2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி கேரளாவில் கம்யூனிஸ்டுகளின் மீதான காங்கிரசின் வன்மமான தாக்குதல் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூல் வலைதளத்தில் ஏப்ரல் 26, 2024 அன்று பதிவு செய்தது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட சங்கிகளை மிகச்சிறப்பாக ஒடுக்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்டுகளின் வரலாறுகளின் வழியே பாசிச எதிர்ப்பை கற்றுக்கொள்ள காங்கிரஸ்காரர்களுக்கு ஏராளம் உண்டு.
குறிப்பாக சொல்லவேண்டுமெனில், தமது கட்சி உறுப்பினர்களுக்கு பாசிசம் குறித்த புரிதலை கம்யூனிஸ்டுகள் ஏற்படுத்தியதுபோல, காங்கிரஸ்காரர்கள் பயிற்றுவித்ததில்லை. ராகுலின் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் எந்த வகையிலும் பாசிச எதிர்ப்பு ஐக்கியத்தை உண்டுபண்ணாது. தென்னிந்தியாவை காங்கிரஸின் பிடிக்குள் கொண்டுவரும் அவரது வேலைத்திட்டத்தின் வெளிப்பாடாகவே அவரது கேரள பிரச்சாரம் இருந்தது. ஆந்திராவை கைப்பற்றி, தமிழ்நாட்டில் வலுவாக கால் ஊன்றினால் தென்னிந்தியாவை தன்பிடிக்குள் கொண்டுவரலாம் எனும் திட்டத்தை இச்சமயத்தில் நடைமுறைப்படுத்துவதால் யாருக்கு லாபம்? வட இந்தியாவை பாஜகவின் பிடியிலிருந்து மீட்க திட்டமிடாமல் தென்னிந்தியாவை கைக்குள் கொண்டு வந்து தனது மேலாதிக்கத்தை உறுதி செய்வதென்பது காங்கிரஸின் ‘பாஜக தருணத்தை’ உணர்த்துகிறது.
பாஜகவின் மாநில விரோத கொள்கைகள், காசுமீர் எதிர்ப்பு, இந்துத்துவ சார்பு, கல்விக்கொள்கை ஒப்புதல், உபா-என்.ஐ.ஏ, காசுமீர் ஆகிய ஒடுக்குமுறை மசோதாக்கள் என அனைத்திலும் பாஜகவோடு மாறுபடாமல் நின்ற கட்சியாகவே காங்கிரஸ் இயங்கியது. இராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், மத்தியபிரதேசம், இமாச்சல், ஹரியானா, பஞ்சாப் போன்ற முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் எவ்வகையில் ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு, அதானி-அம்பானி எதிர்ப்பை கடைபிடித்தது என்பதை நாம் அறிவோம். ராகுல் அதானிக்கு எதிராக பேசிக்கொண்டிருந்த அதே வாரத்தில் ராஜஸ்தானின் காங்கிரஸ் முதல்வர் கெலாட் அதானியோடு ஒப்பந்தம் போட்டு, அவரை பாராட்டிக்கொண்டிருந்தார். ராகுலை மோடி அரசு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்த போது கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் விளையாட்டு போட்டி விவரங்களை எழுதிக்கொண்டிருந்தார். இப்படியான பட்டியல் ஏராளம்.
தொண்டர் அணிகளை எவ்வித அரசியலுக்கும் பழக்காமல், இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் பயிற்சியளிக்காமல் பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆட்சிக்கு மாற்று அரசியலை காங்கிரஸால் கொண்டுவர இயலாது. இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ்சின் தாக்கத்தை கையாளவேண்டுமெனில் திராவிட இயக்கத்தையும், அம்பேத்கரிய இயக்கங்களையும், இதனோடு கம்யூனிஸ்டுகளையும் கொண்ட கொள்கை கூட்டமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே சாத்தியம். இப்படியான நகர்வை காங்கிரஸோ, ராகுலோ மேற்கொள்வதாக கேரளா தேர்தல் நமக்கு சொல்லவில்லை.
இப்படியான கூட்டமைப்பை பற்றிய திட்டமில்லாமல், தமிழர் இனப்படுகொலை, சீக்கியர் இனப்படுகொலை குறித்து எவ்வித சுயவிமர்சனமும், வெட்கமும் கொள்ளாத காங்கிரஸால் இசுலாமியர்களை இனப்படுகொலை செய்யும் பாஜகவை எப்படி வெல்லமுடியும்?
காங்கிரஸை நோக்கிய அரசியல் கேள்விகள் எழாமல் போனால், பாஜகவை வீழ்த்தும் அரசியலை உருக்கொள்ள முடியாது.
இக்கேள்விகளை கடந்த வருடம் இதே மே மாதத்தில் எழுப்பியபோது அவதூறுகள் குவிந்தன. இந்த அவதூறு பிரச்சாரத்தை செய்தவர்கள், தேர்தல் பாதை திருடர் பாதையென 40 ஆண்டுகள் பிரச்சாரம் செய்துவிட்டு, திடீரென காங்கிரஸை ஆதரிக்காதவன், ராகுலுக்கு ஓட்டுபோடாதவன் பாசிஸ்டு என ஒப்பாரி வைத்த போலி புரட்சி பார்ப்பன கூட்டம். இவர்கள் திராவிட அரசியலை பின்னுக்கு தள்ளி காங்கிரஸின் ஏகபோக இந்திய தேசிய அரசியலை முன்னுக்கு நகர்த்துவதை நோக்கமாக வைத்திருப்பதை அறியவில்லையெனில் நேர்மையான விவாதங்கள் சாத்தியமில்லை.
ராகுல், காங்கிரஸ் ஆகிய அரசியல் சக்திகளை முன்னுக்கு நகர்த்த நடத்தப்படும் கார்ப்பரேட் முயற்சிகளை கடந்த வருடம் பேசி இருந்தோம். இவ்வருடத்தில் இதைப்பற்றிய கட்டுரைகள் வெளியாகிக் கொண்டுக்கின்றன. பாஜகவிற்கு எதிரான அரசியலை grassroots அரசியலிலிருந்து எழுப்பும் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் வகைப்பட்ட அரசியலை புறம்தள்ளிவிட்டு, மேலிருந்து கீழ் நோக்கிய ஒற்றைத் தலைமை அரசியலை கட்டமைப்பதை கடந்த வருடம் பலமுறை அம்பலப்படுத்தியிருந்தோம்.
இன்று கேரளாவில் நடந்திருப்பது, இவ்வகை அரசியல் முகாம்களின் மோதலே. கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஊர் ஊராக, வீதிவீதியாக சங்கிகளை எதிர்கொண்டு நின்றார்கள். அந்த அரசியலில் இருக்கும் நிறைகுறைகள் மீது நமக்கு விமர்சனம் வரலாம், ஆனால் இவ்வகை அரசியலின் ஒரு சதவீதத்தைக் கூட நாம் காங்கிரஸின் மாநிலங்களில் காணமுடியவில்லை. இதன் காரணம் அரசியல் பயிற்சி பெறாத பண்ணையார் கட்சிக்கும், அடித்தட்டு அரசியலில் புடம்போடப்படும் grassroots அரசியலுக்குமான வேறுபாடு. பாசிசத்தை தேர்தல் அரசியலில் வலு இழக்க செய்து அரசு இயந்திரத்தை பாசிஸ்டுகள் கைப்பற்றாமல் தடுக்கப்படுதலே இந்த 2024 தேர்தலில் நம் அனைவருக்குமான இலக்கு. இச்சூழலில் கம்யூனிஸ்டுகளின் மீதான வன்மமான தாக்குதல் எவ்வகையிலும் நேர்மையானதல்ல.