பெரியார் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய சீமான் குறித்தும், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு முன்னெடுத்த சீமான் வீட்டு முற்றுகை குறித்தும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் South beat சேனலுக்கு சனவரி 16, 2025-ல் வழங்கிய நேர்காணல் :
கேள்வி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடைய பேச்சை கண்டித்து அவருடைய வீடு முற்றுகைப் போராட்டம் 22ந்தேதி அறிவித்திருக்கிறீர்கள். அதற்கு முன்பாக சீமான் சவாலுக்கு அழைத்தார். நீங்கள் நான்கு நாட்களாக காத்துக் கொண்டு இருப்பதையும், அவர் வரவில்லை என்பது போலவும் ஒரு பதிவு பார்த்தேன். பெரியாரை மையமாக வைத்து அரசியல் செய்வது, பெரியார் அரசியலை மறு கட்டமைப்பு செய்வது அல்லது அழிப்பது என்பதை நாம் தமிழர் கட்சி இப்பொழுது முன்னெடுக்கிறார்கள். இதற்கு எதிர்வினையாக நீங்கள் கருத்துக்களை சொல்லலாம். ஆனால் முற்றுகை போராட்டம் என்பது ஒரு கவனத்தை அவர் பக்கம் திருப்புவது தானே, அதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : சீமானை நேருக்கு நேராக எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் மே 17 இயக்கத்தை பொறுத்தவரை மாநிலக் கட்சிகளில் அதிகாரத்தில் இல்லாத கட்சிகளை நாங்கள் பெரிய அளவில் பொது வெளியிலே விமர்சித்ததில்லை. ஆண்ட கட்சிகள் அல்லது ஆளும் கட்சிகளை நோக்கிய விமர்சனங்களைத்தான் வைத்திருக்கின்றோம். இங்கே இருக்கக்கூடிய பிற கட்சிகள், சிறு அமைப்புகளாக இருக்கக்கூடிய கட்சிகள் ஏதேனும் ஒரு வகையில் சனநாயக ரீதியாக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று நாங்கள் நீண்ட காலமாக முயற்சித்து வந்தோம். இந்த 15 ஆண்டுகளாக நாங்கள் அப்படியான ஒரு தீவிரமான விமர்சனத்தை எந்த ஒரு மாநில கட்சியின் மீதும் நாங்கள் வெளிப்படையாக முன்வைத்ததில்லை. நேரடியாக அவரிடத்தில் தெரிவிப்பது என்கின்ற அளவில் நாங்கள் இருந்திருக்கின்றோம்.
தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு வகையில் இந்த திமுக அதிமுகவுக்கு மாற்றாக ஒரு பரந்துபட்ட சனநாயகக் கூட்டமைப்பு பெரியாரிய அரசியல் வழியில், அம்பேத்கரிய அரசியல் வழியில், தமிழ் தேசிய அரசியல் வழியில் சிறுபான்மை மக்களுக்கான அரசியலை உள்ளடக்கி உருவாக வேண்டும் என்று நாங்கள் 15 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் விரும்பினோம். நாங்கள் தேர்தல் களத்தில் இல்லை என்றால் கூட தேர்தல் களத்தில் இப்படியான ஒரு அரசியல் வரவேண்டும் என்பதற்காகத்தான், பல்வேறு கட்சிகள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் கூட, நேரடியாக அவர்களிடத்திலே நாங்கள் வெளிப்படுத்தினோமே ஒழிய, அதை பகிரங்கப்படுத்தி அந்த கட்சியை நோக்கியான ஒரு விமர்சனமாக நாங்கள் வைத்ததில்லை. திமுகவின் மீது விமர்சனம் வைத்திருக்கின்றோம். அதிமுகவின் மீது விமர்சனம் வைத்திருக்கின்றோம். பாஜக காங்கிரஸ் இவர்களை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறோம். ஆனால் எந்த இடத்திலும் மாநில கட்சிகளை நோக்கி நாங்கள் விமர்சித்ததில்லை. அதிகாரத்தில் இருந்த கட்சிகளை நோக்கி, மாநில கட்சிகளுக்குள்ளாக நாங்கள் விமர்சனம் வைத்திருக்கிறோம். 2009 அழிவு என்பது நமக்கு மிகப்பெரிய ஒரு பாடம். நாளை இப்படிப்பட்ட ஒரு மோசமான சூழ்நிலை ஏற்படாத வண்ணம் எல்லோரும் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாநில சிறு கட்சிகளை நோக்கி எந்த விமர்சனமும் வைத்ததில்லை.
இவர்களுக்குள்ளாக கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டும். அது நல்லதுதான். கருத்து வேறுபாடுகள் என்பது நமக்கு ஒரு சனநாயக வழியை வலுப்படுத்தக்கூடிய ஒன்றுதான். அதனால் நாங்கள் அதை பெரிய விசியமாக எடுத்துக் கொண்டதே இல்லை. சீமான் அரசியலில் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அதை பெரிதுபடுத்தியதில்லை. ஏதோ ஒரு இடத்தில் சனநாயக சக்திகளோடு சேர்ந்து நிற்பார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.
கேள்வி : நாம் தமிழர் கட்சி ஒரு சனநாயக சக்தி என்று தான் நினைக்கிறீர்கள். அப்படித்தானே?
பதில் : இங்கு இருக்கக்கூடிய இன்னொரு தரப்பு அரசியலை பேசுகின்ற கட்சி அது. அது ஆரம்பித்த சமயத்தில் தந்தை பெரியார் இயக்கத்தில் இருந்தவர்கள்தான் அதில் இருந்தார்கள். அவர்கள் சேர்ந்துதான் எல்லாம் தொடங்கினார்கள். இயக்குனர் மணிவண்ணன் போன்றவர்கள், கொளத்தூர்மணி போன்றவர்கள் எல்லாம் சொல்லித்தான் அந்த இயக்கம் என்பது கட்டப்பட்டது. அதிலே மாநில பொறுப்பிலே, மாவட்ட பொறுப்பிலே இருந்தவர்கள் அனைவருமே பெரியாரிய தோழர்கள். பெரும்பாலான தோழர்கள் எனக்கு தெரிந்தவர்கள்தான்.
அப்போது இந்த கட்சி சரியான திசையை நோக்கி நகர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். 2014-15க்கு பிறகு எங்களுக்கு அந்த நம்பிக்கை போய்விட்டது. 2014-ல் திமுக அதிமுகவுக்கு மாற்றாக ஒரு பெரும் கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும், நாம் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, ஆனால் மாற்று ஒன்றை மக்களிடத்தில் காட்ட வேண்டும் என்று விரும்பினோம். அதை அவர்தான் (சீமான்) சிதைத்தார். அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க போகிறேன் எனப் போய் விட்டார். பிறகு அந்த கூட்டணி என்பது உருவாகாமல் போனது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு என்ன சிக்கல் இருந்தது என்றால், அப்போது காங்கிரசை எதிர்த்து நிற்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. அந்த இடத்தில் காங்கிரசுக்கு மாற்றாக அதிமுக இல்லை. இதனால் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு பரந்துபட்ட தேர்தல் அரசியல் களத்தில் இவர்கள் வரவேண்டும் என்று நினைத்தோம் ஏனென்றால் அப்போது நிறைய போராட்டங்கள் நடந்திருந்தது. முல்லை பெரியார் போராட்டம், கூடங்குளம் போராட்டம், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம், ஈழ போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் என எல்லாமே தீவிரம் அடைந்த இடத்தில், இந்த போராட்டங்கள் எதிலுமே திமுக, அதிமுக பங்களிக்கவே இல்லை. 2014-ல் அணுவுலை போராட்டத்திலோ அல்லது முல்லை பெரியார் போராட்டத்திலோ மாணவர் போராட்டங்களிலோ என இப்படி எதிலும் திமுக கட்சி பங்கெடுக்காமல் தான் இருந்தார்கள். அந்த சமயத்தில் ஒரு கூட்டணி உருவாக்கி தேர்தல் களத்தில் நிற்கலாம் என்ற பொழுது, இவர் (சீமான்) இரட்டை இலைக்கு, தான் ஓட்டு கேட்கப் போவதாக வெளிப்படையாகப் போனார். முதலில் காங்கிரஸ், பாஜக நிற்கும் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் பண்ணுவேன் என்று தான் சொன்னார். ஆனால் அதிமுகவுக்கு ஓட்டு கேட்பதற்காக இறங்கினார்.
பாஜகவையோ, காங்கிரஸையோ அம்பலப்படுத்துவது என்பது தனித்து அம்பலப்படுத்த வேண்டும். நாங்கள் தனித்து நின்று தான் அம்பலப்படுத்தினோம். யாருக்கும் ஆதரவாக நின்று அம்பலப்படுத்தவில்லை. நாங்கள் இதுவரைக்கும் இரட்டை இலைக்கு ஆதரவாக நின்றோ அல்லது திமுகவுக்கு ஆதரவாக நின்றோ அம்பலப்படுத்தவில்லை. மற்றவர்கள் அனைவரும் கூட்டணியில் நின்று அம்பலப்படுத்தலாம் என்று தான் சொன்னோம். அவர் செய்யவில்லை.
கேள்வி : 2011 சட்டமன்றத் தேர்தலில் கூட காங்கிரஸ் எங்கெல்லாம் இருக்கிறதோ அதனை எதிர்த்து நான் பிரச்சாரம் செய்வேன் என்று தான்(சீமான்) சொன்னார். இரட்டை இலைக்கு, முரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார். அது காங்கிரஸ் எதிர்ப்பு என்று தானே பார்க்க வேண்டும்?
பதில் : இல்லை. காங்கிரஸ் எதிர்ப்பென்று மட்டும் இல்லை, அவர் திமுக எதிர்ப்பாளரும் இல்லை. அவர் எப்பொழுது திமுகவை எதிர்த்திருக்கிறார்? தேர்தல்கள் நடந்த 2009- லிலும் எதிர்த்தது இல்லை. 2011ல் எதிர்த்தது இல்லை. 2014ல் எதிர்த்து நின்றதில்லை. திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் கூட, அவர் காங்கிரஸ் தொகுதியில் மட்டும்தான் எதிர்ப்பினை செய்தார். ஆனால் நாங்கள் திமுக தொகுதியிலும் வேலை பார்த்திருக்கிறோம். பெரியாரிய தொண்டர்கள் திமுகவினுடைய தொகுதிகளிலும் நின்று வேலை பார்த்து அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். அதுதான் நிலைமை. அவர் இரட்டை இலை பக்கம் ஆதரவு தளத்தை திருப்பினார். ஒருபக்கம் வந்து திராவிடத்தை ஒழிப்போம் என்று பேசிவிட்டு இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டுக் கொண்டு இருப்பார்.
கேள்வி : அவர் 2009-ல் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொல்லும் போது, நாம் தமிழர் கட்சியே இல்லையே?
பதில் : நான் 2009 கணக்கு பேசவே இல்லை. 2011 குறித்தே பேசுகிறேன். 2009-லிலே இயக்குனர்களுடைய சங்கம் தான் அந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். ஐயா. பாரதிராஜா அவர்களுடைய தலைமையில் தான் முன்னெடுக்கப்பட்டது. அன்றைக்கு வேறு வழி இல்லை. அவர்களால் தேர்தலுக்கு வர முடியாது என்கின்ற காரணத்தினால் தான் அதையும் முன்னெடுத்தார்கள். 2011 தேர்தலிலே இப்படிப்பட்ட நிலைப்பாடு அவர் எடுத்தார். அப்பொழுதும் கூட நாம் தமிழருக்குள்ளாக எதிர்ப்பெல்லாம் வந்தது. அன்றைக்கு அதிமுகவிடம், அவர்களுக்கு ஆதரவாக அவர் இருப்பதாக சொல்வதற்கு அவர் வழி இல்லாமல் இருந்தார். அதிமுக-வை நெருங்குவதற்கு அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. தொடர்பு இல்லாமல் இருந்தது. அதற்காகத்தான் அவர் ஐயா. வைகோ அவர்களை சந்தித்தார். ஐயா. வைகோ அவர்கள் மூலமாகத்தான் அன்றைக்கு மதிமுக, அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, வைகோவிடம் செய்தி சொல்லியே அதிமுக-விடம் ஒப்புதலைப் பெற்றார்.
