சமாதானம் விரும்பிய தலைவர்

தமிழர்களின் இதய அரியணையில் வீற்றிருக்கும் தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அகவை 71. இந்த நன்னாளில் அவரின் சிறப்பியல்புகளை நினைவு கூறும் அதே வேளையில், அவரைப் பற்றி எழுகின்ற அவதூறுகளுக்கும் மறுப்பு சொல்ல வேண்டிய கடமையும் தமிழீழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.

தலைவர் பிரபாகரன் அவர்கள், போர் மீது விருப்பம் கொண்டவராக இருந்ததால் எந்த சமாதானத்திற்கும் அவர் உடன்படாமலிருந்தார் என்னும் மோசடியான பிரச்சாரத்தை வலிந்து சிலர் மேற்கொள்கின்றனர். ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் போர் நடவடிக்கைகளை விட சமாதான நடவடிக்கைகள் ஆழமானது. மக்களின் நலனை முன்னிறுத்தியது. “சமாதானத்தை நான் முழுமனதோடு விரும்புகின்றேன். எமது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கவுரவமாக வாழ வேண்டும் என்பதே எனது தலையாய லட்சியம்” – என்று தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவித்தவர் அவர்

தன்னினத்திற்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்டு அறச்சீற்றம் கொதிக்கும் வயதில் ஆயுதம் ஏந்திய அவர் சமாதானத்திற்கான அனைத்து கதவுகளையும் திறந்து வைத்திருந்தார். தமிழ் மக்களின் நிரந்தரமான, நிம்மதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நிரந்தர தீர்வுக்காக முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளில் தயக்கமின்றி முன் வந்தவர் அவர்.

இந்திய அரசினால், 1985-களில் பூட்டான் தலைநகர் திம்புவில் தேசியத் தலைவர் அவர்கள் சமாதானப் பேச்சுகளுக்கு இணங்கினார். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, சிங்களப் படைகள் தமிழீழ மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். திம்பு பேச்சுகளுக்கு ஆதாரமாக இருந்த போர் நிறுத்த உடன்பாட்டினை சிங்கள அரசு மீறியதால் பேச்சு வார்த்தையில் பங்கு கொள்வது பொருத்தமற்றது என முடிவடைந்தது. அதற்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் அழைப்பின் பேரில் 1987-ல் டெல்லிக்கு சென்றார். அவரை டெல்லியில் சிறை வைத்து இந்திய- இலங்கை நலனை முன்னிறுத்தி சில அதிகாரங்களை மட்டுமே பகிர்ந்தளிப்பதாக இருந்த  ஒப்பந்தத்தை, தமது மக்களின் அமைதியான சமாதானமான வாழ்விற்காகவே வலிந்து ஏற்றுக் கொண்டார்.

தனது நிலைப்பாட்டை சுதுமலைப் பிரகடனத்தில் மக்களிடம் தெளிவுபடுத்தினார்.  ‘இந்திய வீரன் மார்புக்கு நேராக நமது துப்பாக்கியை நீட்டத் தயாராக இல்லை’ என்று கூறி விட்டு ‘உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக நாங்கள் இந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்’ என மக்களின் நலனுக்காகவே  ஆயுதங்களை ஒப்படைத்தார்.

போரினை ஒதுக்கி வைத்து மக்கள் நலனை முன்னிறுத்தி ஆயுதங்களைக் கையளித்தார் தேசியத் தலைவர். ஆனால் இந்த சமாதான நடவடிக்கைகளை முறித்தது இந்தியா. இந்திய இலங்கை ஒப்பந்தப்படி, கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை இருந்த தீலிபனை சாக விட்டது இந்தியா. போர் நிறுத்த நேரத்தில் புலிகளின் 12 தளபதிகளை கைது செய்து அவர்களை வீரச்சாவை தழுவ வைத்தது இந்தியா. இந்திய அமைதி காப்புப் படைகளின் இந்தத் துரோகங்களைப் பற்றி எதுவும் பேசாது, தமிழீழ மக்களின் கோவத்திற்கு இணங்கி மீண்டும் ஆயுதங்களைக் கையிலெடுத்தவர்களை, ஆயுத விரும்பிகள் என்று சுயநலமிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் 1994-ல் சிங்கள – தமிழர்களின் நல்லிணக்கத்தை பேணி சமாதானத்தை நிலைநிறுத்துவதாக தேர்தல் பிரச்சார யுத்தியாக பயன்படுத்தி சந்திரிகா வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அதன் பின்னர் 1994, அக்டோபர் மாதம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பிலும் குழுக்கள் நியமிக்கப்பட்டன. இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ‘போர் நிறுத்தத்திற்கும் நிபந்தனையற்ற பேச்சுகளுக்கும் தயார் என நாம் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். சமாதான பேச்சுகளை நடத்துவதற்கு ஏதுவான அமைதியான சூழ்நிலையும் இயல்பு நிலையும் உருவாக்குவதற்கு புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் சகல முயற்சிகளுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம்’ என்று சமாதானத்தினை வரவேற்றார் தேசியத் தலைவர்.

1995, ஏப்ரல் வரை சுமார் ஆறு மாதம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழீழப் பகுதிகளில் பொருளாதாரத் தடைகளை தளர்த்த வேண்டும், எரி பொருட்கள், உரங்கள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் மீதான தடைகளை தளர்த்த வேண்டும், பூநகரி முகாம் போன்று அடைக்கப்பட்டிருந்த தரைப் பாதைகளை மீண்டும் திறக்க வேண்டும், மீன்பிடித்தல் தடை மீதான கட்டுப்பாடுகளை நடத்த வேண்டும் போன்று முற்றிலும் தமிழ் மக்களின் நலன் உத்தேசித்த கடிதப் பரிமாற்றங்கள் நடந்தன. இவற்றில் சிலவற்றை நிறைவேற்றுவதாக சந்திரிகா அரசு அறிவித்தாலும், சந்திரிகாவின் முடிவுகளுக்கு கடுமையான எதிர்ப்புகளை சிங்களப் படைகள் தெரிவித்தன.

அரசாங்கம் தளர்த்துவதாக சொன்னாலும் பாதைகள் திறந்து விட இராணுவம் தடையிட்டது. சிங்களப் படைகள் பெட்ரோல், டீசல், எரிபொருட்களை வவுனியாவிற்கு வரவிடாது தடைகளை இறுக்கியது. மீன்பிடி தடைகளும் தொடர்ந்தன. இவை அனைத்தையும் விட போர் நிறுத்தம் என சமாதானத்தைப் பேசிவிட்டு, சிங்கள ஆயுதப்படைகள் வலுமிக்கதாக கட்டி எழுப்பப்பட்டன. நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் போர்க்கப்பல்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. சமாதானமும், ஒற்றுமையுமே இலட்சியம் என்று ஒரு புறத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறத்தில் பிரம்மாண்டமாக படையைக் கட்டி எழுப்பியதே தேசியத் தலைவர் சமாதானத்தை முறித்துக் கொள்ள காரணமாக இருந்தது.

‘எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படாததால் பேச்சுவார்த்தையில் இருந்தும் பகை நிறுத்த உடன்பாட்டில் இருந்து விலகிக் கொள்வது என்ற வேதனைக்குரிய முடிவை எடுப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.’ என கடிதம் மூலமாக தனது நிலைபாட்டை அறிவித்தார் தேசியத் தலைவர். ஆனால் சர்வதேச சமூகத்திடம் தங்களின் நல்லெண்ண நடவடிக்கைகளை புலிகள் முறித்து விட்டதாக நாடகமும் ஆடியது சந்திரிகா அரசு.  

போர்நிறுத்த சமாதானப் பேச்சுவார்த்தை முறிந்த உடனே ‘அதிகாரப் பரவலாக்கத் திட்டம்’ என்கிற ஒன்றை அரசாங்கம் வெளியிட்டது. இது இனப் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என பிரச்சாரம் மேற்கொண்டது சந்திரிகா அரசு. இத்திட்டத்தை அரசாங்க ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் புகழ்ந்து தள்ளின. புரட்சிகரமான தீர்வு திட்டம் என்று சர்வதேச சமூகம் பாராட்டியது. இந்த தீர்வு திட்டத்தினை நடைமுறைப்படுத்த சமாதானத்தின் விரோதிகளான விடுதலைப் புலிகளை ஒடுக்க வேண்டும், அதற்கு போர் தவிர்க்க முடியாதது என்று போரைத் துவங்கியது சந்திரிகா அரசு. மூன்றாம் கட்ட ஈழப்போர் 1995-ல் புலிகள் மீது திணிக்கப்பட்டது. 

ஒவ்வொரு முறையும் நல்லெண்ண சமாதான நடவடிக்கைகளுக்கு இணங்கி, போர் நிறுத்தம் செய்து, தீர்வுகளுக்காக சமாதானம் பேசிய காலகட்டங்களில் எல்லாம் அந்த இடைவெளியைப் பயன்படுத்தி,  கோரிக்கைகளை இழுத்தடித்து தமது படையை வலுப்படுத்திக் கொள்வதற்கே சிங்கள அரசுகள் பயன்படுத்தின. ஆனால் சமாதான உடன்படிக்கைக்குத் தயாராக இருந்த தேசியத் தலைவரை சமாதானத்தின் எதிரியாக சித்தரிக்கும் நுட்பமான வேலையை இலங்கை அரசுகள் தொடர்ச்சியாக செய்தன. அதனை சர்வதேசத்திற்கும் கடத்தின.

இதற்குப் பிறகும், முல்லைத் தீவு சமர், ஜெயசுக்குறு சமர், ஓயாத அலைகள் 1, 2, 3 போர், வன்னி மீட்புப் போர், ஆனையிறவுப் போர் என தொடர்ச்சியான போர்களின் மூலமாக எவராலும் வெற்றி கொள்ள முடியாத பலம் பெற்றார்கள் விடுதலைப் புலிகள். இலங்கைப் படைக்கு இணையான சமச்சீர் வலுநிலையை அடைந்தார்கள்.

தமிழர் தாயகத்தில் ஒரு நிழல் அரசாங்கத்தை நிர்வகிக்கும் அளவிற்கு வலு பெற்றது விடுதலைப்புலிகள் இயக்கம்.

இந்த காலகட்டத்தில் தான் நார்வேயின் சமாதானத் தூதுக்குழு அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட முன்வந்தது. ஒரு அரசுப் படைக்கு சரிநிகரான வலுவான நிலையில் கூட,  தேசியத் தலைவர் அவர்கள் நார்வே தூதுவர்களிடம், “தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கு சமரச பேச்சுகள் மூலம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் என்றுமே தயாராகவே இருக்கிறது” என்றே கூறினார்.  

ஆனால் நார்வேவின் முயற்சிகளுக்கு பதில் அளிப்பதை சந்திரிகா அரசாங்கம் தாமதப்படுத்தியது. இருப்பினும் நார்வேவின் முயற்சிகளுக்கு துணையாக ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக 2000 டிசம்பர் 24-லிருந்து சுமார் ஒரு மாத காலம் சிங்கள ஆயுதப்படைகளுக்கு எதிரான அனைத்து படை நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு பிரபாகரன் அவர்கள் தமது அனைத்துப் படையணிகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார். சந்திரிகா அரசு ஒத்துழைக்கவில்லை. இருப்பினும் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு மாதத்தை நான்கு மாதங்களாக நீட்டித்து சமாதானத்திற்கான வழிகளைத் தேர்வு செய்ய கால அவகாசம் கொடுத்தார். ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தின் போது கூட பல பகுதிகளை ராணுவம் கைப்பற்றி நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொலை செய்தது. நான்கு மாத காலம் முடிந்த பின்னர் கூட நார்வேயின் சமாதான முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தேசியத் தலைவர்.

2001-ம் ஆண்டு ரணில் விக்கிரமிசிங்கே இலங்கை அதிபரானார். 2002-ல் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன. 2002 ஆம் ஆண்டு சர்வதேச ஊடக ஊடக சந்திப்பின் போதும் சமாதானத்தின் மீது தமக்குள்ள பற்றினை அழுத்தமாக தெரிவித்தார் தேசியத் தலைவர். அதனைத் தொடர்ந்து 2003 வரை நடந்த ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தைகளிலும் சமாதானத்திற்கான முயற்சிகளே அவரால் மேற்கொள்ளப்பட்டன.

சமாதானப் பேச்சுவார்த்தையில் முக்கியமான ஒன்றான ‘இடைக்கால தன்னாட்சி சபை அமைக்கும் திட்டம்’ ஆரம்பிக்கும் வேளையில் சந்திரிகா, ரணில் அரசை கவிழ்த்தார். ஜேவிபியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி பிடித்தார். தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும் ஆட்சி அதிகாரமாகவும் வழங்கப்படுவதை ஜேவிபி அன்றே கடுமையாக எதிர்த்தது. அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுத்த நார்வை அரசையும் கண்டித்தது. தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை நிராகரித்தது. அது நிறைவேறினால்  கூட்டணியில் இருந்து வெளியேறி விடப்போவதாகவும் மிரட்டியது.

தேசியத் தலைவர் அவர்கள் 2004ம் ஆண்டு தனது மாவீரர் உரையில், இனவாதமும் மதவாதமும் பழமைவாத கம்யூனிசமும் ஒன்று கலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த தமிழர் விரோத கட்சியான ஜேவிபி கூட்டணி என்றே ஜேவிபி கட்சியைக் குறிப்பிட்டு பேசியது இன்றும் பொருந்துகிறது. இலங்கையில் ஆட்சி அமைத்த, ஆட்சி அமைக்கப் போகும் எந்தக் கட்சியும் இனவாதத்தில் ஊறித் திளைத்த கட்சிகளே என்பதை அவர் சரியாக கணித்திருந்தார். 

இந்த சூழலில் ஒட்டுக் குழுக்கள் ஊடாக, விடுதலைப் புலிகளைப் பற்றியான விசமப் பிரச்சாரங்கள் வழியாக, ஐரோப்பிய ஒன்றியம், கனடாவின் தடையிடச் செய்த நகர்வுகள் மூலமாக இலங்கைப் பேரினவாத அரசு கடும் நெருக்கடிகளை கொடுத்தது. கடும் சூழ்ச்சிகளோடு 2006-ல் நடந்த ஜெனிவா சமாதானப் பேச்சுவார்த்தையிலும், போர் நிறுத்த ஒப்பந்தம் ராஜபக்சே அரசினால் நிராகரிக்கப்பட்டது.

போர்க்கால கடுமையான சூழலில் நின்ற போதும் சரி, இலங்கை படைக்கு சரிசமமாக நின்று தமிழீழப் பிரதேசத்தின் ராணுவத் தலைமையாக இருந்த போதும் சரி, சமாதானக் கதவுகளை தேசியத் தலைவர் மூடவேயில்லை. இறுதியில் 2009-ல் சமாதானம் தனக்கான அழிவைத் தேடிக் கொண்டது. சமாதானம் என்பது விடுதலை இயக்கங்களை உலக வல்லாதிக்க சக்திகள் தங்கள் நலனுக்கான சதிவலையில் சிக்க வைத்து, திணிக்கும் தீர்வை ஏற்க வைக்கும் சூழ்ச்சி சொல்லாடல் என்பதை தமிழினத்திற்கும் புரிந்தது.

“சமாதானப் பேச்சு என்பது எமது விடுதலைப் போராட்ட பாதையில் வைக்கப்பட்ட பொறி என்பதையும் நாம் நன்கு அறிவோம். அத்தனையும் தெரிந்தும் நாம் நேர்மையுடனும் நேரிய நோக்குடனும் சமாதானப் பாதையில் பயணித்தோம்” – மாவீரர் உரையில் அவர் கூறியவை.

ஆதிக்க அரசுகள் விடுதலை கோரி நிற்கும் இனத்தை உருட்டி விளையாடும் கைப்பந்தே சமாதானம் என்னும் உலகப்போரியல் வரலாற்றின் அரிச்சுவடி கூட அறியாதவர்கள்

தேசியத் தலைவரை போர்வெறி கொண்டவர் என்று ஆர்ப்பரிக்கிறார்கள். தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் கூர்மையும், சர்வதேச போரியல் வரலாற்றின் நெறியும் அறியும் ஆற்றல் உடையவர்கள் தேசியத் தலைவரை சமாதானத்திற்கு இரு கரமும் நீட்டி நின்ற, போர் நெறியும், அறமும் கொண்ட மாவீரர் என்றே போற்றுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »