நிழல் அரசியல்)

‘காந்தாரா’ இரண்டு ஆண்டுகள் முன்பு வெளிவந்து இந்திய அளவில் கவனம் பெற்ற கர்நாடக மாநிலத்தின் திரைப்படம். அதன் முதல் பாகம் என்று தற்போது ”காந்தாரா- பாகம் 1” சமீபத்தில் வெளிவந்துள்ளது.

முதலில் வெளிவந்த காந்தாரா கர்நாடக திரைப்படமாக எடுக்கப்பட்டு ஒரு இந்திய அளவிலான வசூல் திரைப்படமாக மாறியது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள காந்தாரா இந்திய அளவிலான அந்த வர்த்தகத்தை நோக்கமாக கொண்டே உருவாக்கப்பட்டது.

திரைப்படம் என்கிற அளவில் ஒரு தென் இந்திய திரைபடம் தொழில்நுட்பத்தை நேர்த்தியான முறையில் கையாண்டுள்ளது என்பதை திரைப்படம் பார்க்கும் எவரும் மறுக்க இயலாது. புலி, தேவாங்கு, பிரம்ம ராட்சதன் (நம்ம ஊர் ஹல்கு என்று சொல்லும் அளவுக்கு) போன்ற கிராபிக்ஸ் உருவங்கள் கொஞ்சமும் பொம்மை தன்மை இல்லாமல் மிக உண்மையாக இருந்தது ஒரு ஆட்சரியமே.

காடும்-காட்டின் கடுமை பற்றிய காட்சிகள்; குகை போன்ற ஒரு பல்தாக்கு காட்சிகள் என்று ஒரு இந்திய  திரைப்படம் கொடுக்கும் உணர்வை விட சிறந்த திரையரங்கு உணர்வை ‘காந்தாரா பாகம் 1’ கொடுக்கிறது.

இப்படியான காட்சி அனுபவங்களை கடந்து படம் முன் வைக்கும் கதை களம் மற்றும் அது வெளிப்படுத்தும் அரசியலை இன்றைய இந்திய சூழலில் விவாதிக்க  வேண்டியது மிக அவசியம். மிக பெரிய பொருட்செலவில் ஆர்.எஸ்.எஸின் அரசியல் மக்களுக்கு பிடிக்கும் வகையில் திரைப்படங்களாக தயாரிக்கப்படுவதும், அவை வெற்றி பெறுவதும் குறித்து நாம் அவதானிக்க வேண்டிய காலமிது.

அதற்கு முன்னர் முந்தைய காந்தாரா படம் காடு என்பது மக்கள் புழங்கும் இடம் இல்லை என்பதையும், காடு அரசுக்கு சொந்தமானது என்பதையும் வலியுறுத்தும் படமாக இருந்தது. முக்கியமாக படத்தின் இறுதி காட்சியில் வரும் காட்டை காக்கும் மக்களின் பஞ்சூருளி தெய்வமே வண அதிகாரியை தழுவிக் கொள்ளும். இது பழங்குடி மக்களை வெளியேற்றி காட்டை அரசு கைப்பற்றி கொள்வதை நியாப்படுத்தியது. இவையே அந்த படத்தின் மீதான விமர்சனமாக அப்போது வைக்கப்பட்டது.

தற்போது வெளியாகியுள்ள இந்த காந்தாரா சிறு தெய்வ அடையாளங்களை தீவிரமாக முன்வைத்துள்ளது. கர்நாடகாவின் கடற்கரையொட்டிய காடாக காந்தாரா காட்டபடுகிறது. அதன் பழங்குடி மக்களின் வழிபாடு முறையாக பூத வழிபாடு உள்ளது. குலிகா, பஞ்சுருளி, போன்றவைகள் இந்த சிறுதெய்வ வழிபாடு முறையின் வடிவங்கள் அல்லது பூத கோலங்கள்.

