தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேரிழப்புகள்

மக்களவைத் தொகுதி மறுவரையறை என்கிற போர்வையில் பாஜகவுக்கு எதிரான மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளைக் குறைத்து, பாஜகவிற்கு ஆதரவான மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்கும் மோசடியை மோடி அரசு செய்கிறது என மாநிலக் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை பிரிக்கும் இந்த முயற்சி மக்கள் தொகை கட்டுப்பாட்டை பின்பற்றிய மாநிலங்களுக்கு வஞ்சனையும், பின்பற்றாதவர்களுக்கு வெகுமதியும் அளிப்பவை என அவர்கள் கொதிக்கின்றனர்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கடந்த மார்ச் 5, 2025 அன்று  தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது. அதில் பங்கேற்ற தலைவர்கள், இந்தியாவில் 1971-இல் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் பிரித்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை விதிதங்களே இன்னும் 30 வருடத்திற்கு நீட்டிக்க மக்களவையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுத்தனர். இதைப் போன்று ஏழு மாநிலப் பிரதிநிதிகள் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டமும் தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னையில் மார்ச் 22 அன்று நடைபெற்றது. அரசியலமைப்பு சட்ட விதிகளை முறையாக பின்பற்றி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிக்கும் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கண்டனங்களை எழுப்பி, மாநில உரிமையான மக்களவைத் தொகுதிகளை உறுதிப்படுத்தும் தீர்மானங்களை இம்மாநிலப் பிரதிநிதிகள் இயற்றினர்.  

இந்தியாவில் 1971-ம் ஆண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள் தொகை கிட்டத்தட்ட 55 கோடியாக இருந்தது. அதன்படி, மக்களவைத் தொகுதியில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 39 தொகுதிகள் என உறுதியானது. அதன்படியே இன்று வரை தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18% ஆக நீடிக்கிறது. அன்றைய நிலையில் இந்திய ஒன்றிய அரசு மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து அனைத்து மாநிலங்களிடமும் வலியுறுத்தியது. இதனை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் முறையாகப் பின்பற்றின. ‘சிறு குடும்பம், சீரான வாழ்வு’ போன்ற பரப்புரைகள் தமிழ்நாட்டில் அதிகமாக விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதனால் சுகாதார விழிப்பு ஏற்பட்டு பிறப்பு விகிதங்கள் கட்டுக்குள் வந்தன. 1971-ல் சுமார் 4 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மக்கள் தொகை இன்று சுமார் 7 கோடியாக இருக்கிறது.

வட மாநிலங்களில் மக்கள் தொகை குறித்த இத்தகைய விழிப்புணர்வுகளோ, கட்டுப்பாடுகளோ பின்பற்றப்படவில்லை. இதனால் பிறப்பு விகிதங்கள் பன்மடங்கு அதிகமாயின. இப்போதுள்ள 140 கோடி மக்கள் தொகையில் சுமார் 100 கோடிக்கும் மேல் வடமாநில மக்கள் தொகை மட்டுமே வளர்ந்திருக்கின்றன. 1971-ல் கிட்டத்தட்ட 8 கோடி இருந்த உத்திரப் பிரதேசத்தின் மக்கள் தொகை இன்று 25 கோடி அளவிற்கு பெருகி, 80 மக்களவைத் தொகுதி எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை குறித்த விழிப்பற்று, மதவாதத்தில் மூழ்கிக் கிடக்கும் இப்பகுதிகளே பாஜக, ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ ஆதிக்க சக்திகளின் இதயமாக இருக்கின்றன. இந்த இடங்களில் தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதே, இந்திய நாடாளுமன்றத்தில் தங்களின் முற்றும் முழுதுமான ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியும் எனக் கருதுகிறது பாஜக இதன் வெளிப்பாடே தொகுதி மறுவரையறை சட்டம் கொண்டு வருவதற்கு காரணமாக இருக்கிறது. 

இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சி தத்துவம் என்பது, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சமத்துவமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமே தவிர, மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவம் வழங்குவது இல்லை. தமிழ்நாட்டின் தமிழர்கள், ஆந்திராவின்  தெலுங்கர்கள், கேரளாவின் மலையாளிகள், பஞ்சாபியர்களின் பஞ்சாப், ஒரியாவின் ஒரியர்கள் என இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் சமத்துவமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த விரும்பாத மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையிலே தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டு வருகிறது பாஜக அரசு.

இந்திய ஒன்றியத்தின் இப்போதுள்ள மக்களவைத் தொகுதியான 543 எண்ணிக்கையின் அடிப்படையில் தொகுதி பிரிப்பு நடந்தால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு குறையப் போகும் இடங்கள் அளவுக்கு வட மாநிலங்களில் அதிகரிக்கப் போகிறது. குறைந்தபட்சம் 3 முதல் அதற்கு மேற்பட்ட தொகுதிகள் அளவிற்கான எண்ணிக்கை பெறும் மாநிலங்கள் மற்றும் இழக்கும் மாநிலங்கள் விவரங்கள் :

தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளில் ஒரு எண்ணிக்கை கூடக் குறையாது என வாக்குறுதி தருவதாக உள்துறை அமைச்சர் அமீத்சா கடந்த மாதம் கோவை வந்திருந்த போது பேசியிருந்தார். அவர் பேச்சின் ஊடாக, அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதியை அதிகரிக்கும் திட்டம் இருக்கிறது என்பதையே அறிய முடிகிறது. இந்த அடிப்படையிலேயே புதிய  நாடாளுமன்ற மக்களவை இருக்கைகள் 543 – லிருந்து 888 ஆக மாற்றியமைத்தார்கள். மாநிலங்களவை இருக்கைகளை 245 -லிருந்து 384- ஆக மாற்றி அமைத்தார்கள்.

இதனால் தென் மாநிலங்களின் தொகுதிகள் 132 – லிருந்து 167 ஆகவும், வட மாநிலங்கள் 244- லிருந்து 439 ஆகவும் அதிகரிக்கும். அவ்வகையில் பார்த்தாலும் கூட, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைவாகத் தானிருக்கும். நாடாளுமன்ற இருக்கைகள் 543-ஆக தொகுதிகள் இருந்தாலும், 888 ஆக தொகுதிகள் மாற்றப்பட்டாலும் தென்மாநிலங்களே பாதிக்கப்படும்.  இது குறித்து விரிவாக மே 17 இயக்கக்குரலில் வெளியான கட்டுரை :

‘ஜெர்ரி மேண்டரிங் (Gerry mandering)’ என்னும் அமெரிக்காவில் 1812 -ல் கையாளப்பட்ட ஒரு நடைமுறையை பாஜக அரசு பின்பற்றுகிறது. ஒரு தொகுதி மக்கள் தங்களுக்கு ஆதரவாக இல்லையென்றால், அதன் எல்லைகளை மறுவரையறை செய்து தமக்கு ஆதரவாக பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியுடன் அதனை சேர்த்துக் கொள்ளும் ஆதாயத்துக்குரிய ஒரு வழிமுறையையே பாஜக அரசு தேர்தல் ஆணையத்தின் துணையுடன் கைக்கொள்கிறது. எதிர்கட்சி வலிமை கொண்டிருக்கும் தொகுதிகளை உடைப்பது, தமக்கு பாதுகாப்பாக இருக்கும் பகுதிகளில் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஒரு மாநிலத்தின் ஆட்சியை கவிழ்த்து கவர்னர் ஆட்சியை உருவாக்குவது, வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையை பறித்தல் போன்றவை ஜெர்ரி மேண்டரிங் முறையில் அடக்கம். இவற்றை அச்சு பிசகாமல் பின்பற்றி தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது மோடி அரசு. 

நாடாளுமன்றம் என்பது பல்வேறு தேசிய இன மக்கள் குறித்தான கொள்கை முடிவு எடுக்குமிடமாக இருக்கிறது. ஒவ்வொரு தேசிய இன மக்களின் பிரச்சனைகளை எடுத்துக் கூறவும், தேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் அவர்களின் குரல்கள் வலிமையாக இருத்தல் அவசியம். ஒரு தேசிய இன மக்களின் சிக்கல்களை குறித்து எந்தப் புரிதலும் அற்றவர்கள் அவர்களுக்குரிய முடிவுகளை தாங்களே எடுக்கும் நிலையே இன்று மக்களவையில் நடக்கிறது. குறிப்பாக மீனவர் சார்பான மசோதாக்களை கடலே இல்லாத மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்கள் சேர்ந்து முடிவு எடுக்கிறார்கள். கடல் எல்லை சார்ந்த பிரச்சனைகளோ, மீனவர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தோ எந்த அக்கறையும் கொள்ளாதவர்களின் முடிவுகள், கடல் எல்லை சார்ந்த மாநிலங்கள் மீது திணிக்கப்படுகின்றன.

இது நடைமுறையானால் கிட்டத்தட்ட 50% இந்தி பேசும் மாநிலங்களே நாடாளுமன்றத் தொகுதிகளை ஆக்கிரமிக்கும் நிலையே உருவாகும். இன்றும் நீட் தேர்வு மறுப்பிலிருந்து புதிய கல்விக் கொள்கை மறுப்பு வரை தமிழ்நாட்டிலிருந்து மக்களவை உறுப்பினர்களின் குரல் எழும்பினாலும், அதனை ஏற்காத நிலையே நீடிக்கிறது. இன்னும் வடமாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகமாகும் போது அவர்கள் எடுக்கும் முடிவுகளே நம் மீது திணிக்கப்படும். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் எந்த சட்டத் திருத்தத்திற்கும் விவாத மரபு ஒன்று மோடி ஆட்சிக்கு முன்பு வரை இருந்தது. தொகுதி மறுவரையறை நடைமுறைப்படுத்தப்பட்டால் முற்றிலும் விவாதங்கள் துண்டிக்கப்படும். காஷ்மீர் போல எல்லா மாநிலங்களுக்கும் சட்டமியற்றும் உரிமை மறுக்கப்படும். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி இந்துத்துவ சட்டமாக மாற்றியமைக்கும் நிலையும் உருவாகும். இந்தி பேசுகின்ற மாநிலங்கள் சேர்ந்து முடிவெடுத்து விட்டால் மாநில ஆட்சியைக் கவிழ்த்து விட்டு ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வரலாம். ஜனநாயகம் முற்றிலும் தூக்கி எறியப்பட்டு இந்துத்துவ சர்வாதிகார நாடாகும் நிலையே ஏற்படும்.

இது மட்டுமல்லாமல், வட மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகமானால் நிதிப் பகிர்விலும் தென் மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்படும் நிலையும் ஏற்படும். ஒன்றிய அரசின் நம்மிடம் பறிக்கும் வரியிலிருந்து நமக்கு நிதிப்பதிர்வு அளித்திடும் கணக்கீடுகளில் 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் 10% எடுத்துக் கொள்கிறது.  1971-ம் ஆண்டிற்குரிய மக்கள் தொகையில் 17.5% அளவும், 2011 மக்கள் தொகை எண்ணிக்கையில் 10% அளவும் கணக்கெடுத்தே பிரிக்கிறது. இதனால் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை பின்பற்றிய மாநிலங்களுக்கு வரிப் பறிப்பு அதிகமாகவும், நிதிப் பகிர்வு குறையவும் செய்கிறது. பின்பற்றாத மாநிலங்கள் வரியை குறைவாகவும், நிதிப் பகிர்வை அதிகமாகவும் பெற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு உரிமை மறுப்பிலிருந்து நிதி மறுப்பு வரை வருங்காலத்தில் தென் மாநிலங்கள் பாஜக அரசினால் பந்தாடப்படும். தொகுதி மறுவரையறை என்பது பாஜகவினால் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட பெரும் வன்முறை. தமிழ்நாட்டின் உரிமையை மொத்தமாக சுரண்டும் வழிமுறை. இது நடைமுறையானால், தமிழ்நாட்டின் கோரிக்கைகள் இந்திய ஒன்றிய அரசின் செவிகளில் கேட்காது. எந்தப் பிரச்சனையும் மக்களின் காதுகளுக்கு எட்டினால் ஒழிய தீர்வு கிடைக்காது. பாஜக அரசு செய்யப்போகும்  இத்துரோகத்தை, மக்களிடம் புரிய வைக்கும் மக்கள் திரள் போராட்டங்களை தென் மாநிலக் கட்சிகள், தலைமைகள், இயக்கங்கள் முன்னெடுப்பதே ஜனநாயகம் காக்கும் வழியாகும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »