குடும்ப உறவுகள் வழியாக வளரும் ஆணாதிக்கம், சாதியம், மூடத்தனம், சடங்கு, சம்பிரதாயம் போன்ற அனைத்து திணிப்புகளையும் அம்பலப்படுத்தும் படமாக கொட்டுக்காளி இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு இயல்பானதாக ஏற்படும் காதல் உணர்வை முறிக்க, உறவினர்கள் அப்பெண்ணின் உளவியலை எந்த அளவுக்கு சிதைக்கிறார்கள் என்பதை நுட்பமாக படைத்திருக்கிறார் இயக்குநர். படம் முழுதும் வெளிப்படும் அவளின் இறுக்கமான முகத்தின் ஊடாக அதனை நமக்குள் கடத்தி விடுகிறார்.
கதாநாயகன் பாண்டியாக சூரி, சாதிய வட்டத்தில் அடைந்து கிடக்கும் ஒரு கிராமத்து இளைஞனாக ஆணாதிக்க குணத்தை அச்சு அசலாக பிரதிபலிக்கிறார். கதாநாயகி மீனாட்சியாக அன்னா பென் சூரியின் முறைப்பெண்ணாக நடித்திருக்கிறார். பாண்டி அத்தை மகளை மணமுடிக்கும் ஆசையில் வளர்க்கப்படுகிறான். ஆனால் அவள் வேறு சாதி ஆணை காதலிக்கிறாள். ஒரு காட்சியில் ஆத்திரத்துடன், கெட்ட சாதிப்பையனை காதலிக்கிறான்னு உறவுக்காரர் கூறும்போதே, அந்தக் காதலை ஏற்றுக் கொள்ள முடியாததன் காரணம் தெரிகிறது.
அனைத்து காட்சியிலும் பேசாமலிருக்கும் மீனாட்சி, ஆட்டோவில் ஒளிபரப்பப்படும் ஒரு மென்மையான பாடலுக்கு தன்னையும் அறியாமல் லேசாக முணுமுணுக்கிறாள். அதைக் கேட்ட பாண்டி வெறியேறியவனாக, முன் இருக்கையிலிருந்து தாவி பின் இருக்கையிலிருக்கும் அவளை கொடூரமாகத் தாக்குகிறான். அந்தக் காட்சி பாண்டியைப் போன்ற ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்களை படம் பிடித்து காட்டும் வகையில் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது.
தன்னுடைய முறைப்பெண் என்றால் தனக்கு நேர்ந்து விடப்பட்டவள் என்றும், அவளுக்கென்று எந்த இயல்பான உணர்ச்சியும் இருக்கக் கூடாது என்றும் நினைக்கும் சாதிய வக்கிரம் கொண்ட ஆண்களை, சிறு வயதிலிருந்தே பார்த்து வளரும் பெண், எவ்வாறு அதே சாதியைச் சார்ந்த ஆணை விரும்புவாள் என்பதை சாதிய வெறியர்கள் யோசிக்க வைக்கும்படியாக அந்தக் காட்சியை அமைத்திருக்கின்றனர். இத்தகைய முரட்டு குணங்கள் இல்லாமல் இதமான அன்பு காட்டும் ஆணின் மீது அவளுக்கு நேசம் ஏற்பட்டு விடும் என்பதே இயல்பானது. அந்த நேசமே ஆணாதிக்க சாதி வெறியர்களை அச்சுறுத்தி ஆணவக் கொலை வரை செல்ல வைக்கிறது. தங்களைத் திருத்திக் கொள்ள முடியாத சாதியவாதிகளின் கடைசி ஆயுதம் அதுவாகவே இருக்கிறது
அரசியல் சட்டம் ஒரு குடிமகனுக்கு தனிப்பட்ட உரிமைகள் வழங்கும் போது, ஒரு குடும்ப வட்டத்தில் ஒரு பெண்ணுக்கான தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட உரிமை என்பதெல்லாம் கானல் நீராகவே இன்று வரை தொடர்கிறது. காலம் காலமாக ஒரு பெண்ணின் மீது தாய்மாமன் உரிமை என்று திணிக்கப்பட்ட படங்களை இடித்துக் காட்டும் விதமாக, இடையினில் தாய்மாமன் சீர் கொண்டு செல்லும் வகையில் ஒரு காட்சி. பாண்டியின் தந்தை மீனாட்சியின் தந்தையிடம், ‘உன் பொண்ணு சீருக்கு வாங்குன காசுக்கு கூட என் பையன் இன்னும் வட்டி கட்டிட்டு இருக்கான்’ என்று குத்திக் காட்டுகிறார். தாய்மாமன் சீர் செய்தால், அந்தப் பெண்ணுக்குரிய இயல்பான காதல் உணர்வு அடகு வைக்கப்பட்டு விட வேண்டும், அந்தப் பெண்ணின் குடும்பம் காலம் முழுதும் அந்த நன்றியுணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்கிற சமூகத் திணிப்பை அந்த காட்சி உள்ளடக்கி இருந்தது.
கொட்டுக்காளி குலதெய்வம். அவளுக்கு படையல் போட்டு விட்டு, மீனாட்சியின் மனதை மாற்ற உறவினர்கள் சாமியாரை தேடி படையெடுக்கிறார்கள். ஒரு பெண் குலதெய்வமாகிறாள் என்றால் ஒன்று, அப்பெண் அந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்ததால் இறந்திருப்பாள் அல்லது அப்பெண் யாரையாவது காதலித்திருந்தால், குடும்ப மானம் காக்கிறோமென அவளின் குடும்பத்தினரே கொன்றிருப்பார்கள், அதனால் பின்னர் நேரும் பழிபாவத்திற்கு பயந்து அப்பெண்ணையே குலதெய்வமாக வணங்குவார்கள். தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வங்கள் குறித்தான வரையறை இவ்வாறே இருக்கின்றன. இதில் கொட்டுக்காளி எந்த வகை என்று தெரியவில்லை. ஒரு பெண் தெய்வத்திடமே மாத விலக்கு நாட்களில் செல்லக் கூடாது என்கிற கற்பிதமும் திணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்திலும் பாண்டியின் அக்காவும், மாதவிலக்கு ஆகியதால் சாமியைப் பார்க்கக் கூடாது என்கிற திணிக்கப்பட்ட சம்பிரதாயத்தினை கடைபிடிக்கிறாள்.
நிறைய படிமங்களை இடையிடையே போகிற போக்கில் காட்டியிருக்கிறார்கள். ஆண்கள் என்று மீசை முறுக்குபவர்கள், வழியினில் நிற்கும் ஒரு காளையை விலக்க முடியாமல் பயந்து நிற்பதும், ஒரு சிறுமி அந்தக் காளையைத் தட்டிக் கொடுத்து கூட்டிச் செல்வதும் அன்பிற்கான படிமமாக இருந்தது. தலைவிரி கோலமாக ஒரு பெண் நடந்து செல்கிறாள். அவள் திரும்பி பார்க்கும் போது மீனாட்சிக்கு அவளையே பார்க்கும் படியாக இருக்கிறது. தன்னுடைய வருங்கால வாழ்க்கை குறித்தான குறியீடாக அதை பார்க்கிறாள். சாமியாரிடம் சென்று வந்தும் சரியாகவில்லை என்றால் கொன்று போட்டு விடலாம் என்று சொல்லும் அக்காட்சி ஆணவக் கொலைக்கான குறியீடாக வெளிப்பட்டது. சாமியாருக்கு கொடுப்பதற்காக உள்ள சேவலின் காலில் கல் கட்டப்பட்டு இருக்கிறது. அதை வேகமாக நடந்து அச்சேவல் அவிழ்த்து விடுகிறது. அக்குடும்பத்து ஆண்கள் அதனை அமுக்கிப் பிடிப்பதற்கு அவ்வளவு வேகமான ஓடுகிறார்கள். அந்த சேவலின் நிலையில் மீனாட்சி தன்னை பொருத்திப் பார்க்கும் படிமம் என நீள்கிறது.
இறுதிக்காட்சி ஆணாதிக்கவாதிகளை சிந்திக்க வைக்கும்படி புதிய முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது. கிராமத்து கதைக்களங்கள் கட்டமைத்த ஆணாதிக்கப் படங்களில் இருந்து வேறுபட்டு இருக்கிறது. ஆணாதிக்கத்தை காட்சிப்படுத்தி அதன் ஊடாக சாதிய மனநிலையை, சமூகத் திணிப்புகளுக்கு ஆட்பட்டு, தங்களின் அறியாமையை வாழ்வியல் முறையாக நினைத்து வாழும் உறவு முறைகளை கதைக்களமாக கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஒன்றரை மணி நேரத்தில் ஒரு முற்போக்கு பரப்புரையே நிகழ்த்தி காட்டியிருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களாக சிலரைக் கொண்டே படத்தை எடுத்து விட்டார். புதிய முகங்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு அனைவரும் சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி உள்ளனர். படத்தின் இசையே ஆட்டோவின், பைக்கினுடைய சத்தம்தான். ஒரே நாளில் ஒற்றையடிப் பாதையில் வெகு தூரப் பயணமே கதைக் களம். இப்படக் குழுவினர் அனைவரும் படத்தை மெருகேற்றி இருக்கிறார்கள். திரையரங்குகளில் வெளிவந்து பலரின் பாராட்டுதல்களை பெற்ற இப்படம் Prime OTT தளத்திலும் இருக்கிறது.
ஓரிரு வரிகளில் சொல்லப்பட்டு, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கற்பனைகள் விரியும், ஒரு ஹைக்கூ கவிதையைப் போல இறுதிக்காட்சியை அமைத்திருக்கிறார் இயக்குநர் வினோத்ராச். அவரின் புதிய முயற்சிக்கு பாராட்டுகளையும், முற்போக்கு படைப்பாக மிளிரும் இப்படத்திற்கு வாழ்த்துகளையும் மனமார்ந்து சொல்லலாம்.