கடவுள் பக்தியால் மூட நம்பிக்கையில் வீழ்ந்து கிடக்கும் மக்களை மூலதனமாகக் கொண்டு சுகபோக வாழ்க்கையில் வாழ்கிறான் ஒரு மதகுருவான மன்னன். அவனுக்கு செய்யும் சேவையே கடவுளை அடையும் வழியென மக்களை நம்ப வைக்கிறான். அவன் நடந்தானென்றால் கைகளை மெத்தையாக விரிப்பதும், அவன் எச்சில் பட்ட உணவை பிரசாதமாக உண்பதும், அவன் பாத பூசையைப் பார்த்தால் கூட தங்கள் பாவம் நீங்கும் எனக் கருதுவதும் அந்த மக்கள் குத்தகையெடுத்த சில மூட நம்பிக்கைகளாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் விட உச்சகட்ட கொடுமையாக, பாத சேவை செய்ய வரும் பெண்களிடம் தன்னிடம் பாலியல் சேவையும் செய்வது கடவுளுக்கு செய்யும் சேவையாகும் என நம்ப வைக்கிறான். அதையும் அந்தப் பெண்கள் நம்பி இணங்குவதும், அதை அந்த குடும்பத்தினரும் மனதார ஏற்றுக் கொள்வதும் என முடைநாற்றம் வீசுகின்ற மூடத்தனங்கள் கொட்டிக் கிடக்கும் ஊரில் தான் இந்த கதை ஆரம்பமாகிறது. இது 18-ம் நூற்றாண்டில் நடந்த உண்மைக் கதை.
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ், மும்பையின் ஒரு பகுதியை, மக்களால் ஜேஜே என அழைக்கப்படும் வைணவ மதகுரு மன்னன் ஆண்டு கொண்டிருக்கிறான். சிறு வயதிலிருந்தே எதையும் கேள்வி கேட்டு வளரும் கதாநாயகன் கர்சன் தாஸ். 10 வது வயதில் தாய் இறந்ததால், மும்பையில் மாமா வீட்டில் வளர்கிறான். அவனுக்கு உறவுப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது. அந்தப் பெண் படித்து முடித்த பின்பே திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாகக் கூறுகிறான்.
ஒரு நாள் அந்தப் பெண் பாத பூசை செய்ய மன்னன் ஆசையின் படி, தேர்ந்தெடுக்கப்படுகிறாள். குடும்பத்தினரே மகிழ்ச்சியாக அனுப்பி வைக்கின்றனர். பாத சேவை மட்டும் அல்ல, பாலியல் சேவையும் கடவுளுக்கான சேவையே எனப் பேசி நம்ப வைத்து அவளின் அனுமதியுடனே உடலுறவு கொள்கிறான் மன்னன். அவளும் பாலியல் இச்சை என்ற எண்ணமே இல்லாமல் கடவுளுக்கான சேவை என்கிற எண்ணத்துடனே மன்னனுக்கு ஒத்துழைக்கிறாள்.
இந்த காட்டுமிராண்டித்தனம் ஒரு புறம் என்றால், மறுபுறம் இதை விட அருவருப்பான கொடுமையும் ஒன்று நடக்கிறது. மன்னனை கிருஷ்ணனின் அவதாரமாக கருதும் மக்கள் மன்னனின் இந்த பாத சேவையைக் காண்பது ராதை கிருஷ்ணனின் லீலைகளை காண்பதாக கருதினர். இதனால் மோட்சம் கிடைக்கும் என நம்பி மன்னனின் படுக்கை அறையின் மேலுள்ள சன்னல்கள் வழியாக இதைப் பார்ப்பதற்கென்றே சிலர் வழக்கமாக வருகிறார்கள். அப்படி வந்தவர்களிடம் கையூட்டு பெற்று அனுப்பி வைக்கிறான் மன்னனின் விசுவாசமான பணியாள். அவர்களும் மன்னனின் அந்தரங்க லீலைகளைப் பார்த்து சலனமே கொள்ளாமல், கண்களில் நீர் வழிய பக்திப் பிரவாகத்துடன் பார்க்கின்றனர்.
அந்தப் பெண் சென்றதைக் கேள்விப்பட்டு கர்சன் தாஸ் கோவத்துடன் அங்கு சென்று அவளை வரச்சொல்ல, அவளோ கடவுள் சேவையை முடித்து விட்டு வருகிறேன் என சொல்கிறாள். அந்த அறையின் மேலிருந்து பக்தியில் உருகிய படி இதனை பார்த்துக் கொண்டிருந்தவர்களோ, எங்களின் மோட்ச வழியைக் கெடுத்து விட்டாயே என சாபமிட இவன் சீற்றத்துடன் வெளியேறுகிறான். இந்த படத்தில் வரும் இந்த ஒரு காட்சியே இடைக்காலத்தில் மூடத்தனத்தின் போர்வையில் பெண்கள் பாலியலாக எவ்வளவு சுரண்டப்பட்டிருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தி விடுகிறது. பகுத்தறியும் வாய்ப்பே எழாமல் ஒரு மந்தை கூட்டம் பக்தி எனும் பேரில் எப்படியெல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி விடுகிறது.
அவள் தனது தவறை இன்னும் உணராமல், அவனை சந்தித்து கடவுள் சேவையைத் தானே செய்து விட்டு வந்தேன் எனக் கூற, அவளின் மூடத்தனத்தை கடுமையாக சாடி, இனி நம் திருமணம் நடக்காது எனக் கூறி விடுகிறான் கதாநாயகன். ஒரு கட்டத்தில் அவள் ஏமாந்ததை உணரும் சூழல் வருகிறது. அவனுக்கு மன்னனை அம்பலப்படுத்து என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் படித்த பெண்ணான இருந்தும் அவளிடம் புகுத்தப்பட்ட மூடத்தனங்கள் வெறும் பக்தியால் மட்டுமல்ல, பக்தியின் போர்வையில் வந்த சடங்கு, சம்பிரதாயம் எனத் தொடரும் பரம்பரை வழக்கத்தாலும்தான் என்பதை இக்காட்சி சொல்லி விடுகிறது.
இவற்றை சமூகத்தில் நிலைநிறுத்திய பார்ப்பன சித்தாந்தமே வர்ணாசிரமம். இதே வர்ணாசிரம சிந்தனைதான் நாடாளுமன்ற அவையிலும் இன்றும் தொடர்கிறது என்பதற்கு சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வே எடுத்துக்காட்டாக இருக்கிறது. மாநிலங்களவை இருக்கையில் அமர்ந்திருந்த உயர் சாதியினரான ஜெய்ராம் ரமேசை, முன்வரிசையில் அமர்ந்திருந்த பட்டியல் இனத்தைச் சார்ந்த மல்லிகார்சுன கார்கே அவர்களின் இடத்தில் அமர்வதற்கு தகுதி உடையவர் எனப் புகழ்ந்து, அவரை முன் வந்து அமரச் சொல்கிறார் சபாநாயகர். அதற்கு கார்கே, அவரிடம் நீங்கள் இப்படி சொல்வதன் பின்னணியில் உங்கள் மூளையில் வர்ணாசிரம சிந்தனை பதிந்து இருப்பதே காரணமென அவையிலேயே சபாநாயகரை இடித்துரைத்த காட்சியை இதில் பொருத்திப் பார்க்கலாம்.
அந்த மன்னனை மூடத்தனத்தினால் நம்பும் மக்கள் ஒரு புறம், அவன் செய்யும் கொடுமைகள் தெரிந்திருக்கும் அவனை எதிர்க்காத ராணி, மதம் தவறாகப் பார்க்கப்பட்டு விடுமென எதிர்க்காத தலைமைப் பூசாரி என இவர்கள் மறுபுறமென மன்னன் உல்லாசத்திற்குத் தடையின்றி வாழ்கிறான். மக்களுக்கு நேரும் கொடுமைகளை விட, மதத்துக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என மதவாதிகள் மதத்தின் பெயரால் நடக்கும் பல குற்றங்களை மறைத்து வாழ்கிறார்கள் என்பதனை அந்தப் பூசாரி கதாபாத்திரம் உணர்த்திச் செல்கிறது.
கர்சன் தாசின் சீர்திருத்தம் அவன் குடும்பத்திலிருந்து, பத்திரிக்கை வாயிலாக சமூகம் வரை ஒவ்வொன்றாக நடக்கிறது. குடும்பத்தில் கைம்பெண்ணாக இருக்கும் அத்தை மீது ஹோலி பண்டிகையின் பொழுது வண்ணப் பொடி பூசுவதை சாடும் குடும்பத்தினரிடம், அம்மா இறந்ததும் அப்பா மறுமணம் செய்து கொள்ளலாம். அத்தை ஏன் இப்படியே இருக்க வேண்டும் என சண்டையிட்டு கர்சன் தாஸ் வெளியேறுகிறான்.
அவன் ஏற்படுத்தும் சீர்திருத்தங்களால், பாத சேவைக்கு பெண்களை அவர்களின் குடும்பத்தினரே அனுப்ப மறுக்கும் அளவுக்கு மனமாற்றம் நடக்கிறது. மன்னனுக்கு பல விதத்தில் நெருக்கடிகளைத் தருகிறான். ஒரு கட்டத்தில் மன்னன் அவனை அழைத்துப் பேசுகிறான். தாஸ் என்பதே சேவை செய்யும் அர்த்தம் தானே, நீ ஏன் சேவை செய்ய மறுக்கிறாய் எனக் கேட்கும் காட்சியும் வருகிறது. சாதிப் பெயரில் அடிமைத்தனமும் சேர்ந்தே வருகிறது என்பதால்தான், பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை துறக்க வேண்டும் என்று போராடிய பெரியாரின் தீர்க்கமான பார்வையை அந்தக் காட்சி நினைவுபடுத்தியது.
இந்த நிலையில் அவனைக் கொன்றால் அந்த குற்றம் தன் மேல் பாயும் எனக் கருதி, மதத்தால் அடக்க முடியாத அவனை நீதிமன்றத்தை நாடி அடக்கி வைக்கிறேன் என தனது புகழுக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி 50 ஆயிரம் ரூபாய்க்கான மான நட்ட வழக்கு போட்டு கதாநாயகனுக்கு நோட்டீஸ் அனுப்புகிறான்.
கர்சன் தாசுக்கு ஆதரவாக, நம்பிக்கையுடன் வரும் ஒவ்வொரு சாட்சியங்களையும் மன்னன் சூழ்ச்சிகள் செய்து முடக்குகிறான். கர்சன் தாசின் பத்திரிக்கை அலுவலகத்தையும் எரிக்கிறான். இதையெல்லாம் மீறி நீதிமன்றத்தில் யார் சாட்சி சொல்ல வந்தார்கள்? தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தது? என்பதுதான் இறுதி கட்டம்.
எந்த அத்தை கர்சன் தாசை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னாரோ, அவர் இறுதியில் வந்து சாட்சிக் கூண்டில் ஏறி மன்னனால் பாதிக்கப்பட்டதாக கூறும் காட்சி, அதனால் வழக்கைக் காண வந்திருந்த மற்ற பெண்களும் துணிச்சல் கொண்டு ஒவ்வொருவராக எழுந்து தாங்களும் பாதிக்கப்பட்டதாக கூறும் காட்சிகள் எல்லாம் வெளியில் கூடியிருக்கும் மக்களுக்கு உடனுக்குடன் சொல்லப்படுகிறது. மக்களின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது.
நீதிமன்றக் காட்சிகள் தனக்கு எதிராகப் போவதை மன்னன் உணர்கிறான். அவன் இதுவரை முகத்தில் தவழ விட்டிருந்த சாந்தம் மறைந்து முகம் இறுக்கமாகிறது. வழக்கை விசாரிக்கும் ஆங்கிலேய நீதிபதிகள், கதாநாயகனிடம் மன்னன் கேட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய்க்கான மான நட்ட வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்கள். மன்னனை விசாரிக்க ஒரு விசாரணை குழுவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள்.
மன்னன் சீற்றம் கொண்டு எழுந்து, தனது பக்தர்கள் மூலமாக இவையெல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என வெளியில் உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் முன்பு வந்து புன்னகைக்கிறார். நீதிமன்றம் வரும் போது பாதத்தை தாங்கிய கைகள் இப்பொழுதும் நீளும் என இறங்குகிறார். ஆனால் மக்கள் முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள். மன்னனின் முகத்தில் இருந்த சிரிப்பு காணாமல் போகிறது. நீதிமன்றம் இனி பாத அபிசேகம் செய்யக்கூடாது என தடை விதிக்கிறது. மன்னன்களும் சட்டத்துக்கு உட்பட வேண்டும் என தீரப்பெழுதுகிறது.
கடவுள் மீது வைக்கும் பக்தி தவறில்லை, ஆனால் அந்த பக்தியின் வழியாக சுரண்டும் மதகுருமார்களே தவறானவர்கள் என்று கூறும் ஒரு சீர்திருத்தப் படம். இப்படத்தின் கதாநாயகன் புராணங்களை மேற்கோள் காட்டுகிறான். புனைவுகளால் உருவான இந்துக் கடவுளர்களை வணங்குகிறான். ஆனால் கடவுளில் பெயரால் சமூகத்தில் உலவும் மூடத்தனங்களையும், அவற்றை உருவாக்கிய சுயநல மதகுருமார்களையும் எதிர்க்கிறான். சீர்திருத்தம் செய்ய முனைகிறான். அவன் சீர்திருத்தவாதியே தவிர, புரட்சியாளனாக சித்தரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனால் இந்து சமூகங்களை சீர்திருத்தம் செய்தாலே தங்களின் பிழைப்பு போய் விடும் என்று அச்சப்படும் இந்துத்துவவாதிகளுக்கு இப்படம் சரியான சாட்டையடி படம் என்றே கூற வேண்டும்.
உத்திரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் போலே பாபா என்னும் சாமியாரின் காலடி மண்ணை எடுப்பதற்காக குவிந்த நெரிசலில், 121 பேர் பலியான செய்தி வந்த சமயத்தில், தற்செயலாக இந்தப் படமும் வெளிவந்தது வியப்புக்குரியது.
தமிழர்களின் ஓகக் கலையைத் திருடி யோகாசனமாக மாற்றிய பார்ப்பனீயத்தின் கையாளாக இருந்து கொண்டு, வாழும் கலை கற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றும் ஜக்கி, பாபா ராம்தேவ், நித்யானந்தா, சிறி சிறி ரவிசங்கர் என கார்ப்பரேட் சாமியார்கள், மடங்களில் இருந்து கொண்டு சனாதனம் பரப்பும் சாமியார்கள், ஊருக்கு ஊர் முளைக்கும் விதவிதமான சாமியார்கள் என மக்களின் அறியாமையில் கொழுத்து வாழும் சாமியார்கள் பட்டியல் மிகவும் நீண்டது. மக்களின் அச்சத்தை முதலீடாகக் கொண்டு பார்ப்பனீயம் இறக்குமதி செய்த சடங்கு, சம்பிரதாயம், ஜோசியம், ஜாதகம் வழியாக இவர்கள் கொள்ளையடிக்கும் பணமோ அளவிடவே முடியாதது.
இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளும் சிந்தனையை வளர விடாமல் தினம் தினம் துன்பத்தில் உழலும் வாழ்க்கையை தங்கள் கொள்கைத் திட்டங்கள் மூலம் பரிசாகத் தருகின்றன அரசுகள். அந்த துன்பத்தைப் போக்குவதாக ஏமாற்றி மக்களை தங்களைத் தேடி வர வைக்கின்றன சாமியார் கூட்டங்கள். காலம் காலமாக பார்ப்பனீயம் வேரூன்றி வளர்த்து விட்ட இந்த சுழல் வட்டத்திற்குள் சிக்கி மூடத்தனத்தில் இருந்து வெளிவர முடியாத அறியாமையில் இருக்கிறார்கள் மக்கள். இந்த சூழலில், இப்படியான திரைப்படங்கள் ஓரளவாவது மக்களுக்கு விழிப்பூட்ட வருவதை நன்மைக்கானதாகவே பார்க்க வேண்டும். இந்த அளவில் அனைவரும் காண வேண்டிய திரைப்படமாக Netflix OTT தளத்தில் வெளியாகியுள்ள மகராச் திரைப்படம் இருக்கிறது.
பின் குறிப்பு:
இந்தப் படத்தில் வைணவ புஷ்டி மார்க் என்ற மதப் பிரிவின் மதகுருவாக இருந்த ஜாடுநாத் ஜி மகராச், அவரை எதிர்த்த பத்திரிக்கையாளரான கர்சன் தாஸ் முல்ஜி இடையிலான சம்பவங்களே படமாக்கப்பட்டிருக்கிறது. இதனை ஒரு நாவலாக குஜராத்தில் ஒரு எழுத்தாளர் எழுதியிருக்கிறார். இந்தப் பிரிவின் மதகுருமார்களின் ‘சரன் சேவா’ என்னும் மத வழக்கம்தான் இப்படத்தில் பெண்களை பாலியலாக சுரண்டும் பாத பூசையாக காட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வாழ்ந்த இந்தப் பிரிவைச் சார்ந்த மதகுருமார்கள் தங்களை பரம்பரையாகவே மகராச் என்றே அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 1862-ம் ஆண்டு இந்த வழக்கு ஆங்கிலேய நீதிபதிகளால் நடத்தப்பட்டது.
இந்த படத்தின் OTT வெளியீட்டை எதிர்த்து தடை வாங்க குஜராத் நீதி மன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் – சின் கிளை அமைப்புகளான விசுவ ஹிந்து பரிசத் மற்றும் பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகள் சென்றன. கிருஷ்ண பக்தர்களுக்கு எதிரான வசனங்கள் மிகவும் இழிவாகவும், அவதூறுகள். நிறைந்ததாகவும் உள்ளது என வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.