காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு உதவிய ஈரானும், ஈரானை கைவிட்ட இந்தியாவும்

கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஜூன் 13,2025 அன்று இஸ்ரேல் ஈரானின் முக்கிய ராணுவ தளங்களையும் அணுசக்தி தளங்களையும் தாக்கி இருக்கின்றது. அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் கடுமையான போராக உருவெடுத்திருக்கின்றது.

போரினால் ஏற்படும் விளைவுகள், மக்கள் படும் துயரங்கள் இவை அனைத்தையும் தாண்டி இந்தியாவின் நிலைப்பாடு என்ன, எந்த நாட்டிற்கு ஆதரவளிக்கும் என்பது போன்ற விவாதங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. இசுரேல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தியபோதே இசுரேலுக்கு ஆதரவான செய்திகளை மேற்குலக ஆதரவு ஊடகங்கள் பரப்பின. தற்போது இசுரேல்-ஈரான் போரிலும் இந்திய ஊடகங்கள் (தமிழ் ஊடகம் உட்பட) ஈரானுக்கு எதிரான செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. இந்தியா-ஈரான் வெளியுறவு குறித்த வரலாற்று செய்திகள் எதுவும் அறியாமல், அறிவிக்க விரும்பாமல், இசுரேல் ஆதரவு நிலைப்பாட்டை பல இந்துத்துவ ஆதரவு ஊடகங்கள் எடுக்கின்றன.

அண்மையில் ரஷ்யா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைக் கொண்ட ஷாங்கை ஒத்துழைப்புக் கூட்டமைப்பு (Shanghai Cooperation Organization-SCO) இஸ்ரேலின் இராணுவ தாக்குதல்களைக் கண்டித்திருந்தது. மேலும் உலகளாவிய சட்டங்களையும் ஐ.நா.வின் விதிகளையும் இசுரேல் மீறி உள்ளதாக அந்தக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் SCO உறுப்பினரான இந்தியா, அந்த கூட்டமைப்பின் அறிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கவில்லை. தற்போது போர் நடக்கும் சூழலில் மட்டுமல்ல இதற்கு முன்னரும் பல நேரங்களில் இந்தியா ஈரான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததில்லை. (சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் கூட இந்தியா ஈரானுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறது).
தற்போது மேற்காசிய போர் தீவிரமாகி இருக்கும் நேரத்தில், கடந்த காலத்தில் இந்தியா-இரான் உறவில் நிகழ்ந்துள்ள முக்கிய நிகழ்வுகளை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய நிகழ்வு ஒன்று உள்ளது. 1994ஆம் ஆண்டில் ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளின் தடைகளில் இருந்து இந்தியாவை பாதுகாத்திருக்கிறது ஈரான். இதற்காக ஈரானுக்கு எதிராக மேற்குலக நாடுகள் கடுமையாக நடந்து கொண்டதும், உலகளாவிய அளவில் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டதும் வரலாறு.
(கீழ்க்காணும் கட்டுரை ‘kashmirtimes’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்:)
தொன்னூறுகளின் காலகட்டத்தில் இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழல் இருந்தது. இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க தனது தங்க இருப்பை (gold reserve) அடகு வைக்கும் நிலைக்கு சென்றிருந்தது. சோவியத் யூனியனும் உடைபட்டதால், ரஷ்யாவினாலும் அப்போது வெளியறவு ரீதியான ஆதரவை வழங்க இயலவில்லை.

இந்தப் பின்னணியில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் (UNHRC) இந்தியாவைக் கண்டிக்கும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர நினைத்தது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஐ.நா. பாதுகாப்பு குழு மூலம் மேற்கத்திய நாடுகள் இந்தியாவிற்கு பொருளாதார தடை விதிக்கும் சூழல் இருந்தது. ஈரான் ஆதரவளித்தால் மட்டுமே இந்தத் தடையில் இருந்து தப்பிக்கலாம் எனும் சூழலில் இந்தியா ஈரானுக்கு தனது வெளியறவுத்துறை அமைச்சரை அனுப்பியது.
1994 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், ஈரான் தலைநகர் டெஹரானில் உள்ள விமான நிலையத்தில் ஒரு சிறப்பு இந்திய ராணுவ விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் அன்றைய இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் தினேஷ் சிங், மூன்று உதவியாளர்கள் மற்றும் ஒரு மருத்துவர் இருந்தனர். (அமைச்சர் தினேஷ் சிங் அப்போது நடமாட முடியாத நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்தார். நீண்ட நாட்களாக AIIMS மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்தார் தினேஷ் சிங்.) அப்போதைய ஒன்றிய பிரதமர் பி.வி.நரசிம்மராவின் உத்தரவின்படி, ஈரான் அதிபர் அலி அக்பர் ஹாஷிமி ராஃப்ஸான்சனிக்கு தனிப்பட்ட செய்தியொன்றை கொண்டு சென்றிருந்தார் சிங். (அமைச்சர் மருத்துவமனையில் இல்லாமல் இரான் செல்வதை ரகசியமாக வைத்திருக்க வேறு ஒருவர் மருத்துவமனையில்அவரது இடத்தை எடுத்துக் கொண்டார்.)
அமைச்சர் தினேஷ் சிங் தன் மோசமான உடல்நிலையையும் மீறி ஈரான் சென்றது அங்குள்ளவர்களுக்கு ஆச்சரியமூட்டியது. ஈரானின் வெளிநாட்டு அமைச்சர் டாக்டர் அலி அக்பர் வேலயாடி, நடைமுறைக்கு மாறாக தினேஷ் சிங்கை விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார். சக்கர நாற்காலியில் இருந்த சிங்கின் கையைப் பிடித்துக் கொண்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டும் இவ்வளவு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதற்கான காரணத்தை விசாரித்தார். சிங் சிரித்துக் கொண்டே இந்தியாவிற்கு ஈரான் ஆதரவு வழங்குமாறு பதிலளித்தார்.
ஈரான் அதிபர் ராஃப்ஸஞ்சானி, வெளியுறவுத்துறை அமைச்சர் வேலயாடி மற்றும் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நேதக்-நூரி போன்ற அதிகாரிகளுடன் பல மணி நேரம் இது குறித்து உரையாடினார் சிங். இந்தியாவுக்கு எதிரான ஐ.நா.தீர்மானத்தில் இருந்தும் பொருளாதாரத் தடைகளில் இருந்தும் ஈரான் இந்தியாவைப் பாதுகாக்கும் என்ற ராஃப்ஸஞ்சானியிடமிருந்து பெற்ற உறுதியான தகவலுடன் மாலையில் சிங் விமானத்தில் டெல்லி திரும்பினார். நேரடியாக மருத்துவமனைக்கும் சென்று விட்டார்.
ஐ.நா. தீர்மானத்தைக் குறித்து ஈரானிய அதிகாரிகள் முதலில் வேறு நிலைப்பாட்டில் இருந்தனர். இந்தியாவைத் தண்டிக்கும் வகையில் ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக புதுதில்லியில் நடந்த சந்திப்பொன்றில் ஹுரியத் குழுவினருக்கு ஈரானிய தூதுவர் உறுதி அளித்திருந்தார். அந்த நிலைப்பாட்டை மாற்றி இந்தியாவிற்கு ஆதரவாக இருக்குமாறு அமைச்சர் தினேஷ் சிங்கின் மூலம் ஈரானுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

‘ஈரான் இந்தியாவுக்கெதிரான OIC நடவடிக்கையை தடுத்து விட்டது‘ என்ற செய்தி கிடைக்கும் வரை 72 மணி நேரத்தை தவிப்புடன் கழித்தது புதுடெல்லி. சர்வதேச அணுசக்தி நிறுவனத்தைப் போன்றே OIC அமைப்பும் உறுப்பினர்கள் அனைவரின் ஒரே கருத்திசைவில் செயல்படும் அமைப்பு. ஐ.நா. தீர்மானத்தை ஈரான் எதிர்ப்பதன் மூலமோ அல்லது தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் தவிர்ப்பதன் மூலமோ, இந்தியாவிற்கு எதிரான OIC அமைப்பின் நடவடிக்கையை அதன் தொடக்கத்திலேயே தடுக்க முடியும். இந்த அமைப்பின் தீவிர செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, ஈரானில் பணிபுரிந்த முன்னாள் வெளியுறவுத்துறை அலுவலரான எம் கே பத்ரகுமார், ‘இந்தியாவிற்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை தடுக்கும்’ ஆற்றலாக ஈரானை நரசிம்ம ராவ் அடையாளம் கண்டு கொண்டார் என்று கூறினார்.
ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிரான தீர்மானத்தை பாகிஸ்தான் முன்னகர்த்தியபோது, ஈரான் அதற்கு ஆதரவளிக்கவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளின் தோழனாக, காலனி ஆதிக்க நாடுகளின் தலையீடு இல்லாமல் காஷ்மீர்ப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ஈரான் கூறியது. ஈரானின் நிலைப்பாட்டால் தீர்மானம் தடைபட்டது. காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்திற்கு கொண்டு செல்லும் பாகிஸ்தானின் கடைசி முயற்சியும் தோல்வியடைந்தது.
இந்த நிகழ்வுகள் உலக அரங்கில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தின. குறிப்பாக ஆப்கானிஸ்தான் விடயத்தில் ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையே விரிசல் அதிகமானது. பாகிஸ்தானின் தாலிபான் கூட்டணிக்கு எதிரான வடக்கு கூட்டணியை இந்தியாவும் ஈரானும் ஆதரிக்கும் வகையில் ஒன்றிணைந்தனர். இந்த புவிசார் மறுசீரமைப்பினால் அதிர்ச்சிக்குள்ளான பாகிஸ்தான் ஈரானின் நடவடிக்கையை ஒரு துரோகமாக பழி கூறியது.
இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்திய தரப்பை பிரதிநிதிப்படுத்தியது அரசு தரப்போ அமைச்சர்களோ அல்ல. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான அடல் பீகாரி வாஜ்பாயி, வெளிநாட்டு விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் டாக்டர் பாரூக் அப்துல்லா ஆகியோரே பிரதிநிதிப்படுத்தினர். பின்னாளில் வாஜ்பாயி மற்றும் அப்துல்லா இருவரும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை வெற்றி பெற்றதில் தங்களின் பங்கு பற்றி பேசினார்கள். ஆனால் தினேஷ் சிங் ரகசியமாக ஈரானுக்கு சென்றதைப் பற்றி இவர்கள் அறிந்திருந்தார்களா தெரியவில்லை.
உண்மையில் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் தினேஷ் சிங்கின் முக்கியமான பங்கை வெளியிடாமல், தனது அரசியல் போட்டியாளர்களுக்கு (ஈரான் வெளியுறவு) வெற்றியில் பங்களித்திருக்கிறார்.
ஆனாலும் ஈரானின் ஆதரவுக்கு இந்தியா எப்போதும் திருப்பி செலுத்தியதில்லை. ஈரான் தனது அணு திட்டத்திற்காக தடையை சந்தித்த போதோ, அமெரிக்காவின் அழுத்தத்தால் அதன் எண்ணெய் ஏற்றுமதி குறைந்தபோதோ, இந்தியா அமைதியாக எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து அமெரிக்காவிற்கும் இசுரேலிற்கும் ஆதாரவாகவே இருந்திருக்கிறது. ஈரான் தனிமைப்பட்ட போதும், இந்தியா அமைதி காத்தது.
உலக அரங்கில் ஒரு நெருக்கடியான சூழலில் ஈரான் இந்தியாவை காப்பாற்றியதை பலர் மறந்துவிடுகின்றனர். ஆனால் ஈரான் இன்னும் அதை நினைவில் வைத்திருக்கும். பல்வேறு நினைவுகளும் துரோகங்களும் சூழ்ந்துள்ள இந்தப்பகுதியில், மறந்துபோன ஈரானின் உதவி தெற்காசியாவின் மறுக்கப்பட்ட வெளியறவு நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது.

இவ்வாறு இந்தியா-ஈரான் வெளியறவு குறித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது அந்தப் பத்திரிக்கை. இதன்மூலம் ஈரான் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு ஆதரவாக இருந்த நிகழ்வு புலப்படுகிறது. இந்த நிகழ்விற்குப் பின்னும் இந்த இரு நாடுகளிடையே பல வர்த்தக தொடர்புகள் இருந்திருக்கின்றன. 2017-ல் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா பின் வாங்கிய காலம் வரை, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் மூன்றாவது பெரிய நாடாக ஈரான் இருந்தது. மேலும் ஈரானின் சாபஹார் துறைமுகத்தில் ₹4,000 கோடி முதலீடு செய்தது இந்தியா. (பாகிஸ்தான் நிலப்பரப்பைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மூலம் மத்திய ஆசியாவுடன் வணிகம் செய்ய சாபஹார் துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகக் கருதப்படுகின்றது.) இதுமட்டுமல்லாது பெட்ரோகெமிக்கல்ஸ், உரம் மற்றும் திரவமயமாக்கப்பட்ட இயற்கை வாயு (எல்.என்.ஜி) எனப் பல்வேறு திட்டங்களுக்கு 20 பில்லியன் வரை முதலீடு செய்யவும் இந்தியா முன்மொழிந்தது.
ஆனால், இன்று ஈரானின் வர்த்தக உறவோடு இதற்கு முன்னர் செய்த உதவிகளும் எளிமையாக மறக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வெளியறவுக் கொள்கையைத் திட்டமிடும் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதே அண்மைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தமிழ்நாட்டிற்கு மிக அருகாமையில், ஈழத்தில் நடந்த போரின் போது இதே போன்றதொரு வெளியுறவுக் கொள்கையின் மூலம் தமிழர்கள் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்ட துயரம் நிகழ்ந்தது. இந்தியாவை ‘தந்தையர் நாடு’ என்று அழைத்து, இந்தியாவிற்கு எதிரான எந்த சக்திகளையும் ஈழத்திற்குள் நுழைய விடாமல் ஈழத்தமிழர்கள் தடுத்தார்கள். ஆனால் இந்தியா அதையெல்லாம் மறந்து தமிழின விரோதத்தோடு சிங்களத்திற்கு உதவி செய்ததே ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்தது. இன்றளவும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையால் படுகொலை செய்யப்படும்போது இந்திய வெளியுறவுத்துறை பாராமுகமாய் இருப்பதும் தொடர்கிறது.
மக்கள் மீது அக்கறை இல்லாத வெளியறவுக் கொள்கை ஏற்படுத்தும் இன்னல்களை உலகெங்கிலும் நடக்கும் போர்கள் நமக்கு சுட்டிக்காட்டி விடுகின்றன.