சாதிய ஆவணப்படுகொலைக்கு தனிச்சட்டம் தேவை குறித்து நீர்த்திரை ஊடக சந்திப்பு

சென்னையில் பணிபுரிந்து வந்த ஐ.டி ஊழியரான கவினை ஆவணப் படுகொலை செய்த சுர்ஜித் குறித்தும், பல ஆவணப்படுகொலைகளுக்கு தனிச் சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், இது போன்ற படுகொலை சம்பவங்களின் சமூக பின்னணி குறித்தும், சாதிவெறியர்கள் வாக்கு அரசியலை தீர்மானிக்கும் ஆற்றல்களாக இருப்பதான போலிக் கட்டமைப்புக் குறித்தும், அதனை ஊக்குவிக்கும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். கும்பல்கள் குறித்தும், குற்றச்சம்பவங்களுக்கு பின் இருக்கும் அதிகாரிகளின் மெத்தனம் குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நீர்த்திரை ஊடகத்துக்கு ஆகத்து 01, 2025 அன்று விரிவான நேர்காணல் வழங்கி இருந்தார்.

இந்த பேட்டியின் சுருக்கங்கள் :

  • சாதிவெறியர்கள் வாக்கு  அரசியலை தீர்மானிக்கும் ஆற்றல்களாக இருப்பதாக கருதி பின்வாங்குவது கோழைத்தனம். வாக்கு அரசியலுக்காக சாதிய வன்முறையை எதிர்த்து நிற்காமல், சாதிவெறியர்களின் அழுத்தத்திற்கு ஆட்படுவது சந்தர்ப்பவாதம். சாதிய வெறியூட்டும் சமூகவிரோதிகள் சொந்த சமூகத்தில் பெரும் ஆதரவு கொண்டவர்கள் அல்ல.
  • சமூக-விரோத, ரவுடி அரசியலின் மற்றுமொரு முகமாகவே சாதிவெறி அரசியலை  கூர்தீட்டுகிறார்கள். இதுகுறித்து வெளிப்படையாக நாம் விவாதிக்க வேண்டும். அனைத்து சாதிகளிலும் இத்தகைய சாதிய வன்முறைகளை எதிர்க்கக்கூடியவர்கள், நிராகரிக்க கூடியவர்கள் இருக்கிறார்கள். இந்த சனநாயக சக்திகளை வலுப்படுத்த முயல்வதே அரசியல் நகர்வு. இதுவே சாதிவெறியர்களை தனிமைப்படுத்தும்.
  • சாமானிய ஏழை மக்கள் அனைத்து சாதிகளிலும் உண்டு, அவர்களில் பலர் இச்சாதிவெறியர்களிடமிருந்து ஒதுங்கி இருக்க விரும்புகிறார்கள். இவர்கள் நிறைய உண்டு. இவர்களை ஆதரித்து வலுப்படுத்துவதே முதன்மையானது, அல்லது இவர்கள் குரல்களை வலுப்படுத்தும் சூழலை உருவாக்குவதே நம் பணி. அதை செய்யாமல் போகும்பட்சத்தில் சாதிவெறியர்கள் வளர்வதை நம்மால் தடுக்க இயலாது.
  • சாதிவெறி நபர்களை பின்னுக்கிருந்து ஊக்குவிக்கும் அரசியல்-சக்திகள் கடந்த காலத்தில் இருந்ததைவிட பாஜக-ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்குப் பின் அதிகரித்துள்ளன. சாதிய உணர்வுகளை, அரசியல்- வன்முறையாளர்களாக்கும் பணியை செய்பவர்கள் இந்துத்துவ கும்பல்களே. இதுகுறித்து விரிவாக பேச வேண்டிய சூழல் இது. மேலோட்டமான சாதி-எதிர்ப்பு சமூகவலைதள விவாதங்கள் இதன் செயல்திட்டத்திற்கு  பயன்படாது. மக்கள் பணி செய்வோம்.

நிருபரின் கேள்விகளுக்கு தோழர் திருமுருகன் காந்தியின் பதில்கள் கீழே விரிவாகப் படிக்க:

நிருபர்: வணக்கம் தோழர்.

தோழர் திருமுருகன் காந்தி: வணக்கம்.

கேள்வி: தமிழகத்தில் மீண்டும் ஒரு சாதிய ஆணவப் படுகொலை நடைபெற்றிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த கவின் என்ற இளைஞர், அவர் காதலித்த பெண்ணுடைய தம்பியால் நடிரோட்டில் வெட்டப்பட்டு சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இந்த ஆணவப் படுகொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை தடுப்பதற்கான முயற்சிகள் கடுமையாக எடுக்கப்படவில்லை அல்லது இதன் மீது கவனம் செலுத்தப்படாத காரணத்தினால் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தால், இது போன்ற துயரமான சம்பவங்கள் நடந்திருக்காது. சாதி வெறியை ஒரு மூலதனமாக வைத்து அரசியல் செய்யக்கூடியவர்கள், தொழில் செய்யக்கூடியவர்கள், சட்ட விரோத நடவடிக்கை மேற்கொள்ளக் கூடியவர்கள் பொது சமூகத்தில் இது போன்ற இளைஞர்களினுடைய எதிர்காலத்தை நாசப்படுத்துவதை  உடனடியாக நாம் தடுத்தாக வேண்டும். நாம் இதை வெறும் ஒரு குற்றச்செயலாக மட்டும் பார்க்க முடியாது. குற்றவாளிகள் சாதிய உணர்வோடு இருக்கக்கூடிய குற்றவாளிகள். சமூகத்திற்குள்ளாக தங்களது சாதியப் பிடிப்பிற்கும், தங்களுடைய குற்றச்செயல்களுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கும், இந்த ஆணவப் படுகொலைகளை அவர்கள் தூண்டி விடுவதை நாம் இணைத்துதான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

கேள்வி:  நீங்கள் அண்ணாசாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில், குற்றவாளியுடைய புகைப்படம் வெளியிடப்பட வேண்டும், கைது செய்யப்பட வேண்டும் என்று சொன்னீர்கள். போரட்டம் செய்த அன்று இரவு குற்றவாளியின் தந்தையான எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்படமும் வெளியில் வந்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இது ஏன் இவ்வளவு நாள் ஆனது? நேற்று(30.07.2025) நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஒரு குற்றவாளி சாதாரணமாக திருடினால் (பிக் பாக்கெட்) உடனே புகைப்படத்தை போட்டு விடுகிறார்கள். அதற்கான பெரிய பரப்புரை செய்யப்படுகிறது. இவர்தான் குற்றவாளி என சொல்லி எல்லா இடத்திலும் போடப்படுகிறது. காவல் துறையில் இருக்கக்கூடிய பெற்றோர்களுடைய மகன் இதுபோல ஒரு குற்றத்தை செய்திருக்கிறான், அவர்கள் அம்மா அப்பாவுக்கு தெரியாமல் நடந்திருக்காது. அவன் ஏற்கெனவே கத்தியை வைத்துக்கொண்டு சமூகவலைதளத்தில் போட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்தாலே நமக்கு தெரிகிறது. இதுபோல ஒரு வேலையை செய்யக்கூடிய ஒரு மகனை கண்டித்து திருத்தி இருக்க வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு இருக்கிறது. ஆனால் காவல் துறையை சேர்ந்த பெற்றோர்களே இதைக் கண்டித்து தடுக்காமல் விட்டதும், அவர்களும் உடந்தையாக இருக்கக்கூடிய காரணத்தினாலும் விசாரணையும் கைதும் செய்யப்பட வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். ஆனால், இந்த குற்றவாளிகளுடைய புகைப்படம் கூட வெளியில் விடாமல் காவல்துறை தடுத்தது என்பது காவல் துறையினுடைய நடவடிக்கை மீது நமக்கு சந்தேகம் வருகிறது. நீங்கள்(அதிகாரிகள்) கொலையாளியை பாதுகாக்கிறீர்கள். சாதியவாதியை பாதுகாக்கிறீர்கள். அவ்வளவுதான் விசயம். கொலை செய்தது யாராக இருந்தால் என்ன? எந்த அதிகாரத்தில் இருந்தால் என்ன? எந்த சாதியாக இருந்தால் என்ன? எந்த மதமாக இருந்தால் என்ன? எப்பேர்ப்பட்ட பணக்காரனாக இருந்தாலும் குற்றவாளி குற்றவாளிதான் என்பதுதான் சட்டத்தின் வழியாக நாம் அறிந்தவை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். காவல் துறையை சார்ந்தவங்களாக இருக்கிறார்கள் என்பதனாலே பாதுகாப்பீர்களா? என்கிற கேள்வியை எழுப்புகிறோம்.

கேள்வி: ஒரு எளிய நபர் ஒரு குற்றம் செய்தால் அரசு கைது செய்யும், ஆனால் சுர்ஜித் அப்பா எஸ்.ஐ பதவியில் இருக்கிறார். அவர் ஒரு குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டால்தானே கைது செய்யப்படுவார்?

பதில்: அதை கைது செய்துதான் நிரூபிக்க வேண்டும். கைது செய்து விசாரணை நடத்தினால் தான் நிரூபிக்க முடியும். நாங்களும் தான் சிறைக்கு போயிருக்கிறோம். எங்கள் குற்றத்தை நிரூபித்தா சிறைக்கு அனுப்புனீர்கள்? அவர்களை நீதிமன்ற காவல் எடுத்திருந்தால் தானே உண்மை என்னவென்பது தெரியும். அப்போதுதானே மற்றவர்களுக்கும் ஒரு பயம் வரும். காவல் துறையை சேராதவராக இருந்தால் அடுத்த நிமிடம் கைது செய்யப்படுவார். ஆனால் குற்றம் செய்த அதிகாரிகளை கைது செய்வதற்கு ஏன் தயக்கம்? குற்றவாளிகளை பாதுகாக்கக்கூடிய ஒரு கட்டமைப்பாக காவல் துறைக்குள் ஒரு குறிப்பிட்ட தரப்பு வேலை செய்கிறதோ என்கிற சந்தேகம் எப்போதும் உண்டு.

கேள்வி: குற்றவாளியான அதிகாரிகளை பாதுகாத்து என்ன செய்யப் போகிறார்கள்?

பதில்: சாதி பெருமையை காப்பாற்றுவதற்குதான் அதிகாரிகளைப் பாதுகாக்கிறார்கள். அவன் (சுர்ஜித்) சாதியவாதியாக இருக்கிறான். இவ்வளவு சாதிவெறியனாக இருக்கின்றவனை, அவனின் அம்மா அப்பா ஏன் தடுக்கவில்லை எனும் போது, அவர்களே சாதியை ஊட்டி வளர்த்திருக்க வேண்டும் என்பதே தெரிகிறது.  இப்படி இல்லாமல் சாதிவெறியனாக மாறியிருக்க வழியில்லை. மகனை சாதி வெறியனாக வளர்த்த இவர்கள் (குற்றவாளியான காவல்துறை அதிகாரிகள்) விசாரித்த வழக்குகள் எப்படி இருந்திருக்கும் என சிந்திக்க வேண்டும்.

அந்த வழக்குகளில் சந்தேகப்படக்கூடிய நபர்களாக பட்டியல் சமூகத்தை சார்ந்த, பிற சாதியை சார்ந்த இளைஞர்கள் குற்றவாளிகளாக இருந்திருந்தால் அவர்களை எப்படி நடத்தி இருப்பார்கள்? என்ற கேள்வி நமக்கு வருகிறது. உள்நோக்கத்தோடு வழக்கு நடத்தி இருப்பார்களா, குற்றப் பத்திரிக்கை தயாரித்து இருப்பார்களா என நமக்கு சந்தேகம் எழுகிறது. அதே சாதிக்காரன் குற்றம் செய்திருந்தால், அவனுக்கு எப்படி குற்றப் பத்திரிக்கை இவர்கள் தயார் செய்து இருப்பார்கள்? என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. இது ஒரு குற்றமல்ல. இதற்குப் பின் பல குற்றங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கும் என்பதால் நாம் இதைப் பேசுகிறோம்.

அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்களுக்கான வலிமை என்ன? சட்டத்தை பயன்படுத்துவதற்கும் யாரை வேண்டுமானாலும் குற்றம் சாட்டுவதற்குமான அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் சிறைப்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. அப்படிப்பட்ட அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் மேல்தான் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இராணுவத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர் என்பதாலேயே ஒருவரை சுட முடியாது. அப்படி தவறாக தேவையில்லாமல்/ உத்தரவு இல்லாமல் போர் சூழல் இல்லாமல் ஒருவரை துப்பாக்கியில் சுட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தவறாகப் பயன்படுத்தினால் உடனே விசாரணை, கைது என நடைமுறை இருக்கிறது. யோசித்துப் பாருங்கள். இராணுவத்தில் எத்தனை பேரிடம் எத்தனை துப்பாக்கிகள் இருக்கிறது. எத்தனை ஆயுதங்களை பயன்படுத்திய அனுபவம் இருக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கிறதா? எனில் இல்லை. ஏனெனில் அங்கே கடுமையான கட்டுப்பாடு இருக்கிறது. ராணுவ அதிகாரத்தை ராணுவ ஆயுதத்தை ராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினார்கள் என்றால், உடனடியாக துறை ரீதியாக தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அதனால்தான் இராணுவத்தில் இருக்கக்கூடியவர்கள் பயிற்சி  எடுத்திருந்தாலும் கூட ஆயுதங்களை சாமானியர்கள் மீதோ அல்லது தங்களுக்கு எதிரியாக இருக்கிறவர்கள் மேலோ பயன்படுத்துவது இல்லை. இத்தகைய கட்டுப்பாடு காவல்துறையிடம் ஏன் நடக்கவில்லை என கேள்வி எழுகிறது.

 இங்கே அந்த கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாமல் இருக்குமெனில், இது என்ன கூட்டமாக மாறும்? கையில் ஆயுதத்தையும் அதிகாரத்தையும் கொடுத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எவனும் கேட்க மாட்டான் என்ற உரிமம் கொடுத்த மாதிரி ஆகிவிடும் எனில், எப்படி நாம் வாழ முடியும்? இது பொது சமூகத்துக்கு ஆபத்து விளைவிக்கும். குறிப்பிட்ட சாதிக்காரர் எல்லாம் சேர்ந்து “எங்க சாதிக்காரரான காவல்துறை எஸ்.ஐ-யை குற்றம் சாட்டுறீங்க, சிறைப்படுத்துறீங்க” என சொன்னால், நாளை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் குற்றம் செய்தால் ஒத்துக்கொள்ள முடியுமா? அதிகார வர்க்கம் என்பது நம்மைப் போல் கிடையாது. அவர்களுக்கு அதிகாரம் கையில் இருக்கிறது, ஆயுதம் கையில் இருக்கிறது, அதைப் பயன்படுத்த அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் நம்மைப் போல் ஒன்றுமில்லாத நிராயுதபாணிகள் அல்ல. அதிகார துஷ்பிரயோகம் சாதிக்காக பயன்படுத்தப்படுவதால் ஒரு குற்றம் நிகழ்கிறது. அந்த குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு அதிகார வர்க்கமே துணை நின்றால் அது பெரும் ஆபத்து.

இதுதான் சர்வதேச சட்டங்களில் ‘தண்டனை விலக்கு’ (Impunity) என்று சொல்வார்கள். ஒரு சாதாரண நபர் கொலை செய்வதற்கும் அதிகாரத்தில் இருப்பவர் கொலை செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் கொலை செய்தால்/ குற்றம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், அந்த நாடு மனித உரிமையில் மிக மோசமான நாடாக இருக்கிறதாகத்தான் ஐ.நாவில் பட்டியல் போடுவார்கள். சாதரண திருட்டு போன்ற பிற குற்றங்களுக்காக ஒரு அரசை மனித உரிமை மீறி விட்டார்கள் என ஐ.நாவில் சொல்ல மாட்டார்கள். அதிகாரத்தில் இருக்கிறவர்கள் தவறு செய்தால், அந்த தவறு கேட்கப்படவில்லை, விசாரிக்கப்படவில்லை என்றால், அந்த நாட்டினுடைய மனித உரிமை நிலைமை என்பது மிக மோசமானதாக இருக்கிறது என்பதுதான் சர்வதேச அளவீடு. இத்தகைய மனித உரிமை மீறலை எதிர்த்துதான் நாம் போராடுகிறோம்.

தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட பல காவல் நிலைய கொலைகள், வன்முறைகள் குறித்து எந்தவிதமான பொறுப்பேற்று, உள் விசாரணையோ நடத்தப்பட்டு இருக்கிறதா? அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறதா? என கேள்வி எழுப்புகின்றோம்.

கேள்வி: அப்படியானால் இதற்கு பின் நடந்த எல்லாவற்றுக்குமே ஒரு சாதிய உணர்வு இருக்கிறது என நினைக்கிறீர்களா?

பதில்: சாதிய உணர்வு இருக்கிறது, மதரீதியான உணர்வு இருக்கிறது, முதலாளிகளுக்கான பாசம் இருக்கிறது, ஆட்சியாளர் / அதிகார வர்க்கத்தில் இருக்கக்கூடியவர்களுக்கான ஒரு நலன் இருக்கிறது. இப்படி எல்லாமே சேர்ந்துதான் அது வெளிப்படுகிறது. அந்த அதிகாரத்தை யாரோ ஒருவருடைய தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி மூலம் மக்களை சுட்டு கொன்றார்களே, அவர்கள் எல்லாம் யார்? பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கைக்கூலி வேலை பார்த்தவர்கள். அவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்து, பயிற்சி கொடுத்து, அப்பாவி மக்களை சுட சொன்னார்களே, அவர்கள்தான் இருப்பதிலே மோசமான கொலை குற்றவாளி. அவர்கள் ஒரு மாபியா. அந்த கொலை குற்றத்தை செய்த ஒரு சில அதிகாரிகளால் ஒட்டுமொத்த காவல்துறையும் பதில் சொல்ல வேண்டிய நிலைமை, கெட்ட பெயர் வாங்க வேண்டிய நிலைமை வந்தது. 

கேள்வி: ஆனால் எப்படி இதை சொல்கிறீர்கள், மேல் அதிகாரிகள் சொன்னால் கீழே உள்ள அதிகாரிகள் செய்துதானே ஆக வேண்டும்?

பதில்: அதிகார வர்க்கத்தில் குறிப்பாக காவல்துறை மற்றும் ராணுவத்தில் செய்பவனை விட உத்தரவிடுபவன்தான் அதிக குற்றவாளி என்று சொல்லுவார்கள். அதன் விசாரணை முறை வேறு. குற்றம் செய்தவர்களை விட அதை தூண்டுபவர்கள்/ உத்தரவிடக்கூடியவர்கள் மீதுதான் விசாரணை நடத்தப்படும்.

ஜெர்மனியில் ஹிட்லர் எந்த யூதனையும் நேரடியாக கொலை செய்யவில்லை. இஸ்ரேலில் நேத்தன்யாகு எந்த பாலஸ்தீனர்களையும் நேரடியாக கொலை செய்யவில்லை. ஆனால் இந்த குற்றம் விசாரிக்கப்பட்டால் இவர்களைத்தான் மிகப்பெரிய குற்றவாளிகளாக பார்க்க வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு உத்தரவிடுகின்ற அதிகாரம் இருக்கிறது. கட்டுப்படுகின்ற நிலை அவர்களுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் அதிகார வர்க்கத்தை நாம் பார்க்க வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு போன்ற மோசமான கொலையை உத்தரவிட்டது யார்?

என்னை(திருமுருகன்) கைது செய்து சிறையில் அடைத்து என்னை மிக மோசமான முறையில் நடத்தியதற்கான அடிப்படை காரணம், நான் இந்த கேள்வியை ஐ.நா மன்றத்தில் எழுப்பியதுதான். ‘எவ்வளவு தைரியம் இருந்தால் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று தெரியாத நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது என எப்படி சொல்வாய்’ என ஒரு காவல்துறை உயரதிகாரி வெளிப்படையாகவே மிரட்டினார். ஏனெனில் சுட்டவனை விட உத்தரவிட்டவன்தான் கொலை குற்றத்தில் மாட்டுவான். அதனால்தான் ஸ்டெர்லைட் வழக்கு உண்மை வெளிவராமல் மூடப்படுகிறது.

காவல் துறையை சேர்ந்த சில அதிகாரிகள்/ சில நபர்கள் ஒரு கார்ப்பரேட் கம்பெனி உடன் சேர்ந்துகொண்டு மக்களை கொன்று பணம் அல்லது வேறு எதையாவது வாங்கிட்டு போகலாம் என்கிற நிலைமை இருக்கிறது. இன்றைக்கு அது தடுக்கப்பட்டதா என சொல்ல முடியாது. அப்படி ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும் செய்வார்கள். ஏதோ நிறுவனத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை முறிக்க வேண்டும் எனச் சொல்லி கார்ப்பரேட் கம்பெனிக்காரன் நேராக சில அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினால், போராடுபவர்களை சுட்டுக் கொல்லவோ, அடிக்கவோ, கைது செய்யவோ, குண்டர் சட்டம் போடவோ கார்ப்பரேட் கம்பெனி சொன்னால் அவர்கள் செய்வார்கள். இவர்கள் எல்லாம் கருப்பு ஆடு. இவர்களை பணி நீக்கம் செய்யவோ உரிய நேரத்தில் தண்டனை வாங்கித் தரவோ எந்த அதிகாரியும் முன் வரவில்லை. திமுகவும் முன்வரவில்லை.

சுர்ஜித்தின் அப்பாவை கைது பண்ணியிருக்கிறார்கள். அம்மாவை இன்னும் கைது செய்யவில்லை. குற்றம் செய்யவில்லை எனில், ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும்? எப்படி காவல் துறை இதை அனுமதிக்கிறது? காவல் துறைக்கு தெரியாமல் சோதனை சாவடி தாண்டிச் செல்லும் வாய்ப்பே கிடையாது. எல்லா இடத்திலும் குடித்துவிட்டு வருகிறார்களா என காவல்துறை சோதனை செய்கிறது. உரிமங்கள் (licences) இருக்கிறதா என சோதனை செய்கிறீர்கள், தலைகவசம் (helmet) சோதனை செய்கிறீர்கள், இதை மீறி அவர் தப்பிச்  செல்ல இயலுமா? காவல் துறைக்கு தெரியாமல் இது நடக்காது. சில அதிகாரிகள் துணையோடுதான் இது நடக்கிறது. இதைத்தான் ஆபத்தானதாக நான் பார்க்கிறேன். இப்படிப்பட்ட நபர்களால்தான் ஒட்டுமொத்த துறைக்கும் கெட்ட பெயர் வருகிறது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் போராட்டத்தினுடைய நோக்கமாக இருக்கிறது. இப்பொழுது திமுக தரப்பில் கவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை குறித்தான இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு தொகுத்து என்ன பதில்? தனிப்பட்ட விடயமாக அல்லாமல் காவல் துறையில் இருக்கிறவர்கள் சாதிவெறியோடு இருக்கிறார்கள் என்பது இன்றைக்கு வெளிப்படையாக அம்பலமாகி இருக்கிறது.

கேள்வி: கவின் ஆணவப்படுகொலை வழக்கு தமிழ்நாடு காவல் துறையிலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அந்த நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: வரவேற்கிறோம். அந்த ஊரினுடைய, மாவட்டத்தினுடைய காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை என்பதனால்தான் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கலாம். காவல்துறையின் மீது அவநம்பிக்கை வருவதற்கான எல்லா காரணிகளையும் காவல்துறை உருவாக்கி கொண்டே இருப்பதாக நான் பார்க்கிறேன்.

கேள்வி: சிபிசிஐடிக்குள் தமிழ்நாடு காவல்துறை ஆட்கள் தானே இருப்பார்கள். அப்படி இருக்கும்போது இந்த வழக்கு சரியாக  நடத்தப்படுமா?

பதில்: அதுதான் அடுத்த கட்ட கவலையாக இருக்கிறது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யும் பொழுது என்னவாக இருக்கும் என நமக்குத் தெரியாது. அந்த சமயத்தில் வேறொரு பிரச்சனையில் நாம் நிற்கலாம். இந்த வழக்கை தொடர்ச்சியாக எடுத்து நடத்தி அதற்கான தண்டனையை உடுமலை சங்கர் கொலை வழக்கு, குற்றவாளி கோகுல்ராஜ் வழக்கைப் போல தோழர் பா.ப.மோகன் போன்ற ஒரு மூத்த நேர்மையான வழக்கறிஞர் இந்த வழக்கை நடத்தினார்கள் என்றால், நீதி கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கேள்வி: தமிழ்நாட்டில் சாதிய ஆணவப் படுகொலைகள் நடப்பது முதல் முறை கிடையாது. கண்ணகி- முருகேசன், கௌசல்யா- சங்கர், இளவரசன்-திவ்யா போன்ற பல ஆணவப்படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இவ்வளவு நடைபெற்றும் திமுக மற்றும் அதிமுக அரசுகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே? என்ன காரணம்?

பதில்: அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை நாம் முன் வைக்கிறோம். அது ஒரு பக்கம் இருந்தாலும், சமூகத்துக்குள் இருக்கக்கூடிய சாதிய உணர்வை வளர்த்து விடுபவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதும் மிக முக்கியம். ஏனெனில் அவர்கள்தான் இந்த சாதிய உணர்வை தூண்டி விடுகிறார்கள்.

படுகொலை செய்யப்பட்ட கவின் நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்தான். அவனுக்கென்று ஒரு கனவு இருந்திருக்கிறது. அவன் அடுத்தகட்ட வளர்ச்சி நிலையை நோக்கி நகரக்கூடிய பையன். அவனை கொலை செய்த சுர்ஜித் இரண்டு காவல் துறை அதிகாரிகளுடைய பையன். அவன் கத்தி அருவாள் என வளர்கிறான். அவன் வளர்ச்சி எங்கு போய் நிற்கும்? இவன் கத்தியை கையில் வைத்திருப்பதை பார்த்து பில் கேட்ஸ் வேலை தரப் போகிறாரா?

இந்த இளைஞர்களை எல்லாம் வீர பரம்பரை என்று கூறி, கூர்த்தீட்டுபவர்களுடைய தேவை என்ன? வீரப்பரம்பரை எனச் சொல்லி அவர்களுக்குள் வீரத்தை கொடுக்கக்கூடிய நபர்களால் எந்த வேலைக்கு பயன்படுத்தப் படுகிறார்கள்? நாட்டில் நடக்கக்கூடிய கெட்ட விசயங்களுக்கு எதிராக சண்டை போடவா என்று சொல்கிறார்களா? கிடையாது. ஈழத்தில் குழந்தைகள் உட்பட ஒன்றரை லட்சம் தமிழர்களை கொலை செய்துள்ளார்கள், எனவே நாம் சண்டைக்கு போவோம் எனச் சொல்கிறார்களா? கிடையாது. தமிழக மீனவர்களை கொலை செய்கிறார்கள், எனவே நாம்தான் வீர பரம்பரையாச்சே வா படை எடுத்து போய் சண்டை போடுவோம் எனச் சொல்கிறார்களா? கிடையாது. இங்கே இருக்கக்கூடிய ஆயிரம் பிரச்சனைகளுக்கு எதிராக போராடியிருக்கிறார்களா? மக்களை வஞ்சிக்க கூடிய முதலாளிகளுக்கும்  தொழிற்சாலைகளுக்கும் எதிராக போராடியிருக்கிறார்களா?  இதற்காக எந்த சாதி சங்கமும் வந்தது கிடையாது.

மருதுபாண்டியர், தீரன் சின்னமலை, பூலிதேவன் போன்றவர்களை எல்லாம் எதற்கு அடையாளமாக பார்கிறோம்? ஏழை எளிய மக்களை அன்றைக்கு வெள்ளைக்காரன் வதைத்தான். அதனால் இவர்கள் சாதி மதம் கடந்து போராட்டம் நடத்தினார்கள். போர் செய்தார்கள். அதுக்காக உயிர் கொடுத்தார்கள். அதுபோல வீரப் பரம்பரைன்னு சொல்லக்கூடிய, கூர்தீட்டக்கூடிய நபர்கள் இந்த இளைஞர்களை நல்ல விடயத்துக்காக, ஆக்கப்பூர்வமான விடயத்துக்காகப் பயன்படுத்துகிறார்களா? தமிழ் இனத்தினுடைய பெருமைக்காகவோ அல்லது இனத்தை பாதுகாப்பதற்காக பயன்படுத்துகிறார்களா? ஒன்றுமே இல்லை.

ஆணுக்கு என்ன அறிவு இருக்கிறதோ அதே அறிவுதான் ஒரு பெண்ணுக்கும் இருக்கும். சுர்ஜித்தின் அக்கா சித்த மருத்துவராக இருக்கிறார். அந்தப் பெண்ணின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டும். கத்தி கபடா ரவுடித்தனம் செய்து சுத்திகிட்டு இருக்கிற ஆணை நேசிப்பாளா? இல்லையென்றால் நன்கு படித்து நல்ல வேலைக்கு போகும் இளைஞரை நேசிப்பாளா? தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு இளைஞனை தான் நேசிப்பாள். அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்ணுக்கு எப்படிப்பட்ட தேர்வு கொடுத்துள்ளார்கள்? கத்தி கபடா கொண்ட வன்முறையாளனாக இருந்தால், இன்று அவனை வெட்டுகிறாய் நாளைக்கு என்னை வெட்ட மாட்சாயா? என்ற யோசனை வருமா வராதா? ஒரு அமைதியான வாழ்க்கை, அழகான வாழ்க்கை, ஒரு பாதுகாப்பான வாழ்க்கை என்பதுதான் பெண் விரும்பக்கூடிய விடயம். தனக்கான மகிழ்ச்சியான வாழ்வை அப்பெண் தேர்ந்தெடுப்பார். சாதி அடிப்படையில் இல்லாமல் தனக்கான மகிழ்ச்சியான வாழ்வைத் தேர்ந்தெடுக்க ஒரு பெண்ணிற்கு உரிமை இருக்கின்றது. அடுத்த தலைமுறை வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும்.

உண்மையில் சாதி வெறியர்களைவிட எங்கள் தோழர்கள் வீரமிக்கவர்கள். அதிக காவல்துறை வந்தாலும் துணிந்து நிற்பார்கள். போராட்டம் செய்வார்கள். கையில் எந்த ஆயுதங்களும் எங்களுக்குத்  தேவையில்லை. எவ்வளவு பெரிய ஆயுதங்களை கொண்டு வந்த படைகள் இருந்தாலும் வீதியில் இறங்கி போராடக்கூடிய இளைஞர்கள்.

மக்களுக்காக போராடக்கூடிய இளைஞர்கள். மக்களுக்காக எத்தனை வழக்கு வேண்டுமானாலும் வாங்கி சிறைக்கு போகக்கூடிய இளைஞர்கள். சாதியை எதிர்த்து போராடக்கூடிய எங்களுடைய தோழர்கள் வீரமிக்கவர்களா, இல்லை கையில் கத்தியும் கபடாவும் வைத்துக்கொண்ட இவர்கள் வீரமிக்கவர்களா? அரசியல் பார்வை இல்லாமல் வெறும் சாதியவெறியோடு இருக்கக்கூடிய ஆட்கள், கட்டப் பஞ்சாயத்து, கூலி வேலைக்கு மட்டுமே இளைஞர்களைப் பயன்படுத்துவான். இந்த இளைஞர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும்?

இன்றைக்கு சுர்ஜித் கைதான போது, சமூக வலைதளத்தில் வீரன் என்று அவனைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். இதேபோல் யுவராஜ்-க்கும் எழுதினார்கள். ஆனால் யுவராஜ் எங்கப்பா இருக்கிறான்? சிறையில் இருக்கிறான். சிறையில் காலையிலிருந்து மாலை வரைக்கும் சமைத்து சாப்பிட வேண்டிய நிலைமையில், சிறைத்துறை கொடுத்திருக்கக்கூடிய வெள்ளை ட்ரவுசர் மாட்டிக்கொண்டுதான் சுற்றுகிறான். இதுதான் அவன் நிலைமை. இதில் என்ன பெருமை?

கேள்வி: யுவராஜ் வெளியே வந்தபோது மாவீரன் என கொண்டாடப்பட்டது.  அந்த சாதிக்குள் இருக்கும் ஆட்களுக்கு இப்படி சாதிக்காக கொலை செய்தால், ஒரு மாவீரனாக கொண்டாடுவார்கள் என்னும் மனநிலை உருவாகாதா?

பதில்: கொங்கு வெள்ளாளர் பகுதியில் இருக்கக்கூடிய தொழில்களை எல்லாம் பறித்துக் கொண்டு போகக்கூடிய முதலாளிகளை நோக்கி அதே வீரத்தோடு சண்டை போடுவார்களா? இவர்களால் எந்த பயனும் கிடையாது. யுவராஜ் ஒரு நாள் வெளியே வந்து வீரனாக காட்டிக்கொள்ளலாம். மற்ற நாட்கள் உள்ளுக்குள் காவல் துறை சொல்வன, சிறைத்துறை சொல்வதை தான் கேட்க வேண்டும்,  சிறைத்துறை அதிகாரிகள் முன்பு முட்டி போட்டுத்தான் நிற்க வேண்டும். கையை கட்டிதான் நிற்க வேண்டும். எங்களைப் போன்ற அரசியல் கைதிகள் போல அல்ல, அவர்கள் கொலைக் குற்றவாளிகள். சிறையில் நடத்துகின்ற முறையே வேறு. கைதிகள் நடத்துகின்ற முறை வேறு. இவர்களுக்கு தெரியவில்லை அவ்வளவுதான்.

அரசியல் கைதிகளுக்கு மரியாதை இருக்கும். ஒட்டுமொத்த சிறைத்துறையும் வந்து அரசியல் கைதிகளுக்கு மரியாதை கொடுக்கும். சக கைதிகள் யாராக இருந்தாலும் அரசியல் சிறைவாசிகளுக்கு மரியாதை தருவார்கள். ஆனால் இந்த மாதிரி கொலைக் குற்றவாளிகளைப் பார்த்தால் மதிக்க மாட்டார்கள். மிரட்டத்தான் செய்வார்கள். ஒருமையில் தான் கூப்பிடுவார்கள். நம்மை அப்படி கூப்பிடுவதில்லை. ஏனெனில் நாம் மக்களுக்காக போராடி சிறைக்கு போகிறோம். அவர்கள் கொலை செய்துவிட்டு சிறைக்குப் போகிறார்கள். அவர்கள் உள்ளே குத்த வைத்துதான் உட்காந்திருக்க வேண்டும். எது வேண்டுமானாலும் கெஞ்சி கூத்தாடித்தான் வாங்க வேண்டும், மேல் அதிகாரியிடம் கையை கட்டி நிந்த வேண்டும்.

இதையெல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். சாதிவெறி ஊட்டப்பட்ட இளைஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். முதலில் அதிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பதுதான் நாம் கவலைப்பட வேண்டிய விசயமாகும்.

இன்றைக்கு கவின் கொலைக்கு போராடக்கூடிய அதே சமயத்தில் இந்த ஆண்ட பரம்பரை பெருமை பேசிக்கொண்டு, கத்தி கபடா கையில் வைத்து வீரம் பேசிக்கொண்டு வெட்டுவேன், குத்துவேன் என வசனம் பேசுவோரின் கவனத்திற்கு “யாரை கல்யாணம் பண்ண வேண்டும், யாரை விரும்ப வேண்டும், யாருடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என பெண்களுக்குத் தெரியும். அது பெண்களுடைய சுதந்திரம்”.

சாதிய ரீதியாக இந்த இளைஞர்கள் ஒரு உத்தரவாதமற்ற ஒரு வாழ்க்கையை உருவாக்குகிறார்கள், ஒரு பதட்டமான சூழலை உருவாக்குகிறார்கள், அப்போது அந்த இடத்துக்குள் நாம் இறங்கி வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. உண்மையாக சொல்லப்போனால் நாம் பட்டியல் சமூக இளைஞர்கள் அல்லது இந்த சாதி இளைஞர்கள் என பிரித்து பார்ப்பதில்லை. ஆனால் சாதிவெறி ஊட்டுபவர்கள் பிரித்து பார்க்கிறார்கள். நாம் எல்லோரையும் தமிழனாகப் பார்க்கிறோம். எல்லோரும் வளர வேண்டும் என பார்க்கிறோம். எல்லோரும் நன்றாக படித்து வேலைக்கு போக வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். ஆனால் சாதிவெறிக்காரன் என்ன செய்கிறான்? அவன் கட்ட பஞ்சாயத்து செய்கிறான். கல் குவாரி மண் குவாரிக்கான ஒப்பந்தம் செய்ய, அதன் மூலமாக சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறான். அவனுக்கு கூலி வேலை பார்ப்பதற்கு ஆள் தேவைப்படுகிறது. அதனால் அவன் சாதி இளைஞர்களை சாதிவெறி ஊட்டி வளர்த்து விடுகிறான். நான்கு பேரை உடன் வைத்துக்கொண்டு காசைப் பிடுங்குகிறான். இந்த நிம்மதியற்ற வாழ்க்கை எத்தனை நாள் வாழ முடியும்? வெகு நாள் வாழ முடியாது.

இந்த மாதிரியான சாதிப் பெருமையை தூண்டிவிட்டு கொலை வழக்கில் சிக்கி விட்ட பிறகு, சுர்ஜித் வாழ்க்கை இன்றைக்கு என்ன ஆகும்? சிறையில் வாழ்க்கையை கரைக்கக் கூடிய நிலைமை வந்து நிற்கும். இந்த மாதிரியான ஒரு இளைஞர்களை அங்கிருந்து மீட்க வேண்டிய பொறுப்பு எல்லாரிடமும் இருக்கும். அவர்களை நாம் நிராகரிக்கவில்லை. யாரெல்லாம் இந்த சாதிப் பெருமையைத் தூண்டி விட்டானோ அவனெல்லாம் அடுத்த நாள் சந்தோசமாக பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு காலத்தைக் கழிப்பான். இதுதான் நடக்கும், இதுதான் எதார்த்தமான விசயம்.

எவனோ நான்கு பேர் உசுப்பேத்துவதற்காகவெல்லாம் போய் வேலை செய்தால், வாழ்க்கை நாசமாகப் போய்விடும். இந்த சாதிவெறி என்ற நோயில் பாதிக்கப்பட்ட இளைஞர்களை நாம் மீட்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். அவனுக்கு நல்ல கல்வியை க கொடுத்து வேறு ஒரு உலகத்துக்கு கொண்டு போக வேண்டிய தேவை இருக்கிறது.

இரண்டு மாதிரியான சாதிவெறி வளர்தெடுக்கப்படுகிறது. ஒன்று வெளிநாட்டில் போய் உட்கார்ந்து நன்றாக சம்பாதித்துக்கொண்டு உள்நாட்டுக்குள்/ ஊருக்குள் சாதிப் பெருமை வளர்ப்பவன். அவன்தான் இருப்பதிலேயே பச்சை அயோக்கியன். இவன் மட்டும் நன்றாக சம்பாதித்து விட்டு வீட்டுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்குவான். அதேபோல மற்ற இளைஞர்கள் முன்னேற வேண்டாமா? அப்போது இந்த இளைஞர்களைத்தான் மீட்க வேண்டிய தேவையும், அதற்கான ஒரு வேலைத் திட்டமும் நாங்கள் (மே 17 இயக்கம்) யோசித்துக் கொண்டு இருக்கிறோம். இது இயங்குவதற்கான வழிமுறைகளை முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். இப்படி சாதிவெறித் தூண்டப்பட்டு உருவாக்கப்படக்கூடிய இளைஞர்களை இன்று பல மாவட்டங்களில் குறைந்த விகிதத்தில் பார்க்கிறோம். ஒரு சிறு விகிதமான சாதிவெறி தூண்டப்பட்ட நபர்களால் தான் இத்தனை அசம்பாவிதங்களும் குற்றங்களும் நடக்கின்றன.

இதனால் ஒரு இளைஞனுடைய வாழ்க்கை போகிறது, ஒரு பெண்ணுடைய வாழ்க்கை போகிறது, ஒரு குடும்பம் தனது மகனை இழந்து நிற்கிறது. இவர்களும் சிறைக்கு அலையக்கூடிய நிலையை உருவாக்கி இருக்கிறானே, இதில் என்ன சாதிப் பெருமை இருக்க முடியும் என கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த சாதிவெறியை தூண்டுகின்ற ஆட்கள் காவல் துறைக்கு தெரியும். சமூகவலைதளத்தில் எழுதுவான், சங்கம் வைத்திருப்பான், கூட்டம் நடத்துவான், பேசுவான் என இவர்களையெல்லாம் காவல்துறைக்குத் தெரியும். அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது தேவையாக இருக்கிறது. அது மிக மிக முக்கியம்.

இரண்டாவது, கட்சிகள் இந்த சாதிக்காரனை கைது செய்தால் நமக்கு ஓட்டு கிடைக்காது என நினைக்கிறார்கள். அது மிகத் தவறாக ஒன்றாக நான் பார்க்கிறேன்.  ஒட்டுமொத்த மக்களையுமே சாதிவெறியாக பார்க்கத் தேவையில்லை. எல்லாருமே அப்படி கிடையாது. இந்த நபர்களை அந்த சாதிக்குள் வேரறுக்கூடிய பலர் இருக்கிறார்கள். இவையெல்லாம் அசிங்கம், இந்த காலத்திலும் ஏன் இதை செய்கிறீர்கள் என அவர்களை கண்டிக்கக்கூடிய நபர்கள் இருக்கிறார்கள். அவர்களை நிராகரித்து விடக் கூடாது.

அஜித் குமாருக்கு குரல் கொடுத்தவர்கள் கவினுக்கு குரல் கொடுக்கவே இல்லை. கவினுக்கு பேசவே இல்லை. அஜித் குமாருக்கு எத்தனை பேர் படையெடுத்துப் போய் விட்டு இருந்தார்கள், அங்கு போகாத ஆளே கிடையாது. எல்லாருமே அறிக்கை விட ஆரம்பித்தார்கள். ஏன் அதனை இங்கு கவினுக்கு செய்யவில்லை?

ஒரு சாதியை பகைத்துக் கொண்டால் இன்னொரு சாதியில் இருப்பவர்களின் ஓட்டு கிடைக்காது என நினைக்கிறார்களா? எந்த சங்கத்துக்கும் பெரிய ஆதரவு நிலை எல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படியெல்லாம் ஒட்டுமொத்த மக்களும் சாதிவெறியுடன் இருந்தால், இவர்கள்(ஆண்ட பரம்பரை பேசும் நபர்கள்) எல்லாம் இன்றைக்கு வெற்றி பெற்று எம்.எல்.ஏ/ எம்.பி/ முதலமைச்சர் ஆகியிருப்பார்கள். தமிழ்நாட்டில் சாதியை சொல்லி சாதி அமைப்பை கட்டி ஒரு எம்.எல்.ஏ சீட் கூட தனித்து நின்று வாங்க முடியாது. பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்துத்தான் வெற்றி பெற முடியும். தனியாக நின்று சாதிப் பெருமை எல்லாம் பேசி வெற்றிபெற முடியாது. யுவராஜ் வந்தாலும் டெபாசிட் வாங்கி விட முடியுமா, முடியாது. இவர்கள் எல்லாம் மைனாரிட்டி. இவர்கள் பெரும்பான்மை கிடையாது. இவர்களை கைது செய்தால் பெரும்பான்மை சாதியுடைய எதிர்ப்பை சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடியதுதான் இவர்களை வளர்த்தது. இப்படி நினைப்பது அந்த கட்சியுடைய கோழைத்தனமும், சந்தர்ப்பவாதமும்  அவர்களுக்கு மக்களைப் புரிந்து கொள்ள முடியாத அரசியலும் தான் அவர்களை அந்த இடத்தில் நிறுத்தியதாக தான் பார்க்கிறேன்.

சாதிவெறியர்கள் மீது கடுமையான ஒடுக்கு முறையை நிகழ்த்தினால் இவர்களெல்லாம் ஓடி போயிருவார்கள். நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். போராட்டங்களுக்கு வரமாட்டார்கள், ஓடி போய் விடுவார்கள். ஆர்ப்பாட்டத்துக்கே கூப்பிட்டாலுமே கூட எட்டியே பார்க்க மாட்டார்கள். மக்களை பாதிக்க எதைப் பற்றியும் ஆர்ப்பாட்டம் நடந்தாலும் கூட ஆண்ட பரம்பரை பேசும் நபர்கள் எட்டியே பார்க்க மாட்டார்கள். வலிமையில்லாத ஆள் கிடைத்தால் அங்கே உயரத்தை காட்டுவார்களே ஒழிய, இவர்கள் வீரமெல்லாம் ஒன்றுமில்லை. காவல் துறை 100 பேர் கொண்டு வந்து இறக்கினால் துணிச்சலாக நிற்க மாட்டார்கள். அரசியல் வழக்கு எதிர்கொள்ளலாம் என்றால், எதிர் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அந்த துணிச்சல் எல்லாம் கிடையாது. ஏனெனில் அந்த கொலை வழக்கில் தப்பிக்க முடியும் என்பதற்கு ஏற்றமாதிரி குற்றப்பத்திரிக்கை தயார் செய்துதான், இவர்கள் இந்த வேலையை பார்ப்பார்கள். இவர்கள் வீரர்களெல்லாம் கிடையாது. இதை கோழைத்தனமாகத்தான் பார்க்க வேண்டும்.

அருவாள்எடுத்து வெட்டுவதெல்லாம் வீரம் கிடையாது. ஒரு பெரிய அதிகாரத்தை எதிர்த்து நிற்கிறோம், அதுதான் வீரம். அதுதான் துணிச்சல்.

இந்த நபர்களை ஒடுக்குகின்ற வகையில் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு சட்டம் தேவைப்படுகிறது. அது வெறும் கொலை வழக்குக்காக போடப்படுகின்ற சட்டம். இது இதற்கு போதாது. தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வந்திருப்பது ஏன்? அதுவும் தனித்த சிறப்பு சட்டமாக வைத்துள்ளோம். அதாவது பாதிக்கப்பட்ட தரப்பை பாதுகாப்பதற்கான வலிமையையும், அந்த பாதகத்தை செய்யக்கூடியவர்கள் மீதான கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடிய சூழலை அது உருவாக்கிறது. அதுபோலதான் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் கூட அதற்கு தனியான சட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார். அங்கே கொண்டு வரும்பொழுது, சமூக நீதி பேசுகின்ற தமிழ்நாட்டில் ஏன் கூடாது? சட்டசபை என்பது சட்டத்தை இயற்றுவதற்கு தானே. மக்களுக்கு இந்த மாதிரியான ஒரு பாதுகாப்பு தரும் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு வேண்டாம் என சொல்லிக் கொண்டருந்தால், யாரை பாதுகாக்க வேண்டாம் என்கிறார்கள் என்கிற கேள்வி எழத் தான் செய்யும்.

ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் கொண்டு வந்தால், இந்த ஆதிக்க உணர்வு கொண்ட சாதியவாதிகள் நாளைக்கு ஓட்டு போடாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். போனால் போய் விட்டு போகிறான் என தைரியமாக முடிவு எடுக்க வேண்டும். எல்லாருமே சுப்ஜித் மாதிரி கையில் கத்தி கபடா தூக்கிக் கொண்டு சுற்றுகிறார்களா என்ன சுர்ஜித் மாதிரி?… இல்லவே இல்லை. அது ஒரு மைக்ரோ மைனாரிட்டி. இதை வந்து ஒரு பெரிய பூதாகரமாக காட்டக்கூடிய ஒன்றுதான் சாதி சங்கங்கள் செய்கிறது.

அனைத்து மக்களுக்கும் நலனை கொண்டு வரக்கூடிய பொதுவான திட்டங்கள் வரும்பொழுது, எல்லோருமே நலன் அடைகிறோம். பலன் அடைகிறோம். சாதி சங்கங்கள் ஒரு நன்மையைக் கூட செய்ததில்லை. எனவே சாதிவெறியர்களை பற்றி கவலைப்படாமல், சட்டத்தை கொண்டு வந்தால்தான், ஆவணப்படுகொலை கையாளுவது என்பது சாத்தியப்படும். அந்த மாதிரியான சட்ட வழிமுறை இருக்கிறதென்றால், குற்றவாளிகளை . தனித்துப் பிரித்து தண்டனை கொடுக்க முடியும்.

ஒருவர் சாதி ரீதியான கொலை செய்தார் எனத் தெரிந்தால் அதுவரைக்கும் சுற்றி இருக்கக்கூடிய சாதி பேசக்கூடியவரெல்லாம் தூண்டி விட்டு ஓடி போய் விடுவார்கள். நாங்கள் பார்த்து கொள்கிறோம் என பேசியவர்கள் ஓடி விடுவார்கள்.  எஸ்.சி எஸ்.டி வழக்கு, பிணையில் வரமுடியாத வழக்கெனில்  அவன் தலைமறைவாக வாழ முடியாது, எந்த வீட்டிலும் நான்கு நாட்களுக்கு மேல தங்க முடியாது. இந்த எஸ்சி, எஸ்டி வழக்கில் மாட்டிய குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பதால்,  அடுத்து செய்ய மாட்டான். தைரியம் வராது. இதன் மூலம் அவன் சொந்த சமூகமே கைவிடும். சாதிப் பெருமை பேசியவன் கை விட்டு விடுவான்.

இந்த இளைஞர்களுக்கு தெரியாமல் போய் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த இளைஞர்களை மீட்டு எடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது, அதற்கு அந்த சட்டம் தேவைப்படுகிறது. ஆணவப் படுகொலை என்பது தனி நபர் சார்ந்து நடப்பதல்ல, சமூக அழுத்தத்தால் தான் நடக்கிறது. பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து, நாங்கள் பிணை எடுக்கிறோம் என தைரியத்தை கொடுத்து குற்றத்தை செய்ய வைக்கிறார்கள். இவர்கள் பரம்பரை குற்றவாளிகள் எல்லாம் இல்லை.

ஒரு சாதியக் கொலைக் குற்றம் நடக்கிறது என்றால் அந்த கொலை செய்தவன் மட்டுமல்ல, இதற்காக தூண்டிவிட ஆயிரம் பேர் இருப்பான். அவனை எல்லாம் விசாரித்து நான்கு பேரை உள்ளே தூக்கி போட்டால் வாயை மூடிக் கொண்டு சும்மா இருப்பான். அப்போது அந்த வேலையை செய்வதற்கு ஒரு சட்டம் வேண்டும். சுர்ஜித் என்கிற நபர் மட்டுமா கொலை செய்திருப்பான்? சுர்ஜித்தோடு தொடர்பில் எவனெல்லாம் சாதியாட்கள் இருக்கிறானோ, அவனையெல்லாம் பிடித்து வழக்கு போட்டு ஒன்று /இரண்டு/நான்கு/ஒரு வருடம் சிறையில் தள்ளினால், அந்த ஒட்டுமொத்த குழுவும் ஆடிப் போய் நிற்கும்.

நான் சிறையில் இருக்கும்போது பார்த்து இருக்கிறேன். ஒரு குடும்பம் இரண்டு மாசம்/ நான்கு மாசம்/ ஒரு வருடம் சிறையில் இருந்தால், அவன் குடும்பம் நாசமாகப் போகும். ஒரு இயக்கமாக இருக்கிறவர்களுக்கோ அல்லது அரசியலில் இருக்கிறவர்களுக்கோ இது தெரியும். இயக்கத் தோழர்கள் அந்த சிறைக்கு போனவர்களை பாதுகாப்பார்கள். இந்த மாதிரி ரவுடிகளுக்கெல்லாம் யாரும் பாதுகாக்க வரமாட்டார்கள். சிலர் விட்டு விட்டு போய் விடுவார்கள். அந்த ஒரு வருடம் அவன் வீட்டு பிள்ளைக்கு பள்ளிக்கட்டணம் கட்ட முடியாது, மருத்துவமனைக்கு அப்பா அம்மாவை கூட்டிட்டுப் போக முடியாது, சம்பளம் வராது, வாடகை கட்ட முடியாது, அரிசி பருப்பு வாங்க முடியாது, தேவைப்படக்கூடிய பொருள் வாங்க முடியாத நிலைமை வரும்பொழுதுதான் இதெல்லாமே புரியும்.

இந்த மாதிரி ஒரு கடுமையான சட்டம் கொண்டு வந்து இதெல்லாம் யாரெல்லாம், தூண்டுகிறார்கள்? யாரெல்லாம் வேலை செய்கிறார்கள்? புலனாய்வு செய்து அவர்கள் அனைவரையுமே கொண்டு போய் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தும் பொழுது, இரண்டு மூன்று வழக்கிலேயே அதற்கான மனநிலை வந்து குறைந்து போவதை நாம் பார்க்க முடியும்.

வெறும் கொலை வழக்கு என்று போட்டுவிட்டு, அதிலிருந்து தப்பிக்கவா? அதற்கான சட்டத்தில் ஓட்டைகள் இருப்பதனால் தான் சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறோம். இந்த ஆவணப் படுகொலை சட்டம் தேவையில்லை என சொல்பவர்களை, நாங்கள் சந்தேகப்படுகிறோம். சட்டம் வரட்டுமே உனக்கு என்ன பிரச்சனை? ஆயிரம் சட்டம் வைத்துள்ளோம். அந்த சட்டத்தை எல்லாம் வேணாம் என சொல்லியிருக்கிறார்களா? இந்த சட்டத்தில் என்ன பிரச்சனை? வரதட்சணை தடுப்புக்கான ஒரு வழிமுறை வேண்டி இருக்கிறது. சாதிய வன்முறைக்கான தடுப்பதற்கான தேவை இருக்கிறது. இந்த ஆணவப்படுகொலைகள் தடுப்பதற்கான தேவைப்படுகிறது.

சமூகத்தில் ஆணப்படுகொலைகளை தவறு என்கின்ற ஒரு மனநிலை உருவாக்குவது  மிகவும் முக்கியம். இது தவறு என்கிற உணர்வை கொண்டு வர வேண்டும்ம். அந்த உணர்வை கொண்டு வருவதற்கு இந்த சட்டம் தேவைப்படுகிறது என நினைக்கிறேன்.

கேள்வி: குறிப்பாக எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை சட்டத்திலேயே பல வழக்குகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. அதில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இன்னும் நீதி வராத போது, புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரும்போது ,அதில் என்ன நீதி கிடைக்கப் போகிறது என கேள்வி கேட்பவருக்கு உங்கள் பதில் என்ன?

பதில்: அப்படியெனில், இட ஒதுக்கீடு கூட பல இடங்களில் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை, அதற்காக  இட ஒதுக்கீடு விட்டுவிடுவீர்களா? பிரச்சனை என்ன? அது இயங்குவது ஒழுங்காக இல்லை. ஏன் நடக்கவில்லை? காவல் துறையில் சாதியாக இருக்கிறான். வழக்கை யாரும் பின்பற்றுவதற்கு ஆள் இல்லை. அரசு வழக்கறிஞர் முறையாக கேள்வி கேட்பது இல்லை. அவனும் சாதியாக இருக்கிறான். காவல் துறை சாதியாக இருக்கிறது. அப்போது அந்த வழக்கு அப்படிதான் போய் நிற்கும். இதைத்தான் சரி செய்ய வேண்டுமோ ஒழிய, நீங்கள் சட்டமே வேண்டாம் என சொல்லிவிட்டு போவீர்களா! அதற்கு தான் கேட்கிறேன்.

 இப்போது இட ஒதுக்கீடு எல்லா இடத்திலும் நடைமுறை படுத்தப்படவில்லை எனில், அதற்காக இட ஒதுக்கீடு வேண்டாம் என சொல்வோமா?  அல்லது ஒழுங்காக நடைமுறைப்படுத்துவது முக்கியமா? நடைமுறைப்படுத்துவதுதான் முக்கியம். அரசு மருத்துவமனையில் முறையாக மருத்துவர்கள் இல்லை. மருத்துவமனை கட்டி வைத்து வீணாக போகிறது எனச்சொல்லி, அரசு மருத்துவமனையை மூடுவீர்களா? மருத்துவமனையில் மருத்துவர்களை நியமித்து சரி பண்ணுவீர்கள் அல்லவா! அதைதான் நாம் கேட்கிறோம். நமக்கு என்ன தேவை? எதை சரி செய்ய வேண்டுமோ அதை சரி செய்து சாதி வன்கொடுமை சட்டங்களில் முறையாக தண்டனைகள் கிடைக்கவில்லை எனில், அதற்கான வழிமுறையை உருவாக்கி அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதுதான் தேவைப்படுகிறது. அதற்காக மொத்தமாக சட்டமே தேவையில்லை என சொல்லிவிட்டால் சந்தோசமாக நடந்து விடுமா எல்லாமே!

அதேபோலத்தான், இந்த பட்டியல் பிரிவில் இருந்து வெளியேறிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் எனப் பேசுகிறார்கள். இன்றைக்கு பட்டியல் வெளியேற்றம் நடந்திருந்ததனால் இந்த கொலை நின்று போகும் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? இவர்கள் பட்டியல் சமூகம் என சொன்ன பிறகுதான் அந்த கொலை நடக்கிறதா? இல்லை. சாதியவாதி உளவியலாக சாதிய ரீதியாகவே இவர்களைப் பற்றியான ஒரு மனநிலை உள் வளர்த்தப்பட்டு கொண்டே வளர்கிறான். அதுதான் இங்கே வந்து நிற்கிறது. பட்டியல் வெளியேற்றம் செய்துவிட்டால் இவன் எல்லாம் திருந்தி விடுவான், செய்ய மாட்டான் என்பது எதுவுமே கிடையாது. பட்டியல் சாதிகளுக்கு மட்டுமே நீங்கள் கேட்கிறீர்களே, மற்ற ஆணவப் படுகொலைகள் நடக்கவில்லையா? அங்கெல்லாம் சாதிய வன்கொடுமை சம்பந்தமான ஒரு பார்வையாக அந்த கொலை நடந்திருக்காது. மற்றபடி கொலைதான்.

நான் பல இடத்தில் சொல்லியிருக்கிறேன், சாதிய வேறுபாடு எல்லா இடங்களிலும் இருக்கிறது. எல்லா சாதிக்குள்ளும் வேறுபாடு இருக்கிறது. இடைநிலை சாதிகளுக்குள்ளும் வேறுபாடுகள் இருக்கிறது. ஒரு பட்டியல் சாதியில் இருக்கிறவனுக்கும், பிற்படுத்தப்பட்ட சாதியில் இருக்கிறவனுக்குமான சாதி வேறு, அங்கே இருக்கும் பொருளாதார கட்டமைப்பு வேறு, அவனுக்கான அதிகாரக் கட்டமைப்பு மற்றும் பின்புலம் வேறு, இங்கே இவர்களுக்கான பொருளாதாரப் பலம் இல்லை, அதிகாரப் பலம் இல்லை. அதனால்தான் செய்கிறான். பொருளாதார பலத்தையும் அதிகார பலத்தையும் பெறுவதற்காக தான் உங்களுக்கு இட ஒதுக்கீடு வருகிறது. சிறப்பு இட ஒதுக்கீடு வருகிறது. அது மட்டுமில்லாமல் சட்டப் பாதுகாப்பு பல துறைகளில் உங்களுக்கு வருகிறது. அரசினுடைய கடன் உதவி திட்டங்கள் மற்றும் பல திட்டங்கள் உங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் வளர்த்தெடுக்கிறது.

பட்டியல் சமூகத்தில் இருக்கிறவர்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு இருக்கிறது. அதற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு அதை முறைப்படுத்தி செய்வது இல்லை, சில பணங்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். அதையெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்காமல் பட்டியல் வெளியேற்றம் பற்றி பேசுகிறார்கள். குடிப்பெருமை பற்றி பேசுகிறார்கள். அது என்ன குடிபபெருமை ? சாதிய கொலை நடக்கிறது எனில், இதெல்லாம் செய்வது தெலுங்கர் சாதி என பேசுகிறார்கள். பெயருக்கு பின்னாடி சாதிப்பெயர் போடுவதில் என்ன தவறு எனப் பேசுகிறார்கள். கொலை கொலைதானே, இந்த கொலைக்கு என்ன பதில்? சாதியை விட்டு வா எனச் சொன்னால் சாதி பெயரும் வேண்டும், குடி பெருமையும் பேசவேண்டும், ஆனால் கொலை நடக்கும்போது மட்டும் சாதியே வேண்டாம் எனச் சொல்லி சாதியை கடந்து வா எனக் குழப்பமான வார்த்தை பேசுவது திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகின்ற வேலைகள். இது போன்ற போலிகளும் நம்ம சமூகத்தில் பார்க்கிறோம்.

அதே மாதிரி திராவிட கட்சிகள் இதில் தீவிரமாக இயங்கி வேலை செய்யவில்லை. அவர்கள் குறிப்பிட்ட தரப்புக்கு சாதகமாக நிற்பதுதான் இத்தனைக்கும் காரணமாக நாம் பார்க்கிறோம். அதிகாரிகள் அதிகார மட்டத்தில் சாதி நிற்கிறது. எல்லா மட்டங்களும் இயங்கக்கூடிய இந்த சாதிய இடங்களுக்கு எதிராகத்தான் நம்முடைய போராட்டங்கள் இருக்கும் பொழுது, சட்டம் நமக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்பதால் ஆவணப்படுகொலை சட்டத்தை கேட்கிறோம்.

கேள்வி: குறிப்பாக தென்மாவட்டங்களில் நடைபெறக்கூடிய சாதிய பிரச்சனை சாதிய ஆணவப்படுகொலைக்கு காரணம் ”ஆர்எஸ்எஸ் பிஜேபி” அங்கே பயங்கரமாக வளர்ந்துவிட்டது. இந்த பின்புலத்தினால்தான் அதிகப்படியான சாதிய வன்கொடுமை நடக்கிறது என்கிற வாதம் இருக்கிறது. அது சரியா?

பதில்: இங்கே சாதி சங்கங்கள் இருக்கிறது. அவர்களுக்குள்ளாக வளர்த்தப்பட்ட சாதியவெறி என்பது இப்பொழுது இந்துத்துவ மதவெறியாக மாற்றப்பட்டிருக்கிறது. அந்த இந்துத்துவ மதவெறி ஒவ்வொரு சாதிக்கும் பெருமையை கொடுக்கிறது. இதன்மூலம் மதவெறியையும் தூண்டுகிறது. இந்த மதவெறி சாதிவெறியாகவும் வெளிப்படுகிறது. இதுதான் இங்கு இருக்கக்கூடிய பிரச்சனையாக இருக்கிறது. பட்டியல் சமூக இளைஞர்களைக் கூட கிறிஸ்தவ பட்டியலா அல்லது இந்து பட்டியலா என பேசிப் பிரித்தான் பிஜேபிக்காரன் ஆர்எஸ்எஸ் காரன். இன்றைக்கு என்ன ஆகுது?  எல்லா சாதியும் எல்லாருமே இந்து என்று சொல்லிக் கொண்டு இருக்கிறானே ஒழிய, இறந்தவனும் இந்து கொன்றவனும் இந்து. கவின் இந்து, சுர்ஜித் இந்துதானே, இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? எங்கே அர்ஜுன் சம்பத் போனாரரா?

பிஜேபி என்ன சொல்கிறது, இந்து மதத்திற்குள் ஒரு சாதி இன்னொரு சாதி சார்ந்தவரை கல்யாணம் பண்ணக் கூடாது என இந்து மதத்தில் சொல்லப்பட்டதனால் தானே வந்த பிரச்சனை, இது இந்து மத கோட்பாடுதானே. ஒரு சாதி இன்னொரு சாதி வருண கலப்பு/சாதி கலப்பு இருக்க கூடாது எனச்சொல்லி பேசியதுதானே இதன் விளைவு. இதன் மூலப் பிரச்சனை எங்கே இருக்கிறது? அவனிடம் தான் இருக்கிறது. அதைத்தான் ஆர்எஸ் வளர்த்து எடுக்கிறது.

இங்கே மட்டும் இல்லை. வர்ஷினி பிரியா கொலை மேட்டுப்பாளையத்தில் நடந்தது. அருந்ததியர் சமூகத்து பையனைக் காதலித்தால் அந்த பெண்ணையும் சேர்த்து, சொந்த தம்பியே கொலை செய்தான். அவர்கள் வீடு குடிசை வீடு, ஒரு நாள் மழை பெய்தாலே இடிந்து விழுந்து விடும். ஆனால் அந்தப் பையனின் வீடு ஒரு நல்ல அரசாங்கத்தினால் கட்டி தரப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு.  மேலும் அவர்கள் அரசாங்க வேலையில் இருக்கக்கூடியவர்கள். அவர்களைப் போய் சாதிப் பெருமைக்காக வெட்டிக் கொலை செய்திறான். இதில் என்ன பெருமை இருக்கிறது? கடைசியில் பார்த்தால் அவன் இந்து முன்னணியில் இருப்பவன். அதேபோல 2019-ல் பொன்பரப்பியில் கலவரம் நடக்கிறது. என்னவென்று போய் பார்த்தோமேயானால், அந்த பட்டியல் சமூக மக்கள் மேல் தாக்குதல் நடத்துகின்ற ஆட்கள் சாதிவெறியனாகவும், அதே சமயத்தில் இந்து முன்னணிக்காரனாகவும், சாதிய சங்கத்துக்காரனுமாகவும் இருக்கிறான். இதுதான் எல்லா இடங்களிலும் மதவெறியாக இந்த கும்பல் எல்லா இடத்திலும் ஊடுருவி நிற்கிறது. மேலும் தீவிரப்படுத்துகிறது.

ஒருபுறத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு, தேவேந்திரா நரேந்திரா என மோடி பேசினார். அவர்களால் பட்டியல் வெளியேற்றம் வேண்டும் எனப் பேசப்படுகிறது. அதாவது ஆர்எஸ்எஸ்தான் இட ஒதுக்கீடு முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, பட்டியல் வெளியேற்றம் பற்றிய வேலையைப் பார்க்கிறது. அப்போது இதை யாரால் செய்யமுடியும்? பிஜேபியால் செய்ய முடியும். பட்டியல் வெளியேற்றம் செய்வதற்கான தீர்மானத்தை எங்கே கொண்டு வர வேண்டும்? பாராளுமன்றத்தில்.  அங்கே பெரும்பான்மையாக வாக்களித்து, அது மேலவையில் சென்று துணை சனாதிபதி மற்றும் சனாதிபதி ஒப்புதல் வாங்க வேண்டும். அந்த அதிகாரம் யாருக்கு இருக்கிறது? பிஜேபிக்கு தானே இருக்கிறது.  அவன் தூண்டி விடுகின்ற வேலையை செய்கிறான். அதாவது அந்த மக்களை தூண்டி விடுகிறான். இவர்கள் பட்டியல் வெளியேற்றம் பற்றி பேசுகிறார்கள்.

இன்னொரு பக்கத்தில், முக்குலத்தோர் சமூகத்துக்கு நான்தான் பொறுப்பு என பேசிக் கொண்டு இருக்கிறான். இரண்டு பேரையும் வளர்த்து விடுகின்ற வேலையும், மோத விடுகின்ற வேலையும் இவன்தான்(ஆர்.எஸ்.எஸ் காரன்) செய்கிறான். இந்த மாதிரியான ஆர்எஸ்எஸ் வகைப்பட்ட இந்துத்துவ அமைப்புகள் இந்த இளைஞர்களுக்கான எதிர்காலத்தை பற்றி பேசுவதில்லை. அவனை மதவெறியனாக மாற்றுவதும், சாதிவெறியனாக மாற்றுவதும், கலவரம் பண்ண வைப்பதும், வன்முறை செய்ய வைப்பதும், (தங்களை தாங்களே அழித்து எல்லாருமே இரண்டு பேரும் தமிழர்கள் தானே)  என ஒருத்தனை ஒருத்தன் அடித்துக் கொல்வதை பிஜேபி விரும்புகிறது. அதற்கு இங்கே அதிகார வர்க்கத்திலிருந்து எல்லாரும் துணை போகிறார்கள்.

இதை கையாளுகின்ற துணிச்சலோடு திமுக இல்லை என்பதுதான் நமக்கு பெரிய கவலை. இன்னும் துணிச்சலாக இறங்கினால்தான் இந்த வேலையை செய்ய முடியும். இதில் கவலைப்பட்டு உட்கார்ந்து கொண்டு இருந்தால் என்ன பண்ண முடியும்? இடைநிலை சாதியில் இருக்கிறவன் நமக்கு எதிராக போய் விடுவான் என நம்பிக்கொண்டு இருந்தால் ஒன்றும் மாறாது. அப்படி இவனெல்லாம் பெரிய கூட்டமாக இருந்தால், இவர்கள் தனியாக எம்எல்ஏ ஆகி வென்றிருப்பார்கள். ஒரு 5000 பேர் 10,000 பேர் கூட்டத்தை காட்டுவதைப்  பார்த்தெல்லாம் பயம் கூடாது.

மக்கள் வளர்ச்சியைத்தான் விரும்புகிறார்கள். அமைதியைத்தான் விரும்புகிறார்கள். சாதிய கலவரவாதிகளை மக்கள் நேசிக்கவில்லை. இந்த கொலைக குற்றவாளியை எந்த சாதாரண வீட்டில் இருக்கிறவனோ, எந்த சாதிக்காரனோ எவனும் பாதுகாக்க மாட்டான். குற்றவாளிகள்தான் குற்றம் செய்பவனை பாதுகாப்பான். அவன்தான் அடைக்கலம் கொடுப்பது போன்ற எல்லா வேலையும் செய்வான். இது குற்றவாளி கும்பல். அந்த குற்றவாளி கும்பல் வந்து சாதி அடையாளத்தை வைத்துக்கொண்டு, பொது சமூகத்துக்கு இடையூறு செய்கிறார்கள்.  இவளை குற்றவாளி அடிப்படையில் தான் பார்க்க முடியும். இந்த குற்றவாளிக்கு பின்னாடி சாதிய உணர்வு இருக்கிறது, சாதிய அமைப்புகள் இருக்கின்றன. இவர்கள் எல்லாரையும் சேர்ந்து குற்றவாளியாக கொண்டு போய் நிறுத்துவதற்கான சட்டம் நமக்கு தேவை. சட்ட உதவி இருந்தால்தான் இந்த சண்டையை நாம் போட முடியும் என நாங்கள் உறுதியாக. நம்புகிறோம். அந்த வகையில ஆணவப்படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டம் கண்டிப்பாக தேவைப்படும்.

கேள்வி: இறுதியாக, நீங்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் குறிப்பிட்டு சொன்னீர்கள், இந்த சாதிய படுகொலையில் ஈடுபடக்கூடிய குற்றவாளியின் குடும்ப சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று சொன்னீர்கள், அது எந்த அளவுக்கு நடைமுறையில சாத்தியம்?

பதில்: ஏன் சாத்தியம் இல்லை. குற்றவாளி எனச் சொன்ன பிறகு, அதற்கான ஒரு முறையை கொண்டு வந்து அறிவியுங்கள். ஏனெனில் குற்றவாளியாக இருக்கிறவனுடைய சொத்து அரசுக்கு சொந்தமாகி போய் விடும் என அறிவித்த பின்னால், அவன் கவலைப்படுவான் இல்லையா! பயம் வரும் இல்லையா! சொத்தை காப்பாற்றுவதற்கு தானே இந்த வேலையை செய்கிறார்கள். அப்போது அதற்கான கேள்விகளை நாம் வைக்க ஆரம்பிக்கும் பொழுதுதான், இவர்களுக்கான அச்சம் வரும். எதற்காக வேறு சாதிக்காரர்களிடம் பெண் கொடுக்க வேண்டாம் என சொல்கிறான்? தன் சொத்து வேறு சாதிக்கு போகக்கூடாது என்பதைதான் பார்க்கிறான். அதனால் குற்றவாளியானால், உன் சொத்திலும் கை வைப்போம் என்ற இடத்துக்குள் சட்டம் வரும் என்றால், எல்லாரும் பயப்படுவார்கள். வழக்கு முடியும் வரைக்கும் உன் சொத்தை அனுபவிக்க முடியாது. நிரூபித்துவிட்டு எடுத்து விட்டுப் போ எனச் சொல்லி அமலாக்கத்துறை எடுப்பதுபோல, இங்கேயும் செய்யுங்கள்.

நிருபர்: இவ்வளவு நேரம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழர்.

நன்றி வணக்கம்.

முழு காணொளியின் இணைப்பு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »