சனநாயகமா ஒற்றையாட்சி? இடதுசாரிகளுக்கு கேள்வி – திருமுருகன் காந்தி

இலங்கையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜெ.வி.பி கட்சியின் வெற்றி குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூல் தளத்தில் செப்டம்பர் 23, 2024 அன்று பதிவு செய்தது.

2010, 2015, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களிக்கப்பட்ட முறையை இப்படங்கள் சொல்கின்றன.

இனப்படுகொலைக்கு பின்பான கடந்த 14 ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் வாக்கு அளித்த முறையை இந்த விவர-படங்கள் விளக்குகிறது. சிங்கள தேசம் தமக்கான வெற்றிவேட்பாளராக எவரை முன்னிறுத்துகிறதோ அவருக்கு எதிரான நிலைப்பாடுகளையே தமிழர்கள் எடுத்து வந்துள்ளனர்.

இலங்கையின் ஒற்றை ஆட்சிமுறையினை விளங்கிக்கொள்ளாமல், இந்தியாவின் சனநாயக முறையை போன்றதே இலங்கையின் அதிகார அரசியல் என தவறாக புரிந்து கொள்வதால் இந்திய இடதுசாரிகள் தவறான நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கிறார்கள். இந்தியாவை போன்ற அரை-கூட்டாட்சி தன்மை கொண்டதல்ல இலங்கையின் அதிகார அரசியல். ஒற்றையாட்சி -unitary state என்றால் என்ன என ஒரு கருத்தரங்கில் திமுக அமைச்சர் திரு.பொன்முடி கேட்டிருப்பார். அந்த கேள்விக்கு பேராசியர்கள் உட்பட யாரும் பதிலளிக்காத பொழுது அவரே அதை விளக்குவார். இலங்கையில் பகிர்ந்தளிக்கப்பட்ட, கூட்டாட்சி அரசு கிடையாது. இந்தியாவை போல மாநில உரிமைகள் அங்கில்லை. Quasi-Federal எனும் இந்தியாவின் நிலையில், அதிகாரத்தை மையத்தில் குவிக்கும் மோடி அரசை எதிர்க்கின்றோம். ஒருவேளை மோடி அரசு மாநில அதிகாரங்களை ஒழித்துகட்டிவிட்டு ஒன்றிய அதிகாரம் என்பது மட்டுமே இந்திய அரசு என நிலைநிறுத்தினால் எவ்வாறு இருக்குமோ அதே நிலைதான் இலங்கையின் 75 ஆண்டுகால அரசியல் அதிகார நிலை.

இக்கட்டமைப்பில் தமிழர்கள், மலையகம், இசுலாமியர் என எவருக்கும் அதிகார பகிர்வு கிடையாது. இதனாலேயே சிங்கள பேரினவாதம் அங்கே உயிர்வாழ்கிறது. இந்த பெரும்பான்மையை கைப்பற்ற வேண்டுமெனில் சிங்கள இனவாதத்தை, பெளத்த மதவெறியை ஊக்குவித்தால் மட்டுமே பெரும்பான்மை வாக்குகளை பெறமுடியுமெனும் சூழலை 100 ஆண்டுகளாக கட்டமைத்துள்ளார்கள். இந்த நிலைப்பாட்டில் தன்னை ஜெவிபி நிலைநிறுத்தி கொண்டே தம்மை வளர்த்தது. சிங்கள பெரும்பான்மை, இனவாதம், பெளத்த மதவாதம் ஆகியவற்றை கைவிடுவதாகவோ, எதிர்ப்பதாகவோ ஜெவிபி இந்த தேர்தல் வரை பேசியதுகூட இல்லை. இந்த பேரினவாதத்திற்கு எதிரியாக காலம்காலமாக முன்னிறுத்தப்பட்டவர்கள் தமிழ் பாட்டாளிகள். இதனாலேயே இலங்கை விடுதலையடைந்த 6 மாதத்தில் மலையக தமிழ் தொழிலாளர்களின் அரசியல் உரிமை 1949லேயே பறிக்கப்பட்டது.

தமிழர்களை எதிரியாக்காமல் சிங்களபேரினவாதம் உயிர்வாழாது. அதாவது இசுலாமிய எதிர்ப்பில்லையெனில் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் அரசியல் வீழ்ந்துபோவதை போன்றது இந்த அரசியல். இதை நன்கு உணர்ந்தவர்கள் ஈழத்தமிழர்கள். இந்திய பார்ப்பனியத்திற்கும், இலங்கை சிங்கள பெளத்த பேரினவாதத்திற்குமிடையேயான ஒற்றுமையையும், உறவையும் 1980களில் திராவிடர் இயக்கத்தவரால் மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டது. அதனாலேயே ஈழவிடுதலை போராட்டத்தை ஆழமாக நேசித்து ஆதரித்தார்கள்.

பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்- சிங்கள பொதுபலசேனாவிற்கு இடையேயான உறவுகள் ஆழமானது. இந்தியாவின் அரசியலில் ‘பார்ப்பனியம்’ கொண்டிருக்கும் ஆதிக்கத்திற்கு நிகரானது இலங்கையின் ‘பெளத்தபேரினவாதம்’. இலங்கையின் பெளத்தம் பார்ப்பனிய கூறுகளையும், சாதிய அடுக்குகளையும் கொண்டது. இலங்கை ஒற்றையாட்சி முறையை கைவிட்டு இந்தியாவினை போன்ற கூட்டாட்சி அரசியலில் நுழைந்தால் பெளத்த பேரினவாதத்தினால் அதிகார மையமாக இயங்க இயலாது. எனவே தேசிய இனங்களின் உரிமையை மறுக்கும் பார்ப்பனியத்தின் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் தமிழர்களிடையே அதிகார பகிர்வை சிங்களம் மறுக்கிறது. இந்த வகையில் சிங்கள பெரும்பான்மை-பேரினவாத அரசியலே இலங்கையின் மைய அரசியல் நீரோட்டமாக கடந்த 75 ஆண்டுகளாக உள்ளதை இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் புரிந்து கொள்ள மறுத்தாலும், ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இந்த அரசியலை புரிந்துகொண்டே வாக்களிக்கிறார்கள்.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சோ-கால்டு இடதுசாரி அதிபர், இனவெறி பெளத்த பிக்குகளுடன் நெருக்கமாக உறவை வளர்த்த நிலையிலும் அவர்களது ஆதரவிலும் தேர்தலை எதிர்கொண்டார். அதாவது சங்கராச்சாரியாரிடம் ஆசிர்வாதமும், மோகன்பகவத் ஆதரவுடனும் வரக்கூடிய ஒருவர் மோடிக்கு மாற்றாக வருகிற இடதுசாரி புரட்சியாளர் என்று யாராவது சொன்னால் நாம் எப்படி நகைப்போமோ அதை ஒத்ததே இந்த நிலைப்பாடு.

https://www.facebook.com/plugins/post.php?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »