பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து கோவில்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்யும் இந்து சமய அற நிலையத்துறை! அமைச்சர் சேகர்பாபு அவர்களின் முன்னெடுப்பை வன்மையாக கண்டிக்கின்றோம்! திமுக அரசு உடனடியாக தலையிட்டு தடை விதிக்க வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சியை அத்துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு அவர்கள், சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாச சுவாமி திருக்கோயிலில் தொடங்கி வைத்துள்ளார். கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொளத்தூா் கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் இந்த கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர். இந்து சமய அற நிலையத்துறை அமைச்சரின் இத்தகைய வரம்புமீறிய செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பழனியில் கடந்த ஆகஸ்ட் 24-25 தேதிகளில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களில் ஒன்றான, ‘கந்த சஷ்டி பெருவிழாவின் போது திருக்கோயில் சாா்பில் நடத்தப்படுகின்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் மூலம் கந்தசஷ்டி பாராயணம் செய்யப்படும்’ என்பதன் அடிப்படையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது என்கிறார் அமைச்சர். மேலும், இந்த ஆண்டு 738 பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளித்து 12 முருகன் திருக்கோயில்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்யப்படும் என்றும், திருவான்மியூா் பாம்பன் சுவாமி திருகோயிலில் 120 மாணவா்கள் பாராயணம் செய்யும் இந்த நிகழ்வினை தொடர்ந்து, வரும் 4-ஆம் தேதி கந்த கோட்டத்திலும், 6-ஆம் தேதி வடபழனியிலும் கந்தசஷ்டி பாராயணம் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அற நிலையத்துறையின் இந்த முன்னெடுப்பு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்ற போது, இந்து சமய அற நிலையத்துறை அம்மாநாட்டினை நடத்தியதற்கும், அர்ஜூன் சம்பத் போன்ற சமூகவிரோதிகளை முன்னிலைப்படுத்தி அது நடத்தப்பட்ட விதத்திற்கும், அதில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தீர்மானங்களை நிறைவேற்றியதற்கும் மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. தற்போது அதனடிப்படையில், அறிவுக்கு ஒவ்வாத, பகுத்தறிவுக்கு எதிரான, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் வரிகளை கொண்ட கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யும் தொடர் நிகழ்வை முன்னெடுப்பது கண்டனத்திற்குரியது. மனிதகுலத்திற்கு எதிரான மூடநம்பிக்கைகளை வளர்த்தெடுக்கும் கந்தசஷ்டி கவசத்தை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்கு பயிற்றுவிப்பதும் அதனை இந்து கோவிகளில் பாராயணம் செய்ய வைப்பதும் தமிழர் அறத்திற்கு எதிரான செயலாகும். ஆன்மீகம் என்ற பெயரில் இது போன்ற செயல்களை தமிழ்ச் சமூகத்தில் வளர்த்தெடுப்பது இந்துத்துவத்தை வளர்த்தெடுப்பதற்கு ஒப்பானது.
மன்னர்கள் காலத்தில் சமூகத்தின் அதிகார மையமாக விளங்கிய, மக்களின் உழைப்பை செல்வத்தை சுரண்டி கட்டப்பட்ட கோவில்களில் செல்வத்தை குவித்து, அதன் நிர்வாகத்தையும், அதன் மீதான உரிமையையும் பார்ப்பனர்கள் கையில் அளிக்கப்பட்டது. இந்நிலையை மாற்றி, கோவில் நிர்வாகத்தை பார்ப்பனர்கள் கையிலிருந்து அனைத்து சாதி-சமூகத்தினர் நிர்வாகத்திற்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட வரவு-செலவு கணக்கு கவனிப்பது, சொத்துக்களை நிர்வகிப்பது, உள்ளிட்ட பொறுப்புகளை மேற்கொள்ள நீதிக்கட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதே இந்து அறநிலையத்துறை என்பது வரலாறு. அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் முறைகேடுகள் நடக்காதவண்ணம் கோவில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதும், கோவில் வருவாயை மேலாண்மை செய்வதுமே இந்தத் துறையின் நோக்கம். மாறாக ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வது ஒரு அரசுத் துறையின் பணியல்ல.
கந்தசஷ்டி பாராயணம் என்ற தொடர் ஆன்மீக நிகழ்வை முன்னெடுப்பதும், அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க வைப்பதும், திராவிடத்தின் வழிவந்த – ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானதாகும். மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்த்தெடுக்கும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல. சமூகநீதிக்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுக்கும் அறநிலையத்துறையை கட்டுப்படுத்துவதும், அதன் செயல் வரம்பிற்கும் செயல்படுவதை உறுதி செய்வதும் திமுக அரசின் அரசின் கடமை.
அறநிலையத்துறை முன்னெடுக்கும் கந்தசஷ்டி பாராயணத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து திமுக அரசு அதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டுமெனவும், பள்ளி, கல்லூரி மாணவர்களை எக்காரணம் கொண்டும் ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
அறநிலையத் துறையின் பணி ஆன்மீகத்தை வளர்த்தெடுப்பது இல்லை என்றாலும், தந்தை பெரியாரின் வழிவந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில், தந்தை பெரியாரின் திராவிட கொள்கைகளுக்கு எதிரான செயல்பாட்டினை முன்னெடுப்பது முற்றிலும் முரணானதாகும். ஆரிய பார்ப்பனிய அதிகார மையமான கோவில்களில் சாதியின் பெயரால் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பது என்பது வேறு, கடவுளின் பெயரால் ஆன்மீகத்தை வளர்த்தெடுத்து சமூகத்தை பின்னோக்கு இழுத்து செல்வது வேறு என்பதை திமுக அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். அதேபோல், திமுக அரசு பிரிவினைவாதத்தை தூண்டுகிறது என்றும், சமூகநீதி காக்கும் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய உதவுவதாகவும் கூறிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தை அறநிலையத்துறை முன்னிலைப்படுத்துவதை தடுப்பதும், கொலை மிரட்டல் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதும் திமுக அரசின் கடமை என்பதை மே பதினேழு இயக்கம் நினைவூட்டுகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
04/11/2024