
கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிப்படும் தமிழர்களின் தொன்மை பற்றியும், அதன் அறிக்கையை மறுத்து வரலாறை மறைக்கும் பாஜக அரசின் தமிழின விரோதம் பற்றியும், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக கட்சியை அடகு வைப்பது குறித்தும், தமிழர் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் சேனலில் ஜூன் 10, 2025 அன்று அளித்த பேட்டியின் தொகுப்பு.
வணக்கம் தோழர்.
கேள்வி: இன்றைக்கு தொடர்ச்சியாக தமிழக அரசு கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட சொல்கிறார்கள். ஆனால் தொல்பொருள் ஆய்வு மையம் (Archaeological Survey Centre – ASI) தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத்திடம் மீண்டும் திருத்தி எழுதுங்கள் என்கிறார்கள். பி.எஸ். ராமன் என்பவர் கடந்த ஆண்டுகளில் கீழடி அகழ்வாராய்ச்சியில் பார்வையிட்டவர். மேலும் அவர் ஓய்வு பெற்றவரும் கூட. தற்போது அவரை ஒன்றிய அரசு நியமித்து கீழடி குறித்தான அறிக்கை கொடுங்கள் என்கிறார்களே, என்ன நடக்கிறது?
பதில்: ஆரிய நாகரிகத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு இந்தியாவை தான் உருவாக்க நினைக்கிறார்கள். இதுதான் கீழடிக்கான பாரதிய ஜனதா கட்சிவின் அரசியலாக இருக்கிறது. இந்த மண் என்பது ஆரிய நாகரிகத்தினுடைய மண், ஆரியர்கள் தான் பூர்வகுடிகள், அதிலிருந்து வந்த வேத நாகரிகம் தான் இந்தியாவினுடைய நாகரிகம் என்பவை தான் அவர்களுடைய கருதுகோள். அவர்களின் கருத்தும் அதுதான். அந்த கருத்துக்கு ஆதாரங்களை இதுவரைக்கும் எந்த வரலாற்று ஆசிரியரும் இந்தியாவிற்குள்ளும், இந்தியாவிற்கு வெளியில் கூட யாராலும் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் அதற்கான ஆதாரங்களே கிடையாது.
நமக்கு இங்கே கிடைத்த தொன்மையான நாகரிகம் என்பது சிந்து சமவெளி நாகரிகம் தான். சிந்து சமவெளி நாகரிகம் என்பது, ஆரிய நாகரிகம் அல்ல, அதுவும் நம்முடைய நாகரிகம் தான். அங்கு வாழ்ந்தவர்கள் இந்த மண்ணினுடைய பூர்வீக மக்கள். அவர்கள் ஆரியர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது. அந்த பூர்வகுடிகள் எப்படி எல்லாம் இருந்தார்கள் என்பது குறித்து அடுத்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மொழி என்ன? மொழியை எப்படி புரிந்து கொள்வது? அதற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தெல்லாம் நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் எந்த வகையில் பார்த்தாலும் சிந்துவெளி நாகரிகம் என்பது ஆரியர்களினுடைய நாகரிகமோ, இந்து நாகரிகமோ, வேத நாகரிகமோ அல்ல. அதற்கும் வேதத்துக்கும் தொடர்பு கிடையாது, அதற்கும் இந்து மதத்துக்கும் தொடர்பு கிடையாது, இந்து கடவுளுக்கும் அந்த நாகரிகத்திற்கும் தொடர்பு கிடையாது, இந்து மத வழிபாடும் அங்கு கிடையாது, சமஸ்கிருதமும் அங்கு கிடையாது.

கேள்வி: அங்கு(சிந்துவெளி நாகரிகம்) கிடைக்கப்பட்ட அந்த மாடுகள், ஏறுதழுவுதல் அச்சுகள், முத்திரைகள் போன்ற காட்சிகள் எல்லாம் இருக்கிறதே தவிர, குதிரைக்கான அடையாளமும் இல்லை, இரும்புக்கான அடையாளம் இல்லை, அப்போது அது நம்மளுடைய தென்னிந்திய அல்லது திராவிட நாகரிகம் அல்லது தமிழர் நாகரிகமாகத் தானே இருக்கும்?
பதில்: ஆமாம், அதுதான். இந்த பகுதியிலிருந்த பூர்வக்குடி மக்களை திராவிட நாகரிகம் என்று சொல்லுகிறார்கள். அந்த திராவிட நாகரிகம் அல்லது தமிழர்களினுடைய அந்த வடிவங்கள் சமஸ்கிருதம் கிடையாது என்பதை நிரூபணம் ஆக்கிவிட்டது. அதாவது அந்த வாழ்க்கை, ஆரிய குடும்பத்தை சார்ந்தவைகள் அல்ல, இதற்கும் எச். ராஜா குடும்பத்துக்கும் சம்பந்தமே கிடையாது, இதற்கும் மோடி குடும்பத்துக்கும் சம்பந்தம் கிடையாது, இதற்கும் ஆர்எஸ்எஸ்க்கும் தொடர்பு கிடையாது என வெளிப்படையாக சொல்லிவிட்டார்கள். இதில் என்னவெனில், இந்த நாகரிகத்தையொட்டி தமிழ்நாட்டிலும் இதற்கான இணையான நிரந்தரமான வாழ்விடங்கள் இருக்கின்றன, நாகரிகங்கள் இருக்கின்றன.
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான காலகட்டத்திற்குள்ளாக தமிழ்நாட்டிலும் இதற்கான நாகரிக வளர்ச்சிகள் இருந்திருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தினுடைய சிறப்பு நகர நாகரிகம். ஏனெனில் காடுகளிலிருந்து சமவெளிக்கு வந்து அதற்கு பிறகு கட்டிடம் கட்டி வாழ்கின்ற என்கிற இடம் நகர்வது ஒரு வளர்ச்சி அடைந்த நிலை. அந்த வளர்ச்சி அடைந்த நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதுதான், நம் கீழடியில் நிரூபணமாகக்கூடிய விடயம்.இதை பாஜக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களுக்கு அடிப்படையான விடயம் என்னவெனில், இந்த வேதத்திற்கான, வேத கடவுள்களுக்கான, வேத சடங்குகளுக்கான அடித்தளம் அதில் கிடையாது. உதாரணத்திற்கு அயோத்தியை எடுத்துக்கொள்வோம். அயோத்தியில் இராமர் பிறந்தார் என ஏன் கொண்டு வர வேண்டும்? இராமர் இங்கு பிறந்தார் என்று ஒரிடத்தை காண்பிக்க வேண்டிய தேவை ஏன் வருதுகிறது? உலகத்தில் இருக்கக்கூடிய பிற மதங்களை எடுத்து கொள்வோம். எல்லா மதங்களுக்கும் பூர்வீக இடமோ அதில் சொல்லப்பட்ட கடவுள்களாக அறியப்பட்டவர்களுக்கான ஒரு பிறப்பிடமோ இருக்கிறது. அது பௌத்தத்தை எடுத்தாலும் சரி, கிறிஸ்துவத்தை எடுத்தாலும் சரி, இஸ்லாத்தை எடுத்தாலும் சரி, இது எல்லாற்றுக்குமே ஒரு இடம், அதற்கான ஒரு பிறப்பிடம், அதற்கான அடையாளங்கள் என்று இருக்கிறது. அப்படி இவர்கள் சொல்லக்கூடிய வேத நாகரிகத்துக்கு அல்லது வேத மதத்திற்கான இடம் எங்கே இருக்கிறது? என கேள்வி எழுப்பினால் காற்றில் இருக்கிறது என்கிறார்கள். இதெல்லாமே புராணங்கள் (வாய்மொழி கதை).
மேற்குலகில் புராணங்கள் தனியாக இருக்கும். கடவுள் நம்பிக்கை சார்ந்த விடயங்கள் தனியானதாக இருக்கும். இங்கு இது இரண்டையும் குழப்பி விட்டார்கள் இது தொல்லியலா? வாழ்ந்ததா? புராணமா? என ஒன்றும் தெரியாது. அதாவது இராமர் பிறந்தார் எனில் அந்த ஒரு இடத்தை காண்பித்தால், இராவணனுக்கு பத்து தலை இருக்கிறது நிரூபிக்க வேண்டும் இல்லையா, இராவணனுக்கு பத்து தலை எப்படி இருக்கும்? அப்போது பத்து கழுத்து இருக்குமா? இராமன் இங்கு பிறந்தார் என்ற இடத்தை காண்பித்ததைப் போல பத்து தலை இராவணனை காண்பிக்க வேண்டும். இல்லையெனில் அவரின் எலும்பு கூடாவது காண்பிக்க வேண்டுமல்லவா? ஆனால் அது கதை அல்லவா, அதனால் அவன் அதற்குள் வரமாட்டான். நாம் கேட்பது இயேசு பிறந்ததை போல, நபிகள் நாயகம் இருந்ததை போல, இராமர் இந்த இடத்தில் இந்த வீட்டில் பிறந்தார் என்பதை சொல்ல வேண்டும் என்பது தான்.
சரஸ்வதி நாகரிகம் இருந்தது, சரஸ்வதி ஆறு ஓடியது என ஆரம்பித்து அவர்கள்(ஆரியர்கள்) உருவாக்கக்கூடிய கதைகளுக்கு எதிர்மறையான அது பொய் என்று நிரூபிப்பதற்கு இன்னொரு நாகரிகம் இருக்கிறது. நீங்கள் சொன்னதெல்லாம் பொய், இங்கே இருந்த நாகரிகம் வேறு என சொல்வதற்கான சாட்சிதான் தமிழர் நாகரிகம். அந்த தமிழர் நாகரிகம் இருப்பதை மறுக்கும் போதுதான் அவனுடையது நிரூபணமாகும் என பாஜக, ஆர்.எஸ்.எஸ் காரன் நம்புகிறான். ஆனால் கீழடி என்பது தொடர்ச்சியாக பல்வேறு ஆச்சரியங்களை நமக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறது. தமிழர் நாகரிகம் எவ்வளவு தொன்மையானது! அதாவது தமிழ் மொழியினுடைய தொன்மையை எந்த புள்ளியில் இருந்து நான் பார்க்கிறேன் எனில், இந்த மண் என்னுடைய மண், எங்களுடைய மண், எங்கள் தமிழ் மண். இந்த மொழி இந்த மண்ணில் இத்தனை ஆயிரம் ஆண்டு காலமாக வளர்ந்து வந்துள்ளது. ஆக இந்த இடத்தினுடைய முழு உரிமையும் எங்களுடைய மக்களுக்கானது.
கேள்வி: தமிழர்கள் பழம்பெருமை என சொல்வது உங்களின் நோக்கமா?

பதில்: பழம்பெருமையினுடைய அடிப்படை என்னவெனில், இது உங்களுடைய இடம். இந்த இடத்தில் காலங்காலமாக வாழ்ந்துள்ளீர்கள். உங்களுடைய வரலாற்று ரீதியான, உங்களுடைய இறையாண்மையை நிரூபிக்கின்ற இடம்தான். அந்த வரலாற்று ரீதியான இறையாண்மை ஆரியர்களுக்கு கிடையாது. அதனால்தான் பதறுகிறான். அவனுக்கு (ஆரியர்களுக்கு) வரலாற்று ரீதியான இறையாண்மை கிடையாது. நமக்கு(தமிழர்களுக்கு) வரலாற்று ரீதியான இறையாண்மை இருக்கிறது, பண்பாட்டு ரீதியான இறையாண்மை இருக்கிறது, பொருளாதார ரீதியான இறையாண்மை இருக்கிறது. கீழடியில் உங்களுடைய சடங்குகள் சம்பந்தமான பொருட்கள் கிடைக்கிறது என்றால், ஒரு பண்பாட்டினுடைய தொடர்ச்சி அங்கே இருக்கிறது என அர்த்தம். பண்பாட்டு ரீதியாக நமக்கு ஏறுதழுவல் என்கின்ற பண்பாடு நம்மிடத்தில் இருக்கிறது. அது ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி. இந்த பண்பாடு நமது இறையாண்மையை உறுதி செய்கிறது.
இந்தியாவின் இறையாண்மை என பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படியல்ல, மக்களுக்கு தான் இறையாண்மை இருக்கிறது. சமூகத்துக்கு தான் இறையாண்மை இருக்கிறது. அந்த இறையாண்மை எதிலிருந்து வருகிறது எனில், உன் வரலாறிலிருந்து, உன் பண்பாட்டிலிருந்து, உன் மொழியிலிருந்து, உன்னுடைய பொருளாதாரத்திலிருந்து வருகிறது.
தமிழர்கள் இத்தனை ஆண்டுகாலம் இந்த கடலில்தான் மீன் பிடித்துள்ளோம் என்ற பொருளாதார அமைப்பு காலம் காலமாக இருந்திருக்கிறது. இங்கே இரும்பை உருக்கி இருக்கிறான், பொருளை செய்திருக்கிறான், படகை ஓட்டி இருக்கிறான், வேட்டையாடி இருக்கிறான். அப்போது இதற்கான தொழில்நுட்பங்களும் இதனால் கிடைத்த பொருளாதார வளர்ச்சியும் எனக்கு ஒரு இறையாண்மை கொடுத்துள்ளது. தற்போது பண்பாட்டு, வரலாற்று, பொருளாதார ரீதியான இறையாண்மை நமக்கு கீழடியில் கிடைக்கிறது.
இந்த இறையாண்மை என்பது நீ(பாஜக) சொல்லக்கூடிய இந்த இந்து, வேதம், இந்தியா என்பதை எல்லாம் கடந்து, தமிழர்கள் மூத்த நாகரிகத்தினர் என உலகத்திற்கு சொன்னவர்கள். அந்த இடத்துக்கு நாம் வந்து நிற்கின்றோம். அவ்வளவு பெரிய தொன்மையை கொண்டவர்கள். நாம் புராணத்திலிருந்து எடுத்து பேசவில்லை. நாம் சங்க இலக்கியத்தில் இருப்பதனால் மட்டுமே பேசவில்லை. இத்தனை காலம் தமிழர்கள் அறிவியல் பூர்வமாகதான் அணுகினோம். இப்போதும் அறிவியல் ரீதியாக நிரூபணமாகியுள்ளது.

இங்கே ’ஆதிச்சநல்லூரில்’ தொல்லியல் ஆய்வை 15 ஆண்டாக பிஜேபி நிறுத்தி வைத்தது. தொல்லியல் குறித்து ஐயா தொ.ப உடன் 2010-ல் போன பொழுது, இது ’புதைக்கின்ற’ இடம். அப்படியெனில் ’வாழ்விடம்’ ஒன்று இருக்கும். அதை தேட வேண்டும், தேடினால் கிடைக்கும் என்றார். இன்றைக்கு வைகை கரையோரம் ’கீழடி’ (மனிதர் வாழ்ந்த இடம்) கிடைத்துள்ளது. இன்னும் தாமிரபரணியை அகழாய்வு செய்தால் இதே போன்ற ஆச்சரியங்கள் நமக்கு கிடைக்கும். காவிரி, பாலாறு இருக்கிறது. இதையெல்லாம் அகழாய்வு செய்வதற்கு எந்த நிதி உதவியும் இந்தியா செய்யாது. இவர்களிடம் சிக்கி சீரழிந்து கொண்டு இருக்கிறோம். இந்த தொல்லியல் உண்மையை அதுவும் இவ்வளவு பெரிய பழங்கால நாகரிகம் இருந்தது என்பது இந்தியாவுக்கு பெருமை தானே, நாம் இந்தியர்கள் இல்லையா? அப்போது இந்தியா என்பதில் தமிழன் இருக்கிறானா? இல்லையா? என்பதுதான் கேள்வி. ஆக தமிழனுடைய தொன்மை இந்தியாவுக்கு பெருமை இல்லை, இவன் சொல்லக்கூடிய புராண பெருமைதான் இந்தியாவிற்கு பெருமை என்றால் தமிழர்கள் அதற்குள் இல்லை என்பதைதான் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறான்.
கேள்வி: பி. எஸ். ராமன், 2017-ல் கீழடியில் ஆய்வு செய்யும் போது இதற்கு மேல் ஆய்வு செய்வதற்கு கீழடியில் எதுவுமே இல்லை என ஒரு அறிக்கை கொடுத்து செல்கிறார். மேலும் பதவி விலகியவரை திரும்ப கூட்டி வந்து, அறிக்கை கொடுக்க சொல்வது என்ன வகையான அரசியல்? எப்படி புரிந்து கொள்வது?
பதில்: இது தமிழர் துரோகம் தான். தமிழனுக்கு செய்யக்கூடிய துரோகத்தை பிஜேபி செய்கிறது. அவர் ஆய்வு செய்ய எதுவும் இல்லை என சொன்னார். ஆனால் அதற்குப் பிறகு நடந்த ஆய்வுகளில் கிடைத்ததெல்லாம் என்ன கணக்கில் வைப்பது? அதாவது இவர்கள்(பிஜேபி) சொல்லுவதற்கு எழுதி தரக்கூடிய நீதிபதிகளை பிடிப்பதைப் போல, அமலாக்கத்துறை, சிபிஐ போன்று தொல்லியல் துறையிலும் ஒரு ஆளை (பி.எஸ். ராமன்) வைத்துள்ளனர்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் மிக தெளிவாக மூன்று காலகட்டமாக பிரித்து தருகிறார். கி.மு எட்டாம் நூற்றாண்டிலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வரைக்கும் ஒரு காலகட்டத்தை சொல்கிறார். ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு ஒன்றாம் நூற்றாண்டு. அந்த அடிப்படையில் பேச வேண்டும். அவரிடம் அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் எனக் கேட்டால் அதற்கான காலத்தை கொடுக்க வேண்டும். அதற்குள் இடமாற்றம் செய்து புதிதாக வேறு ஒருவரை நியமித்தது பாஜக அரசு.

இதையெல்லாம் கட்சிகள் கடந்த ஒரு விடயமாக பாப்போம். கீழடி குறித்து திமுக பேசுகிறது என்றால் வரவேற்கிறோம். 2017- 2018 அதிமுக ஆட்சி காலத்தில் கீழடியை இந்து நாகரிகம் என்று அறிவிப்பதற்காக அன்றைக்கு பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் கூட்டிட்டு வந்தார்கள். அன்றைக்கு ’மே 17 இயக்கம்’ மறியல் செய்து அம்பலப்படுத்தி கைதானோம். இதை நாங்கள் செய்தோம். இது கட்சி கடந்து தமிழர் நாகரிகத்திற்காக நாம் நடத்துகின்ற போராட்டம்தான். அந்த அடிப்படையில் மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன் அவர்கள் இதை தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருக்கிறார். மேலும் ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் இதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் பல்வேறு அறிஞர்கள் இது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இது கட்சிக்கு அப்பாற்பட்டு அறிவியல் பூர்வமான வரலாற்றை நாம் அப்படியே உலகத்திற்கு கொண்டு போய் சேர்கிறோம். இதற்கு தடையாக இந்திய அரசு இருக்கிறது. இதை விட மிகப்பெரிய துரோகத்தை தமிழர்களுக்கு செய்துவிட முடியாது.
கேள்வி: ஏன் இந்திய அரசு, தமிழர்களையும் தங்கள் நாட்டின் பெருமைமிக்க குடிமக்கள் தான் என உணர மறுப்பது ஏன்?
பதில்: எந்த காலத்திலும் இவர்கள் தமிழர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் நாட்டை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். இது ஆர்எஸ்எஸ், இந்துத்துவ அமைப்புகளுக்கு தமிழர்கள் எதிரிகள். இதுதான் அவர்களுடைய வரையறை என்பதை வெளிப்படையாவும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். 2016-ல் காவிரி உரிமையை கர்நாடகம் மறுத்த பொழுது நாம் போராடினோம். அன்றைக்கு கர்நாடகத்தில் தமிழர்களை ஆர்எஸ்எஸ் தான் அடித்தது. ஆர்.எஸ்.எஸ்காரன் ஆட்களை வைத்து அடிப்பவனுக்கு எல்லாம் சோறாக்கி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்படிப்பட்ட தமிழர் வெறுப்பு அவர்களுக்கு என்றைக்குமே இருக்கிறது.
இன்றைக்கு ’தமிழ்நாட்டுக்குள் யாரெல்லாம் ஆர்எஸ்எஸ்-ல் இருக்கிறானோ, அவன்தான் தமிழ் இனத்தினுடைய மிகப்பெரிய துரோகிகள். அவன்தான் தமிழினத்தை குழிதோண்டி புதைப்பதற்காக இருக்கக்கூடிய கோடாரிகள். கருங்காளிகளே அவர்கள்தான்’.
ஆர்எஸ்எஸ் ஏன் கீழடியை கொண்டாடவில்லை. ஆர்எஸ்எஸ் காரன் கொண்டாடி உள்ளானா? மோகன் பகவத் இதைப் பற்றி பேசுவாரா? இது ’தமிழர் நாகரிகம்’ என வாயில் வருமா? தமிழர்கள்தான் முன்னோடி என்று ஆதாரத்துடன் வந்தும் இதுவரை ஆர்.எஸ்.எஸ். பேசவில்லையே.
”தமிழர் நாகரிகம்” இந்தியாவினுடைய வரலாறை மாற்றி எழுதப்படக்கூடிய இடத்துக்கு வந்து நிற்கிறோம். ’சிந்துசமவெளி நாகரிகம்’ எங்கு இருக்கிறது? ’ஹரப்பா’ பாகிஸ்தானில்தான் இருக்கிறது. பாகிஸ்தானை கொண்டாட முடியாது. ஒருவேளை பாகிஸ்தான் நம்மிடம் இருந்தால், இன்றைக்கு அங்கே ஒரு கும்பாபிசேகம் நடத்தியிருப்பார்கள். இந்தியாவிற்குள் தோண்டிக் கொண்டு இருக்கிறார்கள். இங்கே சரஸ்வதி ஆறு கிடைக்கிறதா, அங்கே அது கிடைக்கிறதா என தோண்டுகிறார்கள். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் கிடைத்திருக்கக்கூடிய இந்த(கீழடி) பெரிய கண்டுபிடிப்பு என்பது, வட இந்தியாவில் வரக்கூடிய பல பத்திரிகைகளில் ’கீழடியா, சரஸ்வதியா’ என நடுநிலையாக எழுதுவதைப் போன்ற பிரிண்ட்(print) பத்திரிக்கையில் எல்லாம் கட்டுரைகள் வந்தது. அதை படித்தபோது அவ்வளவு விசமமாக இருக்கிறது.
இனி இந்தியாவின் வரலாறு என்பது தமிழர்களிடத்திலிருந்துதான் பேச முடியும் என்கிற இடம் வரும்போது அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதை எப்படி அழிக்கலாம் என்கிற இடத்தில் நிற்கிறார்கள். இன்றைக்கு நம் தமிழர்களுடைய வெறுப்பை தொடர்ச்சியாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் எங்கு எடுத்தாலும் நீங்கள் தமிழர்கள் எங்களுக்கு எதிராக இருக்கறீர்கள், இந்தியாவுக்கு எதிராக இருக்கிறீர்கள் என இப்படிப்பட்ட கருத்துக்கள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது, இங்கே காஷ்மீரிகளுக்கு எதிராக எப்படி செய்தி பரப்பப்பட்டதோ, வடகிழக்கில் இருக்கிறவர்களுக்கு எதிராக இங்கே எப்படி பரப்பப்பட்டதோ, அதே போல தமிழர்களுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இன்றும் கூட ராஜீவ் காந்தி வழக்கு பற்றி ஒரு தொடர் சோனி(Soni Live) தளத்தில் கொண்டு வந்துள்ளனர். இதை எதற்கு திரும்ப கொண்டு வ கிறார்கள் எனில், தமிழர்களுக்கு எதிரான விடயத்தை பரப்பத்தான். அப்படியென்றால், இந்திய அமைதிப்படை (IPKF) பற்றி படம் எடுக்கலாமா? அதில் இந்திய இராணுவம் என்னென்ன கொலை செய்துள்ளது என்பதைப் பற்றி எல்லாம் படம் எடுக்கலாமா? அதைப் பற்றியெல்லாம் படம் எடுத்தால் ஒத்துக்கொள்ளுமா இந்திய அரசு?

தமிழ்நாட்டில் இருந்து வட இந்தியாவில் வேலை பார்க்க கூடியவர்கள் அல்லது வசிக்க கூடிய நண்பர்களைப் பார்க்கும் பொழுது, அவர்களின் அலுவலகங்களில் இதெல்லாம் சாதாரணமாக ’நீங்கள் தமிழர்கள், நீங்கள் எல்லாம் எங்களுக்கு எதிராக இருப்பீர்கள்’ என்று மிக இயல்பாக சொல்கிறார்கள். இதைப் போல தமிழர்களுக்கு எதிரான வெறுப்பை இந்தியா முழுக்க ஆர்எஸ்எஸ் உருவாக்கி கொண்டே இருக்கிறது. ’பாசிஸ்ட்’ என்பவன் வெறுப்பை உருவாக்கிக் கொண்டே இருப்பவன். மோடி அரசு, ஆர்எஸ்எஸ் என்பது இன்னொரு 20 ஆண்டு காலம் இந்தியாவில் இருக்கிறது என்றால், அவர்கள் இந்தியா இல்லாமல் போவதற்கான வேலைகளை செய்து முடிப்பார்கள்.
தமிழர்களுக்கான பண்பாட்டு அரசியல் உரிமைகள், பொருளாதார உரிமைகள், தொல்லியல் உண்மைகளை சொல்வதற்கே நமக்கு அனுமதி இல்லை. தமிழ்நாட்டில் நன்றாக கிரிக்கெட் விளையாடக் கூடியவர்கள் உள்ளனர். ஆனால் அதன் சங்கத்தின் தலைவராக அமித்சா மகன் உள்ளான், அவன் அனுமதித்தால்தான் தமிழர்கள் விளையாட முடியும். அதுபோல கபடி போன்ற பிற விளையாட்டுகளில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒலிம்பிக்கில் விளையாட நினைத்தாலும் இந்திய அரசு சார்பாக சங்கம் இருக்கிறது. அவர்கள் நினைத்தால்தான் போக முடியும் என்கிற சூழல் உள்ளது. இதர சமூகத்திலிருந்து கூட போவார்கள், ஆனால் நம் இளைஞர்களுக்கு வாய்ப்பே கிடையாது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல்கள் சாணியையும் மாட்டு மூத்திரத்தையும் நம்புவார்கள், ஆனால் அறிவியலை நம்ப மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான அரசியலை இந்தியா முழுக்க வளர்த்து கொண்டு வருகிறார்கள். நம் உரிமைக்காக, நாம் சண்டை போட்டால்தான், நமக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்திற்கு பாரதிய ஜனதா கட்சி வரும். தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் பா.ஜ.க கட்சி கொடி நட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அல்லவா, அவர்களிடம் கீழடி குறித்த தமிழர் நாகரிகத்தை ஏன் பாஜக மறுக்கிறது, பதில் சொல் எனக் கேட்க வேண்டும்.
கீழடி ஆராய்ச்சி செய்வதற்கு ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி தானே, அவர் கொடுத்த அறிக்கையில் தெளிவுபடுத்த சொல்லி கேட்கலாம், ஆனால் மாற்றித் தரக் கூறுவது என்ன வகையான அடிப்படை?
கேள்வி: கீழடியில் கிடைத்தப் பொருட்களை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆராய்ந்து அறிக்கை கொடுத்துள்ளன. மேலும் ஐ.நா மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் கூட அறிக்கைகளை கொடுத்துள்ளன. ஆனால் இன்னும் ஆதாரம் கேட்டால், அதன் அர்த்தம் என்ன?

பதில்: பாஜக, ஆர்.எஸ்.எஸ் சரஸ்வதி நாகரிகத்தைக் காப்பாற்ற வேண்டும். அதை காண்பிக்க வேண்டும் என நினைக்கிறது. இதில் சமஸ்கிருத வார்த்தை கிடைத்திருந்தால், அமர்நாத் ராம்கிருஷ்ணனை கொண்டாடி இருப்பார்கள். ஆனால், அதற்கெல்லாம் அவர் ஆசைப்படாமல் இந்த இனத்தினுடைய வரலாறை எடுத்துச் சொல்வதற்கு துணிந்து நிற்கிறார். அதனால் அவர் பணியிட மாற்றம் செய்கிறார்கள். அவர் உண்மையை சொன்னதால் ஒரு ஆராய்ச்சி அறிஞரை அவமானப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இத்தனைக்கும் மத்தியில் அவர் தமிழ் உணர்வு அடிப்படையில் மட்டுமல்ல, தன் தொழில் சார்ந்த நெறிமுறைகளோடு தமிழரின் வரலாறை நின்று பேசுகிறார். இச்சமயத்தில் அவருக்காக பேசுவதும், அதன் மூலமாக கீழடி என்கின்ற உண்மையை தூக்கிப் பிடிப்பதும் நம் எல்லோரின் கடமையாகும்.
கேள்வி: தமிழ்நாட்டில் திமுக எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல அதிமுக முக்கியம் என முன்பு ஒரு பேட்டியில் சொன்னீர்களே, ஆனால் தற்போது அதிமுக தவறான முடிவுகளை எடுக்கிறது. அந்த கட்சி வென்றாலும் தோற்றாலும் பிரச்சனை இருக்கிறது, மேலும் அக்கட்சி இன்னும் கொஞ்ச நாட்களில் இருக்குமா என்கிற கேள்விகுறியே எழுகிறதே?
பதில்: ஆமாம், அடிப்படையில் அதிமுக என்பது கொள்கை கட்சி அல்ல. அது பிரபலமான கட்சி. அதில் தலைவர்கள் இருப்பார்கள். அக்கட்சியின் அரசியல் என்பது வெறும் திமுக எதிர்ப்பு மட்டும்தான். அவர்கள் எந்த கொள்கையும் பேசக்கூடிய ஒரு கட்சி அல்ல, அவர்களுக்குள் சில கொள்கையாளர் இருக்கலாம். இன்றைக்கு திமுக-வை பிடிக்காதவர்கள் அதிமுக-வுக்கு ஓட்டு போடுவார்கள். தற்போது அதையும் பிஜேபி-யிடம் ஒப்படைக்கிறார்கள். இதன்பிறகு அதிமுக எதற்கு தேவை என மக்கள் யோசித்து விட்டார்கள் எனில் அக்கட்சி முடிந்தது. இதை மிக திட்டமிட்டு, அதிமுக கட்சியினுடைய தலைமை செய்கிறது.
கேள்வி: அக்கட்சியினுடைய தலைமை பிஜேபி கீழ் போவதை, எடப்பாடி ஏற்றுக்கொள்கிறாரா?
பதில்: எடப்பாடியார் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் இருக்கிறார். நான்கு வருடமாக எதிர்கட்சி தலைவராக இருக்கிறார். திமுக-வை எதிர்த்து என்ன அரசியலும், என்ன கேள்வியும் முன் வைத்தார்? ஒன்றுமே செய்யவில்லை. உதாரணத்திற்கு மே 17 இயக்கம் கடந்த காலங்களில் திமுக-வை எதிர்த்து போராட்டம் செய்யவில்லை என்று கேட்கிறீர்களே, எங்களிடம் எவ்வளவு போராட்டம் செய்தோம் என ஆவணங்கள் உள்ளது. நாங்கள் செய்த போராட்டதைப் பற்றி எடப்பாடியார் ஏதாவது ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை வந்ததா? வரவில்லை. நியூஸ் ஜே செய்தி சேனல் நடத்துகிறார்கள், மேலும் ஜெயா டி.வி. சேனல் இருக்கிறது. அதில் ஏதாவது செய்தி போட்டு உள்ளார்களா? அப்பறம் என்ன எதிர்கட்சி?

தற்போது திமுக-வை எதிர்த்து மே 17 இயக்கம் செய்த போராட்டங்களோ மற்றும் கேள்விகள் கேட்ட அளவுக்கு கூட, அதிமுக கேட்கவில்லை. சென்ற தேர்தலில் செய்த போராட்டங்களை திமுக-வுடைய சேனல்கள் பயன்படுத்திக் கொண்டனர். திமுகவை சார்ந்தவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். அதிமுக என்ன பயன்படுத்தியது? இங்கு திமுகக்கு எதிராக நடக்கக்கூடிய மாஞ்சோலை போராட்டமாக இருந்தாலும் சரி, பரந்தூர் போராட்டமாக இருந்தாலும் சரி, தற்போது அனகாபுத்தூர் போராட்டமாக இருந்தாலும் சரி, இது எல்லாவற்றிற்கும் என்ன செய்தார்கள்? எங்கயுமே அதிமுக வந்து நிற்கவில்லை. பிஜேபி-யும் வரவில்லை.
2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கை திமுக எப்படி உருவாக்கினார்கள் என்றால், எல்லா போராடுகின்ற அமைப்பிடமிருந்தும் கோரிக்கையை வாங்கி, அதை வைத்து உருவாக்கினார்கள். இதன் மூலம் மக்கள் திமுகவிற்கு ஆதரவும் தெரிவித்தனர். அதுபோல அதிமுக செய்துள்ளதா? இல்லையே.. மே 17 இயக்கம் மக்களுக்காக அனகாபுத்தூரில் சண்டையைப் போடுகிறோம். அத்தனை ஆயிரம் மக்களை வெளியேற்றுகிறார்கள். அங்கே வந்து எதிக்கட்சி பேச வேண்டுமா, இல்லையா?
பாரதிய ஜனதா கட்சி தனக்கு எதிராக இருக்கூடிய அனைவரையும், ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய முக்கியமான நபர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது. ஏன் ஆளுகின்ற முதலமைச்சர்களையே கைது செய்து சிறையில் அடைத்து வைத்ததைப் பார்க்கிறோம். அதிமுக அதற்கு தயாராக இல்லையெனில் அவர்கள் கட்சியைக் காப்பாற்ற முடியாது. திமுக-வில் செந்தில் பாலாஜியோ, காங்கிரஸ் காலத்தில் ஆ. ராசாவோ, கனிமொழியோ சிறைக்கு போகவில்லையா? அப்போது எடப்பாடியும் போக வேண்டியது தானே. இந்தியாவில் எந்த வழக்கிலும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு நடத்தவில்லை. அப்படி நடத்தினாலும் வழக்கே நிற்காது என ஊருக்கே தெரியும். ஒரு வருடமோ அல்லது ஆறு மாதமோ சிறையில் வைப்பான். அதுபோல எடப்பாடியாரும் சிறை சென்றால் அதிமுக கட்சியையாவது காப்பாற்றலாம். பிற மாநில கட்சிகளான சிவசேனா, டிஆர்எஸ், ஜெ.எம்.எம், ஆம் ஆத்மி கட்சியிலிருப்பவர்கள் சிறைக்கு சென்றார்கள். பிஜேபி சிறையை வைத்துதான் மிரட்ட முடியும். மாநில எதிர்கட்சிகள் சிறை செல்ல துணிய வேண்டும்.
கேள்வி: ’அதிமுக’ தற்போது ஒருவழிப் பாதையில் போவது மாதிரி தெரிகிறதா?

பதில்: தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. ஆனால் மக்களிடம் அவநம்பிக்கை வந்துவிட்டால் என்ன செய்வார்கள்? அதிமுக கூட்டணியில் பாஜக இருந்ததால் நான்கு எம்.எல்.ஏ சீட்டு கிடைத்தது. அதுவே அதிமுக போட்ட பிச்சை. இல்லையெனில் ஒரு சீட்டு வென்றிருக்க முடியாது. அவ்வளவு பெரிய கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக எதற்கு பாஜகவை நம்பி நிற்க வேண்டும்? ஏற்கனவே பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் வெற்றி பெற முடியவில்லை. அதனிடமிருந்து பிரிந்தும் 2024-ல் வெற்றி பெறவில்லை. அதிமுகவின் மீதான அக்கறை இருப்பதால் தோழர் திருமாவும் பேசுகிறார். நாங்கள் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ இன்றைக்கு இரண்டு கட்சிகள்(திமுக, அதிமுக) தான் பெரிய கட்சிகளாக இருக்கின்றன. இந்த சமயத்தில் பிஜேபியுடைய அழுத்தத்தை குறைக்கின்ற அளவுக்கு இரண்டு கட்சிகளாக இருந்து தமிழ்நாட்டு பிரச்சனைகளை பேச வேண்டும்.
தமிழ்நாட்டில் அண்ணாமலையை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டு பிரச்சனைக்காக என்றாவது போராட்டம் நடத்தியுள்ளாரா? திமுகவை எதிர்த்து ஏதாவது ஒரு போராட்டம் நடத்தியுள்ளாரா? தலைமை செயலக முற்றுகைக்கு போனபோது கூட போலீஸ் கைது செய்யப் போகிறது என்றதும் ஆட்டோ பிடித்து தப்பியோடிய ஆள்தானே அண்ணாமலை.
எல்லா இடத்திலும் எங்களை(மே 17) கேட்கிறார்கள், என்ன திமுகவுக்கு எதிராக எந்த போராட்டம் செய்யவில்லையா என கேட்கிறார்கள். ஆனால் கேள்வி கேட்பவர்கள் என்ன போராட்டம் செய்தனர் என கேட்டால் பதிலில்லை. திமுக காலத்திலும் வழக்கு வாங்கி இருக்கிறோம். அதிமுக காலத்தில் என் மீது போட்டப்பட்ட சிறப்பு விசாரணை இன்றைக்கு வரைக்கும் திமுக நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. எங்களுக்கு திமுக ஆதரவு கொண்டிருக்கிறதா என்ன? இல்லை. இன்றைக்கும் மே 17 கூட்டத்துக்கு அனுமதி வாங்க சண்டையிட்டு, மல்லு கட்டிக் கொண்டுதான் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, எங்கே திருமுருகன், எங்கே மே 17 காணவில்லை எனக் கேட்பது பற்றி கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். எங்களை எல்லா மீடியாக்களும் நிறுத்தியுள்ளது. எந்த விவாதத்திற்கும் அழைப்பதில்லை. ’தினத்தந்தி’ 11 வருடம், புதிய தலைமுறை 6 வருடம், நியூஸ் 18 & நியூஸ் 7 செய்தி சேனல்களெல்லாம் 5 & 6 ஆண்டுகளாக அழைப்பதில்லை. காரணம் பிஜேபியோட அழுத்தம். நாங்கள் மக்கள் பிரச்சனை பேசுவதற்கு எங்களுக்கான இடமே இல்லையெனில் நாங்கள் எப்படி எங்கே பேச முடியும்!
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சிக்கல்களை, திமுகவை கேள்வி கேட்கக்கூடிய சமூக அமைப்புகள் அப்படியேதான் இயங்கிக் கொண்டு தானிருக்கின்றன. அவர்கள் அதிமுகவையும் கேள்வி கேட்டார்கள். நாங்கள் திமுக அதிமுகவை எதிரிகளாக பார்க்கவில்லை. மக்களிடத்தில் நீங்கள் செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு தேவையான விடயங்களை செய்வதற்கு நாங்கள் அழுத்தம் தருகிறோம். நாங்கள் மக்களின் குரலாய் பேசுறோம். எங்களுக்கு எதிரி யாரெனில் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். அதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்து இல்லை.
கேள்வி: அதிமுக பிஜேபி கூட்டணியிலிருந்து வெளிவந்துவிடும் என உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறதா?
பதில்: ஒரு எதிர்பார்ப்புதான், வந்தால் நல்லது. பிஜேபி தனிமைப்பட வேண்டும். அப்படி நடந்தால் அதிமுகவுக்கு இங்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. 2024 தேர்தலில் மோடிதான் வேட்பாளர், எதிர்கட்சி வேட்பாளர் என யாருமே இல்லை. ஆனால் இரண்டு அணி (இந்திய கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி) வேலை செய்தார்கள். இது இரண்டுக்கும் தான் மிகப்பெரிய கூட்டணியாக இருக்கிறது. பாஜக எதிர் கூட்டணியில் திமுக இரண்டு கோடி ஓட்டுகள் வாங்கியது. பாரதிய ஜனதா கட்சி தனியாக நின்றது. அதிமுக தனியாக நிற்கிறது. பாரதிய ஜனதா கட்சியின பெரிய பலம் மோடி, திரும்பவும் நாங்கள் மோடியை கொண்டு வருகிறோம் எனக் கூறியது. பாஜகவிடம் மிகப்பெரிய பண பலம் இருக்கிறது, அதிகார பலம் இருக்கிறது, தேர்தல் ஆணையமும் கூட வேலை பார்க்கிறது, கூடவே ஈவிஎம் (EVM)-ம் வேலை பார்க்கிறது. பிஜேபிக்கு அவ்வளவு இருந்தும் எல்லா இடங்களிலும் பணம் கொடுத்தும், கிட்டத்தட்ட 45 லட்சம் ஓட்டுதான் வாங்கியது. அதிமுக பணம் பெரிய அளவுக்கு தரவில்லை, ஒரு சில இடங்களில் மட்டும் கொடுத்தார்கள். உங்களுக்கு(அதிமுக) பிரதமர் வேட்பாளர் கிடையாது. பாஜக எதிரணியும் கிடையாது. இப்படி எதுவுமே இல்லாமல் ஒரு கோடி வாங்கியது அதிமுக. அப்போது அந்த ஒரு கோடி ஓட்டு எப்படி வந்தது? நீங்கள்(அதிமுக) பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியே வந்து, எந்த கூட்டணியும் இல்லாமல் நின்று வெற்றி பெற முடிந்தது.
அப்போது அதிமுக தமிழ்நாட்டுடைய முதலமைச்சர் யார் என்ற இடத்தில் நின்று ஒரு வேட்பாளராக இவர்தான் என சொல்ல வேண்டும் அல்லவா! இன்னும் பிஜேபி தான் முடிவு செய்வார்கள் என சொன்னால் என்ன செய்வது? இதை அதிமுகவினுடைய தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ள என்ன ஆனது என ஞாபகம் இருக்கிறதா! அன்றைக்கு 96-ல் ஜெயலலிதா அம்மையாரோடு கூட்டணி எனச் சொல்லும் பொழுது காங்கிரஸ்காரர்கள் சண்டை போட்டார்கள். அன்றைக்கு மூப்பனார் தலைமையில் பெரிய போராட்டம் நடந்தது. நரசிம்மராவை தூக்கிப் போட்டு கொடும்பாவி என கொளுத்தினார்கள். அப்போது ஒரு பெரிய அலை வந்தது. அப்படிப்பட்ட ஒன்று அடிமட்ட கட்சித் தொண்டர் நினைத்தால்தான் செய்ய முடியும். அதிமுக கட்சியை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள், இதை செய்தால் மட்டும்தான் அதிமுக கட்சியை காப்பாற்ற முடியும், அந்த கட்சிக்கு எதிர்காலமும் இருக்கும்.
பாஜகவை பொறுத்தவரைக்கும் இங்கே ஆட்சியை பிடிக்க வேண்டும். இங்கே வந்து இருக்க வேண்டும் என்கிற நோக்கம் அல்ல. ஏனெனில் பாஜகவுக்கு இங்கு தலைவர்களே கிடையாது. திமுக அதிமுகவிலுள்ள மாவட்ட அளவிலான என்ன தலைவர் இருப்பார்களோ, அவர்களைப் போன்ற நபர்கள் தான் பாஜகவில் மாநில அளவில் தலைவராகவே இருப்பார்கள். பாஜகவிற்கு தலைவர்கள் என்று எதுவும் சொல்ல முடியாது, முதலில் கிடையாது. இவர்களை(பாஜக) தமிழ்நாட்டில் ஒரு கோமாளிக் கூட்டமாக பார்க்கிறோம். இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியோடு தனியா நின்றாலும் வெல்ல முடியாது.
இன்றைக்கு அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்து அதிமுக கட்சியை காப்பாற்றனும். அது உங்கள் கையில்தான் இருக்கிறது. அதை செய்வார்களா என தெரியாது. மறுபடியும் மோடி கிட்ட போய் நின்றால் கட்சியும் காப்பாற்ற முடியாது, ஆட்சிக்கும் வர முடியாது. அடுத்த ஐந்து ஆண்டுகள் அதிமுக இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட ஒரு நிலைமைதான் இருக்கிறது. அது தமிழ்நாட்டுக்கு வந்து விடக்கூடாது. அதனால் தமிழ்நாட்டில் இந்த சூழல் மோசமானதாக இருக்கும். எனவே தமிழ் மக்கள் தமிழ்நாட்டு நலன் அடிப்படையில் சிந்திப்போம். நன்றி! வணக்கம்!