ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை – திருமுருகன் காந்தி

பெரியாரா, பிரபாகரனா என்ற முழக்கத்தை முன்வைப்பதன் மூலம் இளைஞர்களிடத்திலும் திரிபுவாத கருத்துக்களையும், தமிழின அரசியலை கொச்சையான அவதூறுகளின் வழியே சிதைப்பதற்காக சீமான் களமிறக்கப்பட்டிருக்கிறார் என்பதனை அம்பலப்படுத்தும் வாய்ப்பாக, ஈரோடு இடைத்தேர்தல் சீமானை வீழ்த்த விரும்பும் தோழர்கள் எங்களுடன் கைகோர்த்து களம் இறங்க அழைக்கிறோம் என மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூலில் சனவரி 26, 2025 அன்று பதிவு செய்தது.

ஈரோடு இடைத்தேர்தல் முக்கியமான விடயங்களை நமக்கு சொல்லும் தேர்தலாகிவிட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருக்கிற நிலையில், தமிழர்களின் பலவேறு கோரிக்கைகள் கவனம் பெறுவதற்குரிய தேர்தலாக அமைந்திருக்கிறது. ஆனால், பெரியாரா, பிரபாகரனா? என்ற முழக்கத்தை முன்வைப்பதன் மூலம் இரண்டு பெரிய பின்னடைவுகளை நாம் சந்திக்க இருக்கிறோம். முதலாவது தந்தை பெரியாரின் ஆளுமையான தமிழின அரசியலை கொச்சையான அவதூறுகளின் வழியே சிதைப்பதற்காக சீமான் களமிறக்கப்பட்டிருக்கிறார். பெரியார் சொல்லாத கருத்துக்களை சொன்னதாகவும், பெரியாரின் கருத்துக்களை திரித்தும் பெரியாரை தமிழருக்கு எதிரிகளாக முன்னிறுத்துகிறார்.

இந்த அரசியல் பாஜகவின் நுழைவிற்கு தேவையான கதவை திறந்து விடும் நோக்கத்தை மட்டுமே கொண்டது. திமுக அரசு செய்யத் தவறிய பலவேறு வாக்குறுதிகள், கட்டுப்படுத்த தவறிய மதவெறி பரப்புரைகள், சாதிவெறி வன்முறைகள், மாஞ்சோலை தொழிலாளர் முதல் தூய்மைப்பணியாளர்-செவிலியர்-ஆசிரியர்-மின்துறை பணியாளர் என ஒப்பந்த ஊழியர்களுக்கான பணி நிரந்தரம், மீனவர் கொலைகளுக்கு வழக்குகள் பதியாதது என எண்ணற்ற கோரிக்கைகள் விவாதத்திற்கு வராமல் தடுக்கும் பணியை சீமானின் சீரழிவு அரசியல் செய்கிறது. திமுகவின் மீதான விமர்சனங்களை பெரியார் எதிர்ப்பு ஓட்டுகளாக மாற்றிக்காட்டி, தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிரான இந்துத்துவ அரசியல் வலுப்பெறுவதாக காட்சிப்படுத்த முனைகின்றன சங்பரிவார் கும்பல்கள்.

ஈழ அரசியலை முன்னெடுக்க தமிழக-இந்திய அளவில் விவாதமாக உருவாக்காமல், தமிழ்நாட்டில் எழுச்சிகரமான போராட்டத்தை கட்டியெழுப்பாமல் தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொண்ட சீமான் தமிழ்நாட்டின் தனித்த தமிழ்தேசியவாதியாக தன்னை காட்டிக்கொள்ள முனைகிறார். தமிழ்த் தேசியத்தின் அடிப்படையை கடந்த 16 ஆண்டுகளாக பேசாத சீமான், தமிழர்களை சாதிவாரியாக பிரித்தாள நினைக்கிறார். சராசரி கட்சிகளுடைய அனைத்து அம்சங்களையும் பெற்ற கட்சியை உருவாக்கி, தமிழ்த்தேசிய கட்சியாக மக்களிடத்தில் போலியான பிம்பத்தை கட்டமைக்கிறார்.

அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் சமரசம் செய்துகொண்டும், பாஜகவின் கருத்தியல்களை பரப்ப துணை செய்துகொண்டும் தமிழ் இளைஞர்களை சிதைக்கும் அரசியலை செய்துவருகிறார். திமுகவிற்கு எதிரான அரசியலை செய்வேன் என சொல்லிக்கொண்டே, பாஜகவிற்கு சாதகமான அரசியலை முன்னெடுக்கிறார். பாஜகவின் எச்.ராஜா போன்றோரை வெளிப்படையாக பேரறிஞர் என கொண்டாடும் நிலைக்கு சென்றுவிட்ட சீமானின் அரசியல் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் நோக்கம் கொண்டவை. தமிழ்நாட்டிற்கு எதிராக பல நெருக்கடிகளை கொடுத்து வரும் பாஜகவுடன் சீமான் சமரசம் செய்துகொள்வதும், பாஜகவின் கருத்துகளை கொண்டாடுவதும் தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும்.

மாநில உரிமைகளை நசுக்கியும், மாநிலத்திற்கான நிதிப்பங்கீட்டை குறைத்தும், மாநில திட்டங்களுக்கான நிதியை நிறுத்தி வைத்தும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை படுகுழிக்குள் தள்ளும் வேலையை மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளாக செய்துவருகிறது. மோடிக்கு எதிராக மக்களை திரட்டி கடுமையான எதிர்ப்பை திமுக அதிமுக கட்சிகள் காட்ட தவறுகின்றன. இந்நிலையில் பாஜகவிற்கு எதிராக மக்களை திரட்டவேண்டிய சீமான், மாநில உரிமைக்கு எதிரான மோடி கும்பலோடு கைகோர்க்கிறார். இவரது துரோக அரசியலை எதிர்கொண்டு வீழ்த்தி, தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நேர்மையான தமிழ்த்தேசியத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய பணியை மே17 இயக்கம் மேற்கொள்ளுகிறது.

சீமானின் போலியான தமிழ்த்தேசிய அரசியலை வீழ்த்துவதன் மூலமே போராட்ட குணமிக்க தமிழ்த்தேசியம் மேலெழ முடியும். மக்களிடத்திலும், அவரது கட்சி இளைஞர்களிடத்திலும் சீமானின் திரிபுவாத கருத்துக்களை அம்பலப்படுத்துவதன் மூலமே தமிழ்நாட்டிற்கான மாற்று அரசியல் வெளியை உருவாக்க இயலும். தமிழ்நாட்டின் ஆளூம்கட்சிகளின் மக்கள் விரோத திட்டங்களுக்கோ, டில்லி அதிகாரத்திற்கு எதிராகவோ எதிர்த்து நிற்கும் துணிவற்ற சீமானின் அரசியலை அப்புறப்படுத்தும் பொழுதே, தமிழினம் தனது உரிமைகளையும், எதிரிகளையும் கண்டறியும் வாய்ப்பு ஏற்படும்.

மிக மோசமாக தற்போது ஈரோடு இடைத்தேர்தலில் ‘பெரியாரா-பிரபாகரனா’ என தமிழினத்தின் இருபெரும் ஆளுமைகளை முன்னிறுத்துகிறார். பாஜகவின் ஜிஎஸ்டி, பருத்திவிலை உயர்வு ஆகியவற்றினால் நசுக்கப்பட்ட கொங்கு பகுதியின் நெருக்கடிக்கு காரணமான பாஜக அரசை எதிர்த்து ’மோடியா-தமிழர்களா?’, இந்தியை திணிக்கும் பாஜகவை கண்டித்து ‘இந்தி மொழியா-தமிழா?’, மாநில உரிமைகளை பறிக்கும் சதிகளை எதிர்த்து ’ மாநில உரிமையா-டில்லி சர்வாதிகாரமா?’ தமிழர்களின் கல்வியை பறிக்கும் ‘தேசிய கல்விகொள்கையா-தமிழ் மாணவர்களா?’ என்றெல்லாம் சீமான் தேர்தல்களில் கேள்வி எழுப்பி நாம் பார்த்ததில்லை.

பத்திரிக்கையாளர்களிடத்தில் திமுக-அதிமுக கட்சிகள் ஒன்றிய அரசை எதிர்ப்பதில்லை என்று விமர்சிக்கும் சீமான், இக்கட்சிகளை விட மோசமான அமைதியையே களத்திலும் காட்டுகின்றார். திமுகவின் குறைகளை, சந்தர்ப்பவாதத்தினை சுட்டிக்காட்டுவதன் மூலமாகவே தம்மை பாஜக எதிர்ப்பாளன் எனும் பிம்பத்தை எழுப்ப நினைக்கிறார். ஆனால், பாஜகவிற்கு எதிராக குறைந்த பட்ச போராட்டத்தைக் கூட நடத்தாமல் மெளனம் காக்கிறார். ஆளுநர் செய்யும் அத்துமீறல்களை கண்டித்து மக்களை திரட்டுவதைக் கூட செய்யாமல் மெளனம் காக்கும் சீமான் எங்ஙனம் தமிழ்த்தேசியவாதியாகி விட முடியும்?. குறைந்த பட்சம் திமுக வெளிப்படுத்திய எதிர்ப்பைக்கூட சீமான் களத்தில் காட்டினாரா என்பது சந்தேகமே. ஆகவே சீமான் எவ்விதத்திலும் திமுக-அதிமுகவிற்கான மாற்று அரசியலை உருவாக்கிவில்லை. பாஜகவின் மற்றுமொரு வடிவமாகவே தமது கட்சியை மாற்றிக்கொண்டிருக்கிறார். இந்த பின்னனியிலேயே போலி தமிழ்த்தேசியவாதியான சீமானை அம்பலப்படுத்தி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதன்மைப்படுத்தும் தேவை எழுந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்சின் பொய் தகவல்களைக் கொண்டு தந்தை பெரியாரை இழிவு செய்தும், மேதகு பிரபாகரன் அவர்களின் குடும்பத்தினரை கொச்சையாக தகாத வார்த்தைகளால் இழிவு செய்தும் பேசி வருகின்ற சீமானுக்கு எதிராக, தந்தை பெரியாரின் சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கெடுத்து சிறைச்சென்ற சோழபுரம் முருகேசன் அவர்களின் பேத்தி தோழர் வெண்ணிலா அவர்கள் சுயேட்சை வேட்பாளாராக தேர்தலில் போட்டியிடுகின்றார். இவர் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் பொறுப்பாளராக பெரியாரிய-தமிழ்த்தேசிய அரசியலில் இயங்கி வருகிறார். மேலும் சோழபுரத்தில் கவுன்சிலராக செயலாற்றி வருகிறார்.

தோழர் வெண்ணிலாவின் பிரச்சாரத்திற்கு வலு சேர்த்து போலி தமிழ்த்தேசியவாதியான சீமானை அம்பலப்படுத்தியும், தந்தை பெரியாரின் பங்களிப்பை விளக்கியும், ஈழப்போராட்டத்திற்கான பெரியாரிய தோழர்களின் பங்களிப்பையும், மோடி அரசால் பறிபோகும் தமிழின உரிமைகளையும், பாஜக அரசால் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் கல்வி உரிமையையும், திமுக செய்யத் தவறிய வாக்குறுதிகளையும், நிறைவேற்றாத மாஞ்சோலை தொழிலாளர் உரிமை, ஒப்பந்த ஊழியர் உரிமை, சாதிவெறி தாக்குதல்களை தடுப்பது உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தப்படுத்தியும், 2026ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அரசியலையும் கவனப்படுத்தி மே பதினேழு இயக்கம் பரப்புரை செய்ய முடிவெடுத்துள்ளது.

சீமான் முன்னெடுக்க முயலும் நச்சு அரசியலை வீழ்த்த விரும்பும் தோழர்கள் எங்களுடன் கைகோர்த்து களம் இறங்க அழைக்கிறோம். அதிமுக-திமுக கட்சிகள், ஆரிய இந்திய கட்சிகள் ஆகியவற்றிற்கு மாற்றான தந்தை பெரியார், மேதகு பிரபாகரன், பாவலரேறு பெருஞ்சித்தரனார், தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரின் கருத்தியல் வழியான தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க விழையும் தோழமைகள் எங்களுடன் கைகோர்க்க அழைக்கிறோம். தமிழின துரோகியை அடையாளம் காட்டும் பொறுப்பு நமக்குண்டு. இறுதி மூச்சுவரை தமிழின உரிமைகளுக்காக போராடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில் திராவிட கொள்கைகளை முழங்க நமக்கு கிடைத்த மற்றுமொரு வாய்ப்பு.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் பணி என்பது வாக்கு அறுவடைக்கான களப்பணியல்ல, ஓட்டு எண்ணிக்கைக்கான பிரச்சாரமல்ல, பதவியை பிடிப்பதற்கான போட்டியல்ல, மாறாக போலிகளை அம்பலப்படுத்தும் போராட்டம்.

தமிழ்நாடு தமிழருக்கே!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!

தோழர் திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம் 
சனவரி 26, 2025

https://www.facebook.com/share/p/18ATPcWWGM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »