
மே 17 இயக்கம் இந்தி அழிப்பு போராட்டத்தை எடுத்தற்கான பின்னணி மற்றும் இந்தி எதிர்ப்பு என்பது தேர்தலுக்கானதல்ல, தேவைக்கானது என்ற கருத்தையும் பற்றியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மார்ச் 14, 2026 அன்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தது.
2025 மாநாட்டில் இந்தி அழிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்தது மே17 இயக்கம். தமிழ்த்தேசிய பெருவிழா மாநாட்டில் இந்தி எதிர்ப்பு பாடலை வெளியிட்டது. இந்தி ஆதிக்க எதிர்ப்பு பொதுக்கூட்டத்தை நடத்தியது.
2026 ஜனவரியில் இப்போராட்டத்தின் தேவை குறித்து பரப்புரை மேற்கொண்டோம். ஜனவரி 27ம் தேதி மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தின் போது இந்தி திணிப்பை கண்டித்து முழக்கம் எழுப்பி போராடியது மே17 இயக்கம்.
2026 பிப்ரவரி 21ம் தேதி உலகத்தாய்மொழி நாள், மோடி வருகை ஆகியவற்றை முன்வைத்து இந்தி ஆதிக்க எதிர்ப்பை முன்வைத்து போராட்டம் நடத்தியது மே17 இயக்கம். பின்னர் மார்ச் 01ம் தேதி கோவை, சிதம்பரம் நகரங்களில் மோடி வருகையை கண்டித்து ரயில்நிலைய முற்றுகை, இந்தி அழிப்பு போராட்டத்தை நடத்தியது.
இதன் பின்னர் மார்ச்11ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வரும் மோடி அரசை கண்டித்தும், 1938ம் ஆண்டு மொழிப்போர் ஈகியர் தாளமுத்து மரணித்த இதே நாளை முன்வைத்து சென்னை பார்க் ரயில் சந்திப்பில் இந்தியை அழிக்கும் போராட்டத்தை தொடங்கியது.
2025ம் ஆண்டு முதலாக மே 17 இயக்கம் பரப்புரை மேற்கொண்டு, 2026ம் ஆண்டில் பரப்புரையை தீவிரப்படுத்தி, முன்னறிவிப்புப் போராட்டதை நடத்தி, பின்னர் நேரடி இந்தி அழிப்பு போராட்டத்தை நடத்தியது மே17 இயக்கம். கிட்டதட்ட ஓராண்டு பரப்புரை நடத்தி, பொதுக்கூட்டங்கள் நடத்தி, முற்றுகைப் போராட்டங்கள், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி, இதன் பின்னரே நேரடி அழிப்பு பணியை கையில் எடுத்தது மே17 இயக்கம்.

இப்போது நடக்கும் இதர சமூக பிரச்சினை குறித்து எதிர்கட்சிகளான வலதுசாரி-சங்கிகள் அனைவரும் பேசும் போது எதற்காக இந்தி அழிப்பு என போராட்டம் நடத்துகிறீர்கள் என சிலர் கேட்கலாம். சமூக வன்முறைக்கு எதிராக மே 17 இயக்கம் தேர்தல் காலத்திற்கு வெகு முன்னதாக போராட்டம் நடத்தியது. இன்றும் நடத்துகிறது.
கவின் படுகொலைக்கு சாலை மறியல் கைது, கோடியக்கரை சாதிய வன்முறை, ஒரத்தநாடு கூட்டு பாலியல் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், வழக்கு நடத்தல், பாதிப்படைந்த பெண்ணுக்கு நிவாரணம், வடகாடு சாதி வன்முறை, மாஞ்சோலை தொழிலாளர் உரிமை என பல சமூக சிக்கல்களுக்கு தொடர்ந்து நேற்று வரையில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது மே 17 இயக்கம்.
இவையெல்லாம் ஆளும் கட்சியை நோக்கிய கடுமையான எதிர்ப்பு போராட்டங்களே. ஆயினும் சங்கிகள் ஆதரவு பெற்ற போலி-தமிழ்த்தேசிய கும்பல் இப்போராட்டங்களை திரும்பிக்கூட பார்த்திடாமல் கடந்து சென்றன. இன்றும் கூட அறிக்கை அரசியலை தவிர களப் போராட்டம் என எவற்றையும் நாம்தமிழர் உட்பட எவரும் செய்ததில்லை. சங்கிகள் இவை எவற்றையும் குறித்து அக்கறை கொண்டதில்லை. மாஞ்சோலை தொழிலாளர் சிக்கல் குறித்து இதுவரை நாம்தமிழர் தலைமை போன்ற பிழைப்புவாதிகள் வாய் திறந்ததில்லை. பாஜக வாய் பேசியதில்லை. இதேபோல கவின் படுகொலைக்கும் போராட்டத்தை திரட்டியதில்லை.
இதுபோல பலவேறு சமூக சிக்கலுக்கு மே 17 இயக்கம் போராடிக்கொண்டிருக்கிற பொழுது ஆதரவு தெரிவித்து வீதிக்கு வராதவர்கள், தேர்தல் நெருங்க நெருங்க வாய்சவடால் பதிவினை செய்து ஓட்டு பொறுக்கலாமென நினைக்கிறார்கள்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மே 17 இயக்கம் தீவிரமாக முன்னெடுக்க பல காரணங்களை பட்டியல் இட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தல், ஒன்றிய பணிகளில் இந்தி பேசும் மாநிலத்தவர்களான வடவர் ஆதிக்கம், இந்தி திணிப்பால் பறிபோகும் வேலைவாய்ப்புகள்-கல்வி உரிமைகள் ஆகியன தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குபவை. இவற்றை முன்வைத்து பாஜக-பார்ப்பன கும்பலிடம் கேள்விகளை எழுப்புகிறது மே 17 இயக்கம். இது பாஜக கும்பலுக்குப்நெருக்கடியை கொடுக்கிறது. பாஜகவிற்கு நெருக்கடி உண்டானதும், அதன் அடியாளாக இருக்கும் போலி-தமிழ்த்தேசியவாதிகள், ‘இந்தியை இப்போது எதிர்க்க காரணம் என்ன?’ என ஒப்பாறி வைக்கிறார்கள். தமது மார்வாடி எஜமானனின் வாழ்வாதாரம் பறிபோவதை கண்டு சீமான் கும்பலும், அதன் அடியாள் கும்பலும் பதறுகிறது.

இந்தி எதிர்ப்பு என்பது தேர்தலுக்கானதல்ல, தேவைக்கானது. வாக்குவங்கி கணக்குகளை இலக்கு வைத்து அவதூறு பரப்பும் சங்கிகளின் கூட்டத்தை தமிழர்கள் விரட்டியடிப்பார்கள்.
மே 17 இயக்கத்தின் இந்தி அழிப்பு தமிழகம் தழுவி பலராலும் வரவேற்பை பெறுகிறது. இச்செய்திகள் பிற மாநிலங்களிலும் பரவி பெரும் அதிர்வை உருவாக்கியுள்ளது. மிக அதிகளவில் இந்தி பேசாத மாநிலங்களில் அழிப்பு காணொளிகள் வரவேற்பை பெற்று, அவர்களும் இந்தி எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து பாஜகவின் இந்தி திமிர் அடக்க போராடுவோம்.
மே17 இயக்கம் அஞ்சாது, அடிபணியாது, அன்னைத் தமிழ் காக்கப் போராடும். எங்கள் தோழர் சிவா திலீபன் தனது இன்னுயிரை கொடுக்க முன்வந்தது எமக்கு கொடும் அதிர்வை கொடுத்துள்ளது. அவரின் தன்னலமற்ற தமிழ்ப்பற்றை, ஈகை குணத்தை இழிவு செய்பவர்கள் எவராயினும் கடுமையான எதிர்ப்பை எம் தோழர்களிடத்தில் எதிர்கொள்வார்கள்.
இந்தி அழியட்டும்
தமிழ் வெல்லட்டும்
தீ பரவும்!!