இந்திய வரலாற்றிலேயே முதல் பெண் மருத்துவர், சமூக போராளி, சென்னை மாகாண சபையின் முதல் பெண் உறுப்பினர், தேவதாசி முறை எனும் கொடிய மனுதர்ம சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர், கைம்பெண்கள் மறுமணம், குழந்தை திருமணத் தடை சட்டம் என பெண்ணினத்தின் துயர் துடைத்த பேராளுமை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்தவர்.
மருத்துவராக ஆனபின் தனது சொந்த வாழ்க்கை, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என ஓடும் சாதாரண மனநிலையில் இருந்து விலகி, எளிய மக்களின் சுகாதார விழிப்புணர்வு, மருத்துவம், பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் என மக்களின் மீது அக்கரை கொண்ட பெண் மருத்துவ சமூக போராளிதான் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். சிறு வயதிலிருந்தே நோய்கள் தாக்கிய தனது உடல்நிலை, கல்வி மேற்படிப்பு, குடும்பம், குழந்தைகள் பராமரிப்போடு சமூகப் பணி என அனைத்தையும் ஒரு சேர கவனித்து திறம்பட செயலாற்றிய அறிவு கூர்மைமிக்க ஆளுமையாய் திகழ்ந்திருக்கிறார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் ஜூலை 30, 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர், தாயார் சந்திரம்மாள். அந்த காலத்திலேயே சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட சீர்திருத்த சிந்தனை கொண்ட இணையர்கள். இவர்களின் மூத்த மகள்தான் முத்துலட்சுமி அம்மையார். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.
பெண்களை திண்ணை படிப்போடு நிறுத்திவிட்ட, கல்வி என்பதை நினைத்து கூட பார்க்கமுடியாத காலகட்டத்தில் முத்துலட்சுமி அவர்கள் மேலும் உயர்கல்வி கற்க கல்லூரிக்கு செல்ல விரும்பினார். ஆனால், சனாதன பிற்போக்கு எண்ணத்தில் இருந்த அந்தக் காலக் கட்டத்தில் பெண்களால் ஆண்கள் கல்வி பாதிக்கப்படும் என கூறி அனுமதி மறுத்து விட்டார் கல்லூரி முதல்வர். ஆனால் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். கல்லூரிகளில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது. அப்போது அவரது தந்தை, மன்னர் பைரவ தொண்டைமான் ஆதரவின் பேரில் கல்லூரியில் சேர்ந்தார்.
தனது தாயின் உடல்நலம் பாதிக்கப்பட, அவரது துயரத்தை கண்முன்னே கண்ட முத்துலட்சுமி மருத்துவம் படிக்க முடிவெடுத்து சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவியாக வந்தார். அதுவரை முகம்கொடுத்து மதிக்காத கல்லூரி பேராசிரியர் ’கர்னல் ஜிப்போர்ட்’ இந்த நாள் கல்லூரியின் பொற்காலம் என்று புகழ்ந்தார். 1912ல் அறுவை சிகிச்சை மருத்துவராக வெளிவந்த முத்துலட்சுமி அவர்கள் எழும்பூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி, பிறகு தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் இலவச மருத்துவ பணியாற்றி வந்துள்ளார்.
இடையில் ஒரு வருடம் உடல்நலம் குன்றி ஓய்வில் இருந்த முத்துலட்சுமி அவர்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணம் என்பது ஒரு பெண் தாலி என்பதை கட்டிக்கொண்டு ஒரு ஆணுக்கு காலமெல்லாம் அடிமையாக இருப்பது என சொல்லி, திருமணத்தை ஒதுக்கி கல்வியில் கவனம் செலுத்தி இருக்கிறார். இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார்.
தனது சுயமரியாதை, சமூக சிந்தனைகளில் தலையிட கூடாது, நான் சுதந்திரமாக செயல்பட கட்டுப்பாடுகள் கூடாது என்ற அடிப்படையின் பேரில் நீதிகட்சியை சேர்ந்த முற்போக்கு சிந்தனை கொண்ட ’டி. சுந்தரரெட்டி’ என்பவரை கணவராக ஏற்க முடிவு செய்கிறார். அடையாற்றில் உள்ள ’அன்னிபெசன்ட்’ (Annie Beasant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில் இந்து மதத்திலுள்ள மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து 1914-ல் திருமணம் நடந்தது.
1917-ல் முதன்முதலாக இந்திய மாதர் சங்கத்தில் முக்கிய பொறுப்பை ஏற்ற பின்னர் சமூகத்தில் பெண்களின் நிலை, குழந்தைகளை பற்றி சிந்திக்க துவங்குகிறார். பின்னர் 1920-ல் கீழ்பாக்கத்தில் பெண்கள் நல சங்கம் என்ற ஒன்று துவங்குகிறார். அதில் ஆதரவற்ற குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாப்பது மற்றும் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட குழந்தைகளை சீர்திருத்தி நல்வழிபடுத்த குழந்தைகள் நல உதவி மையமும் ஆரம்பித்து இருக்கிறார்.
1923-ல் தனது தங்கை சுந்தராம்பாள் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத முத்துலட்சுமி அவர்கள், புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள நினைக்கிறார். 1925-ல் நீதிக்கட்சியை சார்ந்த பனகல் அரசர் உதவியுடன் லண்டனில் ஆராய்ச்சி படிப்பை முடிக்கிறார். அப்போது தன் உடன்பிறந்த சகோதரர் இராமையா இறந்து விட படிப்பை பாதியில் விட்டுவிடக்கூடாது என்று கனத்த இதயத்துடன் தாங்கி கொண்டு ஆராய்ச்சி படிப்பை முடித்தே தாய் நாடு திரும்பியுள்ளார்.
1926-ல் பிரான்ஸில் நடைபெற்ற அகில உலக பெண்கள் மாநாட்டில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் கலந்துகொண்ட முதல் இந்தியப் பெண் முத்துலட்சுமி அவர்கள். பிரிட்டிஷ் பெண்கள் சுதந்திரத்தை போன்றே இந்திய பெண்களும் ”சுதந்திரமாக வாழ, சம உரிமை பெற பாடுபடுவேன், இவற்றிற்கெல்லாம் அடித்தளமான மூட நம்பிக்கையை ஒழிப்பேன், பெண்களை அடிமை தளத்திலிருந்து மீட்டு ஆண்களுக்கு சமமாக முன்னேற பாடுபடுவேன்” எனப் பேசியது அனைவரையும் கவர்ந்ததுடன் வரவேற்பையும் பெற்றது. இதுவே அரசியலில் அவர் பயணிக்க அடியெடுத்து வைக்க முதல் படியாக இருந்தது எனலாம். அப்போதுதான் பெண்களுக்கான வாக்குரிமை சட்டமும் வருகிறது.
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் பதவி வகித்த முத்துலட்சுமி அவர்கள் 1926-ல் முதல் சட்ட மேலவை உறுப்பினர் ஆகிறார், எந்த வித போட்டியுமின்றி சட்ட மேலவையின் முதல் பெண் துணை தலைவராகவும் பதவியேற்கிறார். பதவியேற்ற ஐந்தாண்டுகளில் பல புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில் முதன்மையானது ’தேவதாசி முறை ஒழிப்பு’ இந்த தேவதாசி முறை என்பது ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை ’பொட்டு கட்டி விடுதல்’ என்பதாகும். இதன் மூலம் பெண்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்டவர் என்று கூறுவதாகும். அப்பெண்கள் செல்வந்தர்களின், கோவிலின் மிட்டா மிராசுகளின் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தப்பட்டனர். பணியாதவர்களை பொய்க்குற்றச்சாட்டு சொல்லி தண்டனைக்கு உட்படுத்தினர். இப்படி அரங்கேறிக் கொண்டிருந்த கொடுமைகளை தடுக்க முனைந்தார் முத்துலட்சுமி அம்மையார்.
தன் இளம் வயதில் கோவிலில் 12 வயது சிறு பெண் குழந்தைக்கு பொட்டு கட்டும் முறையும், அதற்கு பிறகு அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமைகளையும் கண்டதால் இக்கொடும் சட்டத்திற்கு எதிராக முதலில் சட்டம் கொண்டு வரத்துணிந்தார் முத்துலட்சுமி அம்மையார்.
இதில் பெரியாரின் பங்கு முக்கியமானது. கடிதங்களால் முத்துலட்சுமி அம்மையாரின் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தினார். அவர் கொண்டு வந்த சட்டத்தை, பெரியாருக்கனுப்பி ஆங்கிலேய அரசாங்கம் கருத்து கேட்டது. அதற்கு பெரியார் ’குடி அரசு’ இதழில் மிகவும் காட்டமாகவே பதில் கூறினார். பொதுமக்களின் கருத்து கேட்பது என்பது கோமாளித்தனம் என்று சாடுகிறார். “ஒரு நாட்டில் நாகரீகமுள்ள அரசாங்கமாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ, கோரின் அரசாங்கமாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும், இருந்து வர ஒரு க்ஷண நேரமும் விட்டுக்கொண்டு வந்திருக்காதென்றே சொல்லுவோம்“ – என்று எழுதினார். முத்துலட்சுமி அம்மையாரிடம் நடந்த உரையாடல்களால் அவரை இந்த சட்டத்தை நிறைவேற்ற தூண்டிக் கொண்டேயிருந்தார்.
இதற்கு காங்கிரசில் இருந்து முதல் எதிர்ப்பு தெரிவித்தவர் சத்தியமூர்த்தி அய்யர். இந்த தேவதாசி முறை என்பது தெய்வத்திற்கு ஒப்படைப்பதாகும், சாஸ்திரப்படி அந்த பெண்களுக்கு புண்ணியம் கிடைக்கும், அதை ஒழிக்க நினைப்பது கூடாது என வாதிட்டார். அதற்கு முத்துலட்சுமி அம்மையார் இதுவரை இந்த குலத்தை சார்ந்த பெண்கள் பெற்ற புண்ணியம் போதும், இனி உங்கள் வீட்டு பெண்களுக்கும் அந்த புண்ணியம் கிடைக்கட்டுமே என்று அவர் மொழியிலேயே பதில் அளித்தார். இந்த பதிலைக் கண்டு திக்குமுக்காடிப்போன சத்தியமூர்த்தி இச்சட்டம் வரக்கூடாது என்பதற்காக, நான் சாஸ்திரத்தை எதிர்த்து சாபம் பெறுவதை விட சட்டத்தை எதிர்த்து சிறைசெல்வது மேல் என்று எதிர்த்து நிற்கிறார்.
தேவதாசி நடைமுறையானது உடன்கட்டை ஏறுதலைவிட மிக மோசமானது என்றும், “மதத்தின் பெயரால் நடைபெறும் குற்றச் செயல்” என்றும் கூறினார் முத்துலட்சுமி அம்மையார். காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்கு வராமல் இருப்பதால் இச்சட்டம் நிறைவேறாமல் போகிறது என பெரியாரிடம் வருந்தினார் முத்துலட்சுமி அம்மையார். இதையெல்லாம் கண்டித்து பேசியும், எழுதியும் நெருக்கடிகளைத் தந்தார் பெரியார்.
இறுதியாக பல எதிர்ப்புகளை கடந்து நவம்பர் 5,1927ல் தேவதாசி முறை ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், 1947-ல் ஓமந்தூர் ராமசாமி அவர்களின் அமைச்சரவையில் தான் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது.
அடுத்து ”இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், கலப்பு திருமணச் சட்டம்” போன்றவை முத்துலட்சுமி அம்மையாரால் பெண்களுக்காக அவர்களின் உயர்வுக்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் ஆகும். பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க அடையாறில் ’அவ்வை இல்லம்’ அமைத்தவர் முத்துலட்சுமி.
தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்ததுடன், இந்திய மாதர் சங்கம் நடத்திய ’ஸ்திரீ(பெண்) தருமம்’ எனும் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்திய மாதர் சங்கத்தின் தலைவராக 1933 முதல் 1947வரை தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
மருத்துவராக புற்றுநோய் கொடுமைகளை அறிந்தவர் இந்நோயுற்றவர்களை காப்பாற்ற அவர்களின் கடைசி நம்பிக்கையாய், புகலிடமாய் இன்றும் பல நோயாளிகளின் ஓய்விடமாய் இருக்கும் சென்னையில் அமைந்திருக்கும் புற்றுநோய் மருத்துவமனை உருவாக்கியவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். அதற்காகப் பலவிதங்களிலும் நிதி திரட்டினார். அன்றைய பிரதமர் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் இரண்டாவது பெரிய புற்றுநோய் மருத்துவமனையான இது பல்லாயிரம் நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளது.
பெண்களுக்காவும் குழந்தைகளுக்காகவும் அதிகம் சிந்தித்த தாய் என்றே சொல்லலாம். பெண்களுக்கான விழிப்புணர்வு இலவச மருத்துவம், புற்றுநோய் உதவி மையம் என இந்த சமூக அக்கரையில் இடையே தனது குடும்பத்தையும் கவனித்து வந்துள்ளார். ஆக சமூகபணி செய்வதற்கு குடும்பம் தடையில்லாதவாறு சமநிலையில் தன்னை தானே வழிநடத்தி பெண்ணினத்திற்கு பெருமை சேர்ந்த அம்மையார் ஜுலை 22, 1968ல் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் நோயாளிகளுக்கு மருத்துவமாய், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவ்வை இல்லமாய், கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால உடன்நலன் நிதியாய், இன்னும் பல பெண்கள் நல திட்டங்களாக நம்முடனே பயணிக்கிறார்.
பெண்கள் ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்றும், பெண்களின் அரசியல் பங்களிப்பு இல்லாமல் அவர்களுக்குச் சமூக விடுதலை சாத்தியமில்லை என்பதை தந்தை பெரியார் எழுதியும், பேசியும் வந்தார். அக்கூற்றுப்படி பெண்கள் கையில் அதிகாரம் கிடைக்கும்போதே, சமூக நீதிக்கான பயணம் அமையும் என்பதற்கு முத்துலட்சுமி அம்மையார் வாழ்க்கை ஓர் உதாரணம்.
“மங்கையராய் பிறப்பதற்கே – நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இந்திய பெண்களின் முன்னோடி, முதல் பெண் மருத்துவர், எடுத்த செயலை திறம்பட முடித்தவர், இலக்கை அடைய அயராது பாடுபட்ட பிடிவாதக்காரர் என பல்வித திறமை கொண்ட ஒப்பற்ற பெண்மணி டாக்டர் முத்துலட்சுமி அவர்களை நினைவு கூர்வோம்.