தேர்தலுக்கு முன்பாகவே மதிமுக-வுக்கும், அதிமுக-விற்குமான அந்த தேர்தல் கூட்டணி உடைந்தது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். மதிமுக அந்த தேர்தலில் பங்கெடுக்கவில்லை. மதிமுக இல்லாத பொழுது அதிமுக-விற்காக பிரச்சாரம் செய்வது குறித்து எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் நானும் இருந்தேன். நான் நினைவேந்தலுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பொழுது, அதிமுக-வை எப்படி, யார் மூலமாக தொடர்பு கொள்வது என்பது குறித்தெல்லாம் அய்யநாதனிடம் ஆலோசித்துக் கொண்டு இருந்தார். பிறகு எப்படியோ அதிமுகவிடம் தொடர்பு கொண்டு, அதிமுகவுக்காக பிரச்சாரம் பண்ண ஆரம்பிக்கும் பொழுது அவர் ஒன்றை உணர்ந்து கொண்டார். இனி தானே ஈழத்தினுடைய பிரதிநிதியாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தார். அப்பொழுதுதான் அவர் தன்னை முதன்மை பிரதிநிதியாக, ஈழத்துக்கு ஒரே ஆள், தானே என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். அவர் ஐயா. வைகோ அவர்களை இழிவுபடுத்துவதன் மூலமாக, அதிமுகவிற்கு நெருக்கம் காட்டலாம் என நினைத்தார். அன்றைக்கு மதிமுக-விற்கும் அதிமுக-விற்கும் இருந்த கசப்புணர்ச்சியை தன்னுடைய லாபத்துக்காக பயன்படுத்தினார்.
கேள்வி : அது 2011 தேர்தல். 2014-ல் பாஜக கூட்டணியில வைகோ இருந்தார். அப்போதுகூட பாமக, மதிமுக, விசிக கட்சிகளை எதிர்த்து பிரச்சாரம் பண்ணப் போவதில்லை. அவர்களை நேச சக்திகளாகத்தான் பார்க்கிறோம் என்று சீமான் பேசினாரே?
பதில் : 2014 தேர்தலுக்கு முன்பு அவர் எடுத்த நிலைப்பாடுகள். அதற்கு வெகுகாலத்திற்கு முன்பே தேர்தல் வரப்போகிறது என்று தெரிந்து கொண்ட வெகுகாலத்திற்கு முன்பாகவே ஒரு கூட்டணி உருவாக்குவதற்கு இந்த கட்சிகளோடு எல்லாம் பேசப்பட்டது. இவர் ஒத்துழைக்கவில்லை.
கேள்வி : அந்த சமயத்தில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் பதிவுகள் எல்லாம் போடுகிறார்கள். வைகோ விருதுநகரில் நின்றபொழுது மே 17 இயக்கம் தன்னுடைய ஆட்களை அனுப்பி வேலை செய்தார்கள் என்று போடுகிறார்களே?
பதில்: மதிமுகவே இதை ஏற்றுக்கொள்ளவில்லையே. நாங்கள்தான் வந்து வேலை செய்து கொடுத்தோம் என்று என்றைக்காவது மதிமுக சொல்லி இருக்கிறதா? இந்த மாதிரி திரும்ப திரும்ப இந்த பொய்யை பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் என்ன விசியம் நடந்தது என்றால், அன்றைக்கு ஐயா. வைகோ அவர்களுக்கு எதிராக திமுகவிலிருந்து நிறுத்தப்பட்ட வேட்பாளர் யாரென்றால், இலங்கையில் ’மிகுன் லங்கா’ என்கின்ற விமான போக்குவரத்து சேவையை மதுரைக்கும் இலங்கைக்குமான தொடர்பை உருவாக்கியவர். இலங்கைக்கு நெருக்கமானவராக இருந்தவர் என்கின்ற காரணத்திற்காகவே ஐயா. வைகோவிற்கு எதிராக நிறுத்தப்பட்டார். அந்த தகவலை தான் எடுத்துக் கொடுத்தோம். அன்றைக்கு ஐயா. வெள்ளையன், புகழேந்தி தங்கராஜ், ஓவியர் வீரசந்தானம் என இன்னும் பல முன்னணி செயல்பாட்டாளர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து ஐயா. வைகோவிற்காக பிரச்சாரம் செய்யப் போனார்கள். அவர்களிடத்தில் இந்த தகவலை கொடுத்திருக்கிறோம். இதைத்தான் அவர்கள் எல்லா இடங்களிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் மதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தோம் என்றால் அவர்களிடமே சென்று கேளுங்களேன். யார் வேண்டாம் என்றது, ஏன் கேட்க மறுக்கிறீர்கள்? ஐயா. வைகோவுக்காக பிரச்சாரம் பண்ண வந்தார்களா? என்று அவர்களிடம் தானே கேட்க வேண்டும். இந்த விஷயத்தை அதிக காலமாகவே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஐயா. வைகோ அவர்களைப் பார்த்து இந்த விசியத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று ஒதுங்கிக் கொண்டோம். நீங்கள் பாஜக கூட்டணியில் இருப்பது எங்களுக்கு விருப்பம் இல்லை என்று வெளிப்படையாகவே சொல்லி இருந்தோம். பாஜக கூட்டணியுடன் இருந்ததால் மேடைகளிலே ஒன்றாக சேர்ந்து நிற்பது என்பது சாத்தியமில்லை என்பதை நேரடியாகவே சொல்லி இருந்தோம். தோழர். மல்லை சத்யா அவர்கள் காஞ்சிபுரம் தொகுதியில் நின்றார். அவரிடம் கூட நாங்கள் மறுப்பு கூறிவிட்டோம். இதெல்லாம் பற்றி மல்லை சத்யா தோழரிடம் கேட்டால் கூட சொல்லி விடுவார். நேரடியாக ஐயா. வைகோ அவர்களிடம் சென்று கேட்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அந்த கட்சியில் இருக்கக்கூடிய முன்னணி பொறுப்பாளர்களிடம் நேரடியாக சென்று கேட்டால் சொல்லிவிடப் போகிறார்கள். அன்றைக்கு நாங்கள் என்ன செய்தோம் என்றால், ஈழ அரசியல் பற்றியான புத்தகங்கள், ஈழ அரசியலில் காங்கிரஸ் செய்த துரோகங்கள் குறித்து புத்தகங்களை வெளிக்கொண்டு வந்தோம். மேலும், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்த டி. ஆர். பாலுவுக்கு எதிரான குறுவெட்டுகள், சிடிகள் கொண்டு எல்லாருக்கும் பரப்புரை செய்து கொண்டு இருந்தோம். இது யாருக்கெல்லாம் தேவையோ, எல்லாருக்கும் கொடுத்திருக்கிறோம். எல்லா ஊர்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து கொடுத்திருக்கிறோம்.
கேள்வி : காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் என்பதைத்தானே நாம் தமிழர் அன்றைக்கு சொன்னார்கள். அதே நிலைப்பாட்டில் தானே மே 17 இயக்கமும் இருந்தீர்கள்?
பதில் : ஆமாம். ஆனால் நாங்கள் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கவில்லையே. காங்கிரஸ் தவறு, பிழை செய்திருக்கிறது, ஆனால் 2009 போர் நடந்த பொழுது காங்கிரஸை எதிர்த்து அதிமுக என்ன செய்தது?
கேள்வி: வலிமையாக எந்த சின்னம் இருக்கிறதோ அதற்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார். அது இரட்டை இலை மட்டும் இல்லையே, முரசுக்குக் கூட கேட்டாரே?
பதில் : ஈழ அரசியல் தளமும், தமிழ் தேசிய அரசு தளத்தையும் உருவாக்கியாகி விட்டது. அதில் எல்லா முற்போக்கு சக்திகளும் இணைந்து நின்றார்கள். இந்த அரசியலை கொண்டு போய் வாக்காக அதிமுக-விடம் ஒப்படைக்கின்ற வேலையை அவர் செய்தார். அதில் கூட எந்த முன் நிபந்தனையும் வைக்காமல் செய்தார். அதாவது என்னவென்றால், அதிமுக-வில் 37பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதை வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை கூட அவர் ஜெயலலிதா அம்மையாரிடம் வைக்கவில்லை. எந்த கோரிக்கையும் இல்லாமல், காங்கிரசை எதிர்ப்பதற்காக அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்ததோடு சரி, அதற்குப் பிறகு பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதம் எழுப்ப வேண்டும் என்று கூட அவர் எங்கேயுமே கேட்டதில்லை. அதனால்தான் நாங்கள் பல இடங்களில் சொல்கிறோம். இவ்வளவு வேலைகளை அதிமுகவிற்காக செய்தவர், அதிமுகவை வைத்து ஈழத்திற்கு ஏதாவது செய்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் ஒரு மாநாடு டெல்லியில் நடத்தி பிற உறுப்பினர்களை சென்று சந்திப்பதோ அல்லது ஏதேனும் ஒன்றையோ செய்திருக்க வேண்டாமா? எதையுமே அவர் செய்யவில்லை.
கேள்வி : அதிகாரத்தில் இல்லாத கட்சி என்று நீங்களே சொன்னீர்களே?
பதில் : அதைத்தான் சொல்கிறேன். அவர் (சீமான்) அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து தானே பிரச்சாரம் செய்தார். அப்படி என்றால் அதற்காக ஒரு நிபந்தனை, கோரிக்கை வைத்திருக்க வேண்டுமே. எதற்காக ஆதரவு தெரிவித்தார்? காங்கிரஸ் ஈழத்துக்கு எதிராக இருந்ததினால் வீழ்த்த வேண்டும், திமுக ஈழத்துக்கு எதிராக இருந்ததினால் வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்வது மட்டும் போதுமா?
கேள்வி : சட்டமன்றத்தில் ஜெயலலிதா இலங்கையில நடந்தது போர்க்குற்றம் என்று தீர்மானம் கொண்டு வந்தார்களே?
பதில் : 2011-ல் இருந்த சூழலைப் புரிந்து கொண்டு ஜெயலலிதா அம்மையார் கொண்டு வந்த தீர்மானம் அது. அதுதான் நடந்தது.
கேள்வி : மூவர் தூக்கு ரத்து செய்ததாக இருக்கட்டும், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானமாக இருக்கட்டும், இந்த இரண்டு தீர்மானத்தையும் நீங்களுமே ஆதரித்தீர்களே?
பதில் : இந்த இடத்தில் அதை தெளிவுபடுத்த விரும்புறேன். மூவர் தூக்கு ரத்து என்பதை சாதித்தவர் ஜெயலலிதா அம்மையார் அல்ல. அன்றைக்கு இதற்காக உயர்நீதி மன்றத்திலே வழக்கை நடத்தி சாத்தியப்படுத்தியவர் ஐயா. வைகோ. அதற்குப் பிறகு செங்கொடியினுடைய ஈகம் நடக்கிறது. அதுவரை ஜெயலலிதா அம்மையார் இதற்கு பதில் சொல்லவில்லை. தன்னால் இந்த தூக்கை நிறுத்த முடியாது என்பதுதான் ஜெயலலிதா அம்மையார் சட்டமன்றத்தில் பேசிய உரையாக இருந்தது. செங்கொடி உடலை எடுத்துக் கொண்டு வரும் பொழுது அன்றைக்கு அதிமுக -வினுடைய கொடிக்கம்பங்கள் அறுக்கப்பட்டு கொடிகள் இறக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் அன்றைக்கு அதிமுகவுக்கு எதிரான முழக்கங்கள் காஞ்சிபுரத்தில் எழுப்பப்பட்டது. அந்த போராட்டம் அதிமுகவுக்கு எதிரான போராட்டமாக திரும்ப ஆரம்பித்தது. செங்கொடி ஊர்வலத்தில் நாங்கள் நேரடியாக இருந்து பார்த்தோம். நாங்களும் முழக்கமிட்டோம். இதெல்லாம் கண்ணுக்கு முன் நடக்க ஆரம்பித்தது. அதன் பிறகு வழக்கு வந்தது. வழக்கின் தீர்ப்பு இப்படியான ஒரு நிலை வரும் என்று தெரிந்த உடனே, அந்த அம்மையார் இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறார்கள். அது 2011 சட்டமன்றத்தில் பேசப்பட்டு, தீர்மானமாக 2013-14-ல் கொண்டு வருகிறார்கள். இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதெல்லாம் பின்னர் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதை நடைமுறைப் படுத்துவதற்கான கால அவகாசத்தை தவிர்க்கிறார்கள். தீர்மானமாகவும் இருக்கிறது. ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. உச்சநீதிமன்றம் மாநிலத்துக்கு அதிகாரம் இருக்கிறதென்று சொன்னது. மாநில அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை எல்லாம் செய்யவில்லை. அவர்கள் ஒரு தீர்மானத்தை போட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். மத்திய அரசு எப்படி ஒப்புதல் தரும்? சிதம்பரம் எப்படி தருவார்? தரமாட்டார்.
இரண்டாவது ஐ.நா தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என்பதாக பொது வாக்கெடுப்பு வேண்டும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்ற இரண்டு கோரிக்கையும் மாணவர் போராட்டத்தின் ஊடாக எழுந்த கோரிக்கை போராட்டம். மாணவர் போராட்டம் பெரும் போராட்டமாக நடந்தது. மாணவர்களுக்கு இந்த கோரிக்கை ஆவணத்தை தயாரித்துக் கொடுத்தது மே 17 இயக்கம். என்னுடைய அலுவலகத்தில் வைத்துதான் கோரிக்கை எழுதி கொடுத்தோம். லயோலா கல்லூரி மாணவரிடத்தில் இந்த விளக்கத்தை தெரிவித்து அதை எழுதிக் கொடுத்தோம். இதைத்தான் நாம் கோரிக்கையாக வைக்க வேண்டும் என்று சொன்னோம். மாணவர் போராட்டமாக எழுந்த பிறகு அந்த கோரிக்கை ஆதரித்து தீர்மானம் வந்தது. ஆனால் அந்த தீர்மானத்தை முன்னகர்த்துவதற்கான எந்த வேலையும் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் என்னிடம், தீர்மானம் நிறைவேற்றியதற்கு, நீங்கள் ஏதாவது நன்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள். நாங்கள் சொல்லவில்லை.
நாங்கள் திமுகவிற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால், 2019-ல், 2021-ல், 2024-ல் ஈழ அரசியல் தீர்மானங்களை இந்திய அளவில் விவாதமாக மாற்றுங்கள், இந்திய அளவில் அதற்கான ஒரு தீர்வை கொண்டு வருவதற்கு முயற்சி எடுங்கள் என்று சொன்னோம். அவர்களை வலியுறுத்துவோம் என்று 2019 அறிக்கையில் கொடுத்தார்கள். 2024-ல் கொடுத்தார்கள் இதுவரைக்கும் எதுவும் செய்யவில்லை. 2021-லிலும் அவர்கள் எதுவுமே செய்யவில்லை. ஈழம் என்கிற வார்த்தையை விட்டு விட்டு இன்றைக்கு முதல்வர், இலங்கை என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தி இருக்கிறார். துக்ளக் சோ சொல்லக்கூடிய வார்த்தையைதான் அவர் பயன்படுத்தி இருக்கிறார்.
இந்த அரசியலில் தான் தமிழ்நாட்டிற்குள்ளாக மாற்று சக்தியாக குறைந்தபட்ச ஆற்றலாவது எழ வேண்டும் என நினைத்தோம். குறைந்தபட்ச ஆற்றல் என்பது ஆட்சியை பிடிப்பது என்பது அல்ல. ஒரு 10 அல்லது 20 எம்.எல்.ஏ-க்கள் இருந்தால் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அவர்களின் குரல் ஒரு அழுத்தம் கொடுக்கும், இல்லையா? அதை செய்வதற்காவது இவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று விரும்பினோம். 2014இல் சீமான் அதிமுகவிற்கு ஆதரவாக நின்றார். சீமான் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கப்போவது தெரிந்ததால் நாங்கள் அவருடன் மேடையேற மறுத்து விட்டோம். உடனடியாக என்னை ‘தெலுங்கன்’ என்று அவர்கள் பரப்புரை செய்யத் தொடங்கி விட்டார்கள்.
மோடி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, தமிழ்நாட்டினுடைய சூழல், இந்திய சூழல் இரண்டும் மாறத் தொடங்கியது. 2014 க்கு முன்பு இருந்த சூழலும் 2014க்கு பின்பு இருந்த சூழலும் ஒன்று என்று பலர் நினைக்கின்றார்கள். இந்தக் கருத்தை நாம் தமிழர் கட்சியும் இன்று வரைக்கும் தொடர்கிறார்கள். ஆனால் 2014க்கு முன்பான சூழல் வேறு, 2014க்கு பின்பான சூழல் வேறு. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில உரிமையை நசுக்குவது, மாநில கட்சிகள் இல்லாமல் செய்வது, மாநிலத்தினுடைய அனைத்து விதமான அடையாளங்களையும் அழிப்பது என்கின்ற ஒரு அழிவு அரசியலை நோக்கி வேகமாக முன்னகர்கிறார்கள். இவ்வாறு மாநிலத்தினுடைய அடையாளத்தை, இனத்தின் அடையாளத்தை அழிப்பது என்கின்ற இடத்துக்கு பாஜக நகர்கின்றது.
கேள்வி : பாஜக எங்களுடைய மனிதகுல எதிரி என்று நாம் தமிழர் கூறுகிறதே?
பதில் : மனித குலத்துக்கு எதிரி என்றால், எவ்வளவு தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு அரசியலை முன்னணியில் நின்று செய்தவர்கள் யார்? கண்டிப்பாக நாம் தமிழரோ, சீமானோ கிடையாது. சீமான் ஊடக சந்திப்பில் மட்டுமே பேசுகிறார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார். எதிரி என்றால் நீங்கள் எப்படி போராடி இருக்க வேண்டும்? எவ்வளவு தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து இருக்க வேண்டும்? சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுவார். காங்கிரஸ் இன எதிரி, பாஜக மனித குலத்திற்கு எதிரி என்று நிறைய அறிக்கை கொடுப்பார். வேலை திட்டம் என்ன? தமிழ்நாட்டில் எத்தனையோ ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடக்கிறது. அதனை நாங்கள் எதிர்த்திருக்கிறோம் புகார் அளித்திருக்கிறோம். கு.ராமகிருட்டிணன் போன்ற மூத்த தோழர்கள் நேரடியாகவே மல்லு கட்டி இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு எதிராக ஊர்வலம் நடத்தி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை முற்றுகை இட்டிருக்கிறோம். தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கிறோம். இதுவரை ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக நாம் தமிழர் கட்சி செய்த வேலை என்ன? வேலை திட்டம் என்ன?
கேள்வி : பாஜக இங்கு இல்லவே இல்லை. அதை எதிர்த்து ஏன் போராட வேண்டும். இங்கு திமுக ஆட்சியில் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்தது. அவர்களை எதிர்த்து தானே நாம் போராட வேண்டும் என்று சொல்கிறார்களே? இங்கு இல்லாத பாஜகவை எதற்கு எதிர்த்து போராட வேண்டும்?
பதில் : பாஜகவினுடைய அரசியல் அதிகாரம் டெல்லியில் இருக்கிறது. நாம் எதிர்ப்பது இங்கு இருக்கக்கூடிய உள்ளூர் பிஜேபி அண்ணாமலையையோ, தமிழிசையையோ அல்ல. மோடியினுடைய திட்டங்கள் இங்கு இருக்கிறது. இன்றைக்கு அவர் யூஜிசி-யில் சட்டம் கொண்டு வந்திருக்கிறார். தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களே பட்டம் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இன்று படிக்கும் மாணவர்களுக்கு பட்டம் கிடைக்கப் போவதில்லை. இதை எதிர்த்து சீமான் எதுவும் பேசியிருக்க மாட்டார். ஆளுநர் மாநில சட்டங்கள் எதுவுமே நிறைவேற்ற விடாமல் தடுத்து வைத்திருக்கிறார். அதை எதிர்த்து அவர் பேசியதில்லை. திமுக அரசை மட்டும் இல்லை, அதிமுக அரசின் சட்டங்களையும் நிறைவேற்ற விடாமல் தடுத்திருக்கிறார். ஒரு மாநில அரசினுடைய உச்சபட்ச அதிகாரம் என்ன? சட்டங்களை இயற்றுவது தானே.. அதையும் டெல்லியினுடைய புரோக்கர் ஒருத்தர் வந்து தடை செய்கிறார் என்றால், நீங்கள் திமுக, அதிமுகவை தவிர அவர் ஆட்சிக்கு வந்தாலும் அதுதான் நடக்க போகிறது. சீமான் முதலமைச்சர் ஆனாலும் ஆளுநர் ஆபீசில் தடை செய்யப் போகிறார்கள். இது ஒரு கட்சிக்கான பிரச்சனை அல்ல, தமிழ்நாட்டினுடைய பிரச்சனை. ஆனால் இதுவரை அப்படி தமிழ்நாட்டினுடைய பிரச்சனையாக அதைக் கருதி அதற்கான போராட்டத்தை அவர் கட்டமைத்தது இல்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு உரிமை பிரச்சனைகளிலே பிஜேபி அனைத்து விதமான அதிகாரத்தையும் தன்வயப்படுத்துகிறது.
காங்கிரசை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் போது சோனியா காந்தி அம்மையாரையும், ராகுல் காந்தியையும் எதிர்த்து தானே அரசியல் செய்தீர்கள். அன்றைக்கு மாநிலக் கட்சிகள் இருக்கிறதா, இல்லையா என்கிற ஆராய்ச்சி செய்யவில்லையே. டெல்லியில் அந்த அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தின் மூலமாக தமிழ்நாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பிஜேபி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு 10 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிரான எந்த போராட்டத்தையும் கட்டமைக்கவில்லை. அப்படி கட்டியமைத்த ஏதாவது ஒரு போராட்டத்தை நீங்களே சொல்லுங்களேன்.
கேள்வி : இப்போது உடனே அப்படி சொல்ல முடியாதே? ஆனால் பல போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருந்தார்களே?
பதில்: நீங்களே வேண்டுமென்றால் தேடிப் பாருங்கள். ஆனால் எங்கள் ஆற்றலுக்கு செய்வதை விட குறைவாக செய்துவிட்டு எங்கள் முன்னாடி வந்து நின்று பேசக்கூடாது. இவ்வளவு பெரிய ஆற்றலாக வளர்ந்து விட்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைத்தான் பேச வேண்டும். பிரபாகரனை அடையாளமாக முன்னிறுத்திவிட்டு என்ன செய்தார்கள் என்கிற கேள்விதான் வரலாற்றில் வரும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக எதிர்ப்பு நிலை அல்லது அதிமுக எதிர்ப்பு நிலை என்பது தனித்தன்மை கொண்டது. இந்த அரசியலை முடக்குவதற்காக இருக்கக்கூடிய பாஜகவுடைய அதிகாரம் என்பது மிகப்பெரியது.
கேள்வி : நீட், விவசாய சட்டங்கள் எதிர்ப்பு போன்ற பாஜகவின் திட்டங்களை தீவிரமாக நாம் தமிழர் எதிர்க்கிறார்களே, அதை எதுவும் ஆதரிக்கவில்லையே?
பதில் : எதிர்க்கவில்லை. ஆனால் அதை எதிர்த்து மக்கள் ஆதரவை திரட்ட வேண்டும். அவர்கள் சக்திக்குரிய ஆற்றலைக் கூட செய்யவில்லை. வள்ளுவர் கோட்டத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு போய்விடுகிறார்கள். அதை நாங்களே செய்துவிட்டு போய்விடுவோமே.
கேள்வி : எல்லா அரசியல் கட்சியும் அதைத்தானே செய்கிறார்கள்?
