
சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்ததும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியதும் சட்டவிரோதம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது! மாநிலங்களின் சட்டமியற்றும் உரிமைக்கு இடையூறாக இருக்கும் ஆளுநர்களுக்கு கடிவாளம் போடப்பட்டதை வரவேற்கிறோம்! ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை இழந்த ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்துள்ளதற்கு எதிராக கடந்த 2023ல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் மீதான இறுதி விசாரணை முடிந்து இன்று (ஏப்ரல் 8, 2025 செவ்வாய்) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்ததும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியதும் சட்டவிரோதம் என்றதோடு, நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடுவும் நிர்ணயித்தது. மாநில உரிமையை நிலைநாட்டக்கூடிய இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது.
ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் மாநில அரசின் முடிவுகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், ஒன்றிய அரசின் ஆட்சிப் பொறுப்பில் பாஜக அமர்ந்தது முதல், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை அம்மாநில அரசுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. அப்படியாக தமிழ்நாட்டில் ஆளுநராக ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி தமிழ்நாடு திமுக அரசுக்கு எதிராக, அரசியலமைப்புக்கு விரோதமாக, கிட்டத்தட்ட பாஜகவின் மாநிலத் தலைமை போல செயல்பட்டு வந்தார்.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் நியமனங்களில் தன்னிச்சையாக செயல்பட்டு தமிழ்நாட்டின் உயற்கல்வியை சீரழிவுக்கு தள்ளும் பணியை செய்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது தொடர்பாக இயற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். கடும் நெடுக்கடிக்குப் பின்னர் நீண்ட காலம் கழித்து அவற்றை திருப்பி அனுப்ப, அவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட, அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர். இது தொடர்பாக தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தான் ஆர்.என்.ரவி சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளார் என்று தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.
சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத்தலைவர் பரிந்துரைக்கு அனுப்பியது சட்டவிரோதம் என்றும், அதன் மீது குடியரசுத்தலைவர் எடுக்கும் முடிவுகள் செல்லாது என்றும் கூறியதோடு, ஆளுநர் ஏற்படுத்திய தாமதத்தால், பிரிவு 142ன் படி 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் உடனடியாக ஒப்புதல் வழங்கியது. மேலும், அரசுடன் நட்போடு இருந்து வழிகாட்டியாக செயல்பட வேண்டும் என்றும், தடைக்கல்லாக இருக்காமல் வினையூக்கியாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்தது.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்பதை உறுதிபடுத்தியதோடு, சட்டத்தின் வழியில் மாநில அரசின் முடிவுகளின் படி செயல்பட வேண்டும் என்றும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறுத்திவைக்க முடியாது என்றும் உறுதிபட கூறியுள்ளது. மேலும், ‘எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக‘ முடிவெடுக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளதை கிடப்பில் போட பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக காலக்கெடு நிர்ணயித்துள்ளது. அதாவது, நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், ஆட்சேபனை இருந்தால் 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என மே பதினேழு இயக்கம் கருதுகிறது. காலனியத்தின் எச்சமாய் இருக்கும் ஆளுநர் பதவியை மாநில அரசுகளை கட்டுப்படுத்தக் கூடிய ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருவதற்கு உச்சநீதிமன்றம் முடிவுகட்டியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு மேலான அதிகாரத்தை கொண்டதாக மிதப்பில் இருந்த ஆளுநர்களுக்கு அரசியலமைப்பின்படி அவர்களுடைய அதிகார வரம்பு என்ன என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்பதால், ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களை ஆளுநர்களாக நியமித்து அடாவடியில் ஈடுபட்டு வருவது முடிவுக்கு கொண்டு வரப்படும். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இந்த தீர்ப்பு ஒரு முன்மாதிரி தீர்ப்பாக அமையும். இந்த தீர்ப்பினை போராடி பெற்ற தமிழ்நாடு திமுக அரசுக்கு மே பதினேழு இயக்கம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
‘ஓர் அரசியலமைப்புச் சட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர் தவறானவராக இருந்தால் அது மோசமானதாகிவிடும்‘ என்ற அம்பேத்கரை மேற்கோள் காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தவறானவர் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிடுகிறது. மேலும், அரசியலமைப்பு வழங்கியுள்ள கடமையை செய்யமால் தனிச்சையாக செயல்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு குற்றவாளி என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் பதவியை வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். ஆகவே ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை துறந்துவிட்டு தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றத்தின் முலம் ஒப்புதல் பெற்ற திமுக அரசு, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை உடனடியாக நியமித்து ஆளுநரால் உண்டாக்கப்பட்ட நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக களைய முற்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுபடி ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் கருதுகிறது. திமுக அரசு அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும், ஆளுநர் மாளிகையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் கோருகிறது.
இந்த தீர்ப்பினை படிப்பினையாக கொண்டு, ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதை விட்டுவிட்டு மாநில உரிமைகளை நிலைநாட்ட முன்வர வேண்டும் எனவும், கூட்டாட்சி கொள்கைகளுக்கு விரோதமாக செயல்படாமல் ஜனநாயக விழுமியங்களை காப்பாற்ற முன்வர வேண்டும் என்றும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
09/04/2025