அருந்ததி ராய் மீது ஏவப்படும் உபா சட்டம்

அரசு அதிகாரத்துக்கு எதிராக மக்கள் படும் இன்னல்களை களத்திற்கு சென்று ஆய்வு செய்து, தனது கட்டுரையிலும் பேச்சிலும் இந்த உலகிற்கே எடுத்துரைத்துவர் எழுத்தாளர் அருந்ததிராய் அவர்கள். இவர் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு காசுமீர் குறித்து பேசியதற்காக, தற்போது அருந்ததி ராய் மீது ‘சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (உபா)’ கீழ் வழக்குத் தொடர டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளை விமர்சித்து எழுதினாலோ, பேசினாலோ, போராடினாலோ வழக்கு, சிறை, தண்டனை என அவசரகால பிரகடனம் போல பாஜக ஆட்சியில் தொடர்கிறது. இதனைக் கண்டித்து பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முற்போக்கு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

2010 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாளில், சிறீநகரில் ’ஜம்மு காஷ்மீர் குடிமக்கள் சார்ந்த கூட்டமைப்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியர் ஹுசைன், சையத் அலிஷா கிலானி, கவிஞர் வரவர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. இது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவின் இராணுவப்படைகளால் காசுமீர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காசுமீர் மாநில சுதந்திரத்திற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும்‌ மேற்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.

மேலும் டெல்லியில் 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கருத்தரங்கத்திலும், “அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ‘சுதந்திரம் தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் காஷ்மீர் பற்றிய தனது கருத்தை முன்னிறுத்தினார்.    

இது குறித்து வலதுசாரியான சுசில் பண்டிட் அளித்த புகாரில், எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும்  முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை டெல்லி மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இருவர் மீதும் உபா (UAPA) எனும் கருப்புச்சட்டம் பதியப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை அதிகாரிகளும் அருந்ததி ராய் மீது உபா வழக்கு பதியப்பட்டதற்கு “இந்தியா, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி விமர்சிக்கும் நபர்களை மௌனமாக்குகிறது” என்று கண்டனத்தை தெரிவித்ததோடு, அவர் மீதான வழக்குகளை கைவிடுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

முற்போக்கு பெண் முகங்களில் ஒருவரான தோழர் அருந்ததிராய் அவர்கள் எழுத்தாளர் மட்டுமல்ல, சமூக ஆர்வலர், அணு உலை எதிர்ப்பாளர், அரசியல் ஆய்வுக் கட்டுரையாளர் என பல முகங்கள் கொண்டவர். மேலும் மனித உரிமை மீறல்கள், இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல், இந்துத்துவா அரசியல் போன்றவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார் அருந்ததி ராய்.

  • 1989-ஆம் ஆண்டில் ‘இன் விச் ஆனி கிவ்ஸ் தோஸ் ஒன்ஸ்’ (In which Annie gives those ones) என்ற படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார்.  எனினும் 2015 ஆம் ஆண்டு, இந்தியாவில் மாட்டிறைச்சி உண்பதைக் குற்றமாகச் சித்தரித்து இந்துத்துவ மதவெறி அமைப்புகள் வன்முறை நடத்துகின்றனர். குறிப்பாக பட்டியலின மக்கள், கிருத்துவர்கள், இசுலாமியர்கள் அதில் கொல்லப்படுகின்றனர் என்று கூறி தனது தேசிய விருதை திருப்பிக் கொடுத்தார்.
  • 1998-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியபோது, அதை விமர்சித்து ‘கற்பனையின் முடிவு’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
  • 1997-ஆம் ஆண்டு, ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ (சிறிய விஷயங்களின் கடவுள்) என்ற நாவலுக்காக ஆங்கில நாவல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘புக்கர் பரிசை’ வென்றார்.
  • குஜராத் நர்மதா அணையின் உயரத்தை அதிகரிப்பதை எதிர்த்துப் போராடிய பழங்குடி மக்களுக்கு ஆதரவாக அருந்ததி ராய் குரல் கொடுத்தார். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அரசுக்கு ஆதரவான தீர்ப்பை அளித்த நிலையில் ’நாகரீக வன்முறை’ என்று விமர்சனம் செய்தார். இதையடுத்து அருந்திராய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், மன்னிப்பு கேட்க மறுத்து ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் செலுத்தி பின் வெளியே வந்தார்.
  • பிரிட்டிஷ் நூலகம் நடத்தும் PEN பின்டர் பரிசை நடப்பாண்டில் (2024) அருந்ததி ராய் பெற்றுள்ளார். அதில் நடுவர்கள் “அவர் உண்மையான சர்வதேச சிந்தனையாளர், அவரின் சக்தி வாய்ந்த குரல்/எழுத்துக்கள் அமைதியாக கடக்காது” என்றும் தெரிவித்துள்ளனர்.

இவர் சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடந்த காலத்தில், அங்கு சென்று அவர்களுடன் தங்கி என்ன நடக்கிறது? உண்மை நிலவரம் என்ன? என்பதை தனது எழுத்து மூலம் பதிவு செய்தார். அது “தோழர்களுடன் ஒரு பயணம்” (Walking with the Comrades) என்ற புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. இயற்கை வளங்களை சுரண்டும் கார்ப்பரேட் முதலாளிகளின் வணிக நோக்கத்திற்காக அங்குள்ள பழங்குடி மக்களின் மீது அரசு பயங்காரவாதத்தை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுதந்திரத்தை பற்றி விளக்கியுள்ளது.

இப்புத்தகம் 2017 ஆம் ஆண்டுமுதல் மனோன்மணியம் பல்கலைக்கழக எம்.ஏ. ஆங்கில இலக்கியத்தில் மூன்றாம் ஆண்டில் ஒரு பாடமாக இருந்து வருகிறது. இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்-இன் இதர பிரிவான ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் பல்கலைக்கழகமும் அருந்ததி ராயின் புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

அருந்ததிராய் அவர்கள் 2010-ல் காசுமீரில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் அவர்களின் வாழ்க்கைமுறைகளை நேரடியாக உரையாடினார். அப்போது அங்குள்ள காசுமீரிகள் “நாங்கள் இங்கே உள்நாட்டு கைதி போல உணர்கிறோம், எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்” எனக் கூறினர். காசுமீர் சுயநிர்ணய உரிமைக்கான உணர்ச்சிக்குரல் கொடுத்தமைக்காக, அருந்ததி ராய் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ்(UAPA) நடவடிக்கை எடுத்து வருகிறது. இது கருத்துச் சுதந்திரத்திற்கான குரல்வளை நெறிக்கும் செயல்.

மோடி அரசாங்கம் ஜம்மு காசுமீரில் ’சிறப்பு அந்தஸ்தை’ (Article 370) ரத்து செய்தது. அங்குள்ள தலைவர்களை வீட்டு சிறையில் அடைந்தது, உரிமை அமைப்புகளை தடை செய்தது, இணையதள சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முடக்கியது, உள்ளூர் மக்கள் நடமாட தடை போன்று அங்குள்ள மக்கள் மீது பல அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் ஊரடங்கு சட்டம், சோதனை சாவடிகள், அமைதியான போராட்டக்காரர்கள் மீதும் பாதுகாப்பு படையினரால் தாக்குதல்கள் போன்றவற்றை செய்து டெல்லி கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அங்கு அதை மீறி காசுமீர் உரிமை பற்றி யாரேனும் பேசினால் வழக்கு, கைது, சிறை தண்டனை என்று அடக்குமுறையை ஏவுகிறது.

அருந்ததி ராய் அவர்கள் பாஜக அரசின் கொள்கைகளையும், அதன் பல்வேறு செயல்பாடுகளையும் விமர்சித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். அது ’நியூஸ் க்ளிக்’ (News click) இணையதளத்தில் வெளியாகின. இதனை வெளியிட்ட நியூஸ்க்ளிக்கின் இணையதள நிறுவனர் ’பிரபீர் புர்கயாஸ்தாவும்’ உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என்ற காரணத்திற்காக, இவரின் கைது சட்டவிரோதமானது என்று அறிவித்து, விடுதலை செய்ய உத்தரவிட்டது  உச்சநீதிமன்றம். இந்தியாவில் இதுபோன்று கருத்துச் சுதந்திரத்திற்கான குரல்வளை நெறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் மோடி அரசாங்கம் பதவியேற்ற பின் முக்கிய கருத்தியலாளர்களை சிறைக்கு தள்ளுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக UAPA (உபா) வழக்குகள் அதிகளவில் பதியப்பட்டு வருகின்றன. பல சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், தொழிற்சங்க ஊழியர்கள் மீது வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, UAPA-இன் கீழ் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் பலர் இன்னும் சிறையில் உள்ளனர்.

  • கடந்த 2014-ம் ஆண்டு பாலஸ்தீன் குறித்து பேசியதற்காக தோழர். திருமுருகன் காந்தி மீது 2018-ல் காவல்துறை உபா வழக்குப்பதிவு  செய்து கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணையில் நீதிபதி திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட உபா வழக்கு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார்.
  • 2018ஆம் ஆண்டு பீமா கோரேகானில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா, வெரூன் கோன்சல்வஸ் உட்பட 16-க்கும் மேற்பட்டோர் உபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
  • 2020-ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக JNU பல்கலைக்கழகத்தில் நடந்தப் போராட்டத்தில் பங்கேற்ற உமர் காலித் மீது உபா வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் வழக்கில் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மீதும் உபா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

2015-2022 வரையுள்ள ஆண்டுகளில், 10,552 இந்தியர்கள் UAPA இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் 253 பேர் மட்டுமே குற்றவாளிகள். PUCL ஆய்வில் 2015 -2020-ம் ஆண்டுகளுக்கு இடையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 8,371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 235 பேர் மட்டுமே கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களில் 97.2% பேர் குற்றமற்றவர்கள் என்றும், 2.8% பேரின் குற்றங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டு நர்மதா ஆற்றில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை பிரதமர் மோடி திறந்துவைத்த போது, அதற்கு எதிராக மக்கள் சார்பாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தவர் சுற்றுப்புற சூழல் ஆர்வலர் மேதா பட்கர் அவர்கள். இவருடன் அருந்ததிராயும் கலந்து கொண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது வி.கே.சக்சேனா அகமதாபாத்தைச் சேர்ந்த சிவில் உரிமைகளுக்கான தேசிய சபை என்ற தனியார் அமைப்பின் தலைவராக இருந்தவர். சக்சேனா 2001 ஆம் ஆண்டு மேதா பட்கர் மீது கொடுத்த புகாரில் அடிப்படையில் வழக்கு நடைபெற்று வந்தது.

சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு, சமூக போராளி மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்ததுடன், வி.கே.சக்சேனாவிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் ஜூலை 1, 2024 அன்று உத்தரவிட்டுள்ளது. அன்றைய போராட்ட களத்தில் சக்சேனாவுக்கு எதிராக பேசியதற்காக தற்போது மேதா பட்கர் மற்றும் அருந்ததி ராய் மீதும் பல வருடங்களுக்குப் பிறகும் பழிவாங்குவதற்கு சட்டங்களை பயன்படுத்துகிறது. ஆக சமூகத்திற்காக போராடும் போராளிகளை குறிவைத்து மோடி அரசு சிறையில் தள்ளுகிறது.

முன்பு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீதுதான் ‘உபா’ போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்வார்கள். ஆனால் தற்போது தனிநபர்களையும் பயங்கரவாதிகளாகக் கருதி, இத்தகைய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்ற நிலையை 2018-ம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்தது.

அருந்ததி ராய் விடுதலைப் புலிகள் மீது மாறுபட்ட விமர்சனம் கொண்டவர். விமர்சனத்தை கருத்தியலில் அணுகும் ஆற்றல் நமக்குண்டு. ஆனால் பாஜகவிற்கு அந்த தன்மை இல்லை. அரசியலமைப்பு சட்டம் அளித்த கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதோடு, சட்ட விரோத சட்டம் பாய்ச்சும் அளவுக்கு வஞ்சக எண்ணம் கொண்டவர்களாக ஆள்கிறார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல், அடக்குமுறையை ஏவி, அருந்திராய் மீது உபா வழக்கு பாய்ந்தது ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை.

பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அருந்ததி ராய் எதிர்வினை ஆற்றிவரும் வரும் நிலையில், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை தற்போது நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்திருப்பது என்பது காழ்ப்புணர்வு எண்ணத்தின் வெளிப்பாடாகும். சனநாயகத்திற்கு எதிரான UAPA சட்டம் இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்று. வெள்ளையனுக்கு எதிராக மக்கள் போராட கூடாது என்பதற்காக கொண்டு வந்த இக்கொடுகோன்மை சட்டத்தை, இன்னும் பாஜக அரசு திருத்தம் மேற்க்கொண்டு இன்னும் உயிர்ப்புடன் வைத்து, சொந்த நாட்டு மக்களையே சிறையில் அடைக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிராக மக்கள் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்.

குறிப்பு: அருந்ததி ராய் அவர்கள் எழுதிய ‘காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை‘ என்ற புத்தகத்தை காஷ்மீர் பிரச்சனை தொடர்பான பார்வையை ஆணித்தரமான‌ முன்வைத்து எழுதியுள்ளார். மேலும் வரலாற்றில் முன்னேற்றமும் படுகொலையும் கைக் கோர்த்து நடைபோட்டு உள்ளமையை தெளிவுப்படுத்துகிறது. 2001இல் இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டதைப் பற்றி விசாரணையை ஆராய்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும், ஊடகங்களும் அரசும் கூட்டாகச் செயல்படுவதை அம்பலப்படுத்துகிறது. மேலும் அப்சல் குரு வாழ்க்கையும் தூக்கிலிடப்பட்டதையும் கண்டிக்கின்றன. நுண்ணிய அரசியல் பார்வையை கூர்மையான நடையில் வெளிப்படுத்துகிறது இப்புத்தகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »