மக்களாட்சியில் ஆளுநர் பதவி தேவையா?

மக்களாட்சியில் ஆளுநர் பதவி தேவையா?

இந்தியா வெள்ளைகாரர்களிடம் அடிமைபட்டு இருந்த சமயத்தில், பரந்து விரிந்திருக்கிற இந்திய நிலப்பரப்பு முழுவதையும் கண்காணிக்க சிரமப்பட்ட வெள்ளைகாரர்கள். தங்களுக்கு அந்தந்த பிராந்தியத்தை கண்காணித்து தகவல் சொல்ல உருவாக்கிய பதவிதான் ஆளுநர் பதவி. அந்த பதவியை வெள்ளைகாரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னும் மாநிலங்களை கண்காணிக்க இந்தியாவை ஆளுபவர்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தான் பல மாநிலங்கள் இந்த ஆளுநர் பதவியை மிகக்கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு, மாநிலங்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆளுநர் பதவி தேவையில்லை என்பதை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லிவருகிறது.

இந்த ஆளுநர் வேலை என்பதே மாநில சட்டமன்றங்களில் இயற்றப்படும் மசோதாக்களையும், தீர்மானங்களையும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கிகொடுப்பதே ஆகும். ஆனால் இந்த பணியை ஒன்றியத்தில் ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் கட்சி ஆட்சியிலிருக்கும் மாநிலங்களிலோ அல்லது ஒன்றிய அரசின் அனுசரனையோடு இருக்கும் மாநிலங்களில் மட்டுமே ஆளுநர் சரியாக செய்கிறார்கள். மற்ற மாநிலங்களில் ஆளுநரை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசை இயங்கவிடாமல் செய்யும் வேலையை மட்டுமே ஆளுநர்கள் செய்கிறர்கள். குறிப்பாக 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இதை மட்டுமே முழு நேரமாக செய்துவருகிறது.

அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான மசோதக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், ஆளுநர் அதை கிடப்பில் போடுவதும் அல்லது திரும்ப அனுப்புவதும், மாநில அரசுகளிடம் கலந்தலோசிக்காமல் தன்னிச்சையாக போட்டி அரசை நடத்துவதுமான அரசியலமைப்புக்கு எதிரான வேலையை தொடர்ந்து செய்கிறது. அவ்வாறாக, தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவது தொடர்கிறது. குறிப்பாக, தண்டனை காலம் முடிந்தும் நீண்ட காலமாக சிறையில் வாடும் 7 தமிழர் விடுதலை, நீட் தேர்வு விலக்கு மசோதா, மாநில அரசு தேர்வாணயத்தில் தேர்வாகும் நபருக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு, எழுவர் விடுதலை, விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள், மசோதாக்களின் மீது கருத்துக்கள் கூறாமல் காலவரையின்றி தள்ளி போடுவது, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போடுவது, இதன் மூலம் தீர்மானங்களை, மசோதாக்களை நீர்த்துப்போக வைத்து மாநில அரசிற்கு நெருக்கடியை உருவாக்குவது என ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு மாநில அரசின் உரிமைகளில் தலையிட்டு வருவதற்கு ஆதாரப்பூர்வமான பல சம்பவங்களை கூறலாம்.

உதாரணத்திற்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு தமிழர்களை, தமிழக அமைச்சரவை தனக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161-வது பிரிவின் கீழ் தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்ய முன் வந்தது. அந்த பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தும், இரண்டு ஆண்டுகளாக அதை அப்படியே கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர். இப்படியான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க, ஆளுநருக்கு இதில் முடிவெடுக்க கால நிர்ணயம் எதுவும் இல்லையென்ற ஒரு காரணத்தால் இப்படி காலம் தாழ்த்தி அந்த மசோதாக்களை கிடப்பில் போட்டு நீர்த்து போகச் செய்கின்றனர்.

‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதி’ (‘Justice delayed is justice denied’) என்பது சட்டவியலின் முதல் கோட்பாடு ஆகும். அதனை புரிந்து அதன்படி செயல்படுபவராக ஆளுநர் இருத்தல் வேண்டும்.

ஆளுநரின் அதிகார வரம்பு

“ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு அனுப்பப்படும் ஆளுநருக்கு, மாநில அரசுக்கு உதவி மற்றும் ஆலோசனை (Aid & Advice) கொடுப்பதற்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. மாறாக அரசின் முடிவுகளை மாற்றவோ அல்லது தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கவோ எந்த அதிகாரமும் கிடையாது” என்று 2018-இல் ‘டெல்லி எதிர் இந்திய ஒன்றிய அரசு’ வழக்கில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மாநில அரசு கொண்டு வரும் எல்லா சட்ட மசோதாவும், ஆளுநரின் ஒப்புதலுக்குப்பிறகே சட்டமாகும். ஆளுநர் அவரது ஒப்புதலுக்காக வரும் மசோதாக்களில் தனக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை சுட்டிகாட்டி அமைச்சரவைக்கே மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம். அமைச்சரவை விரும்பினால் அதை சரிசெய்யலாம் இல்லையென்றால் ஆளுநரின் சந்தேகத்திற்கு பதிலளித்து மீண்டும் அந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால், இரண்டாவது முறை ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். ஆனாலும், தமிழ்நாட்டில் 2-வது முறையாக நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பியும் அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவருவது குறிப்பிடத்தக்கது.

முதல்வரை நியமனம் செய்தல், மாநில அமைச்சரவையை கலைத்தல், சட்ட பேரவையை கலைத்தல், மாநில அரசு சட்டப்படி நடைபெறவில்லை என குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்புதல், அமைச்சரவையை விரிவாக்குவதற்கு மறுத்தல், சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்துவது, சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்புதல் போன்றவற்றில் ஆளுநர் தன்னிச்சையான அதிகாரத்தை தடையின்றி தாராளமாக பயன்படுத்துகிறார். இந்த அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படும் போது அதை தடுக்க முடியாதபடி நீதிமன்றங்களுக்கு விலங்கிடப்பட்டுள்ளது. எனவே தான் ஒன்றிய அரசு ஆளுநர்களை கொண்டு தாங்கள் விரும்பாத அரசை கலைத்து தங்கள் விருப்பப்படி அமைச்சரவையை மாற்றி வருகின்றனர்.

துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றும் போது

ஆளுநர்களின் அதிகார விதிமீறல்

சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிகள் தங்கள் நலனுக்காக தன்னிச்சையாக அதிகாரத்தை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது தற்போது விசுவரூபம் எடுத்து நிற்கிறது. இதற்கு இங்கு நடந்த சம்பவங்களே சான்று. அப்படியான சில சம்பவங்களை பார்ப்போம்.

 1. 1952-ல் சென்னையில் ஐக்கிய முன்னணி பெரும்பான்மையாக வெற்றி பெற்ற போதும் ஆளுநர் பிரகாசா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாத ராஜாஜியை ஆட்சி அமைக்க அனுமதித்தார்.
 2. கேரளாவில் 1965-ல் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றும் ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அனுமதிக்கவில்லை.
 3. இராஜஸ்தானில் 1967-ல் எதிர்கட்சி தலைவரான லட்சுமணனுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இருந்தும், அதை அவர் ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் முன்பு நிரூபித்தும், அவரை ஆட்சி அமைக்க விடாது, ஆளுநர் சம்பூரணானந்தா காங்கிரஸ் கட்சியின் மோகன்லால் சுகாதியாவை ஆட்சி அமைக்க அனுமதித்தார்.
 4. மேற்கு வங்கத்தில் 1968-ல் அஜய் முகர்ஜி தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பான்மை இருந்தும் அந்த ஆட்சியை ஆளுநர் தர்மவீரா கலைத்தது குறிப்பிடத்தக்கது.
 5. ஒரிசாவில் 1971-ல் சிங்தேவ் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது. சட்டப் பேரவையை கலைத்திட முதல்வர் சிங்தேவ் ஆளுநரிடம் வற்புறுத்தியும், அவர்களின் ராஜினாமாவை மட்டும் ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆட்சியை கலைக்காமல் காலம் தாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
 6. ஆந்திராவில் 1984-ல் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் இருந்த முதல்வர் என்.டி.ராமாராவ் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றபோது அவரது ஆட்சியை, அவர் கட்சியிலிருந்த சிலர் உதவியோடு ஆளுநர் கவிழ்த்தார். அதோடு ராமராவ் கட்சியிலிருந்து விலகிய பாஸ்கர் ராவ் என்பவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர். இந்த துரோகத்திற்கு பின்னரும் என்.டி.ஆர் மக்கள் துணையோடு தனது தனிப் பெரும்பான்மயை நிருபிக்க, வேறு வழியின்றி ஒன்றிய அரசு என்.டி. ராமராவை மீண்டும் முதல்வராக ஆக்கியது.
 7. அருணாசலப் பிரதேசத்தில் 2015-ல் ஆளுநர் ஜெ.பி ராஜ்கோல்வா சட்டமன்ற கூட்டத் தொடர் நடக்கும் தேதியை அவரே தன்னிச்சையாக அறிவித்து சட்டசபையை கூட்ட செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை தனிப் பெரும்பான்மை இல்லை என்று கலைத்தார். ஆனால் உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு ஆளுநர் முடிவை நீக்கியது, அதோடு “தனது சொந்த விருப்பத்துக்காக சட்டமன்றத்தை கூட்டுவது ஆளுநரின் வேலை அல்ல. இது சட்டமன்ற செயல்பாடுகளில் குறுக்கிடுவதே ஆகும்” என்றது உச்சநீதிமன்றம்.
 8. 2017-ல் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையாக காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த போதிலும் பாஜக தலைமையில் ஆட்சியை நிறுவிட ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
 9. புதுச்சேரியில் கிரேன்பேடி ஆளுநராக இருந்த போது அங்கு ஆளுநரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு ‘நியமன முதல்வராக’ செயல்பட்டு வருவதாகவும், ஆட்சியின் அன்றாடப் பணிகளில் குறுக்கிட்டு, அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு போடுவதும் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதாகவும் அப்போதைய மாநில முதல்வர் நாராயணசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியதும், மே 8, 2018 அன்று இது தொடர்பாக அரசு ஆணை ஒன்றை பிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது. (அதாவது ஆளுநர் அல்லது ஆளுநர் அலுவலகம் வழியாக அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை, தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரோடு கலந்து பேசி அவர்களின் ஒப்புதலை பெற்ற பிறகே செயல்படுத்த வேண்டும் என்பதே அந்த ஆணை)
 10. அண்மையில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாத பாஜகவின் எடியூரப்பாவை அவசர அவசரமாக ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநர், அவரை முதலமைச்சராக பதவி உறுதிமொழியும் ஏற்க வைத்து பின்பு அவர் பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகியதும் குறிப்பிடத்தக்கது.
 11. தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தவுடன் அப்போது தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர ராவ் அரசியலமைப்புக்கு எதிராக பல்வேறு காரியங்களை செய்தார். குறிப்பாக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க கோரிய சசிகலாவை பதவியேற்க அழைக்காமல் தமிழ்நாட்டுக்கே வராமல் காலம் தாழ்த்தியது. ஆளுநர் வேலையை மீறி ஒ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரையும் இணைத்து வைத்தது.
 12. அவருக்கு அடுத்து வந்த பன்வாரிலால் புரோகித் மாநில அரசை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஊர் ஊராக கள ஆய்வுக்கு சென்றது என இல்லாத வேலைகளை செய்தனர். அந்த வரிசையில் தற்போது இருக்கக்கூடிய ஆளுநர் ஆர்.என். இரவியும் அரசியலமைப்பு எதிராக பல்வேறு வேலைகளை செய்துவருகிறார்.

ஆளுநர் ரவியின் சர்ச்சைக்குரிய வேலைகள்

 1. குடியரசு தினத்தன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் “தெய்வீகம் கமழுகிற புனித திருக்குறள்”, “திருக்குறளில் இம்மைக்கும் மறுமைக்குமான ஞானம் காணப்படுகிறது”, “ஒவ்வொரு பாரதிய குடிமகனின் உளத்திலும் ஸ்ரீ ராமன் குடியிருக்கிறார்” என்றெல்லாம் மத ரீதியான கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார்.
 2. இதே உரையில் நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளின் பிரதிநிதித்துவம் அதிகரித்து உள்ளதாக உண்மைக்கு மாறாக பேசியதும், மும்மொழி கொள்கையை ஆதரித்து “நமது மாணவர்களுக்கு பிற இந்திய மொழிகளின் அறிவை பறிப்பது அநீதியானது” என்றதும் குறிப்பிடத்தக்கது.
 3. சென்னை வேப்பேரியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய ஆளுநர் ரவி “பிராந்திய வளர்ச்சி நாட்டுக்கு உகந்ததாக இருக்காது, அது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
 4. ஊட்டி கவர்னர் மாளிகை, பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே அதாவது சுமார் 145 வருடங்களாக, பச்சை கலரிலே வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தின் பாதுகாப்பு கருதியே இதுநாள் வரை தொடர்ந்து ஒரே வண்ணம் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆளுநர் ரவி அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன் மகளின் திருமணத்திற்காக ராஜ்பவனின் பாரம்பரிய நிறத்தை மாற்றி வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிக்க வைத்துள்ளார்.
 5. கோவை தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ரவி, “கூட்டாட்சி பற்றி பேசுபவர்கள், இந்தியா 1947-ல் பிறக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா இயற்கையாக உருவாகி பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்து வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார். ஆனால், அதற்கு நேரெதிராக பல்வேறு தேசிய இனங்களின் சேர்க்கை தான் இந்தியா என்பது தான் வரலாறு.
 6. மேலும் அவர் ‘பாரதத்தின்’ ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை வாழ்ந்த மக்களின் பலதரப்பட்ட கலாச்சார, ஆன்மீகங்களால் இந்தியா உருவானதாகவும் இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுவதற்கு முன்பே அதை ‘பாரதம்’ என்றே அழைப்பதாக வரலாற்றுக்கு புறம்பாக பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 7. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தில் நடந்த இராமநவமி விழாவில், இந்தியா இராம இராஜியத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று பேசியது. அதே அயோத்திய மண்டபத்தை தான் ஆளுநர் வருகைக்கு சில நாட்களுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துகொண்டது செல்லுமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 8. ஆளுநர் மாளிகையை அரசு சாராத விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தனியாருக்கு கொடுத்ததோடு இல்லாமல், அதில் விருந்தினராகவும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் விருது வாங்கியவர் யாரென்றால் அயோத்தி வழக்கில் இராமர் கோவிலுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் பாராசரன். ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் கூடாராமாகவே ஆளுநர் ரவி மாற்றியமைத்தார்.
 9. மிக முக்கியமாக தற்போது ஏப்ரல் 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் ஊட்டியில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் யாரும் இல்லாமல் துணை வேந்தர்கள் மாநாட்டினை ஆளுநர் நடத்தி வருவது பேசு பொருளாக உள்ளது. அதில் தமிழ்நாடு நிராகரித்த புதிய கல்விக் கொள்கையை திணிப்பது குறித்தும், 2047-இல் இந்தியா என்ற ஆர்எஸ்எஸ்-பாஜகவின் கொள்கை குறித்தும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களை பேச்சாளர்களாக கொண்டு அந்த மாநாட்டினை நடத்தினார்.
ஆளுநர் ஊட்டியில் நடத்திய துணைவேந்தர்கள் மாநாடு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் இருப்பது ஒட்டுமொத்த மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரானது. அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தற்போது தலைதூக்கி இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நீட் தேர்வு விலக்கு மசோதாவின் நிலை

2021ம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக (பாஜகவின் நால்வர் தவிர்த்து) இயற்றிய நீட் விலக்கு தீர்மானம் ஏறக்குறைய 5 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டு கடந்த பிப்ரவரி 3 அன்று அதில் சில குறைகள் இருப்பதாக சுட்டிக் காட்டி மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநரால் திருப்பி அனுப்பப் பட்டது.

அதன் பின்னர் பிப்ரவரி 8, 2022 அன்று சட்டப்பேரவையில் சிறப்பு அமர்வு கூடி நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது பற்றி விவாதித்து, பாஜக தவிர்த்து பிற கட்சிகள் நீட் விலக்கு மசோதாவை ஆதரிக்க, மசோதா மீண்டும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு 2-வது முறையாக அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் ஜனவரி 5, 2022 அன்று ஆளுநர் ரவி அவர்கள் சட்டப்பேரவையில் அரசின் திட்டங்களை விளக்கி ஆற்றிய அவரின் முதலாவது உரையில், நீட் தேர்வானது கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக சமமற்ற தளத்தை உருவாக்குகிறது என்பதும், அது தேவையற்றது என்பதும் அரசின் கருத்தே அன்றி அது உண்மையல்ல என்ற கோணத்தில் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

நீட் விலக்கு மசோதா மட்டுமின்றி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பற்றிய தீர்மானம், பாரதியார் பல்கலைக்கழக பிரச்சனை, துணை வேந்தர்கள் நியமனம், TNPSC, அண்ணா பல்கலைக் கழக பிரச்சனை என தற்போதைய நிலவரப்படி 18 சட்டமன்ற தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக வரிசையில் காத்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதும், அதற்கும் ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதும் கூடுதல் தகவல்.

ஆளுநர் பதவி நீக்கப்பட வேண்டியதன் அவசியம்

ஆளுநர் என்பவர் மாநில அரசின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை தரும் ஒரு கண்காணிப்பாளர் மட்டுமே. ஆனால் அவரது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் போது அதை எதிர்ப்பது மாநில அரசின் சனநாயக கடமையாகும்.

ஜெயலலிதா மற்றும் சென்னா ரெட்டி

அதனால் தான் அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் இப்படி ஆட்சியில் தலையிட்ட ஆளுநர் சென்னா ரெட்டி என்பவரை கடுமையாக எதிர்த்தார். அதோடு, மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்பதற்காக சென்னா ரெட்டியின் வாகன அணிவகுப்பை வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் சுதந்திர நாள், மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்துகளையும் அம்மையார் ஜெயலலிதா புறக்கணித்தார். அப்போது அதிமுகவினர் ஆளுநரை எதிர்த்து ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று அவருக்கு நெருக்கடியை அதிகரித்தனர். இப்படியெல்லாம் ஆளுநருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளால் அதன் பிறகு தமிழகத்தில் எந்த ஆளுநரும் அரசின் ஆட்சி அதிகாரங்களில் தலையிட்டதில்லை. அதே போன்று கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலும் ஆளுநர் என்பவர் வெறுமனே பதவியில் மட்டுமே இருந்தார்.

அதேபோல் கெஜ்ரிவால் ஆட்சியில் டெல்லி மாநில அரசின் நிர்வாகத்தை துணைநிலை ஆளுநர் முடக்கினார். அதிகாரிகள் முதல்வர் உத்தரவை ஏற்க மறுத்தனர். தலைமை செயலாளர் அன்ஷீ பிரகாஷ், கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். ரேஷன் பொருள்களை வீடுகளுக்கு நேரில் கொண்டு போய் சேர்க்கும் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத் திட்டங்களை முடக்குவதற்கே இத்தகையதொரு அடக்குமுறை என கூறிய ஆம் ஆத்மி கட்சியினர் பிறகு ஆளுநர் மாளிகையிலேயே 24 மணி நேரம் அமர்ந்து முற்றுகை போராட்டத்தை நடத்திய பிறகு, இறுதியில் உச்சநீதிமன்றம் மாநிலத்தின் உரிமையை மீட்கும் வகையில் தீர்ப்பு வழங்கி மாநில உரிமையை நிலைநாட்டியது.

மேற்கு வங்கத்திலும் முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பு செய்த மசோதாக்கள் தொடர்பாக பிரதமருக்கு தொடர்ந்து 4 முறை புகார் கடிதம் எழுதி, இந்திய அளவில் அதை அம்பலப்படுத்தி விவாதமாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையிலே தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சி மற்றும் இயக்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். கருப்பு கொடியை ஏந்தி எதிர்ப்பை காட்டுவது காலங்காலமாக இருந்து வரும் ஒரு சனநாயக முறை. இந்த நிகழ்ச்சியில் எந்தவொரு அத்துமீறலோ அல்லது ஆளுநரின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலோ நடக்கவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது. ஆனாலும் பாஜகவின் எடுபிடி எடப்பாடி பழனிச்சாமி ஆளுநருக்கு பாதுகாப்பில்லை என வெளிநடப்பு செய்து அறிக்கை கொடுத்து வருகிறார்.

தற்போது உதகையில் மாநில அரசின் பிரதிநிதிகளை தவிர்த்து விட்டு துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துமளவிற்கு ஆளுநர் வந்துவிட்டார். இந்த நேரத்தில் மாநில அரசுகளே இனி மாநில அரசின் கட்டுபாட்டிலுள்ள பல்கலைகழகங்களில் துணைவேந்தர்களை நியமித்துக்கொள்ளும் என்று இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கிற மசோதா மிக முக்கிய நடவடிக்கையாகும். இதன் மூலம் ஆளுநரை கொண்டு போட்டி அரசை நடத்தி மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கலாமென்ற நினைத்த ஒன்றிய அரசிற்கு நெருக்கடி உண்டாகியுள்ளது. இத்தோடு இது நிற்காமல் ஆளுநர் பதவியையே இந்திய அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களை ஒன்றிணைத்து செயல்பட்டால் மாநில சுயாட்சியில் அது மைல்கல்லாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »