நீலந்தாங்கல் சாதிய தாக்குதல்: கள ஆய்வறிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நீலந்தாங்கல் கிராமத்தின் பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை ஆதிக்க சாதியினர் தொடர்ந்து சாதி வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனை அறிந்து மே பதினேழு இயக்கம் உள்ளடக்கிய ‘மக்களிடம் கற்போம் குழு’ எனும் உண்மை கண்டறியும் குழு, நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடையே தகவல் சேகரித்தது. அதனடிப்படையில் தனது கள ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை இங்கு வெளியிடுகிறோம்.
உண்மை அறியும் குழுவின் அறிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேட்டவலம் சாலையில் ஆவூர் கிராமத்திற்கு மேற்கால் உள்ள பாதை வழியாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் தார் சாலையில் வயலூர், ஜமீன் கூடலூர் கிராமங்களை கடந்து 5 கிமீ உள்ளே சென்றால் நீலந்தாங்கல் கிராமத்தை அடையலாம். மேற்கண்ட நீலந்தாங்கல் கிராமத்தில் 160 அகமுடைய முதலியார் குடும்பங்களும், 60 கோணார் சாதி குடும்பங்களும், 40 பழங்குடி (இருளர்) சமூகத்தவரும் வாழ்ந்து வருகின்றனர். மேற்கண்ட கிராமத்தை சுற்றி உள்ள ஊர்களில் அகமுடைய முதலியார் சமூகத்தினரே பெருன்பான்மையினர் ஆவர்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் நீலந்தாங்கல் கிராமம் பழங்குடி சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டு மாணிக்கம் குமாரர் மணி என்பவர் தேர்தலில் சுமார் 380 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார். மேற்கண்ட மணிக்கு தேர்தலில் ஆதரவாக தற்காலம் திருத்தனியில் வியாபாரம் செய்து வரும் ரங்கனாதன் மகன் ராஜமுத்து என்பவரும் ஆசிரியர் மண்ணு மகன் சுகுமார் என்பவரும் இருந்தனர். மேற்கண்ட சுகுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் ஊராட்சி செயலாளராக அரசு பணி செய்து கொண்டு நீலந்தாங்கல், ஜமீன் கூடலூர் கிராமங்களுக்கு ஊராட்சி செயலாளர் ஆக பணிபுரிந்து வந்தார்.
மேற்கண்ட மணி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவரின் சார்பாக சுகுமாரே செயல்பட்டு பல கையெழுத்துகளை அவர் கேட்குமிடங்களில் மணி செய்து தந்தார். ஏரி வேலைகளில் சுகுமார் பாதிக்கு பாதி ஆட்களை அதிகமாக காண்பித்து பணம் எடுத்துக் கொள்வார். இதற்கிடையில் சுகுமார் கடந்த பொங்கலுக்கு 4 நாட்களுக்கு முன்பு செக் புத்தகத்தோடு மணி வீட்டிற்கு சென்று கையெழுத்து கேட்டார். அப்போது மணி செக் புத்தகங்களில் எதற்காக அடிக்கடி கையெழுத்து வாங்குகிறீர், எனக்கு எதாவது பின்னால் பிரச்சனை வந்து நான் ஜெயிலுக்கு போகும் சூழல் வரும் என்றும் அதனால் இனி நான் கையெழுத்து எதையும் போடமாட்டேன் என மணி மறுத்துள்ளார். உடனே மணியின் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அவரை சட்டையை பிடித்து இழுத்து அவர் வீட்டுக்குள் சென்று அவரை அடித்து ”டேய் இருள தேவிடியா பையா, நான் கேட்டும் நீ கையெழுத்து போட மாட்டின்றியா” என ஆபாசமாக என்னை உன்னால ஒன்னும் பன்ன முடியாது என ஆணுறுப்பை பற்றியும் நா கூசும் வார்த்தைகளால் பேசினார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுகுமாரின் உறவினர் பொன்னுசாமி மனைவி கலா விலக்கி விட்டார். மணியின் சாதியை குறிப்பிட்டு அவமானமாக பேசி அவர் வழக்கமாக கையெழுத்து போட பயன்படுத்தும் பேனவைக்கூட பிடுங்கி கொண்டு சுகுமார் அவமானப்படுத்தி விட்டு சென்றார். அதனால் மணி மனம் குறுகி வீட்டோடு இருந்து விட்டார்.
பொங்கல் முடிந்த பின்னர் துணைத் தலைவர் சுரேஷ் உதவியுடன் நடந்த விசயங்களை மனுவாக்கி மாவட்ட ஆட்சியரிடம் மணி வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து குறைகளைக் கூற மணி முற்பட்ட போது அவரை மாவட்ட ஆட்சியர் “நீ தப்பு செய்ததால் தான் என் காலில் விழுகிறாய்” என அவரையே குறைசொல்லி பேசி ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மனுவிற்கு பின்னர் தலைவர், துணை தலைவர், சுகுமார் ஆகியோரை A.D பஞ்சாயத்து அழைத்து விசாரித்த போது, துணை தலைவர் சுரேஷ் துாண்டிவிட்டே மணி புகார் கொடுத்ததாக கூறி சுரேஷை சுகுமார் விசாரணை நடந்த அறையிலிருந்து அடித்து வெளியே தள்ளினார். அதை A.D பஞ்சாயத்து கண்டுகொள்ளவே இல்லை.
பல தலைமை அதன் பின்னர் மணி மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த அதன் பொது செயலாளர் விவேகானந்தன் என்பவரை அணுகி அந்த சங்கத்தின் மூலமாக மனுக்களை செயலகத்திற்கும், காவல் துறை தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பினர். அந்த மனுக்கள் திரும்ப வேட்டவலம் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு காவலர்கள் பல நாள் விசாரணைக்கு பின்னர் கடந்த 22-02-2022 அன்று சுகுமார் மீது தாழ்த்தப்பட்ட வன்கொடுமை பிரிவின் கீழும் இ.த.சா. 294 (B), 451, 504(1) பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்தனர். அந்த முதல் தகவல் அறிக்கையின் நகலினை 4 நாட்களுக்கு மேல் நடக்க வைத்த பின்னர் தான் வேட்டவலம் காவலர்கள் மணியிடம் வழங்கியுள்ளனர். முதல் தகவல் அறிக்கைக்கு பின் மாவட்ட நிர்வாகம் சுகுமாரை 2 ஊர்களுக்கு பணி மாற்றம் செய்தும் அவர் அங்கு பணியில் சேரவில்லை. மேலும் நீலந்தாங்கல், ஜமீன் கூடலூர் கணக்குகளையும் கடைசி வரை ஒப்படைக்கவேயில்லை. ஊராட்சி கணக்குகளை சுகுமார் சட்டத்திற்கு புறம்பாக அலுவலகத்திலிருந்து தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.
அதன் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் பூட்டை உடைத்து தற்போதைய ஊராட்சி செயலாளரிடம் அலுவலகத்தை நடத்த பணித்துள்ளனர். எதிரி சுகுமார் தி.மு.க பிரமுகர் மற்றும் அவரது மனைவி தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ஆவார். அந்த செல்வாக்கில் சுகுமாரை கைது செய்யாத காவல் துறை அவர் கீழ்பென்னாத்துார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி மற்றும் கீழ்பென்னாத்தூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஆகியோருடன் உட்கட்சி தகராறில் ஈடுபட்டதால் கடைசியாக கடந்த 10-04-2022 அன்று காலை 9.00 மணிக்கு சுகுமார் தல்லாகுளம் சந்தையில் சாவுக்கு மாலை வாங்கும் போது காவலர்கள் கைது செய்ய முயற்சித்த போது காவலர்களிடம் எத்தனை பேர் வந்திருக்கிறீர். உங்களுக்கும் சேர்த்து மாலை போடவா என அவர்களிடமே வம்பு வளர்த்துள்ளார். கைதுக்கு பின் கடந்த ஒரு வாரமாக சுகுமார் சிறையிலிருந்து வருகிறார். சுகுமாரின் உறவினர்களும், அவரின் சாதியினர் சிலரும் தலைவர் மணியை பழி வாங்க துடித்துக் கொண்டுள்ளனர்.
சமூக நீதி அடிப்படையில் இயங்கும் தமிழக அரசே!
1) ஊராட்சி தலைவராக பழங்குடியின தலைவர் தன்னிச்சையாக முழு உரிமையுடன் செயல்பட ஆவண செய்!
2) மேற்கண்ட சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காத திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடு!
3) ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட அக்கிராம பழங்குடி மக்களுக்கு நிரந்திர பாதுகாப்பு வழங்கு!
மக்களிடம் கற்போம் குழு
திருவண்ணாமலை.
கலந்துக் கொண்டோர் விவரம் ..!
1) மே 17 இயக்கம்.
2) தோழர். சு.கண்ணன், வழக்கறிஞர், திருவண்ணாமலை.
3) தோழர். வ.பழநி, வழக்கறிஞர், திருவண்ணாமலை.
4) தோழர். லெனின் பாரதி, திரைப்பட இயக்குனர்.
5) தோழர். திருவேங்கடம், சமூக ஆர்வலர்.