மக்களவையில் பழைய கட்டிடத்தில் நடந்த இறுதி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரான ஐயா.வைகோ அவர்கள் பேசிய உரை பற்றி, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பதிவு
மக்களவையில் பழைய கட்டிடத்தில் நடந்த இறுதி நிகழ்வில் ஐயா.வைகோ அவர்கள் பேசிய உரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய மோடி வழியில் இந்திய அரசு தொடர்ந்து செல்லுமெனில் நூற்றாண்டு சுதந்திர தினத்தை கொண்டாட இந்தியா எனும் தேசமே இருக்காது என்றார். இதை அவர் கடந்த 14ஆண்டுகளில் பல மேடைகளில் எச்சரித்துப் பேசியதை பார்த்திருக்கிறேன். இதே வாசகத்தை மக்களவையிலும் பதிவு செய்திருக்கிறார்.
திராவிடர் இயக்கம், பெரியார் இந்தியாவை ஒரு தேசமாகவோ, சனநாயகக் கட்டமைப்பாகவோ கண்டதில்லை. இது பார்ப்பன- பனியா கட்டமைப்பு என்பதை தந்தைப் பெரியார் உள்ளிட்ட மூத்த திராவிடர் இயக்கப் போராளிகள் முழங்கி, போராடி வந்துள்ளனர். இந்த தேசம் செயற்கையாக கட்டமைக்கப்பட்டது. இது சனநாயகப்படுத்தப் படவில்லையெனில், இது அனைத்து மக்களுக்கும் அதிகாரத்தை பகிரவில்லையெனில், இது தேசமாக மிளராது என்பதை பெரியாரிஸ்டுகள் விளக்கி பேசியும், எழுதியும் உள்ளனர்.
இது தேர்தல் அரசியலில் திமுக கடந்த காலங்களில் இந்திய அளவில் முன்வைத்தது. மாநில சுயாட்சி என அறிஞர் அண்ணா முழங்கியது என்பது இந்த தேசத்தை சனநாயகப்படுத்த மீதமிருக்கும் ஒரே வழி என்பதாக கண்டடைந்தார். மாநில உரிமைகள் வலுப்படுத்தாமல், மத்திய-ஒன்றிய அரசு ஏன் வலிமையாக ஆசைப்படுகிறது என கேள்வி எழுப்பினார். அண்ணா கூர்மையாக இந்த கேள்வியை எழுப்பியதென்பதே இந்தியாவின் உள்ளார்ந்த பார்ப்பன பாசிச பண்பை அம்பலப்படுத்தவே. இந்தியா எதிர்காலத்தில் வலிமையான ஒன்றிய அரசு என அதிகாரக் குவிப்பை மேற்கொண்டால் அது இந்திய தேசத்தின் இருப்பிற்கு வேட்டு வைக்கும் என்பதை எச்சரித்துமுள்ளார். இந்தக் குரலே திமுகவின் குரலாக இந்திய அளவில் வேறுபட்ட பார்வையை ஒலித்துக்கொண்டிருந்தது.
இந்தியாவின் சனநாயகமற்ற வல்லாதிக்க போக்கையும், தமிழர் விரோத போக்கையும் ஈழ அரசியல் அம்பலப்படுத்தியது. இதை தனது பாராளுமன்ற/மாநிலங்களவை காலத்தில் வாய்ப்புள்ள போதெல்லாம் பதிவு செய்துள்ளார். இருந்த போதிலும், இன்றைய காலகட்டத்தில் மோடி-பாஜக பாசிச காலத்தில் பதிவு செய்வது மிக மிக முக்கியமானது. காசுமீர் மக்களின் சட்டமியற்றும் உரிமை, பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை, மாநிலமெனும் வகையிலான நிர்வாகக் கட்டமைப்பினை சிதைத்து எரிந்த பாஜகவின் செயல் அனைத்து மாநிலங்களுக்குமான எச்சரிக்கை. இதை காசுமீர் திருத்தச்சட்டத்தின் போது ஐயா.வைகோ பதிவு செய்தார். தமக்கான குறைந்த பட்ச வாய்ப்புள்ள நேரங்களில், வாய்ப்புகளில் திராவிடர் இயக்கத்தின் குரலாக அவரது குரல் எதிரொலிக்கிறது.
இந்த தேசத்தின் எதிர்காலம் என்பது இந்துத்துவ அரசாக விரியும் போது, இந்தியா என்பது பிழைக்க வாய்ப்பில்லை என்பது பாஜகவின் எதிர்கட்சிகளும் உணர்வது மிக முக்கியம். ஏனெனில் பாஜக ஆட்சி தொடருமெனில் சனநாயகம் பிழைக்காது என்பதோடு மட்டும் இது நின்றுவிடாது. சனநாயகம் பிழைக்காத தேசத்தில் அதன் கட்டமைப்பும் சிதைந்துபோகும். இன்னும் வேறு கோணத்தில் அணுகும் போது இந்த தேசம் இதற்கு மேலும் உயிர்ப்பிழைக்குமா என்பதே கேள்விக்குறி? என்பதை இன்றைய மோடி அரசின் நகர்வுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
இந்தியாவை காப்பது என்பது பாஜகவை ஆட்சி நீக்கம் செய்வது மட்டுமல்ல, ஒன்றிய அரசின் அதிகாரத்தை குறைத்து மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது மட்டுமே எனும் அண்ணாவின் குரலை ஐயா.வைகோ வெளிப்படுத்தியது காலத்தில் மிக முக்கியமானது. இது போன்ற சனநாயகக்குரல் தமிழகத்தில் இருந்து மட்டுமே எழுகிறது. தோழர்.திருமாவளவன், தோழர்.சு.வெங்கடேசன் ஆகியோர் எழுப்பும் குரல்கள் பரந்த அளவில் விவாதத்திற்கு வரவேண்டும்.
இந்தத் தலைவர்கள், கட்சிகளின் குரல்களே தமிழகத்தின் உள்ளார்ந்த அரசியலின் குரல். இவர்களது பதிவுகளை பிரபலமாக்கும் வகையிலான சமூகவளைதள கட்டமைப்பை இவர்கள் வைத்திருக்காமல் போகலாம். ஆனால் இக்குரல்களை விரிவான விவாதத்திற்கு கொண்டுபோகும் பணி நம் அனைவருக்கும் உள்ளது. இந்தத் தலைவர்கள் நம்முடன் போராட்ட களத்தில் நின்றவர்கள். நம்மிடம் பேசிய அரசியலை எவ்வித தயக்கமும், அச்சமுமின்றி பாராளுமன்றம்/மாநிலங்களவையில் பேசும் துணிச்சல் கொண்டவர்கள். அமலாக்கத்துறை, சிபி.ஐ என எவ்வித அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாத இந்த குரல்கள் பாசிசத்தினை அச்சுறுத்தும் குரல்கள்.