பதில் : ஆனால் அவர்கள் தான் புரட்சி புரட்டல் என்று பேசிவிட்டு இருக்கிறார்கள். தலைகீழாக மாற்றுவோம் என்று சொல்கிறார்கள். எல்லா கட்சியும் போலத்தான் அவர்களும். அதைத்தான் நாங்கள் சொல்ல வருகிறோம். மற்ற கட்சிகளைப் போல அவர்களும் ஒன்று. எதுவுமே செய்ய முடியாது. அவர் புனித பசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதெல்லாம் எதுவும் கிடையாது. உங்களாலும் ஒன்றுமே செய்ய முடியாது என்றுதான் நாங்கள் சொல்கிறோம். அவர் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது என்ன சீரழிவு இருக்கிறதோ, அதுதான் அவர் ஆட்சியில் அமர்ந்தாலும் நடக்கப்போகிறது.
கேள்வி : ஒரு அரசியல் கட்சியாக 8% வாக்குகளுடன் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று தனிச் சின்னத்தில் நிற்பது என்பது மக்கள் அங்கீகாரம் இல்லையா?
பதில் : தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்கின்ற இடத்திற்கென்று ஒரு 10 – 15% ஓட்டு எப்போதும் இருக்கிறது. இன்றைக்கில்லை, காலம் காலமாகவே அது இருக்கிறது.
கேள்வி : அதே தேர்தல் காலத்தில் அவர்கள் சந்திக்கும் சவாலும் இருக்கிறதே. முதலில் விவசாய சின்னம் இருந்தது. பிறகு மைக் சின்னம் கொடுத்தார்கள். அதையெல்லாம் தாண்டி எட்டு சதவீதம் வாக்குகள் பெற்றிருக்கிறார்களே?
பதில் : விஜயகாந்த்தும் வாங்கி இருக்கிறார். அவர் என்ன கொள்கையை சொல்லி பெற்றார். இதைவிட அதிகமாக பெற்றார். இங்கு திமுக மீதும் அதிமுக மீதும் சலிப்படைந்து வெறுப்படைந்த மக்கள் என ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் இருக்கிறது. ஆக அதை அறுவடை செய்து கொண்டே இருக்கிறார்கள். விஜயகாந்தை ஏன் தீவிரமாக விமர்சித்தது இல்லை என்றால், அவர், புரட்சி கொண்டு வரப் போகிறேன், தமிழ் தேசிய வளர்ச்சி கொண்டு வரப் போகிறேன் என்று பேசவில்லை. நான் மார்க்சின் மாணவன், பிரபாகரனுடைய தம்பி என்கிற வசனம் எல்லாம் பேசவில்லை. அவர் மிகவும் எளிமையாக, எதார்த்தமாக திமுக-வைத் திட்டினார். அதிமுக-வைத் திட்டினார். ஓட்டு வாங்கிவிட்டு சென்றார்.
இவர் என்ன சொல்கிறார் என்றால், எல்லாவற்றையும் மாற்றப் போகிறேன் சூழலியல் மாற்றத்தை, அரசியல் அடிப்படை மாற்றத்தை கொண்டு வரப்போகிறேன் என்று பேசுகிறார். அரசியல் அடிப்படை மாற்றம் என்றால், அதிகாரிகளை மாற்றுவதற்கான எந்த அதிகாரமும் மாநில கட்சிக்கு கிடையாது. ஒரு பொய்யான ஒரு விஷயத்தை இளைஞர்களுக்கு சொல்கிறார். ஐஏஎஸ் அதிகாரிக்கு பயிற்சி எங்கு நடக்கிறது. டெல்லியில் தானே நடக்கிறது. இந்த ஐஏஎஸ் அதிகாரி தான் எல்லா கொள்கை முடிவையும் நடைமுறைப்படுத்துகிறான், நிர்வாகத்தை நடத்துகிறான். இதனை தலைகீழாக மாற்றுவேன் என்று எப்படி சொல்வார். நெய்தல் படைக் கட்டுவேன் என்று வாய்க்கு வந்ததை சொல்வார்.
ஒரு மாற்றம் வேண்டும் என்று இணைந்த இளைஞர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். உணர்ச்சி சுரண்டல் செய்கிறார்.
கேள்வி : அந்த உணர்வும் அரசியலில் தேவைப்படுவது தானே? ’நீட்’ என்றால் பூட்டு போடுவேன், ஜி.எஸ்.டி தர மாட்டேன் என்பது எல்லாம் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு தானே?
பதில் : எதார்த்த அரசியல் பேச வேண்டும். இதை செய்யாமல் இருந்து விட முடியுமா? நீங்கள் செய்ய முடியாத ஒரு விசியம், உங்க அதிகாரத்தில் இல்லாத ஒரு விஷயத்தை நானும் பேசலாம். எல்லாருக்கும் 10 kg தங்கம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு போகலாம். மோடி 15 லட்சம் தருகிறேன் என்று சொல்வதைப் போல சொல்லலாம். 10 லட்சம் ரூபாய், 10 பவுன் அல்லது 10 கிலோ தங்கம் தருவேன் என்று சொல்லலாமே.
கேள்வி : மேடைப் பேச்சியில் எல்லோரும் சொல்வது தானே. நான் எல்லாருக்கும் ஒரு கார் தருகிறேன். அது அம்பேத்காருன்னு சொன்னாரு. இப்படி நகைச்சுவையாக பேசுவது இயல்புதானே?
பதில் : நகைச்சுவையாக பேசுவது வேறு. அரசியல் கொள்கை ஆவணமாவே போட்டிருக்கிறார். கொள்கை ஆவணங்களை கொடுக்கக்கூடிய அவர் ஒரு கட்சி கொள்கை ஆவணமாக முன் வைத்தால், அதை சாதிப்பதற்கான வழிமுறை இருக்க வேண்டும். ஆனால் அந்த விஷயத்தை சாதிப்பதற்கான எந்த வழிமுறையும் அவரிடம் இல்லை. அவர் என்ன சொல்கிறார் என்றால், நான் வந்தால் ஈழத்தை வாங்கித் தந்து விடுகிறேன், என் போலீசை விட்டு செய்து விடுவேன் என்றெல்லாம் சொல்கிறார். இதெல்லாம் சாத்தியமே இல்லை, பண்ணவே முடியாது எனும்போது இதை எப்படி பார்ப்பது? அந்த அதிகாரத்தால் பண்ண முடியாது. இப்படி செய்ய நினைத்தாலே அடுத்த நிமிடம் ஆட்சி கலைக்கப்படும். ஜெயிலில் அடைத்து விடுவார்கள். கெஜ்ரிவாலுக்கு என்ன நடந்ததோ, சோரனுக்கு என்ன நடந்ததோ, அதுதான் நடக்கும். இதுதான் இங்கு எல்லை. இந்த நிலையில் எது எதார்த்த நிலையோ அதைச் சொல்லி வாக்கு வாங்குவதில் பிரச்சனை இல்லை.
நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் மாற்றுப் புரட்சி செய்கிறோம் என்று சொல்கிற சீமான், தமிழ்நாட்டில் நீங்க ஒரு கடந்த 15 ஆண்டுகளாக நடந்த பல்வேறு போராட்ட களங்களை வழிநடத்தியவர்கள், மக்களிடத்தில் சென்று அதை விளக்கியவர்கள் யாரோடும் கூட்டு சேரவில்லை. திமுக அதிமுகவுடன் கூட்டு சேர வேண்டும் என்று கூட இல்லை. அவர் முற்போக்கு இயக்கங்கள் எதனோடும், யாரோடும் மேடையை பகிர்ந்து கொண்டதில்லை. பொது நிகழ்வு ஒன்று நடந்தால் கூட அங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி காரர்கள் வருகிறார்கள் என்றால் சீமான் பிஜேபி-யினரிடம் மட்டும் பேசுவார். திமுக அதிமுக காங்கிரஸ் கூட வேண்டாம் அங்கு, இயக்க செயல்பாட்டாளர் வருவார்கள் இல்லையா, அவர்களிடம் கூட பேச மாட்டார்.
கேள்வி : 2009 நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட பிறகு நிறைய ஈழ அரசியல் களத்தில் சீமான், வைகோவோடும், திருமாவோடும் மேடையில பங்கேற்று நின்றிருக்கிறாரே? செங்கொடி நிகழ்வில் கூட வந்து பங்கேற்றாரே?
பதில் : செங்கொடி இறுதி நிகழ்வில் எல்லா தலைவர்களும் வந்து பங்கெடுத்தார்கள். அதில் ஒன்றில் மட்டும்தான் பங்கெடுத்தார். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் மூவர் தூக்கு விஷயத்தை சொல்லலாம். மூவர் தூக்கு என்பது அறிவிக்கப்படுகிறது. திருமா தோழர் திமுக கூட்டணியில் இருக்கிறார், அதிமுக எந்த கூட்டணியிலும் இல்லை, மற்ற கட்சிகள் வேறு வேறு கூட்டணியில் இருக்கிறார்கள். எல்லா தலைவர்களும் ஒன்றாக நின்று அதைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன பொழுது, நான் எல்லாக் கட்சித் தலைவரையும் சென்று பார்த்தேன். எல்லாருமே சரி என்று ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் இந்த பிரச்சனை மிகவும் முக்கியமானது நம்முடைய தனிப்பட்ட நிலைப்பாட்டை விட அரசியலை விட இது முதன்மையானது என்று சொன்ன பொழுது, சீமான் என்ன சொன்னார் என்றால், அவர்கள் எல்லாம் ஒரு பக்கம் நிக்கட்டும், நாம் தனியாக நிற்போம் என்றார். இரண்டு கரைகளாகப் போவோம் என்றார். அவர் இதை நேரடியாக என்னிடம் சொன்னார். இந்த சமயத்தில் ஒன்றாக நின்றால் தான் பெரும்பான்மையாக இருக்கும். இங்கு அதிமுகவை அழுத்தம் தர முடியும், அங்கு திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசை அழுத்தம் தர முடியும் என்றேன். அதற்கு அவர் வேண்டாம் தம்பி, தனியாகத்தான் செய்ய வேண்டும் என்று பேசினார்.
அதன் பிறகு ஒரு வழியாக எல்லாரும் சேர்ந்து கூட்டம் போடுவோம் என்று சொல்லி ஐயா. பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையிலே கூட்டணி உருவாக்கப்பட்டது. மூவர் உயிர்காப்பு கூட்டணி உருவாக்கப்பட்டது. எல்லாரும் சேர்ந்து ஒரு பொதுக்கூட்டம் போடுவோம் என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த கூட்டணியில், எல்லா தலைவர்களும் தோழர். திருமா, ஐயா. வைகோ, தோழர். ஜவாஹிருல்லா போன்ற எல்லாருமே என்ன சொன்னார்கள் என்றால், சீமானை முன்னிலைப்படுத்துவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இந்த பிரச்சனையில் யார் பெரிய ஆள் என்று நாம் பார்க்க வேண்டாம் என்று சொன்னார்கள். அப்போது சீமான் என்ன சொன்னார் என்றால், நான் தலையாகத்தான் நிற்பேன் என்றார். அவருடைய ஒரே பிரச்சனை என்னவென்றால், பொதுக்கூட்டத்தில் யார் கடைசியாக பேசுவது என்பதுதான். நான்தான் கடைசியாக பேசுவேன், நான்தான் தலைவன், இவர்களெல்லாம் வாலாகத்தான் இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார். மூவரின் தூக்கு அறிவிக்கப்பட்டு, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது, இந்த நெருக்கடியில நம்ம எல்லாரும் சேர்ந்து நிற்க வேண்டும் என்று சொன்ன பொழுதும் சீமானுடைய வாதம் இதுதான்.
அதற்கு பிறகு மூன்று பெண்கள் உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் ஆரம்பித்தார்கள். எட்டு நாள் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். பிறகு செங்கொடி அரங்கில் போராட்டம் நடக்க ஆரம்பித்த பொழுது அந்த பெண்களை பார்க்க மறுத்துவிட்டார். ஏனென்றால் அவர் கட்சி கொடிக்கு கீழ் உண்ணாவிரதம் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று சொல்லி பேசினார்.
கேள்வி : வழக்கறிஞர்கள் போராட்டத்தை சொல்கிறீர்களா?
பதில் : கயல் உள்ளிட்டவர்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்தார்களே, அதற்குப் பிறகு 44 நாட்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடந்தது. அதில் எல்லா கட்சிக்காரர்களும், தொழிற்சங்கத்துக் காரர்களும் பங்கெடுத்தார்கள். சாதாரண இயக்க நற்பணி மன்றத்தில் உள்ளவர்கள் எல்லாம் வந்தார்கள். ஆனால் நாம் தமிழர் மட்டும் அதில் பங்கெடுக்கவில்லை. கட்சியுடன் கூட கூட்டணி வைக்க வேண்டாம். அவர்களை ஆதரிப்பதற்கு கூட தயாராக இல்லை. கூடங்குளத்திற்கு சென்றால் உதயகுமாரோடு நெருக்கம் காட்ட நினைக்க மாட்டார். ஸ்டெர்லைட், மீத்தேன் என்று எந்த போராட்டத்திற்கு சென்றாலும், தனியாக நிற்க வேண்டும். எல்லா இடத்திலும் நம்மாழ்வார் படத்தை வைக்கிறார். ஏனென்றால் இன்று உள்ள இளைஞர்கள் நம்மாழ்வார் சீமான் கட்சியில் இருந்தார் என்று நினைக்கும் அளவுக்கு புகைப்படம் மாட்டி வைத்திருப்பார். ஆனால் நம்மாழ்வாரை தெலுங்கு என்று கொச்சைப்படுத்தி அந்தக் கட்சியினர் பேசினார்கள். நம்மாழ்வார் அன்று மீத்தேன் எதிர்ப்புக்காக கூட்டமைப்பு உருவாக்கினார். இந்த பூமி அழியப்போகிறது என்று அவர்தான் பாடம் நடத்தினார். கிரேட் ஈஸ்டர்ன் கம்பெனிகாரன் நட்ட கல்லெல்லாம் அவரே புடுங்கி தூக்கி போட்டு உடைத்தார். அந்த வீடியோ எல்லாம் இன்னும் இருக்கிறது. அன்றைக்கு சீமான் ஆதரிக்கவில்லை. கட்சிக்காரனையும் அதில் போகக்கூடாது என்று சொல்லி தடுத்து விட்டார். வணிகர் சங்கத்தின் வெள்ளையனோடு சேர்ந்து பெரும் ஊர்வலமாக நடத்திய பொழுதும் அதில் பங்கேற்கவில்லை.
நாங்கள் மீத்தேனுக்காக குறுவெட்டு போட்டோம். அதனை எல்லா கட்சிக்காரங்களும் எடுத்து ஸ்கிரீன் செய்தார்கள். அதை எடுத்து போட்ட நாம் தமிழருடைய ஒரு பகுதி செயலாளரை கட்சியை விட்டு நீக்கினார். இதெல்லாம் நடந்தது. இந்த மாதிரி கள வேலை செய்யக்கூடிய ஆட்களுடன் சேரக் கூடியவர்களை எல்லாம் நீக்கிக் கொண்டே இருப்பார். எந்த கள செயல்பாட்டாளரோடும் சேரக்கூடாது என்று கட்சிக்காரர்களுக்கு கட்டுப்பாடு விதித்தார். அவர் அதிமுக, திமுகவுடன் கூட கூட்டணி சேர வேண்டாம். இங்குள்ள இஸ்லாம் அமைப்புகளுடன் மேடையில் ஏறுவதில் என்ன பிரச்சனை? யாரையும் தன் மேடையில ஏற்ற மாட்டார். அந்த கட்சியுடைய நிலைப்பாடு என்று கூட வைத்துக் கொள்வோம். ஆனால் அண்ணாமலையை பார்த்தால் கட்டி பிடித்துக் கொள்வதும், அர்ஜுன் சம்பத்தை பார்த்து கட்டிப் பிடித்துக் கொள்வதும் என்று செய்தால் கேள்வி வருமா வராதா?
இதெல்லாம் இத்தனை காலம் பார்த்திருக்கிறோம். அவருக்கு யாரிடம் நெருக்கம் இருக்கிறது, யாரிடம் நெருக்கம் இல்லை என்பதெல்லாம் நமக்கு புரிகிறது. இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக பாஜக ஆட்சியில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்புகளோடு சேர்ந்து நிற்க வேண்டுமா, வேண்டாமா? கட்சி வேறுபாடு கடந்து நின்றிருக்க வேண்டும். ஏனென்றால் இஸ்லாமிய அமைப்புகள் பிரதான அதிகார கட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய கட்சிகளா? இல்லை. அவர்கள் இன்றைக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி : இஸ்லாமியர்களை சிறுபான்மை என்று சொல்லாதீர்கள். அப்படி சொன்னால் நான் செருப்பு கழட்டி அடிப்பேன் என்று சொன்னாரே?
பதில் : அவரை முதலில் படிக்க சொல்லுங்கள். அவர்களை சிறுபான்மையினர் இல்லை என்று சொல்லிவிட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடுமா? சிறுபான்மை இல்லை, இஸ்லாமியர்கள் பெரும்பான்மை என்று சொல்லி விட்டால் பிஜேபிகாரன் அடிக்காமல் நிறுத்திடுவானா? சீமான் பதில் சொல்வாரா? சிறுபான்மை இல்லை, பெரும்பான்மை என்று சொல்லிவிடலாம், ஆனால் அங்கு அக்லாக் கை அடித்து கொன்றது, ஆசிபாவை கொலை செய்தது போல் வரும் காலத்தில் எல்லாம் நின்று போய் விடுமா? சிஐஏ வராமல் போயிடுமா, என்ஆர்சி வராமல் போயிடுமா, வக்பு போர்டு வாரிய திருத்த சட்டம் வராமல் போயிடுமா, பிறகு எதற்கு இந்த வசனம்? சிறுபான்மையா, இல்லையா என்பதெல்லாம் நம்பிக்கையை பொறுத்தது. மக்கள் தொகை மையத்தை சார்ந்தது அல்ல.
கேள்வி : நீங்கள் சொல்ல வருவது, சீமான் தொடர்ச்சியாக முரண்பாடுகளோடு தான் இருக்கிறாரா?
பதில் : சீமான் இங்குள்ள எல்லா சனநாயக சக்திகளுடனும் முரண்பட்டு நின்றவர். அவர் இந்து மக்கள் கட்சியோடு, இந்து முன்னணியோடு அவருக்கு எந்த முரண்பாடும் என்றைக்குமே இருந்ததில்லை. அவர் மேடையில் என்று பேசுகிறார் அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டி கொடுக்கிறார். அவர் பேட்டியில் மேடையில் பேசுவது போலவே பேசுகிறார். கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களிடமும், ஏதோ அவர்களை கடித்து குதறுவது போலவே பேசுகிறார். அவர்களை எதிரி மாதிரியே நடத்துவார்.
கேள்வி : காவேரி உரிமை கேட்டு போராடிய போது ஒரு இளைஞர் வந்து தீக்குளித்தார். அவையெல்லாம் போராட்டமாக நீங்கள் நினைக்கவில்லையா?
பதில் : அந்த விக்னேஷ் எங்களுடன் தொடர்பில் இருந்த பையன். அவருடைய தாயார் இன்னும் எங்கள் தொடர்பில் இருக்கிறார். இவர்கள் அவர்களுக்கு என்ன செய்தார்கள்.
அந்த கட்சியை பொறுத்தவரைக்கும் நான் சீமானை பற்றியே பேசுகின்றேன். நாம் தமிழர் தொண்டர்களை பற்றி நான் பேசவில்லை. மேடையில் நின்று அடித்து விடுவேன், வெட்டி விடுவேன், குத்தி விடுவேன் என்றால் செய்திட முடியுமா? தொடையைத் தட்டுவது, மார்பை தட்டுவது என எல்லா வேலையும் செய்கிறார். அரசியல் கட்டமைப்பு வேலையை செய்ய வேண்டுமே. அதை பார்க்கும் உணர்ச்சி பொங்க இருக்கக்கூடிய ஒரு இளைஞனுக்கு என்ன தோன்றும்? என்ன விளைவு ஏற்படும்? அந்த இளைஞனின் குடும்ப நிலை இன்று என்ன? இதைத்தான் பேச வேண்டும்.
இங்கு இருக்கக்கூடிய மாற்று அரசியல் அமைப்புகளோடு எல்லாம் அவர் கைகோர்த்து நிற்பதில்லை. இதில் என்ன சிக்கல் வந்து விடப் போகிறது. இன்றைக்கு முகிலன் இருக்கிறார். சுற்றுப்புறச்சூழல் செயல்பாட்டாளர். அவர் திமுக அதிமுக எல்லாரையும் எதிர்த்து நின்று சண்டை போட்டு அடி வாங்கி தான் நிற்கிறார். அவரையெல்லாம் கூட இவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். திமுக-விற்கு எதிராக கடுமையாக பேசிய உதயகுமார் அவர்களை விமர்சிப்பார்கள். தீவிரமாக கொச்சையாக விமர்சிப்பார்கள்.
அதே மாதிரி பேராசிரியர் ஜெயராமன், கெயில் பைப்லைனுக்கும், மீத்தேன், ஹைட்ரோட் கார்பன் திட்டத்துக்கும் எதிராக கடுமையான போராட்டம் நடத்தி சிறை சென்று பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளானவர். அவர் மிகவும் மரியாதைக்குரியவராக, அந்த பகுதியில் அனைத்து மக்களாலும் அரவணைக்கப்படக்கூடிய ஒரு களப்போராளியாகவும், மக்களால் நேசிக்கப்படக்கூடிய ஒரு தலைவராகவும் இருக்கக்கூடிய ஒருவர். அவர் தேர்தல் ஆசைப்படக்கூடியவர் எல்லாம் கிடையாது. அவரை கொலை மிரட்டல் விடுவது, கட்சிக்காரனை விட்டு இந்த ரவுடித்தனம் செய்வது என்பது எல்லாம் அவர் கட்சியினரால் நடத்தப்பட்டது.
தமிழுக்கு எதிராகவும் தமிழனுக்கு எதிராகவும் செய்யும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக-வை நோக்கி இதையெல்லாம செய்ய வேண்டியதுதானே. அதை செய்யாமல் தமிழ் தேசிய செயல்பாட்டாளர்களை இழிவாக திட்டுவது, கொலை மிரட்டல் விடுவது என்பது எல்லாம் செய்திருக்கின்றனர். என்னை தெலுங்கு என்று பேசியது, நம்மாழ்வாரை தெலுங்கு என்று பேசியதற்கு எல்லாம் என்ன ஆதாரம் இருக்கிறது? பிஜேபிகாரன் என்னை எப்படி சொல்கிறானோ, அதே மாதிரிதான் இவன் சொல்கிறான். அவனுக்கு மத சர்டிபிகேட் தந்தால், இவனுக்கு ஜாதி சர்டிபிகேட் தர வேண்டும்.
சீமான், இங்கே ஒரு தமிழ் ஒற்றுமை வரக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். திமுக, அதிமுக-விற்கு மாற்றாக எல்லாரும் சேர்ந்து உருவாக்கலாம் என்பதை உடைத்தார். தமிழ்நாட்டில் மாற்று அரசியல் உருவாவதை அவர் ஒருபொழுதும் அனுமதிக்க மாட்டார், உடைத்துக் கொண்டே இருப்பார், சிதைத்துக் கொண்டே இருப்பார்.
கேள்வி : மக்கள் நல கூட்டணி 2016 -ல் உருவானது. ஆனால் அது தேர்தலில் தோல்வியை சந்தித்தது. ஆனால் அதையும் தாண்டி அந்த கூட்டணி உருவானது. அதற்கு எப்படி சீமான் பொறுப்பாவார்?
பதில் : மக்கள் நலக் கூட்டணி உருவானதே தவிர அது நிற்கவில்லை. அதில் சீமான் இல்லை சீமான் இருந்தால் தானே அதைப் பற்றி பேச முடியும். சீமான் அந்த கூட்டணியில் இணைந்தால் தானே ஒரு மாற்று அரசியல் பேசுவதற்கு இடம் கிடைத்திருக்கும். அதை உருவாக்க தயாராக இல்லை அல்லவா. அதிகாரத்திற்கு வரவேண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார். நாங்கள் என்ன தேர்தலில் போட்டியிடப் போகிறோம். இருக்கக்கூடிய சிறிய அமைப்புகள் மக்களுக்காக போராடக்கூடிய அமைப்புகள் எல்லாவற்றையும் ஒன்றிணையுங்கள். எல்லா பிரச்சனைக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு வேலை செய்வோம் என்றால், அதை மறுத்துவிட்டு முதலமைச்சர் ஆவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டார். முதலமைச்சர் ஆகட்டும், ஓபிஎஸ் முதலமைச்சராகும் போது இவர்கள் எல்லாம் ஆனால், நமக்கு என்ன பெரிய மாற்றுக் கருத்தா இருந்து விடும்? தமிழ்நாட்டில் ஒரு ஒற்றுமை அரசியல் வேண்டும். பல்வேறு முரண்பாடுகள் நமக்குள் இருந்தாலும் இன்றைக்கு பிஜேபி என்பது மிகப்பெரிய ஒரு அழிவு சக்தியாக வந்து நிற்கிறது.
கேள்வி : அவரின் கடந்த கால செயல்பாடுகளுக்கும், பெரியாரை குறித்த ஒரு அவதூறு பேசுவதற்கும் தொடர்பு இருக்கிறது என்கிறீர்களா?
பதில் : அவர் தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் இளைஞர்கள் போவதை தடுப்பதற்கான எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தார். அவர் எந்த முற்போக்கு அமைப்புகளோடும் இணைந்து, எந்த விதமான களப்போராட்டத்தோடும் இணைந்து இளைஞர்கள் போவதை தடுப்பதை செய்து கொண்டே இருந்தார். நாங்கள் ஒரு போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தால் அவர் ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருப்பார். தனியாக நின்று, தனியாக தம்பிகளை பிரித்துக் கொண்டு போய் வைத்திருப்பார். பிறகு எப்படி ஒற்றுமை உணர்வு அவர்களிடம் ஏற்படும்?
இன்றைய சூழல் என்னவென்றால் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்குள்ளாக நகர இயலாமல் திராவிடம் முட்டுக்கட்டையாக இருக்கிறது. திராவிட கோட்பாடு முன்வைத்த சமூக நீதிக்கு மாற்றாக எந்த கோட்பாட்டையும் பாஜக-வால் வைக்க முடியவில்லை. திராவிடம், சமூகநீதிக் கோட்பாட்டை திமுகவில் மட்டுமே இணைத்துப் பார்க்க முடியாது. இங்கு எல்லா இயக்கங்களும் காலம் காலமாக போராடிக் கொண்டே இருக்கிறோம். இந்த சமூகநீதி கோட்பாட்டுக்கு மாற்றாக பாஜக-வினால் எந்தவிதமான மாற்றுத் திட்டத்தையும் வைக்க முடியவில்லை. அதற்கு பெரிய தடைகள் என்னவென்றால் கோட்பாட்டு தலைமை. இங்கு தமிழ்நாட்டுக்கு கோட்பாட்டு தலைமை என்ன? தந்தை பெரியார் முன்வைத்த அந்த கொள்கை திட்டம்தான். தந்தை பெரியார் வைத்த கொள்கை திட்டத்தை தமிழ்நாட்டில் எந்த மாநில கட்சியும் எதிர்த்ததில்லை. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொண்டார்கள். ஏதோ ஒரு புள்ளியில் அதை ஏற்றுக் கொண்டவர்கள். அந்த கொள்கை திட்டத்தை சிதைப்பது என்பது பிஜேபி-யினால் முடியவில்லை. அந்த கொள்கை திட்டத்தை கொண்டு வந்த பெரியாரைப் பற்றியான மதிப்பை சிதைப்பது மூலமாக அந்த கொள்கை திட்டத்தை உடைக்கலாம் என பாஜக நினைக்கிறது. பெரியார் பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று சீமான் சொல்கிறார். பெரியார் என்ன வாக்கரசியலுக்கானவரா? பெரியார் சொன்ன அரசியல் தானே திமுக அதிமுக, என்று ஓட்டாக மாதிரி நிற்கிறது.
சீமானை வைத்து பெரியார் என்கின்ற அந்த மதிப்பை தமிழினத்தினுடைய அடையாளத்தை உடைப்பது என்பதே பாஜகவின் திட்டம். சமூக நீதி அரசியல் திமுகவுக்கு மட்டும் சொந்தமல்ல. இங்கு இருக்கிற எல்லா கட்சிகளுக்கும் சொந்தமானது தான். அதிமுக அதை நிறைவேற்றி இருக்கிறது. எம்ஜிஆர் அவர்கள் விகிதங்கள் மாறினாலும் இட ஒதுக்கீட்டினை கொண்டு வந்தார். பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு என்று சொன்ன போது கடுமையான தோல்வி சந்தித்தார். அதற்குப் பிறகு நிலைப்பாட்டை மாற்றி நேர் எதிராக வந்தார். இதெல்லாம் மக்களிடத்தில் இருக்கக்கூடிய கருத்து. கட்சி கருத்துக்கள் மட்டுமாக பார்க்க முடியாது.
பெரியார் வந்து சாமானிய மக்களிடத்திலே சென்று சேர்ந்த ஒருவர். அதை சிதைப்பதன் மூலமாக இட ஒதுக்கீடு கோரிக்கையை நிராகரிக்க முடியும், சாதி மறுப்பு கோரிக்கை நிராகரிக்க முடியும், பெண் விடுதலையை நிராகரிக்க முடியும், இப்படி பல்வேறு விசியங்களை நீக்க முடியும். பெரியார் என்பது தனிப்பட்ட ஒரு விஷயம் அல்ல, அவர் மூலமாக முன்னெடுக்கப்பட்ட கொள்கை போராட்டங்களின் வடிவம்.
கேள்வி : திமுக அதிமுக இவ்வளவு காலம் ஆட்சியில் இருப்பதற்கு, ஆட்சியை அதிகாரத்தை அடைவதற்கு காரணமாக இருப்பது, அடிநாதமாக இருப்பது திராவிடம் தான். அந்த திராவிட கருத்தியலுக்கு அடையாளமாக பெரியார் இருப்பதால் அதை தகர்க்க வேண்டும் என்று தானே சீமான் சொல்கிறார்?
பதில் : ஒரு கட்சியை எதிர்ப்பதற்கு அந்த கட்சியில் தவறு செய்யக்கூடிய அமைச்சர்களை, மாவட்ட செயலாளர்களை எதிர்த்துப் பேசுங்கள். யாரும் மறுக்கவில்லை. யார் வேண்டாம் என்று சொன்னார்கள். அதை விடுத்து பெரியாரைத் தவிர்த்தால் தான் மாற்று அரசியல் வரும் என்று நினைக்கிறார். திமுகவிலும், அதிமுகவிலும் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், பெரும்பாலான அமைச்சர்களுக்கு பெரியார் கொள்கையில் உடன்பாடு இருக்கிறதா என்ன? அப்படி இருந்திருந்தால் இப்படி பேசிவிட்டு சீமான் எந்த மாவட்டத்திலாவது இருந்திருக்க முடியுமா? திமுகவில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் பெரும்பாலானவர் பெரியாரியவாதிகள் கிடையாது. மாவட்ட செயலாளர் பெரும்பாலானவர்கள் பெரியாரியவாதிகள் கிடையாது. வெகு சிலரே இருக்கின்றனர். இது தான் நிலைமை. அந்த கருத்தை வைத்துக்கொண்டு கட்சியை உருவாக்கிக் கொண்டார்கள், அதற்கு பிறகு பதவிக்காக ஆட்களை உருவாக்கிக் கொண்டார்கள் அவ்வளவுதான் விசியம். இந்த பதவி வைத்து கூட பணத்தை பெருக்க வேண்டும் என்பதுதான் நடக்கிறது. இப்படிப்பட்ட பண அரசியல், பதவி அரசியல், சுரண்டல் அரசியல் எதிர்த்து பேச வேண்டும் என்றால் யார் அதை செய்கிறார்களோ அதை நோக்கி பேசுவதை விடுத்து அந்தக் கருத்தில் தலைமையை உடைப்பது என்பது பாஜக உள் வருவதற்கான வாய்ப்பை கொடுப்பது போன்றது. அது எந்த விதத்திலும் திமுக, அதிமுகவை விழ்த்த விடாது.
கேள்வி : பெரியார் எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இருப்பது தானே?
பதில் : பெரியார் எதிர்ப்பு அரசியல் இங்கு எங்கே இருக்கிறது? பாஜக தொடர்ச்சியாக செய்கிறது. பாஜகவுக்காவிற்கு இங்கு ஓட்டு விகிதம் என்ன? பாஜகவினால் ஏன் இங்கு வெல்ல முடியவில்லை? அண்ணாமலை ஏன் இங்கு பெரியாரை எதிர்த்து பேசுவது இல்லை? அண்ணாமலை ஏன் மசூதிக்கு, சர்ச்சுக்கு செல்கிறார். இந்த கிறிஸ்மஸ் தினத்திலும் சர்ச்சுக்கு சென்று நடிக்கிறார். ஏன் இந்த தேவை வந்தது? பிஜேபிகாரர்கள் எங்கேயாவது இந்திய மாநிலங்களில் வேறு எந்த மாநிலங்களிலாவது இந்த மாதிரி சர்ச்சுக்குள் போய் நிற்கிறார்களா?
கேள்வி : பிரதமரே போகிறாரே?
பதில் : பிரதமர் வேறு. பிரதமரின் நாடகத் தன்மையும் இதை சேர்க்க வேண்டாம். மாநிலத்தில் செயல்படக்கூடியவர்கள் இதைப் போன்று செய்கிறார்களா?
இட ஒதுக்கீடுக்கு எதிராக அண்ணாமலை பேசமாட்டார், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசமாட்டார், தலித்துகளுக்கு எதிராக பேசமாட்டார், பெரியாருக்கு எதிராக பேசமாட்டார். அவர் திராவிட அரசியல் எப்படி நடக்கிறதோ அதே மாதிரி தன்னை தகவமைத்துக் கொண்டார். சமத்துவம் கொண்டவர்களாக அல்லது மற்ற மதங்களை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாக இப்படிப்பட்ட ஒரு பிம்பத்தை காட்ட வேண்டிய தேவை ஏன்? இது உண்மையான முகம் கிடையாது. அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைத்தது என்றால், இங்கு இருக்கும் முஸ்லிம்களை எல்லாம் அடித்து கொள்ள வேண்டும் என்று தான் சொல்லுவார். இங்கு உள்ள சர்ச்சுகளை எல்லாம் உடைக்க வேண்டும் என்கிற ஆள்தான் அவர். அவர்களின் அரசியல் அதுதான். ஆனால் இங்கு ஏன் நடிக்க வேண்டிய தேவை வந்தது என்றால், இங்க இருக்கக்கூடிய அரசியல் சூழல். இங்கு மதங்களைக் கடந்த தமிழர் என்கின்ற அடையாளம் நமக்கு இருக்கிறது.
கேள்வி : அண்ணாமலையின் அரசியலும், சீமான் அரசியலும் எப்படி ஒன்றாகும்?
பதில் : பிஜேபி பெரியாரை நேரடியாக எதிர்த்து பேசிய சமயத்தில் கடுமையான எதிர்ப்பு அதிமுக ஆட்சி காலத்திலேயே வந்து விட்டது. அன்றைக்கு அதிமுக பாஜக கட்டுப்பாட்டில் இருந்தபோதும் கூட, அதிமுகவும் பேச வேண்டிய இடத்திற்கு வந்து நின்றார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கும் வந்தது.