காட்டின் ஒரு செழிப்பான பகுதியான ஈஸ்வர பூந்தோட்டத்தை சிவன் வந்திருந்து தவம் புரிந்த இடம் என்று அங்கு வாழும் மக்கள் நம்புகின்றனர்.‌ அந்த பகுதியை பூத தெய்வங்களும், பிரம்மராக்கதனும் காவல் காப்பதாக கதை கூறுகிறது. இதுவே காட்டின் மற்றொரு பகுதியில் வசிக்கும் கடம்பர் இன மக்களை ஈர்க்கிறது. ஈஸ்வர பூந்தோட்டத்தவர்களின் பூத தெய்வங்களை கட்டுப்படுத்தி வலிமையடைய கடம்பர்கள் பல சதிகளை செய்கிறார்கள்.

இது இரு இனக்குழுக்களுக்கு இடையே நடைபெறும் சண்டையாகவே புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இரு குழுக்களும் ஒர் ஒற்றுமை உண்டு என்றால், அது இருவருமே பூத வழிபாடு என்கிற சிறுதெய்வ வழிபாடு கொண்டவர்கள். அதாவது தங்கள் முன்னோர்களை வழிபட கூடியவர்கள்.

இது ஒரு தென்னிந்திய தன்மை. இன குழு வாழ்வு, வேந்தர், சிற்றரசர் தோற்றம், பேரரசன்/ பேரரசு உருவாக்கத்தில் நடைபெற்ற அடையாள கரைப்பு இந்த படத்தில் ஒரு இழைபோல காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இது இயக்குனரின் விருப்பமா என்பதை நாம் உறுதியாக கூற முடியாது.

ஆனால் மலை, காடு, நிலம், கடல் என்கிற தினை வாழ் முறைகளுக்குள் கதை களம் நகரும் போது இது வெளிப்படுவது தவிர்க்க முடியாத நிகழ்வாக நடந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

படத்தில் ’பர்மே’ என்கிற பெயரில் வரும் கதாநாயகன் தான் ஈஸ்வர பூந்தோட்டத்தின் காவல்காரனாக மாறுகிறான். ஆனால் அந்த ஊரில் இந்த காட்டை காப்பது பிரம்மராக்கதனும், குலிகா தெய்வங்களும் என்பது அந்த மக்கள் நம்பும் நம்பிக்கை. அவையே திகில் கதைகளாக அவர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது. அந்த காட்டை தாண்டி நாம் வெளியே செல்ல கூடாது என்பது அந்த இனக் குழுவின் கட்டுப்பாடு.

அதற்கு காரணம் உண்டு. அவர்களின் ஈஸ்வர பூந்தோட்டம் ஒரு செழிப்பான பகுதி. விலைமதிப்புள்ள மிளகு, கிராம்பு போன்ற பொருட்கள் வளரும் பூமி. இது இந்த காந்தாரா காட்டிற்கு வெளியே உள்ள பேரரசின் கவனத்தை தலைமுறைகளாக ஈர்த்து வருகிறது. அதற்காக அவர்கள் ஈஸ்வர பூந்தோட்டம் மீது போர் தொடுத்து தன் அரசனை இழந்தவர்கள். இதனால் ஈஸ்வர பூந்தோட்டத்தவர்களை வீழ்த்த காலம் பார்த்து காத்திருக்கிறார்கள். அப்படி காலம் கனியும் போது ஈஸ்வர பூந்தோட்டம் வீழ்த்தப்படுகிறது. ஆனால் ஈஸ்வர பூந்தோட்டத்தின் காவலன் படத்தின் கதாநாயகன் ‘பர்மே’ வெற்றி பெறுவதாக காட்சி அமைவதே காந்தாரா திரைப்படம் முன்வைக்கும் ஆர்.எஸ்.எஸ் அரசியல் திட்டம்.

கதாநாயகன் பர்மே   உள்ளூர் கதையின் படி காட்டை காக்கும் பிரம்மராக்கதனோடு ஒப்பதக்க மனிதன். மனிதர்களை அடிமை படுத்துவது, தீண்டாமை போன்ற இழி செயல்களை எதிர்க்கும் அசல் மனிதனாக பர்மே காட்டப்படுகிறான். இந்த தீண்டாமை மற்றும் அடுக்குமுறைகளை நடைமுறைப்படுத்த மத கட்டுமானங்களை , அரசு கட்டுமானங்களை கொண்ட பேரரசின் தன்மை படத்திலேயே காட்டப்படுகிறது. பேரரசின் நகரத்தை காட்டும் பெரும்பான்மையான காட்சிகளில் பெரிய கட்டுமானங்கள், பெரிய தேர் என்று அனைத்தையும் நிறுவன மையப்படுத்தும் பேரரசின் தன்மையை படத்தில் நாம் கவனிக்கலாம்.

பர்மே இயல்பில் பேரரசின் தன்மைக்கு எதிரான நபர். நகரத்தில் நுழைந்த உடன் அவன் கட்டுமான பணியில் இருக்கும் தேரை சிதைத்து நகரத்தையே கலைத்து போடும் காட்சி உள்ளது. தன் (இனக் குழு) வலிமை என்ன என்பதை உணர்ந்தவனாக தன் இனக்குழுவின் முன் பேசுகிறான். கோழைகள் பெரும் படை வைத்துக் கொண்டு தங்களை வலிமையுடையவர்கள் என்று கருதுகிறார்கள் என்று வசனம் பர்மே பேசுகிறான்.

தன் காட்டில் வளரும் பொருட்களை கொண்டு அவர்கள் துறைமுகப் பட்டினத்தில் நடத்தும் வியாபாரம் பர்மேவை ஈர்க்க, ஒரு கட்டத்தில் அந்த துறைமுகப் பட்டினத்தையே கைப்பற்றி கொள்கிறான். அதை தடுக்க முடியாமல் பேரரசு தனக்குள் குமுறிக் கொண்டு இருக்கிறது. தன் செயல்பாடுகளால் பேரரசின் அதிகாரங்களை உடைத்து போடுகிறான்.

இறுதியில் ஈஸ்வர பூந்தோட்டம் மீது பேரரசு நர வேட்டை நிகழ்த்துகிறது. அங்கு குலிகா தெய்வம் பர்மே மீது வந்து அந்த அரசனை கொன்று வீழ்த்துகிறது.

சிவன் வந்திருந்து தவம் செய்த காட்டை காக்க வேண்டிய பிரம்மராக்கதன் ராணியின் கட்டளையை ஏற்று தலைமுடியை சிக்கெடுத்து கொண்டு ஒரு குகையில் அமர்ந்திருக்கும் காட்சி ஒன்று உண்டு. இது இயக்குனர் அறிந்தோ அறியாமலோ வைத்துள்ள முக்கிய குறியீடு.  இந்து மத புராணங்கள் கட்டமைத்த கதைகள் இவை. காட்டை காக்கும் (சிவன் தவம் செய்த இடம்) பிரம்மராக்கதன் அந்த பணியில் இருந்து விளக்கப்பட்டு தலை மயிரை சிக்கெடுக்கும் பணியை செய்கிறான். இதுவே இந்த படத்தின் கதாநாயகன் பர்மேவின் கதையும்.

உங்கள் சிறு தெய்வங்கள் எல்லாம் எங்கள் சிவன் கோயில்களில் கணங்களாக கோயில் வெளியே படிகற்களாக தான் இருக்கும் என்று படத்திலேயே வசனமுண்டு.

பெருந்தெய்வ கோயில்களின் கோபுரத்தில், தேர்களில், வாயிற் படிகளிலும் குண்டான பெருத்த உருவத்தோடு இருக்கும் சிற்பங்கள் தான் இந்த கணங்கள். சிவனுக்கும் இன்னும் இதர இந்து மத கடவுளுக்கு சேவை செய்வது தான் பூத கணங்களின் வேலை என்பது இந்து மத புராணங்கள் கட்டமைத்த கட்டு கதைகள். தங்கள் மக்களின் நலனுக்காக உயிரை கொடுத்து போராடிய அல்லது பாதுகாவலராக இருந்த பல இனக் குழுக்களின் முன்னோர்களும், தலைவர்களுமே அந்த மக்களின் அதிபலம் வாய்ந்த தெய்வங்கள். அது அந்த மக்கள் வாழ்வில் நிழலாகவும் நிஜமாகவும் பின்னி பிணைந்து இருக்கும் தொன்மங்கள். அந்த தொன்மங்களை உண்டு செறித்து அவைகளை பெருந் தெய்வ கோயில் கடவுள்களின் கணங்களாக மாற்றுவது ஒரு நிறுவனபடுத்தப்பட்ட நடவடிக்கை. இது பேரரசு உருவாக்கத்தில் நடைபெற கூடியது. இந்த கணங்களுக்கு எல்லாம் அதிபதி தான் கணபதி என்று வித விதமான திரிபு கதைகளை இந்து மதம் கட்டமைத்துள்ளது. இந்த மாற்றங்கள் அரச அடக்குமுறை மூலம் நடைபெற தொடங்கி பின்னர் மக்களே பின்பற்றும் இயற்கை நிகழ்வாக மாற்றப்பட்டது.

பார்ப்பனியம் அதை அந்த மக்களையே விரும்பி செய்ய வைக்கும். இதுவே காந்தார படத்திலும் நடக்கிறது. அதற்கு ஏற்படும் தடைகளை கதைநாயகன் பர்மே வென்று பெரு தெய்வ வழிபாட்டை , நிறுவனப் படுத்தப்பட்ட வழிப்பாட்டை உறுதி செய்கிறான் என்பதே படத்தின் முடிவு. இங்கே பெருந்தெய்வம் வெற்றி பெறுகிறது, ஈஸ்வர பூந்தோட்டம் வீழ்த்தப்படுகிறது!. அது தெரியாமல் மக்கள் அதை கொண்டாடுவதை படம் நியாயப்படுத்தி காட்டுகிறது.

படத்தில் பண்பாட்டு கூறுகளை கடந்த கர்நாடக மாநில பாஜக – ஆர்.எஸ்.எஸ்-ஸிற்க்கு ஏற்பட்டுள்ள நிகழ்கால அரசியல் பாதிப்புகளை கையாளும் சிவன் பயன்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் நடைபெறுவதாக சொல்லப்படும் படத்தின் கதைப்படியே கதையின் நாயகன் 12 நூற்றாண்டில் வாழ்ந்த ’லிங்காயத்து’ என்கிற வழிபாட்டு முறையை உருவாக்கிய பசவன்னாவின் தாக்கத்தோடே காட்டபடுகிறார்.

சாதி ஏற்ற தாழ்வுகளை, வேத வழிபட்ட சடங்கு முறைகளை ஒழித்த ஒரு வழிபாட்டு முறையே பசவன்னாவின் லிங்காயத்து முறை. இதை பின்பற்ற கூடியவர்கள் தங்களை லிங்காய்த்துகள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

தற்போதைய கர்நாடக அரசியலில் லிங்காய்த்துகள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். கர்நாடகாவில் தனி மத அடையாளத்திற்கான லிங்காயத் சமூகத்தின் கோரிக்கை தீவிர அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது. கர்நாடகாவின் மக்கள் தொகையில் சுமார் 17% உள்ள லிங்காயத் சமூகம், ஒரு தனித்துவமான மதமாக அங்கீகாரம் பெற முயற்சிக்கிறது.

கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் (Socioeconomic and Educational Survey) போது பசவன்னாவை பின்பற்றும் லிங்காய்த்துகள் தங்கள் மத அடையாளத்தை இந்து என்று குறிப்பிட வேண்டாம் என்று அகில பாரத வீரசைவ மகாசபை கோரியுள்ளது. அதற்கு பதிலாக தங்களை மற்றவை (others) என்று தங்கள் விவரத்தை பதிய சொல்லியுள்ளது.

இந்நிலையில், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவதில் லிங்காயத் மதத்தின் நிறுவனர் பசவண்ணாவின் முயற்சிகளை ஏற்று கொள்வதாகவும், மக்களின் உணர்வுகளே இந்த அரசை வழிநடத்தும் என்றும் காங்கிரசின் முதலமைச்சர் சித்தராமையா தெரிவிக்கும் சூழல் கவணிக்கதக்கது. 2018 ஆம் ஆண்டே கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் அறிக்கையை ஏற்று சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் அமைச்சரவை லிங்காய்த்துகள் மற்றும் வீரசைவ லிங்காய்த்துகளை தனி மத சிறுபான்மையினர் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

லிங்காயத்துகளின் தனி மத  கோரிக்கையை பாஜக கடுமையாக எதிர்ப்பதோடு, காங்கிரஸ் இந்து சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டுகிறது. லிங்காயதாக அறியப்படுகிற தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, இந்த நடவடிக்கை இந்து ஒற்றுமையைத் துண்டு துண்டாக உடைக்கும்  உத்தியின் ஒரு பகுதியாகும் என்று கூறுகிறார். இந்த அரசியல் பதட்டமே கர்நாடக மாநிலத்தில் நிலவிவருகிறது.

இப்படியான பரப்பரப்பான கர்நாடக அரசியல் சூழலில் தான் காந்தார திரைப்படம் வெளியாகியுள்ளது. ஒரு லிங்காயத்து போல பேசும் பர்மே கதாபாத்திரம் தங்கள் சிவனை பெருதெய்வ வழிபாட்டில் கொண்டு சேர்க்கும் செயல் வெளிப்படையான ஆர் எஸ் எஸ் அரசியல். பர்மே வின் சிவன் வேறு, பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ்ஸின் சிவன் வேறு என்பதே லிங்காயத்துகளின் அரசியல் முழக்கம்.

நாங்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழுக்கத்தின் வேர் லிங்காய்த்து மதம். அந்த அரசியலை மழுங்கடிக்க, பாஜக – ஆர்.எஸ்.எஸின் சிறு தெய்வங்களும் இந்து மத தெய்வங்கள் தான் என்கிற செறித்து உள்வாங்கும் அரசியல் அங்கே திட்டமிட்டு வலிமை படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் தொடக்கம் தான் கெளரி லங்கேஸ் அவர்களின் கொலையென்று புரிந்து கொள்வோம் எனில், இந்த அரசியலின் நீட்சியே காந்தாரா திரைப்படம்.

காந்தார பிராந்திய உணர்வுகளை சுண்டி அதை பார்ப்பனிய மையப்படுத்தி இந்திய தேசியத்தில் கரைக்கிறது. காந்தார சிறு தெய்வங்களை கொண்டாடுவது போல அவையும் இந்து மதத்தின் கடவுள்களே என்று உள்வாங்கிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திரை மொழி அரசியில். 

அந்த வகையில் தொழில்நுட்பங்கள், இந்திய அளவிலான சினிமா என்கிற அரிதாரங்கள் இல்லாமல் சிறுதெய்வ தன்மையை, அதை உள்வாங்கிய மனிதர்களை சிறிய குறியீடுகள் மூலம் இயல்பாக காட்டிய படம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் அவர்களின் ‘ரெட்ரோ’ திரைப்படம் என்று சொல்ல முடியும். தற்போதைய இந்திய அரசியலில் நிலவும் மிக தீவிரமான மதவாத குழலில் காந்தார போன்ற திரைப்படங்கள் ஈஸ்வர பூந்தோட்டங்கள் வீழ்த்த படுவதை மக்களே ரசிக்கும் மனநிலையை உருவாக்குவது ஒரு பெரும் துயரம். தமிழர்கள் இந்த படத்தை பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் அவர்களின் ஆய்வு கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும். அதுவே தமிழ் நாட்டிற்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »