
கடந்த செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடந்த பாலஸ்தீன விடுதலைக்காகவும் அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்கவும் நடத்தப்பட்ட பேரணி என்பது அங்கே நிகழும் பட்டினிச் சாவுகள், இசுரேலின் முப்படை ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் பொழுது நிகழ்ந்த மிகமுக்கிய எதிர்வினை. ஐ.நா மனித உரிமை அவை இசுரேல் செய்துகொண்டிருப்பது இனப்படுகொலை என்பதை பகிர்ங்கமாக அறிவித்த ஓரிரு நாளில் இந்த எதிர்வினை தமிழ்மண்ணில் இருந்து வெளிப்பட்டது. இயக்கத் தோழர்கள் தமிழகமெங்கிருந்தும் திரண்டு வந்து பங்கேற்றது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான வெகுமக்களும் பங்கெடுத்த வரலாற்று நிகழ்வாக மாறியது குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்களின் சமூக வலைதளத்தில் செப்டம்பர் 24, 2025 அன்று பதிவு செய்தது.
தமிழ்நாடு தொடர்ந்து இசுரேலின் ஆதிக்க போருக்கு எதிரான சனநாயக குரலை எழுப்புவதில் முதன்மை ஆற்றலாக இருக்கிறது. இயக்குனர் அமீர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல ’இந்தியாவில் இது வேறெங்கும் நடக்காத அளவில் பலதரப்பட்டோர் பங்கெடுத்த பேரணி’யாக அமைந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து பல போராட்டங்களில் நேரடியாக பங்கெடுத்து வருவதிலிருந்து இதை உறுதியாக வலியுறுத்த இயலும். வழக்கம் போல இந்திய ஊடகங்கள் இவற்றை கவனப்படுத்துவதில்லை.

2023ம் ஆண்டு முதல் பேரணியை மே17 இயக்கம் நடத்திய பொழுது எதிர்பாராத வண்ணம் 2500க்கும் மேற்பட்ட இயக்கத்தினர், பொதுமக்கள் பங்கெடுத்தனர். கடந்த 2024ம் ஆண்டிலும் ஏராளமானோர் நவம்பர்7ம் தேதி பேரணியில் பங்கெடுத்தனர். தோழர் வேல்முருகன், தோழர் அன்சாரி உள்ளிட்ட ஏராளமான ஆளுமைகள் உரையாற்றினர். தோழர் ஜவாஹிருல்லா தலைமையில் இசுலாமியர் கூட்டமைப்பினர் 2023ல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கம்யூனிஸ்டுகள் கூட்டியக்கம், இசுலாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நகர்த்தினர். தோழர் அன்சாரியின் துறைமுக முற்றுகைப்போராட்டம், இசுரேலிய தூதருக்கு எதிரான மமக, SDPI, மஜக, மே17 ஆகியோரின் போராட்டம், ஆயுத சப்ளைக்கு எதிரான சிபிஎம் கட்சியின் போராட்டம், சி.பி.ஐ கட்சி நடத்திய நிவாரண பொருட்களுக்கான முன்னெடுப்பு, 2024ம் ஆண்டு ஈழப்படுகொலைக்கான நினைவேந்தல் பாலஸ்தீன கிஃபையா அடையாளத்துடனும், பாலஸ்தீன-ஈழ ஆதரவுடனான முழக்கத்துடன் தொடங்கியது, இசுலாமிய மாணவர் அமைப்புகள், வெல்ஃபேர் கட்சியின் நிகழ்வுகள் என தொடர் போராட்டங்கள் இந்தியாவில் வேறெங்கும் நடந்ததை விட தமிழ்நாடு தீர்க்கமான அரசியல் எதிர்வினையை நடத்திகொண்டிருக்கிறது.
இந்தியாவில் சனநாயகத்திற்கான குரலை எழுப்புவதில் தமிழர்கள் முன்னணி ஆற்றலாக இருந்து வருவது எச்சமயத்திலும் இந்திய அளவில் ஊடக கவனம் பெற்றதில்லை. பலவேறு தளங்களில் இயங்கும் பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ்த்தேசிய, இடதுசாரி, இசுலாமிய, சூழலியல் அமைப்புகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் போராட்ட களங்களை உருவாக்கி சனநாயக் கோரிக்கைகளை முன்னெடுக்கின்றனர். இவ்வகையில் 2018ல் பெரும் முயற்சியில் உருவெடுத்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இந்துத்துவ ஆற்றல்களுக்கு எதிராக வலுவான எதிர்வினையை செய்தது.
தற்போதைய பாலஸ்தீன ஆதரவு பேரணி தமிழ்நாட்டில் பலவேறு சனநாயக அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு விழிப்புணர்வு உருவாக்கப்பட்ட கோரிக்கையை மென்மேலும் வலுப்படுத்தி உள்ளது. அதிகார பலம் கொண்ட கட்சிகளுக்கு அப்பால், பலவேறு சனநாயக ஆற்றல்கள் வேறுபாடு கடந்து ஒருங்கிணைந்து செயலாற்றும் பொழுதில் வெகுமக்கள் பங்கேற்பு இயல்பாக நடப்பதை கண்கூடாக காண இயலுகிறது. பெரிய ஆளுமையான கட்சிகளால் திரட்ட இயலாத சாமானிய மக்களின் ஆதரவை சனநாயக அமைப்புகளால் எளிதில் சாத்தியமாக்கிவிட முடிகிறது. பல தளங்களில் தோழர்களின் ஈடுபாடு மிக்க உழைப்பும், ஆதரவும் பெரும் மக்கள் சக்தியை உருவெடுக்க வைக்கிறது. இந்திய அளவில் விவாதங்களை இப்பேரணி உருவாக்கி இருப்பதற்கு இதில் பங்கெடுத்த பலவேறு ஆற்றல்கள் காரணிகளாக அமைந்திருக்கின்றன.
இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து பாலஸ்தீன ஆதரவினை வெளிப்படுத்தி வருகிறது. 2014ல் நடத்திய பாலஸ்தீன அதரவு ஆர்ப்பாட்டத்திற்காக என் மீது UAPA வழக்கை 2018ல் அதிமுக அரசு ஏவியது. காசுமீர், பாலஸ்தீனம் ஆகிய சிக்கல்கள் தொடர்பாக ஆதரவு குரல் எழும்போதெல்லாம் அடக்குமுறைகள் ஏவப்பட்டிருப்பது வரலாறு. ஆனால் இவற்றை முறியடித்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு தொடர்ந்து குரலெழுப்பி வருகிறது. அவ்வகையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக நாம் விளங்குகின்றோம். பல ஆளுமைகள், இயக்கங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை செப்டம்பர் 19ம் தேதி பேரணி உருவாக்கியது. இதற்கான உழைப்பை செலுத்திய அனைவரும் மானுடநேயத்திற்கான நம்பிக்கையை பாதுகாத்திருக்கிறார்கள் எனலாம்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தோழர் இளமாறன் பலவேறு தலைவர்களை சந்தித்து, நிகழ்வில் பங்கெடுக்க அழைத்திருந்தார். அவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொண்டு கடந்த 2 வாரங்களாக தமிழ்புலிகளின் தலைவர் தோழர் நாகை. திருவள்ளுவன் உடன் இணைந்து மேலும் பலவேறு இயக்க தோழமைகளுடன் இப்பேரணியை வெற்றிகரமானதாக மாற்றினார். இப்பேரணி வெற்றியடைந்ததில் அவரது உழைப்பு முதன்மையானது.

தோழர் இளமாறன், 2017ம் ஆண்டில் என்னுடன் குண்டர் சட்டத்தில் சிறையிலிருந்தவர். இந்நிகழ்விற்கான பணிகளை மருத்துவமனையில் இருந்தபடியே தோழர் கே.எம்.சரீப், தோழர் குடந்தை அரசன் மேற்கொண்டார்கள். இருவராலும் பேரணியில் பங்கேற்க இயலாத நிலையிலும் நிர்வாகப் பணிகளை முன்னெடுத்தார்கள். கடுமையாக உடல்நல சிக்கலிலும் அவர்களது மனம் இப்பேரணியில் இணைந்திருந்தது. இப்பேரணிக்கான அழைப்பையும், பொறுப்பினையும் தோழர் கோவை. கு. இராமகிருட்டிணன் மேற்கொண்டு நிகழ்வில் நேரடியாக பங்கெடுத்தார். திராவிடர் விடுதலைக்கழகத்தின் தோழர் தபசிக்குமரன், அனைத்து கட்சி தலைவர்களை சந்திப்பது, அழைப்பது, அனுமதி பெறுவது, காவல்துறையிடம் போராடி பேரணி-ஆர்ப்பாட்ட மேடை அமைப்புகளுக்கான அனுமதிகளை ஒழுங்கமைத்திருந்தார். மேடைக்கு அரணாக இருந்து பேராணியில் கூட்டத்தை காட்டுக்கோப்பாக வைக்க உதவிய SIO, தமுமுக தோழர்கள்.
மே17 இயக்கத்தின் தோழர் ப்ரவீன், கொண்டல் ஆகியோர் 2018 முதலாக பெரியாரிய கூட்டமைப்பில் பங்கெடுத்தவர்களை தொடர்பு கொள்வது, முழக்க அட்டைகள், வடிவமைப்புகள் என்பதிலிருந்து மேடை நிர்வாகம் வரை ஒழுங்கமைத்தனர். இதைப் போல கூட்டமைப்பின் பலவேறு உறுப்பு அமைப்பினர்கள், வி.த.பு, ஆ.த.பேரவை, ஆ.த.கட்சி, தி.த.க, மக்கள் மன்றம், த.ஆ.கழகம், த.ம.ஜ.கட்சி, த.பு, த.வி.கட்சி, ம.த.கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தின் பலவேறு நகரங்களில் இருந்து தோழர்களை திரட்டி பெரும் பொருட்செலவில் பயணித்து பங்கெடுத்தனர்.
உடல்நலம் குன்றியிருந்த நிலையில் கூட தோழர் பேராசிரியர் ஜவாஹிருல்லா நேரடியாக பங்கேற்பதை அறிவித்தார். அவரது தோழர்கள் தாம்பரம் யாக்கூப், புழல் ஷேக் உள்ளிட்டவர்கள் பெருந்திரளாக தோழர்களை திரட்டினர். இங்கிலாந்திலிருந்து அதிகாலை வந்திறங்கி உறங்காமலேயே இருந்த போதிலும் பேரணி முடிந்து, கண்டன ஆர்ப்பாட்ட இறுதிவரை தோழர் திருமா அவர்கள் பங்கேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தியது உற்சாகமளித்தது. தோழர்கள் வன்னி அரசு, ரஜனிகாந்த் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் தோழர் நெல்லை முபாரக் அவர்களுடைய வழிகாட்டுதலில் தோழர்கள் வெகுமக்களை திரட்டியிருந்தனர். SDPI மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நல்ல வேலை பார்த்தார். SDPI தேசிய பொறுப்பாளர் தோழர் தெகலான்பாகவி அவர்கள் பங்கேற்று, தன் உரைக்கான நேரத்தை பிறருக்கு கொடுங்கள் என்றார். வெல்பேர் கட்சியின் தோழர் அப்துல்ரகுமான் மற்றும் சனநாயக போராட்டங்களை ஒருங்கிணைக்கும் அக்கட்சியின் தோழர் கெளஸ் முகம்மது, இந்திய தவ்ஹீக் ஜமாத், உலமா சபை பொறுப்பாளர்கள், ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் என பல இசுலாமிய அமைப்பு தோழமைகளும் வெகுசிறப்பாக மக்களை திரட்டினர்.

கலைத் துறையை சார்ந்த இனமான நடிகர் சத்யராஜ் அவர்கள், இப்பேரணிக்காக பிற கலையுலக ஆளுமைகளைக்கும் அழைப்பு விடுத்திருந்தார். நடிகர் நாசர் அவர்கள் வேறு ஊரில் இருந்ததால் பங்கேற்க இயலாமல் போனது குறித்து தெரிவித்தார். இயக்குனர் வெற்றிமாறன் எப்பொழுதும் போல வஞ்சிக்கப்படும் மக்களுக்கான குரலாக பேரணியில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். இயக்குனர் அமீர் பேரணி தொடக்கம் முதல் இறுதிவரை பங்கேற்றது மட்டுமல்லாமல் முதல்நாள் ஊடக சந்திப்பு விவரம் முன்கூட்டி அறிந்திருந்தால் வந்திருப்பேன் என்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்ட போதும் இறுதிநேரத்தில் வெளியூரில் இருந்து பயணம் செய்து பங்கெடுத்தார். நடிகர் தீனா ’ஜெய்பீம், அல்லாஹூஅக்பர்’ என்று ஒற்றுமை முழக்கத்தை முழங்கி தனது ஆதரவை பதிவு செய்தார். இயக்குனர் பா.ரஞ்சித் பலவேறு பணி இடையூறுகளுக்கிடையே வர இயலாமல் போன வருத்தத்தை தெரிவித்தார். நம் மதிப்பிற்குரிய ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்கள், எழுத்தாளர் மீனா கந்தசாமி, இயக்குனர் லெனின்பாரதி, உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அஜிதா ஆகியோர் பேரணியில் வெகுமக்களோடு ஒருவராக பங்கெடுத்திருந்தனர். வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பேரா.சரஸ்வதி, பேராசிரியர் அப்துர்ரகுமான், ஐ.நா மனித உரிமை செயற்பாட்டாளர் பேரா.குழந்தை, பாலஸ்தீன வரலாற்றை தொகுத்து நூலாக்கிய எழுத்தாளர் அபிஷேக்முகம்மது என பல ஆளுமைகள் வெகுமக்களோடு ஒருவராக பங்கெடுத்திருந்தனர்.
இளம் செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து பெருமளவில் திரட்டும் பணியை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தோழர் பிரபா பி.கே செய்திருந்தது மிகப்பெரும் பலமாக அமைந்திருந்தது. பலவேறு தோழமைகளிடம் பேரணிக்கான செய்தியை கொண்டு சேர்த்து, தோழர்களை திரட்டிய சமூகச் செயற்பாட்டாளர் தோழர் கஸாலியின் உழைப்பு அபாரமானது. இதுபோல சமூக வளைதளங்களில் இச்செய்தியை பரவலாக்கிய தோழமைகள் தபெதிக- மனோஜ், மதூர்சத்யா, ராகுல்பாஸ்கர், மோகன் சே, திலகவதி, ஐஸ்வர்யா, அருள், மரு.சர்மிளா, கவிதா கஜேந்திரன், சந்தீப், ப்யூஸ் மனூஷ் என பெரும் எண்ணிக்கையிலான சமூக செயற்பாட்டாளர்கள் இப்பேரணியின் வெற்றிக்கான பங்களிப்பைச் செய்தவர்கள். இத்தோழர்கள் மட்டுமல்லாது பலவேறு கட்சிகளின் மாணவர் அமைப்பினர் இணைந்து நடத்திய துண்டறிக்கை பரப்புரைகள், முன்னோட்ட ட்விட்டர் பரப்புரைகள் நேர்த்தியானவை. செயற்பாட்டாளர்கள் தோழர் க்ரேஸ்பானு, வியாசை தோழர்கள் என பலரும் பரப்புரை, ஆதரவை திரட்டும் பணியை மேற்கொண்டனர். அனைவரையும் பாலஸ்தீன இனப்படுகொலை பாதித்திருந்ததை இப்பேரணி வெளிப்படுத்தியது. பதாகைக்காண வாசகங்கள், முழக்கங்கள் & ட்விட்டர் பிரச்சாரத்திற்கான ட்வீட் பேங்க்கள் தயார் செய்த தோழர் நைனார் சுல்தான், அப்துர் ரஹ்மான், ஹாரிஸ் சுல்தான். துண்டறிக்கை பிரச்சாரத்தை கல்லூரி தோறும் எடுத்துச் சென்ற மாணவர் அமைப்பு தோழர்கள் தயா நெப்போலியன்(VCK), அஸ்கர் (SDPI), உமர் முக்தார் (புதுக் கல்லூரி), ரியாஸ் (SIO), தாம்பரம் அன்சாரி (தமமக), பஷீர் (மாணவர் இந்தியா)

இயக்குனர் வசந்தபாலன், இயக்குனர் ப்ரம்மா, எழுத்தாளர் கரன்கார்க்கி, நடிகர் மன்சூர் அலிகான், நடிகர்-இயக்குனர் கவிதாபாரதி, எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன், எழுத்தாளர் ராஜசங்கீதன் என பலர் ஆதரவும், தோழர்களை திரட்டவும் உதவினர். இயக்குனர் கோபிநயினார் ’..இந்நிகழ்விற்கு ஏன் அழைக்கவில்லை’ என உரிமையுடன் கேட்டார். தோழர் கவிஞர் ஹாஜாகனி அழைத்து பேரணியில் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை இணைத்துக்கொள்ளாமல் இருப்பப்தை சுட்டிக்காட்டி பேரணியில் இணைந்து இறுதிவரை பங்கேற்றார். மூத்த போராளி அய்யா குனங்குடி அனீபா அவர்கள் உடல்நலத்தை கவனத்தில் வைத்து கூட்டத்தில் பங்கெடுப்பதை தவிர்த்திடலாமென நாங்கள் சொன்னபோதும் கூட விடாப்பிடியாய் பேரணியில் இளைஞரை போன்ற உற்சாகத்துடன் பங்கெடுத்தார். செயற்பாட்டாளர்கள் தீஸ்டா சட்டல்வட், தேசிய அளவிலான செயற்பாட்டாளர்கள் என பலரும் வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்கள்.
ஒருசில கல்லூரி தோழர்களிடம் தமது மாணவர்களிடம் செய்தி பகிரக் கேட்டிருந்தோம். இளம் கல்லூரி மாணவர்கள் பெரியளவில் பங்கெடுத்து சிறப்பித்திருந்தனர். திருவண்ணாமலை, ஈரோடு, வேலூர், சிதம்பரம் கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி என பல பகுதியிலிருந்தும் தோழர்கள், தோழமை அமைப்புகள் தாமாகவே பங்கெடுகக் விருப்பம் தெரிவித்து அழைத்திருந்தனர். திராவிட இயக்க தமிழர் பேரவையின் தோழர் சிங்கராயர், தமிழக விவசாய அமைப்பின் தோழர் பி.ஆர்.பாண்டியன், அனைத்திந்திய விவசாய சங்கத்தின் தோழர் பாலகிருஸ்ணன் என பலரும் தாமாக இந்நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பு சேர்த்தனர். பல ஊடக செயற்பாட்டாளர்கள் இந்நிகழ்வில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தனர். (மேற்சொன்ன பட்டியலில் விடுபட்ட எண்ணற்றோர் இந்நிகழ்வுகளில் பங்கெடுத்திருப்பார்கள், அவர்களது பெயர்களையும் இணைக்க உதவவும்)
இவ்வாறாக தமிழ்நாட்டின் பலவேறு அமைப்புகளின் பங்கேற்பும், இசுலாமியர் அல்லாத வெகுமக்களின் ஆதரவையும் பாலஸ்தீனம் பெற்றிருக்கிறது. வழக்கம் போல தமிழ்நாட்டின் முன்னனி கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்டவை கண்டுகொள்வதில்லை. ஐ.நா மனித உரிமையின் செப்-16ம் நாள் ‘இசுரேலின் இனப்படுகொலை’ அறிக்கைக்குப் பின்னர் தமிழக முதல்வர், 2023ம் ஆண்டில் தீவிரமான பாலஸ்தீன அவலம் குறித்து 2.5 ஆண்டுகள் கழித்துப் பேசி இருக்கிறார். இதுவரவேற்பிற்குரியது என்றாலும், அடையாள அறிவிப்பாக இல்லாமல் வெகுமக்களை திரட்டுவது, தீர்மானம் கொண்டுவருவது என அரசியலாக நகருவது அவசியம். கிட்டதட்ட 3 லட்சம் குழந்தைகள் உட்பட 6,80,000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற சூழலில், அனைவரும் குரல் எழுப்புவது காலத்தின் கட்டாயம். பாலஸ்தீனம் குறித்தான எழுச்சிக்குரல் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எழவேண்டும்.

ஐ.நாவின் அறிக்கைக்குப் பின்னர், எந்த நாடு வேண்டுமானாலும் இராணுவரீதியாக தலையிட்டு நடந்து கொண்டிருக்கும் அழிப்பை தடுத்து நிறுத்த முன்வரலாம். மோடி அரசு இதை செய்யப்போவதில்லை, எனினும், தமிழீழ அழிப்பை சந்தித்த நாம் இதுகுறித்து தொடர்ந்து போராடியாக வேண்டும். தமிழீழம், பாலஸ்தீனம் குறித்து தமிழ்நாடு மேலதிகமாக தீவிர விவாதங்களையும், செயல்பாட்டையும் உருவாக்க வேண்டும். கட்சி கடந்து நாம் ஒன்றாக எழ வேண்டிய காலமிது. இவ்வகையில் செப்டம்பர் 19ம் தேதி பேரணி என்பது பல தோழமைகள் கரம் கோர்த்து இயங்கியது என்பது பெரும் நம்பிக்கையளிக்கும் செய்தி.
ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம், சூழலியல் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமை என நாம் வென்றெடுக்கவேண்டிய கோரிக்கைகளின் பட்டியல் நீண்டது. கோரிக்கைகளின் தன்மைக்கேற்ப கூட்டியிக்கங்களை உருவாக்கி நாம் முன்னகரும் சூழல் இது. நம்பிக்கையுடனுன், தோழமையுடன் போராட்டங்களை முன்னகர்த்துவோம்.
திருமுருகன் காந்தி
மே17 இயக்கம்.