பெரியார் அரசியல் என்பது கட்சி கடந்த ஒரு வலிமையான அரசியலாக இங்கு நிற்கிறது. இதை நாம் பேசி நம் பெயரை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததன் வெளிப்பாடு தான், இங்கு நமக்கு ஒரு அடியாள் இருக்கிறார், அடியாளை இறக்கி விடுவோம் என்று இறக்கியிருக்கிறார்கள். அடியாளுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. அவருக்கு காசு கிடைத்தால், லாபம் கிடைத்தால் போதும் எது வேண்டுமானாலும் பேசுவார்.
அதனால் இன்றைக்கு ஈரோடு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. ஈரோடு என்பது தந்தை பெரியாருடைய ஊர். இந்த இடைத்தேர்தலிலே நான் பெரியாரை எதிர்த்து பேசி, ஓட்டு வாங்கி காட்டுவேன் என்று சீமான் பேசுகிறார். இந்த இடத்துக்கு சீமான் வரவைப்பதற்கான பின்னணி என்னவென்றால் பாஜக, அதிமுக தேர்தலில் இறங்கப் போவதில்லை. ஏனென்றால் அடுத்த ஒரு ஆண்டில் தேர்தல் வரப்போகிறது. இப்போதைக்கு அதிமுக வந்து தன் பலவீனத்தை காட்டுவதற்கு தயாராக இல்லை. பாஜகவும் தன் பலவீனத்தை காட்ட தயாராக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் இதில் டெபாசிட் போனது என்றால் அண்ணாமலை பதவிக்கு வேட்டு வந்து விடும். அதனால் அதிமுக வாக்குகளை திமுக எதிர்ப்பு என்கின்ற அடிப்படையில், பாஜக வாக்குகளை பெரியார் எதிர்ப்பு என்கின்ற அடிப்படையில் வாங்கலாம் என நினைக்கிறார்.
ஏற்கனவே கடந்த இடைத்தேர்தலில் 10000 ஓட்டு வாங்கி இருக்கார். அதற்கு முன்பு 11 ஆயிரம் ஓட்டு வாங்கியிருக்கிறார். இப்போது பிஜேபி அதிமுக ஓட்டு கிடைத்தால் சுமார் 20000 ஓட்டாக மாறிவிடும். இதனால் பெரியார் எதிர்ப்பு அரசியல் பேசி பெரியாரை கொச்சைப்படுத்தி ஓட்டு வாங்க முடியும் என்பதைக் காட்ட விரும்புகிறார். அதனால்தான் சீமானுக்கு ஆதரவாக குருமூர்த்தி, தமிழிசை, எச். ராஜா இறங்குறார்கள். வெட்கமே இல்லாமல் இவர்களும் வேண்டாம் என்று சொல்ல மறுக்கிறார்கள். இவர்கள் (நாம் தமிழர் கட்சி) எந்த வெட்கமும் இல்லாமல் யார் வேண்டுமாலும் ஆதரவு வாங்கிக் கொள்கிறார்கள். ராஜபக்சே ஆதரவு கொடுத்தால் கூட வாங்கி வைத்துக் கொள்வார். சீமானுடைய அரசியல் கீழ்த்தரமான கேவலமான இந்த இடத்துக்கு வரும் பொழுதுதான் சீமானை எதிர்க்க வேண்டிய இடம் வருகிறது, அம்பலப்படுத்த வேண்டிய தேவை வருகிறது.
கேள்வி : பாஜக சீமானை ஆதரித்தால், அது சீமான் எப்படி பாஜகவை ஆதரிப்பது போலாகும்?
பதில் : சீமான் பாஜகவிற்கு உடன்படுகின்ற அரசியலை செய்கிறார் என்று அர்த்தம். ரஜினியை ஏன் பார்த்தார்? ரஜினிக்கும் இன்றைய தமிழ்நாடு அரசியலுக்கும் என்ன தொடர்பு? அவர் அரசியலில் வரமாட்டேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார். ரஜினி பாஜகவின் பிரமுகர்களோடு நெருக்கமாக இருக்கக்கூடியவர். ரஜினியின் வழியாகத்தான் குருமூர்த்திடம் பேசப்பட்டிருக்கிறது. வெளிப்படையாக அதுதான் இப்போது அம்பலமாகி இருக்கிறது. ரஜினியிடம் போய் திடீரென்று சென்று பேசுறதுக்கு இவருக்கு என்ன விசியம் இருக்கிறது? ரஜினி என்ன பெரிய கட்சி கட்டமைப்பு வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்காரா, என்ன? அப்படி என்றால் நீங்கள் விஜய்-யிடம் பேசலாம். புது ஆற்றலாக வருகிறார். அவருடன் பேசி ஒரு உடன்பாடு எடுக்கலாம். அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் நீங்க கட்சியே எதுவும் இல்லாத, அரசியலிலே வரமாட்டேன் என்று சொன்ன ரஜினியை போய் சந்திப்பதற்கு காரணம் என்ன? பாஜகவிற்கு நெருக்கமானவர் அவர். அவர்களின் பிரமுகர்களோடு இணக்கமாக இருக்கக்கூடியவர். அவர் வழியாக ஒரு அரசியல் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதற்குப் பிறகு என்ன செய்தார்.
அண்ணா யுனிவர்சிட்டிக்கு எதிர்த்து போராட்டம் செய்கிறோம் என்று களத்தில் திடீரென்று இறங்குகிறார். எத்தனையோ விசியங்கள் பற்றி எல்லாம் ஒன்றுமே பேசாத நிலையில், இதற்கு களம் இறங்கினார். மாஞ்சோலை பிரச்சனையிலிருந்து, மீனவர் பிரச்சனையில் இருந்து, திமுக-வை எதிர்த்து அவர் எந்த போராட்டத்திலும் இறங்கவில்லை. நான்கு வருடத்தில் திமுகவை எதிர்த்து எந்த பெரிய போராட்டத்தையும் செய்யவில்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பில் வசனம் விடுவார், நல்ல நாடகம் நடிப்பார், ஆக்சன் கொடுப்பார், பாடி லாங்குவேஜ் பயங்கரமாக காட்டுவார். இவ்வளவுதான் செய்வார். எந்த இடத்திலும், எந்த காலத்திலும் மக்களைத் திரட்டி எல்லாம் போராட்டம் செய்ததே கிடையாது.
திமுகவிடமும் அவர் நெருக்கமாக தான் இருக்கிறார். ஏதாவது பிரச்சனை என்றால், நேராக முதலமைச்சரை சென்று பார்த்து விடுவார். அவருடைய ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று அறிக்கை விடுவார். இப்படித்தான் அவர் சமரசம் பண்ணாத ஆட்களே கிடையாது. அவர் ஓபிஎஸ் – உடன் சமரசம் பண்ணியிருக்கார் எடப்பாடியுடன் சமரசம் பண்ணி இருக்கிறார். அவர் அன்றைக்கு ஜெயலலிதா அம்மையாரோடு சமரசம் பண்ணி இருக்கார். ஸ்டாலின் அவர்களோடு சமரசம் பண்ணிருக்கார். அவர் யாரோடும் முரண் பட்டெல்லாம் நிற்க மாட்டார். வசனம் பேசுவார், அதற்குப் பிறகு போன் போட்டு, ‘அண்ணே ஏதோ பேசி விட்டேன்’ என்று முடித்து விடுவார். இது எல்லாருக்கும் தெரியும். அவருடன் இருக்கிறவர்களுக்கு தெரிந்த அரசியல் தான். அவர் முன்பு பேசுவது ஒன்று, பின்பு பேசுறது ஒன்று. தத்துவ ரீதியான மோதலை செய்ய மாட்டார்.
கேள்வி : பெரியார் தனிப்பட்ட முறையில் ராஜாஜியை தனிப்பட்ட முறையில் நண்பர் என்று சொல்லிக் கொண்டாலும், அரசியல் களத்தில் ராஜாஜி தானே எதிரியா இருந்தார். அப்படித்தானே எல்லா அரசியலும் இருக்கும்?
பதில் : ராஜாஜி என்கின்ற தனி நபரை எதிர்த்து பெரியார் நகரவில்லை. ராஜாஜி வைக்கக்கூடிய சனாதன அரசியலை எதிர்த்துதான் பெரியார் நகர்ந்தார்.
கேள்வி : தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுதல் என்பது எல்லா கட்சி அரசியல் தலைவர்களிடமும் இருப்பது தானே?
பதில் : தனிப்பட்ட நட்பு வேறு, லாப நோக்கத்தினால் இருக்கும் நட்பு வேறு, நான் முதல் அமைச்சரை பார்த்து எங்கள் மேல் அதிமுக போட்ட வழக்குகளை வாபஸ் வாங்குங்கள் என்று நிற்க மாட்டோம். எங்களுக்கு அது தேவையில்லை. அவர்கள் போட்டது பொய் வழக்கு என்று நிரூபித்துக் காட்டுவோம். வழக்குகளை நாங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு இருக்கிறோம். அவ்வளவுதான் விசியம். இந்த திமுக ஆட்சிதான் எங்கள் மீது வழக்கு போட்டிருக்கிறது. சீமான் மேல் இவ்வளவு வழக்குகள் எல்லாம் போடவில்லை. இதுவரைக்கும் எங்களுக்கு கடந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 10/15 கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை திமுக அனுமதி ரத்து செய்து இருக்கிறது. ஆனால் சீமானின் ஒரு கூட்டம் கூட ரத்தானது கிடையாது.. எல்லாமே சிறப்பாக நடந்தது.
கேள்வி : இப்போது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் போராட விடாமல் கைது செய்தார்களே?
பதில் : அது பிஜேபி அஜெண்டாவினால் நேராக இறங்கினார். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு விவசாயிகள் போராட்டத்துக்கு போனோம். கைது செய்தார்கள். நீங்கள் எல்லாருமே செய்தியில் பார்த்திருப்பீர்கள். ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்துக்கு வந்தார்கள். கைது பண்ணார்கள். இது எல்லாருக்கும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. திமுக போராட்டங்களுக்கு அனுமதி தருவதில்லை என்பது தனி பிரச்சனை. தனியாக பேசுவோம். ஆனால் சீமானை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
நாங்கள் நடத்திய முப்பெரும் விழாவிற்கு எங்களுக்கு முதல் நாள் இரவு வரை அனுமதி வழங்க பேசிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆனால் சீமானுக்கு எந்த தடையும் இல்லை. கடந்த ஆண்டும் எங்களுக்கு திருச்சியில் நடத்துவதற்கு தடை. சீமானுக்கு திருச்சியில் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. எங்களுக்கு மருதுபாண்டியர்களுக்கு வீர வணக்க கூட்டம் மேலூரில் தடை. திருப்பத்தூரில் தடை. காரைக்குடியில் தடை. அவருக்கு எந்த தடையும் கிடையாது. எங்களுக்கு பெரியாருடைய கூட்டம் கோயம்புத்தூர் நடத்துவதற்கு தடை. அவருக்கு எந்த தடையும், எந்த பிரச்சனையும் கிடையாது. வக்புவாரிய சட்டத்திற்கு எதிராக பாஜக கண்டித்த பொதுக்கூட்டத்திற்கு கோயம்புத்தூரில் ஷெரிப் கூட்டத்திற்கு அனுமதி இல்லை. ஆனால் சீமானுடைய எல்லா கூட்டத்திற்கும் திமுக அனுமதி அளிக்கிறது.
கேள்வி : பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பினர் எல்லோரும் திமுக சீமானை அனுமதிக்கிறது என்கிற கருத்தை ஏற்கிறார்களா?
பதில் : நீங்கள் அதை தனிப்பட்ட முறையில் தான் கேட்க வேண்டும். அதை உட்கார்ந்து நாம் எப்படி விவாதமாக பேசுவது? இது எங்களுடைய கருத்து. நாங்கள் அப்படித்தான் பார்க்கிறோம். ஆனால் திமுக இங்கு இருக்கக்கூடிய சனநாயக அமைப்புகளுடைய கூட்டங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் அனுமதிப்பதில்லை என்பது எல்லாருடைய கருத்துமாக இருக்கிறது.
கேள்வி : வீடு முற்றுகை என்பது என்ன வகையான அரசியல் என்று நினைக்கிறீர்கள்?
பதில் : சீமான் பெரியார் சொன்னதாக அந்த கருத்து சொல்கிறார். அதை மறுத்து எல்லாருமே பேசுகிறோம் அதுக்கு ஆவணங்கள் இருக்கிறது. அவர் சொல்வது பொய் என்று வெளிவந்து விட்டது. அதற்குப் பிறகு அவர் வருத்தம் தெரிவித்து இருக்க வேண்டும். பின்வாங்கி இருக்க வேண்டும். ஆனால் அதை எதுவும் செய்யவில்லை திரும்பத் திரும்ப அதைப் பேசிக் கொண்டே இருக்கிறார். பிறகு கட்சிக்குள் இருக்கக்கூடிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அவர்கள் அறிக்கை வெளியிடுகிறார். இதை சீமானுடைய தனிப்பட்ட கருத்து என்றும், அது கட்சியினுடைய கருத்து அல்ல என்றும் பேசுகிறார். கட்சியினுடைய எந்த மாவட்ட செயலாளரும் பெரிய அளவுக்கு வந்து இதை ஆதரித்து பேச தயாராக இல்லை. சில மாவட்ட தலைவர்கள் பொறுப்பில் இருந்து வெளியேறுகிறார்கள். கட்சிக்குள்ளாகவும் இதற்கான ஆதரவு தளம் என்பது பெரிய அளவுக்கு இல்லை. முரண்பட்ட நிலைமை தான் இருக்கிறது. ஆகவே இது சீமான் என்ற தனிப்பட்ட நபர் பேசியதற்கு அவர் தான் பொறுப்பு.
கேள்வி : அதற்கான கேள்வியை நீங்கள் எழுப்பலாம். ஆனால் வீடு முற்றுகை என்பது இன்னொரு பதட்டத்தை உருவாக்குகிற சூழல் தானே?
பதில் : சீமான் இருகரம் விரித்து விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அவரை சொன்னார். அவர் சொல்வதற்கு மூன்று நாளைக்கு முன்பே நான் விவாதத்திற்கு அழைத்து விட்டேன் அதற்கு இதுவரை பதில் சொல்லவில்லை. நாட்டுடைமை ஆக்குங்கள்/ பதில் சொல்கிறோம் என்கிறார். ஒரு தகவல் உண்மையா, பொய்யா என்று தெரிந்து கொள்வதற்கும், நாட்டுடைமை ஆக்குவதற்கும் என்ன தொடர்பு?
பெரியாருடைய கருத்துக்களை சீமானும் பிரிண்டிங் பண்ணலாம். அண்ணாமலையும் பிரிண்டிங் பண்ணலாம். திராவிட கழகமும் பண்ணலாம். மே 17 இயக்கமும் பண்ணலாம். நாட்டுடைமை ஆக்கப்படுவதன் அர்த்தம் இதுதான். பெரியாரின் கருத்துக்கள் அச்சிடப்படாமல் எதுவும் இல்லையே, அச்சிடப்பட்டு தானே இருக்கிறது, சென்று படிக்க வேண்டியது தானே. இது இவருடைய அறிவிலித்தனம், தற்குறித்தனம். நாட்டுடைமை ஆக்கினால் தான் ஆதாரம் தருவதாக சொல்வதற்கு என்ன அர்த்தம்? விடுதலை, குடியரசு தாள்களை எல்லாம் அப்படியே படியெடுத்து தந்தை பெரியார் திராவிட கழகம் புத்தகம் வெளியிட்டு இருக்கிறது. 35 பகுதியாக வெளியே இருக்கிறது. அதில் என்ன இருக்கிறது என்று எடுத்துக் கொடுத்து பேசட்டும். ஆக, வாயைத் திறந்தால் இந்த திருகுணித்தனம் பண்ணுவது, பொய் பேசுவது மட்டுமே செய்கிறார்.
பெரியாரை பிஜேபி, ஆர்எஸ்எஸ் இழிவுபடுத்தும் பொழுது நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சீமானையும் நேரடியாக எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அந்த இடத்தில்தான் நாங்கள் பெரியாரின் உணர்வாளர் கூட்டமைப்பாக எல்லா இயக்கங்களும் இந்த போராட்டத்துக்கு வருகிறார்கள்.
பெரியாரிய மேடைகளை பயன்படுத்தி தான் தமிழ்நாடு முழுவதும் அவர் சென்றார். அவர் ஈழ பிரச்சனைக்காக அடையாளப்படுத்தப்பட்டது எப்போதென்றால், 2008-ல் ராமேஸ்வரத்தில் அன்றைக்கு திரைப்பட இயக்குனர்கள் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் தான். அந்த கூட்டம் ராமேஸ்வரத்தில் நடந்தது. அந்த கூட்டம் எப்படி உலகத்துக்கு தெரிந்தது? சன் டிவி ஒளிபரப்பியது. வேறு எந்த தொலைக்காட்சியும் அப்போது கிடையாது.
கேள்வி : சீமானும் அமீரும் இரண்டு பேரும் தானே சிறைக்கு சென்றார்கள்?
பதில் : அதில் அமீர் தான் முதல் குற்றவாளி. சீமானுடைய பேச்சு இப்படித்தான் வெளியே வந்தது. உண்மையாக சொல்லப்போனால் சீமான் இன்றைக்கு உலகம் முழுவதும் தெரிகிறார் என்றால், அன்றைக்கு திமுகவினுடைய ஆதரவாக இருக்கக்கூடியது சன் டிவி தான் காரணம். இல்லையென்றால் சீமானை யாருக்கும் தெரிந்திருக்காது. தமிழ்நாடு முழுவதும் சீமானை கொண்டு போய் மேடை ஏற்றியவர்கள் பெரியாரிய தோழர்கள். அன்று அந்த மேடையை பயன்படுத்தி மேலே ஏறி விட்டு, இப்போது பெரியாரை இழிவுபடுத்தும் பொழுது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. ஆக, இப்படியான துரோக அரசியலை நேருக்கு நேராக எதிர்கொள்ள வேண்டும். சீமான் விவாதத்திற்கு வர வேண்டும் என்பது ஒன்று. அவர் விவாதத்திற்கு தயாராக இல்லை. சீமான் மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. சீமானை கண்டு திமுக மாவட்ட செயலாளர்களோ அல்லது கட்சியோ போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். அதற்கும் அவர்கள் தயாராக இல்லை. இப்போது இது எதுவுமே நடக்காத இடத்தில்தான் நாங்கள் இந்த போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது.
கேள்வி : பொதுச்செயலாளரே அறிக்கை விடுத்தாரே?
பதில் : இந்த அறிக்கையை வைத்து என்ன செய்வது? அவர் சொன்ன அவதூறுக்கு வெறும் அறிக்கையா பதில்? பொய் சொல்கிறார் என்பது அம்பலமாகி இருக்கிறது, எதிர்த்து நிற்க வேண்டாமா? திமுகவினர் பெரியார் பெயரை ஊர் முழுக்க சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். போராட வேண்டாமா?
கேள்வி : வேறு என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?
பதில் : எதிர்ப்பு தெரிவியுங்கள், மிகப்பெரிய போராட்டம் மக்கள் திரள் போராட்டத்தை நடத்தவேண்டும். அப்போதுதானே மக்களுக்கு புரியும், கைது செய்யவில்லையே, 70 வழக்கு பதிவாகி இருப்பதாக சொல்கிறார்கள், அவதூறு சொல்லி இருக்கிறார், பொய் சொல்லி இருக்கிறார், பொய்யின் அடிப்படையில் இந்த பிரச்சனையை பேசி இருக்கிறார், இழிவுபடுத்தி இருக்கிறார், அப்போது இதற்கு என்ன செய்திருக்க வேண்டும்? கைதாவது செய்து இருக்கவேண்டாமா?.
எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்கள். எல்லா கூட்டங்களிலும் திமுக மேடையில் பெரியார் சிலை இருக்கும். இதனால் பெரியார் சிலையின் வியாபாரம் அதிகமானதே தவிர, இதுபோன்று ஒருவன் பேசி இருக்கிறானே, அவனை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்றோ எதிர்த்து போராட்டம் செய்யவேண்டும் என்றோ ஏன் தோன்றவில்லை? திமுக-வில் இருப்பவர்கள் எல்லாம் பெரியார் பெயரை சொல்லி தானே சம்பாதிக்கிறார்கள். பெரியார் போட்ட பிச்சை தானே அது. எத்தனை நாள் அவர்கள் பேசி இருக்கிறார்கள்? திமுக-வில் இருக்கும் அமைச்சர்களே, யார் போட்ட பிச்சை அது, பெரியார் போட்ட பிச்சை தானே? அதில் தானே எல்லோரும் சம்பாதித்து அமைச்சராக இருந்திருக்கிறீர்கள், பெரிய பெரிய நிறுவனங்கள் நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.
கேள்வி : இதை பெரியார் ஏற்றுக் கொள்வாரா?
பதில் : பெரியார் ஏற்றுக்கொள்வாரா இல்லையா என தெரியாது. அவர்கள் சொல்லக்கூடிய மொழியில் அவர்களுக்கு பதில் சொல்கிறேன். வேறு என்ன, அதை வைத்து தானே வந்திருக்கிறீர்கள். எல்லா இடத்திலும் வெறுமனே பெரியார் படத்தை வைத்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. அந்த குற்றச்சாட்டை பகிரங்கமா வைக்கிறேன். ஏன் திமுகவை ஆதரிக்கக் கூடியவர்களோ எல்லா இடத்திலும் ஆதரித்து நின்று இருக்கக்கூடியவர்களோ ஏன் போராட்ட களத்திற்கு வரவில்லை? ஒரு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை ஏன் திரட்டவில்லை. பெரிய அளவில் திரட்டி ஏன் போராட்டம் சேய்யவில்லை? லட்சக்கணக்கான நபர்களை வைத்திருக்கிறீர்கள், இல்லையா? பெருந்திரளாக திரட்டி எல்லா ஊர்களிலும் சனநாயக வழியில் போராட்டம் செய்யுங்கள், என்ன குறை வந்துவிடப் போகிறது? எல்லா இடங்களிலும் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்கள் பொதுக்கூட்டத்தை போட்டு சொல்லுங்கள். அதை பொய் என சொல்லுங்கள். அமைதியாக குத்துக்கல் மாதிரி உட்கார்ந்து இருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் செலவு செய்கிறீர்கள். தேர்தல் செலவு செய்ய எவ்வளவு காசு வைத்திருக்கிறீர்கள். பெரியார் பெயரை சொல்லி விட்டு இவ்வளவு தூரம் பதவியை அனுபவித்து விட்டு ஒருத்தர் பெரியாரை கொச்சைப்படுத்தி பொய் தகவலை சொல்லி இழிவுபடுத்துகிறான் என்றால், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
கேள்வி : அதிமுக இது குறித்து பேசியதா?
பதில் : இன்னும் அதிமுக பேசவே இல்லையே. ஒரு அறிக்கை கூட விடவில்லை. திராவிடன் என்றால் திருடன் என சொல்கிறார்கள், ஈ என சிரித்து விட்டு போகிறார் எடப்பாடி, என்ன செய்ய? இந்த இரண்டு கட்சி தான் திராவிடத்துக்கு பொறுப்பென்று சொல்லி, திராவிட எதிர்ப்பு பேசுகிறார்களே, அவங்களைத்தான் நான் கேட்கிறேன். இவர்களெல்லாம் திராவிடத்திற்கு பொறுப்பென்றால், பெரியாருக்கு எதிராக பேசிய பொழுது வந்து நின்றிருக்க வேண்டும். வீதிக்கு வரவில்லை அவர்களுக்கு அதை பற்றி அக்கறை இல்லை.
கேள்வி: அவர்களுக்கு எதிர்ப்பாக பெரியார் எங்களுக்கு வழிகாட்டி என விஜய் வந்தாரே, அவரும் பேசவில்லையே?
பதில் : பேசவில்லை, என்ன செய்வது?
பெரியார் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய சீமான் குறித்தும், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு முன்னெடுத்த சீமான் வீட்டு முற்றுகை குறித்தும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் South beat சேனலுக்கு வழங்கிய நேர்காணல் குறித்தான இணைப்பு கீழே