பெட்ரோல்-டீசல் விலையேற்றத்திற்கு காரணம் பாஜகவா பத்திரங்களா?

பெட்ரோல்-டீசல் விலையேற்றத்திற்கு காரணம் பாஜகவா பத்திரங்களா?

கடந்த 2022 மார்ச் மாதம் நடைபெற்ற 5 மாநில தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய அரசு நாள்தோறும் சிறிது சிறிதாக பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்தியது. பல மாநிலங்களில் லிட்டர் 110 ரூபாயையும் தாண்டி பெட்ரோல் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விலை ஏற்றத்திற்கான காரணத்தைக் கேட்கும்போது, “முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டது. அவை இன்றும் திருப்பிச் செலுத்தப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட எண்ணெய் பத்திரங்களை திருப்பி செலுத்தியதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.” என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த எண்ணெய் பத்திரங்கள் என்றால் என்ன? இவற்றின் நிலுவைத்தொகை எவ்வளவு என்பதை நாம் தெரிந்து கொண்டால், பெட்ரோல் விலையேற்றத்தின் உண்மைக் காரணம் நமக்குத் தெரிய வரும்.

எண்ணெய் பத்திரங்கள்:

2005-2008 காலகட்டத்தில், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 147 டாலராக இருந்தது. இதனால் எரிபொருள் விலை பலமடங்கு அதிகரித்தது. அப்போது பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்க முடிவு செய்தது. ஏனெனில், எரிபொருளின் விலை கட்டுக் கடங்காமல் உயர்ந்தால், பண வீக்கம் அதிகரிக்கும். இதனால் அனைத்து பொருட்களின் விலையேறும். மேலும், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்பதால், எரிபொருளின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு முடிவு செய்தது.

ஆனால், எரிபொருளின் விலையைக் குறைத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படும். அந்த நட்டத்தை ஈடு கட்டுவதற்காகவே அரசாங்கம் அந்நிறுவனங்களுக்கு மானியம் வழங்க முடிவு செய்தது. அந்தக் காலகட்டத்தில் நிதி பற்றாக்குறை மற்றும் பொருளாதார மந்தநிலை இருந்ததால் பணத்திற்குப் பதில் எண்ணெய் பத்திரங்களை அரசாங்கம் மானியமாக வழங்கியது.

இந்த எண்ணெய்  பத்திரங்கள் அரசாங்கத்தால் வாங்கப்பட்ட கடனைக் குறிக்கும். பொதுவாக அரசாங்கங்கள் நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவதற்காகப் பத்திரங்களைப் பயன்படுத்துகின்றன.  அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான உத்திரவாதத்தை தருபவை இந்தப் பத்திரங்களே.  அரசுக்கு அளித்த கடன் தொகையும் அதை திருப்பிச் செலுத்த வேண்டிய கால அளவு விவரங்களும் இந்தப் பத்திரங்களில் இருக்கும்.  கடனுக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அரசு வட்டியாக செலுத்தும்.

அரசாங்கம் ஒரு கடன் பத்திரத்தை அதன் முதிர்வு தேதி வரை வைத்திருக்க வேண்டியதில்லை. முதிர்வு தேதிக்கு முன்னரே கடனை திருப்பிச் செலுத்தலாம் அல்லது  பத்திரம் அதன் முதிர்வு தேதியை அடையும் போதும் செலுத்தலாம். இந்தப் பத்திரங்களுக்கு அரசாங்கம் ஆண்டுதோறும் வட்டி செலுத்தி, இறுதியாக, முதிர்வு தேதியில் அவற்றின் முழுத் தொகையையும் செலுத்தி விடும். இப்படி 2005 முதல் 2012 வரை ரூ.1.44 லட்சம் கோடி மதிப்புள்ள பத்திரங்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் வட்டி விகிதம் 6.35%-இல் இருந்து 8.4% வரையும், 15-20 ஆண்டுகள் கழித்து அசலை திருப்பி செலுத்தும் வகையிலும் இருந்தது.

நாள்தோறும் விலை மாற்றும் முறை:

2010-இல் எண்ணெய் பத்திரங்கள் முறை நிறுத்தப்பட்டு, எண்ணெய் நிறுவனங்களுக்கு பணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 2010-இல், கச்சா எண்ணெய்யின் சந்தை விலையைப் பொறுத்து, பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலைகள் மாற்றப்பட்டன. ஜூன் 2017 முதல், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நாள்தோறும் மாற்றும் முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிதி நிலை அறிக்கை 2022-23:

எண்ணெய் பத்திரங்கள் வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் கழித்து, அதாவது 2022-இல், அவற்றின் நிலுவைத் தொகையை நாம் 2022-23 நிதி நிலை அறிக்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதன்படி, பாஜக அரசு 2016 முதல் பத்திரங்களின் நிலுவைத் தொகையை செலுத்தாமல், வட்டித் தொகையான 9,989 கோடியை மட்டும் எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி வந்திருக்கிறது.

அட்டவணை-1

ஆண்டுபத்திரங்களின் நிலுவைத் தொகை செலுத்திய வட்டி
2016-17  1,30,923 கோடி9989 கோடி
2017-181,30,923 கோடி9989 கோடி
2018-191,30,923 கோடி9989 கோடி
 2019-201,30,923 கோடி9989 கோடி
2020-211,30,923 கோடி9989 கோடி
(அட்டவணை-1 தகவல் ஆதாரம்: நிதி நிலை அறிக்கை 2022-23)

2016-இல் ரூ.1,750 கோடி மதிப்பிலான இரண்டு பத்திரங்கள் மட்டுமே முதிர்ச்சியடைந்தன. இதற்காக 3,500 கோடியை பாஜக அரசு திருப்பிச் செலுத்தியுள்ளது. இன்னும் 1,30,923 கோடி நிலுவைத்தொகை செலுத்தப்படாமலே உள்ளது.

அட்டவணை-2

ஆண்டுபத்திர முதிர்வு கட்டணம்
2015-163,500 கோடி
2021-2210,000கோடி
2023-2431,150 கோடி
 2024-2552,860 கோடி
2025-2636,913 கோடி

எனவே 3,500 கோடியையும் வட்டியையும் மட்டும் திருப்பிச் செலுத்தி விட்டு, எண்ணெய் பத்திரங்கள்தான் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திற்குக் காரணம் என்று கூறுகிறது  பாஜக அரசு. ஆனால், பெட்ரோலியப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாயை இந்தப் பத்திரங்களோடு ஒப்பிடும் போதுதான், விலை ஏற்றத்திற்கான உண்மைக் காரணம் நமக்குத் தெரிய வரும்.

பத்திரங்களை மிஞ்சும் வரி:

உலகளவில் எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கும் நாடான இந்தியாவில், பெட்ரோலியப் பொருட்களில் இருந்து கிடைக்கும் வரி, “பொன் முட்டையிடும் வாத்தாகவே” கருதப்படுகிறது. இன்று நாம் பயன்படுத்தும் பெட்ரோலின் அடிப்படை விலை 42% மட்டுமே. இதனுடன் மத்திய கலால் வரி, வாட் வரி, விற்பனை தரகு என அனைத்து வரிகளும் 58% வரை சேர்க்கப்படுகின்றன. சுருங்கக் கூறினால், 100 ரூபாய்க்கு நமது வாகனத்தில் பெட்ரோல் நிரப்பினால், அதில் 42 ரூபாய் பெட்ரோலுக்கும் 58 ரூபாய் வரிக்கும் செலுத்துகின்றோம்.

இந்த அனைத்து வரிகளிலும் கலால் வரி மிக அதிகமானது (கிட்டத்தட்ட 31%). ஒவ்வொரு முறையும் கலால் வரி உயர்த்தப்படுவதால் தான், மக்களின் எரிபொருள் வரிச்சுமை அதிகமாகிறது. குறிப்பாக அண்மைக் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி பல மடங்காக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மே 2020 வரை, லிட்டருக்கு ரூ.22.98 ஆக இருந்த கலால் வரி, 2021-இல் ரூ.32.98 ஆக உயர்த்தப்பட்டது. எனவே ஒன்றிய அரசிற்கு பெட்ரோலியப் பொருட்களால் கிடைக்கும் கலால் வரி எண்ணெய் பத்திரங்களின் மொத்த தொகையை விட மிக அதிகம்.

இதற்கு சான்றாக 2020-21-இன் கலால் வரித் தொகையைக் கூறலாம். அந்த ஆண்டில் மட்டும், பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கிடைத்த கலால் வருவாய் ரூ.3,71,000 கோடியாக இருந்தது. அதே போல் 2021-22-ல் பெட்ரோலியத் துறையிலிருந்து கிடைத்த கலால் வருவாய் மட்டும் கிட்டத்தட்ட ரூ.4,50,000 கோடி (பார்க்க அட்டவணை 3).

அட்டவணை 3

நிதி ஆண்டுகலால் வரி
2013-2014ரூ.53,090 கோடி
2014-2015ரூ.74,158 கோடி
2015-2016ரூ. 1,55,638 கோடி
2016-2017ரூ.2,17,488 கோடி
2017-2018ரூ.2,04,910 கோடி
2018-2019ரூ.1,54,178 கோடி
2019-2020ரூ.2,03,010 கோடி
2020-2021ரூ.3,71,000 கோடி
2021-2022ரூ. 4,50,000 கோடி.
(அட்டவணை தகவல் ஆதாரம்: CNN-News18 செய்திக் குறிப்பு)

இதன் மூலம் நிலுவையில் உள்ள ₹1.4 லட்சம் கோடி எண்ணை பத்திரங்களை செலுத்தியிருக்க முடியும். ஆனால்  பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எண்ணெய் பத்திரங்களின் அசல் தொகையில் ₹3,500 கோடியை மட்டுமே செலுத்தியுள்ளதை நாம் அட்டவணை 2-இல் பார்த்தோம்.

எனவே, எண்ணை பத்திரங்களையும் பிற காரணங்களையும் பெட்ரோல் விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூற முடியாது. மிகுதியான வரிகள் இருப்பதே உண்மைக் காரணம்.

 நிறுவனங்களின் லாபம் = மக்களின் துயரம்:

அரசு நினைத்திருந்தால், அதிகப்படியான கலால் வரியைக் குறைத்து மக்கள் விலையேற்றத்தால் படும் துன்பங்களை சற்று குறைத்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாததால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வு பொது மக்களை தற்போது நேரடியாக பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் பாரத் பெட்ரோலியம், எச்பி, இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்களோடு, தனியாரான ரிலையன்ஸ், வேதாந்தாவின் CAIRN நிறுவனங்களும் தற்போது எரிபொருளை விற்பனை செய்து கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள்தான் வரிகள் மூலம் அரசாங்கத்திற்கு அதிக அளவு வருவாயை உருவாக்குகின்றன. அரசாங்கத்தால் வசூலிக்கப்படும் வரிகள் மூலமே மக்கள் நலத் திட்டங்கள், தடுப்பூசி திட்டங்கள், மானியங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன.

ஆனால், வரி வருவாயைப் பெருக்குவதற்காக ஏற்கெனவே கொரோனா பொதுமுடக்கம் மற்றும் வேலையின்மையால் அல்லல்படும் மக்களை மேன்மேலும் வதைக்கிறது ஒன்றிய  பாஜக அரசு. பொதுத்துறை நிறுவனங்கள் இவ்வளவு லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் போதே அதன் பங்குகளைத் தனியாருக்கு விற்கிறது. ஒருவேளை அனைத்து நிறுவனங்களும் தனியார் மயமானால், அப்போது விதிக்கப்படும் வரிகள் பொது மக்களை வாட்டி வதைத்து விடும்.

தொடர்ந்து பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டே சென்றால் அது நாளடைவில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் பாதிக்கும். குறிப்பாக நடுத்தர வர்க்க குடும்பங்கள் விலை ஏற்றத்தை சமாளிப்பதற்காக தங்கள் அன்றாட உணவு, மருந்துகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்படும்.

ஒரு நாட்டின் மோசமான பொருளாதாரக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் மக்கள் மீது என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை தற்போதுள்ள இலங்கையின் நிலை நமக்கு உணர்த்தும். அங்கு கட்டுக்கடங்காத எரிபொருள் விலையினால் சங்கிலித் தொடர் போல் அனைத்து பொருட்களின் விலைளும் கடும் ஏற்றம் அடைந்தன. குழந்தைக்குத் தேவையான பால் மாவு கூட வாங்க முடியாத நிலை இருப்பதால், மக்கள் அங்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையைப் போல் இந்தியாவிலும் பொருளாதார சிக்கல்கள் எழுமோ என்று நாம் அச்சப்பட்டுக் கொண்டிருக்கையில், இதைப்பற்றி எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், மாநிலங்கள் வாட் வரியை குறைக்காததனால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று விலை உயர்வுக்கான பழியை தூக்கி பிரதமர் மோடி மாநிலங்கள் மீது போடுகிறார். அதுவும் குறிப்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா என பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்கிறார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என எளியவர்கள் கூட உணர முடிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, தனது கார்பரேட் நண்பர்கள் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில், எளிய மக்களின் பட்ஜெட்டில் கை வைக்கிறார். அதை மறக்கடிக்க, தனது இந்துத்துவக் கருத்துக்களைப் பரப்புவத்திலேயே ஒன்றிய  பாஜக அரசு குறியாக இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். எனவே மக்களை வதைக்கும் ஜி.எஸ்.டி, கலால் வரி போன்றவற்றைக் குறைத்து, விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வருவது இந்நேரத்தின் மிகமுக்கியமான தேவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »