அமலாக்கத்துறையின் டில்லி ஆதிக்க வன்முறை!
இந்தியாவில் பணமோசடி மற்றும் அந்நியச் செலாவணி தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைதான் அமலாக்க இயக்குநரகம் ஆகும். ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமலாக்கத்துறை இயக்குநரகம், கட்சி வேறுபாடின்றி அனைத்து பொருளாதார குற்றங்களையும் விசாரிப்பது தான் முறையான சட்ட பூர்வ செயலாக இருக்கும். ஆனால் தற்போது ஒன்றிய பாஜக ஆட்சியில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது மட்டுமே அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை பாய்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரங்கள்
1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமலாக்கத் துறைக்கு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம்-1999 (FEMA) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம்- 2002 (PMLA) ஆகிய இரண்டு நிதிச் சட்டங்களின் விதிகளைச் செயல்படுத்த அதிகாரம் உள்ளது.
- FEMA எனப்படுவது சிவில் சட்டம். இதன்படி, பணப் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு விதிமீறல்களை விசாரிக்கவும்; குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரம் உள்ளது.
- PMLA எனப்படுவது ஒரு குற்றவியல் சட்டமாகும். இது, பணமோசடியைத் தடுக்கவும், பணமோசடியில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்குகிறது.
எதிர்க்கட்சிகளை மிரட்டும் அரசு துறைகள்
பாஜக மோடி அரசின் தொடர் மக்கள் விரோத போக்கு, இந்துத்துவ மத வெறுப்பு அரசியல் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட மக்கள் மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவுக்கு வாக்களிக்காமல் பிற கட்சிகளுக்கு, குறிப்பாக மாநிலக் கட்சிகளுக்கு, வாக்களித்தனர். இதன் காரணமாகப் பல மாநிலங்களில் பாஜக படுதோல்விகளைச் சந்தித்தது. ஆனால், மக்கள் அளித்த சனநாயகப்பூர்வ தேர்தல் முடிவுகளை ஏற்க மனம் ஒவ்வாத பாசிச சிந்தனை கொண்ட பாஜக கொல்லைப்புறமாக நுழைந்து அம்மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது தொடர் கதையாகியுள்ளது. இப்படி கொல்லைப்புறமாக நுழையும் திருடனின் கையில் கிட்டிய சாவியாக அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை உள்ளன.
தற்போது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மேற்கு வங்கம், மகாராட்டிரம், அசாம், ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது இருக்கும் பழைய மோசடி வழக்குகளைத் தூசிதட்டி எடுத்து அமலாக்கத்துறை மூலம் விசாரணை செய்து கடுமையான நெருக்கடிகளைத் தந்து வருகிறது. இப்படியான ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் பாஜக கட்சிக்குத் தாவினால் அவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் நிறுத்திவிடுகிறது.
மேலும், அமலாக்கத்துறை இயக்குநரான எசு.கே.மிசுராவை இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் என்ற அடிப்படையில் 2018 நவம்பர் 19-ம் தேதியன்று ஒன்றிய அரசு நியமித்தது. இவரின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் 2020-ம் ஆண்டு முடிந்த பிறகும் அவருக்கு இருமுறை ஓராண்டு நீட்டிப்புகளை வழங்கியுள்ளது. இதற்கென சில சட்டத் திருத்தங்களையும் பாஜக அரசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்திருத்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டிப்பது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, அமலாக்கத்துறையின் இந்த பணி நீட்டிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அண்மைக்காலங்களில் சிபிஐ பதிவு செய்த வழக்குகளில் மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மட்டுமே 95 சதவீத வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இதனால் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையைச் சனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகக் கருத வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து பீகார் மாநிலத்தில் பாட்னாவில் முதற்கட்டமாக ஆலோசனைக் கூட்டம் நடத்திய அடுத்த நாள் மகாராட்டிர மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி குறிவைக்கப்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் மற்றும் அஜித் பவார் மீது அமலாக்கத்துறை கடந்த 2019இல் பணமோசடி வழக்குப் பதிவு செய்திருந்தது. தற்போது அவ்வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரபுல் பட்டேல் மற்றும் 40 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அஜித் பவார் பாஜக ஷிண்டே-பட்னாவிஸ் அரசுடன் கூட்டணியில் இணைத்துள்ளார். அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும், அவரது கட்சியின் 8 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியும் பாஜக வழங்கியுள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களை தலா 25 கோடி ரூபாய் கொடுத்து பாஜக விலைக்கு வாங்க முயன்றதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். மேலும் டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பதியப்பட்ட வழக்கிற்காக இந்த ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு பணத்தின் மூலமாகவோ, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலமாகவோ ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு பாஜக “ஆபரேஷன் லோட்டஸ்” என்ற திட்டத்தை நடத்தி வருவதாகவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
இதேபோன்று, கடந்த ஆண்டு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நடைப்பயணத்தின்போது கோவா காங்கிரஸ் பிளவுபட்டு, அதன் 11 உறுப்பினர்களில் 8 பேர் பாஜகவில் இணைந்தனர். தெலங்கானாவில் பிஆர்எஸ் தலைவரும், முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கே.கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதும், பீகாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ்குமாரை குறி வைப்பதும் பாஜக தனது அரசியல் நோக்கங்களுக்காக ஒன்றிய அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்பட்ட 121 முக்கிய வழக்குகளில் 115 பேர் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கை கூறுகிறது. இப்படி ஒன்றிய அரசின் கைப்பாவையாக உள்ள அமலாக்கத்துறைக்கு எதிராக மேற்கு வங்க சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தற்போது, தமிழ்நாட்டில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை ‘கைது’ என்ற பெயரில் அத்துமீறல் நடைபெற்றது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கிற்காக தற்போது அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதே போன்று பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான அமைக்கப்படும் தேடல் குழுவில் நான்காவது நபரைச் சேர்க்க வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை நிராகரித்த பின் அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை ஏவப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி அவர்கள் மீதான சோதனையின் போது அமலாக்கத்துறை இதற்குரிய முறையான காரணங்களை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற கட்சிகள் எல்லாம் ஊழல்வாதிகள் என்று புனிதர் வேடமிடும் பாஜக மோடி அரசின் யோக்கியதை என்ன?
- பிரதமர் பேரிடர் நிவாரண நிதியை கொரோனா பேரிடர் காலத்தில் “பிஎம் கேர்ஸ்” என்ற பெயரில் மக்கள் பணத்தை முழுவதும் கணக்கில் வாரா திட்டமாக மாற்றினார். அதில் திரட்டப்பட்ட பல ஆயிரம் கோடி நிதி எங்கே போனது?
- ‘தேர்தல் பத்திரம்’ (Electoral Bond) என்பது சுதந்திர இந்தியா இதுவரை காணாத மிகப்பெரிய ஊழல் என்று அரசியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இது பற்றி வாய் திறக்குமா இந்த அரசுத் துறைகள்?
- மோடியின் ‘நிதியாளர்’ கவுதம் அதானி மீதான மோசடி குற்றச்சாட்டுகள், ஹிண்டன்பெர்க் அறிக்கை உட்பட, குறித்து என்ன நடவடிக்கை எடுத்தன இந்த ஏவல் துறைகள்?
ரபேல் போர் விமான ஒப்பந்தம், அம்பானியின் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம், தப்பி ஓடவிட்ட மெகுல் சோக்சி, லலித் மோடி, நீரவ் மோடி, மல்லையா என்று முற்றுப்புள்ளி பெறாமல் ஊழல் பட்டியல் நீளுகிறது. பாஜக ஆளும் மாநில அரசுகளின் ஊழல்கள் குறித்து தனியாகப் பெரிய புத்தகமே வெளியிடலாம். இது குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
நெருக்கடிக்குள் மாநில கட்சிகள்
தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின் போது “பெங்களுரில் நடக்கவிருக்கும் எதிர்க்கட்சி கூட்டத்துக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் கலந்து கொண்டால் இங்கே கறுப்பு கொடி காட்டப்படும்” என்றும், “மகாராட்டிர மாநிலத்தில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் பல (ஏக்நாத்) சின்டேக்கள் வருவார்கள்” என்றும் பேசி உள்ளார்.
மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவோ; கல்வி, வேலை வாய்ப்பு தருவதாகவோ; அனைத்து மக்களின், குறைந்தபட்சம் இந்துக்களின், முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம் என்றோ பாஜக தலைவர்கள் என்றாவது பேசியது உண்டா? சனநாயக முறையில் நடத்தப்படுவதாக இவர்களே சொல்லிக்கொள்ளும் தேர்தலில் மக்கள் இவர்களை தோல்வியுற செய்த பின்னரும், அயோக்கியத்தனமாக ஆட்சியை பிடிப்போம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வெட்கங்கெட்டு பேசுகிறார். எப்படியான அயோக்கியத்தனத்தை செய்தும் ஆட்சியை அடையலாம் என்பது ஆரிய சாணக்கியன் வழி. திருக்குறள் கூறும் தமிழர் அறத்தின் மொழி இந்த ஆரிய அடிவருடிகளுக்கு சுட்டுப்போட்டாலும் புரியாது!
தன்னிடம் மண்டியிடாத பிற அனைத்து கட்சிகள் மீது மோடி அரசு தனது ஏவல்துறைகளை ஏவினாலும் மாநில கட்சிகளை மட்டுமே மிகக்கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. தேசிய கட்சிகள் மீது அப்படியான நெருக்கடிகளை தருவதில்லை. இந்தியாவில் நிலவும் அனைத்து குறைபாடுகளுக்கும் காங்கிரஸ் கட்சியை முற்று முழுவதும் குற்றம் சுமத்தும் பாஜக மோடி அரசு காங்கிரஸ் கட்சியினர் செய்த ஊழல்கள் மீது கடந்த 9 ஆண்டுகளில் என்ன சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறையில் அடைந்துள்ளது?
இந்திய ஒன்றியம் என்கிற அரசியல் கட்டமைப்பை தாங்கி பிடிக்கும் கூட்டாட்சி தத்துவத்தை வீழ்த்தும் முனைப்பில் ஆரிய பார்ப்பன கூட்டம் மிகத்தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் பரந்துவிரிந்து கிடக்கும் பல்வேறு தேசிய இனங்களை ‘இந்து ராஷ்ட்ரா’ எனும் ஒற்றை இந்தியாவிற்குள் பார்ப்பனீயம் அடைக்க துடிக்கிறது. இந்த பார்ப்பன பாசிச மோடி அரசை வீழ்த்தும் கடமையும் வல்லமையும் மாநில கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. ஆகவே, மாநில கட்சிகள் பாசிசத்திற்கு எதிரான முன்னணி படை கட்டுவதை தனது இருப்புக்கான அச்சுறுத்தலாக இந்துத்துவ பாசிசம் கருதுகிறது. அதிலும், தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகள் மாநில சுயாட்சி, தமிழர் நலன், ஆரிய பார்ப்பன எதிர்ப்பு, சமத்துவ சமூகநீதி போன்ற குறைந்தபட்ச கொள்கை பிடிமானத்துடன் திகழ்வது இந்திய பார்ப்பன கும்பலுக்கு பெரும் உளைச்சலாக நீடிக்கிறது.
இந்த புள்ளியிலிருந்து நாம் மோடி அரசுத்துறை நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டியது அவசியம். 2022ல் சிவா சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே சந்தித்த அதே நிலையில் தான் இன்று சரத்பவார் எதிர்கொண்டுள்ளார். முக்கியமாக, பாட்னா ஆலோசனைக் கூட்டத்தை முன்னின்று ஒருங்கிணைத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் கட்சி தற்போது அவரிடம் இல்லை. இதன் விளைவாக, பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சி ஒருங்கிணைவில் பலவீனம் ஏற்பட்டுள்ளதாகப் பேச்சுகள் கிளம்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ‘பாஜக எதிர்ப்பு கூட்டணியில்’ வலுவாக இருக்கும் கட்சிகள் பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி, ஜனதாதள கட்சி (ஒன்றுபட்ட), மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தமிழ் நாட்டில் திமுக குறி வைக்கப்படுகின்றன. இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சி சனநாயகத்தைப் பாதுகாத்திடவும் மாநிலங்களின் உரிமைகள் பாதுகாத்திடவும் மாநிலக் கட்சிகள் வலுவாக இருப்பது அடிப்படைத் தேவையாகும்.
மிக சிறப்பான புள்ளி விவரங்களுடன் எளிய வாசகனும் அறிந்து கொள்ளச் செய்யும் கட்டுரை சிறப்பு. விசில் அடித்தால் ஓடி சென்றுபிடிக்கும் நாய்கள் போல் செயல்படுவதாக ஈ.டி யை அரசியல் விமர்சனங்கள் விமர்சிக்கிறார்கள். கருத்தைதோழர்களுக்கு பகிர்கிறேன்