காரைக்குடி மக்களின் ஒரே நீராதாரமாக 3000 வருடங்கள் பழமையான சம்பை ஊற்று இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக அம்மக்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. சென்னையில் உள்ள பள்ளிக்கரனை சதுப்பு நிலத்திற்கு இணையான சதுப்பு நிலங்கள் சம்பை ஊற்றில் அமைந்துள்ளன. இந்த ஊற்றை நம்பி பல ஏக்கர் (ஏறத்தாழ – 1000 ஏக்கர்) விவசாய நிலங்களும், அதனை ஒட்டி அமைந்துள்ள காடுகளும், இதன் கண்மாய்களில் வாழும் பல்வேறு நீர்வாழ் பறவைகளும், தாவரங்களும் உள்ளன.
எனவே சம்பை ஆற்றை சுற்றிலும் 500மீ தூரத்திற்கு ஆழ்துளை கிணறுகள் போடவோ, கட்டிடங்கள் கட்டவோ அனுமதிக்கக் கூடாது என காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீர்மானங்களும், சங்கராபுரம் பஞ்சாயத்தில் பல்வேறு வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊற்றை சுற்றி இருக்கும் ஆலைகளின் கழிவுகள் கலப்பதாலும், ஆலைகளிலிருந்து அதிகப்படியான நீர் உறிஞ்சப்படுவதாலும், நீர் ஆதார பகுதிகள் குறைந்து கொண்டே வருவாதாலும் சரியான நீர் சேமிப்புக்கான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், சம்பை ஊற்று நீர் வெளியிடும் தன்மையை இழந்துவிட்டது. முன்னர் 100 அடியிலேயே நல்ல தண்ணீர் கிடைத்த நிலையில் இன்று ஊற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீரின் அளவும் அதன் தன்மையும் குறைந்துள்ளது. ஊற்றை பாதுகாக்க வேண்டிய நிலையில் அப்பகுதியில் பிளாட் போட்டு, மின் இணைப்பு கொடுத்து போர்வெல் போடப்பட்டு வருகிறது.
இந்த ஆக்கிரமிப்புகளோடு சேர்ந்து தொழிற்சாலைகளின் கழிவுநீரும் கலப்பதால் மக்களின் நீராதாரமான சம்பை ஊற்று வேகமாகப் பாழாகி வருகிறது. குறிப்பாக அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு கெமிக்கல் புராடக்ட்ஸ் லிமிடெட் (TCP) நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் இப்பகுதி நீரில் கலப்பதால், குடிப்பதற்கு மட்டுமல்ல வேளாண்மை செய்வதற்கு கூட இயலாத நீராக அது மாசடைந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உண்மை கண்டறியும் குழு, இந்த கெமிக்கல் தொழிற்சாலைகளால் அப்பகுதி நீராதாரங்கள் மாசுபடுவதை உறுதியும் செய்துள்ளது.
காரைக்குடி மக்களின் குடிநீர் ஆதாரமான ‘சம்பை ஊற்று’ இவ்வாறு பாதிக்கப்படுவதை தடுக்க 90களில் இருந்தே போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இன்று வரை ஊற்று பாதுகாக்கப்படவில்லை. இதன் காரணமாக சங்கராபுரம் பஞ்சாயத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஜுலை 22, 2024 அன்று காவல் துறைக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி (த.ம.ஜ.க) சார்பாக மனு அளிக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கோரி 01.08.204 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
(படம்: 2022ம் ஆண்டு சம்பை ஊற்றை பாதுகாக்கக்கோரி காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் த.ம.ஜ.க-வின் தலைமையில் நடந்த போராட்டத்தில் மே17 இயக்க ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்று உரையாறினார்.)
ஆகஸ்ட் 2, 2024 அன்று வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அனுமதி கடிதத்தை மறு பரீசிலனை செய்து ஆகஸ்ட், 3, 2024 அன்றே ஆணை பிறப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் அனுமதி கடிதம் தரக்கோரி காவல்துறையினர் தெரிவித்தனர். இதனடிப்படையில் த.ம.ஜ.க தோழர்கள் அளித்த அனுமதி கடிதத்தை மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது காவல்துறை. அனுமதி மறுப்பது என்பது சாதாரண சட்ட ஒழுங்கு நடவடிக்கையாக தெரியலாம். ஆனால் அதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் சனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
பொதுக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம் சரீப், மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, தேவந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் தலைவர் எஸ்.ஆர் பாண்டியன் மற்றும் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசக்கூடியவர்கள் என்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரிய பகுதியில் “பிற மதத்தினர் குடியிருப்புகள்” உள்ளது, இது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என கூறி அனுமதியை மறுத்துள்ளனர்.
மக்களின் உரிமைகளுக்காக சனநாயக முறையில் போராடுகின்ற தலைவர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதை வன்மையாக கண்டித்து ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன், சமூக நீதிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண குறிஞ்சி, எஸ். டி. பி. ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-ன் மாநில செயலாளர் சையது அலி ஆகியோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அனுமதி கேட்பதென்பது மேடை, ஒலிபெருக்கிகள் போன்றவற்றை அமைப்பதற்கான அனுமதியே தவிர, எதை பேச வேண்டும், பேச கூடாது என்பதற்கான அனுமதி இல்லை. பேச்சுரிமை என்பது அடிப்படை சனநாயக உரிமையாகும். இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதென சொல்லப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் காலாவதியாகி இருக்க வேண்டிய காலனிய கால அடக்குமுறைச் சட்டங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது. அடிப்படை உரிமைகளை நசுக்குவதிலும், அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை ஏவுவதிலும் காலனிய கால காவலர்களுக்கு நிகரானவர்கள், தமிழ்நாட்டு காவல்துறையினர். மட்டுமல்லாது மக்களின் உரிமை குரலாய் இருப்பவர்களை அரசுக்கு எதிரானவர்கள் என சித்தரித்து வருகின்றனர்.
அனுமதி மறுப்புக்கான மற்றொரு காரணமாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியிருக்கிற இடத்தினருகில் “பிற மதத்தினர் குடியிருப்புகள்” உள்ளது. இது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என கூறி இருக்கின்றனர். சாதி, மதங்களை கடந்து மக்களின் நலன் என்ற ஒற்றை கோரிக்கைக்காக வீதிக்கு வந்து போராடும் தலைவர்களும் தோழர்களும் எந்த மதத்திற்கு எதிரானவர்களாக இருக்க முடியும்? சம்பை ஊற்றுக்கான போராட்டம் சூழலியல்- வாழ்வாதார பிரச்சனை. இதற்காக போராடுகிறவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என குறிப்பிடுவதும் இப்பிரச்சனைக்கு மத சாயம் பூசுவதும் தமிழ்நாட்டு காவல்துறை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
கடந்த காலங்களில் காவல் துறையின் செயல்பாடுகளே இதற்கான உதாரணங்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய ஸ்னோலின் உட்பட 13 பொது மக்கள் காவல் துறையால் சுட்டு கொல்லப்பட்டனர். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் காவல் நிலையத்திலேயே அடித்து கொல்லப்பட்டனர். தந்தை பெரியார் சிலைக்கும், அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தற்காக மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் காவல் துறைக்கு அளித்த அளவற்ற அதிகாரத்தின் விளைவே இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கான காரணமாகும். இந்நிலையில் மேலும் சனநாயகத்தை நசுக்கும் விதமாக மூன்று குற்றவியல் சட்ட திருத்தம் என்ற பெயரில் நீதிமன்றத்தை விட காவல் துறைக்கு அதிக உரிமைகளை வழங்கும் வடிவில் இச்சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பை ஊற்றை காக்க நடக்கும் போராட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பெரும்பாலான பிரச்சனைகளை சரி செய்ய நடத்தப்படும் அனைத்து விதமான போராட்டங்களுக்கும் இதே நிலைதான். ஆனால் மிக முக்கிய சாலையான அண்ணா சாலையிலே “ஹாப்பி ஸ்ட்ரீட்” போன்றவைகள் காவல் துறையின் ஒருங்கிணைப்பில் பாதுகாப்போடு வெகு விமரிசையாக நடக்கின்றது. இதுபோன்றவைகள் காவல் துறையின் பேரில் நற்பெயரை ஏற்படுத்திவிடும் என நினைப்பது கேலிக்குரிய ஒன்றாகும்.
பல்வேறு அடக்குமுறைகளை கடந்து ஆகஸ்ட், 12, 2024 அன்று காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் சம்பை ஊற்றை பாதுகாக்க கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மே17 இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு சனநாயக அமைப்புகள் பங்கேற்று நடந்து முடிந்திருக்கிறது. அடிப்படை உரிமைகளை காக்க சனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டங்களுக்கு காவல்
துறையிடம் அனுமதி வாங்குவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. ஜனநாயகவழி போராட்டங்களை நடத்துவதற்கே பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கிறது என்பதே இன்றைய ஜனநாயகத்தின் உண்மை நிலையாகி விட்டது..